ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்
அவதாரிகை-

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே-தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை
திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும்-பேற்றின் கனத்தையும்-அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

ஸ்ரீ பெரிய திருமொழியில்–-ஸ்ரீ திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும்
உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –
ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல
அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து
சம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை ஸ்ரீ சர்வேஸ்வரன் கண்டு
சம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால் த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்
இல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்
காற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்
கூப்பிட்டு – பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி அனுபவித்து
இது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-
உகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர் என்று தலைக் கட்டுகிறார்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–1-

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –
வைத்த மா நிதி -இ றே –
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-
நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –நெஞ்சிலே வைத்து ஆளலாம் –
ஓர் இடத்திலே புதைத்து வைத்து-தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்
பறித்துக் கொள்வார் இல்லை-பறிக்கத் தான் ஒண்ணாது
அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

பவளத் தூணை
சர்வத்துக்கும் தான் தாரகனாய் இருக்குமதைப் பற்ற –தூண் -என்கிறார் –
பவளம் -என்றத்தால்-ஸ்ப்ருஹணீயதயைச் சொல்லுகிறது –
தூண் ஆவது -தான் அநேகத்தைத் தரித்து –
தன் கீழே ஒதுங்குவாருக்கு நிழல் கொடுத்து நிற்பது ஓன்று இறே
அப்படியே -தான் எல்லாருக்கும் தாரகனாய்-தன்னை அடைந்தார்க்கு நிழல் கொடுக்கையாலே -தூண் -என்கிறார் –

நெறிமையால் நினைய வல்லார் கதியினை –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே-அடைவு பட நினைக்க மாட்டார்களே -இவர்கள்-
ஆகையால் -நெறிமையால் நினைய வல்லார்-என்கிறார் –
நினைக்க வல்லார்க்கும் நெற்றிக் காக்கும் -அவனுடைய ஸ்வரூபாதிகள் நினைக்க ஒண்ணாத படி தகையும் -என்றபடி –
கதியினை –
நினைப்பார்க்கு பரம கதியாம் –பிராப்யனாம் -என்றபடி –
பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –
கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று
நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன் ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

கஞ்சன் மாளக் கண்டு –
கம்சனுடைய ஆயுஸ்ஸூ மாளும்படி பார்த்து –

முன் –
அவன் நினைவை அவனுக்கு முன்னே செய்து முடிக்கை –

அண்டம் ஆளும் –
ஜகத்து ஸ நாதம் ஆய்த்து-

அண்டம் ஆளும் –
ராமோ ராஜ்யம் உபாஸித்யா – என்னுமா போலே-நாட்டை ஈரக் கையாலே தடவி
கம்சன் காலத்தில் பட்ட நோவு தீர ரஷித்து –

மதியினை-
கம்சனைக் கொண்டு நாட்டுக்கு களை பிடுங்கின பின்பும்-ஆச்சியும் ஐயரும் என் செய்தார்கள் என்று
ருணம் ப்ரவர்த்தமிவ -என்று படுகிறபடி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

மாலை –
மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –

வாழ்த்தி வணங்கி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற வாழ்த்தி-அவன் திருவடிகளிலே வணங்கி

என் மனத்து வந்த விதியினை-
ஈழம் கனாக் காண்பர் இல்லை இறே –கண்டது ஒழிய காணாதவற்றை ஸ்வப்னம் காணார் -என்றபடி –
எல்லா அவஸ்தையிலும் வருவான் அவன் இறே –
அதுக்கடி
விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –
விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது –பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –

கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று-மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –

கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் –இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

அவன் மால்
நான் தொண்டன்
இனி விட உபாயம் உண்டோ –
அவனுக்கு என் பக்கல் ஸ்நேஹம் இல்லை என்ன ஒண்ணாது –
நான் அதிலே ஈடு பட்டிலேன் -என்ன ஒண்ணாது –
ஆனபின்பு -எத்தைச் சொல்லி விடுவது –

——————————————————————————————————-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை –
இந்த்ரனும் ப்ரஹ்மாவும்-எப்போதும் செவ்வியையும் தேனையும் உடைத்தான
புஷ்பங்களைப் பணிமாறி ஏத்தும் அழகிய திருவடித் தாமரைகளை உடைய ஸ்ரீ புண்டரீகாஷனை –

மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே –
பெரும் தன்மையை உடைய -வேலை உடைய -ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பரமோதாரமான
தமிழ் மாலை-நாலைந்து -இருபதையும்-அநந்ய பிரயோஜனராய்-கற்க வல்லார்கள் –
தெளி விசும்பான ஸ்ரீ பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: