ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –– அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை
திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் பேற்றின் கனத்தையும் அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

ஸ்ரீ பெரிய திருமொழியில்–
ஸ்ரீ திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும் உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –
ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து
சம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை ஸ்ரீ சர்வேஸ்வரன் கண்டு
சம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால்-த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்
இல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்
காற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்
கூப்பிட்டு –பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி-அனுபவித்து
இது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-
உகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர் என்று தலைக் கட்டுகிறார்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே

————————-

ஆனந்த ப்ரஹ்மண- என்கிற ஆனந்த பிரவாஹம்-விடாய்த்தருக்கு புக்கு முழுகலாய் இருக்கையும்
வேண்டின இடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்ளலாய் இருக்கையும்
இவ்வாறு விளைவிப்பது-பேரமர் காதல் கடல் புரைய விளைய விறே –
இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே யானால் இவ் வம்ருதம் பானம் பண்ணுவாருக்கு வரும்
விரோதி போக்குவார் யார் என்னில் – ஸ்ரீ ப்ரஹலாதன் விரோதியான ஹிரண்யன் பட்டது படும் என்கிறார் –
ம்ருத்யும் ம்ருத்யும் -என்கிற ஸ்ரீ மந்திர லிங்கத்தை நினைக்கிறார் –

காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை யிமயமேய எழில் மணித் திரளை யின்ப
ஆற்றினை யமுதம் தன்னை யவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினைக் குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே -2–

——————————–

முதல் பாட்டிலே -சொன்ன வணக்கத்தைச் சொல்லுகிறார-

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –3-

———————–

பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது உடைமை மங்காமைக்கு அன்றோ –
அவ்வோபாதி மங்க ஒண்ணாது என்று -சம்சார பிரளயத்தில் நின்றும் இவரை எடுத்தான் இத்தனை இறே

கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் யுலகம் கொண்ட
பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-

——————————

சஞ்சாரம் அற்று இவர் மனசிலே புகுந்த பின்பு அவனுக்கு புறம்பு போக்கற்றபடி –
இவர் மனஸ் இ றே அவனுக்கு உத்தேச்யம் –
ஆழ்வார் உடன் கலக்க கலக்க -பருகலாம் படி ஒரு நீரானான் –இதுவும் ஒரு இனிமை இருந்தபடி –

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே–5-

——————–

அயர்வறும் அமரர்களுக்கு சிரோ பூஷணம் ஆனவனை –-அரும்பினை அலரை -என்ற பூ தானே அவன்
பாத பற்புத் தலை சேர்த்து -என்ன வேண்டாவே -அவர்களுக்கு –
கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே குமுழி நீர் உண்டு போம் இத்தனை போக்கி –
என் சொல்லிப் புகழ்வர் தாமே –
அரும் பொருள் ஆதல் -அறிந்தன -என்று அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய
பாசுரம் இட்டுப் புகழப் போகாது –

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –6-

———————-

அவதாரிகை –

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்க வல்லார்க்கு
சஞ்சார பூமி -என் உத்தமாங்கம் –என்கிறார் –

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே–7-

———————–

இவ் விஷயம் சந்நிஹிதமாக இருக்க தேகத்தைப் பூண் கட்டிக் கொள்வதே -சம்சாரிகள் -என்கிறார் –

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-

————————

என் ஹ்ருதயமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது –
எனக்கு தேவரீரை ஒழிய துணை இல்லை – என்கிறார் –

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மையல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

————————

சம்சாரத்தை அஞ்சி உன் திருவடிகளைப் பற்றின அளவேயோ
திருவடிகளில் பரம பக்தியும் உண்டாயிற்று – என்கிறார் –

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

—————————-

செய்யும் அடிமை எல்லாம் அடைவு கெடப் பேசி –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும்படியே –
நின்னைத் தொழுது –உன்னைக் கண்டு வைத்து-அடைவு கெட தொழப் போமோ –

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –11-

——————————-

உபய விபூதியையும் அழிக்கப் புக்கேன் –என்கிறார்-

ஆவியை அரங்கமாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே–12-

———————

எவ் விஷயங்களைக் கண்டு களித்த கண்கள்-எவ் விஷயங்களைக் கண்டு களிக்கிறது –
ப்ரீதி தத்வம் கனாக் கண்டு அறியாத கண்கள் கிடீர்-இன்று களிக்கிறது –

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

——————————

சூழ் புனல் குடந்தையானை -பாவியேன் –வகுத்த விஷயம் அசந்நிஹிதமாய் இழந்தேனோ –
வாழா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றும்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும் சொல்லுமா போலேயும்
நினையாது –பாவியேன் ஆயினேனே –பாவிகள் -எண்ணுக்கு -சிறு விரல் ஆனேன் –
பாபி யாகையாலே நினைக்க வில்லை-நினைக்காமையாலே பாவி ஆனேன்-இப்படி கார்ய காரண பாவம் என்கிறார்

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –14-

————————-

முன்புத்தை இழவு எல்லாம் தீர நீராட்டுகிறார் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –16-

—————————–

க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாத வடிவு படைத்தவர் –
ஆசை உண்டானாலும் -அவன் கை பார்த்து இருக்க -வேணுமே-

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-

————————

ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

——————————-

அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே
நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது-அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

————————–

அநந்ய பிரயோஜனராய்-கற்க வல்லார்கள் –தெளி விசும்பான பரமபதத்தை ஆளப் பெறுவார்கள்

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: