ஸ்ரீ திருவிருத்தம் – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-ஒழிவில் காலம் -3-3-

சர்வேஸ்வரன் தன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபவங்களையும்
நித்ய விபூதி யோகத்தையும்
லீலா விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க–கண்டு
அநந்தரம்
அங்குள்ளார் ஞானத்த்தையும் வ்ருத்தத்தையும்
அங்கு இருக்கும் இருப்பையும் கண்டு
அதுக்கு எதிர் தட்டான சம்சாரத்த்லே
அவ்வனுபவத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தோடு
தாம் இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –

———–

இமையோர் தலைவா -என்று அவனுடைய பரம பும்ஸ்வத்தை முதலிலே அனுசந்தித்து
அப்படி அவனைக் கிட்டப் பெறாமையாலே
ஆண் -பெண்ணாம் படி யாயிற்று –
இங்கனே செய்யக் கூடுமோ -என்னில்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம் -என்றும் உண்டாகையாலே இதுவும் கூடும்
அங்கனம் ஆகில் கேவலம் ஸ்திரீ மாதரம் அன்றியிலே
ஒரு பிராட்டி தசையாம்படி எங்கனே என்னில்
சம்ஸ்லேஷத்தில் இனிமையும்
விஸ்லேஷத்தில் தரியாமையும்
ஸ்வத சித்தமான சம்பந்தமும்
அனந்யார்ஹ சேஷத்வம் -உண்டாகையாலே –

அநந்ய சரணத்வம் அநந்ய போக்யத்வம் ததேக நிர்வாஹ்யத்வம் மூன்றும் உண்டே –
தோழி தசையும் திருத் தாயார் படியும் உண்டாகிற படி எங்கனே என்னில்
கிண்ணகம் பெருகா நின்றால்-ஆறுகளும் கால்வாய்களும் -குளங்களும் நிறைந்து
சமுத்ரத்திலும் குறைவற்றுப் புகுமோபாதி
விஷயம் அபரிச்சின்னம் ஆகையாலே இதுவும் கூடும்
இவருக்கு இங்கு உண்டான விரோதிகளையும் காட்டி
அவற்றில் உண்டான ருசிகளையும் தவிர்ந்து
தன்னுடைய நித்ய விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க
அநந்தரம்
அங்கு உள்ளாரின் ஜ்ஞானத்தையும் -அங்குத்தை பரிமாற்றத்தையும் – தேச விசேஷத்தையும் கண்டு
அவ்விடத்தை பிராபித்து அல்லது நிற்க மாட்டாத த்வரையும் பிறந்தது –
ஆகில் -இவர் அபேஷிதம் செய்து கொடாது ஒழிவான் என் என்னில்
சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராக்கி
நம்மை அல்லாது அறியாத படியும் பண்ணி
அலாப தசையில் கூப்பிடும்படி பண்ணி
இவருக்கு ஸ்வரூபமான அடிமையையும் வாசிகமாக கொள்ளா நின்றோம் ஆகில்
அவ்வருகில் பிராப்தியும் செய்வோம் நாம் —
ஆன பின்பு செய்து கொடுக்கிறோம் என்று ஆறி இருந்தான் –
இவருக்கு கீழ்ச் செய்தது ஜ்ஞான லாபம் ஆகையாலே
அநந்தரம்
பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்

ஈஸ்வரனுக்கு இங்கனே இருப்பதொரு புடை உண்டு
பிரஜைகள் பசித்திருக்க விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாராண பரிகரத்துக்கு தாழ்த்தும்
அல்லாதார் கார்யம் தலைக் கட்டும் -எங்கனே என்னில்
கைகேயி கார்யம் தலைக் கட்டின அநந்தரம் ஸ்ரீ பரத ஆழ்வான் கார்யம் செய்கையாலும்
ஸ்ரீ மகா ராஜர் கார்யம் செய்து பின்னை பிராட்டி கார்யம் செய்கையாலும் –
இவர்களுக்கு முற்பட செய்கிறது என் என்னில்
கார்யத்து அளவே இறே அவர்களுக்கு உள்ளது
அசாதாராணருக்கு அபேஷிதம் செய்தானோ என்னில்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முடியைத் தவிர்த்து கொடுக்கையாலே இவர்கள் அபேஷிதமும் செய்யும் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நித்ய கைங்கர்யமும் அருளினானே –

நாயகியும் தோழியுமாக உத்தியான வனத்திலே பூ கொய்ய என்று புறப்பட்டு
ஒரு வ்யாஜ்யத்தாலே நாயகனும் அங்கே வரவும்
ஒரு வ்யாஜ்யத்தாலே பிரிய
தைவ யோகத்தாலே கூடி கூடின வழியே பிரியவும்
பிரிவு தானும் கலவியில் ஒரு வகையோ -என்று இருந்தாள் –
பிரிவின் மெய்ப்பாட்டாலே புளகித காத்ரையாய்க் கொண்டு
நோவுபடுகிற படியைக் கண்டு
இவளுக்கு சம்ஸ்லேஷம் வ்ருத்தமாக கழிந்தது என்று அறிந்து
இனி நாம் உடன்பட்டு இவள் சத்தையை உண்டாக்கிக் கொள்வோம் என்று
இது ஓர் வடிவு இருந்த படி என்
இவ் விருப்பு நித்யமாக வேணும் – என்று மங்களா சாசனம் பண்ணுகிறாள் –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-கோவை வாயாள் -4-3-

—————————–

கீழில் பாட்டில்-பிரிவின் பிரதம அவதி யாகையாலே-தன்னுடைய தசையை ஸ்த்ரீத்வத்தாலே ஒழித்தாள்
அங்கன் அன்றிக்கே
தோழிக்கு சொல்லித் தரிக்க வேண்டும்படிக்கு ஈடான தசா விபாகத்தாலே
அவன் பின்னே போன நெஞ்சானது வருமோ -அங்கனே போமோ -என்று தோழியைக் கேட்கிறாள் –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3–வெள்ளைச் சுரி சங்கு -7-3-

————-

இமையோர் தலைவா -என்னும்படியே
நித்ய விபூதியைக் காட்டிக் கொடுக்கையாலே
அங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியைச் சொல்லுகிறது –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-ஓடும் புள்ளேறி -1-8-

—————-

விபூதி ஆகாரத்தாலே -இங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாகரமாய் நலிகிற படி –
ஜ்ஞான சங்கோசம் அற்று -ந ச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே போனால் ஸ்மாகரமாவை-
இங்கே ஸ்மாகரகமாம் படி எங்கனே என்னில்
ஸ்வ எத்தன சாத்தியமான ஜ்ஞானம் அன்றிக்கே-மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே
பரபக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் ஏக ஷணத்திலே இவர்க்கு உண்டாகையாலே
இங்கே இருக்கச் செய்தே-ஸ்மாரகமாய் நலியும்படி இவருக்குப் பிறந்த ஜ்ஞான வைசத்யம் இருந்த படி –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-மாயா வாமனனே -7-8-

——————

நாயகி உடைய முழு நோக்கிலே அகப்பட்ட நாயகன்
தாம்தாம் சத்தைக் கொண்டு தரித்து இருக்க வேண்டுவார்
இச் சந்நிவேசத்திலே செல்லாதே கிடிகோள்-என்கிறான் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-உண்ணும் சோறு -6-7-

———————

கால மயக்கு துறை –
வர்ஷாவில் வரக் கடவதாக காலம் குறித்துப் போன தலைமகன் வர்ஷாவாகச் செய்தே வராது ஒழிய
இவ்வளவிலே தலைமகள் மோஹிக்கிற படியைக் கண்ட தோழி
அவன் வரும் அளவும் இவள் சத்தையை தரிப்பிக்கைக்காக
வர்ஷா வந்தது அன்று–கறுத்தன இரண்டு ரிஷபம் அன்யோன்யம் விரோதத்தாலே
பூமியிலே இடம் போராமையாலே ஆகாசத்திலே பிணங்குகிறது காண் -என்று
பிரபஞ்சாபலாபம் பண்ணுவாரைப் போலே –காலத்தை ஷேபிக்கிறாள் –
பிரபஞ்சாபலாபம் பண்ணி -ஈஸ்வரனும் ஜகத்தும் இல்லை என்பார்கள் -பாஹ்யர்கள்
இவள் ஜகத்தும் ஈஸ்வரனும் உண்டாகைக்காக செய்கிறாள்
இப்படி கால ஷேபம் பண்ணாது ஒழியில்
நாயகி ஆற்றாளாய் முடியும் -இவள் இல்லையாகில் அவன் இல்லையாம் -பின்னை விபூதியாக இல்லையாம் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-இன்னுயிர்ச் சேவல் -9-5–

———————

இப்படி தோழி இவளை தர்ப்பித்த அளவிலே
நாயகன் வந்து இவளோட்டை அதிமாத்ரமாக சம்ச்லேஷம் பண்ணின படியைக் கண்டு
யதா பூர்வமான பரிமாற்றம் அன்றியே-கலவியிலே குவால் வகைகள் உண்டாய் இருந்தது
இப்படி செய்கைக்கு அடி-பிரிய நினைத்தானாக வேணும் என்று-அதி சங்கை பண்ணுகிறாள் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–கையார் சக்கரம் -5-1-

—————————

திரு மலைக்குப் போக நினைத்தான் என்று பழி இட்டாள் நீ காண் நினைத்தாய் -என்கிறான்
அவன் அதாவது
பகவத் சம்ச்லேஷம் பிறந்த பின்பு பகவத் சம்ச்லேஷம் மட்டுமேயாய் இருந்த படி ஸ்வரூப ஜ்ஞானம் கண்டிலோம் –
என்னை அறியச் செய்யாது ஒழிந்தால் உன்னை அறிய வேண்டாமோ –
ஸ்வரூபம் -விக்ரஹம் -உன்னுடைய விக்ரக வைலஷண்யம் நீ அறியாய் –

ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திரு மலைக்குப் போவதாய் பிறந்த படி கேட்டு
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் தம் அகத்தே போய் மூடிக் கொண்டு கிடந்து
காண்கின்றனகளும் -என்கிற பாட்டை அனுசந்தியா நிற்க
அங்குச் செய்கின்ற அளவு என்ன என்று ஒரு வைஷ்ணவரை போக விட
இப் பாட்டை அனுசந்தித்து சோகித்து கிடந்தார் -என்ன
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் -என்று சொல்லி
போர மாட்டிற்று இல்லையோ என்று அருளிச் செய்தார்

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-பொலிக பொலிக –5-2-

———————-

துறை -மதியுடன் படுத்தல் –
தலைமகள் தோழி மாரும் தானுமாய் புனத்திலே இருக்க
தலைமகன் சென்று
இரண்டாம் காட்சி யாகையாலே -தன் ஆசையை ஆவிஷ்கரிக்கிறான் –
மதியுடன் படுத்தல் தோழிக்கு உரித்து -என்னும் பஷத்தில் அவள் முகத்தை நோக்கிச் சொன்னான் -ஆகவுமாம் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-நெடுமாற்கு அடிமை -8-10-–

———————-

தலைமகனோடு கலந்து விச்லேஷம் அறியாத படி அதி மாத்ரமாய்ச் சொல்லா நிற்க
பொருள் அதிகாரத்தை ஒருவன் வந்து வாசிக்க-அதைக் கேட்டு இருந்ததைக் கொண்டு –
அப்ரதிஷித்த மநுமதம் பவதி -என்று பிரதிஷேதியாமையாலே அநு மதமாய் இருந்தது என்று கொண்டு
இவனோடு கூட ஒரு படுக்கையிலே இருக்கச் செய்தே பிரிந்தான் என்று நினைத்து
பிரிந்தால் பிறக்கும் காரியமும் பிறந்து –செல்லுகிறது –

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-மாலுக்கு வையம் -6-6-

——————

கீழ் எல்லாம் வைஷ்ணவர்களை தலைமகனாகப் பேசிற்று
இதில்-எம்பெருமானைத் தலை மகனாகப் பேசுகிறது –
பகவத் சம்ஸ்லேஷம் பாகவத சம்ஸ்லேஷ பர்யந்தமாய் நிற்கக் கடவதாகையாலும்
இவர்க்குக் கீழ் உண்டான பாகவத சம்ஸ்லேஷம் பகவத் சம்ஸ்லேஷம் பர்யந்தம் ஆக்கின படி –

பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-மாசறு சோதி -5-3–

——————-

ஆசுவாச கரமான காலம் போகையும் ,பிரதி கூலமான காலம் வருகையும் ,அதற்க்கு
சக காரிகள் குவாலாலாகையும் ரஷகன் வாராது ஒழிகையும் முடிந்தோம் இறே என்கிறாள் .
பகல் பதார்த்த தர்சனம் பண்ணி ,இந்த்ரியங்கள் அந்ய பரம் ஆகையாலே , தரித்து இருக்கலாம் …
ராத்திரி எல்லாம் ஒக்க ,உபதரமாய் ஒரு மடப் படுகையாலும் ,சம்போய யோக்யமான காலம் ஆகையாலும்
தரிக்க ஒண்ணாது

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-மல்லிகை கமழ தென்றல் -9-9-

——————————–

நலம் பாராட்டு துறை

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-துவளில் மா மணி மாடம் -6-5-

—————

இயற்கையிலே கலந்து பிரிந்த தலை மகன் ,இரண்டாம் கூட்டத்துக்காக புனத்திலே வந்து கிட்ட கடவதாக குறி வர விட்டு போய்,
கால அதிக்கிரமம் பிறந்து பின்பு,அங்கே கிட்டினவன்,,இவர்களை கண்டு கலங்கி,அசந்கத பாஷணம் பண்ண,
அவர்களும் அத்தை கொண்டு,இவர் வருவதாக போன படிக்கும்,வந்த படிக்கும், இப்போது ஆற்றாமை தோற்ற பேசுகிற பேச்சுக்கும்
ஒரு சேர்த்தி,கண்டிலோம் என்று சிரித்து கொண்டாடுகிறார்கள்..
இவனும் வீரன் ஆகையாலே, என்றும் ஆனை வேட்டைக்கு போம் பழக்கத்தாலே ,ஆனை வேட்டையை வினவி கொண்டு,
செல்ல கடவதாக நினைக்கிறான்,..
பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,அமாணனை பட்டு திரியுமா போலே ,இவர்களை இழந்து ,
தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-கண்ணன் கழலினை -10-5-

—————-

சில காலம் சம்ஸ்லேஷித்த தலை மகன் பிரிந்தான் ..பிரிந்து முற்றினது என்னவாம் ..
பிரிந்து பிரதம தசை என்னவுமாம் ..தோழி வார்த்தை என்னவுமாம் ..தலை மகள் வார்த்தை என்னவுமாம்–
அநேக காலம் கலந்து அல்ப காலம் பிரிந்தால் அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-பயிலும் சுடர் ஒளி -3-7-

——————

சம்ஸ்லேஷித்து செல்லா நிற்க செய்தே முகம் தெரியாமே போக என்று நினைத்து -இருளிலே நாயகன் தேரிலே ஏறி போக
தன் ஆற்றாமையாலே சக்கரவர்த்தி திரு மகனை போலே தேர் காலை மறைத்து போகாதே தெரியும் படி போன
தேர் காலை பார்த்து தரித்து இருக்க ,சமுத்ரமானது ,தன் திரையாலே வந்தது இத்தை அழிக்க புக ,கடலை நோக்கி சரணம் புகுகிறாள் ..
மற்று மாற்றமை மிக்கார் -பிரதிச்சையே மகோததே-என்று கடலை சரணம் புகும் இத்தனை இறே இவர் உடைய அளவு –
ஸ்ரீ பெருமாள் போலே இவரும் கடலை சரண் அடைகிறார்

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-அணைவது அரவணை மேல் -2-8-

——————————

துறை கால மயக்கு –(ஏழாம் பாசுரம் போல் கால மயக்கு துறையாகும் இதுவும் ..அது மழை காலம் தொடக்கம் இது முடிவு )-
இவன் இவள் ஆகியும் ,அவன் அவனாகையும் ,தசை இதுவாகையும்,இது அல்லது இல்லையே இருந்த படி –
திரு மங்கை ஆழ்வாருக்கு சரணம் புக வேண்டும் போலே–(வந்து உன் திரு அடி அடைந்தேன் என்று தொடங்கி
பத்து பாசுரங்களிலும் பத்து விதமாக அருளுகிறார் பெரிய திரு மொழி 1-6-1-)
இவருக்கு கால மயக்கு வேண்டிய படி –கீழ் காண்கிற பதார்த்தங்களை அபலபித்து கால மயக்கு ஏற்பட –
இங்கு பதார்த்தங்களை அபலப்பதும் செய்து ,சாஸ்திர –சித்த மானவற்றை முன்னிடுவதும் செய்தது –
மேகத்துக்கும் கடலுக்கும் அன்யோன்யம் விரோதமாய் பிணன்குகிறது காண்-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-சூழ் விசும்பணி முகில் -10-9-

————————

இவள் இருந்து பொய் என்னும் காட்டில் பொய் ஆகாது இறே
ரனோத் யததாம் இவ வரணானாம்-கிஷ்கிந்தா காண்டம் -28-32-என்று ஆணை அணி வகுத்தால் போல-
மேகம் நாலு மூலையும் கையும் அணியும் வகுத்து வர்ஷிகிற படியை கண்டு இவள் மோஹிக்க-
“எம்மின் முன்னவருக்கு மாய்வர் “-திருவாய் மொழி -1-1-5என்னும் படி இவள் உடைய மோகத்தை கண்டு தோழியும் மோகிக்க
இவ் அளவிலே உணர்ந்து இருந்த திருத் தாயார் இவ் அவசாதம் நீங்கிடுக என்று ரஷா விதாநம் பண்ணுகிறாள்-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-பாலனாய் ஏழு உலகு -4-2-

——————–

துறை வெறி விலக்கு
மேக சந் தர்சனத்தில் , தோழியும் தானும் மோகித்து கிடக்க ,இத் தசையை கண்டு சோகித்து இருக்கிற திருத் தாயார்
முன்னே தேவதாந்திர ஸ்பர்சம் உடையார் புகுந்து ,பர்காரத்தில் பிரவர்தராக ,அபிஜாதையுமாய் ,
இவள் பிரபாவத்தை அறிந்து இருப்பாள் ஒரு தோழி ,
கருமுக மாலையை -நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரை போலே இவளுக்கு பரிகாரம் என்று தொடங்கி
விநாசத்தை உத்பத்தியா நின்றி கோள் ,என்று அத்தை நிஷேத்திதிக் கொண்டு,
இவள் உடைய நோயையும் இந் நோய்க்கு நிதானத்தையும் இதற்க்கு பரிகாரத்தையும் சொல்கிறாள்-

சின் மொழி நோயோ கழி பெரும் தெய்வம் ,இந நோய் இனது என்று
இன் மொழி கேட்க்கும் இளம் தெய்வம் அன்று இது வேலன் நில் நீ
என் மொழி கேண்மின் என் அம்மானை ஈர் உலகு ஏழும் உண்டான்
சொன் மொழி மாலை அம் தன் துழாய் கொண்டு சூடுமினே –20–தீர்ப்பாரை யாமினி -4-6-

———————

கீழ் சொன்ன பகவத் பிரபாவம் இருவரும் அறிந்திலர்கள் ..எங்கனே என்னில்
சொன்ன உக்தி செவிப் படுவதற்கு முன்னே உணருகையினாலே
உயர்வற உயர் நலம் உடையவன் என்னா –உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் என்னும் படியாலே-
மோஹித்த போது அறியாதே கிடக்கவும் ,
உணர்ந்தார் ஆகில் ,தம் உடைய பாழியான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் மண்டும் இத்தனை-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-

———————————-

உங்களை புனம் காக்க இங்கன் கொண்டு வைத்த தார்மிகரோ என்கிறாள்
அபிமத விஷயம் இருந்த இடத்தே -தண்ணீர் -என்று கொண்டு புகுவாரை போலே
கையிலே தழையை முறித்து பிடித்து இவர்கள் இருந்த இடத்தே சென்று ,-இங்கனே ஓர் யானை போந்ததோ என்று-கேட்க
அவர்கள் நாங்கள் புனம் காக்க இருகிறோமோ உமக்கு மறு மாற்றம் சொல்ல இருகிறோமோ என் சொன்னீர் ஆனீர் என்கிறார்கள்–
தழை கொண்டு போகிறது என் என்னில் ஆச்ரயத்தை இழந்த தளிர் வாடுமா போலே ,காண்
உன்னை பிரிந்து-நான் பட்டது என்று தன் தசையை அவர்களுக்கு அறிவித்து கொண்டு சொல்லுகிறபடி ….
இவன் உடைய கர ச்பர்சத்தாலே ,இது-சதசாகமாக பணைத்த படியை கண்டு ,உம்முடைய ஆற்றாமை அறிவிக்க வந்தீர் ஆகில் ,
கொம்பிலே நிற்கச் செய்தே காட்டா விட்டது என் என்கிறாள் –
பிறந்த இடத்தை விட்டு உம்முடைய பாடு வந்தாருக்கும் உண்டோ வாட்டம் ..
உம்மை பிரிந்து பிறந்த இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் என்கிறாள் –

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாட்
டம்பார் களிறு வினவுவதையர் ,புள் ளூரும் கள்வர்
தம்பாரகத் தென்று மாடாதனதம் மிற்கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-நல்குரவும் செல்வமும் -6-3-

——————————

இவனை நோக்கி இவர்கள் சில வசோக்தி –
நெஞ்சம் நிறைய அன்பை வைத்து கொண்டு தேவை அற்ற வினாக்களை எழுப்புதல்–சொல்ல ,
இவன் தானும் ,இவர்களை சில வசோக்திகள் சொல்கிறான்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

——————————

இவள் உடைய அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட திருத் தாயார் இது என்னை முடிகிறதோ என்கிறாள்-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–கரு மாணிக்க மலை -8-9-

———————————

பகவத் சமாஸ்ரண்யம் பண்ணினாரில் இப் பாடு பட்டார் உண்டோ என்கிறாள்
ஆரே துயர் அழுந்தார் துன்புற்றார் இத்யாதி–மூன்றாம் திரு அந்தாதி -27

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-–மாயக் கூத்தா வாமனா -8-5-

———————————–

புணர்ந்து உடன் போக்கு துறை-
புணர்ந்து உடன் போகிறான் ஒரு தலை மகனை -பாலை நிலத்தை கடந்து குளிர்ந்த நிலத்தே புகுந்தோம் காண்-
என்று ஆஸ்வசிப்பிகிறான்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26 -மாலை நண்ணி -9-10-

——————————

நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை ,
இவன் கடாஷித்தாலிவ் அருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்
ராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே- தாங்களே வந்து
அனுசரிக்குமா போலேயும் -பிராட்டியை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணின-ராஷசிகள் அனுகூலித்தால் போலேயும் –

சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-–எல்லியும் காலையும்–8-6-

—————————–

கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே அவ் வருகே ருசியை பிறப்பித்து
ருசியின் உடைய அதிசயத்தாலே பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து ,நினைத்த படி பரிமாறப் பொறாமையாலே
விஸ்லேஷமாக தலைக் கட்டிற்று.
சம்ஸ்லேஷ தசையில் அனுகூலித்த-பதார்த்தங்களும் இப் பொழுது பிரதி கூலிக்கத் தொடங்கிற்று .
தத் யாவக உபாயதே பிரசாதாய ஜாதயே — என்று யாதோர் அளவிலே நிர்வாகன் ஆனவன் கோபித்தால் ,
அவன் பரிகரமும் அப்படியே நிற்கும் .
திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற போது வாடைக் காற்று குளிர்ந்து ..
அது தான் இப் பொழுது சுடத் தொடங்கிற்று ..
சோறும் கறியும் சமைத்த பின்பு இட பற்றாதால் போலே திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற அந்தரத்திலே
உள்ளே புக்கு அணைக்கப் பெறாமையால் வந்த ஆற்றாமை-

தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன –28–கங்குலும் பகலும் -7-2-

——————————–

பொரு நீர் திரு அரங்கா வருவாய் என்ற இடத்தில் ,அருளுகிறேன் என்னுதல் -அருளேன் என்னுதல் சொல்லாதே
பேசாதே இருந்த படியால் -வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச சீர்மையில் அன்னங்களே –29-பொன்னுலகு ஆளீரோ -6-8-

———————————

சிலரை தூது போக விட்டால் ,அவர்கள் வரும் அளவு செல்ல ,ஆறி இருந்து ,
சூது சதுரங்கம் பொருது போது-போக்கும் விஷயம் அல்லாமை யாலே கண்ணால் கண்டவர் எல்லாரையும் தூது போக விடுகிறாள்
யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாசூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3-
என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜி த்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே தனியே அகப் பட்டேன் என்று-
முதலிகள் எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது ததி முக பிரப்ருதிகள் நலிய –
அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம் 62-2—என்று உங்களுக்கு விரோதி ஆனவர்களை
நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள் என்ன –
இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு–இது வெறுமனே ஆக மாட்டாது –
பிராட்டியை கண்டார்கள் -த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,அப்போது அவ் அருகுக்கு உண்டான
ப்ரீதி பிரகர்ஷத்தாலே வாலானது வளர்ந்து ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது –
அம் மது வனம் இன்றாகில் ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-அஞ்சிறைய மட நாராய் -1-4-

————————————-

நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான் உலகு—திரு விருத்தம்-29–என்று ஸ்ரீ பரம பதத்தே தூது விட்டாள்-
அது பர பக்தி பர ஞானம் பரம பக்தி யுகதர் ஆனார்க்கு அல்லது புக ஒண்ணாத தேசம் ஆகையாலே-
அவதாரங்களிலே தூது விட பார்த்தாள்–கண்ணன் வைகுந்தன் திரு விருத்தம்-30—
அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய் பின்னை .இல்லை ஆகையாலே-பிறபாடர்க்கும் அனுபவிக்கலாம் படி
சுலபமான ஸ்ரீ திரு மலையிலே ஸ்ரீ திரு வேம்கடம் உடையான் திரு அடிகளிலே மேகத்தை தூது விடுகிறாள் ..

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31- எம் கானல் அகம் கழிவாய் -9-7-

——————————-

கீழ் பாட்டில் ,மேகங்களே என்னுடைய தூது வாக்யத்தை கேட்டு போய் சொல்லு கிறீகோள்
உங்களுடைய திரு அடியை என் தலையிலே வைகிறிலிகோள் என்று சொன்ன படியே
இவை செய்ய மாட்டிளிகோள் ஆகில் ,இங்கே வந்து ஒரு வார்த்தை சொல்லி போங்கள் என்ன ,
எங்களுக்கு பெரும் கூட்டம் போகா நின்றது ,துணை தப்பும் என்ற அளவாக கொண்டு ,
அங்கே நின்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லி போங்கள் என்கிறாள்

மேகங்களோ உரையீர் திருமால் திரு மேனி ஒக்கும்
யோகங்களும் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல நீர்கள் சுமந்துநும் தம்
ஆக்கங்கள் நோவ வருத்தும் தவம் மா அருள் பெற்றதே –32–வைகல் பூம் கழிவாய் -6-1-

———————–

நாலு மூலையும் மேகங்கள் வந்து பரந்து மேக தர்சனத்தாலே பெண் பிள்ளை மோகித்து கிடக்க ,
இவள் மோகத்தை கண்ட திரு தாயார் -மேகோ தயாஸ் சாகர சந்நிவ்ருத்தி -என்றும் -–
பீஷாஸ் மாத்வாத பவதி பீஷோதேதி சூர்யா -என்றும்-என்னும் படியாக பதார்த்தங்கள் தன் கார்யத்துக்கு
அவ் அருகு போகாத படி நிர்வகிக்கிறது-தன் ஆஞ்ஜையால் அன்றோ –
இவ் அளவில் இவளை பரிகரிக்கை அரிதோ என்று கூப்பிடுகிறாள்-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33–ஏறாளும் இறையோனும் -4-8-

———————————–

அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு ,நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி கூடலோடே கோபிகிறாள்-

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-மின்னிடை மடவார்கள் -6-2-

———————————

கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக மேல் வருகின்ற தசை-இருக்கிற படியை கண்டு –
இது என்னவாய் தலை கட்டக் கடவது–என்று திரு தாயார் பயப் படுகிறாள்
இவளுக்கு முன்பு சம்ஸ்லேஷ தசையில் அனுபவித்ததை எல்லாம் பாதகமாய் தான் ஈடு பட்ட பின்பு-
தன் இழவை பாராதே -இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்
வாயும் திரை யுகளில் பிராட்டியை போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதை கண்டு வருந்துவதை கண்டு வருந்துகிறாள் –
இத் தலை-மேற்கு திசை பெண் –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகை யாக இருகிறதே –

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35–வாயும் திரையுகளும் -2-1-

———————————–

நன்மைகள் உள்ளது தத் தலையாலே என்று இருக்கையும் –
தீமைகள் உள்ளது தம் தலையாலே என்று இருக்கையும்
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கும் நம் ஆழ்வாருக்கும் ஸ்வாபம்..
இப்படி தலை அல்லாது அறியாது இருக்க செய்தே -இவனுடைய ரஷகத்திலே அதி சங்கை பண்ணும்படிக்கு ஈடாக
பிறந்த தசா விபாகத்தை சொல்லுகிறது —
ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வேனா நீகே நமர்திதம் –யுத்த காண்டம் -26-24-என்று முதலிகள் –
நாள் அழிக்க நான் அழிக்க -என்று சொல்லுமா போலே -வாடையும் ராத்ரியும் -நான் நான் என்று நலிகிறபடி .

துழா நெடுஞ் சூழ் இருள் என்று தன் றண்டாரது பெயரா
எழா நெடு ஊழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ விலங்கை
குழா நெடும் மாடம் ,இடித்த பிரானார் கொடுமைகளே –36–ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

——————————–

கலந்து பிரிந்தாள் ஒரு தலைமகள் பிரிவாற்றாமையால் புறப்பட்டு க்ரூரமான காட்டிலே
துஷ்ட மிருகங்களும் -மனுஷ்யரும்-துர்த்துவநிகளும் துர்க் கதிகளுமான தேசத்திலே போக –
திருத் தாயார் இவளை படுக்கையில் காணாமையாலே -எல்லா படிகளாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே –
புறப்பட்டுப் போன இவள் -என் செய்கிறாளோ என்று -இவள் போன வழியை பார்த்து மோஹிக்கிறாள்–
திரு கோளூரில் புகுகிற பெண் பிள்ளை உடைய திருத் தாயாரைப் போலே -ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே –
எல்லாப் படிகளாலும் சோகிக்கிறாள்-

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-மண்ணை யிருந்து துழாவி -4-4-

——————————

யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்—
அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –
அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத யாத்ரையில்
மூட்டும் தனை அருமை போரும் ஆழ்வார்களை -வேத யாத்ரையில் நின்றும் லோக யாத்ரையிலே மூட்டுகை –
நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள
அருமை போரும் ஆழ்வார்கள் –பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து -சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு –
இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -38-சொன்னால் விரோதம் இது -3-9-

————————————–

கீழ் பாட்டில் அனுசந்தித்த நீலங்கள் தனக்கு போலியான திரு மேனியிலே கொண்டு போய் முட்டிற்று –
திரு மேனி தனக்கு பகை தொடையான திரு கண்களிலே போய் முட்டிற்று
திருக் கண்கள் தனக்கு அவ்வருகுபோக ஒட்டாதே நலிகிறபடி சொல்லுகிறது
க்ருஹீத் வாப் ரேஷ மாணா -இத்யாதி சுந்தர காண்டம் -36-4
கணை ஆழி பார்த்த உடன் ஸ்ரீ பெருமாளையே கண்ட படி ஸ்ரீ பிராட்டி மகிழ்ந்தாள்-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-ஏழை யாராவி -7-7-

————————————-

சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த தசையைச் சொல்லுகிறது-

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40–மானேய் நோக்கு -5-9-

——————————–

எம்மை நோக்குவது என்று கொலோ -என்று எமக்கு ரஷகர் ஆவார் யாரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரஷிக்கிறபடி –என்று சத் ஆகாரமாகிய இவை பாதகம் ஆகிற படி-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41–நீராய் நிலனாய் -6-9-

————————————-

வாடையின் கீழ் ஜீவிக்கை அரிது -இனி முடியும் அத்தனை -என்று வார்த்தை சொன்னவாறே குளிர நோக்கினான் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒருத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-பொரு மா நீள் படை -1-10-

————————————–

தலைவனின் வடிவு அழகு பற்றித் தலைவி கூறல்

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-உயர்வற உயர் நலம் -1-1-

————————-

மனோ ரதத்துக்கு எட்டாது என்றீர் -அவன் விஷயம் எட்டாதோ என்ன –
அவன் அருளாலே காணலாம் அன்று காணலாம் என்கிறார் –

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-பத்துடை அடியவர் -1-3-

———————————

தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-ஊனில் வாழ் உயிரே -2-3-

———————————-

வாழி மட நெஞ்சே -என்று நெஞ்சை ஸ்துத்திவாறே-என்னை இப்படி ஸ்துத்திக்கிறது என் -நான் என் செய்தேன் -என்ன –
இந்நாள் வரை பந்த ஹேதுவாய் போன நீ -அவனுடைய கடாஷத்துக்கு இலக்காகி
சஹகரித்திலையோ-உன்னாலே அன்றோ நான் இது பெற்றது -என்று -கொண்டாடினார் கீழ் –
கொண்டாடின அநந்தரம் ஸ்வப்பனம் போலே முன்புற்றை அனுபவம் மாநசனமாய்-பாஹ்ய சம்ஸ்லேஷ-அபேஷை பிறந்து –
அது கை வராமையாலே கலங்கி -இவர் படுகிற வியசநத்தை கண்டு –
திரு உள்ளம் -நான் இங்குற்றை செய்ய வேண்டுவது என் -என்ன –
அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் போய்
என் தசையை அறிவி -என்று திரு உள்ளத்தை தூது விட்டார் –
அது மீண்டு வரக் காணாமையாலே நோவு படுகிறார் –

பெரும் கேழலார்-என்று ஸ்ரீ வராகமான அவதாரத்தை ஆசைப்பட்டு –
ஸ்ரீ நரஸிம்ஹமான இடத்தே தூது விடுவான் என் என்னில் -இரண்டு அவதாரமும்
ஆஸ்ரிதம் அர்த்தம் என்கையாலே விடுகிறார் –
மட நெஞ்சம் -என்று கீழே சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு-அல்லேன் -என்னாதே
ஆபிமுக்யத்தை பண்ணி அதுக்கு உடன் பட்டது என்று நெஞ்சைக் கொண்டாடினார் –
இப்போது அந் நெஞ்சை இன்னாதாகிறார் -இப்போது இன்னாதாகிறது என் -அப்போது கொண்டாடுகிறது என் -என்னில் –
ஆசை கரை புரளும்படி -அதுக்கு தானே கிருஷியைப் பண்ணி -அவ்வாசைக்கு இரை இட்டு –
இனி பிராப்தி அல்லது நடவாத சமயத்திலே -அதுக்கு தானே-சஹகரியாதே –
தன்னைக் கொண்டு அகல நின்றது என் என்று -இன்னாதாகிறார் –

இது சஹகரிக்கை ஆவது என் என்னில் -பந்த ஹேதுவானோ பாதி மோஷ ஹேது இதுவும் இறே-
ரஷதர் மேணபலேநசைவ -என்கிறபடியே ப்ராப்தி அளவும் செல்ல-தான் முகம் காட்டி -நீ பட்டது என்-என்ன வேணும் இறே-
அவனே உபாயம் என்கிறது -ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி -நிஷ்கரிஷித்து சொல்லுகிற வார்த்தை -இறே –
அவனே உபாயமாக செய்தேயும் -இத் தலையாலேயும் வருவன-குவாலாயுண்டு இறே –
அவை தான் தனித்தே பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே -ஒன்றாக சொல்லுகிற அத்தனை இறே –
இத் தலையால் வரும் அவை தான் -எவை என்னில் -பேற்றுக்கு சாதனன் தான் உளனாக வேணுமே –
தான் உளன் என்னா-உபாயத்தில் அந்வயியான் இறே -புருஷார்த்தத்தை அறிந்து -ருசித்து -சஹகரிக்கைக்கு நெஞ்சு வேணுமே –
ஈத்ருசங்கள் சில உண்டு இறே -இத்தலையால் வருவன -இவை தான் உண்டாக நிற்கச் செய்தேயும் –
கரண சரீரத்தில் நிவேசியாதே -சந்நிதி மாத்ரத்தாலே உபகாரங்களாய் நிற்கக் கடவது –
அவனே உபாயமுமாய் -அவன் சித்த ஸ்வரூபமானுமாய்-இருக்கச் செய்தே –
சம்சாரமும் அனுவர்த்திக்கிற ஹேது -ஈத்ருசங்களில் இல்லாமை இறே –
ஆக -இப்படி ப்ராப்தி அளவும் நின்று -முகம் காட்டி தரிப்பிக்க வேண்டி இருக்க – அது செய்யாமையாலே -நெஞ்சை இன்னாதாகிறது –

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்தன்று தாறும் திரிகின்றதே -46-அருள் பெறுவார் அடியார் -10-6-

—————————————

கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவுபடுகிற தலை மகளைக் கண்ட திருத் தாயார்-
பாதகங்களின் பெருமையையும் –
இவள் ஆர்த்தவத்தையும் –
அனுசந்தித்து -என்னை விளையக் கடவதோ -என்கிறாள் –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–நாங்கள் வரி வளை -8-2-

———————–

இஸ் சம்சாரத்தில் நம்மை வைத்த இதுக்கு ஹேது ஏதோ -என்று இறே இவர் நொந்தது –
இவருக்கு இவ்விருப்பு நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கலில் இறே –
அங்கன் இன்றிக்கே -நமக்காக இருக்கிறீர்-என்னும் இடத்தை அறிவிக்கவே இவரை தரிப்பிக்கலாம் –
மேல் இவர் போய் பெற இருக்கிற ஸ்வரூபமும் இதுவே என்று பார்த்து –
வாரீர் நீர் உமக்கு இங்கு ஒரு-சம்பந்தம் உண்டாய் இருக்கிறீர் அல்லீர் -நமக்காக இருக்கிறீர் அத்தனை –
நாமும் ரசித்து நம்முடையாரும்-ரசிக்கும்படியாக உம்மைக் கொண்டு நம் சீல வ்ருத்தங்களை வெளி இடப் பார்த்தது –
அதுக்காக வைத்தோம் இத்தனை காணும் -என்று ஈஸ்வரன் அறிவிக்க –
ஆனால் தட்டென்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்தததுவுமாய்-நாம் பெற இருக்கிறது இது வாகில் குறை என் -என்று
விஷயீகரித்த படியை கண்டு விஸ்மிதராய்-அவ்விஷயீ காரத்தை பேசுகிறார்-

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –என்றைக்கும் என்னை -7-9-

——————————-

சர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாஷம் பண்ணிற்று இலனோ -என்று ஆறி இருந்தார் முன்பு –
காதாசித்கமாய் அனுபவ விச்சேதத்தை பண்ணுமதான சம்சாரத்திலே நம்மை வைப்பதே-என்னும் ஆற்றாமை
ஒரு பிராட்டி திசையை விளைத்தது –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலை மகள் -தான் ராத்திரி வ்யாசனத்தாலே
நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் -அன்றிக்கே தோழி வார்த்தை ஆதல் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –ஊரெல்லாம் துஞ்சி -5-4-

—————————

இதுக்கு முன்பு இங்கன் இருப்பதொரு ராத்ரி வ்யசனம் அனுபவித்து அறியோம் என்னும்படி-அவசாதம் மிக்கவாறே –
போத யந்த பரஸ்பரம் -பண்ணி இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக தலை மகன் வருகிறான் –
வினை முற்றி மீண்ட தலைமகன் -பதினாலாம் ஆண்டு போன வழியை ஸ்ரீ பரதாழ்வான் ப்ரக்ருதியை அறிகையாலே –
ஸ்ரீ பெருமாள் ஒரு பகலே மீண்டால் போல் -த்வரித்து வருகிறானாய்-இருக்கிறது –
தலைமகன் சாரதியை பார்த்து சொல்லுகிறான் –

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-கிளரொளி இளைமை -2-10–

————————-

இவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு பாதகம் ஆகிற படியை சொல்கிறது –
பதினாலாண்டு கூடிப் போன வழியை ஒரு பகலே வாரா நிற்கச் செய்தே –
க்ரம ப்ராப்தி பற்றாமை நடுவே ஸ்ரீ திருவடியை வரக் காட்டினார் இறே-
அப்படியே இங்கு ஓர் ஆள் வரா விட்டால் கண்டதெல்லாம் பாதகமாம் இறே –

சங்கத்யாத் பரத ஸ்ரீ மான் ராஜ்யே நார்த்தீ ஸ்வயம் பவேத் -ஐயர் நியமிக்க -ஆச்சி உடைய வர வ்யாஜத்தாலே –
நாம் ராஜ்யத்தை தனக்கே கொடுத்து போரச் செய்தேயும் –
நம்மை பின் தொடர்ந்து வந்து -சொன்ன நாள் எல்லை கழிந்தால் -பின்னை ஒரு ஷணம் நான்-தாழ்க்கில் தன்னை கிடையாது –
என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான் –
இன்று நாம் சென்று-கிட்டினால் பதினாலாண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே -நீ முடி சூடு என்றால் -அல்லேன் -என்னாதே –
அத்தை இசையப் பெறுவது காண்-
ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு -நாம் பிள்ளையை-முடி சூட்டிக் கண்டு தீரப் பெறுவது காண் –

சநைர் ஜகாம சாபேஷ -என்கிறத்தை சாவேஷ -என்று திருத்தி -கீழ் விழியாலே பார்த்து போனார்-என்று
பொருள் சொன்னபடியை -ஸ்ரீ பட்டர் கேட்டருளி -அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே-பொருள் சொல்லலாம் காண் என்று –
இவ் உபகரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக்-காணப் பெற்றிலோம் என்னும் அபேஷையோடே
போனார் என்கிறது காண் -என்று அருளிச் செய்தார் –
அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்னே இறே

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

——————————–

கால மயக்கு துறை —

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே – 52-அந்தாமத் தன்பு -2-5-

——————————-

இவள் இருந்து பகட்ட கேளாது இறே அது -காலமும் அதுவேயாய் -வர்ஷமும் மெய்யாய் நிலை நின்றவாறே
அவன் வரவு காணாமை -இவள் மோஹித்தாள் –
இவளுடைய ஸ்லாக்யத்துக்கு அனுரூபமாக பந்துக்கள் கலங்கி –
வழி அல்லா வழியே பரிகரிக்க இழிய -இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி –
நீங்கள் செய்கிறது பரிகாரம் அன்று –
இவள் பிழைக்க வேணும் ஆகில் நான் சொல்லுகிறபடியே இங்கனம் பரிகரிக்க பாருங்கோள்-என்கிறாள்-

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –வைகுந்தா மணி வண்ணனே -2-6-

————————-

நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -என்றாளே –
வீச வேண்டிற்று இல்லை-இவளுடைய உக்தி மாத்ரத்தாலே உணர்த்தாள்
உறங்கின போது பசி பொறுக்கலாம்-உணர்ந்தால் ஜீவித்து அல்லது நிற்க ஒண்ணாது இறே –
மோகம் தானே நன்றாம்படி யாய் இருந்தது-இனி அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்-
இங்கு நின்று ஆள் விட்டு வரவு பார்த்து இருந்து தரித்தல் -செய்ய வேண்டும்படியாய் ஆயிற்று
இங்கு நின்றும் ஒருவர் வரக் கண்டது இல்லை -தன் பரிகாரத்தில் கால்நடை தருவார் இல்லையாய் ஆயிற்று-
இனித் தன் பரிசரத்தில் வர்த்திக்கிற வண்டுகளை தூது விடுகின்றாள் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 ––கேசவன் தமர் -2-7–

———————————–

இவள் விட்ட தூதுக்கு வந்து கலந்து -பிரிய நினைத்து -பிரிந்தால் வரும் அளவும் -இவள் ஜீவித்து இருக்கைக்காக –
இப்படி இருக்கிற இவன் -பிரிந்தால் தாழான் -என்று அவள் நெஞ்சில்-படுகைக்காக –
நலம் பாராட்டு என்பதோர் கிளவியாய் -அவளைக் கொண்டாடுகிறான் –
குலே மஹதி சம்பூதே -என்று ஸ்ரீ பெருமாளும் கொண்டாடினார் இறே-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55- -சார்வே தவ நெறி -10-4-

——————————-

கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க -பிரிவாற்றா தலை மகளைக் கண்ட தோழி –
இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இதுவாய் இருந்தது -நாயகனையோ வரக் காண்கிறிலோம் –
இனி இவள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை -இவளை இழந்தோம் ஆகாதே -என்று-நோவுபட –
இத்தைக் கண்ட தலைமகள் -இவள் சன்னதியிலே யாத்ருச்சிகமாக ஒரு சம்ஸ்லேஷம் வ்ருத்தம் ஆயிற்றாய்-
அத்தை இவளை நோக்கி -நீயும் அறியாதபடி இங்கனே ஒரு சம்ஸ்லேஷம் வ்ருத்தம் ஆயிற்று காண் –
நீ அஞ்ச வேண்டா காண் – என்று தலைமகள் தான் தோழிக்கு வ்ருத்தமான சம்ஸ்லேஷத்தை சொல்லுகிறாள் .
தலைவன் இரவிடை கலந்தமையைத் தலைவி தோழிக்கு உரைத்தல்-

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 ––கண்கள் சிவந்து -8-8-

———————————

சம்ஸ்லேஷித்து விஸ்லேஷமும் வ்ருத்தம் ஆயிற்று-
ஒரு கார்ய புத்யா பிரிந்தான் ஆகிலும் -ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும்படி இறே தலை மகன்-ஆற்றாமை இருப்பது –
அவனுடைய ஆற்றாமையால் வந்த தளர்தியை கண்ட பாங்கானவன் –
லோக யாத்ரையில் ஒன்றுக்கு ஈடுபடாத நீ ஒரு விஷயத்துக்காக இப்பாடு படும் அது
தலைமைக்கு போராது காண் -என்று திருத்தப் பார்க்க –
அவளுடைய நோக்குக்கு இலக்கானார் படுமது அறியாமை காண் நீ இப்படி சொல்லுகிறது –
நீயும் அவள் நோக்குக்கு இலக்கு ஆனாய் ஆகில் -இப்படி சொல்லாய் காண் -என்று
அவன்-கழறினததை மறுத்து வார்த்தை சொல்லுகிறான்
கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-தலைவன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே -57 –முடியானே மூவுலகும் -3-8-

———————————————-

கீழ் பிறந்த அவசாதம் எல்லாம் நீங்கும் படிக்கு ஈடாக -ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றி
எல்லார் தலையிலும் பொருந்தும்படியான திருவடிகளைக் காட்டி -ஆன பின்பு நமக்கு
ஆகாதவர் இல்லை காணும் -என்று ஆஸ்வசிப்பித்து-இப்படி எல்லாம் செய்ய செய்தேயும் -ஒன்றும் செய்யாதானாய் –
அவன் நிற்கிறபடியை கண்டு அத்தை பேசுகிறார் –
தோழி தலைவன் பெருமையை யுரைத்து தலைவியை ஆற்றுதல் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-திண்ணன் வீடு -2-2-

—————————————-

எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே -அவதரித்து இங்கே வந்து –
சுலபனானான் என்றவாறே -தாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் -அங்கே இருந்து இழக்கை அன்றிக்கே –
இங்கே வந்து கிட்டச் செய்தே -பேரா விட்டவாறே அவசன்னரானார் -அவ்வஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்து –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத் தலைமகள்-சம்பந்தம் உண்டாய் இருக்க -போக யோக்யமான காலத்தில் –
வந்து உதவக் காணாமையாலே-இருள் பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் -என்று
அவள் பாசுரத்தை திருத் தாயார்-சொல்லுகிறாளாய் இருக்கிறது –
இரவு நீடுதற்கு ஆறாத தலைவியைப் பற்றி செவிலி இரங்குதல்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய் க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 ––முந்நீர் ஞாலம் -3-2-

———————————-

தளப் பெரும் நீண் முறுவல் செய்யவாய் தட முலை வளப் பெரும் நாடன் மது சூதன் என்னும் -என்றாளே –
ப்ராப்த யௌ வநையாய்-பருவம் நிரம்பின இன்று இவள் சொல்லுக்கு கேட்க-வேணுமோ –
பால்யமே பிடித்து இவளுக்கு இது அன்றோ யாத்ரை என்கிறாள் –
தலைமகள் இளமைக்கு செவிலி இரங்கல்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –அறுக்கும் வினையாயின -9-8-

———————————–

பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -என்று இவள் சொன்ன அநந்தரம்-
திருத் தாயார் அத்தை அநுபாஷிக்கையாலே -அத்தைக் கேட்டு -பிராட்டியான தசை போய் -தாமான தசையாம் படியாய் தரித்தார் –
இவர் தம்மை தாம் உணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரம் இறே –
அங்கே புக்கு -எத்திறம் -என்கிறார் –
தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –பிறந்தவாறும் -5-10-

———————————-

கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார சௌலப்யம் இறே அனுசந்தித்தது –
அந்த அவதார சம காலத்திலேயே-தாம் உளராக பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே -கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை –
பிராப்தரானார் -அவள் பிறிவாற்றாமைக்கே மேலே கடலோசையும் பாதகமாக நின்றது
என்று திருத் தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது-
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு கூறுதல் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – – 62- –தேவிமார் ஆவார் -8-1-

————————————

முறையோ -என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே -வந்து குளிர நோக்கினான்
தலைவனை இயல் பழித்த தோழிக்குத் தலைவி இயல் பட மொழிதல் –

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே – – 63- ––இவையும் அவையும் -1-9-

—————————————–

திருக் கண்களால் குளிர கடாஷித்தான் என்று இறே கீழ் நின்றது –
அல்லாதார் மேல் வையாதே-தம்மேல் விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு நிபந்தனம் என் -என்று ஆராய்ந்தார் –
அஹ்ருதயமாக-திரு நாமத்தை சொன்னேனே என்ன -அத்தாலே ஆகாதே -என்கிறார் –
தலைவன் பேர் கூறித் தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்கு கூறி இரங்கல்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 – –பாமுரு மூவுலகும் -7-6-

————————————

தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள் தனக்கு பாதகமான படியை
பாங்கனுக்கு சொல்லுகிறான் –
தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோகரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே – 65 –நோற்ற நோன்பு -5-7-

——————————-

தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும்
தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –ஆராவமுதே -5-8-

————————————

இப்பாட்டும் -கண் அழகு தன்னையே தலைமகன் சொல்லுகிறான் –
தலைவன் பாங்கனுக்குத் தன் வலி யழிவு உரைத்தல்-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67-–உலகமுண்ட பெரு வாயா -6-10-

———————————–

கலந்து பிரிந்த தலைமகன் -கொன்றை பூக்கும் காலத்திலே வருகிறேன் -என்று காலம் குறித்துப் போனானாய் –
அக்காலம் வந்து அவையும் பூக்கச் செய்தே -அவன் வாராமையாலே தலை மகள் தளர -அத்தைக் கண்ட தோழியானவள் –
அக்காலம் அல்ல என்ன ஒண்ணாதபடி அது முடிகிக் கொடு நிற்கையாலே -இவை பூக்க உத்யோகிக்கிறன இத்தனை –
பூத்துச் சமைந்தன வில்லை காண் –ஆன பின்பு அவனும் வந்தானத்தனை –நீ அஞ்சாதே கொள் -என்று
அவளை யாஸ்வசிப்பிக்கிறாள்-கால மயக்கு-

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68- –கொண்ட பெண்டிர் -9-1-

————————————-

அதுக்கு மேல் சந்த்யையும் வந்து நலிய -அநந்தரம்-போக யோக்யமான காலமாய் இருக்க –
அவன் வந்து தோன்றாமையால் தலை மகள் ஆற்றாளாக – இது கண்ட தோழி யானவள் -இது சந்த்யை அல்ல
இரண்டு வ்ருஷபங்கள் தங்களிலே பொருகிறன காண் -என்று காலம் மயக்கி அவளை
தரிப்பிக்கிறாளாய் -இருக்கிறது –
மாலைக்கு இரங்கிய தலைவியை தோழி ஆற்றுதல்-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 ––கற்பார் இராம பிரானை -7-5-

———————————–

ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின மாலையை பெற வேணும் என்னும் அபேஷையால் உண்டான-த்வரையாலே –
காலம் செலுத்த உள்ள அருமை -சொல்லுகிறது –
தலைவி இரவின் நெடுமைக்கு இரங்கல் —

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70- –பிறவித் துயரற -1-7-

——————————————

களவிலே புணர்ந்து நீங்கின தலைமகன் -இவள் ஆற்றாமையை பரிகரிக்கைக்காக
இவள் வர்த்திக்கிற தேசத்தில் தன் நிறத்தோடு போலியான பழங்களை
சிலர் விற்பர்களாக பண்ணி – இவளும் அத்தைக் கண்டு தரிக்க -அத்தை தாயார் நிஷேதிக்கிறாள் –
தாயார் சொல்லுகிற மிகையை தலைமகள் தோழி மாருக்கு சொல்லுகிறாள்-
செவிலி வெறுத்தலைத் தலைவி தோழியர்க்கு உரைத்தல் —

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே –-71 –எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

————————————-

போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே -ராத்திரி வந்து இருளாலே நலிய –
இத்தால் வந்த நலிவைப் போக்கி நம்மை ரஷிப்பார் யாரோ -என்று இருக்கிற அளவில் சந்தரன் வந்து தோன்றினான் –
இவ்விடத்தே ஸ்ரீ பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் –
ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே போனானாய்-ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி
நம்மை ரஷிப்பார் யார் -என்று இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப்பசுவையும் கொன்று –
அதனுடைய ரத்த பானத்தை பண்ணி – இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் –
அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரணம் பண்ணி போகல் ஆயிற்று –
இனி இத்தைத் தப்பி நம் சத்தையை நோக்குகை என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று அது போலே இறே இதுக்கும் –
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72-சீலமில்லாச் சிறியன் -4-7-

—————————————-

நிலவு போய் முடிய நின்று பாதகமாய் —போய் என்றது மிகுதியாய் –
அத்தாலே இவளும் நோவு பட்டு -மோஹித்து கிடக்க –
இத்தைக் கண்ட திருத் தாயார் -தர்ம ஹானி கிடீர் -என்று கூப்பிடுகிறாள் –
பிறை யுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சிக்குப் பாங்கி இரங்கல்-

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-–-வேய் மரு தோள் இணை -10 -3 –

————————————-

ஒரு தென்றல் வந்து உலாவிற்றாய் -தென்றல் வந்தது -அவன் வரக் கண்டிலோம் -என்று
தலைமகள் தளர -அத்தைக் கண்ட தோழி யானவள் -இத்தை வெறும் தென்றல் என்று இருந்தாயோ –
மாளிகை சாந்து நாறா நின்றால்-ராஜ புத்திரன் -வரவணித்து – என்று இருக்க வேண்டாவோ –
இது அவன் வரவுக்கு ஸூ சகம் காண் -நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள்-ஆக இருக்கிறது –
தலைவனது தார் மணம் கொண்டு வரும் தென்றலைத் தலைவி மகிழ்ந்து உரைத்தல் —

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே –-74-துறையடைவு–செய்ய தாமரை -3 -6 –

——————————–

கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒரு வகை யாதல் –
அன்றிக்கே இயற்கையிலே ஐயமாதல் –
ஒரு நாள் சம்ஸ்லேஷித்து -விஸ்லேஷித்து -பின்னையும் வந்து சம்ஸ்லேஷித்த நாயகன் நாயகி உடைய வைபவம்
உபய விபூதியிலும் அடங்காது என்று கொண்டாடுகிறான் என்னுதல் –
அன்றிக்கே -யாத்ருசிகமாக பிரதமத்தில் சம்ச்லேஷித்து பரிச்சேதிக்க மாட்டாதே சம்சயிக்கிறான் என்னுதல்-
மதி யுடம்படுக்கலுற்ற தலைவன் தலைவிப் பற்றி தோழியரை வினாதல் —

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே –-75 –சன்மம் பல பல -3 -10 –

————————————

சந்த்ரோதயத்தில் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து -சந்த்ரனுக்கு இங்கனே எளிய
செயல்கள் செய்கை ஸ்வ பாவம் காண்-நீ இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள் –
மாலை பெறாது வருந்தும் தலைவி மதிக்கு வருந்தி நெஞ்சோடு கூறுதல் —

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே –-76 –—ஓராயிரமாய் -9-3-

——————————————–

சந்த்யையில் நோவு படுகிறாள் ஒரு தலை மகள் வார்த்தையாய் இருக்கிறது –
தலைவி மாலைப் பொழுது கண்டு வருந்துதல் –

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –-77-தாள தாமரை -10-1-

—————————————-

இதில் கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தை பெற வேண்டும் என்று ஆசைப் பட்டாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது
பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலைக் கருதி நெஞ்சு அழிந்து இரங்கல் —

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே –– 78–துறையடைவு-இன்பம் பயக்க-7-10-

—————————————-

பாவியேன் -பகவத் விஷயம் என்றால் தளராதே நின்று அனுபவிக்குமவர்களும் சிலரே -என்கிறார் –
தலைவனை பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல் –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – -79 –மெய்ம்மாம் பூம் பொழில் –3 –5–

————————————-

ஆதித்யனும் போய் அஸ்தமித்து -இருளும் வந்து பாதகமாக நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது –
பிரிவாற்றாத தலைவி மாலைப் பொழுது கண்டு இரங்கல்-

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே -80 –முடிச் சோதியாய் -3–1-

—————————————–

இருளும் போய் முடிகி இவளும் மோஹித்து கிடக்க -இவள் தசையையும் காணா நிற்கச் செய்தே பந்து வர்க்கத்தில் உள்ளார் –
க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் -என்று ஆறி இருக்க
இத்தைக் கண்டு -இவளுடைய அவசாதம் இருந்த படி இது -ஸ்லாக்யதை இருந்தபடி இது -இப்படி இருக்க
இவர்கள் ஆறி இருக்கைக்கு இவர்கள் நேர் கொடு நேரே இவளைப் பெற்றவர்கள்-அன்றோ -என்று இங்கனே
ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –
வெறி விலக்கு விக்க நினைந்த தோழி இரங்கல் —

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே –-81–வீடுமின் முற்றவும் -1-2-

——————————————–

ஜீயர் –இப்பாட்டு சொல்ல வநபிமதமாய் இருக்கும் -என்று அருளிச் செய்வர் –
உரு வெளிப்பாட்டிலே சர்வேஸ்வரன் உடைய திருக் கண்கள் பாதகமாம் படியை சொல்லுகிறது இது இறே –
இவருடைய ஆற்றாமை உண்டாகில் இறே இப் பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது –
தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணன் அன்றோ –
உரு வெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண் அழகுக்கு இரங்கல் —

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –– 82 —உருகுமால் நெஞ்சு -9–6-

———————————————–

உரு வெளிப்பாட்டாவே நோவு படா நிற்கச் செய்தே -அதுக்கு மேலே -முற்றத்திலே ஒரு பனையாய் –
அப் பனையில் தொங்கிற்று ஒரு அன்றில் -தான் வாய் அலகை பேடையோடு கோத்து கொண்டு இருக்கிற
இத்தை நெகிழ்ந்தவாறே கூப்பிட கடவதாய் -அதனுடைய ஆர்த்த த்வனியில் இவள் மோஹித்து கிடக்க –
இத்தைக் கண்டு -இதன் த்வனி இருக்கிற படி இது -இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இது –
இவளுடைய மார்த்வம் இருக்கிறபடி இது -இவை எல்லாம் இருந்தபடியாலே இவள் உளளாக அபிமதங்கை புகுந்து –
இவள் ப்ரீதையாய் இருக்க காண மாட்டோம் ஆகாதே -என்று இங்கனே தாயார் உடைய வார்த்தையாய் இருக்கிறது –
ஸ்ரீ பட்டர் -இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க -ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்கு போலியாக
சொல்லலாம் இடம் உண்டோ -என்று கேட்க -ஸ்ரீ இளைய பெருமாள் காட்டிலே கொண்டு போய் பிராட்டியை
விட்டுப் போந்த அநந்தரம்-அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு திருத் தாயார் படி
உண்டாக சொல்லலாம் -என்று அருளிச் செய்தார் –
அன்றிலின் குரலுக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் —

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – -83 –உண்ணிலாய ஐவரால் -7–1-

———————————–

இவள் மோஹித்த அநந்தரம் -அரத்தியாய் ஓர் இடத்தில் தரியாதே -பகவத் அலாபத்தாலே-அங்கே இங்கே தடுமாறி
கூப்பிட்டு கொண்டு திரிகிறபடியை சொல்கிறது –
க்வசிதுத் பரமதேவகாத்க்வசித் விப்ரமதேபலாத் ச்வசின்மத்தஇவாபாதி காந்தான் வேஷணதத்பர –
தலைவி தலைவனைக் காண விரைதல் —

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே –– 84–மையார் கருங்கண்ணி -9–4-

——————————

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு தலைமகள் வார்த்தை யாதல் –
அன்றிக்கே -இவள் தசையை அனுசந்தித்த திருத் தாயார் வார்த்தை யாதல் –
மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – -85- –எம்மா வீடு -2-9-

———————————–

எத்தனை ஏனும் இருள் வந்து மேலிட்டு பாதகம் ஆனாலும் -அத்தலையில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படி இறே
அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும்படி –
தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் —

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே –– 86- -வள வேழ்வுலகு -1-5-

——————————————

உன்னை பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு –
லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே -என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது
அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத் திருவினையே – — 87-–பண்டை நாளாலே -9-2-

————————————–

இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே -இத்தை சொல்லி பழி சொல்லும்படியாக
பெற்ற நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்கிறாள் –
இப் பாட்டில் சொல்லுகிறது என் என்னில் –
சர்வதா சத்ருசமாய் இருப்பதொரு வஸ்து -இல்லாதபடி இருக்கிற சர்வேஸ்வரன் –
திரு மேனிக்கு-சேர்ந்து இருப்பதொரு ரூபமானதைக் கண்டால் -உபமான ரஹீதமாய் இருப்பதொரு வஸ்துவுக்கு-
கதிர் பொறுக்கி யாகிலும் இங்கனேயோ ஒரு ரூபமாக உண்டாக பெற்றோம் -என்று –
இது ஆஸுவாச-ஹேது வாகை யன்றிக்கே -அவ் உபமேயம் தன்னையே காண வேணும் என்னும் படியான-விடாயை உடைய –
நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்றது -ஆதல் –
அன்றிக்கே
அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்தால் -அவ்வளவிலே பர்யசியாதே -அவனுடைய-
அசாதாரண விக்ரகத்தை காண வேணும் -என்னும் அபேஷை பிறக்கும்படியான -எனக்கு-ஒரு குறை உண்டோ -என்னுதல் –
போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் —

திருமாலுரு வொக்கும் மேரு அம்மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – -88-–புகழும் நல் ஒருவன் -3-4-

——————————————

சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப் பெற்றோம் -இனி அவனைப் பெற்று
அனுபவிக்கிற வர்களோடு நாம் சஜாதீயராக -பெறுவது என்றோ -என்கிறார் –
தலைவன் கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல்–

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே –– 89-–அங்கும் இங்கும் -8-3–

————————————-

என் ஞான்று தலைப் பெய்வனே -என்று இறே கீழ் நின்றது -என்றாகில் என் –
ஸ்ரீ பகவத் ஸ்பர்சம்-பலத்தோடு சந்திப்பித்து விடும் -என்று விஸ்வசித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –
அப்படி செய்யலாய் இற்று இறே -சம்சாரிகளைப் போலே நிரபேஷன் ஆனேன் ஆகில்
எனக்கு உன்னை ஒழிய கால ஷேபம் பண்ணுகை அரிதாக நின்றது என்கிறார் –
இப் பாட்டில் சொல்லுகிறது என் என்னில்-
உன் திருவடிகளை சமாஸ்ரயிக்கைக்கு ஈடாக-இருப்பதொரு சரீரத்தை பெற்ற படியையும் –
அது தான் அஸ்த்ரமாய் இருக்கிறபடியையும் -அனுசந்திக்கப் புக்கால் –
அத்தாலே வந்த ஆற்றாமையாலே -காலம் நெடுகா நின்றது என்னுதல் –
அன்றிக்கே
உன்னை ஒழிய வேறு ஒன்றால் தரியாத படியான ஸ்வபாவத்தை பெற்றான படியையும் –
இது தான் பிரகிருதியோடு இருக்கச் செய்தே வந்த ஸ்வபாவம் ஆகையாலே -இது தானே ஏக ரூபம்-அன்றிக்கே -இருக்கிற
ஆஸ்ரயத்தை அனுசந்திக்கப் புக்கால் இதுக்கு காலம் போருகிறது இல்லை-என்றது ஆதல் –
தலைவனைப் பிரிந்த தலைவி கால நீட்டிப்புக்கு ஆற்றாது உரைத்தல் —

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே –– 90-குரவை ஆய்ச்சியர் -6–4–

————————————————————

இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது -குறுகா நின்றது என்னா -ஆழம் கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –
புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும்-சுகுத்து திரிகிறோம் –
அப்படியே நீரும் ஸ்ரீ பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –
ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே-அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் –
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஒன்றை அறியாது என்கிறார் –
இந் நெஞ்சு தன்னையும் வைக்கல் ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று இலனாகில் –
தோழிக்கு தலைவி தன் கற்பு உணர்த்தி அறத்தொடு நிற்றல் —

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -91 – –வார் கடா அருவி -8–4-

————————————

பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம் பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே ஒழிவதே -என்கிறார் –
என் தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் -நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை –
அழிவுக்கு இட்டு வேறே சில பிரயோஜனன்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –
வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே –– 92 –ஆழி எழ -7–4-

————————————

தேவர்கள் தானோ ஓர் அபிமான விசேஷத்தாலே தவிருகிறார்கள் –
அல்லாதாரோ தான் ஸ்ரீ பகவத் பஜனம் பண்ணுகிறார்கள் -அவர் இவர் என்று விசேஷிககிறது என் –
எல்லார்க்கும்-புறம்பே அன்றோ போது போக்கு என்கிறார் –
இருள் கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல் —

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே – -93 —ஒரு நாயகமாய் -4–1-

———————————————–

துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார்
உமக்கு குறை இல்லையே -என்ன – எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –
முன்னாடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று –
அந்த பக்தி பாராவச்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே அயோக்யா அனுசந்தானத்தாலே என்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — 94-–இருத்தும் வியந்து -8-7

—————————————–

பக்தி பாரவச்யத்தாலே யாதல் -அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் -ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் -இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –
இவ் விடத்தில் ஸ்ரீ ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே ஸ்ரீ பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே -அங்கே ஸ்ரீ ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு ஸ்ரீ திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன –
ஸ்ரீ பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல -ஸ்ரீ ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –
ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே -ஸ்ரீ வளவன் பல்லவதரையர் -என்று ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி-
ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க -இத்தைக் கண்டு –
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –
ஸ்ரீ நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே–ஸ்ரீ எம்பெருமான்-திரு முன்பே இப் பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் –
என்று அருளிச் செய்தார் -அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –
அவர் இதிலே அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன -அது எனக்கு போகாது –
இப்பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –
ஸ்ரீ நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார் –
தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே –-95 –திருமாலிருஞ்சோலை -10-8-

——————————————-

பேச ஒண்ணாது என்று கை வாங்கவும் மாட்டாதே -பேசாது இருக்கவும் மாட்டாதபடியாகவும் -இதர விஷயங்களில்
அருசியையும் -பிறப்பித்து -தன் பக்கலிலே ருசியையும் பிறப்பித்த-இந்த மகா உபகாரத்துக்கு
சத்ருசமாக பண்ணுவது ஒரு பிரத்யு உபகாரம் இல்லை இறே –
உன்னதான வஸ்துவையும் உன் பக்கலிலே சமர்ப்பிக்கும் அத்தனை இறே இனி என்று அத்தைச் செய்தார் –
வணங்கும் துறை -லபிக்கும் அம்சம் எல்லாம் இங்கு இல்லை என்கிறார் –
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப் போந்த நானும் கை விடவோ
லபிக்கும் அம்சம் இங்கு இல்லை என்று பூர்வ அர்த்தத்தை கடாஷித்துக் கொண்டு –
நீ இப்படி செய்த பின்பு உன்னை ஆஸ்ரயிக்கும் உபாயம் ஒன்றும் இல்லை என்று அருளிச் செய்கிறார் –
நீ கை விட்டால் உன் கார்யம் செய்ய போந்த நானும் கை விடவோ-என்று ஸ்வ சரண கமல சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக –
கரண களேபரங்களைக் கொடுத்து-பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்து –
ஹிதைஷியாய் இருந்தேன் இத்தனை ஒழிய-கை விட்டேனோ என்று அருளிச் செய்கிறார் –
சித் சக்திகளையும் பிரவ்ருத்தி சக்திகளையும் -அடியிலே இவை அசித் கல்பமாய் இருந்த-சமயத்திலே –
இவற்றினுடைய தயநீய தசையைக் கண்டு -புருஷார்த்தம் இன்னது என்று அறிந்து -ருசித்து பற்றுகைக்கு ஈடாக கொடுத்து விட –
அவை தான் இதர விஷயங்களின் ருசிக்கைக்கும்-அதுக்கு ஈடாக ப்ரவர்த்திக்கைக்கும் பொதுவாய் இருக்கையாலே –
இவை சம்சரிக்கைக்கு ஈடாக-ப்ரவர்த்தித்ததாய் நீ என்னலாம்படி விழுந்தது –
கிணற்றின் கரையில் பிரஜையை வாங்காதே -யாறி இருந்த தாயை தானே தள்ளினாள் என்னக் கடவது இறே –
தலைவி வெறி விலக்கு வைக்க நினைத்தல் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே –-96 -ஒன்றும் தேவும் -4-10-

—————————

பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றும் –
நின்கண் வேட்கை எழுவிப்பனே -என்றும் -இவ்விஷயத்திலே இங்கனே கிடந்தது அலமாவா நின்றீர் –
இவ்விஷயத்தில் கை வைக்கில் உமக்காகவும் பிறர்க்காகவும் கிலேசந்தவிராதாய் இரா நின்றது –
அல்லாதார் கண்டீரே -புறம்புள்ள விஷயங்களிலே நெஞ்சை வைத்து –
அவற்றாலே உண்டு உடுப்பது-கண் உறங்குவதாய் கொண்டு போது போக்குகிறபடி –
அப்படியே நீரும் நம் பக்கலிலே நின்றும்-நெஞ்சை புறம்பே மாற்றி போது போக்க வல்லீரே என்ன –
அவர்கள் உன்னை-அறியாமையாலே -என்கிறார் –
தலைவன் பிரிவில் துயில் கொள்ளாத தலைவி இரங்குதல் —

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே –– 97-பரிவதில் ஈசனை -1-6-

———————————-

இவ் விஷயத்திலே கை வைத்து அதில் உமக்கு உண்டான ஈடுபாட்டைச் சொல்லுவது –
பிறரை திருத்தப் பார்ப்பதாய்க் கொண்டு -க்லேசியாய் கிடவாதே -உம்முடைய துறை அன்றோ ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –
நவநீத ஸௌர்ய வ்ருத்தாந்தத்தை அனுபவித்து போது போக்க பார்த்தாலோ -என்றார்கள் சிலர் –
இவர்க்கு அது ஆழம் கால் என்று அறியார்களே –
இவர் -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமது இறே அது தான் -அது நெஞ்சாலும் நினைக்கப் போகாது –
தலைவனது அருமை நினைந்து கவல்கிற தலைவிக்கு தோழி கூறல் —

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன்சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 -கெடுமிடராய-10-2-

—————————————-

ஸ்ரீ பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-
உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யாகாண்டம் -8 7-9 – –
ரசவாதம் கீழ்ப் போமாம் போலே
ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப்படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது -ஸ்ரீ சக்கரவர்த்தி துஞ்சினான் -ஸ்ரீ பெருமாள் பொகட்டுப் போனார் –
நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது –
நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –
புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் -அபி வ்ருஷா -என்கிறபடிக்கே
படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட நோவோன்றாய் இருக்கச் செய்தே -பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-
கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –

அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே –
இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை –சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு –
எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –
ஸ்ரீ ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு -ஸ்ரீ கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று –
சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே -ஸ்ரீ பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி
பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஸ்ரீ ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையின் பர்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் -ஸ்வாமிகள் ஸ்ரீ திரு மழிசை தாசராய் –
ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக -அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –
அவரும் தாமுமாக ஸ்ரீ திருவாய் மொழி ஓதா நிற்க -ஸ்ரீ ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-
ஸ்ரீ ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து -நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –
லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஸ்ரீ ஆண்டான் –
ஸ்ரீ திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –

பகல் எல்லாம் ஸ்ரீ பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் கொண்டு
பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ண நீர் வெள்ளமிட்ட படி –
ஸ்ரீ பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே –
அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் – அப்படியே செய்து கொடு போந்தார்களாய் –
இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து -இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் ஸ்ரீ திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஸ்ரீ ஆழ்வான் பாடே ஸ்ரீ திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன ஸ்ரீ திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் -அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன –
ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என் -அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து
இயல் சொல்லி -அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –
நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சேதனனோ-என்று அருளிச் செய்தாராம் –

நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ஸ்ரீ ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே –
இப்பாட்டு ஸ்ரீ ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – 99-–செஞ்சொல் கவிகாள்–10-7-

——————–

நீர் பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையீருமாய் -இப்படி அறுதி இட்டு காண்கைக்கு ஈடான-நன்மையை உடையீருமாய்
இருக்கையாலே நீர் இப் பேறு பெற்றீர் -உம்மைப் போலே ஜ்ஞானம்-இன்றிக்கே பாக்ய ஹீனருமாய்
பிற்பாடருமான சம்சாரிகள் செய்வது என் என்ன –
அவர்களுக்கு என் தன்னை ஜ்ஞானமில்லையே யாகிலும் -நான் சொன்ன இப் பாசுர மாத்ரத்தையே- சொல்ல –
அவர்களும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் -என்கிறார் –
நூல் பயன்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-–முனியே நான்முகன் -10-10-

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: