ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் —

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் —

மற்றை நாள் மேற்கே வஹ்நி புஷ்கரணியாகிற கிராமத்து ஏற எழுந்து அருளி அங்கே சிறிது காலம் எழுந்து அருளி இருந்து –
அங்கு நின்றும் ஸ்ரீ மிரிளா புரி சாளக்கிராமத்துக்கு ஏற எழுந்து அருள ஊர் அடைய ப்ரசன்ன விரோதிகள் ஆகையால்
ஸ்ரீ உடையவரை அநாதரித்து இருக்க ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ முதலியாண்டானை அழைத்து இவ்வூரார் நீர் முகக்கும் துறையிலே
நீர் உமது ஸ்ரீ பாதத்தை நீட்டிக் கொண்டு இரும் என்று நியமித்து அருள ஸ்ரீ ஆண்டானும் அப்படியே செய்து அருள
அவ்வூரார் இவர் ஸ்ரீ பாத வைபவத்தாலே நிவ்ருத்த அஹங்காரராய் மற்றை நாளே தெளிந்து வந்து ஸ்ரீ உடையவர்
திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அத்தீர்த்த பிரபாவத்தை இட்டு இன்று முதல் இவ்வூர் ஸ்ரீ சாளக்கிராமம் -என்று அருளிச் செய்தார் –
அங்கே ஸ்ரீ வடுக நம்பியை ஸ்வ பாதாச்சாயா பன்னராம் படி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி
அவருக்கு தர்சன அர்த்தங்கள் பிரசாதித்துக் கொண்டு ஸ்ரீ சிங்கர் கோயிலிலே சிறிது நாள் எழுந்து இருந்து
ஸ்ரீ விஷ்ணு வைஷ்ணவ த்வேஷியான சோழன் கிருமி கண்டனாய் நசிக்கும்படியாக அபிசாரம் பண்ணி
அங்கு நின்றும் ஸ்ரீ தொண்டனூர் ஏற எழுந்து அருளினார் –

அங்கே அத்தேசத்துக்கு அதிபதியான விட்டல தேவ ராயன் மகள் பிசாசாவிஷ்டையாய் இருக்க –
அவனும் மந்திரவாதிகள் பலரையும் கொண்டு தீர்க்கத் தேடின இடத்திலும் தீராத படியால் துக்கிதனாய் இருக்க
தத் பத்னியும் நிர்வாணமாக ஓடித்திரிகிற தன் பெண்ணைக் கண்டு மிகவும் வ்யாகுலப்பட்டு இருக்கும் அளவில்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி உபாதான அர்த்தமாக ராஜ க்ருஹத்து ஏற எழுந்து அருளினவர் துக்கிதையான ராஜ பத்னியைக் கண்டு
துக்க ஹேது என்ன என்று கேட்டு அருள -அவளும் தத் காரணத்தைச் சொல்ல -ஸ்ரீ நம்பியும் கேட்டு அருளி –
நம் ஆச்சார்யர் ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளினார் அவர் கடாக்ஷத்தால் இப்பேய் காடு ஏறிப்போம் -என்று
ப்ரஹ்ம ரஜஸ்ஸின் கதையை ச விஸ்தாரமாக அவளுக்கு அருளிச் செய்ய -அவளும் கேட்டு ஆச்சர்யப்பட்டு தன் பர்த்தாவுக்கு அறிவிக்க –
அவனும் ஸ்ரீ உடையவர் இப்பேயை விடுவிக்கில் அவரே நமக்கு ஆச்சார்யர் -அவர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கக் கடவேன் -என்ன

அவ்வளவில் அவன் ஸ்வ குருக்களுக்கு விருந்து இடத் தேடி -இவளும் தன் பர்த்தாவைக் குறித்து
நீர் அங்க ஹீனர் என்று அவர்கள் இங்கே வாரார்கள் -சொல்லாதே கொள்ளும் என்ன -அவனும் அவர்கள் வாராது இருப்பார்களோ என்று
இவள் வார்த்தையை அதிக்ரமித்துச் சொல்லிப் போக விட -அவர்களும் முன்பு டில்லீஸ்வரனான துருஷ்கன் இவனை ஆக்ரமித்துப்
பிடித்துக் கொண்டு போய்ப் பட்டார்ஹன் அன்றிக்கே போம்படி ஒரு அங்குலிச்சேதம் பண்ண –
அத்தாலே விட்டலதேவராயன் ப்ரஸித்தமாகையாலே ஹீனாங்கன் அகத்தே புஜிக்க ஒண்ணாது என்று தவிர்ந்து விட்டார்கள் –

அது கண்டு அவன் அவர்கள் இடத்தே அதி குபிதனாய் அவர்களை திரஸ்கரித்து இருக்கும் அளவில்
அவனுடைய ஸ்திரீயும் அவனைக் குறித்து ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாகாதோ –
இவர்களால் என்ன பிரயோஜனம் உண்டு என்ன -அவனும் இசைந்து ஸ்ரீ உடையவரை ஸ்வ க்ருஹத்தே ஏற எழுந்து அருள வேணும்
என்று பிரார்த்திக்க ஸ்ரீ ராமானுசனும் நாம் ராஜதானியை மிதிக்கக் கடவோம் அல்லோம் -என்று அருளிச் செய்ய –
அவ்வளவில் ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலான முதலிகள் இவனை விசேஷ கடாக்ஷம் செய்து அருளினால் தரிசனத்துக்கு
பஹு உபகாரம் உண்டு என்று பஹுஸா வேண்டிக் கொள்ள –
ஸ்ரீ உடையவரும் சம்மதித்து அவன் அகத்து ஏற எழுந்து அருளின அளவிலே -அவனும் அதி ஸந்துஷ்டனாய்த் திருவடிகளில்
சாஷ்டாங்க பிரணாமம் பண்ணி ச விநயனாய் நிற்க முதலிகளும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தத்தை அவன் புத்ரிக்குப் பிரசாதித்து
தத் தீர்த்தாலே ப்ரோக்ஷிக்க அவளுடைய சித்தப்ரமம் போய்த் தெளிந்து வந்து சேலையும் உடுத்து ஸ்ரீ உடையவரையும் சேவிக்க –
இத்தை விட்டல தேவராயன் கண்டு அத்தியாச்சார்யப் பட்டுத் தத் க்ஷணமே ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்க அவனையும் இரங்கி அருளித்
திருவடிகளுக்கு அந்தரங்கனாம் படி கடாக்ஷித்து அருளினார்

இப்படி அவனையும் ஸ்வ வைபவத்தால் சிஷ்யனாக்கிக் கொண்டு அவனுக்கு விஷ்ணு வர்த்தன ராயன் என்று திரு நாமம் பிரசாதித்து அருளி
அதி ஸந்துஷ்டராய் நிற்க -அவ்வளவில் -எங்கள் சிஷ்யனை இங்கனே மயக்கி நீர் சிஷ்யன் ஆக்கிக் கொள்ளும் போது எங்களை ஜெயித்து
அன்றோ செய்யலாவது -என்று பன்னீராயிரம் ஷபனர் ஏக காலத்திலே வந்து தர்க்கிக்கக் தொடங்க –
ஸ்ரீ உடையவரும் மின்னலுக்கு அஞ்சுமவர்கள் இந்தியன் கையில் அகப்பட்டால் போலேயும் -தேளுக்கு அஞ்சி பாம்பின் வாயில் அகப்பட்டால்
போலேயும் ஆச்சுதே இனி என் செய்யக் கடவோம் என்று விசாரக் ராந்தராய் இருக்க –
ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலான முதலிகள் எல்லாரும் தேவரீருடைய ப்ரபாவத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி வெளியிட வேணும்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் இனி நம்மை வெளிடாது இருக்க ஒண்ணாது என்று பார்த்து
ஒரு திரு மண்டபத்திலே திருத் திரையை வளைத்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளி இருந்து சஹஸ்ர பணா மண்டலமுடைய
திரு அனந்த ஆழ்வானாய் ஓர் ஒருத்தருக்கும் அநேக பிரகாரமாக ப்ரத்யுத்தரம் அருளிச் செய்து அவர்களை வாய் மூடுவித்து ஜெயிக்க
அவர்களிலே சிலர் அதி விஸ்மிதராய் வந்து திருவடிகளிலே ஆஸ்ரயிக்கத் தேட அவர்களை அடிமை கொண்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களாம் படி பண்ணி விசேஷ கடாக்ஷம் செய்து அருளித் தம் திவ்ய சக்தியைப் ப்ரகடிப்பிக்க-
இத்தைக் கண்டு போய் சிலர் ராஜ்யாதிபனான விஷ்ணு வர்த்தன ராயனுக்குச் சொல்ல -அத்தைக் கேட்டு விஷ்ணு வர்த்தனனும்
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே அதி பிரவணனாய் இரா நிற்க அங்குத்தையில் ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ தொண்டனூர் நம்பி அபிமானித்து
இருக்கையாலே அவருக்கு ஸ்ரீ நம்பி தம்பிரான் -என்ற திரு நாமம் சாத்தி உகந்து அருளி ஸ்ரீ சிங்கர் கோயிலிலே எழுந்து அருளி
வேதாந்த வ்யாக்யானம் செய்து கொண்டு இருக்கும் காலத்திலே

திருக்கையில் திருமண் மாண்டு -சாத்துகைக்கு திருமண் பெற்றிலோமே என்று சிந்தித்துக் கொண்டு கண் வளர்ந்து வளர
அன்று ராத்ரி ஸ்ரீ திரு நாராயணப் பெருமாளும் அணித்தாக ஸ்ரீ யதுகிரியிலே உம்முடைய வரவு பார்த்துக் கொண்டு நில்லா நின்றோம்
உம் திரு உள்ளம் போன்ற திரு மண்ணும் இங்கே உண்டு -சடக்கெனப் புறப்பட்டு வாரீர் என்று ஸ்வப்னம் காட்டி அருள
ஸ்ரீ உடையவர் விடிவோரை ப்ரீதராய் எழுந்து இருந்து இத்தை முதலிகளுக்கு அருளிச் செய்து விஷ்ணு வர்த்தன ராயரையும்
அழைப்பித்துத் தாம் ஸ்வப்னம் கண்டபடியை அருளிச் செய்ய அவனும் கேட்டு ப்ரசன்னனாய் சம்மதித்துக் காடு வெட்டுவித்துக் கொண்டு
ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்துக் கொண்டு செல்ல -பஹு தான்ய சம்வத்சரம் -தை மாசத்தில் -ஸ்ரீ எம்பெருமானாரும் –
செம் பொன் யது கிரி ஏறி வேத புஷ்கரணி கரையிலே எழுந்து அருளி -பரிதான சிலாந் த்ருஷ்ட்வா பிரணமந்தி த்விஜோத்தமா -என்கிறபடியே
பரிதான சிலையும் சேவித்து அங்கே நீராடி
வேத புஷ்கரணீ தீரே விசாலே சசிலா தலே பரிதாநம் ச ஜக்ராஹ காஷாயம் பரம புமான் -என்கிற தத்தாத்ரேயரைத் போலே
தாமும் மீளவும் காஷாயம் தரித்து அருளி முன்னே நடந்து திரு நாராயணப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிற இடத்தை தேடிக் காணாமல் –
பகவத் பிரபாவத்துக்குக் குறைவாக என் செய்தோம் என்று திரு உள்ளம் கலங்கி அயர்ந்து கண் வளர்ந்து அருள அவ்வளவில்

திரு நாராயணப் பெருமாளும் இவர் கனவில் எழுந்து அருளி ஸ்ரீ கல்யாண சரஸ்ஸிலே தென்மேலை மூலையிலே செண்பகச் சோலைக்கு அருகே
திரு மகிழுக்குத் தேன் பார்ஸ்வத்திலே வளர்ந்த திருத் துழாயின் கீழே பெரிய புற்றுக்குள்ளே இரா நின்றோம்
திருமணும் அந்தக் கல்யாண சரஸ்ஸூக்கு வடமேலை மூலையிலே –
ஸ்வேத த்வீபாத் ககேசேந ஸூத்தம் ருத் த்ரவ்ய மாஹ்ருதம் –யாதவாதரவ் விநிஷிப்தம் அஷ யந்தன்ம மாஜ்ஞாயா -என்கிறபடியே
பெரிய திருவடியாலே ஸ்வேத த்வீபத்தின் நின்றும் கொணர்ந்து ஸ்ரீ யது கிரியிலே நிக்ஷேபிக்கப் பட்டு மத் ப்ரபாவத்தால் அக்ஷயமாக
சேமிப்பது இரா நின்றது -நீர் கிலேசிப்பான் என் -நாம் உமக்கு அடையாளமாக இவ்விடம் தொடங்கி நாம் இருக்கும் புற்று அளவாக முறித்திட்ட
திருத் துழாய்க் கொழுந்தே குறியாக வாரீர் என்று ப்ரத்யக்ஷ சாமானகாரமாக ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய –
ஸ்ரீ உடையவரும் உகந்து உணர்ந்து எழுந்து இருந்து முறித்திட்ட திருத் துழாய் கொழுந்தே குறியாக ஸ்ரீ கல்யாண சரஸ் கரை யிலே
எழுந்து அருளி திரு முகப்படியே சம்பகவன சமீபத்தில் கப்பும் கவருமாய்ப் பணைத்துக் கொழுந்து விட்ட திருத் துழாய் மரத்தைக் கண்டு
களித்து ஆனந்தத்துடன் பலகாலும் தண்டன் இட்டு அத்திருத் துழாய் மரத்தின் மண் காப்பு நீக்கின அளவிலே –
கமபியது கிரிஸ் தங்காந்தி சிந்துந் ததர்ச -என்கிறபடியே புற்றினுள்ளே ஸ்ரீ பொற் கோயில் தோன்றிய பின்பு

மற்று அங்கு இனிது அமர்ந்த மாயவனுடைய நீல சிகா மணி தோன்ற சக வருஷம் ஆயிரத்துக்கும் மேல்
பன்னிரண்டு சென்ற வர்த்தமான பஹு தான்ய வர்ஷம் தை மாசம் ஸூக்ல பக்ஷ சதுர்த்தசியும் வியாழக் கிழமையும் கூடின
புனர்பூச நக்ஷத்ரத்திலே திரு நாரணன் உருவம் கண்டு நலம் மிகுத்துக் கொந்தளித்து எல்லாரும் குணாலக் கூத்தடித்து
மங்கள சங்க மிருதங்க பட ஹாத்யகில வாத்ய ஜய சப்த கோஷம் பண்ணி ராஜாவையும் அழைத்துக் காட்டி அருளிப்
பாலாலே திருமஞ்சனம் பண்ணி -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக் கண்டேன் மீண்டு அவனை
மெய்யே மிகக் கண்டேன் -என்கிறபடியே திரு நாராயணப் பெருமாளைத் திருவடி முதல் திருமுடி அளவும் -கண்ணாரக் கண்டு
அனுபவித்துத் தம் திருக்கையாலே மூன்று நாள் திரு ஆராதனம் செய்து அருளி மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று
பரமாச்சார்யரான ஸ்ரீ பராங்குசர் தமக்குத் தாம் அத்யந்த அபிமத சிஷ்யர் ஆகையாலும் –
தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் ஆகையாலும்
பித்ரு தனத்தைப் புத்ரன் விநியோகம் கொள்ளுமா போலே ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற ஸூத்ர புருஷார்த்தங்களை இகழ்ந்து
காற் கடைக் கொண்டு திரு நாரணன் தாளே உபாய உபேயம் என்று நிஷ்கர்ஷிக்கிற
ஒரு நாயகத் திருவாய் மொழியைத் திருநாராணனுக்கு சமர்ப்பித்து அருளினார் –

பின்பு ஸ்ரீ கல்யாண சரஸ்ஸின் வடமேலை மூலையிலே தம் த்ரிதண்டாலே கீற பாலாறு போலே பொங்கிக் கிளம்புகிற
திருமண் குவைகளைக் கண்டு மண்டுகிற ஆனந்த அதிசயேந அத்திருமண் கொண்டு பன்னிரண்டு திரு நாமம் சாத்தி அருளி
த்ரிதண்ட மண்டித கர புண்டரீகராய் விளங்கி அருளி -காடு வெட்டி -ஊரும் கோயிலும் சமைப்பித்துத் திரு நாராயணப் பெருமாளுக்கு
ஸ்ரீ பாஞ்சராத்ர சாத்விக சம்ஹிதையாலே ப்ரோஷணாதிகளை ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் திருக்கையால் செய்வித்து அருளி –
திரு நாரணற்கு நித்ய உத்சவ பக்ஷ உத்சவ மாச உத்சவ சம்வஸ்த்ர உத்சவங்கள் எல்லாம் மஹோத்ஸவமாக நடத்துகைக்கு
உத்சவ பேரம் இல்லையே என்று மிகவும் வ்யாகுலித சித்தராய் திருக் கண் வளர்ந்து அருள –
அப்போது இவர் ஸ்வப்னத்திலே திரு நாரணப் பெருமாள் எழுந்து அருளி -நம் உத்சவ பேரமான ஸ்ரீ ராம பிரியர்
இப்போது டில்லி ஏற எழுந்து அருளி துருஷ்க ராஜ க்ருஹத்திலே லீலை கொண்டாடி எழுந்து அருளி இருக்கிறார் –
அங்கு ஏறப் போய் எழுந்து அருளுவித்துக் கொண்டு வாரீர் என்று திரு உள்ளமாய் அருள –

ஸ்ரீ உடையவரும் பிராத காலமானவாறே எழுந்து இருந்து ஸ்வப்னத்தை முதலிகளுடன் ஆலோசித்துக் கொண்டு பயணகதியில் த்வரித்து
டில்லி ஏற எழுந்து அருளினவாறே டில்லி புரீந்தரரான ராஜாவும் இவரைக் கண்டு ப்ரத்யுத்தான ப்ரணதி பூர்வகமாக பஹு உபகாரம் செய்து
எழுந்து அருளின கார்யம் அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் எங்கள் குல தெய்வமான ஸ்ரீ ராமபிரியர் இங்கே எழுந்து அருளி இருக்கிறார் -அவரைத்தர வேணும் என்று அபேக்ஷிக்க
ராஜாவும் அப்படியே செய்கிறோம் என்று கொள்ளை கொண்டு சிறை வைத்த எம்பெருமான்கள் சிறைச் சாலையை சோதித்துக் கொள்ளீர்
என்று அப்பணை இட்டு விட இவரும் அங்கு ஏற எழுந்து அருளி சோதித்து -திரு நாரணர் வடிவுக்கு ஒத்து இராமையாலே
இத்தேவர்கள் ஒருவரும் அன்று என்று ஸ்ரீ ராம பிரியரை அவர்கள் காணாமையாலே முசித்துக் கிடக்க அன்று இரவில்
ஸ்ரீ ராம பிரியர் இவர் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி நீர் முசிப்பான் என் -நாம் அவன் மகளாலே பூஜை கொண்டு
அவள் சஜ்ஜா க்ருஹத்திலே இரா நின்றோம் -நம்மைக் கொண்டு போகும்படியாக அங்கே வாரீர் என்று அருளிச் செய்ய

ஸ்ரீ உடையவரும் இச் செய்தியை ராஜாவுக்கு அறிவிக்க அவனும் இப்படி உம்முடைய பக்கல் வ்யாமுக்தராகிறவர் தாமே வரக் கடவர் என்ன –
இவரும் அவரைக் கண்டு திருவடி தொழுதல் ஆகாதோ என்ன -அப்படியே ஆகிறது என்று இவரை அவனும் தன் மகள் சஜ்ஜா க்ருஹத்து ஏற
எழுந்து அருளுவித்துக் கொண்டு போக அங்கே ஸ்ரீ ராமபிரியரும் ஸ்ரீ உடையவரைக் கண்டு ஆஸ்ரித வாத்சல்யம் தோற்ற –
இட்ட சட்டையும் கட்டின சிறுச் சதங்கையும் இட்ட கஸ்தூரி திரு நாமமும் முடித்த மை வண்ண நறும் குஞ்சியும் –
செம் பொற் சதங்கைகள் சல சல என்று ஒலிக்க அகிலரும் காணும்படி வந்து ஸ்ரீ உடையவர் திருமடியிலே இருக்க
ஸ்ரீ உடையவரும் ஆனந்த அஸ்ருக்கள் பனிப்ப ஆனந்த ஏக ஆர்ணவ அந்தர் நிமக்நராய் புளகித நிகில அங்கராய் மார்பும் தோளும் பூரித்து –
என்னுடைய செல்வப் பிள்ளையோ என்று எடுத்து அணைத்துக் கொண்டு அருளினார் –
அன்று முதல் ஸ்ரீ ராம பிரியர்க்கு ஸ்ரீ செல்வப்பிள்ளை என்று திருநாமம் ஆய்த்து –
இத்தைக் கண்ட ராஜாவும் அத்யாச்சார்ய யுக்தனாய் அவர் திருவடிகளிலே விழுந்து சேவித்து அநேக விதமாக சத்கரித்து
பஹு உபசார ஸஹிதமாக சம்பத் குமாரரை யதி ஸார்வ பவ்மர்க்கு எழுந்து அருளுவித்துக் கொடுத்து அனுப்பினான்

ஸ்ரீ உடையவரும் அங்கு நின்றும் புறப்பட்டு இவரை எழுந்து அருளுவித்துக் கொண்டு த்வரித்து பயணகதியிலே
ஸ்ரீ யாதவாத்ரிக்கு எழுந்து அருளி சர்வரும் ஸ்ரீ யதிராஜகுமாரர் என்னும்படி விசேஷித்து புத்ர வாத்சல்யம் பண்ணி அபிமானித்து அருளி
ப்ரோஷணாதி பிரதிஷ்டா புரஸ் ஸரமாகத் திரு நாரணருடன் சேர்த்துத் திரு நாராயணப் பெருமாளுடைய திவ்ய உத்சவ கர்த்தாவாக்கி
நித்ய பக்ஷ மாச அயன சம்வஸ்த்ர உத்ஸவாதி மஹோத்சவத் திரு நாள்களும் நடத்தி அருளித் தீர்த்த பிரசாதமும் பெற்று
ஸ்ரீ யதிராஜ மடமும் கட்டி வைத்து ஐம்பத்து இருவர்கட்க்கு அன்பான ஊழிய கைங்கர்யத்தையும் கல்பித்து அருளி
ஐம்பத்து இருவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று சமுதாயத் திரு நாமமும் பிரத்யேகமாகத் தாஸ்ய நாமமும் ப்ரசாதித்து
அங்கே அவர்களை பிரதிஷ்டிப்பித்து குறைவறத் திரு ஆராதனமும் நடத்திக் கொண்டு இருக்க ஒரு நாள் வரையிலே
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் உள்ள ஆச்சார்யர்கள் உடனேயும் சீயர்கள் உடனேயும் ஐம்பத்து இவர்கள் உடனேயும்
சாற்றாத சாற்றின முதலிகள் உடனேயும் கொற்றி அம்மை மார்கள் உடனேயும் திருமேனிக் காவல் திரு வேணைக்காரர் உடனேயும்
பெரும் கூட்டத் திரு ஓலக்கமாக ஸ்ரீ ராமானுசனில் எழுந்து அருளி இருந்து –
திரு நாராயண புரம் என்று அந்நகரத்துக்கு திரு நாமம் சாத்தி அருளி
இத்திரு நாராயண புரத்திலே நித்ய வாசம் பண்ணுமவர்களுக்குப் பெரியோர்க்கும் நமக்கும் உண்டான
ஸ்ரீ பரமபதமும் ஆச்சார்ய கைங்கர்யமும் உண்டாம் -என்று அருளிச் செய்து அருளினார் –

இத் திரு மலை க்ருத யுகத்தில் சனத் குமாரர் ஸத்ய லோகத்தில் நின்றும் ஆனந்த மய திவ்ய விமானத்தோடே எழுந்து
அருளுவித்துக் கொண்டு வந்து ஸ்ரீ திரு நாராயணனை இங்கே பிரதிஷ்டிப்பிக்கையாலே ஸ்ரீ நாராயணாத்ரி என்றும்
த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயர் நாலு வேத புருஷர்களையும் சிஷ்யராக்கிக் கொண்டு வந்து வேத புஷ்கரணி கரையிலே
சதா வேத அத்யயன நிரதராய் இருக்கையாலே வேதாத்ரி என்றும் –
த்வாபர யுகத்திலே நம்பி மூத்த பிரானாலும் ஸ்ரீ கிருஷ்ணனாலும் ஆராதிக்கப் படுக்கையாலே யாதவாத்ரி என்றும் –
யுகே கலவ் து ஸம்ப்ராப்தே யதி ராஜேந பூஜநாத் -யதிசைல இதி ப்ரோக்தம் நாமதே யாந்த ரங்கிரே –என்கிறபடியே
கலி யுகத்திலே ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளி ஜீர்ண உத்தாரணம் பண்ணி அபிமானிக்கையாலே –
யதி சைலம் -என்று ப்ரஸித்தமாய்த்து –

அநந்தரம் பத்ம கிரியில் சென்று புத்த சமயங்களை வென்று என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் எங்கனம் ஆவர்களே-
என்னும்படி -அவர்களைக் கற் காணந் தன்னில் அரைப்பித்து நிஸ் சேஷமாக நிரசித்து நிஷ் கண்டகம் ஆக்கி அருளி
ஸ்ரீ பாஷ்யமும் வ்யாக்யானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் திருவடிகளில் பன்னிரண்டு சம்வத்சரம்
வாழ்ந்து அருளுகிற காலத்தில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ கோயிலில் நின்றும் எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே சேவித்து இருக்க –
இவரும் ஸ்ரீ பெரிய பெருமாளும் பெரும் திருச் செல்வமும் செய்கிறபடி என் என்று கேட்டு அருள
அவரும் தேவரீர் இல்லாத குறை ஓன்று ஒழிய மற்று ஒரு குறையும் இல்லை -என்ன
இவரும் சோழன் பக்கல் எழுந்து அருளின ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பெரிய நம்பியும் செய்தபடி என் என்று கேட்டு அருள –

ஸ்ரீ வைஷ்ணவரும் -ஸ்ரீ கோயிலில் நின்றும் ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ பெரிய நம்பியையும் ராஜ மனுஷ்யர் அழைத்துக் கொண்டு
போய்ச் சோழன் முன்னே விட அவனும் இவர்களைப் பார்த்து -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணாதிகளாலே பஹு பிரகாரமாக ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -ஜகத் காரண பூதன் –
த்யேயனானவனும் அவனே -சர்க்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவும் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் அவனுக்குப் புத்ர பவ்த்ராதிகளாய்
நியமனத்தில் இருக்குமவர்கள் -அவ்வளவும் அன்றியே
ஏக ப்ராஸீ சரத்பாத மந்ய பிராஷாள யந்முதா -அபரோஅதீ தரந் மூர்த்நா கோ அதிகஸ் தேஷு புண்யதாம் -என்று
திருவடிகளை நீட்டினவன் ஒருவன் -கமண்ட லூதகத்தாலே பக்தி புரஸ்சரமாகத் திருவடிகளை விளக்கினவன் ஒருவன் –
தத் தீர்த்தத்தை ப்ரீதியோடே சிரஸா வஹித்தவன் ஒருவன் -இவர்களில் பெரியவன் ஆர் என்று நீயே விசாரித்துக் காணாய் என்ன –
அவனும் இசையாது இருக்க -இவரும் இம் மாத்திரமேயோ –

யச்சவ் ச நிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோதகேந தீர்த்தேந மூர்த்நி வித்ருதேந சிவஸ் சிவோ அபூத்-என்று ஸ்ரீ த்ரிவிக்ரம பாத ஜல சங்கத்தால்
கபாலித்தவம் போய் சிவத்தவம் உண்டானவன் இறே இவன் என்று அருளிச் செய்ய –
சோழனும் அது கேட்டு அதி க்ருத்தனாய்-நீர் பெரிய வித்வான் ஆகையால் உமக்கு வேண்டியபடி எல்லாம் சொல்ல வல்லீர் -அங்கன் அன்று
நான் சொன்னபடி -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு எழுத்திடும் என்று ஓலையைக் கையில் கொடுத்து கனக்க நிர்பந்திக்க
ஸ்ரீ கூரத்தாழ்வானும் தம்முடைய த்ருட அத்யவசாயமாம் படியே -சிவாத் பரதரம் நாஸ்தி த்ரோணம் அஸ்தித பரம் – என்று ஓலைக்கு
எழுதிட்டு அருளினார் -சோழனும் இவர் இப்படி பரிஹஸித்து ஓலைக்கு ஒப்பம் இட்டபடி கண்டு அத்யந்த கோபாக்ர சித்தனாய் –
ஸ்ரீ பெரிய நம்பியை அழைத்து நீர் எழுத்திடும் என்ன -அவரும் ஸ்ரீ மன் நாராயணனே பரன் -என்று பஹு முகமாக அருளிச் செய்ய –
ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ நம்பியையும் நேத்ர உத்பாடனம் பண்ணச் சொல்ல -அவ்வளவில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் சோழனைக் குறித்து –
நீ மஹா வீர சைவன் ஆகையால் உன்னைப் பார்த்த கண்கள் எனக்கு ஆகாது என்று தம்முடைய திவ்ய நகங்களால் கீறிக்
கண்ணை வாங்கிப் பொகட –

ராஜ மநுஷ்யர்களும் ஸ்ரீ பெரிய நம்பியைப் பிடித்துக் கொண்டு போய் அவன் சொன்னால் போலே செய்து படை வீட்டில் நின்றும்
புறப்பட விட -ஸ்ரீ ஆழ்வானும் தரிசனத்துக்கு தர்சனம் கொடுக்கப் பெற்றோமே என்று ப்ரீதராய் இருக்க –
ஸ்ரீ பெரிய நம்பியும் வ்ருத்தராகையாலே -அவ்வேதனை பொறுக்க மாட்டாமல் அங்கே ஒரு கொல்லைத் தலை மாட்டிலே
ஸ்ரீ ஆழ்வான் திருமடியில் திரு முடியும் -ஸ்ரீ அத்துழாய் திரு மடியிலே திருவடிகளுமாய் -இளைத்துக் கண் வளர்ந்து அருள –
ஸ்ரீ நம்பியை ஆபத் தசையில் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ அத்துழாயும் -அங்கு நின்றும் ஸ்ரீ கோயில் ஏறப் போனாலோ -என்ன
ஸ்ரீ நம்பியும் -நாம் அங்கே போய் பிரக்ருதியை விடில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ நம்பிக்கும் உட்படத் திருவடி சாரும் போது
ஸ்ரீ கோயில் ஏறப் போக வேண்டிற்று இல்லையோ என்று சங்கிப்பர்கள் என்று அருளிச் செய்து –
அடியிலே ஆச்சார்யர் கிருபை பண்ணினத்துக்கு ஸ்ரீ பரமபதம் சித்தம் என்று ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை த்யானித்துக் கொண்டு
அங்கே ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்து அருளினார் -ஆகையால் பிரபன்னனுக்கு அந்திம தேச நியதி இல்லை என்றபடி –

பின்பு அங்கே அநாத பிரேத சம்ஸ்காரம் பண்ணிக் கொண்டு திரிவார் சிலர் வந்து -இவருக்கும் அப்படி பண்ணக் கடவோம் என்று
தங்கள் சம்ஸ்காரம் செய்வதாக உத்யோகிக்க ஸ்ரீ ஆழ்வானும் அத்யாவசாயம் குலையாமல் -வாருங்கோள் மாணிகாள்-
ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு கிஞ்சித் கரிக்க இருக்க ஸ்ரீ வைஷ்ணவனுமாய் அறவையுமாய் இருப்பவனை
நீங்கள் எங்கே தேடுவுதிகோள்-என்று அவர்களை உபேக்ஷித்து விட்டார் -பின்பு சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்ரீ பெரிய நம்பியை சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்தி ஸ்ரீ ஆழ்வானை ஒரு கட்டணத்தில் எழுந்து அருளுவித்துக் கொண்டு
ராத்திரியிலே ஒருவரும் காணாமல் ஸ்ரீ கோயிலிலே வந்து புகுந்தார்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ பெரிய நம்பியைப் போலே
அடியேனுக்கும் இச் சரீரம் போய்த்தில்லையே- என்று கொண்டு -முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
என்று போர கிலேசித்து அருளினார் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் கேட்பார் செவி சுடு வார்த்தை கேட்டு ஐயோ கண்ணபிரான் அறையோ என்று கோஷித்துக் கொண்டு
வேர் அற்ற மரம் போலே விழுந்து கிடந்து துடித்துத் திரு மிடறு தழு தழுப்ப அத்யந்தம் அவசன்னராய் திரு முத்து உதிர்த்து –
கண்ண நீர் கைகளால் இறைத்து க்லேசிக்கும்படி கண்டு அருகு இருந்த முதலிகள் தேற்ற -தேறி
ஸ்ரீ ஆழ்வான் ஆகிலும் திருமேனி உடன் இருக்கப் பெற்றோமே -என்று அருளிச் செய்து
ஸ்ரீ பெரிய நம்பிக்கு சூர்ண பரிபாலனம் செய்து பெருக்கத் திரு அத்யயனம் நடத்தி அருளி –
ஸ்ரீ ஆழ்வானுக்குத் திருக்கண் போச்சுதே -என்று வியாகுல ஹ்ருதராய் மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டானை-
ஸ்ரீ ஆழ்வானையும் ஆராய்ந்து அங்குள்ள விசேஷங்களையும் அறிந்து வாரும் என்று ஸ்ரீ கோயிலுக்குப் போக விட்டு
பூர்வம் போலே வ்யாக்யானித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

—————————————

ஸ்ரீ உடையவரின் ஆச்சார்யர்களுடைய திரு நக்ஷத்ரமும் தனியன்களும்

பெரிய நம்பி திரு நக்ஷத்ரம் -திரு மார்கழிக் கேட்டை

அவர் தனியன் –
கமலா பதி கல்யாண குண அம்ருத நிஷே வயாபூர்ண காமாய சததம் பூர்ணா யமஹதே நம

ஆச்சார்யாத் யாமுனேயாததிபத நிகமாந்தார்த்த ஜாதம் பிரபத்திஞ் சோபாதி க்ஷத்ர ஹஸ்யாந்ய பியதி பதயே
கிஞ்சதத் ரக்ஷணார்த்தம் -சோழேந்திரம் ப்ராப்ய சோக்த்வாச தசி பர புமான் ஸ்ரீ பதிர் ஹேதி பீடாம் சாரீராம்
தத் க்ருதாஞ் சாப்ய ஸஹ தமந வைதம் மஹா பூர்ணமார்யம்

—————–

ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பியை அந்திம தசையில் தேவரீர் திரு உள்ளத்திலே நினைத்து இருக்கிற நினைவு என் என்று
ஸ்ரீ பாதத்து முதலிகள் கேட்க ஸ்ரீ நம்பியும் -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திரு உள்ளத்தை ஒரு பஷி புண் படுத்திற்று என்று
சொல்லி நிர்ப்பரராய் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை த்யானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

அதாவது சரணாகத பரித்ராணமும் போராது என்று இருக்குமவன் இருக்க நமக்கு இனி வேறே ஒரு நினைவு உண்டோ என்று கருத்து –
இது கண்டு ஸ்ரீ பாதத்து முதலிகள் பிராயேண துக்கித்துத் தேறி ஸ்ரீ தெற்காழ்வாரைக் கொண்டு
ஸ்ரீ நம்பிக்குத் தீர்த்தம் கொண்டாடித் திரு அத்யயனமும் நடத்தி அருளினார்கள்

அவர் திரு நக்ஷத்ரம் திரு வைகாசி ரோஹிணி

அவர் தனியன்
சம தம குண பூர்ணம் யாமுனார்ய ப்ரஸாதாத் அதிகத பரமார்த்தம் ஞான பக்த்யாதி சிந்தும் –
யதிபதிநத பாதம் ஸ்லோக தத்வார்த்த நிஷ்டம் ஸ்ரித துரித தரம் ஸ்ரீ கோஷ்டி பூர்ணம் நமாமி

ஸ்ரீ வல்ல பதாம் போஜ -(யாமுனார்ய பதாம் போஜ -பாட பேதம்-)தீ பக்த்யாம்ருத சாகரம் –
ஸ்ரீ மத் கோஷ்டீ புரீ பூர்ணன் தேசிகேந்த்ரம் பஜாமஹே

—————————————

திருமாலை ஆண்டான் திரு நக்ஷத்ரம் மாசியில் மகம்

அவர் தனியன்
ராமாநுஜாய முனீந்ராயா த்ராமிடீ ஸம்ஹிதார்த்தம் -மாலாதர குரும் வந்தே வாவ தூகம் விபஸ்சிதம்

—————–

திருவரங்கப் பெருமாள் அரையர் திரு நக்ஷத்ரம் வைகாசி கேட்டை

அவர் தனியன்
அத்யாபயத் யதீந்த்ராய பராங்குச சஹஸ்ரிகாம் –தந் நாத வம்ஸயம் வந்தே அஹம் ஸ்ரீ ரெங்காப தேசிகம்

————————-

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திரு நக்ஷத்ரம் -சித்திரையில் ஸ்வாதி

அவர் தனியன்
பிதா மஹஸ்யாபி பிதா மஹாயா ப்ராசேத சாதேச பல ப்ரதாய ஸ்ரீ பாஷ்யகார உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்தாத்

—————————————

ஸ்ரீ திருக் கச்சி நம்பி திரு நக்ஷத்ரம் -மாசியில் ம்ருக சீர்ஷம்

அவர் தனியன்
கருணாகர பாதாப்ஜ சரணாய மஹாத்மனே ஸ்ரீ மத் கஜேந்திர தாஸாயா காஞ்சீ பூர்ணாய தே நம

———————-

அநந்தரம் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான் தவரித்துப் பயண கதியில் ஸ்ரீ கோயிலிலே சென்று
ஸ்ரீ கூரத்தாழ்வானை சேவித்து நிற்க ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ சிறியாண்டானைக் கண்டு ஸ்ரீ உடையவரை சேவித்தால் போலே ஸந்துஷ்டராய் –
ஸ்ரீ உடையவர் செய்து அருளுகிறபடி என் என்று வினவி அருள இங்குத்தை விசேஷம் எல்லாம் ச விஸ்தரமாக
விவரித்துச் சொல்லக் கேட்டு ஆனந்தத்தை இரா நிற்க ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ உடையவர் ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுவாய்
தேவரீருக்கும் திருக்கண் போச்சுதே -என்று மிகவும் ஆர்த்தராய் அடியேனை ஆராய்ந்து வா என்று விட்டு அருளினார் என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் உலகங்களுக்கு எல்லாம் ஒரு உயிரான தாம் ஸூகமே இருக்கப் பெறில் இவ்விபத்து அடியேன் கண் அழிவு மாத்திரமே
கொண்டு போகப் பெற்றதே -என்று ஹ்ருஷ்டராய் இருக்கிறார் என்று விண்ணப்பம் செய்யும் என்று விட –
அவ்வளவில் சோழனுக்கு கழுத்தில் புண்ணாகி புழுத்துப் புரண்டான் என்று கேட்டு ஸ்ரீ கங்கை கொண்ட சோழ புரத்து ஏற
ஸ்ரீ ஆண்டானும் சென்று அச்செவிக்கு இனிய செஞ்சொல்லை நிச்சயித்து கொண்டு எழுந்து அருள வழியிலே சந்தித்த
ஸ்ரீ அம்மங்கி அம்மாளையும் கூட்டிக் கொண்டு தவரித்துப் எழுந்து அருளி ஒரு நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகளுடன்
அனுஷ்டான அர்த்தமாக திருக்கல்யாண கரையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ கோயிலில் நின்றும் எழுந்து அருளின
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டானும் ஸ்ரீ அம்மங்கி அம்மாளும் ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் தங்கள்
ஆனந்த அஸ்ருக்களால் நனைத்து தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ ஆழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் அபராதம் பண்ணின சோழன்
கழுத்திலே புண்ணாய்ப் புழுத்து புரண்டு போனான் -என்று விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ உடையவரும் கர்ணாம்ருதமான கட்டுரையைக் கேட்டு திரு மார்பும் திருத் தோளும் பூரித்து
சந்தோஷ அதிசயத்துடன் இவர்களை வாரி அணைத்துக் கொண்டு ஆனந்த அஸ்ருக்கள் கொண்டு அவர்களை வழிய வார்த்து
இவ்வளவு தூரம் இவ்விசேஷம் கொண்டு எழுந்து அருளின இவர்களுக்கு சிறக்க கனக்க கொடுக்கலாவது த்வயம் அல்லது இல்லை என்று
நிச்சயித்து மீளவும் த்வயத்தையே அவர்களுக்குப் பரிசிலாக இரங்கி அருளி தம் சந்நிதியில் முதலிகளைப் பார்த்து
இது கல்யாண சரஸ் ஸூ என்னுமது அந்வர்த்தமாகக் கண்டோம் என்ன முதலிகளும் அப்படியே யாம் என்று அத்தைக் கொண்டாட
அவர்களையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத வரதரான அழகிய ஸிம்ஹர் திருமலை ஏறி அவரையும் திருவடி வணங்கி
பகவத் பாகவத விஷயம் என்றால் அசஹமானனாய் போந்த ஹிரண்யனை முன்பு நிரசித்து அருளினால் போலே
இப்போது பரதத்வமான தேவரீரை இல்லை என்று ஸாதூநாமுபமான பூதரான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஒப்பான
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் அபராதம் பண்ணின இவனையும் கிருமி கண்டனாக்கி நசிப்பித்து அருளிற்றே-என்று
விண்ணப்பம் செய்து தீர்த்த பிரசாத ஸ்வீ காரம் பெற்று விடை கொண்டு அப்போதே புறப்பட்டு

ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக பெரிய ப்ரீதியோடே ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் திரு முன்பே சென்று திருவடி தொழுது
திருப்பல்லாண்டை அனுசந்தித்து மங்களா சாசனம் பண்ணி நமோ நாராயணாயா என்று க்ருதாஞ்சலி புடராய்த் திருவடிகளை
நோக்கிக் கொண்டு -இனி அடியேன் ஸ்ரீ கோயில் ஏறப் போய் வருகிறேன் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ திரு நாராயணனும் நெடும் போது வாய் விட மாட்டாதபடி நிற்க ஸ்ரீ உடையவரும் நீர் உள்ளதனையும் இங்கேயே இரும் என்று
நியமித்து அருளிற்றே என்ன -ஆகில் அப்படியே செய்யும் என்று அர்ச்சக முகேன திரு உள்ளமாய் அருள

ஸ்ரீ எம்பெருமானாரும் புறப்பட்டு அருளி ஐம்பத்து இருவரைப் பார்த்து ஸ்ரீ திருநாரணனையும் ஸ்ரீ செல்வப்பிள்ளையையும்
மங்களா சாசனத்துடனே சதா தர்சனம் பண்ணிக் கொண்டு காலே காலே திருப்பணி திரு ஆராதனமும் நடத்திக் கொண்டு
சேவித்து இருங்கள் என்று நியமித்து அருள ஐம்பத்து இருவரும் ஸ்ரீ பாதத்தில் விழுந்து சேவித்து தேவரீர் திருவடிகளைப் பிரியில்
தரிக்க மாட்டோம் என்று ஆர்த்தராய் தலை இறக்கிட்டு நிற்க ஸ்ரீ உடையவரும் அப்போதே ஒரு சிந்தை செய்து
தம் விக்ரஹத்துக்குப் படி எடுத்தால் போலே விளங்குகிற தம்முடைய அர்ச்சா ரூப விக்ரஹத்தை அவதரிப்பித்து அதிலே
தம் திவ்ய சக்தியையும் பிரதிஷ்டிப்பித்து ஐம்பத்து இருவரை அழைத்து நாம் உங்களுக்காக இங்கே இரா நின்றோம் -என்று
ஸ்வ திவ்ய சக்தி பரிபூர்ணமான அவ்விக்ரகத்தை அவர்களுக்கு திரு ஆராதனமாக இரங்கி அருளி அவர்களைக் குறித்து –
ஸ்ரீ செல்வப்பிள்ளை கிணற்றின் கரையில் பிள்ளையாய் இருக்கும் -பேணிக் கொண்டு போருங்கோள் என்று நியமித்து அருளி –
அவர்கள் கையிலே ஸ்ரீ செல்வப்பிள்ளையை அடைக்கலமாகக் காட்டிக் கொடுத்து அருளி -திரு விளக்கு திருமாலை அமுதுபடி சாத்துப்படி
முதலான உபசாரங்கள் எல்லாம் நன்றாகப் பேணிச் செய்து கொண்டு துரோக புத்தியால் ஒரு காலும் தீங்கு நினையாதே
அன்யோன்யம் சஹ்ருதராய் ஊழிய கைங்கர்யங்களையும் மறவாதே புத்தி புரஸ்சரமாக பண்ணிப் போருங்கோள் என்று
தம் திருவடிகளைத் தொடுவித்துக் கொண்டு நியமித்து அருளி ஸ்ரீ செல்வப்பிள்ளையை பிரிய மாட்டாமல்
திருவடிகளை முகந்து விழுவது எழுவது தொழுவ தாய்த் திரு உள்ளம் உருகித் திருக் கண்கள் துளிக்கத் திவ்ய விமானத்தையும்
திருப்பதியையும் திருச் சோலை எழில்களையும் திருமண் குவைகளையும் புரிந்து புரிந்து பார்த்து பார்த்து அஞ்சலித்து
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு புத்ர வாத்சல்யம் பின்னே தள்ள ஸ்ரீ நம்பெருமாள் அருள் முன்னே நடத்த –
ஒரு நடையிலே ஒன்பது நடை நடந்து ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் –

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: