ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -சரம உபதேச அர்த்த -சரம விமல கைங்கர்ய விசேஷங்கள் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ மன் நாதமுனிகள் தொடக்கமான ஆச்சார்யர்களில் காட்டில் ஸ்ரீ எம்பெருமானார்க்கு ப்ராதான்யம் கொள்ளும்படி எங்கனே என்னில்
ஸ்ரீ பகவத் அவதாரங்கள் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ ராம கிருஷ்ண அவதாரங்களுக்கு ப்ராதான்யம் உண்டானால் போலேயும்
திவ்ய தேசங்கள் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ கோயில் திருமலை பெருமாள் கோயில்
திரு நாராயண புரங்களுக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ரிஷிகள் எல்லாரிலும் வைத்துக் கொண்டு ஸ்ரீ வ்யாஸ பராசர ஸூக ஸுவ்நக நாரதாதிகளுக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ஆழ்வார்கள் எல்லாரும் ஒத்து இருக்க ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ஆச்சார்யர்களில் எல்லாரையும் வைத்துக் கொண்டு ஸ்ரீ உடையவருக்கு ப்ராதான்யம் கொள்ளத் தட்டில்லை இறே-

ஸ்ரீ ராமாவதாரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில்
ஸ்ரீ பெருமாள் அபயப்பிரதானம் அருளிச் செய்தும்
ஸ்ரீ குஹப் பெருமாளுடன் சீரணிந்த தோழமை கொண்டும்
ஸ்ரீ பெரிய உடையாரை ப்ரஹ்ம மேதத்தால் சமஸ்கரித்து பள்ளிப் படுத்தியும்
ஸ்ரீ சபரி திருக் கையால் சம்யக் போஜனம் செய்தும்
ஸ்ரீ திருவடியுடன் -உண்பன் நான் என்ற ஒண் பொருள் – என்கிறபடியே ஸஹ போஜனம் பண்ணியும் போருகையாலே –

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில்
ஸ்ரீ கீதோபநிஷத்தை வெளியிட்டு ஸ்ரீ சரம ஸ்லோகத்தை அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ பீஷ்ம த்ரோணாதிகளுடைய க்ருஹங்களை விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகையில் -ஸூசீநி குண வந்திச -என்கிற
பாவனத்வ போக்யத்வங்களை யுடைத்தாய் இருந்தது என்று அமுது செய்து -த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் -என்று
முறை கூறுகிற சோற்றை நிராகரித்து இது தன்னையே சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தம் ஆக்குகையாலும் –

ஸ்ரீ கோயிலுக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் -ஸ்ரீ திருப் பாணாழ்வாரோடு கலந்து பரிமாறுகையாலே

ஸ்ரீ திருமலைக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் ஸ்ரீ குறும்பு அறுத்த நம்பிக்கும் ஸ்ரீ தொண்டைமான் சக்கரவர்த்திக்கும்
வார்த்தை அருளிச் செய்து பரிமாறுகையாலும்

ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் ஸ்ரீ திருக் கச்சி நம்பியோடே ஸ்மித பூர்வகமாக
சம்பாஷணம் பண்ணி மிகவும் கலந்து பரிமாறுகையாலும்

ஸ்ரீ திரு நாராயண புரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில் ஸூசரிதத நயன் பக்கல் ஆதராதி அதிசயத்தாலே
தன் நிவேதித அன்னத்தை சம்யக் போஜனம் பண்ணி அவனை வாழ்விக்கையாலும்
ஸ்ரீ யதிராஜ புத்ரரான ஸுசீல்யத்தாலும்

ஸ்ரீ வேத வ்யாஸ பகவானுக்கு -வேதங்களை விஸ்தரிப்பித்து -அதில் கர்ம காண்டத்தை விட்டு
ப்ரஹ்ம பாகத்தில் புருஷ ஸூக்த சாந்தோக்ய வாஜசநேய தைத்ரீயக ஸ்வேதாஸ்வதர மஹா உபநிஷதாதி களிலும்
தத் உப ப்ரும்ஹணங்களான புராண இதிஹாசாதிகளிலும்
சத்யம் சத்யம் என்று தொடங்கி –நதைவம் கேஸவாத் பரம் -என்று ஸத்ய புரஸ்சரமாக பரதத்வ நிர்ணயம் பண்ணுகையாலே –

ஸ்ரீ பராசர மஹ ரிஷிக்கு ப்ராதான்யம் -புராணேஷு ச வைஷ்ணவம் -என்னும்படியான ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
சித் அசித் ஈஸ்வர தத்வங்களை விசத தமமாகப் ப்ரதிபாதித்த உதாரன் என்று ஸ்ரீ ஆளவந்தார் நமஸ்கரித்து அருளுகையாலே

ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம ரிஷிக்கு பிரதான்யம் -ஸ்ரீ பரீக்ஷித்து ராஜாவுக்கு ஸ்ரீ மத பாகவதத்தில் தத்வ நிர்ணயத்தைப் பண்ணி –
ஸூகோமுக்த-என்னும்படியான வைபவத்தை யுடையவர் ஆகையால் –

ஸ்ரீ ஸுவ்நக பகவானுக்கு ப்ராதான்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் பல இடங்களிலும் தத்வ நிர்ணயம் பண்ணுகையாலே –

ஸ்ரீ நாரத பகவானுக்கு பிரதான்யம் -புஜயுகமபி சிஹ்னை ரங்கிதம் யஸ்ய விஷ்ணோ பரம புருஷாநாம் நாம் கீர்த்தனம் யஸ்ய வாசி –
ருஜு தரமபி புண்ட்ரம் மஸ்தகே யஸ்ய கண்டே சரஸிஜ மணி மாலா யஸ்ய தஸ்யாஸ்மி தாசா -என்று இப்படிப்பட்ட
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தாசன் என்று சொல்லுகையாலும் –
ஸ்ரீ பெரியாழ்வாரும் சேமமுடை நாரதனார்-என்னும்படியான வைபவத்தாலும்

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் -சஹஸ்ர சாகையான நாலு வேதத்தினுடைய பொருளையும்
நாலு திவ்ய பிரபந்த முகத்தால் சர்வாதிகாரம் ஆக்குகையாலும் –
ஸ்ரீ நாதமுனிகளுக்கு ப்ரசன்னராய் அருளிச் செயல் நாலாயிரத்தையும் ப்ரசாதித்து மற்றும் உண்டான தர்சன தாத்பர்யங்களை
எல்லாம் அருளிச் செய்து தர்சனத்தை நிலை நிறுத்துகையாலும்
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -முதலான இடங்களிலே வாரநாத் யுத்கர்ஷங்களை நிராகரித்து
வேத பிராமண முக்ய தாத்பர்யமான ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் எல்லாருக்கும் தெரியும்படி அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ உடையவர் கீழ்ச் சொன்னவர்களைப் போல் அன்றிக்கே ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த
அபய பிரதானத்தை விசதமாக்குகையாலும்
ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தத்தை பிரகாசிப்பிக்கையாலும்
ரிஷி ப்ரோக்தமான ப்ரமாணங்களுக்கு அர்த்தம் அருளிச் செய்கையாலும்
மற்றைய ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களை அங்க உபாங்கமாக யுடைய திருவாய் மொழி திவ்ய பிரபந்தத்தை
அர்த்தவத்தாக விசதமாகப் பிரகாசிப்பிக்கையாலும்
ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களையும் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களையும் கொண்டு
ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விட்டும்
ஸ்ரீ பாஷ்யம் கத்யத்ரயம் முதலான திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து –
நிகில குமதி சமயங்களையும் நிராகரித்து ஸ்வ மத ஸ்தாபனம் பண்ணி ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் -என்னும்படி
பண்ணுகையாலும் இவர் எல்லாரிலும் பிரதானர் இறே
இனி சிஷ்யர்களான ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலியாண்டான் தொடக்கமானவர்களில் பிரதானர் என்னும்
இடம் சொல்ல வேண்டா இறே

ஆக இவரது பிரதான்யம் சொல்லிற்று ஆயிற்று –

——————————–

ஆச்சார்யவான் புருஷோ வேத -என்றும்
பாபிஷ்ட க்ஷத்ர பந்துஸ் ச புண்டரீகஸ் ச புண்ய க்ருத்–ஆச்சார்யவத் தயா முக்த தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -என்றும்
ஆச்சார்யஸ் ச ஹரிஸ் சாஷாச் சர ரூபி ந சம்சய -என்றும்
ஆசிநோதி ஹீ சாஸ்த்ரார்த்தா நாசா ரேஸ்தா பயத்யபி -ஸ்வயம் ஆசரதே யஸ்து ஆச்சார்யஸ் ஸோ அபிதீயதே -என்றும்
குரு ரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பராம் கதி குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பரந்தனம் குரு ரேவ பரம் காமோ
குரு ரேவ பாராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா அசவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
பீதாக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்றும்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி என்றும்
ஈஸ்வரன் தானாகச் சொல்லப்பட்ட ஆச்சார்யனே சிஷ்யனுக்கு -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
திருப் பாற் கடல் முதல் நூற்று எட்டு திருப்பதிகளும் அன்னையாய் அத்தனாய் என்னும்படியான சர்வ வித உத்தாரக பந்துவும்
மாடும் மனையும் தேடும் பொருளும் பூமியும் எல்லாம் ஆககே கடவன் –

ஸ்ரீ ஆழ்வான்-ஸ்ரீ ஆண்டான் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் -ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ பராசர பட்டர் –
முதலானோர் தம் தம் சிஷ்யர்களுக்கு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் – என்கைக்கு ஹேது என் என்னில்
ஸ்வாச்சார்ய ப்ரீதி நிபந்தனமாகவும்
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ உடையவருக்கும் நடுவுள்ள ஆச்சார்யர்கள் ஸ்ரீ நம்மாழ்வாருக்குக் கரண பூதர் ஆகையாலே
இவருக்கு நேரே ஆச்சார்யர் ஸ்ரீ திருக் குருகூர் நம்பி ஆகையாலும்
அவர் கலியும் கெடும் என்று இவர் திரு அவதாரத்தைக் குறித்து அருளிச் செய்கையாலே
ஸ்ரீ ஆழ்வாராலே பிரவர்த்திதமான தர்சனத்தை நிலை நிறுத்தி அவர் வைபவத்தை
குரும் பிரகாசயேத் தீமான் -என்று பிரகாசிப்பிக்கையாலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு நேரே சிஷ்யர் ஸ்ரீ உடையவராகக் கடவர்
ஸ்ரீ பெரிய நம்பி முதலான பூர்வாச்சார்யர்கள் இவருக்கு ஆச்சார்யர்களாக வீறு பெற்றார்கள் –
ஸ்ரீ ஆழ்வான் முதலான சிஷ்யர்கள் இவருக்கு சிஷ்யராய் பேறு பெற்றார்கள் –
ஆகையாலே சர்வ ஆச்சார்யத்வ பூர்த்தி உள்ளது ஸ்ரீ உடையவர்க்கே யாகையாலே அருளிச் செய்து அருளினார்கள் இறே-

ஸ்ரீ ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தை அனுஷ்டித்துக் காட்டி அருளினார் -எங்கனே என்னில்
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ உய்யக் கொண்டார் இவர்கள் உகப்பை பின் சென்று
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத -என்றும்
நாதாய நாத முனையே அத்ர பரத்ர சாபி நித்யம் -என்றும்
அங்கும் இங்கும் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் -ஆச்சார்ய விஷயத்தில் க்ருதஜ்ஞதை யாவதாத்மபாவி -என்று அருளினார் –
ஆகையால் ஸ்வரூப உஜ்ஜீவனத்துக்கு ஆச்சார்யனே தஞ்சம் என்று பற்றுதல் ஒழிய வேறே
இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை இறே
இவ்வர்த்தத்தை அனுஷ்ட்டித்தார் ஆர் என்னில் ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சஜ் ஜனங்கள் இறே

ஸ்ரீ உடையவர் புழுவன் வ்யாஜேந மேல் நாட்டுக்கு எழுந்து அருளினை போது உபந்யஸித்த கட்டளையைக் கேட்டு
ஆச்சார்யர்கள் எல்லாம் ஆச்சர்யப் பட
ஸ்ரீ உடையவரும் -என் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் வார்த்தை கொண்டு சொன்னேன் இது –
ஸ்ரீ ஆளவந்தார் கோஷ்டியில் ஒரு நாளாகிலும் சேவிக்கப் பெற்றேன் ஆகில் ஸ்ரீ பரமபதத்துக்கும் இங்கும் சுருளும் படியும்
கட்டி விடேனோ-என்று அருளிச் செய்தார் இறே

ஸ்ரீ உடையவர் அபயப்ரதானம் அருளிச் செய்யா நிற்க ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியின் நின்றும் எழுந்து நிற்க
இது என் பிள்ளாய் -என்று ஸ்ரீ உடையவர் கேட்டு அருள
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநிச -பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிச -என்றும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணங்கத -என்றும்
பகவத் ஸமாச்ரயணத்துக்கு விலக்கடி யானவைகளை அடைய விட்டு ஸ்ரீ பெருமாள் திருவடிகளே தஞ்சம் என்று வந்து –
கஸ்ய ஏவ வ்யதிஷ்டித -என்று நிலத்திலே கால் பாவாதே ககநஸ்தனாய்-நிராலம்பநனாய் நின்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அகப்பட –
வத்யதாம் -என்று கல்லும் தடியும் கொண்ட ஸ்ரீ ராம கோஷ்டிக்குப் பஸூ பத்நியாதிகளோடே கூடின அடியேன் ஆளாகப் புகுகிறேனோ -என்றார்
ஸ்ரீ உடையவரும் -கேளாய் பிள்ளாய் -அஞ்சாதே கொள்ளும் -நான் பெற்றேனாகில் நீர் பெறுகிறீர்-
ஸ்ரீ பெரிய நம்பி பெற்றாராகில் அடியேன் பெறுகிறேன் -ஸ்ரீ ஆளவந்தார் பெற்றார் ஆகில் ஸ்ரீ பெரிய நம்பி பெறுகிறார் –
மற்றும் மேல் உள்ளோர் பெற்றார்கள் ஆகில் இவர்களும் பெறுகிறார்கள்
நம் ஸ்ரீ சடகோபர் அவா அற்று வீடு பெற்ற-என்று தம் வாக்காலே அருளிச் செய்கையாலே அவர் பெற்றது சித்தம் –
ஆனபின்பு நமக்கும் சித்தம் என்று இரும் -எல்லார்க்கும் நாச்சியார் புருஷகாரம் உண்டாம் போது அச்சம் வேண்டா –
ஆகை இறே நித்ய யோகம் -ஆனபின்பு நித்ய சம்சாரிகளும் ஸ்ரீ எம்பெருமானும் ஒரு சங்கிலி துவக்கிலே காணும் இருப்பது –
ஆகையால் நம்முடைய ஒழுக்குக் கூட்டம் நம்மை விட்டு அகலாது என்று இரீர்-கமுகு உண்ணில் வாளையும் உண்ணும் என்று இரும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானோடு வந்த நால்வரையும் அருளப்பாடிட்ட போது தனித்து அருளப் பாடிட்டது இல்லையே –
தகை என்ற போதும் தனித்துத் தகை என்றது இல்லையே –
ஆனபின்பு நான் பெற்றேன் ஆகில் நீர் பெறுகிறீர் -அஞ்சாதே ஸூகமே இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஏத்தி இருப்பாரே வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்-
ஏத்தி இருந்தார் -ஸ்ரீ பரதாழ்வான்-அவரைச் சார்த்திஇருந்தார் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான்
ஏத்தி இருந்தார் ஸ்ரீ நம்மாழ்வார் -அவரைச் சார்த்தி இருந்தார் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
ஏத்தி இருந்தார் ஸ்ரீ பெரியாழ்வார் -அவரைச் சார்த்தி இருந்தார் ஸ்ரீ நாச்சியார்
இனி ஸ்வ ஆச்சார்ய பரமாச்சார்யார்களைப் பற்றும் அவ்வளவே -இதுவே ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுமதுவே
ஸ்வரூபம் ஆகில் திவ்ய தேசங்களைக் கை விட்டான் ஆகானோ -என்னில் -கை விட்டா ன் ஆகான் -அது எங்கனே என்னில்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தன்னோடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து -என்கையாலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளைத் தொழவே திவ்ய தேசங்கள் எல்லாம் திருவடி தொழுதானாகக் கடவன் –
ஸ்ரீ உடையவராய் ஆராதித்து அமுது செய்யப் பண்ணவே -எல்லா திவ்ய தேசங்களில் ஸ்ரீ எம்பெருமான்களை எல்லாரையும்
ஆராதித்து அமுது செய்யப் பண்ணினாகக் கடவன் –

நின்ற வண் கீர்த்தியும்-என்கிற பாட்டிலும் -பேறு ஓன்று மற்று இல்லை -என்கிற பாட்டிலும்
கர்மமும் உபாயம் அன்று -ஞானமும் உபாயம் அன்று -பக்தியும் உபாயம் அன்று -பிரபத்தியும் உபாயம் அன்று –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே உபாய உபேயம் என்கையாலே -ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி –
ஸ்ரீ ராமானுஜன் என்கிற சதுரஷரியே திரு மந்த்ரம் -அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
இதுவே நிச்சயித்த அர்த்தமான என் சித்தாந்தம் என்று ஸ்ரீ நடாதூர் அம்மாள் அருளிச் செய்து அருளுவார்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ நாராயண ஸ்ரீ ராமானுஜ என்கிற திரு மந்திரங்களுக்கு வாசி
பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாகையும் -மோக்ஷ ஏக ஹேதுவாகையும் ஆகிற இது தோன்ற
ராமானுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ -என்றார் இறே
கையில் கனி -என்கிற பாட்டில் -ஸ்ரீ சர்வேஸ்வரனை கர தலாமலகமாகக் காட்டித் தந்தாலும்
உன் திவ்ய விக்ரஹ ஸுந்தர்ய அனுபவமே பரம ப்ராப்யம் என்றும்
இராமானுசனைத் தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடம் -என்று
ஸ்ரீ ராமானுசனைத் தொழும் பெரியோர் நித்ய வாசம் பண்ணும் இடமே அடியேனுக்கு ப்ராப்ய பூமி என்றும்
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
ஸ்ரீ ராமானுசா உன் அடியார் திறத்தில் ஊற்றம் மாறாத பக்தியை உண்டாக்கி அவர்களுக்கே என்னை ஆட் படுத்தாய் -என்று
ஸ்ரீ உடையவர் திரு முக மண்டலத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்ய இசைந்து எழுந்து அருளி இருந்தார் இறே
இதுவே இவ்வர்த்த நிர்ணயத்துக்கு த்ருட தர முக்ய பிரமாணம் என்று நமக்கு எல்லாம் புத்தி பண்ணக் குறையில்லை –
எங்கனே என்னில்
அங்கயல் பாய் வயல் -என்கிற பாட்டில் படியே -சர்வ ஸ்மாத் பரனாய் சர்வ நியாந்தாவான ஸ்ரீ எம்பெருமானையும் ஸ்ரீ நாச்சியாரையும்
புருஷகாரமாகக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை பெற வேணும் என்று
தம் திவ்ய பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளினார் இறே ஸ்ரீ அமுதனாரும் –

இங்கன் அன்றிக்கே-
வேதாந்தான் சங்கராத்யை குமதி பிரச தர்த்தான் ஹி நீதரம்ஸ் ச பூயஸ் ஸ்வார்த்தே தாத்பர்ய யுக்தான்
கல யிதுமபிச ஸ்ரீ சடார்யாத்ய பக்தை ப்ரோக்தான் திவ்ய பிரபந்தான் ஸ்ரண வரண யோகாத் மகான் ப்ரஸ் புடார்த்தான்
க்ருத்வோத்தர்த்தும் பவாப்தே ரகில ஜென்ம பூத்யோ மஹா பூத தாம்நி -என்றும்
வேதாந்தா நாம ஸீம் நாங் குரு தரகஹ நார்த்தைக வாக்யத்வ பூர்வம் வ்யாக்யா த்ருத் வாச்ச சேஷங் குரு பரவஹநா தீசி துஸ்
ஸைன்ய நாதம் -சாது த்ராணாத் ததன்ய ப்ரமதந கரணாச்சாபி தத் பஞ்ச ஹேதீ நா சார்யத் வஸ்ய
பூர்த்யா யமுரு தரக்ருபம் ஸ்ரீ பதிஞ்சா ஹுரார்ய -என்றும்
ஸ்ருத் யர்த்தான் ப்ராப்ய தத்வேந சவரதமுகா தாஜ்ஞயா தஸ்ய சர்வம் ஸ்ங் கந்த யக்த்வா த்ரிதண்டாஞ்சி தமஹி தகரோ
ரங்க தாம் ந்யாஸ் தபஸ் சாத்-ஆர்யைஸ் சா கஞ்ச லஷ்மீ ரமண க்ருதப தாந்தி வ்யதேசாந்த ராயாம் சேவம்சே வம்ப்ர
கல்ப்யாத சமஹித சமாராதனம் தத்ர தத்ர -என்றும்
யாதோயஸ் சார தாயாஸ் ஸவிதமத தயாஸத் க்ருத ஸ்வ பிரபந்தோ பாஹ்யான் வேதாத் குத்ருஷ்டீ நபிக பட படூன்
வாததோ நிர்ஜிகாய -ப்ராதக்ஷிண்யே ந கச்சன் புவமகிலஜனம் வைஷ்ணவாக்ர் யஞ்ச குர்வன் ந்யாஸாக் யந்தேவ குஹ்யம்
பரமஹிதமபி த்ராக் ப்ரகாசஞ்ச க்ருத்வா -என்றும்
ரங்கே வேதாந்த பாஷ்யம் வ்யத நுத சதத -கீட கண்டஸ்ய ஹேதோர்கத்வா யோஹோசலாக்யம் ஜனபத மமலே யாதவாத்ரவ் நிவேஸ்ய –
பஸ் சாதா கத்ய ரங்கங் குரு வர முகதோ வைதிகாக்ர்யம் விசிஷ்டா த்வைதம் சித்தாந்த மஸ்மின்
ஜகதி பஹு முகம் விஸ்த்ருதங்கார யித்வா -என்றும்
அத்யாப்யாஸ் தேய துஷ் மாப்ருதி மஹித உயஸ் சாஷுஷீம்ஸ் வீய மூர்த்திங் குர்வாணஸ் தம்யதீந்த் ரங்குரு குல
நிரூபதிம் நவ்மி ராமாநுஜார்யம் -என்றும் –
கீதா பாஷ்யம் பூஷ்ய வேதாந்த பாஷ்யம் சாரந்தீ பங்கிஞ்ச கத்ய த்ரயஞ்ச -வேதார்த்தானாம் ஸங்க்ரஹம் நித்ய யாகம்
பிராஹை தான்யஸ் தம்யதீந்த்ரம் பஜே அஹம் -என்றும்
ஹஸ்த்ய த்ரீச பிரசாதா ததிகத நிகமாந்தார்த்த கோ யோஹி ஜித்வா பாஹ்யாந் வேதாத் குத்ருஷ்டீ நபி நிகில ஜனம்
வைஷ்ணவாக்ர் யஞ்ச க்ருத்வா -ரங்கே வேதாந்த பாஷ்யம் வ்யத நுததமஹம் நவ்மி ராமாநுஜார்யம்
ஸ்ரீ ரெங்காத் யாலயேஷு பிரகட குண கணம் ஸ்ரீ பதிம் சேவமானம்-என்றும்
இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானோர் பஹு முகமாக பேசி வெளியிட்டார்கள் –

இப்படி சத்துக்களால் பராக் யுக்த வைபவம் ஸங்க்ரஹேன யுக்தமாய்த்து

—————————–

ஏவம் வித வைபவ யுக்தரான ஸ்ரீ எம்பெருமானாரைத் தத் பாகி நேய ஸூனுவாய்த் தன் நாமத்தை யுடையராய்த்
தன் நாம குண ஹர்ஷிதரான ஸ்ரீ கந்தாடை ஆண்டான் கனக்க அனுவர்த்தித்து-பரித்ராணாயா -இத்யாதிப்படியே -தேவரீர்
புண்யாம் போஜ விகாசாய பாபத்வாந்த ஷயாயச -ஸ்ரீ மான் ஆவீரபூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்னும்படி அவதரித்து அருளின
ஸ்ரீ பெரும் பூதூரிலே சர்வ காலத்திலும் சர்வ சேதனர்க்கும் ஸேவ்யமாம் படி தேவரீருடைய
அர்ச்சா விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ண வேணும் என்று விண்ணப்பம் செய்ய -ஸ்வாமியும் அப்படியே செய்யும் என்று
அனுமதி பண்ணி அருள அப்பொழுதே ஸ்ரீ ஆண்டானும் அனுகூலனான சில்பியை அழைப்பித்து
புண்ட்ரைர் துவாதச பிர்யுதம் விலஸிதன் த ண்டை ச த்ரிபிர் மண்டிதங் காஷாயேண சிகோபவீதருசி ரந்தோர் மூல சக்ராம்புஜம்
ஆஸீ நஞ்சல ஜரச நேச துளஸீ பத்மஜா மாலாஞ்சிதம் யுக்தஞ்ச அஞ்சலி முத்ரயார வி நிபம் ஸ்ரீ பாஷ்யகாரம் பஜே -என்கிற
பரார்த்யமான வார்த்தக விக்ரஹ ஆகாரத்தை சேவிக்கப் பண்ண
அவனும் ஆதி யஞ்சோதி யுருவை யங்கு வைத்து இங்கு பிறந்த -என்கிறபடியே அர்ச்சா விக்ரஹமாக எழுந்து அருளப் பண்ணி
சந்நிதியில் கொண்டு வந்து வைக்க -திருக்கண் சாத்தி உகந்து அருளி அந்த விக்ரஹத்திலே தம்முடைய சர்வ சக்தியும்
பிரகாசிக்கும் படி காடா லிங்கனம் பண்ணி -இவ்விக்ரஹத்தை புஷ்ப மாசத்தில் குரு புஷ்யத்திலே ப்ரதிஷ்டிப்பியும் என்று
திருமுகம் எழுதி தினம் குறித்து அனுப்பி அருள –
ஸ்ரீ ஆண்டானும் அப்படியே திருவடிகளில் சேவித்து அந்த விக்ரஹத்தை எழுந்து அருளிவித்துக் கொண்டு வந்து
மூல விக்ரஹத்தையும் ஏறி அருளப் பண்ணுவித்துத் திரு முகப்படியே திரு பிரதிஷ்டையும் செய்வித்து அருளினார்-

இங்கே ப்ரதிஷ்டிப்பிக்கிற அற்றைத் திவசத்திலே திரு மேனியில் மிகவும் தளர்ச்சியாய்ப் பல ஹானி யுண்டாக
ஸ்ரீ இராமானுசனும் இது என் என்று பராமர்சித்து -ஸ்ரீ ஆண்டானுக்கு எழுதிக் கொடுத்த திவசம் எது என்று கேட்டு அருள –
அந்த திவசம் அந்த தானாய் இருக்கக் கண்டு விஸ்மயப்பட்டு-சீக்ரம் வருவது -என்று ஆண்டானுக்குத் திருமுகம் போக விட்டு அருள –
அவரும் திரு முகத்தை சிரஸா வகித்து அப்படியே மீண்டு எனது அருளித் திருவடிகளை சேவித்துக் கொண்டு இருந்தார் –

அநந்தரம் அங்குத்தைக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ ஆண்டான் முதலான முதலிகள் எல்லாம் பழுத்து இருக்கிற தேமாவைக்
கிளித் திரள்கள் காத்துக் கொண்டு இருக்குமா போலே-தத் துல்யரான இவர்களும் விமல சரம விக்ரஹத்தை கையில் கனி இத்யாதிப்படியே
மெய்யில் பிறங்கிய சீரைப் பழுக்க சேவித்துக் கொண்டு
அடையார் கமலத்து அலர் மலர் கேள்வன் கையாழி என்னும் படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று இடையே இராமானுச முனி யாயின இந்நிலத்தே -என்றும்
சேஷோ வா ஸைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை விதர்க்யாய மஹா பிராஜ்ஜைர் யதிராஜாய -என்றும்
தத்ரோதஞ்சதி மண்டபே யதிவர கஷ்யாந் தரஸ் தேவசன் பூர்வம் ராவண கம்ச முக்ய தனுஜான் ராமாநுஜாப்யாம்ஹதான்
மத்வா சங்கர யாதவாதி முகதோ பூயோ அவதீர்ணாம் புவன் தத் பங்காய க்ருதோ தயஸ் ததுசிதாம் ராமாநுஜாக்யாம் வஹன்-என்றும்
வ்யாசோவா பகவான் பராசர முனிஸ் ஸ்ரீ ஸுவ்நகோ வா அதவா சாஷான் நாரத ஏவ வா சடாரிபுர் வாகீஸ்வரோ வா
ஸ்வயம் லோகேச புருஷோத்தம பணிபதிஸ் சேஷீ ஜகச் சேஷிணீ த்யாக்யாதும் ஜெகதாம் ஹிதாய சமபூத் ராமாநுஜார்யோ முனி -என்றும்
சொல்லுகிறபடியே அநேக அவதார விசேஷம் என்று ஆதரித்துக் கொண்டு இருந்தார்கள் –

இத்தால் ஏவம் வித மஹாத்ம்ய யுக்தரான இவருடைய வைபவமும் -சரிதம் ரகுநாதஸ்ய சத கோடிப் ப்ரவிஸ்தரம்-என்கிற
சக்கரவர்த்தி திருமகன் வைபவம் போலே அவாங் மனச கோசாரம் இறே
சாகரத்தை கை நீச்சாலே கடந்து அக்கரை ஏறினாலும் -உததியைச் சிறாங்கித்தாலும்
ஸ்ரீ உடையவர் வைபவம் அடையச் சொல்லப் போகாது இறே
யதா மதி யதா ஸ்ருதமாகச் சொன்னது அத்தனை –
பஹு ஸ்ருதராய்ப் புத்தி பாஹுள்யம் உடைய பெரியோர்கள் விசதமாகக் கண்டு கொள்ளக் கடவர் இறே

இப்படி அவதார விசேஷமான இவருக்கு சரச் சதம் வ்யதீயாய ச விம்சமதிகம் ப்ரபோ -என்கிறபடியே
நூற்று இருப்பத்தஞ்சிலே நூற்று இருபது திரு நக்ஷத்ரம் பூர்ணம் ஆய்த்து-
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே -என்னும்படியான இவர்
தம்முடைய அவதார ரஹஸ்ய ஞானத்தாலும் -தம்முடைய விக்ரஹ சேவையாலும் -தத் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகளாலும் –
சதுரஷரியாய்ச் சதுரமான தம்முடைய திரு நாம வைபவத்தாலும் -ஸ்வ திவ்ய மங்கள விக்ரஹ த்யானத்தாலும் –
தத் ஏக நிஷ்டையாலும் தத் கைங்கர்ய ஏக பரதையாலும் -ஸ்ரீ பாஷ்யாம்ருத ப்ரதானாதிகளாலும்-
ஸ்ரீ மந்த்ர ரத்ன ப்ரதானாதிகளாலும்-ததர்த்த ப்ரதிபாதனத்தாலும் -ஸ்வ பாதுகா பிரதானத்தாலும் -ஸ்வ பாத தீர்த்த ஸ்வீ காரத்தாலும் –
ஸூ பாவனமான பிரசாத ஸ்வீ காரத்தாலும் -ஸ்ரீ பாத ஸ்பர்ச பவித்ரதையாலும் -சஞ்சார பூதமான பாத சஞ்சரணத்தாலும்-
ஸ்வ பாவன கர ஸ்பர்சத்தாலும் -அப்படியேயான கடாக்ஷ விசேஷத்தாலும் -பஞ்ச ஸம்ஸ்காராதிகளால் உண்டான சம்பந்த விசேஷத்தாலும்
புநந்தி புவனம் யஸ்ய பாதாஸ் ரித பதாஸ்ரித கடாஷாதி பிரே வாத்ர-என்ற ஸ்வ கீ ய சம்பந்தத்தாலும்
பால மூக ஜடாந்தாஸ் ச பங்கவோ பதி ராஸ்ததா -ஸதாசார்யேண சந்த்ருஷ்டா ப்ராப்னுவந்தி பாரங்கதிம்-என்றும்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வாமர்த்ய மயீந்தனும் மக்நானுத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா -என்றும்
அன்வயதாபிசை கஸ்ய சம்யங் ந்யஸ்தாத்மநோ ஹரவ் -சர்வ ஏவ ப்ரமுஸ்யே ரன்னரா பூர்வே அபரே ததா-என்றும்
பஸூர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸரயா தேனவைதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பரம் -என்றும்
சொல்லுகிறபடியே ஏதேனுமாய் உள்ளதொரு ஸ்வ சம்பந்த விசேஷத்தாலும்
ஞாத்ர ஞாத்ரு விபாகமற ஜகாத்தை எல்லாம் உஜ்ஜீவிப்பித்தும்
இனி மேலும் ஸ்வ சம்பந்திகளாய் உள்ளவர்களை -ஆரியர்காள் கூறும் -என்று நியமித்தும்
இப்படி அவதார கார்யம் தலைக் கட்டினவாறே

அங்கே-அயர்வறும் அமரர்களோடே கூடி அடிமை செய்யத் திரு உள்ளமாய் -சேணுயர் வானத்து இருக்கும் தேவ பிரானாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -பாம்பணை மேலார்க்கு -பல பலவே யாபரணம் -என்னும்படி
பன் மணிப் பூண் ஆரத்தை யுமுடையவனாய் -உடையார்ந்த ஆடையன்-இத்யாதிப்படியே -நடையா உடைத் திரு நாரணனாய்-
அரவின் அணை அம்மானாய் -எழில் மலர் மாதரும் தானும் இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து அமர்ந்து –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கேள்வனாய் -ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இப்படி
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் என்னும்படி -தத் ஏக போகமாய் உள்ள போக விபூதியில் –
அம் மிதுனச் சேர்த்தியாய் எழுந்து அருளி இருக்கிற அவ்விருப்பிலே

தேவிமாராவார் திரு மகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்ய -கருளப் புட் கொடிச் சக்கரப் படை வான நாட
எம் கார் முகில் வண்ணனாய் -வைகுந்தம் கோயில் கொண்டு எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –
சென்றால் -ஊரும் நிவாஸ தாச பேதம் கொண்டு வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -என்று
அபி வ்ருத்த மநோ ரதத்தை யுடையராய் -அது செய்யும் இடத்து முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் –
செம்மா பாத பற்பை தலை சேர்க்க வேணும் -ஈறில் இன்பத்து இரு வெள்ளத்தில் முழுக வேணும் –
தாமரைக் கண்களால் குளிர நோக்க வேணும் -என்றால் போலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு

வானார் சோதி மணி வண்ணா -மது சூதா -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே-என்றும் –
இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செ ய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும் சொல்லுகிறபடியே கண்ணழிவு அற்ற ப்ராப்ய த்வரையை யுடையராய் –
அத்தை ஆராத காதலை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அர்த்தித்த படியே இவரும் அத்தை அடி ஒற்றிக் கொண்டு
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே என்று தொட ங்கி-ஆத்ம அனுரூபயா ஸ்ரீயா சஹாஸீநம் -என்றும்
ப்ரத்யக்ரோன் மீலித ஸரஸிஜ சத்ருச நயன யுகளம்-என்று தொடங்கி –
தத ஷனோன் மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம் -என்னும் அளவும் –
இணைப்பாதங்களின் இடையில் உண்டான வற்றின் வடிவு அழகுகளையும் –

அநந்தரம் -அதி மநோ ஹர கிரீட மகுட நூபுராந்தமாக -முடிச் சோதி தொடங்கி
அடிச் சோதி அளவும் சாத்தின திரு அணிகலன்களின் அழகையும்
ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலையா விராஜிதம்-என்று கீழில் ஆபரண சோபைக்குப் பிரபை போலவும்
அதன் காந்தி பூரம் நிறம் பெற வெள்ளம் இட்டால் போலே இருக்கிற மங்கல நல் வன மாலையையும் –
கீழில் ஆபரணத்தோபாதியாய் இருக்கிற அணியார் ஆழியும் சங்கும்-என்னும்படியான
சங்க சக்கர கதா அஸி ஸார்ங்காதிகளாய் உள்ள அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படைகளையும்
ஸ்ரீ மத் விஷ்வக்ஸேன -என்று தொடங்கி பகவத் பரிசார்ய ஏக போகைர் நித்ய சித்தியைர் அனந்தை-என்னும் அளவும்
அமரர் கோன் அர்ச்சிக்கின்ற அங்குப் பணி செய்வார் விண்ணோர்களையும் -அதுக்கு மேலே –

திவ்ய அமல கோமல அவலோக நேந விஸ்வம் ஆஹ்லாத யந்தம் -என்று தொடங்கி
வானாட மருங்குளிர் விழிகளால் குளிர நோக்கும் படியையும்
பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து -சோதி வாய் திறந்து திவ்ய லீலா ஆலாப அம்ருதங்களாலே
அகில ஜனங்களையும் ஆனந்திப்பித்து தளிர்ப்பிக்கும் படியையும் –
பகவந்தம் நாராயணம் த்யான யோகேந த்ருஷ்ட்வா -என்று ப்ராப்ய பக்தி யோக ரீதியாலே –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்று காணும் படியையும்
நித்ய தாஸ்யஞ்சயா தாவத் ஸ்திதம் அனுசந்தாயா -என்று அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்கிற
ஸ்வ பாவிக சம்பந்தத்தை அநுஸந்திக்கும் படியையும்
கதா அஹம் பகவந்தம் நாராயணம் –சாஷாத் கரவாணி சஷுஷா -என்று
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரை பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ -என்றும்
பை கொள் பாம்பேறி யுறை பரனே -உன்னை மெய் கொள் காண விரும்பும் என் கண்களே என்றும் சஷுஸ்ஸூக்களாலே
ப்ரத்யக்ஷ சாஷாத் காரம் பண்ணும் படியையும்
கதாவா பகவத் பாதாம் புஜ த்வயம் சிரஸா சங்க்ரஹீஷ்யாமி-என்று திரு வல்ல வாழ் நகரில் நின்ற பிரான் அடி நீறு
அடியோம் கொண்டு சூடுவது என்று கொலோ -என்றும்
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர்ப் பூம் தாமரை சூடுதற்கு அவா -என்றும் சொல்லுகிறபடியே
பாதாரவிந்தங்களை ஸீரோ பூஷணமாக தரிக்கும் படியையும்
கதா அஹம் பகவத் பாதாம் புஜத்வய பரிசர்யா சயா என்று தொடங்கி -தத் பாதாம் புஜ த்வயம் பிரவேஷ்யாமி -என்னும் அளவாக
பாதம் அடைவதன் பாசத்தால் மற்ற வன் பாசங்கள் முற்ற விடும் படியையும்

திருவடிக் கீழ் குற்றேவல் செய்யும் படியையும்
கதா மாம் பகவான் அதி சீதலயா ஸ்வகீய யாத்ருசா அவலோக்ய -என்று தொடங்கி மேல் எல்லாவற்றாலும் பக்கம் நோக்கு அறியாதே
அமலங்களாக விழுங்கும் படியையும்
முகப்பே கூவிப் பணி கொள்ளும்படியையும் அனுசந்தித்து திருவடிக் கீழ் குற்றேவல் செய்யப் பெரிய காதலை யுடையராய் –
அத்தாலே-அடியேன் அடைந்தேன் -என்னும்படி மாநஸமாகக் கிட்டி
தூராதேவ -என்று தொடங்கி அப் பேர் ஓலக்கத்தைத் தூரக் கண்டு சேவிக்கும் படியையும்
அணைவது அரவணை மேல் பூம் பாவை ஆகம் புணருமவனான இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
தொல்லை மாலைக் கண்ணாரக் காணும் படியையும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் என்று மீளவும்
பஹு மநோ ரதங்களைப் பண்ணா நின்று கொண்டு
வாசலில் வானவர் அனுமதியுடன் உள்ளே புகும்படியையும் மநோ ரதித்து

அடைந்தேன் உன் திருவடியே-என்று அவனைக் கிட்டி -நாராயணாய நம -என்று வழுவிலா அடிமையை அர்த்தித்து-
தத் சித்திக்கு -அடியேனுடைய ஆவி அடைக்கலமே என்று ஆத்மாவை நிவேதிக்க -அவனும் குளிர் விழிகளாலே
கரை அழியும் படி கடாக்ஷிக்க -எது ஏது என் பணி என்னாது -எல்லா அடிமைகளையும் செய்ய ஒருப்பட்டு-
கைகளால் ஆரத் தொழுது தொழுது என்றும் -இரங்கி நீர் தொழுது -என்னும்படி ப்ரஹ்வ அஞ்சலி புடராய் அனுபவியா நின்று கொண்டு –
அத்யந்தம் ப்ரீதி யுக்தனாய் ப்ரீதி பிரகர்க்ஷத்தாலே கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணுடன் நிற்கும் படியையும்
ததோ பகவதா-என்று தொடங்கி -அம்ருத சாகராந்தர் நிமக்ந சர்வ அவயவஸ் ஸூகமா ஸீத-என்று மீளவும் தாமரைக் கண்களால்
அவலோகநதானம் பண்ணும் படியையும் அபேக்ஷித்து-சோதிச் செவ்வாய் முகுளம் அவலோகியா அலரா இருந்தது –
இப்போது ச விலாச ஸ்மிதத்தாலே அலர்ந்து-ஆநயைநம் -என்று ஆளிட்டு அழையாதே தானே வா என்று அழைத்து –
துயர் அறு சுடர் அடி என்றும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்றும் சொல்லும்படியான கமலம் அன்ன குரை கழல்களை –
தலை சேர்த்து -தன் தாளிணைக் கீழ் சேர்த்து என்னும்படியே பாத உபதானம் போலே சேர்த்து அருள வேணும்

மாயன் கோல மலரடிக் கீழ்ச் சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளமான அமுத வெள்ளத்து -இன்பத்து இரு வெள்ளத்திலே –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா என்னும்படி அவகாஹித்து –
இங்கே சோகாபி கர்சிதமான சாஸ்த்ரங்களாலே தாப த்ரயங்கள் போல் அன்றிக்கே அங்கே நிரதிசய ஸூகத்தை அனுபவிக்க வேணும் –
என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே அர்த்தியா நின்று கொண்டு –
பரம பக்தி தலை எடுத்துப் பெரிய அபிநிவேசத்துடனே ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதியில் எழுந்து அருளி
ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு பெரிய கத்யமான ஸ்ரீ சரணாகதி கத்யத்தை பெரிய ஆற்றாமையோடே
திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்து சரணம் புக்கு அநந்தரம்
ஸ்ரீ ரெங்க கத்யத்தையும் விண்ணப்பம் செய்து அத்தலையில் உண்டான சர்வ சக்தித்வாதி கல்யாண குணங்களையும் ஆவிஷ்கரித்து
ஆகிஞ்சன்யத்தையும் அறிவியா நின்று கொண்டு சரணம் புக்கு
ஸ்ரீ பெரிய பெருமாளும் இவர் அபிப்பிராயம் அறிந்து உமக்கு வேண்டுவது என் என்று வினவி அருள
இவ்வாறு ஸ்ரீ உடையவர் திரு உள்ளத்திலே பெரிய ஆர்த்தியோடே விசாரித்து அருளி ஸ்ரீ நம்பெருமாளைத் திருவடி தொழுது
சம்சாரத்திலே அருசி பிறந்து வய பரிணாம காலாதி க்ரமணம் பிறந்தது என்று விண்ணப்பம் செய்து அத்யார்த்தராய் நிற்க

காலத்துக்கு நாம் அன்றோ கடவோம்-இன்னும் சிறிது காலம் உம்மைக் கொண்டு இவ் வுலகம் திருத்தப் பார்த்தோம் –
அறப் பதறினீரே-என்று திரு உள்ளம் உடை குலைப் பட்டு -இனி உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டு அருள –
அதுக்கு ஸ்ரீ உடையவரும் அடியேனைக் காலக் கழிவு செய்யாமல் -உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக
எஞ்ஞான்றும் விடாது ஒழிய வேணும் என்ன -ஸ்ரீ பெரிய பெருமாளும் உகந்து -சதுர்த்தசே அஹ்நி சம்பூர்ணே-என்று
நாள் கடலாகத் தம்பிக்கு இட்டது ஆகாமல் -சப்தாஹம் ஜீவிதாவதி -என்கிறபடியே கர்ம ஆபாச ப்ரக்ரிதித-என்று
இவருக்கு இற்றைக்கு ஏழாம் நாள் அப்படியே செய்கிறோம் என்ன –
ஸ்ரீ உடையவரும் நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா -என்ற ஹர்ஷ பிரகர்ஷத்துடன் -என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் எல்லாரும்
நான் பெற்ற லோகம் பெற வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் அப்படியே பெறக் கடவர்கள் என்று திருவாய் மலர்ந்து அருளி

ஸ்ரீ உடையவருக்குத் தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டம் பூவார் கழல் பிரசாதம் பிரசாதித்து அருளி விடை கொடுத்து அருள –
இவரும் மஹா பிரசாதம் என்று ஸார்வ பவ்மரான ராஜாக்கள் பக்கல் நின்றும் நாடு பெற்றவர்கள் பெரிய ப்ரீதியோடே
ராஜ பவனத்தில் நின்றும் புறப்படுமா போலே -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற
எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரான ஸ்ரீ ரெங்கராஜர் பக்கல் நின்றும் ஸ்ரீ திருநாடு ஆகிற மஹா ராஜ்யத்தைப் பெற்று
அந்த ராஜ குல மஹாத்ம்யத்தாலே வந்த ப்ரீதியுத்ருதி தோன்ற ஸ்ரீ ரெங்க ராஜதானியிலும் புறப்பட்டு திரு மடமே எழுந்து அருளி
அனைத்துக் கொத்தில் உண்டானவர்களும் சித்த மகிழ்ச்சியுடன் அனுப்பி அருளி -சிஷ்ய வர்க்கங்களாய் யுள்ளவர் எல்லாருக்கும்
ஒரு காலும் அருளிச் செய்யாத அர்த்த விசேஷங்களை எல்லாம் மூன்று நாளாக பிரசாதித்து அருளி –
இவ்வர்த்த விசேஷங்களை எல்லாம் நீங்களும் விஸ்வசித்து உங்களை பற்றினாருக்கும் பரம்பரையாய் உபதேசித்துப் போருங்கோள் என்று
அருளிச் செய்ய முதலிகள் எல்லாரும் அதி சங்கை பண்ணி இது என் என்று விண்ணப்பம் செய்ய –
இனி ஒளிக்க ஒண்ணாது என்று திரு உள்ளம் பற்றி -இற்றைக்கு நாலாம் நாள் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் ஏறப் போக
நினையா நின்றோம் -என்று அருளிச் செய்து அருள -இத்தைக் கேட்டு

முதலிகள் எல்லாரும் கடல் கலங்கினால் போலே கலங்கி ஸ்ரீ உடையவர் வ்யோகத்திலே ஆத்ம தியாகம் பண்ணக் கடவோம் என்று
தேறி இருந்தமையைத் திரு உள்ளம் பற்றி அருளி (அவர்கள் போர விஷண்ணராய்-இனி அடியோங்களுக்குச் செய்ய அடுப்பது என்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் )-ஸ்ரீ உடையவரும் -வாரி கோள் முதலிகாள்-நம்முடைய வ்யோகத்தில்
ஆத்ம தியாகம் பண்ணினார் உண்டாகில் -ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதமே -நம்மோடு அவர்களுக்கு சம்பந்தம் இல்லையாய்-
நித்ய ஸூரிகள் ஓலக்கத்திலும் புகுரப் பெறாதே நம் ஸ்ரீ சடகோபர் திரு உள்ளத்தையும் மறுத்தவர்களாய் அதிபதிக்கக் கடவீர்கள் என்று
அருளிச் செய்து -அவர்களைத் தேற்றித் தரிக்கப் பண்ணினார் –

அநந்தரம் -அத்யை வாஹங்க மிஷ்யாமி லஷ்மணே நகதரங்கதிம்-என்கிறபடியே தாமும் ஸ்ரீ ஆழ்வான் வழியே பின் சென்று
இத்தம் ராப்தே சபதி பரம வ்யோம சிஷ்டாக்ர கண்யே கூராதிஸே நிகம சிகர வியாக்ரியாலம் படத்வம் -சிஷ்யஸ் தோமான் சுருதி
குரு முகோங்கி கார்யேண சாகம் வின்யஸ் யோச்சை பரமகமதரோடு மைச்சத் யதீந்த்ர -என்றும்
காசாராதிம திவ்யஸூரி க்ருதி சத் சோபான பத்தாம் த்வய ஸ்ரீ மன் த்ரோபய பார்ஸ்வ தண்ட கடிதாம் ஸ்ரீ பாஷ்ய கீலஸ்திராம் –
நிஸ்ரேணிம் நிகிலோ ஜனஸ் ச பரம வ்யோமஸ் தலீ பிராபிகாம் ஸ்வ ஸ்வாசார்யா நிரூபிதார்த் தவசத ப்ராப்யாதி ரோஹேத் சதா -என்றும்
இத்யாசாஸ்ய சரஸ் சடாந்தகமுக ஸ்ரீ திவ்ய ஸூர் யாக்ருதீ ராசார்யஸ்ய சதத் பிரபந்த நிவ ஹைஸ் சார்த்தம் ப்ரதிஷ்டாப்யச-
ஸ்ரீ ரெங்காதி மதாமஸூ சவயம பூச்ச்ரீ திவ்ய ஸூரி வ்ரஜைஸ் சாகன் தத் பரமம் பதம் ஜிக்மி ஷுஸ் ஸ்ரீ மான் ச ராமானுஜ -என்கிறபடியே
இங்குச் செய்ய வேண்டும் கார்யங்கள் எல்லாம் செய்து தலைக் கட்டி க்ருதக்ருத்யராய் நாலாம் நாள்
அங்கே ஸ்ரீ திருநாடு ஏற எழுந்து அருளத் திரு உள்ளமாய் இருக்க

அவ்வளவில் பெரிய பெருமாளைத் திரு வாராதனம் பண்ணிப் போரும் ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் ஸ்ரீ பெரிய பெருமாள் பட்டர் முதலானோர்
ஸ்ரீ பெரிய பெருமாள் உடுத்துக் களைந்த பீதக வாடை சூடிக் களைந்த திவ்ய மால்யப்படி-சாத்துப்படிகள் அவர் பிரசாதம் தொடக்கமான
பிரசாத விசேஷங்களையும் போரத் தளிகையிலே எடுப்பித்துக் கொண்டு சர்வ வாத்ய கோஷத்துடன் கொண்டு வந்து பிரசாதித்தவற்றை
சிரஸா ஆதரித்து சேவித்து ஸ்வீ கரித்த அநந்தரம் அவர்களுக்கு உகப்பான பாஞ்ச ராத்ர சம்ஹிதைகளில் ஞான காண்டங்களை அனுசந்தித்து
சேவித்துக் கொண்டு இருந்து ஏவம் விதமான தூர்ய கோஷத்தைக் கேட்டு ஹ்ருஷ்டராய்
வைகுண்ட நிர்யாண நிரதராய்-அதுக்கு பிரயாண பாதேயமான த்வயத்தை ஆவ்ருத்தி பண்ணா நிற்கிறவர்

தடஸ்தரைக் கடாக்ஷித்து அருளித்
தாம்ரஸ்தமான கூடஸ்த ஸ்ரீ ஸூக்தியையும் ஸ்ரீ பாஷ்யத்தையும் ஷேமமான நிக்ஷேபமாக ஸ்தாபிக்கும் படி ஆஜ்ஜாபித்து –
ஸ்ரீ பாஷ்யத்தை வர்த்தித்து நடத்திக் கொண்டு போரும்படி ஸ்ரீ நடாதூர் ஆழ்வானைக் கடாக்ஷித்து அவருக்கு
சத் குர்வதாசம் சதி சிஷ்ய வர்க்கா நநன்யலப்யை ரதிகைஸ் ச சிஹ்னை ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனமாத்ம கீயம் யஸ்மை
சதத் தம்யதி சேகரேண-என்னும்படி ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தை பிரசாதித்து
அநந்தரம் முந்துற ப்ரசாதித்த வேதாந்தாசார்ய பதத்துக்கு மேலே -கிந்து பிரபத்தி பலதாரித விஷ்ணுமாய மத்வம்ஸ்ய ராஜ குல –
என்னும்படியான ராஜ குல மஹாத்ம்யத்தை யுடையராகையாலே பிரபத்தி அர்த்த பிரதிபாதகமாய் பிராமண சரமமான
ஸ்ரீ ஸூக்தி சிம்ஹாசனத்தையும் அந்தப் பெரிய பரிஷத்திலே பெரிய பட்டருக்கு இட்டு அருளி
ஸ்ரீ கந்தாடை ஆண்டானைக் கடாக்ஷித்து ப்ரமாத்ரு சரமமான தம்முடைய சரம விக்ரஹ கைங்கர்யத்தை கல்பித்து அருளி
திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலான முதலிகளைப் பார்த்து ஸ்ரீ பட்டருக்கு இஷ்டமாய் இருங்கோள் என்று அருளிச் செய்து
ஸ்ரீ கோயில் அனைத்துக் கொத்தையும் அழைப்பித்து அபராத ஸாதனம் பண்ணிக் கொண்டு வேண்டிக் கொள்ள
அவர்களும் -தேவரீருக்கு ஒரு அபராதம் உண்டோ -உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான தேவரீரை இழந்து
எங்கனே தரிப்போம் என்று கண் பனி சோர நிற்க
ஸ்ரீ உடையவரும் அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணி அரங்கன் இருக்க உங்களுக்கு ஒரு தாழ்வு இல்லை –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ கார்யம் ஆராயும் இடத்து ஸ்ரீ பட்டரை முன்னிட்டு ஆராய்ந்து போருங்கோள்-
ஸ்ரீ நம்பெருமாள் கைங்கர்யத்தைக் குறைவற நடத்திக் கொண்டு ஸ்ரீ வைஷ்ணவர்களையும் அரவணைத்துக் கொண்டு போருங்கோள்
என்று கல்பித்து அருளி அவர்களை ஸ்ரீ பட்டர் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளி ஸ்ரீ பட்டரைப் பார்த்து அருளி –
உமக்குத் தந்தையும் தாயுமாவாராய் ப்ரமேய சரமமான ஸ்ரீ பெரிய பெருமாள் திரு ஆராதனத்தைப் பெருக்க நடத்திக் கொண்டு
நம்முடைய தரிசனத்தையும் நன்றாக பராமர்சித்து நடத்திக் கொண்டு போரும் என்று நியமித்து அருளினார் –

அனந்தரம் சமூகத்தில் உண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து பின்னையும் அவர்களுக்கு அருளிச் செய்த படி –
ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்ம யாத்திரை ஈஸ்வர அதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா –
கரைந்தான் ஆகில் ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் அத்தனை –
இனி இவனுடைய தேஹ யாத்திரை கர்ம அதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை –
ஆகையால் உபய யாத்திரையிலும் இவனுக்கு அன்வயம் இல்லை என்று அருளிச் செய்ய

முதலிகளும்-ஆகில் எங்களுக்கு இருக்கும் நாளைக்கு கால ஷேபம் இருக்கும் படி எங்கனே என்ன –
ஸ்ரீ உடையவரும் உபாய அம்சத்தில் அந்வயியாதே ப்ராப்யமான பகவத் பாகவத கைங்கர்யத்தில் அந்வயியுங்கோள்-
ப்ரபந்ந அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவன மூன்று விஷயம் உண்டு –
அவை யாவன -அனுகூலர் என்றும் பிரதிகூலர் என்றும் அநுபயர் என்றும்-
அனுகூலராவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் / பிரதிகூலராவார் -பகவத் த்வேஷிகள் / அநுபயர் ஆவார் -சம்சாரிகள்
இதில் அனுகூலரைக் கண்டால் -சந்தன குஸூம தாம்பூலாதிகளைக் கண்டால் போலேயும்-நிலா தென்றல்களைக் கண்டால் போலேயும்
அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் உகந்து போரக் கடவன் –
பிரதிகூலரைக் கண்டால் சர்ப்ப அக்னிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திக்கக் கடவன்
அனுபயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணீ கரித்து வர்த்திக்கக் கடவன் –
அவர்கள் அநு கூலித்தார்கள் ஆகில் ஆத்ம ஞானத்தை உபதேசிக்கவும் –
அநு கூலியார்கள் ஆகில் ஐயோ என்று கிருபை பண்ணிப் போரவும்-

இப்படிச் செய்ய ஒட்டாது ஒழிகிறது அர்த்த காம பிராவண்யம்-
அர்த்த காமம் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அநாதரிக்குமாகில் ஸார்வ பவ்மனான ராஜ புத்ரனை ராஜ சந்நிதியில் பரிபவித்தால்
ராஜா வெறுத்து இருக்குமா போலே ஸ்ரீ எம்பெருமான் திரு உள்ளம் வெறுக்கும்
அர்த்த காமம் அடியாக பிரதி கூலரை ஆதரிக்குமாகில் ஸார்வ பவ்மனான ராஜாவின் மஹிஷீ ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடிப்பிச்சை
புக்கால் ராஜாவுக்கு அவத்யம் ஆகையால் ராஜா வெறுக்குமா போலே ஸ்ரீ எம்பெருமான் இவனை வெறுத்து இருக்கிறோம்
அர்த்த காமம் அடியாக அனுபயரை ஆதரிக்குமாகில் ரத்னத்துக்கும் பலகறைக்கும் வாசி அறியாதாப் போலே பிறந்த ஞானம்
கார்யகரம் ஆய்த்து இல்லை என்று ஸ்ரீ எம்பெருமான் இவனை அநாதரிக்கும் -என்று அருளிச் செய்து அருளினார் –
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ நம் பெருமாள் சந்நிதிக்கு ஸ்ரீ பட்டரைக் கூட்டிக் கொண்டு எழுந்து அருளிப் பெருமாளை சேவித்து
ஸ்ரீ பட்டருக்கு முன்னாகத் தீர்த்த பிரசாதங்களை ப்ரசாதிப்பித்து பின்பு தாமும் தீர்த்த பிரசாதம் பெற்று முதலிகளைக் குறித்து –
முன்னுக்குத் தர்சன ப்ரவர்த்தகர் ஆவார் இவர் என்று ஸ்ரீ பட்டரைக் காட்டி அருளி –
வாரீர் ஸ்ரீ பட்டரே-மேல் நாட்டிலே வேதாந்தி என்று பெரிய வித்வான் இருக்கிறான் என்று கேட்டோம் -நீர் அங்கேறப் போய் அவனை
நம் தர்சன ப்ரவர்த்தகனாம் படி திருத்தும் என்று அருளிச் செய்து ஸ்ரீ பட்டரையும் கூட்டிக் கொண்டு திரு மடமே எழுந்து அருளி –
ஸ்ரீ பாதத்து முதலிகள் எல்லாரையும் அழைத்து -நம்முடைய விஸ்லேஷத்தில் அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில் நம் ஆணை
என்று ஆஜ்ஜாபித்து எல்லார் கையாலும் தம் திருவடிகளைத் தொழுவித்து சூளூருவு கொண்டு
முதலிகளைத் தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி

ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்-ஸ்ரீ உக்கல் ஆழ்வான் -ஸ்ரீ கோமடத்து ஆழ்வான் -ஸ்ரீ சேட்டலூர் சிறியாழ்வான்-
ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான் முதலானவர்களை ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ எச்சான் -ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ தொண்டனூர் நம்பி -ஸ்ரீ மருதூர் நம்பி -முதலானவர்களை
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ பட்டர் -ஸ்ரீ கணியனூர் சிறி யாச்சான்-ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர் பெரியாண்டான் -சிறி யாண்டான் -முதலானவர்களை
ஸ்ரீ எம்பார் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் -ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் -ஸ்ரீ எங்கள் ஆழ்வான் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வான் -முதலானவர்களை
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான் -ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறி யாண்டான் -ஸ்ரீ அரணபுரத் தாழ்வான் -ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள் –
ஸ்ரீ முனிப் பெருமாள் -ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் முதலானவர்களை ஸ்ரீ நடுவில் ஆழ்வான் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
இன்னும் இருந்தவர்களை இருந்தவர்கள் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்

பின்பு ஸ்ரீ பட்டரைப் பார்த்து அருளி ஸ்ரீ கூரத்தில் ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானையும் போலேயும்-
ஸ்ரீ கூர குல திலகரான நீரும் ஸ்ரீ வாதூல குல திலகரான ஸ்ரீ கந்தாடை ஆண்டானும் நம்மடியாக உண்டான சவ்ப் ராத்ரத்தை யுடையராய் –
மச்சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் -என்னும்படியாய் இருங்கோள்-என்று அருளிச் செய்து -ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து –
படித்வா பாஷ்யம் தத் பிரவசனம் அசக்தவ் ஸ்டரி போர் கிரி ஸ்ரத்தா வாச பிரபு பரிசித ஸ்தாந நிவேஹ ப்ரபோ கைங்கர்யம் வா
பிரபதன மநோ ரர்த்த மனனம் ப்ரபந்ந நாம் மே பவது பரிசர்யா பரிசய குடீங்க்ருத்வா தஸ்மிந் யதுகிரி தடே நித்ய வசதிஷ்
ஷஷ்டர்த்தஸ் ஸ்ரீ ஸஸ்ய பிரபதன நவிதவ் சாதகமா -என்று இருக்கும் நாள் பண்ணலாம் கைங்கர்யங்கள் ஆறு உண்டு
அவை ஆவன-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை-
அதற்கு யோக்யதை இல்லாவிடில் அருளிச் செயலை ஓதியும் ஓதுவித்தும் போருகை-
அதுக்கும் யோக்யதை இல்லாவிடில் உகந்து அருளின நிலங்களில் அமுது படி சாத்துப் படி முதலானவற்றை
உண்டாக்கி நடத்திக் கொண்டு போருகை –
அதற்கும் யோக்யதை இல்லையாகில் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஒரு குடில் கட்டிக் கொண்டு இருக்கை-
அதற்கும் யோக்யதை இல்லையாகில் ஸ்ரீ த்வயத்தை அர்த்த அனுசந்தானம் பண்ணிப் போருகை-
அதற்கும் யோக்யதை இல்லையாகில் என்னுடையவன் என்று அபிமானிப்பவன் யாவன் ஒருவன் பரம பாகவதன்-அவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கிப் போருகை
என்றும் -இவற்றின் பிரிய -பிரியதர -பிரிய தர்மங்கள் இன்னது என்றும் -பிராப்தி பிரதிபந்தகமான –
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் வருந்தியும் பரிஹரித்துப் போருங்கோள் -என்றும் இவை முதலானவைகளாய் உள்ள
அநேக ஹிதங்களைப் ப்ரசாதித்து அவற்றை உப சம்ஹரித்து அருளினார் –

அநந்தரம் சகல மங்கள வாத்தியங்களும் ஆரவாரிக்க -அநேக திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனி எங்கும் பூரிதமாக
அலங்காரத் திரு மஞ்சனம் கண்டு அருளித் திரு ஒற்றாடை சாத்தி -திருப் பரி யட்டம் சாத்தி ஸூத்த ஆசமான பூர்வகமாக
நித்ய அனுஷ்டானங்கள் நடத்தி அருளுகையில் அசக்தி பாராமல் மார்க்கத்தையும் உத்திஷ்டமானராய் நின்றே செய்து அருளி
தத் சேஷத்யத்தையும் தலைக் கட்டி அருளி திருத் துவாதச நாமங்களையும் தரித்து அருளி -திரு மணி வடம் -திருப் பவித்ரம் –
திருமாலை பிரசாதம் -பரி யட்ட பிரசாதங்களை ஸ்வீ கரித்து-குரு பரம்பரா பூர்வகமாக ரஹஸ்யத்ரயத்தையும் சார்த்தமாக அனுசந்தித்து
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளை உத்தேசித்து தண்டனை சமர்ப்பித்து -முதலி களையும் அனுவர்த்தித்து அனுமதி கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்துக் கொண்டு பத்மானஸ்தராய் எழுந்து அருளி இருந்து
ஸ்ரீ பர வாஸூ தேவர் இடத்தில் பரம பக்தி நடந்து செல்ல

அநந்தரம் யோகத்தில் பரம யோகியான தம்மை பரம யோகி கம்ய விஷயமான தத் விஷயத்தில் விநியோகித்து பின்பு –
பத்ம நேத்ரேந்ய மீலயத்–என்கிறபடியே திருகே கண்களைச் செம்பளித்து அருளி பரவச காத்ரராய் –
ஸ்ரீ எம்பார் திருமடியிலே திரு முடியும் -ஸ்ரீ வடுக நம்பி திருமடியிலே திருவடிகளுமாக கண் வளர்ந்து அருளி –
மாக ஸூத்த தசம் யாந்து மத்யாஹனே மந்த வாஸரே -யோகி ராஜஸ் ஸ்வ போகீச பாவம் ஸ்வேபே சமப்யபாத்-என்னும்படியான திவசத்திலே
தம்முடைய பூர்வ அவதாரமான ஆயிரம் சுடர் வாய் அரவணையோடே நம்பி மூத்த பிரானைப் போலே ஸ்ரீ எம்பெருமானாரான இவரும்
ஸ்ரீ பாதித்து முதலிகள் ப்ரஹ்ம வல்லி பிருகு வல்லி சூழ் விசும்பு அணி முகில் முதலானவற்றை சேவித்து அருள
சிரஸ் கபாலம் பேதித்து ப்ரஹ்ம ரந்தரத்தாலே ஸ்ரீ உடையவர் திருநாட்டில் கூடி அருளினார்

இவ்விருத்தாந்தத்தை பின்னும்
பின்பும் அன்பருடன் களித்த சீர் பெரும்பூதூர் எதிராசன் இன்பமுடனும் இசைந்து ஒருநூற்று இருப்பது ஆண்டு இங்கு இருந்ததன் பின்
அன்பான ஆழ்வான் ஆண்டான் நல் குமரற்கு அடியா முடி புனைந்து மன்பதையை வாழ்வித்தாங் கமருமென வாழ்வித்து அருளா -என்றும்
ஆராமம் சூழ் அரங்கர் தமை அலர் மா மகளை அடி இறைஞ்சி தாரீர் சரணம் எனத் தந்தோம் எனலும் எதிராசன் பாரோர் பரவும் பாகவதர்
பிரிவால் பரிவில் படர் கூரச் சீரார் திரு நாடு அடைந்து இருந்த சீடனுடன் சேர்ந்தனனால்-இப்படி சொல்லப்படுமாதான வைபவத்தை யுடைய இவரும் –
யதா பாதோ தரஸ் த்வசா நிர்முக்த -என்றும் -யாவஜ்ஜிஹா மிகாத்ராணி ஜீர்ணான் த்வசமி வோரக-என்றும் சொல்லுகிறபடியே
ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸூகே நேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய -என்று
ஸூகமாகவே திரு மேனியை உபேக்ஷையோடே விட

அநந்தரம் ஸ்ரீ கந்தாடை ஆண்டான் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் -ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ வடுக நம்பி முதலான முதலிகள்
எல்லாரும் கோஷித்துகே கொண்டு வேர் அற்ற மரம் போலே விழுந்து கிடந்தது துடித்து -திரு மிடறு தழு தழுப்ப திரு மூக்கு வெப்படிக்க
அவசராய்க் கிடந்தது -இட்ட கால் இட்ட கைகளாய்ச் சிந்தித்துத் திகைத்து -இணை மலர்கே கண்ணீர் ததும்ப தாரா வர்ஷகமாக திரு முத்து
உதிர்த்து பிரலாபித்து -இவர் அவதாரத்தில் தீர் லப்தா -இவர் அந்திம தசையில் தர்மோ நஷ்டா என்றும் இப்படி வருவதே என்று
ஆச்சர்யப்பட்டு விஷண்ணாராய் நிற்க

அவ்வளவில் பெருமாளும் நம் உடையவரை இழந்தோமே -என்று திரு உள்ளம் நொந்து -நமக்கு செவ்வாய் வக்ரமாய்த்து -என்று
சுருள் அமுதும் அமுது செய்யாமல் ஸ்ரீ நாச்சிமாருடனே புறப்பட்டு அருள -அவ்வளவில் ஸ்ரீ பராங்குசன் பரகாலன் முதலான ஆழ்வார்கள்
பதின்மர்களும் சேவித்துச் செல்ல ஆயிரக்கால் திரு மண்டபத்திலே எழுந்து அருளி இருந்து திரு முத்தின் பணி காளாஞ்சி திரு வெண் சாமரம்
திரு வாலவட்டம் திரு வெண் கொற்றக் குடை வெண் முத்தின் கலசம் திரு மேல் கட்டு முத்துத் தாமம் தொடக்கமானவற்றையும்
உடுத்துக் களைந்த பீதகவாடை -சூடிக் களைந்த தொடுத்த துழாய் மலர் -எண்ணம் சுண்ணம் எல்லாம் பொன் தளிகையிலே
கொண்டு போம்படி ஸ்ரீ உத்தம நம்பிக்கு விடை கொடுத்து அருள

ஸ்ரீ நம்பியும் அப்படியே தரித்துக் கொண்டு ஸ்ரீ பெருமாள் பரிகரம் அனைத்துக் கொத்துடன் சகல வாத்யத்துடனே திரு மடத்து வாசலிலே செல்ல –
அது கண்டு முதலிகள் எல்லாம் தேறி நின்று -இனிச் செய்ய வேண்டிய க்ருத்யத்தை செய்ய வேணும் -என்று
ஸ்ரீ எம்பெருமானாருடைய விமல சரம விக்ரஹத்தை தூயதாக நீராடப் பண்ணிவைத்து அலங்கரித்து கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரங்களையும் சாத்தி
ஸ்ரீ பெருமாள் சாத்திக் களைந்து வரவிட்டு அருளின ஸ்ரீ பெருமாள் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு திரு முடியில் சாத்தி –
அவர் மார்வு அணிந்த ஸ்ரீ வனமாலையையும் சாத்தி அலங்கரித்து ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் தங்கள் கண்ணிலும் மார்பிலும் நெஞ்சிலும்
ஒற்றிக் கொன்டு ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய்
ஐயோ கண்ணபிரான் அறையோ முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே என்று கை எடுத்து
போர பெரு மிடறு செய்து கூப்பிட்டு மூர்ச்சித்துக் கிடக்க-அருகு இருந்த முதலிகள் வந்து எடுத்துத் தேற்ற தேறி நின்று
ஸ்ரீ உடையவருக்குச் சாத்திக் களைந்து தத் சேஷமாய் இருந்துள்ள எண்ணெய் சுண்ணம் திரு மண் ஸ்ரீ சூர்ணங்கள் எல்லாரும் பிரசாதப்பட்டு
தீர்த்தம் கொண்டு -ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருக் கையாலே ஸ்ரீ ஆளவந்தாருக்குப் போலே ஸ்ரீ உடையவருக்கு
ப்ரஹ்ம மேதத்தாலே சமஸ்கரித்து பீடயாநமான திவ்ய விமானத்தில் ஏறி அருளப் பண்ணி சகல வாத்தியங்களும் முழங்க
ஸ்ரீ பெருமாள் பரிகரமடைய சத்ர சாமர தால வ்ருந்தாதிகளைத் தரித்து சேவிக்க –
அவ்வளவில் ஸ்ரீ ஆட்கொண்ட வில்லிசீயர் யதிவர சீயர் உள்ளிட்ட ஏழு நூறு சீயர்களும் ப்ரஹ்ம வல்லி பிருகு வல்லி நாராயண அநுவாகம்
முதலான உபநிஷத்துக்களை ஓத –
ஸ்ரீ பட்டர் -ஸ்ரீ கந்தாடை யாண்டான் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வான் உள்ளிட்ட முதலிகளும் தத் தத் பரிசர்ய சாதனங்களை தரித்துக் கொண்டு
பரிவுடன் பரிவ்ருத்தராய் சேவித்துக் கொண்டு வர
மற்றும் உண்டான உபவீத தாரிகளான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒன்பதினாயிரம் பேரும் தத் பாவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பன்னீராயிரம் பேரும்
ஸ்ரீ அருளிச் செயல் மூவாயிரமும் முன்னடி பின்னடியாகச் சேவிக்க
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் பரிகரமான திருவாய் மொழி அரையர் ஸ்ரீ திரு நறையூர் அரையர் -ஸ்ரீ அழகிய மணவாள அரையர் –
முதலான எழுநூறு திருவாய் மொழி விண்ணப்பம் செய்யும் தம்பிரான்மார் பண்ணிசை தாளத்துடன் திருவாய் மொழி பாட
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் -ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார் -ஸ்ரீ பொய்யில் வள்ளலார் தொடக்கமானவர்கள் ஸ்ரீ உடையவர் நூற்றந்தாதி சேவிக்க
ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பிள்ளான் உள்ளிட்டவர்கள் ததிக ப்ரீதி ஹேதுவான ஸ்ரீ ஸ்தோத்ர ஸ்ரீ கத்யங்களை சேவிக்க –
ஸ்ரீ வடுக நம்பியும் ஸ்ரீ ராமானுஜ தாசரான ஸ்ரீ கோமடத்து சிறி யாழ்வானும் ஸ்ரீ உடையவர் பிரபத்தியை அனுசந்தித்துக் கொண்டு வர
திரு வீதி எங்கும் கோடித்துப் பொரியும் புஷ்பமும் சிதற -நடை பாவாடை இட்டு கரும்பும் குடமும் ஏந்த

திருப்பதியில் ஸூ மங்கலிகள் மங்கள தீபம் ஏந்தி முன்னே செல்ல இருபக்கமும் சாமரம் இரட்டிப்பிக்க -வெள்ளை வட்டம் இட-
தரிசனத்தில் நம் ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்று ஒற்றைத் திருச் சின்னம் பரிமாற
திரு வீதிகள் தோறும் எழுந்து அருளுவித்துக் கொண்டு போய் -ஸ்ரீ பெரிய பெருமாளும் அந்தத் திருமேனியில் அபிமத விஷயத்தில்
அழுக்கு உகக்குமா போலே அதி சபலராய் -மங்க ஒட்டு -என்னும்படி இவர் விக்ரஹத்தை ஆதரித்து புறம்பே கொண்டு போக ஒட்டாமல் –
அந்தப்புர மஹிஷிகளை தத் பரிசாரத்திலே ஆராமத்திலே அடக்கி வைக்குமா போலேயும்-நிதியை உள்ளே இட்டு வைக்குமா போலேயும்
ஸ்ரீ லஷ்மீ துல்யராம்படியான ஸ்ரீ லஷ்ம்யங்களை யுடையராய் விலக்ஷண நிதி போலே-ஸ்ரீ இராமானுசன் என் தன் மா நிதி —
ஸ்ரீ இராமானுசன் என் தன் சேம வைப்பு-என்னும்படியான இவர் திருமேனியையும் ஸ்ரீ ஆழ்வார் திருமேனியை ஆவரணத்துக்கு உள்ளே
திருப் பள்ளி படுத்தால் போலே ஆவரணத்துள்ளில் உட்கோப்பில் அந்தரங்கமாக கௌந்தேயனான அர்ஜுனனைப் போலே
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருமுடி காத்து நோக்க -தத் அனுகுணமாக யதி ஸம்ஸ்கார விதி அடங்கச் செய்து
கனித்துத் திருப் பள்ளி படுத்தினார்கள்

இப்படி நிதியை நிஷேபித்த அநந்தரம் ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமாருடன் கூடத் திரு மஞ்சனம் கண்டு அருளித்
திரு முத்து உதிர்த்துத் திரு முகம் கன்றிச் சுருள் அமுதும் அமுது செய்யாமல் அலப்புப் பட விடத் திரு உள்ளமாய் –
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் ஸ்ரீ பட்டர் முதலானோரைப் பார்த்து நம்முடைய அவப்ருத உத்சவம் கொண்டாடுமா போலே
நம் ஸ்ரீ உடையவருக்கும் அவப்ருத உத்சவம் கொண்டாடுங்கோள்-என்று திரு உள்ளம் பற்றிச் சேர்த்தியிலே ஏறி அருளி
ஸ்ரீ உடையவருக்கு அக்கார வடிசில் தளிகை அனுப்பி அருளினார்
இவ்வாறு செய்ய வேண்டிய க்ருத்யங்களை எல்லாம் செய்து பெருக்கத் திரு அத்யயனமும் நடத்தி அருளினார்கள்
அநந்தரம் ஸ்ரீ கந்தாடை ஆண்டான் தொடக்கமான அனைவரும் புத்ர சிஷ்யர் செய்யும் கார்யங்களை எல்லாம் செய்து கொண்டு
அவப்ருத ஸ்நானமாக எல்லாரும் நீராடி அருளித் தத்விஸ்லேஷ அசஹராய்ப் பரிதபித்துக் கொண்டு இருக்க –
பின்பு ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ நம்பெருமாள் அனுமதியுடன் ஸ்ரீ எம்பெருமானாரை எல்லாரும் சேவித்து உஜ்ஜீவிக்கும் படி மீளவும்
அவ்விடத்திலே ஆவிர்ப்பவித்தால் போலே இருக்க அர்ச்சாவதாரமாக ஏறி அருளப் பண்ணி பிரதிஷ்டிப்பித்து அருளினார்
ஸ்வ அவதார ஸ்தலே அர்ச்சா அபூத் ஸ்ரீ ரெங்கேசய தீஸ்வர -யன்முதே தங்குணா வாசம் ராமானுஜ குரும் பஜே-என்றார்கள் –

அநந்தரம் சாஸ்த்ரார்த்தமான கைங்கர்யங்களையும் ஆப்தரான தங்கள் ஸமாப்தமாக நடத்தி-ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானும்
மிகவும் ஸுப்ராத்ரத்தை யுடையராய் -ஸ்ரீ உடையவர் காலத்தில் அர்த்த விசேஷங்களையும் ஒருவருக்கு ஒருவர் உசாவிக் கொண்டு –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதிகளுடைய திரு புனர்வசாதி திரு நக்ஷத்ரங்களோ பாதியும் -ஸ்ரீ ஆழ்வாராதிகளுடைய ஸ்ரீ சரவணாதிகளோ பாதியும்
இவருடைய சித்திரையில் திருவாதிரையையும் மற்றும் மாசம் தோறும் வருவதாக அந்தத் திரு நக்ஷத்ரத்தையும்
மஹா உத்சவமாக நடத்திக் கொண்டு வாசா மகோசரமான தத் வைபவங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு
ஸ்ரீ கிடாம்பி யாச்சான் தொடக்கமானவரோடே பாடாற்றிக் கொண்டு இருந்தார்கள் –

அநந்தரம் ஸ்ரீ திருவேங்கட நாட்டின் நின்றும் ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ குஹ தாசர் முதலான முதலிகளையும் கூட்டிக் கொண்டு
ஸ்ரீ அனந்த அம்சமான இவர் திரு அவதார சமாதியை ஆராய்ந்து அறியும் படி எழுந்து அருளி திருக் காவேரி அருகே பரந்து இருக்கிற
தத் ஸூசகங்களைக் கண்டு எழுந்து அருளினபடி அறிந்து சோகாவிஷ்டராய் -அநந்தரம் ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ஆண்டானையும் கண்டு
ஆஸ்வசித்து உடனே ஊர் ஏற மீண்டு எழுந்து அருளினார்
அநந்தரம் அப்படியே கீழைத் திக்கில் சோழ வளநாட்டுத் திருக் கண்ணபுரம் முதலான திருப்பதிகளில் ஸ்ரீ எச்சான் முதலானவர்களும்
தெற்குத் திக்கான பாண்டி நாட்டு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி திருக் குமாரரான ஸ்ரீ யமுனாச்சார்யர் சொக்கத்தேவர்-
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரரான ஸ்ரீ சுந்தரத் தோளுடையார் முதலானவர்களும்
மேல் நாட்டிலும் ஸ்ரீ சோமாசி ஆண்டான் ஸ்ரீ மருதூர் நம்பி -ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலானோரும் –
மற்றும் அங்கே ஸ்ரீ எம்பெருமானாராலே திருத்தப்பட்ட ஸ்ரீ திரு நாராயண புரம் முதலான ஸ்தலங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
மற்றும் உண்டான தேசாந்திரஸ்தர் எல்லாரும் திரண்டு பெரும் கூட்டமாக ஸ்ரீ கோயிலிலே வந்து
ஸ்ரீ எம்பெருமானாருடைய விஸ்லேஷத்தாலே மிகவும் கிலேசித்து

அநந்தரம் ஸ்ரீ பட்டரை சேவித்து தங்கள் வியசனம் எல்லாம் தீர்ந்து ஸ்ரீ பட்டரையே இஷ்ட தேவதையான
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே கண்டு -தாமதாமுக்கு வேண்டும் இஷ்டார்த்தங்களையும் கேட்டுக் கொண்டு தத் லாபத்தாலே
ஸ்ரீ பராசார்ய பட்டார்யா சரணவ் ஸம்ஸ்ரயே மஹி யத் வக்த்ர ரங்கே ரங்கேச கோஷ்ட்யாம் ப்ராஹ்மீ ப்ரந்ருத்யதி -என்றும்
பிரமாண நக நிரப்பிண்ண வாதி மத்தேப மஸ்தக ராஜதே நிகமாங்கர்ஜன் ஸ்ரீ பராசர கேஸரீ -என்றும்
ஸ்ரீ பராசார்ய பட்டார்யாம் பூயோ பூயோ நமாம்யஹம் யதாத்மநாசவயம் ரங்கீ பேஜே கூரேச புத்ரதாம்-என்றும்
இத்யேவமாதி ஸூக்திகளையும்-தத் விஷயத்தில் அனுசந்தித்துக் கொண்டு தத் அநுஜ்ஜையோடே தம்தாமூர்களிலே சேர்ந்தார்கள்

சம்சார ஸ்திதிய ருசி நிவேதனமும் -தத் அநு குணமான பகவ துக்தாந்தி மதின நிச்சயமும் -சரம காலத்து அளவும் ஸ்வ அபிமான
அந்தர்பூதரான வர்களுக்கு உபகார அநு குணமாக வ்ருத்தி விசேஷ உபதேசமும் -பரிஹரணீய வ்ருத்தி விசேஷ உபதேசமும் –
சரம காலத்தில் ஸ்வ அபிமத சரம அதிகாரி ஸ்பர்ச விசேஷமும் -திரு முடியைப் பற்றி பூர்வாச்சார்யர்கள் விளங்கத்
திருவடிகளைப் பற்றி அபராச்சார்யர்கள் விளங்கப் பூர்வா பராசர்ய ரூப ஹார நாயக ரத்னமான ஸ்ரீ உடையவர்க்கே உள்ளது ஓன்று இறே
இத்தால் ஸ்ரீ ராம கிருஷ்ண சரிதங்கள் போலே ஸ்ரீ ராமாநுஜாய சரிதமும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சதா அனுசந்தேயாம் என்றதாய்த்து

ஸ்ரீ எம்பெருமானார் திரு நக்ஷத்ரம் சித்திரையில் திருவாதிரை

இவர் தனியன் -யோ நித்யம் அச்யுத- இத்யாதி -பிரசித்தம் இறே

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: