ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் –ஸ்ரீ எம்பெருமான்கள் ஆச்சார்யர்கள் சிஷ்யர்கள் பிரகாசிப்பித்த பிரபாவங்கள்–

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ வடுக நம்பி வைபவம்-

இவர்களில் ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே உபாயம் உபேயம் என்று விஸ்வசித்து அவர் திருவடி நிலைகளையே
திரு ஆராதனம் பண்ணிப் போருவர் -இப்படி இருக்கிற ஸ்ரீ வடுக நம்பி ஒரு பயண கதியில் ஸ்ரீ உடையவர் திரு ஆராதனத்தையும்
தம்முடைய திரு ஆராதனத்தையும் சேர எழுந்து அருளிப் பண்ணுவித்துக் கொண்டு வர -ஸ்ரீ உடையவர் கண்டு –
ஸ்ரீ வடுகா இது என் செய்தாய் என்ன -இவரும்-உங்கள் தேவரில் எங்கள் தேவருக்கு வந்த குறை என் என்று விண்ணப்பம் செய்தார் –
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ உடையவருடன் ஸ்ரீ பெருமாளை சேவிக்கப் போனாலும் ஸ்ரீ உடையவர் விக்ரஹத்தையே சேவித்துக் கொண்டு போருவர் –
ஒரு நாள் எம்பெருமானார் இத்தைக் கண்டு ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருக் கண் அழகைப் பாராய் என்ன –
இவரும் ஸ்ரீ பெருமாள் திருக் கண் அழகையும் ஸ்ரீ உடையவர் கண் அழகையும் பார்த்து -என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று
ஒன்றினைக் காணாவே என்ன -ஸ்ரீ உடையவரும் இது ஓன்று இருந்தபடி என் -என்று உகந்து
ஸ்ரீ வடுக நம்பியை பூர்ண கடாக்ஷம் செய்து அருளினார் –

ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் அமுது செய்து அருளி தளிகைப் பிரசாதம் பிரசாதித்தால்-இரண்டு திருக் கைகளாலும் ஏற்றுக் கொண்டு
பிரசாத ஸ்வீ காரம் பண்ணித் தம் திரு முடியில் திருக் கைகளைத் தடவிக் கொண்டு போருவர் –
இத்தை ஒரு நாள் ஸ்ரீ உடையவர் கண்டு கனக்கக் கோபித்து -ஸ்ரீ வடுகா கையைக் கழுவிக் கொள் என்ன -கழுவிக் கொண்டு –
மற்றை நாள் ஸ்ரீ நம்பெருமாள் அமுது செய்து அருளுகிற காலத்தில் ஸ்ரீ உடையவருடன் சென்ற அளவிலே ஸ்ரீ உடையவரும்
தமக்கு பிரசாதித்த ஸ்ரீ பெருமாள் பிரசாதத்தை தாமும் ஸ்வீ கரித்து அருளி – வடுகா இதோ -என்று இவரும் ப்ரசாதிக்க
இவரும் இரண்டு திருக் கைகளாலும் ஏற்றுக் கொண்டு பிரசாதப்பட்டு-ஸ்ரீ வைஷ்ணவர் திருக் கை விளக்க ப்ரசாதிக்கத்
திருக் கை விளக்கிக் கொண்டார் -ஸ்ரீ உடையவர் இது கண்டு இது என் செய்தாய் வடுகா என்ன –
நேற்று அருளிச் செய்தபடி செய்தேன் என்றார் –
ஸ்ரீ உடையவரும் இது கேட்டு உமக்குத் தோற்றோம் -என்று அருளினார் –

ஸ்ரீ வடுக நம்பி ஒரு நாள் ஸ்ரீ உடையவருக்குப் பங்காக பால் அமுது காய்ச்சா நிற்க ஸ்ரீ பெருமாள் பெரிய திருநாளில்
உடுத்து முடித்துப் பூண்டு புறப்பட்டு அருள ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பெருமாளை சேவிக்கப் புறப்பட்டு –
ஸ்ரீ வடுகா பெருமாளை சேவிக்க வா என்ன -ஸ்ரீ நம்பியும் உம்முடைய பெருமாளை சேவிக்க வந்தால் –
என்னுடைய பெருமாளுக்குக் காயா நிற்கிற பால் அமுது பொங்கிப் போம் -வரக் கூடாது என்று அருளினார்
ஸ்ரீ வடுக நம்பி அகத்தே பூர்வ சம்பந்திகளாய் இருப்பார் சிலர் வந்து தங்கிப் போக -அகத்தை எல்லாம் சுற்றிச் சோதித்து
தத் ஸ்ப்ருஷ்ட பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டுப் பூசி -இதற்கு பிராயச்சித்தம் என் என்று விசாரித்து –
ஸ்ரீ முதலியாண்டான் புழக்கடையில் கழித்துக் கிடந்த பாண்டங்களைக் கொண்டு போய் விநியோகம் கொண்டார்
ஆகையால் ஆச்சர்ய சம்பந்தம் உடையார் எல்லைக்கு உட்பட்டதில் அபாவநத்வ புத்தி இன்றியே ஸூபாவநத்வ புத்தி முற்றின படி
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதம் அல்லது மாற்று ஒருவர் ஸ்ரீ பாதம் கொள்ளார் -ஸ்ரீ தீர்த்த நியதியும் இவருக்கே உள்ளது ஓன்று இறே-
இப்படி தீர்த்த நியதி உடையராய் அவர் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்ரீ சாளக்ராமத்தில் தாம் சேர்த்த தனமாக சேர்த்து வைத்துப் பேணிக் கொண்டு
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளையே திருவாராதனமாக உடையராய் அவை தன்னையே அங்கே ப்ரதிஷ்டிப்பித்து நோக்கிக் கொண்டு போந்து
தம் சரம திசையிலும் தமக்கு அந்தரங்கரான சரம அதிகாரிகளுக்கும் தஞ்சமாகக் காட்டிக் கொடுத்து –
சீர்த்த தனம் இது வருந்தியும் பேணிக் கொண்டு போருங்கோள் என்று அடைக்கலம் காட்டிக் கொடுத்து அருளினார் –

————————————-

ஸ்ரீ அனந்தாழ்வான் வைபவம்

ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ ராமாநுசப்புத் தேரி கட்டி வைக்கும் போது மண் சுமாவா நிற்க -பிள்ளைகளில் ஒருவர் சென்று கூடையை வாங்கப் புக –
நான் அத்தை விடில் இளைப்பன்–நீ இத்தை தொட்டில் இளைப்புதி என்று அருளிச் செய்ய –
இளைப்பாகாது என்று பிள்ளை பின்னையும் கூடையை வாங்கப் புக -ஆகில் நான் ஜீவிக்கிற ஜீவனத்தையும் வாங்க வேணுமோ –
நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கிக் கொண்டு சுமக்க மாட்டாயோ என்று அருளினார்
பின்னையும் ஒரு நாள் கர்ப்பவதியான தம் தேவிகள் மேலே மண் சுமத்தா நிற்க இது ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஒரு பிள்ளையாய்
எதிரே வந்து கூடையை வாங்கிக் கொண்டு போக தேவிகள் கடுக வருமது கண்டு – இது என் கடுக வருகிறாய் -என்ன –
அவளும் ஒரு பிள்ளை எதிரே வந்து கூடையை வாங்கிக் கொண்டு போகிறான் -என்று சொல்ல -கேட்டு உடனே சென்று கண்டு –
கைங்கர்ய விக்ந காரீ -நீ கூடையைத் தொடாதே கொள்-என்று கொட்டு எடுத்து அடிக்கப் புக
ஸ்ரீ திருவேங்கடச் செல்வன் ஓடிச் சென்று ஸ்ரீ கோயிலிலே புகுந்தான் என்பர்கள் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திரு நந்தவனத்தில் போகி சந்தஷ்டமாக-பின்னையும் போய் நீராடிக் கைங்கர்யத்தில் போர-
ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பார் -விஷம் தீர்க்கப் பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்று அத்தை நிவர்த்திப்பித்து அருளினார் –
பின்பு ஸ்ரீ கோயில் எழுந்து அருளினவாறே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவாய் மலர்ந்து விஷம் தீர்க்க வேண்டா என்று என் நினைத்துச் சொன்னீர்
என்று கேட்டருள இவரும் கடியுண்ட பாம்பு வலிதாகில் திருக்கோணேறியிலே தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானை சேவிக்கிறேன் –
கடித்த பாம்பு வலிதாகில் விரஜையில் தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறேன் என்று இருந்தேன் என்று விண்ணப்பம் செய்தார் –
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ கோசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுத் திரு போனகம் கட்டிக் கொண்டு போய் அமுது செய்யப்
புக்கவாறே பட்டை அடங்களும் சிற்று எறும்பாய் கிடக்க அத்தைக் கண்டு துணுக் என்று தம் முதலிகளைப் பார்த்து
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -என்னுமவர்களிலே சிலராய்த்து இவர்கள் -இப்படியே கொண்டு போய்
ஸ்ரீ திருமலையில் வைத்து வாருங்கோள் என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ அனந்தாழ்வான் யமுனைத் துறைவனிலே திருமாலை கட்டா நிற்க ஸ்ரீ திருவேங்கடமுடையான் அருள்பாடிடப் பேசாதே இருந்து
திருமாலை சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கவாறே ஸ்ரீ திருவேங்கடமுடையானும் -நாம் அழைக்க ஸ்ரீ அனந்தாழ்வான் நீர் வாராது இருந்தது என் –
என்று திரு உள்ளமாக-இவரும் கருமுகை மொட்டு வெடியா நிற்க எனக்குத் தேசரீரைக் கொண்டு கார்யம் என் என்றார் –
ஸ்ரீ திருவேங்கடமுடையானும் -ஆகில் நாம் உம்மை இங்கு நின்றும் போகச் சொன்னோமாகில் நீர் செய்தவது என் என்று திரு உள்ளமாக
இவரும் பரன் சென்று சேர் திருவேங்கடம் என்கிறபடியே தேவரீர் அன்றோ வந்தேறிகள் –இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ –
தேவரீர் ஒரு கிழமை முற்பட்டார் அத்தனை -இவரும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயித்தோம் அத்தனை அன்றோ என்று விண்ணப்பம் செய்தார்

—————————————————

ஸ்ரீ கூரத்தாழ்வான் வைபவம் –

இப்படிப்பட்ட சிஷ்ய சம்பத்துடன் ஸ்ரீ உடையவர் வாழ்ந்து வரும் காலத்திலே ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்யாதே
ஸ்ரீ நம்பெருமாள் சந்நிதியில் சென்று சேவித்து இரா நிற்க ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வான் நீ ஓன்று சொல்லுவான் போல் இருந்தாயீ -என்று
திரு உள்ளமாய் அருள -இவருமொரு ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்து உபந்யஸிக்க –
உமக்கு வேண்டியது எல்லாம் தருகிறோம் -வேண்டிக் கொள்ளும் -என்று உகப்பின் மிகுதியால் திருவாய் மலர்ந்து அருளிச் செய்ய –
ஸ்ரீ ஆழ்வானும் -நாயந்தே-அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே என்ன
ஸ்ரீ பெருமாளும் -அப்படி அன்று -இப்போதே வேண்டிக் கொள்ளும் -நம் பெண்கள் ஆணை -நம் இராமானுசன் ஆணையே தருகிறோம் –
என்று திரு உள்ளமாக -ஸ்ரீ ஆழ்வானும் த்வத் அனுபவ விரோதியான இச் சரீரத்தை விடுவித்து த்வத் அனுபவத்தை தந்து அருள வேணும் –
என்று அபேக்ஷிக்க -ஸ்ரீ பெருமாளும் -அத்தை ஒழியச் சொல்லும் என்ன -இவரும் தாம் வேண்டும் காமமே காடடும் கடிது-என்கிறபடியே
அடியேன் அபேக்ஷித்தத்தை பிரசாதிக்க வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் உமக்கும் உம்முடைய சம்பந்தம் உடையாருக்கும் ஸ்ரீ பரமபதம் தந்தோம் -என்று அருளிச் செய்து அருளி
திருப் பரியட்டமும் தளிகைப் பிரசாதமும் பூம் தண் மாலைத் தண் துழாயும் திருக் கைச் சிறப்பும் ப்ரசாதித்து விடை கொடுத்து அருளினார் –
ஸ்ரீ ஆழ்வான் அர்ச்சிராதி கதி மார்க்கத்துக்கு பிரதம அலங்காரம் போலே இருக்கப் புறப்பட்டுத் தம் திரு மாளிகையிலும் புகுராதே
ஸ்ரீ ஆழ்வார் திருமாளிகையிலே புற வீடு விட்டு எழுந்து அருளி இருந்தார் –

ஸ்ரீ உடையவரும் இத்தைக் கேட்டு உடுத்த காஷாயத்தை வாங்கி ஆகாசத்தே ஏற எறிந்து ஏற்றுக் கொள்ள –
ஸ்ரீ பாதத்து முதலிகள் -இது என் சீயா என்று கேட்க –
உடையவரும் நமக்கும் ஸ்ரீ ஆழ்வான் சம்பந்தம் உண்டே -ஸ்ரீ பரமபதம் பெறலாம் அன்றோ என்று அருளிச் செய்தார் –
ஆகையால் சதாச்சார்ய சம்பத்தோடே சச் சிஷ்ய சம்பத்தோடு வாசி இல்லை இறே –
ஸ்ரீ உடையவரும் சோகாவிஷ்டராய் ஸ்ரீ பாதித்து முதலைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு ஸ்ரீ ஆழ்வான் இருந்த இடத்தே ஏறச் சென்று –
ஸ்ரீ ஆழ்வான் நீர் இப்படிச் செய்து அருளலாமோ -என்ன ஸ்ரீ ஆழ்வானும் பேசாதே இருந்தார் –
ஸ்ரீ உடையவரும் -ஸ்ரீ ஆழ்வான் உமக்கு முற்பட வேண்டும் அபிப்பிராயம் என் -பேசாது இருக்கிறது என் என்று கேட்டருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பரமபதத்தில் நடக்கும் அடைவு கேட்டுக்கு அஞ்சி என்ன -ஸ்ரீ உடையவரும் அது சொல்லிக் காணீர் என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் -முடிவுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள என்று முற்பட்டவர்கள் நித்ய ஸூரி களுடன் பிற்பட்டவர்களை
எதிர் கொள்ள வருவார்கள் -அது அடியேன் பிற்படில் அடைவு கேடாம் என்ன

ஸ்ரீ உடையவர் அது கேட்டு -ந சாஸ்திரம் நைவ ச க்ரம-என்று அடைவு கெட்டு இருக்கும் போக விபூதியில்
நீ அடைவு தேடுவதே -இது ஒரு சேஷத்வம் இருந்தபடியே -என்று போர வித்தராய் திரு முத்து உதிர்த்து இவருக்கு ஓடுகிற
நினைவை அறிந்து இவர் திருச் செவியில் திரு த்வயத்தை அருளிச் செய்ய -முதலிகளும் இப்போதாக இது என் என்ன –
நீங்கள் அறியீர்களோ -ராஜ குமாரனுக்குக் கற்பூர நிகரம் இல்லாத போது நாக்கு வறளுமா போலே இவருக்கு த்வயம் இல்லாத போது
நாக்கு வறளும் -என்று அருளிச் செய்து ஸ்ரீ ஆழ்வானை அணைத்துக் கொண்டு விம்மல் பொருமலாய்த் திரு உள்ளம் உடை குலைப்பட்டு –
ஸ்ரீ ஆழ்வான் என் உயிர்நிலையான உம்மை இழந்து எங்கனம் தரிப்பேன் -என்னையும் உடன் கொண்டு போகத் திரு உள்ளம் பெற்றிலீர் –
விட்டுப் போக உமக்கு ருசிப்பதே – ஸ்ரீ பரமபத நிலையான பக்கல் சங்கம் பும்ஸாம் த்ருஷ்ட்டி அபஹாரியான ஸ்ரீ பெருமாள் பக்கல்
சங்கத்தை அறுத்து உம்மை முந்துறப் பண்ணுவதே -ஸ்ரீ பரமபத நாதனும் அங்குள்ள நித்ய முக்தரும் என்ன பாக்யம் பண்ணினார்களோ –
இங்கு உறங்குகின்ற ஸ்ரீ பெருமாளும் இங்கு உள்ள நாங்களும் என்ன பாபம் பண்ணினோமோ -உம் திரு உள்ளம் கலங்கச் சொல்லி
என்ன பிரயோஜனம் உண்டு -உம் பேற்றுக்கு நாம் விலக்கடி ஆகலாமோ -ஸூ கமே நித்ய விபூதி ஏற எழுந்து அருளீர் என்று
ஸ்ரீ ஆழ்வான் திரு முகத்தைத் தடவி அஞ்சலித்து விடை கொடுத்து அருள -ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் வேர் அற்ற மரம்
போலே விழுந்து கிடக்க ஸ்ரீ உடையவரும் இரண்டு திருக்கைகளாலும் வாரி எடுக்க எழுந்து இருந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளை
தம் திருக்கண்களாலும் திருக்கைகளாலும் ஒற்றிக் கொண்டு ஸ்வ ஸீரோ பூஷணமாக்கிக் கொண்டு தீர்த்தம் கொள்ள
ஸ்ரீ உடையவரும் திருக்கைகளால் பிரசாதிக்க பிரசாதிக்கப்பட்டு –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹாதஸ் தத் இதராணி த்ருணாய மேந -அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய
தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்று அனுசந்தித்திக் கொண்டு க்ருதாஞ்சலி புடராய் –
இனி திரு மடமே எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்து வட ஆற்றங்கரை அளவாக ஸ்ரீ உடையவர் பின்னே செல்ல –
ஸ்ரீ ஆழ்வான் இனி நில்லும் என்ன -தண்டனை சமர்ப்பித்து மீண்டு ஸ்ரீ ஆழ்வார் திருமாளிகைக்கு அருகிலிட்ட திருக் காவணத்தின் நடுவே
எழுந்து அருளி இருந்து ஸ்ரீ ஆண்டாளை பார்த்து என் நினைத்து இருக்கிறாய் என்ன –
ஸ்ரீ ஆண்டாளும் தேவரீர் திரு உள்ளத்தை பின் செல்லுகை ஒழிய அடியேனுக்கு வேறு ஒரு நினைவுண்டோ என்று
திருவடிகளில் தெண்டன் இட்டு அஞ்சலித்து நிற்க
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ராமப் பிள்ளையும் அழைத்து அருளி ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சியாரும் எழுந்து அருளி இருக்க
உங்களுக்கு ஒரு தாழ்வு இல்லை -ஸ்ரீ நம்பெருமாள் பெற்று வளர்த்தார் என்று அதுவே தஞ்சம் என்று இராதே ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே
தஞ்சம் என்று இருங்கோள் -ஸ்ரீ ஆண்டாள் சொன்னபடியே வர்த்தியுங்கோள்-பாகவத விஷயத்திலே த்ரிவிதகரணங்களாலும் அபராதம் பண்ணாதே
அவர்களை அனுவர்த்தித்துக் கொண்டு போருங்கோள் என்று அருளிச் செய்து தம் திருவடிகளில் விழுந்து கிடக்கிற ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ராம பிள்ளையையும்
எடுத்துத் திருக்கையாலே கண்ணநீரைத் துடைத்து –
நீங்கள் பிராகிருத சம்பந்தத்தை நினைத்து க்லேசித்தீர்கள் ஆகில் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் சம்பந்தத்தை தூஷித்தீர் ஆவுதீர்கோள் —
ஆத்ம சம்பந்தத்தை நினைத்து கிலேசித்தீர்கள் ஆகில் ஒழிக்க ஒழியாத உறைவை அறிந்திலீர் ஆவுதீர்கோள் என்று அவர்களைத் தேற்றி
ஸ்ரீ கோயிலுக்கு நேரே ஸ்ரீ பிள்ளைப் பிள்ளான் திருமுடியில் திரு முடியையும் ஸ்ரீ ஆண்டாள் திருமுடியில் திருவடிகளையும் த்யானித்துக் கொண்டு
அன்றே ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

ஸ்ரீ உடையவரும் இது கேட்டு அங்கு ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வான் திருக் குமாரரான ஸ்ரீ பட்டரைப் பார்த்து கிலேசியாதே என்று அருளிச் செய்து –
ஸ்ரீ ஆழ்வானுக்கு சரம கைங்கர்யம் செய்யும் என்ன ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ பெருமாள் பரிகரத்தையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு –
சர்வ கர்மணி ஸூக்தேன காயத்ர்யா வைஷ்ணவேநச -நாராயண அனுவாகேன ஸ்நாபயேத் பிதரம் ஸூத-என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வானை நீராடப் பண்ணி கேசவாதி திரு நாமங்களைச் சாத்தி
அலங்கரித்து ஸ்ரீ சூர்ண பரிபாலனம் பண்ணி எழுந்து அருளுவித்துக் கொண்டு போய்
கேசவார்ப்பித சர்வாங்கம் சரீரம் மங்களாவஹம் நவ்ருதா தாஹயேத் விப்ரோ ப்ரஹ்ம மேத விதிம் விநா -என்றும்
ப்ரஹ்ம மேத வ்ரதம் ப்ரோக்தம் முநிபிர் ப்ரஹ்ம தத் பரை-மஹா பாகவதாநாம் ஹி கர்த்தவ்யம் இதம் உத்தமம் -என்றும்
கேசவன் தமரான முமுஷுக்கள் திருமேனி விட்டால் அத்திரு மேனியை ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் ஒழிய வேறு ஒன்றால் சமஸ்கரிக்க ஒண்ணாது
என்கையாலே மஹா பாகவத உத்தமரான ஸ்ரீ கூரத்தாழ்வானை ஸ்ரீ பட்டர் ப்ரஹ்ம மேதம் விதிப்படி சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்தி அருளி
பன்னிரண்டு நாளும் செய்யும் க்ருத்யங்களை சாஸ்த்ர யுக்த பிரகாரமாகச் செய்து அருளி ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும்
எழுந்து அருளுவித்துக் கொண்டு போய்

நாத பரந்தரம் தீர்த்தம் வைஷ்ணவ அங்க்ரி யுஜலாச் சுபம் -தேஷாம் பாதோ தகம் புண்யம் கங்காம் அபி புநாதி ஹி –
என்னும் வைபவம் உடைய பாகவத ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் ஸ்வீகரித்து அருளி
ஸூபாதவ் த்விஜ வைரஸ்ய சர்வ சம்பவச் சுபா வஹம்-சஹஸ்ர சாகா அத்யயனம் காரயேத் வைதிக உத்தம -அஸூபாந் தேவி சேஷேண
த்ராமிடீ ப்ரஹ்ம சம்ஹிதா அத்யேத வ்யாத் விஜவரைராசவ் சாக விநாசிநீ -என்றும்
வ்ருத்தா வாதவ் ஷயே சாந்தே த்ராமிடீ ப்ரஹ்ம சம்ஹிதா அத்யேத வ்யாத் விஜ ஸ்ரேஷ்டைராத்யா கீத சஹஸ்ரகீ -என்று
ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணத்தில் சொல்லுகிறபடியே திருவாய் மொழி திவ்ய பிரபந்தத்தை அனுசந்தித்து –
அநந்தரம் புஷ்பாஞ்சாலி பண்ணி சாத்தி அருளி
யதா துஷ்யதி தேவேஸோ மஹா பாகவத அர்ச்சனாத் -ததாக துஷ்யதே விஷ்ணுர் விதி வத் ஸ்வார்ச்ச நாதபி -என்று சொல்லுகையாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களையும் அமுது செய்யப் பண்ணி சத்கரித்து அருளினார்

ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு நக்ஷத்ரம் -தையில் ஹஸ்தம்

இவர் தனியன் –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நாம யுக்தி மதீ மஹே யத் யுக்த்யஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரம்
ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத்சாங்க முபாசமஹே அக்ர்யம் யதீந்த்ர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதானாம்

———————————–

அதின் மற்றை நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பட்டரை அழைத்துக் கொண்டு ஸ்ரீ நம்பெருமாளை சேவிக்க எழுந்து அருளி
ஸ்ரீ அழகிய மணவாளன் திரு மண்டபத்திலே தண்டன் சமர்ப்பித்து -ஸ்ரீ பட்டரை கையைப் பிடித்துக் கொண்டு போய்
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளைக் காட்டிக் கொடுக்க ஸ்ரீ பெருமாளும் மீளவும் மஞ்சள் நீர் குடித்து ஸ்ரீ பட்டரை விசேஷித்துப்
புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளி அர்ச்சக முகேன திருவாய் மலர்ந்து ஸ்ரீ ஆழ்வானை இழந்தோமே -என்று வியாகுலப் படாதே
நம்மை ஸ்ரீ ஆழ்வானாகவே நினைத்து இரும் என்று அருளிச் செய்ய ஸ்ரீ உடையவரும் இத்தைக் கண்டு சந்தோஷித்து
ஸ்ரீ பெருமாளைக் குறித்து தேவர்ர்ர் இவருக்கு ஆயுஸ்ஸை ப்ரசாதித்து அருளும் -அடியேன் வித்யைகளை அப்யசிக்கிறேன் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் திருவாய் திறவாதே தீர்த்த பிரசாதமும் பிரசாதித்து விடை கொடுத்து அருள
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பட்டரை அழைத்துக் கொண்டு மீண்டு தம் திரு மடமே எழுந்து அருளி ஸ்ரீ எம்பாரைப் பார்த்து –
இவரை நம் தர்சன பிரவர்த்தகராம் படி சாஸ்த்ர அப்பியாசம் பண்ணுவியும் என்று அவர் கையிலே காட்டிக் கொடுத்து
முதலிகளுக்கு பகவத் விஷயம் அருளிச் செய்யா நின்று கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

இப்படி இருக்கிற ஸ்ரீ உடையவர் பிரபாவத்தை- ஸ்ரீ பெரிய பெருமாளும் -ஸ்ரீ திரு வேங்கடமுடையானும் -ஸ்ரீ பேர் அருளாளரும் –
ஸ்ரீ திரு நாராயணப் பெருமாளும் -ஸ்ரீ அழகருக்கு -ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியும் -ஸ்ரீ நம்மாழ்வாரும் -ஸ்ரீ மன் நாத முனிகளும் –
ஸ்ரீ ஆளவந்தாரும் -ஸ்ரீ பெரிய நம்பியும்-ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியும் -ஸ்ரீ திருமலை நம்பியும் -ஸ்ரீ திருமாலை ஆண்டானும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரும் -மற்றும் ஸ்ரீ பாதத்து முதலிகளும் -ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸும்-ஊமையும்-வெளியிட்டார்கள் –

ஸ்ரீ பெரிய பெருமாள் வெளியிட்டு அருளிய படி எங்கனே என்னில்
திருப்பவளச் செவ்வாய் திறந்து –
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம் என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ அப்பன் வெளியிட்டபடி எங்கனே என்னில் –
உமக்கும் உம்முடையார்க்கும் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தந்தோம் என்று
நம் தெற்கு வீட்டிலே சொன்னோமே என்று திருப்பவள வாய் திறந்து அருளிச் செய்கையாலும் –
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளும் போது ததிவிக்கிரயம் பண்ணுமவளுமான தும்பையூர் கொண்டி என்பாள்
ஒரு கோபாங்கை வந்து க்ரயத்ரவ்யர்த்தமாக ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும் சேவித்து நிற்க
ஸ்ரீ உடையவர் அவளுக்கு தளிகை பிரசாதம் ப்ரசாதிக்கச் சொல்லி ஸ்ரீ கிடாம்பி ஆச்சானை நியமித்து அருள –
அவரும் அப்படியே செய்து அருள அவர் பிரசாதித்த ஸ்ரீ பாத தீர்த்த தளிகை பிரசாதங்களாலே சம்யக் ஞான உதயம் உண்டாய்
அடியேனுக்கு ததி மூல்யம் தர வேண்டா மோக்ஷம் தர வேணும் என்று பிரார்த்திக்க –
ஸ்ரீ உடையவர் அதற்கு ஸ்ரீ திருவேங்கடமுடையான் கடவர் என்ன —
அவளும் அதற்கு தேவரீர் ஒரு சிறு முறி தர வேணும் என்ன
ஸ்ரீ உடையவரும் உகந்து தரப்பெற்று ஸ்ரீ திருமலை ஏறித் த்வரித்து வரக் கண்டு ஸ்ரீ திருவேங்கடவர் எதிரே சென்று
அச் சிறு முறியை வாங்கி வாசித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாடு தந்து அருளுகையாலும்

ஸ்ரீ பேர் அருளாளர் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடன் தர்க்கித்த போது உத்தரம் சொல்ல மாட்டாமல் ஸ்ரீ பேர் அருளாளருக்கு விண்ணப்பம் செய்ய
அப்போது இன்னபடி உத்தரம் சொல்லும் என்று செங்கனி வாய் முறுவல் தோன்ற அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ யாதவ ப்ரகாசனுக்கு ஸ்வப்ன முகேன நம் இராமானுஜனை ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணி த்ரிதண்டி சந்நியாசி ஆவாய் –
என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
ஸ்ரீ தொண்டனூரிலே ஸ்வப்னம் காட்டி அருளி அழைத்துக் கொண்டு போய் அவருக்கு ப்ரசன்னரராய் அருளுகையாலும் –
என்னுடைய ஸ்ரீ செல்வப்பிள்ளை அன்றோ என்று எடுத்து அணைக்கும் படி ஸ்ரீ யதிராஜகுமாரரான சௌசீல்யத்தாலும்-

ஸ்ரீ அழகர் வெளியிட்டு அருளியபடி எங்கனே என்னில்
நம் இராமானுசன் அடியாருக்கு அருளப் பாடு என்று திரு உள்ளமாய் அருள -நாயந்தே -என்று எல்லா ஆச்சார்யர்களும் எழுந்து அருளித்
திருவடிகளில் சேவித்து நிற்க -ஸ்ரீ பெரிய நம்பி வழியில் சிலர் வராமல் இருக்க –
ஸ்ரீ அழகரும்-அது என் நீங்கள் நாம் அழைக்க வாராது இருப்பது என் -என்று கேட்டருள –
அவர்களும் -ராமானுஜன் அடியார்க்கு அருள்பாடு என்று தேவரீர் திரு உள்ளமாய் அருளுகையாலே -அவர் எங்களுக்கு சிஷ்யர் என்று
வாராது இருந்தோம் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ அழகரும் -ஸ்ரீ தசரத ஸ்ரீ வஸூதேவாதிகள் நம்மைப் புத்ரப் பிரதிபத்தி பண்ணினால் போலே இருந்தது நீங்கள் ஸ்ரீ இராமானுஜனை
சிஷ்ய பிரதிபத்தி பண்ணினது என்றும்
பின்பு ஒரு நாள் ஸ்ரீ கிடாம்பி ஆச்சானை அருளப் பாடிட்டு ஓன்று சொல்லாய் என்று திரு உள்ளமாய் அருள
அவரும் அபராத சஹஸ்ர பாஜனம் என்று தொடங்கி-அகதிம் -என்று சொல்ல –
ஸ்ரீ அழகரும் நம் ஸ்ரீ ராமானுசனை யுடையனாய் இருந்து அகதிம் என்று சொல்லப் பெறாய் என்றும் திரு உள்ளமாய் அருளுகையாலும்

ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி வெளியிட்டு அருளியபடி எங்கனே என்னில்
ஸ்ரீ உடையவரும் முதலிகளும் ஸ்ரீ நம்பியை சேவிக்க எழுந்து அருளின அளவிலே ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியும் திரு ஓலக்கமாக
எழுந்து அருளி இருந்து ஸ்ரீ உடையவராய் அருளப்பாடிட்டு –
பஹுநி மேவ்யதீதாநி ஜன்மா நிதவசார்ஜூந-என்கிறபடியே இத்தனை ஜென்மம் பிறந்தோம் என்று தெரியாது –
அஜ் ஜென்மங்களில் ஒருவரும் நமக்கு அகப்படாமல் -ஆஸூரீம் யோநிம் ஆபன்னா மூடா ஜென்மநி ஜென்ம மாம் அப்ராப்யைவ
கௌந்தேய ததோ யாந்த்யத மாங்கதிம் -என்கிற படியே ஆஸூர பிரப்ருதிகளாய் பிறந்து
பிறந்த ஜென்மங்கள் தோறும் மூடராய் நம்மை வந்து கிட்டாதே அதமமான கதியை அடைந்தார்கள் -இவ்வாத்மாக்கள் எல்லாரும்
உமக்கு அகப்பட்ட விரகை நமக்குச் சொல்ல வேணும் என்று திரு உள்ளமாக –
ஸ்ரீ உடையவரும் தேவரீர் கேட்கும் க்ரமத்தில் கேட்கில் சொல்லுகிறேன் என்ன ஸ்ரீ நம்பியும் திவ்ய சிம்ஹாசனத்தில் நின்றும் இறங்கி அருளி
நிலத்தில் ஒரு ரத்ன கம்பளத்தில் எழுந்து அருளி இருந்து இவருக்கு ஒரு திவ்ய சிம்ஹாசனத்தை இட்டு -இனிச் சொல்லும் -என்ன –
ஸ்ரீ உடையவரும் அவ்வாசனத்திலே ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ஆளவந்தார் எழுந்து அருளி இருக்கிறார்களாக பாவித்துக் கொண்டு
அவர் திருச் செவியிலே ஹிதத்தை விண்ணப்பம் செய்ய அன்று தொடங்கி
ஸ்ரீ நம்பியும் -நம் இராமானுஜம் உடையோம் -என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ நம்மாழ்வார் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
லோகத்தைத் திருத்துவதாக எம்பெருமானோடே மார் தட்டி -நின் கண் வேட்கை எழுவிப்பேனே-என்றவர் தாமே -ஏ பாவம் பரமே -என்று
க்லேசித்து அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு அவதரித்து திருத்த ஒண்ணாத லோகத்தை நாமோ
திருத்தக் கடவோம் என்று கை வாங்கி -யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம்-என்று தாமும் தம் திரு உள்ளமுமேயாய்
த்ரிகாலஞ்ஞர் ஆகையால் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஸ்ரீ உடையவர் திரு அவதாரத்தைக் குறித்து அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ மன் நாதமுனிகள் வெளியிட்ட படி எங்கனே என்னில்
குளப்படியில் தேங்கினால் குருவி குடித்துப் போம் -ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏரியில் தேங்கினால் நாடு விளையும் -என்று
அருளிச் செய்தது ஸ்ரீ உடையவர் திரு அவதாரத்தைக் குறித்து என்னும் இடம் –
ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும் கடலிலே ஸ்ரீ ஆழ்வார் ஆகிற காள மேகம் படிந்து
தத் கல்யாண குண அம்ருதத்தைப் பருகி வந்து -ஸ்ரீ நாதமுனிகள் ஆகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ மணக்கால் நம்பி ஆகிற அருவிகளாலே இறங்கி -ஸ்ரீ ஆளவந்தார் ஆகிற பேர் ஆற்றிலே கூடி
ஸ்ரீ பெரிய நம்பி யாகிற வாய்க்காலாலே புறப்பட்டு ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற பெரிய ஏரியில் வந்து தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு இஸ் சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறிப் பாய்கிறது -என்று
அருளிச் செய்த இடத்தில் ஒத்து இருக்கையாலும்

ஸ்ரீ ஆளவந்தார் வெளியிட்ட படி எங்கனே என்னில்
இம்மஹா நுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தான் ஆகிலோ என்றும் -இவன் முதல்வன் ஆம் -என்று அருளிச் செய்கையாலும்
சரம தசையில் -சரம விக்ரஹ சேவையில் குஞ்சிதஸ் வாங்குளி த்ரய மோசநத்தாலும்

ஸ்ரீ பெரிய நம்பி வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ அத்துழாயும் தாமுமாக எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக எழுந்து அருள –
ஸ்ரீ பெரிய நம்பி எழுந்து இருந்து தண்டன் இட-இது என் -ஸ்ரீ உடையவர் உமக்கு சிஷ்யர் அன்றோ -இப்படிச் செய்யலாமோ -என்று
ஸ்ரீ அத்துழாய் விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ நம்பியும் அத்தாளுக்குக் தக்க தலை காண் இது என்றும்
ஒரு நாள் ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக நீராடி எழுந்து அருளும் போது ஸ்ரீ பெரிய நம்பி எதிரே கண்டு தாளும் தடக்கையும் கூப்பித்
தண்டன் இட ஸ்ரீ உடையவரும் அஞ்சலித்து கிருபை செய்து எழுந்து அருள -இத்தை முதலிகள் கண்டு இது என் சீயா -என்ன
ஸ்ரீ உடையவரும் இப்போது அவர் இஷ்டம் அனுவர்த்திக்கை அன்றோ நமக்கு உள்ளது என்ன –
முதலிகளும் ஸ்ரீ பெரிய நம்பி சந்நிதியில் சென்று -ஸ்ரீ உடையவராய் நீர் சாஷ்டாங்க ப்ராணாமம் பண்ணுகைக்கு அடி என் என்று கேட்க
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளும் என்று இருந்தேன் என்ன -அவர்களும் இதுக்கு நிதானம் என் என்ன –
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தார்க்கு பின்பு அகிலார்த்த ஸ்திதி பூர்த்தி உள்ளது இவருக்கே ஆகையால் சதாச்சார்ய சந்நிதியோடு
சச்சிஷ்ய சந்நிதியோடே வாசி இல்லாதாமையாலே சேவித்தேன் என்று அருளிச் செய்து
தம் திருக் குமாரர் புண்டரீகாக்ஷரையும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி வெளியிட்ட படி எங் கனே என்னில்
தாம் திருமந்த்ரார்த்தம் ப்ரசாதிக்கும் போது -ஆறுக்கும் சொல்லாதே கொள்ளும் -என்று ஆஜ்ஜாபித்து அருளிச் செய்ய –
இவரும் அதை தெற்கு ஆழ்வார் திரு ஓலக்கத்திலே தூளி தானமாக சார்வார்க்கும் அருளிச் செய்ய –
ஸ்ரீ நம்பியும் அத்தைக்கு கேட்டு குபிதராய் – ஸ்ரீ உடையவரை அழைத்து -ஆச்சார்ய ஆஜ்ஜாதி லங்கனத்துக்கு பலம் எது என்ன –
ஸ்ரீ உடையவரும் நரகமே பலம் என்ன –ஸ்ரீ நம்பியும் ஆகிலும் அறிந்தும் செய்வான் என் என்ன –
இவரும் -அடியேன் ஒருவனும் அன்றோ நரகம் புகுவது -தேவரீர் சம்பந்தத்தால் இவ்வாத்மாக்கள் எல்லாம் உஜ்ஜீவிக்கும்
என்று சொன்னேன் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் போர ப்ரீதராய் -ஸ்ரீ எம்பெருமானாரே வாரும் -என்று எடுத்து அணைத்துக் கொண்டு இந்த பர ஸம்ருத்தி நமக்கு
இல்லையாய் விட்டதே -அவரோ நீர் -என்று அருளிச் செய்து -இன்று முதல் எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று சொல்லி
தம் திருக் குமாரர் ஸ்ரீ தெற்கு ஆழ்வாரையும் அவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும் –

ஸ்ரீ திருமலை நம்பி வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது திருப் பரியட்ட பாறை அளவாக எதிரே சென்று தீர்த்த பிரசாதம் ப்ரசாதிக்க –
ஸ்ரீ உடையவரும் ஸ்வீ கரித்து அருளி ஸ்ரீ நம்பியைப் பார்த்து தேவரீர் எழுந்து அருள வேணுமோ -வேறே சிறியவர்கள் இல்லையோ என்ன –
ஸ்ரீ நம்பியும் நாலு திரு வீதியிலும் ஆராய்ந்த இடத்திலும் என்னிலும் சிறியோரைக் கண்டிலேன் என்கையாலும்
ஸ்ரீ எம்பாரை ஸ்ரீ உடையவருக்கு உதக பூர்வகமாகக் கொடுக்கையாலும்
தம் திருக் குமாரர்கள் ஸ்ரீ ராமானுசனையும் ஸ்ரீ பிள்ளை திருமலை நம்பியையும் அவர் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் வெளியிட்ட படி எங்கனே என்னில்
அவர் தம் பக்கல் திருவாய் மொழி கேளா நிற்க -அறியாக் காலத்துள்ளே-என்கிற பாட்டுக்கு இவர் உபகார ஸ்ம்ருதி பாரமாக
விசேஷ அர்த்தம் அருளிச் செய்ய -ஸ்ரீ ஆண்டானும் இது விச்வாமித்ர ஸ்ருஷ்ட்டி என்று அருளிச் செய்கை தவிர்ந்து இருக்க –
பின்பு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி எழுந்து அருளி ஸ்ரீ ஆண்டானை அழைத்து ஸ்ரீ சாந்தீபினி பக்கலிலே ஸ்ரீ கிருஷ்ணன்
அத்யயனம் பண்ணினால் போலே காணும் இவர் உம்முடைய பக்கல் திருவாய் மொழி கேட்கிறது-
இவ்விரண்டு அர்த்தமும் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார் காணும் -என்ன –
ஸ்ரீ உடையவரும் ஒரு அர்த்த பிரஸ்தாவத்திலே-ஸ்ரீ ஆளவந்தார் இப்படி அருளிச் செய்யார் என்ன –
ஸ்ரீ ஆண்டானும் நீர் ஸ்ரீ ஆளவந்தாரைக் கண்ணாலும் காணாது இருக்க இப்படி அருளிச் செய்யார் என்கைக்கு ஹேது என் என்ன –
இவரும் நான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் அன்றோ என்ன –
ஸ்ரீ ஆண்டான் தண்டன் இட்டு இதுவும் ஒரு திரு அவதாரமோ என்று அருளிச் செய்து
தம் திருக் குமாரர் சுந்தரத் தோலுடையாரை ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் வெளியிட்ட படி எங்கனே என்னில்
தம் பக்கல் ஸ்ரீ உடையவர் ஆறு மாசம் சேவித்து இருந்து பங்காக மஞ்சள் காப்பு அரைத்துச் சாத்தி நீராடப் பண்ணுவித்து அருள
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் ப்ரீதராய் -என்னுடைய சர்வஸ்வத்தையும் கொள்ளை கொள்ளவோ நீர் இப்படிச் செய்தது
என்று அருளிச் செய்து பஞ்சம உபாய நிஷ்டையையும் அருளிச் செய்து
தம் திருக் குமாரர் திருவாய் மொழி அரையரையும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ வடுக நம்பி – ஆச்சார்ய பதம் என்று தனிஸ்ரீயே ஒரு பதம் உண்டு -அது உள்ளத்து ஸ்ரீ எம்பெருமானாருக்கே யாகையாலே
எல்லாருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஒழிய வேறு உபாய உபேயம் இல்லை –
அவர் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் -என்று அருளிச் செய்து அருளுவர் –

ஸ்ரீ கணியனூர் சிறிய ஆச்சான் ச சேலஸ் நாந பூர்வகமாக ஆர்த்தியோடே உபசன்னராய்த் திவ்ய ஆஜ்ஜை இட்டு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஒழிய வேறே தஞ்சம் இல்லை என்று அருளினார்
எங்கனே என்னில் -சத்யம் சத்யம் புநஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ ச ஏவ சர்வ லோகாநம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்று
இவர் தாமே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு ஓலக்கத்திலே ஸ்ரீ சடகோபனை தம் திருமுடியில் நிறுத்திக் கொண்டு அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ எச்சான் -ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ மருதூர் நம்பி இவர்களுக்கு ஹித உபதேசம் செய்து ஸ்ரீ உடையவர் குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டினால் போலே
செய்து அருளினர் -நீங்கள் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயித்த அளவிலே ஸ்ரீ ஆழ்வான் ஆச்சார்ய தக்ஷிணையாக
த்ரிவித கரணங்களையும் பரிஹரித்துக் கொண்டு பாகவதர்கள் இடத்தே ஆனுகூல்ய ஏக ரசராய்ப் போரும் என்று அருளிச் செய்ய –
அவரும் இது பரிஹரித்து முடியாது என்று பயப்பட்டு முசித்துக் கிடக்க ஸ்ரீ ஆழ்வான் அவரை அழைத்து –
எதிரியைக் குத்தினால் எதிரி கூடக் குத்தும் -ராஜ தண்டமும் வரும் -ஆகையால் காயிக அபராதம் செய்யக் கூடாது
யதீச்ச சிவசீ கர்த்தும் ஜெகதே கேந கர்மணா பரா பவாத சஸ் யேப்யோ காஸ்ச ரந்தீர் நிவாரய -என்கிறபடியே
பர அபவாதம் சொல்லுகிற வாக்கு ஒன்றையும் பரிஹரித்துக் கொள்ளும் என்று அருளிச் செய்து
இனி மனஸ்ஸாலே நினைத்தீராகில் அனுதபித்து-இது ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்தே படாதபடி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ மிளகு ஆழ்வான் ஸ்ரீ முதலியாண்டானை என்னோடே தர்க்கிக்க வாரும் என்ன –
ஸ்ரீ முதலியாண்டானும் நீர் தோற்றீர் ஆகில் செய்வது என் என்ன ஸ்ரீ மிளகு ஆழ்வானும் நான் தோற்றேன் ஆகில்
உம்மை என் தோளிலே சுமந்து கொண்டு போகிறேன் என்ன -அநந்தரம் உபயரும் தர்க்கிக்க ஸ்ரீ மிளகு ஆழ்வான் தோற்று
ஸ்ரீ முதலியாண்டானை ஸ்ரீ பாதம் தாங்கிக் கொண்டு சுற்றிடம் போய் -இனி அடியேனை இரங்கி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் காட்டிக் கொடுத்து ஆஸ்ரயிப்பித்து அருளி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டரைப் பார்த்து ஸ்ரீ நம்பெருமாள் நம்மை புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளினார் -நாம் ஸ்ரீ ஆழ்வானுடைய பிள்ளை –
அகில சாஸ்திரங்களையும் அதிகரித்தோம் -என்கிற மேன்மையை நினைத்து இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து வேதாந்தி என்கிற பேரை உடையோம் -நம்முடைய பக்கல் ஆஸ்ரயித்தோம் –
நமக்கு பஹு த்ரவ்யத்தை ஆசார்ய தக்ஷிணையாகத் தந்தோம் என்று இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளையைப் பார்த்து லோகாச்சார்யார் என்கிற பேரை யுடையோம் –
திருவாய் மொழிக்கு பொருள் சொல்ல வல்லோம் -என்று இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ சிவக்கரைப் (சிவிக்கரை )பிள்ளையைத் திருக்கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளா நிற்க
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ நம்பிள்ளை திருமாளிகை திரு இடை கழியிலே கண் வளரா நிற்க
ஸ்ரீ சிவக்கரைப் பிள்ளை அவர் காலை முடக்கும் என்ன -ஸ்ரீ நம்பிள்ளையும் -மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஆழ்வார் -திருத் தாள் -என்று
அருளிச் செய்ய -நீரோ கால் என்பீர் -என்ன என்று அவர் கையை விட்டு அருள அவரும் சிவக்கரையிலே போய் இருந்து
பின்பு சோகார்த்தராய் இரண்டு ஆற்றுக்கு நடுவு நின்று கவணிலே கல்லை வைத்து வீசினால் போலே தள்ளி விட்டு அருளிற்றே
இனி அடியேனுக்கு கதி என் என்று ஸ்ரீ நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்து வரக் காட்டி அருள
ஸ்ரீ நம்பிள்ளையும் உமக்கு ஒரு குறையும் இல்லை -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருப்பது என்று அருளிச் செய்து
போக விட்டு அழைத்து கிருபை செய்து அருளினார் –

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்ரீ சிறுப் புத்தூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ சோமாசி ஆண்டான்
ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ பாதத்தில் மூன்று உரு ஸ்ரீ பாஷ்யம் வாசித்து அருளி மீண்டு எழுந்து அருளும் போது
ஸ்ரீ சோமாசி ஆண்டான் அனுவர்த்தித்து -அடியேன் இருக்கிற தேசம் இதுவாய் இருந்தது –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பது ஓன்று அருளிச் செய்ய வேணும் என்ன –
ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆண்டானைக் குறித்து நீர் பாட்ட பிரபாகர் மீமாம்சை இவை இத்தனைக்கும் பொருள் சொல்ல வல்ல கர்த்தா –
ஸ்ரீ பாஷ்யத்துக்கு பிரவர்த்தகர் -என்று மேன்மை பாராட்டித் திரியாதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று இரும் என்று அருளினார் –

ஸ்ரீ கோமடத்துப் பிள்ளான் தம் ஸ்ரீ பாதத்தில் ஸ்ரீ காக்கைப் பாடி (காக்கையாடி)ஆச்சான் பிள்ளை மூன்று உரு ஸ்ரீ பாஷ்யம் வாசித்து
அத்தால் மிகவும் மேன்மையை யுடையராய் இருக்குமது கண்டு இவருக்கு இம்முகத்தாலே அபசாரம் வரும் என்று அஞ்சி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளையைப் பார்த்து உம்மைப் பெருமாள் முனிந்து அருளும் போது
என் நினைந்து இருந்தீர் என்று கேட்டு அருள
அவரும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தேன் -என்று விண்ணப்பம் செய்தார் –

ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ பாதத்தில் பத்து பன்னிரண்டு திரு நாமம் ஸ்ரீ பாஷ்யம் வாசிக்கிற போது ஸ்ரீ அம்மாள் அவர்களுக்கு
ஸ்ரீ பாஷ்யத்தை உபந்யஸித்துக் காட்டி அருள -அவர்களும் பக்தி குரு உபாயமாக இருந்தது என்ன –
பின்பு அவரும் பிரபத்தி உபாயத்தை அருளிச் செய்து காட்டி அருள பக்தியிலும் பிரபத்தி தான் அரிதாய் இருந்தது
என்று அவர்கள் விண்ணப்பம் செய்ய
ஆகில் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று விஸ்வசித்து உஜ்ஜீவியுங்கோள் என்று அருளினார்

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர் ஸ்ரீ திரு நாராயண புரத்திலே ஸ்ரீ எம்பெருமானார் திரு முன்பே கோஷ்டி பண்ணி ஸ்ரீ பாஷ்யத்தை உபந்யஸிக்க
இது கங்கா பிரவாஹமாய் இருந்து -எங்களால் அவகாஹிக்கப் போகாது என்று ஐம்பத்து இருவர் விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பட்டரும் ஆகில் உங்கள் குல தெய்வமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று உஜ்ஜீவியுங்கோள் என்று அருளினார் –

ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை ஸ்ரீ வெள்ளைக் குளத்து ஆனை காத்த சிங்கர் முன்பே கோஷ்டி பண்ணி ஸ்ரீ பாஷ்யம் உபந்யஸிக்க
தம் சிஷ்யரான ஸ்ரீ இளைய அழகியார் எழுந்து இருந்து இது கங்கா ப்ரவாஹமாய் இருந்தது –
என்னால் அவகாஹிக்கப் போகாது என்று விண்ணப்பம் செய்ய
ஆகில் ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே சரணம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ வடுக நம்பி -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -ஸ்ரீ நம் பெருமாள் திருவடிகளே சரணம் என்று இரண்டையும் சேர
அநுஸந்திக்கும் ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ ஆண்டானையும் இரு கரையர் என்பர் –
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ செல்வப்பிள்ளை திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஒருவருக்கும் இசைந்து இராது –

ப்ரஹ்ம ரஜஸ் ஸூ வெளியிட்ட படி எங்கனே என்னில் ஸ்ரீ யாதவ பிரகாசனுக்கு ஸ்ரீ உடையவரைக் காட்டி
இவர் நித்ய ஸூரி களில் தலைவர் என்று சொல்லுகையாலே

ஊமை வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ பெருமாள் கோயிலிலே பாகவத ஜென்மத்தில் பிறந்தான் ஒரு பிள்ளை ஐந்தாறு வயஸ்ஸூ அளவாக ஊமையாய் இருந்து –
பின்பு இரண்டு சம்வத்சரம் காணாது இருந்து -பின்பு எல்லாரும் காண வந்து வார்த்தை சொல்ல வல்லனாக –
இவ் வாச்சர்யத்தைக் கண்டு எல்லாரும் திரளாக இருந்து ஊமையைப் பார்த்து -நீ இத்தனை நாளும் எங்கே ஏறப் போனாய் -என்று கேட்க –
அவனும் நான் ஷீராப்திக்குப் போனேன் என்ன -இவர்களும் -அங்கே விசேஷம் என் -என்று கேட்க –
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் ஸ்ரீ உடையவராய் வந்து அவதரித்து வந்து அருளினார் என்று ஒரு விசேஷம் -என்ற அநந்தரம்
அவனைக் கண்டது இல்லை என்று ஸ்ரீ பகவத் சேனாபதி சீயர் அருளிச் செய்கையாலே
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் பிரபாவத்தை அனைவரும் பிரகாசிப்பித்தார்கள் –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: