ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை வைபவங்கள் – –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————————

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை வைபவங்கள் –

அநந்தரம் வேதாந்திகளான ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டர் நல்லருள் கொண்டு திருவாய் மொழிக்கு ஒன்பதினாயிரமாக ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியையிலே
ஒரு வ்யாக்யானம் அருளிச் செய்து முற்றப் பட்டோலை கொண்டு இத்தை ஒரு சம்புடத்திலே நன்றாக எழுதித் தர வல்லார் உண்டோ என்று
தம் திருப் பாதத்து முதலிகளைக் கேட்க அவர்களும் தென்கரையினின்றும் ஸ்ரீ நம்பூர் வரதராஜர் என்பார் ஒருவர் பலகாலும் இங்கே வருவர் –
அவர் நன்றாக எழுதுவர் என்று ஸ்ரீ நஞ்சீயருக்கு விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ வரதராஜரை அழைப்பித்து ஒரு கிரந்தம் எழுதிக் காட்டிக் கண்ணீர் -என்ன ஸ்ரீ வரதராஜரும் எழுதிக் காட்ட –
ஸ்ரீ ஜீயரும் அத்தைத் திருக் கண் சாத்தி அருளி எழுத்து முத்துப் போலே நன்றாக இருந்தது -ஆகிலும் இது ஸ்ரீ திருவாய் மொழி வியாக்யானம்
ஆகையால் ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேண்டுகையாலே திரு இலச்சினை திரு நாமம் மாத்திரம் உண்டான இவரைக் கொண்டு
எங்கனே எழுதுவிப்பது -விசேஷஞ்ஞரைக் கொண்டே எழுதுவிக்க வேணும் இறே என்று சந்தேகிக்க
ஸ்ரீ வரதராஜரும் ஸ்ரீ ஜீயர் திரு உள்ளத்தை அறிந்து அடியேனையும் தேவரீர் திரு உள்ளத்துக்கு வரும்படியே திருத்திப் பணி கொள்ளலாகாதோ என்ன –

அவ்வளவில் ஸ்ரீ ஜீயரும் மிகவும் திரு உள்ளம் உகந்து அப்போதே ஸ்ரீ வரதராஜரை அங்கீ கரித்து அருளி
பஞ்சாஸ் த்ராங்கா – பஞ்ச ஸம்ஸ்கார யுக்தா பஞ்சார்த்த ஞான- பஞ்சம உபாய நிஷ்டா -தேவர்ணானாம் பஞ்சமாஸ் சாஸ்ரமாணாம்-
விஷ்ணோர் பக்தா -பஞ்ச கால பிரபன்னா -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன பிரபன்ன நிஷ்டை எல்லாம் பூர்ணமாம் படி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி –
பட்டோலையில் எழுதின ஒன்பதினாயிரத்தையும் முற்ற ஒரு உரு ஸ்ரீ வரதராஜருக்கு அருளிச் செய்து காட்டி அருளி இப்படியே தப்பாமல் எழுதித் தாரும் என்று
பட்டோலையை ஸ்ரீ வரதராஜர் திருக்கையில் கொடுத்து அருள -அவரும் அத்தை வாங்கிக் கொண்டு அடியேன் ஊரில் போய் எழுதிக் கொண்டு வருகிறேன்
என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ ஜீயரும் அப்படியே செய்யும் என்று விட அநந்தரம் ஸ்ரீ வரதராஜர் திருக் காவேரியிலே எழுந்து அருளின அளவிலே
சிற்றிடம் நீஞ்சிப் போக வேண்டுகையாலே பட்டோலையை திரு முடியில் கட்டிக் கொண்டு நீஞ்சிப் போகச் செய்தே ஒரு அலை வந்து அடித்து
கிரந்தம் ஆற்றுக்கு உள்ளே விழுந்து போக ஸ்ரீ வரதராஜரும் அக்கரையில் ஏறி பட்டோலை போய் விட்டதே -இனி நாம் என் செய்யக் கடவோம் என்று
விசாரித்து-ஒரு அலேகத்தை உண்டாக்கிக் கொண்டு
ஸ்ரீ நஞ்சீயர் பிரசாதித்து அருளின அர்த்தம் ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி அருளித் தாம் தமிழுக்கு மிகவும் உத்தம விரகர் ஆகையால்-
ஓர் ஒரு பாட்டுக்களிலே -யுக்தார்த்த விசதிகார யுக்தாதாந்தர போதனம் மதம் விவரணந்த்ர மஹிதாமாம் மநீஷினிம்-என்கிறபடியே
உசிதமான ஸ்தலங்களுக்கு பிரசன்ன கம்பீர பதங்களாலே அர்த்த விசேஷங்களையும் எழுதிக் கொண்டு போய் ஸ்ரீ ஜீயர் திருக்கையிலே கொடுக்க

ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ கோசத்தை அவிழ்த்துப் பார்த்த அளவிலே தாம் அருளிச் செய்த கட்டளையாய் இருக்கச் செய்தேயும்-சப்தங்களுக்கு மிகவும் அனுகுணமாகப்
பல இடங்களிலும் அநேக விசேஷ அர்த்தங்கள் எழுதி இருக்கையாலே அத்தைக்கு கண்டு மிகவும் திரு உள்ளம் உகந்து அருளி
ஸ்ரீ வரதராஜரைப் பார்த்து -இது மிகவும் நன்றாய் இரா நின்றது இது என் என்று கேட்க -அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாது இருக்க –
ஸ்ரீ ஜீயரும் நீர் பயப்பட வேண்டா உண்மையைச் சொல்லும் என்ன-
ஸ்ரீ வரதராஜரும் -ஸ்ரீ சீயா திருக் காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டு நீஞ்சப் புக்கவாறே
ஒரு அலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து அமிழ்ந்து போயிற்று -இது தேவரீர் ஒரு உரு முற்றப் பிரசாதித்து அருளின
கட்டளையிலே எழுதினேன் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நஞ்சீயரும் -இவருடைய புத்தி விசேஷம் இருந்தபடி என் தான் -இவர் மஹா சமர்த்தராய் இருந்தார் -நன்றாக எழுதினார் என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளி ஸ்ரீ வரதராஜரை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு –
இவர் நம்முடைய பிள்ளை -திருக் கலி கன்றி தாசர் -என்ற திரு நாமம் சாத்தி தம்முடைய சந்நிதியில் அரை க்ஷணமும் பிரியாமல்
வைத்துக் கொண்டு ஸ்ரீ பிள்ளைக்கு சகல அர்த்தங்களையும் கரதலா மலகமாம் படி பிரசாதித்து அருளினார் –
அவரும் ஸ்ரீ ஜீயரை அல்லது தேவி மற்று அறியேன் என்று எழுந்து அருளி இருந்தார் –
ஆகையால் ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ நம்பிள்ளை என்று அருளிச் செய்த அன்று தொடங்கி ஸ்ரீ வரதராஜருக்கு ஸ்ரீ நம்பிள்ளை என்ற திரு நாமம் உண்டாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரை -இதர உபாயங்களுக்கு பிரமாணமும் பஹுளமாய்-அனுஷ்டாதாக்களும் பலராய் இருக்க –
இதுக்கு பிரமாணமும் சுருங்கி -அனுஷ்டாதாக்களும் சுருங்கி -ருஷிச் சந்தோதி தைவதாதிகளும் அனுசந்தேங்கள் அன்றியே
இருப்பான் என் என்று கேட்க – ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்த படி -இருவர் கூடி ஓர் ஆற்றிலே இறங்கிப் போகா நின்றால்-
ஆற்றில் அமிழ்ந்தவனை அமிழாதவன் கையைப் பிடித்து கரை யேற்றுகைக்கு ஒரு பிராமண அபேக்ஷை வேணுமோ –
பிரமாண அபேக்ஷை உண்டு என்று நினைத்தீர் ஆகிலும் –
முமுஷுர் வை சரணம் அஹம் பிரபத்யே -என்றும்-தஸ்மான் ந்யாஸ மோஷான் தபஸாம் அதிரிக்த மாஹு-என்றும் –
ந்யாஸ இத்யாஹுர் மநீஷினோ ப்ரஹ்மாணம்-என்றும்
நிஷேபா பர பர்யாயோ ந்யாஸ பஞ்சாங்க சம்யுத சந்ந்யாஸஸ் தியாக இதயுக்தஸ் சரணா அதிரித்யபி -என்றும் ஏவமாதி பிரமாணங்கள்
பலவற்றையும் அருளிச் செய்து -பிரமாணங்களில் குறை இல்லை -நான் இவ்வர்த்தத்தில் பிரமாணம் தான் வேண்டாம் என்று இருப்பன் –
அதற்கு அடி -ஒரு குள்ளனும் நெடியனுமாக ஆற்றிலே இழிந்தால் -குள்ளன் அமிழா நின்றால் நெடியவன் கையைப் பிடிக்கும் போது
கரையிலே இருந்து ஒருவன் சொல்ல வேண்டுவது இல்லை இறே -இவனுடைய தர்மி க்ராஹ பிரமாணம் தானே அமையும் இறே –
அவன் கையை அவன் பிடிக்கைக்கு ஒரு விதி வேணுமோ என்று அருளிச் செய்து –

ப்ராஹ்மணோ யஜேத-என்று ஜாதி நிபந்தனமாக சாஸ்திரங்கள் சொன்னாலும் க்வசித் கோணே யஜிப்பார் அற்பமாய் இறே இருப்பது –
ஆகையால் அதிகாரி சுருங்கி இருக்கும் காணும்
இனி ஒரு அதிகாரி சுருக்கம் பார்க்கில் லோகத்தில் இருந்ததே குடியாக சர்வரும் சம்சாரிகளாய் இருக்க அதில் நாலு இரண்டு பேர்
உத்தம ஆஸ்ரமிகள் ஆனால் சம்சாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சன்யாசிகளுக்கு ஒரு அபகரக்ஷமும் உண்டோ -இனி
ஜ்யோதிஷ்டோமே நஸ்வர்காமோ யஜேத-என்று ஸ்வர்க்க அனுபவத்துக்கு சாதனத்தை சாஸ்திரம் விதியா நின்றால்
ஒரு ஊரில் ஒருவன் அன்றோ யஜித்தான் என்று கேட்கிறது-இதுக்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது –
ருஷ்யா தீம்ஸ் சகர ந்யாஸம் அங்கன்யா சஞ்ச வர்ஜயேத்-என்கையாலே -இதுக்கு ருஷ்யாதி அபேக்ஷை இல்லை –
இதில் அர்த்தத்துக்கு கூட்டு வேண்டில் இறே இதற்கும் கூட்டு வேண்டுவது –
இதுவே எனக்கு கருத்து என்று திரு உள்ளமாக ஸ்ரீ பிள்ளையும் க்ருதார்த்தராய் அருளினார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரைக் குறித்து ஒருவன் தனக்கு ஸ்ரீ வைஷ்ணவத்மம் உண்டு என்று அறியலாவது
எவ்வஸ்தை பிறந்தால் என்ன ஸ்ரீ ஜீயரும்
அர்ச்சாவதாரத்துக்கு பரத்வம் உண்டு என்று அறிந்த அளவிலும் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் பக்கல் புத்ர தாராதிகள் பக்கல் உள்ள
ஸ்னேகத்து அளவாகிலும் சிநேகம் பிறந்த அளவிலும்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கடுத்து வார்த்தை அருளிச் செய்தால் தன் நெஞ்சில் சிவிட்க்குத் தட்டாதே போக ரூபமாய் இருந்த அளவிலும்
ஸ்ரீ வைஷ்ணவத்வம் உண்டு என்று அறியலாம் –
ஆகையால் அர்ச்சாவதார பரத்வ புத்தியும்-பாகவத ப்ரேமமும் -தத் கடிந யுக்தி போக்யதா புத்தியும்
உண்டான போது ஸ்ரீ வைஷ்ணவத்வம் சித்தம் என்கிறது –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயர் திருப் பாதத்தில் ஸ்ரீ பாஷ்யம் வாசித்து அருளா நிற்கச் செய்தே -திருப் போனகம் சமைந்து என்றவாறே –
ஸ்ரீ சொக்கத் தேவரையும் திருவாராதனம் பண்ணும் என்று அருளிச் செய்ய -ஸ்ரீ நம்பிள்ளையும் அடியேன் திருவாராதன க்ரமத்தை
அறிந்தேனோ என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ ஜீயரும் நானோ சால க்ரமம் அறிந்து இருக்கிறேன்-
ஸ்ரீ த்வயத்தில் உத்தர வாக்கியத்தை அனுசந்தித்துத் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ண மாட்டீரோ -என்று அருளிச் செய்தார் –
உகந்து அருளின இடங்கள் பல இடமாய்த் திருப் போனகம் படைப்பது ஒன்றிலே யாகில் அமுது செய்து அருளப் பண்ணும் படி
எங்கனே என்று ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ ஜீயரைக் கேட்க
ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களில் இரண்டுக்கும் நடுவே -சர்வ மங்கள விக்ரஹாய -என்கிற விசேஷண ஸஹிதமாக
உச்சரித்து அமுது செய்யப் பண்ணுவது -என்று அருளிச் செய்தார்
இத்தால் உபய கண்ட மத்யே இத்தை உச்சரிக்க அருளிச் செய்தது -கைங்கர்ய வாசக சதுர்த்தியுடன் இச்சதுர்த்தி சேர்ந்து இருக்கைக்காகவும் –
உபய நாராயண பத சித்த விக்ரஹ சமர்ப்பக மாகைக்காகவும்-அநந்ய ப்ரயோஜனத்வ த்யோதன அர்த்தகமாகவும் இறே
இத்தால் நம் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ த்வயம் ஒழிந்த வேறே மந்த்ரம் கொண்டு திருவடி விளக்கார்கள் -என்று கருத்து –

ஸ்ரீ சீயரை ஸ்ரீ பிள்ளை -திரு அவதாரங்கள் ஏதுக்காக என்று கேட்க-ஸ்ரீ ஜீயரும் ஒரோ அவதாரங்களால் பண்ணின
ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பண்ணினவனை அந்தப் பலத்தை அனுபவிப்பைக்காக -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ பிள்ளையும் பாகவத அபசாரம் தான் எது -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ ஜீயரும் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டக்கால்
தங்களோபாதி ப்ரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை-எங்கனே என்னில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் -திருவுடை மன்னர்-செழு மா மணிகள் -நிலத்தேவர் -பெரு மக்கள்-தெள்ளியார் -பெரும் தவத்தார் –
உருவடியார் இளையார்கள் நல்லார் -வேதம் வல்லார் -செய்த வேள்வியர் -தக்கார் மிக்கார் -வேத விமலர் -சிறு மா மனுசர்-
எம்பிரான் தன் சின்னங்கள் -பேராளன் பேரோதும் பெரியோர் -என்று இப்படி பலபடியாக மிகவும் விரும்பி -நம் குலா நாதராய் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் பஹுமதி பண்ணித் திரு நாமங்கள் சாத்தி வாய் புலத்தி அருளிச் செய்கையாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோடு ஒத்த பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கை நேரே பாகவத அபசாரம் என்று அருளிச் செய்தார் –
ஆகையால் ஸ்ரீ ஆழ்வார்களும் உட்பட ஸ்ரீ கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே
என்று பஹு மதி பண்ணி விரும்பும் ஸ்ரீ வைஷ்ணவ விஷயத்தில் ஸ்வ சாம்ய புத்தியே அநர்த்த ஹேது இறே

ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பிள்ளையைக் குறித்து பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷய அனுபவத்தில் அந்வயம் இல்லை –
இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் பல இடங்களிலும் அருளிச் செய்தார்கள் இறே -எங்கனே என்னில் –
ஸ்ரீ வாஸூ தேவன் வலையுள் அகப்படுதல் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் உட்படுத்தல் –
மதுரக் கொழும் சாறு கொண்ட ஸூந்தரத் தோளிலே அகப்படுதல் –
சாந்தேந்து மென் முலையார் தடம் தோளிலே அகப்படுதல் -வானவர்க்கு வன் துணையான அரங்கத்து உறையும்
இன் துணைவனைத் துணை என்று இருத்தல் -ஆவியே அமுதே யென நினைந்து உருகி அவரவர் பணை முலை துணை என்று இருத்தல் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதத்தை பானம் பண்ணுதல் -பாவையர் அமுதத்தைப் பானம் பண்ணுதல் –
நான்கு வேதப்பயனைப் பேணுதல் -மாதரார் வன முலைப் பயனே பேணுதல்
ஒன்றில் இதுவாதல் -ஒன்றில் அதுவாதல் என்று ஏவமாதிகளாலே பஹு முகமாக அருளிச் செய்தார்கள் இறே
ஆகையால் அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் -என்றும்
முந்துற யுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடு -என்று ஸ்ரீ பரகாலனான ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பிரதமம் விஷய ருசியைக்
காறி உமிழ்ந்தே பகவத் ஸமாச்ரயணம் பண்ண வேணும் என்று நிஷ்கர்ஷித்து அருளிச் செய்து அருளுகையாலே –
ஷூத்ர விஷயத்தை ச வாசனமாகப் பரித்யஜித்தே ப்ராப்த விஷயத்தைப் பற்ற வேணும் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ பிள்ளையும் க்ருதார்த்தராய் ஸ்ரீ ஜீயரை அரை க்ஷணமும் பிரியா அடிமை செய்து கொண்டு வாழ்ந்து அருளும் காலத்திலே
ஸ்ரீ ஜீயர் நூறு உரு ஸ்ரீ திருவாய் மொழிக்கு அர்த்தம் நிர்வகித்து அருளுகையாலே
ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ ஜீயருக்கு சதாபிஷேகம் பண்ணி அருளினார் என்று பிரசித்தம் இறே

ஸ்ரீ நஞ்சீயர் பக்கலிலும் ஸ்ரீ நம்பிள்ளை பக்கலிலும் சார்வார்த்தங்களும் வந்து குடி புகுருகையாலே
ஸ்ரீ பிள்ளையும் தீபா துத்பன்ன ப்ரதீபம் போலே தர்சனம் நிர்வகிக்க கண்டு ஸ்ரீ ஜீயரும் க்ருதார்த்தராய் இருக்கும் காலத்தில்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பாதத்தில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை – ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் –
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -முதலான அநேக ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய் இருந்தார்கள் –

இவர்களில் ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் ஊணும் உறக்கமும் இன்றியே ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் வழுவிலா அடிமை செய்து
கொண்டு வாழ்ந்து அருளும் காலத்தில் ஒருகால் திருமேனி பாங்கு இன்றியே கண் வளர்ந்து அருளுகிற போது தமக்கு அந்தரங்கரான
ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைத்து -அடியேன் இப்போது திருவடி சாராமல் இங்கே இன்னம் சிறிது நாள் இருக்கும்படி
ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் சென்று ஏழை ஏதலனமும்-ஆழி எழ சங்கும் விண்ணப்பம் செய்து பிரபத்தி பண்ணி வேண்டிக் கொள்ளுங்கோள்-என்ன
அவர்களும் அப்படியே செய்து நிற்க ஸ்ரீ ஜீயருக்கு திருமேனி பண்டு போலே பாங்காயிற்று –
இத்தைக் கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ நம்பிள்ளை சந்நிதியில் சென்று தண்டன் சமர்ப்பித்து -ஞான வ்ருத்தருமாய் வ்யோ வ்ருத்தருமாய்
இருக்கும் ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் இப்படிச் செய்தார் -இது இவர் ஸ்வரூபத்துக்குச் சேருமோ -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பிள்ளையும் -அவருடைய அபிப்ராயம் அறிகிலோம் -சகல சாஸ்திரங்களும் போருவது ஸ்ரீ பிள்ளை எங்கள் ஆழ்வானுக்கு ஆய்த்து-
அவர் பக்கலிலே சென்று கேளுங்கோள் என்ன -ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ எங்கள் ஆழ்வானைக் கேட்க –
அவரும் ஸ்ரீ ரெங்க ஐஸ்வர்யத்திலே சங்கம் போலே காணும் என்ன –
ஸ்ரீ பிள்ளையும் இத்தைக் கேட்டு -அழகிது ஸ்ரீ திரு நாராயண புரத்து அரையரைச் சென்று கேளுங்கோள் என்ன –
அவர்களும் அவரைக் கிட்டிக் கேட்ட இடத்தில் -அவரும் இங்கு துவங்கின கைங்கர்யம் தலைக்கட்டாமையாலே காணும் என்ன –
ஸ்ரீ பிள்ளை இத்தையும் கேட்டு -ஸ்ரீ அம்மங்கி அம்மாளைக் கேளுங்கோள் என்ன –
அவரும் ஸ்ரீ பிள்ளை கோஷ்ட்டியில் இருந்து ஸ்ரீ பகவத் விஷயம் கேட்க்கிறவர்களுக்கும் ஒரு தேச விசேஷம் ருசிக்குமோ -என்ன –
ஸ்ரீ பிள்ளையும் கேட்டு நல்லது என்று விட்டு ஸ்ரீ அம்மங்கி பெரிய முதலியாரைக் கேளுங்கோள் என்ன-
அவரும் -ஸ்ரீ நம்பெருமாள் சிவந்த திரு முக மண்டலமும் கஸ்தூரித் திரு நாமமும் ஸ்ரீ பரமபதத்தில் கண்டிலேன் ஆகில் ஒரு மூலையடியே
முறித்துக் கொண்டு வருவேன் என்று அன்றோ ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தது –
அப்படியே இவரும் ஸ்ரீ நம்பெருமாள் சிவந்த திரு முக மண்டலத்தையும் திரு நுதலில் கஸ்தூரித் திரு நாமத்தையும்
விட்டுப் போக மாட்டாராக வேணும் என்றார் –

ஸ்ரீ பிள்ளை இவற்றை எல்ல்லாம் திரு உள்ளம் பற்றி அருளி ஸ்ரீ ஜீயர் திரு முக மண்டலத்தைப் பார்த்து சிரித்து –
இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ என்ன –இவை அத்தனையும் அன்று என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் உம்முடைய அபிப்ராயத்தை நாம் அறிந்தோம் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்ய –
ஸ்ரீ ஜீயர் -தேவரீர் சர்வஞ்ஞர் ஆகையால் அறிந்து அருளாதது இல்லை -அடியேனைக் கொண்டு வெளியிடத்
திரு உள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்
திருமஞ்சனச் சாலைக்கு எழுந்து அருளித் தேவரீர் திருமஞ்சன முறைகளில் திருமஞ்சனம் கொண்டு அருளித் தூய யுடையாடித்
திரு உத்தரீயம் சாத்தி அருளி உலாவி அருளும் போது குறு வேர்ப்போடு கூடின திரு முக மண்டலச் செவ்வியையும் அடியேன்
சுற்றிச் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்கு ஸ்ரீ பரமபதத்துக்குப் போக இச்சையாய் இருந்தது இல்லை –
பெரும் முக உல்லாசமும் இன்னம் சிறிது காலம் இங்கே இருந்து பெற வேணும் என்று நினைத்துச் செய்தேன்-என்று விண்ணப்பம் செய்தார் –
இத்தைக் கேட்டருளி ஸ்ரீ பிள்ளையும் முதலிகளும் -இவ்வுடம்போடே இவ்வைஸ்வர்யம் கூடுவதே-என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –

ஒருநாள் ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பகவத் விஷயம் அருளிச் செய்து கோஷ்டி கலைந்த அளவிலே ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் ஸ்ரீ பிள்ளை திருவடிகளில்
தண்டன் சமர்ப்பித்து இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச் செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பிள்ளையும் இச்சை ஸ்வரூபம் -இரக்கமே உபாயம் -இனிமை உபேயம் என்று அருளிச் செய்ய
அப்படி அன்று அடியேன் நினைத்து இருப்பது என்று விண்ணப்பம் செய்ய –ஸ்ரீ ஜீயரும் -ஆகில் உமக்கு என்று
சில பிள்ளைக் கிணறுகள் உண்டோ -நீர் எங்கனே நினைத்து இருப்பது -அத்தைச் சொல்லிக் கண்ணீர் -என்ன
தேவரீர் திருவடிகளே தஞ்சம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கையை அடியேனுக்கு ஸ்வரூபம் –
அவர்களுடைய அபிமானமே அடியேனுக்கு உபாயம் -அவர்களுடைய முக மலர்த்தியே அடியேனுக்கு உபேயம் என்று இருப்பன் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ஜீயரையும் ஸ்ரீ பிள்ளை போரப் பிரியப்பட்டு அருளினார் –

ஒரு கால் ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ பகவத் விஷயம் அருளிச் செய்து கோஷ்டி கலைந்து போகா நிற்கச் செய்தே-
ஸ்ரீ வைஷ்ணவானாய் இருப்பான் ஒரு ராஜா வருகிற பெரும் திரளைக் கண்டு ஸ்ரீ நம் பெருமாள் திருலோக்கம் கலைந்ததோ –
ஸ்ரீ நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ என்று கேட்டான் என்பார்கள்
இப்படி மஹா சம்ருத்தமான ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீயோடே ஸ்ரீ நம்பிள்ளை வாழ்ந்து அருளும் காலத்தில் ஸ்ரீ முதலியாண்டான் திருப்பேரனாய்
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருக்குமாரரான ஸ்ரீ கந்தாடை தோழப்பர் ஸ்ரீ நம்பிள்ளையுடைய பெரு மதிப்பையும் வைபவத்தையும் கண்டு
அஸூ யாளுவாய் பொறுக்க மாட்டாமல் இருக்குமவர் -ஒரு நாள் ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ பெருமாளை சேவித்துக் கொண்டு
இருக்கும் அளவிலே ஸ்ரீ பிள்ளையும் முதலிகளுமாய் பெரும் திரளாக ஸ்ரீ பெருமாளை சேவிக்க என்று ஸ்ரீ கோயிலுக்கு உள்ளே எழுந்து அருள
ஸ்ரீ தோழப்பர் ஸ்ரீ பிள்ளையுடைய பெருமையைக் கண்டு பொறுக்க மாட்டாமல் சீறிப் பகவத் சந்நிதியில் ஸ்ரீ நம்பிள்ளையைப் பஹு வாகப்
பருஷ யுக்திகளை சொல்லி அநேகமாக நிந்திக்க -ஸ்ரீ பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக் கொண்டு ஸ்ரீ பெருமாளை சேவித்துப் புறப்பட்டு
எழுந்து அருள-இச் செய்தியை ஞானாதிகையாய் இருக்கிற ஸ்ரீ தோழப்பர் திருத் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திரு மாளிகைக்குள் செய்கிற கைங்கர்யங்களையும் செய்யாமல் விட்டு வெறுத்து எழுந்து அருளி இருக்க

அவ்வளவில் ஸ்ரீ தோழப்பரும் ஸ்ரீ பெருமாளை சேவித்து மீண்டு தம் திரு மாளிகையில் எழுந்து அருள –
ஸ்ரீ தேவிகளும் முன்பு போலே எதிரே புறப்பட்டு வந்து ப்ரீதியுடன் தமக்கு ஒரு கைங்கர்யமும் பண்ணாமையாலே ஸ்ரீ தோழப்பர்
தம் திருத்த தேவியாரைப் பார்த்து -உன்னை நாம் அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்று அளவாக நம்மைக் கண்டால் ஆச்சார்ய பிரதிபத்தி
பண்ணிக் கொண்டு போந்தாய்-இன்று உதாசீனம் பண்ணி இருந்தாய் -இதற்கு அடி என் என்று கேட்டு அருள –
திருத் தேவியாரும் ஸ்ரீ தோழப்பரைப் பார்த்து -வாரீர் ஸ்ரீ ஆழ்வாருடைய திரு அவதாரம் என்னலாம் படி ஒரு அவதார விசேஷமாய்
ஸ்ரீ பெருமாளுக்குப் பிராண பூதருமாய் இருந்துள்ள ஸ்ரீ நம்பிள்ளையை ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் கூசாமல் அநேகமாக பருஷ யுக்திகளைப்
பண்ணித் தூஷித்து -இப்படி செய்தோமே -என்ற அனுதாபமும் அற்று உஜ்ஜீவிக்க இருக்கிற உம்மோடு எனக்கு என்ன சம்பந்தம் உண்டு –
நீர் என்னை வெறுத்தீர் ஆகில் என்னுடைய மாதா பிதாக்கள் என்னைப் பெற்று வளர்த்து உம்முடைய கையில் காட்டித் தந்த இந்த சரீரத்தை
உமக்கு வேண்டின படி செய்து கொள்ளும் -எங்கள் ஆச்சார்யர் என் ஆத்மாவை அடியிலே அங்கீ கரித்து அருளின அன்றே நான் உஜ்ஜீவித்தேன் –
ஆன பின்பு பத்ம கோடி சதேந அபி ந ஷமாமி கதாசன -என்று பாகவத நிந்தனை பண்ணினவர்களை ஒரு காலும் ஷமிப்பது இல்லை என்று
ஸ்ரீ பெருமாள் தாமே அருளிச் செய்த திருமுகப் பாசுரம் அறிந்தும் அறியாதவர் போலே இருக்கிற உம்மோடு எனக்கு ஸஹவாசமும் கூடாது –

ஆகையால் நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதது போலவும் -கடல் உடைந்தால் கட்ட ஒண்ணாதது போலேயும்-
மலை முறிந்தால் தங்க ஒண்ணாதது போலேயும் அனுதாபம் பிறவாத பாகவத அபசாரம் தீர்த்துக் கொள்ளக் கூடாதது இ றே –
ஆன பின்பு நான் என் இஷ்டத்திலே இருந்து யீடு ஏறிப் போகிறேன் என்ன ஸ்ரீ தோழப்பரும் தேவிகள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுச்
சற்றுப் போது திகைத்து எழுந்து அருளி இருந்து -பெரிய வித்வான் ஆகையாலும் திரு வம்ச பிரபாவத்தாலும் அஸூயையால் வந்த
திரு உள்ளத்தின் கலக்கம் தீர்ந்து தெளிந்து வந்து திருத் தேவிகளைப் பார்த்து-நீ சொன்னது எல்லாம் ஒக்கும் -நாம் தப்பச் செய்தோம் –
இனி மேல் செய்ய அடுக்குமது எது-என்ன திருத் தேவிகளும்-ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே-கெடுத்த இடத்தே தேடிக் கொள்ளீர் -என்ன –
ஸ்ரீ தோழப்பரும் ஆவது என் -என்ன -திருத் தேவிகளும் பரம தயாளுவான ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் சென்று சேவித்து
அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு அவர் கிருபை பண்ணி அருள யீடு ஏறீர் என்ன –
ஸ்ரீ தோழப்பரும் அவரை ஸ்ரீ பெருமாளுடைய பெரும் திரு ஓலக்கத்திலே பரிபவித்து -இப்போது அவர் சந்நிதியில் போய் நிற்க என்றால்
எனக்கு லஜ்ஜா பயங்கள் அனுவர்த்தியா நின்றது -நீ கூட வந்து ஷமிப்பிக்க வேணும் -என்ன திருத் தேவிகளும் ஸ்ரீ தோழப்பர் சொல்லும்
வார்த்தையைக் கேட்டு -அப்படியே செய்கிறேன் என்று கடுக எழுந்து அருளி இருந்து அவரையும் கூட்டிக் கொண்டு
ஸ்ரீ நம்பிள்ளை திரு மாளிகைக்கு எழுந்து அருளுவதாக புறப்பட்ட அளவிலே

ஸ்ரீ நம்பிள்ளை செய்தபடி -ஸ்ரீ கோயிலிலும் இருந்து எழுந்து அருளின பின்பு முதலிகள் எல்லாரையும் அனுப்பி அருளி
பகல் எல்லாம் அமுது செய்து அருளாமல் தம் திரு மாளிகைக்கு உள்ளே எழுந்து அருளி இருந்து சாயங்காலமான வாறே
ஆவஸயக கர்மத்தைச் செய்து அருளி ஒற்றைத் திருப்பரி யட்டத்துடனே முட்டாக்கு இட்டுக் கொண்டு தாம் ஒருவருமே எழுந்து அருளி
ஸ்ரீ கந்தாடைத் தோழப்பர் திரு மாளிகை வாசலிலே கைப்புடையிலே வந்து கண் வளர்ந்து அருள –
ஸ்ரீ தோழப்பரும் திருத் தேவிகளுமாக திரு விளக்கை ஏற்றிக் கொண்டு ஸ்ரீ பிள்ளை திருமாளிகைக்கு எழுந்து அருளுவதாகத்
திரு மாளிகை வாசலிலே புறப்பட்ட அளவிலே -திரு விளக்கு ஒளியாலே கைப்புடையிலே ஒரு வெள்ளை கிடக்கிறதைக் கண்டு-
ஸ்ரீ தோழப்பர் இங்கே யார் கிடக்கிறார் -என்று கேட்க -ஸ்ரீ பிள்ளையும் -அடியேன் திருக் கலிகன்றி தாசர் -என்ன

அவ்வளவில் ஸ்ரீ தோழப்பர் -இது என் என்று திகைத்து -ஸ்ரீ பிள்ளையைப் பார்த்து -நாம் மஹா தேஜஸ்வீ -நம்மை ஸ்ரீ நம்பெருமாள்
திரு ஓலக்கத்திலே பரிபவிக்கலாவது என் -என்கிற கோப அதிசயத்தாலே நம்முடைய திரு வாசலிலே வந்து
மௌர்க்யம் செய்வதாகக் கிடக்கிறீரோ என்ன -ஸ்ரீ நம்பிள்ளையும் ஸ்ரீ தோழப்பரைக் குறித்து -அடியேன் அப்படிச் செய்ய வரவில்லை -என்ன –
ஆகில் இங்கு வந்து கிடப்பான் என்று என்று ஸ்ரீதோழப்பர் கேட்க -ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தபடி –
ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ முதலியாண்டான் திருப்பேரனான தேவரீர் திரு உள்ளம் கலங்கும்படி வர்த்தித்த மஹா பாபியான
அடியேனுக்குத் தேவரீர் திரு மாளிகை வாசல் அல்லது புகுவாசம் மாண்டு வந்து கிடக்கிறேன் -என்ன

இவரை அநு வர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற ஸ்ரீ தோழப்பர் ஸ்ரீ பிள்ளை கண் வளர்ந்து அருளுகிற தைன்யத்தைக் கண்டு
அவருடைய நைச்ய வார்த்தைகளையும் கேட்டு -இது ஒரு அதிகாரம் இருந்தபடி என் -என்று போர வித்தராய் ஸ்ரீ பிள்ளையை வாரி எடுத்து
அணைத்துக் கொண்டு-இத்தனை நாளும் சிறிது பேருக்கு ஆச்சார்யர் என்று இருந்தேன் -இப்போது லோகத்துக்கு எல்லாம்
நீரே ஆச்சார்யர் ஆகைக்கு ப்ராப்தர் என்று அறிந்தேன் என்று ஸ்ரீ தோழப்பர் உகந்து -ஸ்ரீ லோகாச்சார்யார் -என்று ஸ்ரீ பிள்ளைக்குத்
திரு நாமம் சாத்தி அருளித் தம்முடைய திரு மாளிகையில் கொண்டு புக்குத் தாமும் திருத் தேவிகளுமாய் ஸ்ரீ பிள்ளையை
அநேகமாக அனுவர்த்தித்து அவர் திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்து தமக்கு வேண்டும் அர்த்த விசேஷங்களை
எல்லாம் கேட்டுக் கொண்டு ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் ப்ரவணராய் க்ருதார்த்தராய் அருளினார் –

இப்படி ஸ்ரீ நம்பிள்ளை மஹா வைபவம் உடையவராய் வாழ்ந்து அருளுமது கண்டு ஸ்ரீ நஞ்சீயர் செய்தது வாய்த்து
ஸ்ரீ மானாய் நூறு திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்து அந்திம தசையில் திருமேனி நோவு சாத்திக் கண் வளர்ந்து அருள
ஸ்ரீ ஜீயர் சிஷ்யரான ஸ்ரீ குட்டிச் குறி இளை யாழ்வார் ஸ்ரீ ஜீயரைப் பார்த்து ஸ்ரீ த்வயத்தை அனுசந்திக்கலாகாதோ என்ன
ஸ்ரீ நஞ்சீயரான பெரிய ஜீயர் அவரைக் குறித்து -அது என் -உனக்கு வேண்டாதே எனக்கு இப்போதாக வேண்டுகிறது என் –
நடையாடித் திரிவாருக்கு வேண்டாதே கிடைக்கப்பட்டார்க்கு வேண்டியோ ஸ்ரீ த்வயம் இருப்பது -என்ன
அவரும் நிருத்தராய் லஜ்ஜிதரானார் இறே-
இத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ த்வயம் சதா அனுசந்தேயாம் என்றபடி –

இத்தைக் கேட்டுத் தெற்கு ஆழ்வார் பட்டர் ஸ்ரீ ஜீயர் திருப்பாதத்தில் சென்று சேவித்து -உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டு அருள –
ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ பெரிய பெருமாள் சர்வ ஸ்வ தானம் பண்ண அனுபவிக்க வேண்டி இரா நின்றது -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ தெற்கு ஆழ்வார் பட்டரும் இத்தை ஸ்ரீ திருமாலை தந்த பெருமாளுக்கு அறிவிக்க -அவரும் இத்தை ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் புறப்பட்டு அருளி திரு மடத்து வாசலிலே சென்று சேலையைக் களைந்து ஸ்ரீ ஜீயரை அனுபவிப்பித்து அருள –
ஸ்ரீ ஜீயரும் அனுபவித்து ஹ்ருஷ்டராய் ஸ்ரீ பிள்ளை முதலான முதலிகளைக் குறித்து -ஸ்ரீ பெருமாள் எனக்கு சர்வ ஸ்வ தானம்பண்ணி அருளினார் –
நாம் உங்களுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணுவதாக ஒருப்பட்டோம்-அபேக்ஷை உடையார் உடையபடியே அபேக்ஷித்துக் கொள்ளுங்கோள் -என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ பிள்ளையும் அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதோர் வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஜீயரும் -மணக் கோலத்தில் முள்ளைத் தெளிப்பாரைப் போலே இப்போது தஞ்சமாய் கேட்பது ஒரு வார்த்தை உண்டோ -என்று
ஸ்ரீ பிள்ளைக்கு அருளிச் செய்த வார்த்தை –
ஆத்ம வினியோகம் ஈஸ்வரன் என்று இராதே ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இரும் -என்று அருளிச் செய்ய –
அதில் ஸ்ரீ பிள்ளை திரு உள்ளம் பிரசன்னம் ஆகாமையாலே பேசாதே நிற்க -ஸ்ரீ ஜீயரும் -உம்முடைய நினைவு எது சொல்லிக் கண்ணீர் என்ன –
ஸ்ரீ பிள்ளையும் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பரமபதத்துக்கு எழுந்து அருளினால் இங்கு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்ன நினைத்து இருக்கக் கடவர் என்ன –
ஸ்ரீ ஜீயரும் -அது அதிகார அனுகுணமாக வன்றோ இருப்பது -திருப்தனாகில் ஆர்த்தன் ஆகிறான் –
ஆர்த்தனாகில் திருப்தனாகிறான் -என்று அருளிச் செய்து அருளி

பின்னையும் ஸ்ரீ பிள்ளையைக் குறித்து -ஞான காரியத்தில் உமக்கு கர்தவ்யம் இல்லை -ஸ்ரீ பெருமாளுக்கு உகப்பாக முதலிகளையும்
கூட்டிக் கொண்டு தர்சன அர்த்தம் நிர்வஹித்துப் போரீர்-என்று அருளிச் செய்து அருளி
வாரீர் பிள்ளாய் -ஸ்ரீ பட்டர் அடியேனுக்கு ஹித உபதேசம் செய்து -வேதாந்தி என்கிற பேரை யுடையோம் -நம் பக்கல் ஆஸ்ரயித்தோம் –
பஹு த்ரவ்யத்தை ஆச்சார்ய தக்ஷிணையாகக் கொடுத்தோம் -என்று இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார் –
நீரும் அப்படியே லோகாச்சார்யர் என்கிற பேரை யுடையோம் -அருளிச் செயல் நாலாயிரத்துக்கும் பொருள் சொல்ல வல்லோம் –
ஸ்ரீ பாஷ்யத்துக்கும் பிரவர்த்தகர் -என்று மேன்மையை நினைந்து இராதே -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும்
என்று அருளிச் செய்து -ஸ்ரீ பிள்ளை முதலான முதலிகளை ஷமை கொண்டு தீர்த்தம் கொண்டு அமுது செய்து அருளப் பண்ணி
ஸ்ரீ கோயிலுக்கு நேரே ஸ்ரீ பகவத் சேனாபதி ஜீயர் திரு மடியிலே திரு முடியையும் ஸ்ரீ பின்பு அழகிய ஜீயர் திரு மடியிலே
திருவடிகளுமாகக் கண் வளர்ந்து அருளி ஸ்ரீ பட்டர் திருவடிகளைத் தியானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

ஸ்ரீ பிள்ளையும் ஆச்சார்ய விஸ்லேஷத்தை ஸஹிக்க மாட்டாதே -மல்கு நீர் கண்ணோடு மையல் உற்றுக் கிலேசித்து அருள –
முதலிகளும் -தேவரீர் இங்கனே சோகிக்கக் கூடுமோ -என்ன ஸ்ரீ பிள்ளையும் தம்மிலே தேறி நின்று-ஸ்ரீ பெருமாள் சாத்தி வீட்டுக்
களைந்து அருளின திருமாலையையும் திருப் பரியட்டங்களையும் கொண்டு ஸ்ரீ கோயில் அணைத்துக் கொத்தும் வந்து சேவிக்க –
யதி ஸம்ஸ்கார விதியால் ப்ரஹ்ம மெத்த விதி யடங்கச் செய்து ஸ்ரீ ஜீயரை அதி சம்பிரமத்துடனே சமஸ்கரித்து –
பள்ளிப்படுத்தி அருளி பின்பு உண்டான க்ருத்யங்களை எல்லாம் செய்து ஸ்ரீ ஜீயருக்கு சீர்மையுடனே திரு அத்யயனமும் நடத்தி அருளினார்கள் –

அந்திம தசையில் ஸ்ரீ ஈஸ்வரன் தானே விஷ யீ கரித்து எழுந்து அருளி சர்வ ஸ்வ தானம் பண்ணப் பெற்ற தன்னேற்றமும்
நூறுரு ஸ்ரீ திருவாய் மொழிக்கு அர்த்தம் அருளிச் செய்து நிர்வஹித்து அருளி சதாபிஷேகம் பண்ணப் பெற்ற தன்னேற்றமும்
ஆச்சார்ய அனுவர்த்தன பிரதிபந்தகங்களான களத்ர புத்ர க்ஷேத்ர மித்ர தன தேச வாசங்களை நேராக நிவர்த்தித்து
ஆச்சார்யன் எழுந்து அருளின தேசமே பரம ப்ராப்யம் என்று எழுந்து அருளி வந்து தம் சர்வஸ்வத்தையும் அத்தலைக்கே சேஷமாக்கி –
தத் கைங்கர்யமே யாத்ரையாய் அதுவே சத்தா தாரகமாகப் பெற்ற தன்னேற்றமும் இவர் ஒருவருக்கும் உள்ளது ஓன்று இறே

ஸ்ரீ நஞ்சீயர் திரு நக்ஷத்ரம் –திரு பங்குனி -திரு உத்தரம் –

அவர் தனியன்
நமோ வேதாந்த வேத்யாய ஜெகன் மங்கள ஹேதவே -யஸ்வ வாக் அம்ருதாசார பூரிதம் புவனத்ரயம்

யத்வ சஸ் சகலம் சாஸ்திரம் யத் க்ரியா வைதிகோ விதி -யத் கடாஷோ ஜகத் ரஷா தம் வந்தே மாதவம் முனிம்

இதில் ஸ்ரீ பெருமாள் இரங்கின சர்வ ஸ்வ தானம் -மறைவு அறத் திருமேனி காட்டுகை
ஸ்ரீ நஞ்சீயர் பண்ணின சர்வ ஸ்வ தானம் மறைவு அறச் சரமார்த்த விசேஷங்களை வெளியிடுகை
ஆத்ம விநியோகம் ஈஸ்வரன் அன்று என்று இராமைக்கு அடி பலித்வ அபிமானத்வம் இல்லாமை
ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இருக்கைக்கு அடி -பலியுமாய் அபிமானியுமான சேஷிக்கு இஷ்ட விநியோக அர்ஹனாகை-
ஆர்த்தனாகில் திருப்பதனாகையாவது -ததீய விஸ்லேஷத்தில் சரீர விஸ்லேஷம் பிறக்கும்படியான பரம ஆர்த்தி விளையில்
இப்போதே ஸம்ஸ்லேஷிக்க அன்றோ போகிறோம் என்று திருப்தி பிறக்கை–
திருப்தனாகில் ஆர்த்தன் ஆகையாவது -ததீயரை விஸ்லேஷித்தும் சரீர விஸ்லேஷம் பிறக்கும்படி அதிசயித்த ஆர்த்தி இன்றியே
ஸ்வ சரீர விஸ்லேஷத்து அளவும் பொறுக்கும்படியான ஆர்த்தி அனுவர்த்திக்க திருப்தி உண்டாய்
இப்போதே உசாத் துணை இழந்தோம்-என்னும் அளவே யாகை என்றபடி –

ஸ்ரீ பிள்ளையும் இவ்வர்த்தத்தைக் கேட்டு அனுஷ்டான பர்யந்தமாகக் கண்டு அருளினார் -எங்கனே என்னில்
ஸ்ரீ அம்மங்கி அம்மாள் ஸ்ரீ பரமபதத்துக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ பிள்ளை அவர் திருமாளிகை ஏற எழுந்து அருள
ஸ்ரீ அம்மாள் திருத் தேவிகள் பிரசன்னையாய் இருக்கக் கண்டு -ஸ்ரீ பாதத்து முதலிகள் -இதற்கு அடி என் என்று ஸ்ரீ பிள்ளையைக் கேட்க –
ஸ்ரீ பிள்ளையும் திருத் தேவிகள் விஷயத்தில் இதற்கு முன்பு ஸ்ரீ அம்மாள் பண்ணின விரோதம் உண்டாகில் இ றே
அவர் பேற்றுக்கு இவர் வெறுப்பது-என்று அருளினார் –
தம்முடைய ஸ்ரீ பாதத்து முதலிகளில் ஒருவர் ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருள தத் பார்யா புத்ராதிகள் வந்து தம் ஸ்ரீ பாதத்தில் வந்து
விழுந்து அழ -இதுக்கு அடி என் என்று முதலிகள் கேட்க –
ஸ்ரீ பிள்ளையும் பெறுகிற தேசம் கொந்தளிக்கிற படி கண்டால் இழக்கும் தேசம் எப்பாடு படக் கடவதோ -என்று அருளினார் –
ஆகையால் சத் வஸ்துவை இழந்த தேசம் கை எடுத்துக் கூப்பிடச் சொல்ல வேண்டா இறே என்று கருத்து –

ஸ்ரீ நம்பிள்ளையும் ஸ்ரீ பாதத்து முதலிகளும் ஸ்ரீ திரு வெள்ளறை நாச்சியாரை சேவித்து மீண்டு ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே –
திருக் காவேரி இரு கரையும் ஒத்து அதி கம்பீரமாய் நாநா வர்த்தக ஷாகுலமாய்த் தடவரை அதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக்
கரை மரஞ்சாடிக் கடலினை கலங்கக் கடுத்திழி கங்கை போலே புங்காநுபுங்கமாக ப்ரவஹியா நிற்க ஓடம் கிடையாத படியால்
ஒரு தாழியிலே எழுந்து அருள-நட்டாற்றில் சென்றவாறே -போதும் அஸ்தமித்து மழையும் இருட்டுமாய் அக்கரை இக்கரை முன்னாடி தெரியுமே
திக் விப்ரமம் பிறந்து தாழி அமிழத் தேட -இந்த அவஸ்தையில் நாலு இரண்டு பேர் தாழியை விட்டால் கரையிலே ஏறலாம் –
ஒருவரும் விடாதே இருக்கில் ஸ்ரீ நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து தட்டுப் பட்டுப் போகிறது -என்று தாழிக்காரன் கூப்பிட-
அவ்வளவிலும் நட்டாற்றாகையாலும் பய அதிசயத்தாலும் ஒருவரும் அதற்கு இசைந்து விட்டார்கள் இல்லை –
அவ்வளவில் ஒரு சாத்விகையான அம்மையார் தாழி விடுகிறவனைப் பார்த்து நீ நூறு பிராயம் புகுவாய் –
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான ஸ்ரீ நம்பிள்ளையைப் பேணிக் கொண்டு கரையிலே விடு -என்று அவனை ஆசீர்வதித்து
அந்தகாரத்தையும் பாராமல் ஆற்றிலே விழுந்தாள்-அவ்வளவு கொண்டு தாழி கரையிலே போக ஸ்ரீ பிள்ளையும் அக்கரை ஏறி

ஓர் ஆத்மா தட்டுப் பட்டுப் போச்சுதே -என்று பல காலும் அருளிச் செய்து வியாகுல சித்தராய் இருக்கும் அளவில் அப்போது அம்மையார்
நாலடி விட்டுப் போன அளவிலே ஒரு திடர் சந்திக்க அதிலே தரித்து நின்று -இராக் குரலாகையாலும் கரை ஆசன்னமாகையாலும்
ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ நம்பிள்ளை வ்யாகுலப்பட்டு அருளிச் செய்கிற வார்த்தையைக் கேட்டு -ஸ்வாமீ தேவரீர் வ்யாகுலப்பட்டு அருள வேண்டா –
அடியேன் இங்கே இருக்கிறேன் என்று குரல் காட்ட ஸ்ரீ பிள்ளையும் திடர்கள் மரங்கள் சந்தித்தாகக் கூடும் என்று திரு உள்ளம் பற்றித்
தாழிக்காரனை இட்டு அவளையும் அக்கரையில் அழைப்பித்துக் கொள்ள -அவளும் வந்து ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் சேவித்து
ஆச்சார்யனை அல்லது ரக்ஷகாந்தரம் அறியாதவள் ஆகையால் -அடியாள் ஆற்றிலே ஒழுகிப் போகிற போதும் தேவரீர் அங்கே
ஒரு கோரை மேடாய் வந்து ரஷித்து அருளிற்று என்று கேட்க ஸ்ரீ பிள்ளையும் உம்முடைய விஸ்வாசம் இதுவானபின்பு
அதுவும் அப்படியே ஆகாதோ என்று அருளினார் —
இத்தால் ஸ்வ சரீர அர்த்த பிராணங்களை அழிய மாறி ஆகிலும் ஆச்சார்யனைப் பேண வேணும் என்னும் நிஷ்டை உண்டாகவே
ஈஸ்வரன் அவனைப் பேணி ரஷிக்கும் என்னும் அதுவும் சொல்ல வேண்டா இறே

அநந்தரம் ஸ்ரீ பிள்ளையும் முதலிகளுமாக ஸ்ரீ கோயிலிலே எழுந்து அருளி இருந்து தர்சனம் நிர்வஹித்துக் கொண்டு வாழ்ந்து அருளுகிற காலத்தில்
ஸ்ரீ நம்பிள்ளை திருப் பாதத்தில் ஆஸ்ரயித் திருப்பாள் ஒரு அம்மையாருக்குத் திரு மாளிகை அருகே ஒரு கோல் துறை நிவேசம் உண்டாய்
அங்கே குடியாய் இருக்கும் -அவளுக்கு ச ப்ரஹ்மச்சாரியார் இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -ஸ்ரீ பிள்ளை திரு மாளிகை நெருக்கமாய் இருக்கிறது –
இந்த கோல் துறையை ஆச்சார்யருக்கு சமர்ப்பியும் என்று அம்மையாருக்கு பலகாலும் அருளிச் செய்ய –
அவளும் ஸ்ரீ கோயிலிலே ஒரு கோல் துறை ஆருக்குக் கிடைக்கும் -நான் திருவடி சாரும் தனையும் கொடேன் -என்ன
ஸ்ரீ வைஷ்ணவரும் இந்த விசேஷத்தை ஸ்ரீ பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பிள்ளையும் அம்மையாரை அழைத்து அருளி –
உனக்கு ஒரு சரீரத்துக்கு சற்று இடம் வேண்டுவது
முதலிகள் எழுந்து அருளி இருக்க நெருக்கமாய் இருக்கிறது -உன் ஒரு கோல் துறையை நமக்குத் தர வேணும் என்ன –
அம்மையாரும் அப்படியே செய்கிறேன் -தேவரீர் ஸ்ரீ பரமபதத்தில் அடியேனுக்கு ஒரு கோல் துறையை தந்து அருள வேணும் -என்ன –
அதற்கு ஸ்ரீ வைகுண்ட நாதன் அன்றோ கடவன் -அவனுக்கு விண்ணப்பம் செய்து கொண்டு தருகிறோம் என்று அருளிச் செய்ய –
அவளும் அடியேன் சாது -அதிலே பெண்டாட்டி -தருகிறோம் என்ற வார்த்தையால் போராது-எழுதி எழுதிட்டுத் தர வேணும் -என்ன –
ஸ்ரீ பிள்ளையும் இப்படியும் கேட்பதே என்று திரு உள்ளம் உகந்து -இன்ன வருஷம் இன்ன மாசம் இத்தனாம் தேதி இந்த அம்மையாருக்கு
திருக் கலிகன்றி தாசர் ஸ்ரீ பரமபதத்தில் ஒரு கோல் துறையை எழுதிக் கொடுக்கிறேன் -அகில லோக ஸ்வாமியும் அஸ்மத் ஸ்வாமியுமான
ஸ்ரீ வைகுண்ட நாதன் கிரயம் செலுத்தி கொடுத்து அருள வேணும் -என்று சாசனம் எழுதித் தம்முடைய திரு எழுத்திச் சாத்திக் கொடுத்து அருளினார் –
அம்மையாரும் திரு முகத்தை சிரஸா வஹித்து ப்ரீதியுடன் வாங்கிக் கொண்டு தீர்த்த பிரசாதங்கையும் ஸ்வீ கரித்து அன்றும் மற்றைய நாளும்
ஸ்ரீ பிள்ளையை சேவித்துக் கொண்டு இருந்து மூன்றாம் நாள் ஸ்ரீ பரமபதத்தில் சென்றாள்-
இத்தால் ஆச்சார்யன் இரங்கி ப்ரசாதித்த ஒன்றையே தஞ்சம் என்று இருக்க வேணும் –
உபய விபூதியும் ஆச்சார்யன் இட்ட வழக்காய் இருக்கும் என்று தோன்றா நின்றது இறே

ஸ்ரீ மஹா பாஷ்ய பட்டர் ஸ்ரீ பிள்ளையை -சைதன்ய வஸ்துவாய் இருக்கிற ஆத்மாவுக்கு சரீர விஸ்லேஷம் பிறந்தால்
ஸ்ரீ பரமபதம் சித்தம் என்று அறுதி இட்டு இருக்கலாவது எவ்வர்த்தத்தாலே என்று கேட்க
ஸ்ரீ யப்பதியையே உபாயம் உபேயம் என்று அறுதியிட்டு இருப்பது -நெடும் காலம் இழந்து கிடந்த வஸ்துவைக் காட்டித் தந்த
ஆச்சார்யன் பக்கல் கனக்க விஸ்வாசம் உண்டாய் இருப்பது – அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யத்தின் படியே ஸ்ரீ எம்பருமானார் தர்சனமே சித்தாந்தம்
என்று இருப்பது -ஸ்ரீ ராமாயணத்தாலே திருக் குண அனுசந்தானம் பண்ணுவது – ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் பொழுது போக்குவது –
சரீர விஸ்லேஷம் பிறந்தால் சந்தேகிக்க வேண்டா -மீட்சி இன்றி வைகுண்ட மா நகரம் மற்றது கையதுவே -என்று அருளிச் செய்து அருளினார்
ஆகையால் உபாய உபேய நிர்ணயமும் -ஆச்சார்ய விஸ்வாசமும்–தர்சன விஸ்வாசமும் -ஸ்ரீ பகவத் குண அனுபவ பாரவஸ்யமும்
உண்டாகவே ப்ராப்ய சித்தி உண்டாம் என்று உத்தரம் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பாதத்தில் பாண்டிய நாட்டின் நின்றும் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்து கண்டு -எங்களுக்குத் தஞ்சமாய் இருபத்தொரு
வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பிள்ளையும் -கடற்கரை வெளியை நினைத்து இருங்கோள்-என்று அருளினார் –
அவர்களும் மணல் குன்றையும் நாவல் காட்டையும் நினைத்து இருக்கவோ -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பிள்ளையும் புன்முறுவல் செய்து அருளிச் செய்த படி -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் கடற்கரையிலே விட்டு இருக்கச் செய்தே
ஸ்ரீ வானர வீரர்கள் ஸ்ரீ ராகவார்த்தே பராக்ராந்தரராய் த் தங்களை உபேக்ஷித்து ஸ்ரீ பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க
இவர்கள் கண் உறங்கும் தனையும் தான் உறங்கி இவர்கள் கண் உறங்கினவாறே அம்பறாத் துணியை முதுகிலே கட்டித் திருக்கையிலே
பிடித்த சார்ங்கமும் திருச்சரமுமாய் இரா முற்றும் நோக்கின ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுடைய
திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் -என்று அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்கிறது –

ஸ்ரீ பிள்ளையை ஒருவன் -ஸ்ரீ எம்பெருமானை ஒழிந்த தேவதாந்தரங்களை பஜிக்கலாகாது என்கிற நீங்கள்
நித்ய நைமித்தி காதிகளிலே அக்னி இந்திராதி தேவதைகளை பஜிப்பான் என் -ஆலயங்களைப் பஜியாது ஒழிவான் என் -என்ன
ஸ்ரீ பிள்ளையும் -வாராய் -அக்னி ஹோத்ர அக்னியை உபாசித்தும் ஸ்மசந அக்னியை நிவர்த்தித்தும் போகிறாப் போலே –
இரண்டுக்கும் வாசி -எங்கனே என்னில் –
நித்யாதிகளில் ஸ்ரீ பகவத் பிரகார புத்யா பண்ணுகிற உபாசனம் ஸ்ரீ பகவத் உபாசனமேயாக விசேஷ சாஸ்திரம் விதிக்கையாலும் –
ஆலய பிரதிஷ்டைகளிலே பராவர தத்வ வ்யத்வம் பண்ணி இருக்கும் தாமச புருஷர்களாலே விருத்த ஆகம மந்த்ர தந்த்ரப் ப்ரக்ரியையாலே –
ஸ்வ தந்த்ரப் புத்தியா தேவதாந்த்ரங்கள் க்ருத பிரதிஷ்ட ஆகரங்கள் ஆகையாலும்-
இவ்விடத்தில் ஸ்ரீ பகவத் பிரகார புத்யா உபாஸிக்க விதி இல்லாமையாலும் –
அதுவும் அன்றியே -தேவதாந்த்ர வர்க்கம் தன்னில் தூரதோ வர்ஜ நீயத்வம் ருத்ரனுக்கு மிகவும் உண்டு இறே -எங்கனே என்னில்
சத்வ குணாத்யந்த விரோதியான தமோ குண பிரசுரனாகையாலே நித்யாதிகளைப் போலே ஆலயங்களிலும் ஸ்ரீ பகவத் பிரகார புத்யா
உபாசிக்கலாகாது -த்யாஜ்யதயா ஞாதவ்யங்களான ஸ்ரீ பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் ஸ்வீ காரத்துக்கு உடலாகவும் –
உபாதேய தயா ஞாதவ்யமான ஸ்ரீ பகவத் விஷயம் தியாகத்துக்கு உடலாகவும் கடவதோ -என்று அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் வேதாந்த விஹித ஸ்ரீ பகவத் பிரகார பூத ஆலயஸ்த அந்ய தேவதா பஜனமும் அநர்த்த கரம் என்கிறது –

ஸ்ரீ நம்பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்து சேவித்து -திருமேனி அற இளைத்து இருந்தது -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பிள்ளையும் ஓன்று தேய்தல் ஓன்று வளருதல் அன்றோ -என்று அருளினார் -இத்தால் ஞான பக்தி வைராக்யங்கள் வளர
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி சரீரம் தேயும் என்றபடி –

ஸ்ரீ பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்து கண்டு -ஆரோக்யம் ஒன்றும் இல்லையோ -என்று கேட்க –
ஸ்ரீ பிள்ளையும் -யுத்தம் பண்ணப் போகிறோமோ -ஸ்ரீ பெருமாளை சேவித்து இருக்கைக்கு வேண்டும் ஆரோக்யம் உண்டு –
ஒரு குறையும் இல்லை -என்று அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆரோக்ய அபேக்ஷை வேண்டா என்கிறது –

ஸ்ரீ நம்பிள்ளை திருமேனி நோவு சாத்தி இருந்தமை கேட்டு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சென்று ஸ்ரீ பாதத்தில் சேவித்து நோயைக் கண்டு வெறுக்க –
ஸ்ரீ பிள்ளையும் அவரைக் குறித்து இஸ் சரீரத்தில் வந்த வியாதியை நல் விருந்து வந்ததாகக் காணும்
நான் நினைத்து இருப்பது என்று அருளிச் செய்து அருளினார்
இத்தால் -க்ருதக்ருத்யா பிரதீஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதம் -என்கிற இதுவே திரு உள்ளக் கருத்து –

ஸ்ரீ நம்பிள்ளை திருமேனியில் நோவு சாத்தி எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ பிள்ளை எங்கள் ஆழ்வாரும் ஸ்ரீ அம்மங்கி அம்மாளும்
அறிவதாக எழுந்து அருளி -ஸ்ரீ எங்கள் ஆழ்வான் நியமனத்தாலே ஸ்ரீ அம்மங்கி அம்மாள் ஸ்ரீ பிள்ளை பக்கல் பரிவாலே
ஒரு யந்திரத்தைத் திருக் கையிலே இட்டுத் தொடப் புக -ஸ்ரீ பிள்ளை திரு மேனியை இறாய்த்து அருள-அவர்களும் விஷண்ணராய்-
உம்முடைய விஷயமாக நீர் ப்ரவர்த்திக்கில் அன்றோ ஸ்வரூப ஹானி -உம்முடைய விஷயமாக நாங்கள் ப்ரவர்த்தித்தால்
உமக்கு ஸ்வரூப ஹானி இல்லை காணும் -என்று சில வசனங்களைப் படிக்க –
எனக்கும் போம் -சில வசனங்களை அன்றோ நீங்கள் விஸ்வசித்து இருக்கிறது – நானும் ஒரு வசனத்தை தஞ்சம் என்று இருப்பன்
காணுங்கோள் என்ன -அவர்களும் அது என் சொல்லிக் கண்ணீர் -என்ன –
ஸ்ரீ பிள்ளையும் -ஸ்ரீ ஜீயர் தம் சரம தசையில் ஸ்ரீ த்வயம் ஒழிந்த மந்த்ரங்களோடு சிவ பஞ்சாக்ஷரம் முதலான ஷூத்ர மந்த்ரங்களோடே
ஒரு வாசி இல்லை என்று அருளிச் செய்து அருளினார் – என்ன -அவர்களும் -ஸ்ரீ பிள்ளை திரு மந்த்ரம் செய்வது என் -என்ன
ஸ்ரீ பிள்ளையும் -அது தான் செய்வது என் -விவரண விவரணி பாவேந ஸ்ரீ த்வய அந்தரகதம்-என்ன –
அவர்களும் ஆகில் ஸ்ரீ த்வயத்தைக் கொண்டு செய்யக் குறை என்ன –
இவரும் விடாய்த்தவன் விலவறத் தண்ணீர் குடிக்குமா போலே இருப்பது ஓன்று இறே இது-
ஆகையால் ஸ்வ வியாதி ஸாந்த்யர்த்தமான பிரபதனமும் ஸ்வரூப ஹானி -பர விஷய ஸாந்த்யர்த்தமான பிரபதனமும் ஸ்வரூப ஹானி –
எங்கனே என்னில் -ஸ்வ விஷயமாக பிரவர்த்திக்குமாகில் ஸ்வ ஸ்வரூப பாரதந்தர்ய தூஷணமாம் அத்தனை –
பர விஷயமாக ப்ரவர்த்திக்கில் பர ஞான பர சக்திகளுக்குத் தூஷணமாம் என்று அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் தொடக் குழையும் பூப் போலே மந்த்ராந்தர ஸ்வரூபம் பொறாத ஸ்ரீ த்வய ஏக நிஷ்டை அதிசயமும் –
ஸ்ரீ த்வயத்தை மற்று ஒன்றுக்கும் சாதனம் ஆக்கிப் பிசக்கி முசிக்கப் பெறாமையும் –
ஸ்வ பர விஷய வியாதி ஸாந்த்யர்த்த பிரபதன தோஷ விசேஷமும் சொல்லப் பட்டது இறே

அநந்தரம் -ஸ்ரீ பிள்ளைக்குத் திருமேனி வாட்டம் தீர்ந்து -பண்டு போலே ஆரோக்யம் உண்டாய் ஸ்ரீ பாதத்தில் முதலிகளுக்கு
தர்சன தாத்பர்யங்களை ப்ரசாதித்துக் கொண்டு ஸூகமே எழுந்து அருளி இருக்கும் நாளிலே –
ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய திருப்பேரனான ஸ்ரீ நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் -ஸ்ரீ நம்பிள்ளையுடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
பாகவத ஸம்ருத்தியையும் -லோக பரிக்ரஹத்தையும் -சிஷ்ய சம்பத்தையும் கண்டு பொறுக்க மாட்டாமல் கடி கடி என்று கொண்டு போருவாராய் இருப்பர் –
அக்காலத்தில் அந்த ஸ்ரீ பட்டர் ராஜ ஸ்தானத்துக்கு எழுந்து அருளா நிற்க -வழியிலே ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு –
ஜீயா நாம் ராஜ கோஷ்டிக்குப் போகிறோம் கூட வாரும் என்று அழைக்க -இவரும் நாம் பரமாச்சார்ய வம்ஸயர் அன்றோ -என்று
ஸ்ரீ பட்டருடன் ராஜ ஸ்தானத்துக்கு ஏற எழுந்து அருள -ராஜாவும் ஸ்ரீ பட்டரை எதிர் கொண்டு பஹு மானம் பண்ணி
ஆசனத்தில் எழுந்து அருளுவித்து சேவித்துக் கொண்டு பெரிய திரு ஓலக்கமாக இருந்து தான் பஹு ஸ்ருதனாகையாலும்
வ்யுத்பன்னனாகையாலும் ஸ்ரீ பட்டருடைய வைதுஷ்ய சோதந அர்த்தமாக -ஸ்ரீ பட்டரே -ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்-என்று
பரத்வம் தோன்றாமல் வர்த்திக்கிற ஸ்ரீ பெருமாள் ஜடாயுவைக் குறித்து கச்ச லோகாந் அநுத்தமாந் -என்று
மோக்ஷம் கொடுத்த படி எங்கனே என்று கேட்க -ஸ்ரீ பட்டரும் அதற்கு உத்தரம் அருளிச் செய்யச் சிறிது விசாரிக்க வேண்டி இருக்க –
அவ்வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக -ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ ஜீயரைப் பார்த்து-ஸ்ரீ பிள்ளை பெரிய உடையாருக்கு ஸ்ரீ பெருமாள் மோக்ஷம் கொடுத்து
அருளினதை எப்படி நிர்வஹிப்பார் என்ன -ஸ்ரீ ஜீயரும் -சத்யேந லோகான் ஜயதி-என்கிற ஸ்லோகம் கொண்டு நிர்வஹித்து அருளுவார் என்ன-
ஸ்ரீ பட்டரும் ஆமோ என்று அத்தை திரு உள்ளத்திலே யோஜித்து ஓக்கும்-என்று எழுந்து அருளி இருக்க -ராஜாவும் அபிமுகமாகத் திரும்பி –
ஸ்ரீ பட்டரே நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச் செய்தீர் இல்லையே என்ன -ஸ்ரீ பட்டரும் -நீர் பராக் அடித்து இருக்க
நான் சொல்லலாவதொரு அர்த்தம் உண்டோ -ஸமாஹித மநவாய்க் கேளீர் என்று

சத்யேந லோகான் ஜயதி தீ நாந்தா நே ந ராகவ குரூன் ஸூஷ் ரூஷயா வீரோ தனுஷா யுதி சாத்ரவான்-என்கிற ஸ்லோகத்தை
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்ய -ராஜா கேட்டு ஸூ தராம் ப்ரீதனாய் -தேவரீர் அருளிச் செய்தது ஒக்கும் என்று சிரஸ் கம்பம் பண்ணி வணங்கி
அடிக்கடி கொண்டாடி -அநர்க்கங்களான அநேக ஆபரணங்களும் அநேக வஸ்த்ரங்களும் பஹு தனங்களையும் எல்லா வற்றையும் கொடுத்துப்
பஹு மதித்து -தான் நிருத்தரானாய் ஸ்ரீ பட்டர் திருவடிகளில் விழுந்து சேவித்து -ஸ்ரீ கோயிலிலே ஏற எழுந்து அருளும் -என்று சத்கரித்து விட –
ஸ்ரீ பட்டரும் ராஜா கொடுத்த வஸ்திர பூஷணங்களையும் தனங்களையும் அங்கீ கரித்து அங்கு இருந்து புறப்பட்டு
ஸ்ரீ ஜீயர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு -ஸ்ரீ ஜீயர் என்னையும் இந்தத்தனத்தையும் ஸ்ரீ பிள்ளை திருவடிகளில்
கொண்டு போய்க் காட்டிக் கொடும் -என்று போர ஆர்த்தியோடே அனுவர்த்தித்துச் சொல்ல –
ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தபடியே ஸ்ரீ பிள்ளை கோஷ்டியிலே கொண்டு போய்க் காட்டிக் கொடுக்க –
ஸ்ரீ பிள்ளையும் தம் பரமாச்சார்ய வம்சயரான ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளையை சேவித்து மிகவும் ஆதரித்து –
இது எது ஐயா -என்று கேட்டருள -ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ பிள்ளை திரு முக மண்டலத்தைப் பார்த்து -தேவரீருடைய திவ்ய ஸூக்தியிலே
பதினாராயிரம் கோடியிலே ஒன்றுக்குப் பெற்ற தனம் இது – ஆகையால் அடியேனையும் இந்தத் த்ரவ்யங்களையும் அங்கீ கரித்து அருள வேணும் என்ன –
ஸ்ரீ பிள்ளையும் -ஆகிறது என் -ஸ்ரீ கூரத்தாழ்வான் திருப்பேரனாரான நீர் இப்படிச் செய்ய பிராப்தம் அன்று காணும் என்ன

ஸ்ரீ பட்டரும் நித்ய சம்சாரியான ராஜா தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த கொடை இது-
ஆனபின்பு ஸ்ரீ கூரத்தாழ்வான் குடல் துடக்கில் பிறந்த அடியேன் அந்த பிரபாவத்துக்குத் தகுதியாகத் தேவரீருக்கு சமர்ப்பிக்கலாவது
ஒன்றும் இல்லையே யாகிலும் -அசலகத்தே இருந்தும் இத்தனை நாள் தேவரீர் திருவடிகளை இழந்து கிடந்த மாத்திரம் அன்றிக்கே –
தேவரீர் வைபவத்தைக் கண்டு -அஸூயா பிரஸவபூ -என்கிறபடியே அஸூயை பண்ணித் திரிந்த இவ்வாத்மாவை தேவரீருக்கு
சமரிப்பிக்கை அல்லது வேறே எனக்கு ஒரு கைம்முதல் இல்லை -ஆகையால் அடியேனை அவசியம் அங்கீ கரித்து அருள வேணும் என்று
கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு-ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் சேவித்துக் கிடக்க –
ஸ்ரீ பிள்ளையும் ஸ்ரீ பட்டரை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு-விசேஷ கடாக்ஷம் செய்து அருளி –
தம் திரு உள்ளத்திலே தேங்கிக் கிடக்கிற அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் ஒன்றும் தப்பாமல் இவருக்கு பிரசாதித்து அருள –
ஸ்ரீ பட்டரும் க்ருதார்த்தராய் ஒரு க்ஷணமும் பிரியாமல் ஸ்ரீ பிள்ளை சந்நிதியில் சதா அனுபவம் பண்ணிக் கொண்டு
சேவித்துக் கொண்டு ஸந்துஷ்டராய் எழுந்து அருளி இருந்தார் –

அக்காலத்திலே ஸ்ரீ பட்டருக்கு ஓர் உரு திருவாய் மொழிக்கு அர்த்தம் பிரசாதித்து அருள –
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தது ஒன்றும் தப்பாமல் பதறாமல் கேட்டுத் தரித்து இரா முற்ற எழுதித் தலைக்கட்டினவாறே –
ஸ்ரீ பட்டர் தாம் எழுதின கிரந்தங்களை ஸ்ரீ பிள்ளை சந்நதியில் கொண்டு போய் வைக்க -ஸ்ரீ பிள்ளையும் இது என் என்று கேட்க —
ஸ்ரீ பட்டரும் -தேவரீர் இந்த உரு திருவாய் மொழிக்கு நிர்வஹித்த கட்டளை என்ன -ஸ்ரீ பிள்ளையும் -ஆமோ -என்று கிரந்தங்களை
அவிழ்த்துப் பார்த்த அளவிலே -ச பாத லக்ஷம் க்ரந்தமாய் மஹா பாரத ஸங்க்யையாய் இருக்க -அத்தைக் கண்டு
ஸ்ரீ பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு ஸ்ரீ பட்டரைப் பார்த்து -நம்முடைய அனுமதி இன்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம் படி
நீர் நினைத்தபடியே திருவாய் மொழியை வெளியிடுவான் என் -என்ன -ஸ்ரீ பட்டரும் தேவரீர் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை எழுதினேன் –
அது ஒழிய கால் கொம்பு சுழி ஏற எழுதினது உண்டாகில் பார்த்து அருள வேணும் -என்ன
ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ பட்டரைப் பார்த்து -வாரீர் திருவாய் மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னதை எழுதினீர் ஆகில்
நம்முடைய சித்தஸ்தமான பொருளை எழுதப் பற்றீரோ -என்று வெறுத்து அருளிச் செய்து
ஸ்ரீ உடையவர் காலத்திலே ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவாய் மொழிக்கு ஸ்ரீ விஷ்ணு புராண ப்ரக்ரியையாலே
ஆறாயிரமாக இடுகைக்கு ஸ்ரீ உடையவரை அனுமதி கொள்ளப்பட்ட யத்னத்துக்கு மட்டு முடிவில்லை —
ஆன பின்பு நம்முடைய காலத்திலே நம்மையும் கேளாமல் லக்ஷத்து இருபத்தைந்து ஆயிரம் கிரந்தமாக இப்படி பரக்க எழுதினால்
ஒரு சிஷ்ய ஆச்சார்ய கிராமத்துக்கு அஸம்ப் ரதாயமாய்ப் போம் காணும் -என்று அருளிச் செய்து –
அவர் கையிலும் கிரந்தங்களை வாங்கிக் கொண்டு நீரைச் சொரிந்து கறையானுக்கு கொடுக்க அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து

அநந்தரம் ஸ்ரீ பிள்ளை தமக்கு பிரிய சிஷ்யராய் தம் பக்கலில் அகில அர்த்தங்களையும் அலகலகாகக் கற்று இருக்கும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை -திருவாய் மொழிக்கு ஒரு வியாக்யானம் பண்ணும் என்று நியமித்து அருள –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும் ஸ்ரீ இராமாயண ஸங்க்யையிலே ஒரு வியாக்யானம் செய்து அருளினார் –

பின்னையும் ஸ்ரீ நம்பிள்ளை ஒரு திருவாய் மொழிக்கு அர்த்தம் நிர்வஹிக்கிற கட்டளையை அந்தரங்க சிஷ்யரான
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை பகல் எல்லாம் கேட்டுத் தரித்து ராத்திரியிலே எழுதித் தலைக்கட்டினவாறே –
அத்தை ஸ்ரீ பிள்ளை சந்நிதியில் கொண்டு போய் வைக்க -பிள்ளையும் இது என் என்று கேட்டருள -அவரும் தேவரீர்
இந்த உரு திருவாய் மொழி நிர்வஹித்த கட்டளை -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பிள்ளையும் அந்த ஸ்ரீ கோசத்தை
அவிழ்த்துப் பார்த்து அருள -அதி சங்க்ஷேபமும் இன்றியே அதி விஸ்தாரமும் இன்றிக்கே ஆனை கோலம் செய்து புறப்பட்டால் போலே
மிகவும் அழகாய் ஸ்ருத பிரகாசிகை கட்டளையிலே முப்பத்தாறாயிரமாய் இருக்கையாலே ஸ்ரீ பிள்ளையும் அத்தைக் கண்டு போர ப்ரீதராய் அருளி –
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளையைப் பார்த்து-நன்றாக எழுதினீர் -ஆகிலும் நம்முடைய அனுமதி இன்றியே எழுதினீர் –
ஆகையால் கிரந்தங்களைத் தாரும் என்று அவர் திருக்கையிலும் வாங்கிக் கட்டி உள்ளே வைத்து அருளினார்

இத்தைக் கண்டு ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள் நெடுநாள் ஸ்ரீ நம்பெருமாளை ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் செய்து வேண்டிக் கொள்ள
ஒருநாள் ஸ்ரீ பெருமாள் அர்ச்சக முகேன ஸ்ரீ ஈ யுண்ணி சிறி யாழ்வான் பிள்ளையை அருளப் பாடிட்டு அருளி
ஏன் காணும் நம்மை பஹு வாக உபவாசியா நின்றீர் என்று கேட்டருள -ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாளும் –
ஸ்வாமீ ஸ்ரீ நம்பிள்ளை திருக்கையிலே திருவாய் மொழி ஈடு முப்பத்தாறாயிரம் என்ற ஒரு வ்யாக்யான கிரந்தம் இருக்கிறது —
அத்தை அடியேனுக்கு அவர் இரங்கி ப்ரசாதிக்கும்படி நியமித்து அருள வேணும் என்று பிரார்த்திக்க –
ஸ்ரீ பெருமாளும் அப்படியே செய்கிறோம் -என்று திரு உள்ளம் பற்றி இருக்கச் செய்தே -ஸ்ரீ நம்பிள்ளையும் முதலிகளுமாக
ஸ்ரீ பெருமாளை திருவடி தொழச் சென்றவாறே -ஸ்ரீ பெருமாள் பிள்ளையைக் குறித்து தீர்த்தம் திருமாலை திருப்பரியட்டம்
ஸ்ரீ சடகோபனும் பிரசாதித்து அருளி அர்ச்சக முகேன-ஸ்ரீ பிள்ளாய் ஈடு முப்பத்தாறாயிரத்தை ஸ்ரீ ஈ யுண்ணி சிறி யாழ்வான் பிள்ளைக்குப் பிரசாதியும் –
என்று திரு உள்ளமாக -ஸ்ரீ பிள்ளையும் மஹா பிரசாதம் என்று ஸ்ரீ பெருமாள் அருளப்பாட்டை சிரஸா வஹித்துக் கொண்டு புறப்பட்டுத்
தம் திரு மாளிகையில் எழுந்து அருளி தமக்கு அபிமத சிஷ்யரான ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள் என்கிற
ஸ்ரீ சிறி யாழ்வான் பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்து வாழ்வித்து அருளினார் –

ஸ்ரீ நம்பிள்ளை வைபவத்தை –
இந்திரன் வார்த்தையும் நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் சொல் வார்த்தையும் கற்பவராம் இந்தக் காசினிக்கே
நந்தின முத்தெறி நம்பூர் வரதர் தம் மாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறைக் கொள்வரே–என்று ஸ்ரீ பாதத்து முதலிகள் அனுசந்தித்தார்கள் இறே

வாழி பதின்மர் உடன் ஆண்டாள் மதுரகவி
வாழிய நாதன் முதலா மா மறையோர் -வாழி
ஒருக்கோலரை நெருக்கி ஓட்டும் எதிராசன்
திருத்தாள் வணங்கினார் சீர் —

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: