ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் -/ஸ்ரீ பட்டர் வைபவம்-/வெள்ளை சாத்துதல்–ஸ்ரீ கொங்கு பிராட்டி வ்ருத்தாந்தம் —

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ பட்டர் வைபவம்-

ஸ்ரீ உடையவரும் இப்படி ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கி வாழ்ந்து அருளுகிற காலத்திலே இவரை ஆஸ்ரயித்த முதலிகளில்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சகல ஸாஸ்த்ர வித்தமராய் -ஆச்சார்ய பத ஏக நிஷ்டராய் -அபிகமந உபாதான இஜ்யா ஸ்வாத்யாய யோகங்கள் ஆகிற
பஞ்சகால பராயணராய் -விகித விஷய விரக்தராய் இரா நிற்க -ஒரு வர்ஷா காலத்திலே மத்யாஹ்ந காலம் அளவாக வர்ஷம் வர்ஷிக்க
சங்கவ காலம் தவறி மத்யாஹந காலம் ஆனவாறே உபாதான காலம் தவறி அஹந்யஹநி சிஷ்டாக்ர புண்ய ஜன க்ருஹங்களில்
உபாதானம் பண்ணி வந்தே திருமேனி யாத்ரை நடக்க வேண்டுகையாலும் அற்றைக்குத் திரு மாளிகையில் சஞ்சித பதார்த்தம் ஒன்றும்
இல்லாமையாலும் நீராடி எழுந்து அருளி திருவடி விளக்கி ஒரு பலத்தை அமுது செய்யப் பண்ணி தீர்த்த ஸ்வீ காரம் பண்ணி இருக்க
சாயம் காலமானவாறே தத் காலிக கர்மத்தைச் செய்து அருளி ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து திருவாய் மொழி அனுசந்தானமே தாரகமாக
பட்டினியே கண் வளர்ந்து அருள அவ்வளவில் நம்பெருமாள் பெரிய அவசரம் அமுது செய்து அருளி திருச் சின்னம் பணிமாற

ஸ்ரீ ஆண்டாள் காஹள நாதம் கேட்டு -உம்முடைய பக்தர் பட்டினியே இருக்க நீர் என்ன குலாவி குலாவி அமுது செய்து அருளுகிறீர் என்ன
அவ்வாக்கியம் பெரிய பெருமாள் திருச் செவியில் உறுத்தி திண்ணையிலே நித்திரை பண்ணிக் கொண்டு இருந்த ஸ்ரீ உத்தம நம்பி கனவிலே
ஸ்ரீ பெருமாள் எழுந்து அருளி -நம்பீ ஆழ்வான் இன்றைக்கு உபவசித்து இருக்கிறார் -நம் அக்கார அடிசில் தளிகையை உபய சத்ர சாமர சகல வாத்ய
ஸஹிதமாக சிரஸா வஹித்துக் கொண்டு போய்க் கொடும் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ உத்தம நம்பியும் ஸ்வப்னம் தெளிந்து கண்களை விழித்துப் பார்த்து த்வரித்து எழுந்து இருந்து ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த படியே
தளிகையை தாமே சிரஸா வஹித்துக் கொண்டு அகில வாத்யத்துடன் ஸ்ரீ ஆழ்வான் திரு மாளிகை செல்ல
ஸ்ரீ ஆழ்வானும் பதறி எழுந்து இது என் என்று திகைத்து எதிரே செல்ல ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ நம்பெருமாள் உமக்கு அக்கார வடிசில் தளிகை
அனுப்பி உள்ளார் அங்கீ கரியும் என்ன ஸ்ரீ ஆழ்வானும் தளிகையை மஹா பிரசாதம் என்று சிரஸா வஹித்துக் கொண்டு
அடியேனுக்கு அடியிலே சர்வ அபீஷ்டமும் தந்து அருளினார் -இது கிரயத்தளிகையாய் இருக்கும் -என்று தமக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்குமாக
இரண்டு திரளை அங்கீ கரித்து சேஷித்ததை போக விட்டு அருளி ஸ்ரீ ஆண்டாளை பார்த்து நீ என்ன நினைத்தாய் என்ன –
அவளும் அடியேன் ஒன்றும் நினைக்கவில்லை -ஸ்ரீ பெருமாள் அவசரம் அமுது செய்து அருளி திருச் சின்னம் பணி மாறினவாறே-
உம்முடைய பக்தர் இப்படி பட்டினியாய் இருக்க நீர் என்ன குலாவி குலாவி அமுது செய்கிறீர் என்றேன் அத்தனை என்று விண்ணப்பம் செய்ய
நீ இப்படிச் சொல்லலாமோ என்று ஸ்ரீ ஆண்டாளை வெறுத்து பிரசாதத்தை தாமும் ஸ்வீ கரித்து அவளுக்கும் பிரசாதித்து அருளினார் –
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் அவதரிக்கைக்கு ஹேது இத்திரள்கள் இறே

இப்படி ஸ்ரீ நம்பெருமாள் அனுக்ரஹத்தால் ஸ்ரீ ஆழ்வானுக்கு ஒரு குமாரர் வைகாசி அனுராதத்தில் திருவவதரித்து அருள
திரு நாமம் சாத்துகைக்கு முதலான உஜ்ஜீவன அம்சத்துக்கு ஸ்ரீ உடையவரே கடவர் என்று ஸ்ரீ ஆழ்வான் தமக்கு அதில்
அந்வயம் அற்று இருக்க ஸூத்யாசவ்ச நிவ்ருத்தி யானவுடனே பத்து நாளும் கடந்த இரண்டா நாள் ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ ஆழ்வான் திரு மாளிகை ஏற எழுந்து அருளி ஸ்ரீ எம்பாரைப் பார்த்து ஸ்ரீ ஆழ்வான் திருக் குமாரரை எடுத்துக் கொண்டு
வாரும் என்ன அவரும் உள்ளே ஸ்ரீ ஆண்டாள் பக்கலிலே சென்று குலக் கொழுந்தான குமாரரை தம் மார்பிலே அணைத்துக் கொண்டு
த்ருஷ்ட்டி தோஷாதிகள் வாராத படி பந்தணை தீரக் குழந்தைக்கு ரக்ஷணார்த்தமாக த்வய அனுசந்தானத்துடன் மங்களா சாசனம்
பண்ணிக் கொண்டு வந்து ஸ்ரீ எம்பெருமானார் தண் தாமரைக் கண்களால் குளிரக் கடாக்ஷித்து அருளும்படி திருக்கைத்தலத்தே
பிடித்து அருள ஸ்ரீ உடையவரும் ஹர்ஷ பிரகர்ஷத்துடன் ஆனந்த அஸ்ருக்கள் பனிப்பக் கடாஷிக்கும் அளவில் சிஸூவினுடைய
பசுகு பசுகு என்கிற தேஜோ விசேஷத்தையும் திருமுக ஒளியையும் கண்டு ஸ்ரீ எம்பாரே த்வயம் பரிமளியா நின்றது என் செய்தீர் என்ன
அவரும் சிஸூவுக்கு காப்பாக திவ்ய அனுசந்தானம் பண்ணிக் கொண்டு எடுத்து விடை கொண்டேன் என்ன
ஸ்ரீ உடையவரும் கர்த்தவ்ய அம்சத்துக்கு முற்பட்டீரே என்று திருமேனி பேணுதலுக்கு உகந்து அருளி
இவர் உஜ்ஜீவன அம்சத்துக்கும் நீரே கடவீர் என்று நியமித்து அருளி பசும் குழந்தைக்கு பஞ்சாயுதத் திரு ஆபரணமும் தம் திருக்கையாலே சாத்தி அருள
நாம கரணத்திலே ஸ்ரீ எம்பார் திருக்கையாலே திரு இலச்சினையும் சாத்துவித்து ஸ்ரீ பராசர பகவான் திரு நாமமாக ஸ்ரீ பராசர பட்டர் என்ற
திரு நாமத்தையும் சாத்தி ஸ்ரீ ஆளவந்தாருடைய இரண்டாம் இழவையும் தீர்த்து அருளினார் –
புத்ரீ க்ருதோ ரங்க துரந்த ரேண பராசர கூர குல ப்ரதீப-கோவிந்த சிஷ்யஸ் ச து யாமுநார்ய மநோ ரதம் பூரித வாந்த்விதீயம் -என்று
இவ்வர்த்தம் ஸ்ரீ லஷ்மீ காவ்யத்திலே ஸ்ரீ உத்தம நம்பியாலும் சொல்லப்பட்டது இறே

அநந்தரம் ஸ்ரீ எம்பார் திருத் தம்பியார் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குமாரர் அவதரித்து அருள அத்தைக்கு கேட்டு உகந்து
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆளவந்தார் கிருஷி பலிக்கப் பெற்றதே என்று அவர் திருமாளிகை ஏற எழுந்து அருளி அவர் குமாரரையும் கிருபையாலே
கடாக்ஷித்து அருளி அக்குமாரருக்கு ஸ்ரீ பராங்குச நம்பி என்று ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமம் சாத்தி அருளி
ஸ்ரீ ஆளவந்தாருடைய மூன்றாம் இழவையும் தீர்த்து அருளினார் —
கோவிந்த ராஜாந்வயஜோ மநீஷீ பரங்குசோ யமுனவை மநஸ்யம் அபா சகார பிரசபன் த்ருதீயம் விராஜதே வ்ருத்தமணி ப்ரதீப -என்று
இதுவும் ஸ்ரீ லஷ்மீ காவ்யத்திலே சொல்லப் பட்டது இறே

பின்பு ஸ்ரீ பெருமாள் மஞ்சள் நீர் குடிப்பித்து ஸ்ரீ பட்டரை புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளி திரு மணத் தூண் அருகே
தொட்டில் இட்டு ஸ்ரீ நாச்சியார் சீராட்டி வளர்க்க வளர்ந்து அருளுகிறவர் ஸ்ரீ பெருமாள் அமுது செய்வதற்கு முன்னே தவழ்ந்து சென்று
படைத்து இருந்த தளிகையில் அள்ளி அமுது செய்யும் படி யாயிற்று வளர்ந்து அருளினது
ஸ்ரீ பட்டர் ஐந்து திரு நக்ஷத்ரத்திலே நெடுமாற்கு அடிமை அனுசந்திக்கிற ஸ்ரீ ஆழ்வானை ஐயா சிறுமை பெருமை ஆகிற பரஸ்பர வ்ருத்த
தர்ம த்வயம் ஒரு வஸ்துவில் கிடக்குமோ -ஸ்ரீ ஆழ்வார் சிறு மா மனுசர் என்று இரண்டையும் சேர அருளிச் செய்வான் என் என்று கேட்க –
ஸ்ரீ ஆழ்வானும் நல்லீர் கேட்டபடி அழகு ஈது -நீர் அநுபநீதர் ஆகையால் உமக்கு இப்போது சாஸ்திரம் கொண்டு இசைவிக்க ஒண்ணாது –
ப்ரத்யக்ஷத்தில் உமக்கு காட்டுகிறோம் -கேளீர் திருமேனி சிறுத்து ஞானம் பெருத்து இருக்கிற
ஸ்ரீ சிறியாச்சான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போல்வாரைக் காணும் சிறு மா மனுசர்-என்கிறது
என்று இசைவித்து அருளிச் செய்தார்

ஸ்ரீ பட்டர் பின்னையும் ஒரு நாள் திரு வீதியிலே புழுதி அளைந்து விளையாடா நிற்க ஒருவன் சர்வஞ்ஞன் பட்டன் வந்தான் -என்று
அதி சம்பிரமத்துடன் காளமூதி வர இவரும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
முதலான பெரியோர்கள் இருக்கும் இடத்தில் இவன் யாரடா சர்வஞ்ஞ பட்டன் என்று விருதூதி வருகிறான் என்று இரண்டு திருக்கையாலும்
புழுதியை அள்ளிக் கொண்டு அவனைப் பார்த்து நீ சர்வஞ்ஞன் அன்றோ இது எத்தனை சொல் என்ன –
அவன் அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாதே லஜ்ஜித்து வாய் அடைத்து கவிழ் தலையிட்டு நிற்க ஸ்ரீ பட்டரும் அவனைப்பார்த்து –
கெடுவாய் இது ஒரு கைப்புழுதி என்று சொல்லி சர்வஞ்ஞன் என்று விருதூதித் திரிய மாட்டாதே அஞ்ஞனாய் விட்டாயே –
இனி உன்னுடைய சர்வஞ்ஞன் என்கிற விருதையும் ஸம்ப்ரமத்தையும் பொகடு என்று காளத்தையும் பறியுங்கோள்-என்கிற மழலைச் சொல்லக் சொல்ல
அது கேட்டு இவர் ஆருடைய குமாரர் என்ன ஸ்ரீ ஆழ்வான் குமாரர் -என்று அங்குள்ளார் சொல்ல கேட்டு அவன் புறப்பதன் குட்டி தவழுமோ என்று
ஆச்சர்யப்பட்டு ஸ்ரீ பட்டரை தன் தண்டிகையிலே வைத்துக் கொண்டு ஸ்ரீ ஆழ்வான் திருமாளிகை வாசலிலே சென்றவாறே
ஸ்ரீ பொன்னாச்சியார் கண்டு இவர் செய்த சிறுச் சேவகத்தைக் காட்டி வாரி எடுத்துக் கொண்டு த்வய அனுசந்தானத்தாலே ரக்ஷை இட்டு
தம்பரமல்லன ஆண்மைகளைத் தனியே நின்று தான் செய்வாரோ எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் என்று
முந்தானையால் இவரை முட்டாக்கியிட்டு உள்ளே கொண்டு புகுந்து கண் எச்சில் உண்டாக இவரைத் திரு வீதியிலே போக விடுவார்களோ -என்று வெறுத்து
ஸ்ரீ ஆண்டாள் திருக்கையிலே கொடுத்து ஸ்ரீ பாத தீரத்தத்தைத் தெளித்து இவ்விபூதியில் இவர் நெடுநாள் தங்குமவரோ -என்று வயிறு பிடித்து அருளினார்

ஸ்ரீ பட்டரை உபநீதரான பின்பு வேத அத்யயனம் பண்ணுவிக்க இவர் மேதை இருக்கும்படி -ஒரு நாள் சந்தை இட ஓதி அதின் மற்றை நாள்
ஓதுகைக்கு எழுந்து அருள மறித்துச் சந்தையிடப் புக்கவாறே ஓதுகிற கடையிலே நின்றும் போந்து விளையாடிக் கொண்டு எழுந்து அருளி இருக்க
எல்லாரும் ஓதா நிற்க இவர் புறப்பட்டு வந்தார் என்று ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளும் கேட்டு
அப்பரே எல்லாரும் ஓதா நிற்க நீர் ஓதாமல் வருவானேன் என்ன
இவரும் அவர்கள் ஓதின இடத்தையே ஓதா நின்றார்கள் என்ன -ஆகில் நீர் நேற்றைச் சந்தை இட்ட ப்ரஸ்னத்தைச் சொல்லிக் காணீர் என்ன
சந்தை விட்டபடியே உச்சரித்துக் காட்டி அருள ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளும் பயப்பட்டு
இன்னம் சிறிது நாள் இவரை ஓத விட ஒண்ணாது -என்று தங்களிலே சங்கித்து இருந்தார்கள் –

பின்பு ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பட்டருக்கு அர்த்த சிஷைகளும் தத்வ சிஷைகளும் பண்ணி வைத்தார்கள்
ஸ்ரீ பெருமாள் ஒரு கால் திருத் திரையை வளைத்துக் கொண்டு ஏகாந்தமாக எழுந்து அருளி இருக்க ஸ்ரீ பட்டர் திருவடி தொழப் புக
ஸ்ரீ பெருமாள் முனிந்து புறப்பட விடத் திரு உள்ளமாக அவர் புறப்பட அளவிலே அவனை அழையுங்கோள்-நம் ஸ்ரீ பட்டருக்கு அருளப்பாடு என்ன –
இவரும் உள்ளே புகுந்து தண்டன் இட்டு நின்ற அளவில் ஸ்ரீ பெருமாளும் நாம் புறப்பட விட்ட போது என் நினைந்து இருந்தாய் என்ன –
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சியாருமாக நினைத்து இருந்தேன் -என்ன -முன்பு நம்மை நினைத்து இருந்தபடி எங்கனே என்று கேட்டு அருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளுமாக நினைத்து இருந்தேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் நம் ஆணை நம்மை முன்பு போலே நினைத்து இரும் -என்று திரு உள்ளமாய் அருளினார் –

ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பட்டருடைய விவாஹோசி தவய பரிணாமத்தைக் கண்டு ஸ்ரீ உடையவருடன் பிள்ளைக்கு விவாஹம் பண்ணி வைக்கும்படி
எங்கனே -நம் உறவு முறையார் ப்ராக்ருதராய் இரா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பெரிய நம்பி திருமேனி சம்பந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர் சந்தானிகர் இடத்திலே றே என்ன
ஸ்ரீ ஆழ்வானும் சம்மதித்து ஸ்ரீ ஆண்டாளுடன் ஆலோசித்து ஸ்ரீ உடையவரை முன்னிட்டுக் கொண்டு அவர்கள் இடத்தே பெண் கேட்க
அவர்களும் ஸ்ரீ பட்டருடைய ஆபிஜாத்யம் கண்டு கொடுக்கத் தேட புது சம்பந்தம் என்று ஒரு கால் இசையாது இருந்தார்கள்
ஸ்ரீ ஆண்டாள் ஒருநாள் ஸ்ரீ ஆழ்வானைப் பார்த்து பிள்ளைகள் பெருத்தார்கள் -ஒரு கார்யம் செய்விக்க வேண்டாவோ என்ன
ஸ்ரீ ஆழ்வானும் ஈஸ்வர குடும்பத்துக்கு என்னைக் கரையச் சொல்லுகிறாயோ என்று அருளிச் செய்து
ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழுது மடங்குகிற போது -பிள்ளைகள் பெருத்தார்கள் -ஒரு கார்யம் செய்விக்க வேண்டாவோ
என்று சொல்லுகிறார்கள் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் திரு உள்ளம் பற்றி -நீரோ அதற்க்கு கடவீர் – நாம் அன்றோ –
தகுதியாகச் செய்விக்கிறோம் நீர் போம் என்று திரு உள்ளமாய் அருளிப் பெண் கொடுக்கும் படி அவர்களுக்கு ஸ்வப்னம் காட்டி அருள
மற்றை நாள் தாங்களே கொடுக்கிறோம் என்று வந்து

—————————————–

ஸ்ரீ உடையவர் சந்நியசித்து அருளுகிற போது சரீர சம்பந்தியை விட வேண்டுகிறதோ என்ன –
நம் ஸ்ரீ முதலி ஆண்டானை ஒழிய சன்னியசித்தோம் என்று அருளிச் செய்ய –
இப்படி அருளிச் செய்யலாமோ என்று ஸ்ரீ பாதத்து முதலிகள் கேட்க
இவரும் கையில் த்ரி தண்டத்தை விடில் அன்றோ நம் ஸ்ரீ முதலி ஆண்டானை விடுவது என்று அருளினார்

ஸ்ரீ முதலியாண்டான் திருவாய் மொழி ஓதினபடி -ஒரு நாள் ஸ்ரீ எம்பெருமானார் திருப் பள்ளிக் கட்டிலிலே ஏறி அருளி
ஒரு பாட்டுச் சந்தை இட்டவாறே -ஸ்ரீ முதலியாண்டான் பரவசராய் அருள இத்தைக்கண்ட ஸ்ரீ எம்பெருமானாரும் –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசாரதாத்மஜே வேத ப்ராசேதசாதா சாஷாத் ராமாயணாத்மநோ -என்னுமா போலே
வேதங்களும் ஸ்ரீ ஆழ்வார் முகேன திருவாய் மொழியாக வந்து அவதரித்தது ஓன்று அன்றோ என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ பெருமாள் பெரிய திருநாள் கண்டு அருளித் திருக் காவேரியில் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்து அருளுகிற போது
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ முதலியாண்டான் திருக்கைத்தலம் பற்றி எழுந்து அருளி நீராடி மீண்டு எழுந்து அருளும் போது
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருக்கைத்தலம் பற்றி எழுந்து அருள சேவித்து இருந்த முதலிகள் இதுக்கு அடி என் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் ஜென்மம் உயர்ந்து இருக்கச் செய்தே தாழ நில்லா நின்றோமே என்கிற அபிமானம் உண்டே அல்லாதார்க்கு –
அக்கொத்தையும் இல்லாதவர் இறே இவர் என்று அருளினார்

ஸ்ரீ பெரிய நம்பி திருமகளாரான ஸ்ரீ அத்துழாய் புக்கத்திலே வாழும் காலத்திலே ஒரு நாள் தீர்த்த மாடத் துணை வர வேணும் -என்று
மாமியாரை அபேக்ஷிக்க அவளும் உன் சீதன வெள்ளாட்டியைக் கொண்டு போ என்று கடுத்துச் சொல்ல ஸ்ரீ நம்பி பக்கலிலே வந்து
ஐயா என்னை இப்படிச் சொன்னாள் என்ன -ஸ்ரீ நம்பியும் நாம் அறியோம் உங்கள் சீயருக்கு சொல் என்ன
இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அருகில் இருந்த ஸ்ரீ முதலியாண்டானை -உமக்கு இந்தாரும் சீதன வெள்ளாட்டி –
என்று கொடுத்து போம் என்ன -ஸ்ரீ ஆண்டானும் கூட எழுந்து அருளி நீராடக் பண்ணுவித்துக் கொண்டு வந்து அவருடைய புக்ககத்திலே நின்று
தாச வ்ருத்திகளைச் செய்யத் தொடங்க -அவருடைய புக்ககத்தார் ஸ்ரீ ஆண்டான் இது என் என்ன -என்னை வரவிட்ட ஸ்ரீ உடையவரைக் கேளுங்கோள்-
ஆச்சார்யர் சொன்னது செய்ய வேணுமே -என்ன அவர்களும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்து ஏறப் போய் ஸ்ரீ நம்பீ ஸ்ரீ முதலியாண்டானை வரவிட்டு
எங்களை இப்படி நசிப்பிக்க வேணுமோ என்ன ஸ்ரீ நம்பியும் நாம் அறிந்தோமோ ஸ்ரீ உடையவரைக் கேளுங்கோள் என்ன
அவர்களும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆண்டானை ஸ்ரீ அத்துழாயுக்கு சீதன அடிமையாகத் தந்தோம் –
அவர் அங்கு நிற்கை உங்களுக்கு அநிஷ்டமாகில் இங்கு இருந்து அடிமை செய்கிறார் என்று அழைப்பித்துக் கொண்டு அருளினார் –

ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பியை ப்ரஹ்மேதத்தால் சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்து அருள இது கேட்டு ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்று தண்டன் சமர்ப்பித்து -சீயா சம்சாரம் சிலுகிடாத படி அடியேன் ஒரு வழியாலே வேலியிட்டு வர
தேவரீர் ஒரு வழியாலே பிரித்து அருளா நின்றதே என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் வாரீர் ஸ்ரீ உடையவரே இஷுவாகு வம்சத்தில் அவதரித்து சாமான்ய தர்மத்தை வெளியிட்டு அருளின ஸ்ரீ பெருமாளைக்
காட்டில் நான் பெரியவனோ-பெரிய உடையாரைக் காட்டில் இவர் தண்ணியரோ
சாமான்ய தர்மநிஷ்டரான தர்மபுத்திரரைக் காட்டில் நான் பெரியவனோ ஸ்ரீ விதுரைக் காட்டில் இவர் தண்ணியரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை கடல் ஓசையோ என்று அருளிச் செய்ய ஸ்ரீ உடையவரும் உகந்து சம்மதித்து இருக்கச் செய்தே
ஸ்ரீ மாறனேர் நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளே சரணம் என்னுதல்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் என்னுதல் செய்யக் கண்டிலோமே இது என் என்று ஸ்ரீ உடையவருடனே ஸ்ரீ பெரிய நம்பி அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் அப்போது அவருக்கு ஸ்லோஹ த்வய அனுசந்தானமாய் இருந்ததாய் கொள்ளீர் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் அது பெண் கண்ட பிச்சன் வார்த்தை அன்றோ என்று அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் பெண்ணினுடைய நித்ய யோகத்தை திரு உள்ளம் பற்றாது ஒழிகிறது என் என்று விண்ணப்பம் செய்தார்

ஸ்ரீ உடையவர் ஒரு நாள் ஒருமையை அழைத்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளி கதவை அடைத்து ஏகாந்தத்தில் சஞ்ஜையாலே
தம் திருவடிகளைத் தொட்டிக் காட்டி அருள -அவனும் அதுவே தஞ்சம் என்று புத்தி பண்ணி இருக்க-
ஸ்ரீ ஆழ்வான் இத்தை கதவின் புரையிலே கண்டு ஐயோ ஸ்ரீ கூரத்தாழ்வானாகப் பிறந்து பறக்க சாஸ்திரங்களைக் கற்றுக் கெட்டேன்-
ஒன்றும் அறியாத ஊமையாகப் பிறந்தால் அடியேனுக்கும் ஸ்ரீ உடையவர் இரங்கி அருளுவாரே என்று மோஹித்தார் என்பது பிரசித்தம் இறே

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி திருக் கோட்டியூரிலே மேல் தளத்தின் மேலே படிக்கதவை விழ விட்டு த்யானித்துக் கொண்டு இருக்க
ஸ்ரீ உடையவர் அங்கே எழுந்து அருளி ஸ்ரீ நம்பியைக் குறித்து -த்யானம் எது -மந்த்ரம் எது -என்று கேட்டு அருள –
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தார் வடவாற்றிலே நீராடி அருளும் போது அகமர்ஷணம் பண்ணி முழுகி இருந்தால்
அவர் திரு முதுகு வல்லான் கடாரம் கடாரம் கவிழ்த்தால் போலே இருக்கும் அதுவே த்யானம் –
யமுனைத்துறைவர் என்கிற இதுவே மந்த்ரம் என்று அருளிச் செய்து அருளினார்
ஆகையால் ஆச்சார்ய விக்ரஹமே சதா த்யேயம் என்றும் தன் நாமமே சதா ஜப்யம் என்றும் ஸ்ரீ உடையவருக்கு உபதேசித்தார் ஆய்த்து

——————————————–

வெள்ளை சாத்துதல்–ஸ்ரீ கொங்கு பிராட்டி வ்ருத்தாந்தம் –

பாலமூக ஜடாந்தாஸ் ச பங்கவோ பதிராஸ் ததா -சதா சார்யேண சந்த்ருஷ்டா ப்ராப்நு வந்தி பராங்கதிம் -என்கிறபடியே
பெண்ணும் பேதையும் எல்லாரும் சம்சார உத்தீர்ணமாம் படி சர்வரையும் இப்படி விசேஷ கடாக்ஷம் செய்து கொண்டும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் முதலான முதலிகளுக்கு
ஸ்ரீ பாஷ்யம் பிரசாதியா நின்று கொண்டும் ஸூகமே வாழ்ந்து அருளுகிற காலத்தில்
ராஜ்யம் பண்ணுகிற சோழ ராஜா துஸ் சைவன் ஆகையால் வேத வருத்தமான கள்ளப் பொய் நூலாகிய சைவ ஆகமத்தை
த்ருடதர ப்ரமாணமான மெய்ந்நூல் என்று அத்யவசித்துத் தானும் தன் புரோஹிதனுமாய் கூட இருந்து தன்னுடைய நாட்டில் உள்ள
வித்வான்களை எல்லாம் திரட்டி -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு எழுத்திடச் சொல்லித் தண்டிக்க
சிலர் அவனுடைய ஆஜ்ஜைக்கு அஞ்சியும் சிலர் அர்த்த ஷேத்ராதிகளையும் ஆசைப்பட்டு எழுத்திட்டார்கள் –
இத்தைக் கண்ட நாலூரான் இந்த ஆபாசர் திட்டத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -ஸ்ரீ ராமானுசனும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் இட்டால் அன்றோ
இட்டாவது என்ன சோழனும் அப்பொழுதே சில மனுஷ்யரைப் பார்த்து ஸ்ரீ ராமானுசனை அழைத்துக் கொண்டு வாருங்கோள் என்று
ஸ்ரீ கோயிலுக்கு வரக் காட்ட அந்த ராஜ மனுஷ்யர் ஸ்ரீ உடையவர் திரு மடத்து வாசலிலே வந்து இராமானுசன் எங்கே என்று கேட்க
இச் செய்தியை ஸ்ரீ உடையவருக்கு நீராட்டத் திரு மஞ்சனம் முகந்து கொடுக்கிற ஸ்ரீ கூரத்தாழ்வான் திருச்செவியிலே ஒரு வைஷ்ணவர் வந்து
ரஹஸ்யமாக விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவருடைய த்ரிதண்ட காஷாயாதிகளைத் தரித்துக் கொண்டு
ஸ்ரீ உடையவருக்கும் விண்ணப்பம் செய்யாதே ராஜ மனுஷ்யருடன் போகத்தேட அவ்விசேஷம் கேட்டு
ஸ்ரீ ஆழ்வானுடன் ஸ்ரீ பெரிய நம்பியும் புறப்பட்டு எழுந்து அருள அவர்களை அழைத்துக் கொண்டு போனார்கள் –

அநந்தரம் ஸ்ரீ உடையவரும் த்ரிதண்ட காஷாயாதிகளைத் தாருங்கோள் என்ன ஸ்ரீ கூரத்தாழ்வான் தரித்துக் கொண்டு
ராஜ மனுஷ்யருடன் எழுந்து அருளினார் என்று ஸ்ரீ முதலியாண்டான் விண்ணப்பம் செய்ய -ஆகில் அவருடைய வெள்ளையைத் தாருங்கோள்
என்று வாங்கித் தாம் சாத்திக் கொண்டு ஸ்ரீ ஆழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் என்ன தீங்கு வரப் புகுகிறதோ என்று போரக் கிலேசித்து இருக்க
ஸ்ரீ முதலியாண்டான் உள்ளிட்ட முதலிகள் எல்லாம் தேவரீர் இங்கு இருக்க ஒண்ணாது என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் இனிச் செய்ய அடுப்பது என் என்று வியாகுல அந்தக்கரணராய் ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று திருவடிகளிலே சரணம் புக்கு
வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் என்று தொடங்கி -தலையை ஆங்கே அறுப்பதே
கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே-என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தபடி இப்போது சடக்கென அவன் தலையை அறுக்கக் கூடாது –
அவன் பரிகரவானாகையாலே முகாந்தரேண செய்து வாரா நின்றேன் -என்று விண்ணப்பம் செய்து முதலிகளும் தாமுமாக எழுந்து அருளா நிற்க
பின்னையும் ராஜ மனுஷ்யர் பின் தொடர -பின்னே ஆள் தவரித்து வருகிறது என்று முதலிகள் விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் வழியில் மணலை அள்ளி -கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா தடவரைத்தோள் சக்ரபாணீ
சார்ங்க வில் சேவகனே -என்று இத்தை ஓதி அவர்கள் வருகிற வழியிலே ஒழுக்கி வாருங்கோள் என்ன
முதலிகளும் அப்படியே செய்ய ராஜ மனுஷ்யர் அந்த மணலை மிதித்து அப்பால் அடியிடப் போகாமல் போகிற பார்ப்பார் மந்த்ர வாதம்
பண்ணிப் போனார்கள் என்று மீண்டு போக -ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக அரங்கத்து உறையும் இந்த துணைவனே
வழித் துணையாக எழுந்து அருளினார்கள்

ஒரு மலை அடியிலே ஸ்ரீ திருமலை நல்லான் சிஷ்யர்களான சில வேட முதலிகள் புலம்பாவா நிற்க அங்கே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ எம்பெருமானாரை தேடித் கொண்டு எழுந்து அருள அவர்கள் இவரை திரு நாமமே குறியாக –
நீர் எங்கிருந்து எழுந்து அருளுகிறீர் என்று கேட்க -ஸ்ரீ கோயிலில் நின்றும் வருகிறோம் என்ன –
அவர்களும் எம்பெருமானாருக்கு ஒரு குறையும் இல்லையே -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செல்வத்துக்கு ஒரு குறையும் இல்லையே என்ன –
என்று கேட்க -இவரும் என்ன பெரிய பெருமாள் -என்ன திருச் செல்வம் -ஸ்ரீ எம்பெருமானார் சோழன் வ்யாஜேன வெண் பரிதானம் தரித்து
எழுந்து அருளினார் -இன்ன இடத்தே எழுந்து அருளினார் என்று தெரியாது என்று அருளிச் செய்ய –
அவர்களும் அவ்வார்த்தை கேட்டு வ்யாகுலப்பட்டு புலம்பாவுகை தவிர்ந்து அன்று முதல் ஆறு நாள் பட்டினியே கிடக்க
ஆறாம் நாள் ராத்ரி அம்மலை அடியிலே ஸ்ரீ எம்பெருமானாரும் முதலிகளும் மழையிலே நனைந்து குளிரில் ஈடுபட்டு இவர்கள் புனத்தில்
நெருப்பு ஒளி கண்டு ஸ்ரீ உடையவரும் நம்மை அங்கே ஏறக் கொண்டு போங்கள் என்று அருளிச் செய்ய முதலிகளும் அங்கே ஏற எழுத்து எழுந்து
அருளுவித்துக் கொண்டு போய் வழி எங்கே பிள்ளைகாள் என்ன அவர்களும் ப்ராஹ்மணர் குரலாய் இருந்தது பெரு விடாயோடே
ஒரு குரலாய் இரா நின்றது என்று ஓடி வந்து வேலியைப் பிரித்து இங்கே வாருங்கோள் என்று அழைத்துக் கொண்டு போய்
சாத்துகைக்கு திருப் பரியட்டங்களும் கொடுத்து சாத்தி இருந்த திருப் பரி யட்டங்களையும் உலர விட்டுக் குளிர் போகக் காய்ச்சி ஒற்றி
எங்கு நின்றும் எழுந்து அருளுகிறீர்கள் என்று கேட்க
இவர்களும் ஸ்ரீ கோயிலில் நின்றும் வருகிறோம் என்ன
ஸ்ரீ எம்பெருமானார் செய்கிறது என் என்று கேட்க
முதலிகளும் நீங்கள் எம்பெருமானாரை அறிந்தபடி எங்கனே என்ன
நாங்கள் நல்லான் அடிமைகள் -அவர் எங்களுக்கு ஹிதம் பிரசாதிக்கும் போது -நமக்கு எல்லாம் பரமாச்சாரியார் ஸ்ரீ எம்பெருமானாராய் இருக்கும் –
ஆகையால் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்வார் என்று விண்ணப்பம் செய்ய
முதலிகளும் ஆகில் இவரே ஸ்ரீ உடையவர் என்று காட்டி அருள அவர்களும் ஸ்ரீ பாதத்தைக் காட்டிக் கொண்டு அழுது வ்யாகுலப்பட்டுத்
திருவடிகளிலே விழுந்து சேவித்துத் தேனும் தினையும் கொண்டு வந்து சமர்ப்பித்து
இக்கதிரை வறுத்து இடித்துத் தேனில் கலந்து அமுது செய்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
முதலிகளும் அப்படியே அமுது செய்து அருளி அற்றைக்குக் கண் வளர்ந்து அருளினார்கள் –

மற்றை நாள் விடிவோரை வேட முதலிகளில் ஒருவரையும் தம் ஸ்ரீ பாதத்து முதலிகளில் ஒருவரையுமாக ஸ்ரீ கோயிலுக்குப் போகவிட்டு
ஸ்ரீ உடையவருடனே மற்ற நாற்பத்தஞ்சு திரு நாமமும் எழுந்து அருளினார்கள் -அவ்வேட முதலிகளும் இவர்களை மலைக்கு மேலே
அறுபது காத வழி கொண்டு போய் ஒரு வேட முதலியகத்தே விட -அவ்வேட முதலி பகல் எல்லாம் வேட்டைக்குப் போய் வந்து உண்ணப் புக்கவாறே –
ப்ராஹ்மணர்கள் பட்டினியே இருக்க நாம் உண்ணலாகாது என்று அருகாக ஒரு கிராமத்தில் கட்டளை வாரி என்பான் ஒரு ப்ராஹ்மணன் அகத்திலே
இவர்களைக் கொண்டு போய் விட்டு வேண்டும் கட்டளைகளையும் பண்ணி இப்போதே அமுது செய்யப் பண்ணுவியுங்கோள் என்று சொல்லுங்கோள்
என்று ஆள் கொடுத்துப் போக விட அவர்களும் ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும் கூட்டிக் கொண்டு போய் அவன் அகத்தே விட்டு
இவர்களை இப்போதே அமுது செய்யப் பண்ணுவியுங்கோள் என்று சொல்லு வேண்டும் கட்டளைகளும் பண்ணுவித்து மீண்டு போனார்கள்

அவ்வகமுடையானுடைய பத்னியும் தண்டன் சமர்ப்பித்து உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –
முதலிகளும் வேண்டா என்று அருளிச் செய்து அருள -அவளும் உங்களுக்கு சந்தேகிக்க வேண்டா –
அடியேனும் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் –
முதலிகளும் நீ ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தபடி எங்கனே என்று கேட்க
அவளும் -நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றியே இருந்தவாறே ஸ்ரீ கோயிலிலே வந்து இருந்தோம் -அங்கே என் அகமுடையாரும் நானும்
ஒரு மச்சு மேலே இருக்கையாய் இருக்கும் -அப்போது ஸ்ரீ எம்பெருமானார் ஏழு திருமாளிகைகளிலே மாதுகரம் பண்ணி அமுது செய்து அருளுவர் –
அவர் திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டாழ்வான் உள்ளிட்ட முதலிகளும் எல்லாரும் அவர் திருவடிகளிலே சேவிப்பார்கள் –
அவர் ஒரு நாள் மாதுகரத்துக்கு அந்தத் திருமாளிகை ஏற எழுந்து அருள அடியேனும் மச்சில் நின்றும் இறங்கி வந்து இடை கழியிலே தகைந்து நின்றேன் –
அவர் இது என்ன பெண்ணே என்று கேட்டு அருள -நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் -உம்மை ராஜாக்களும் பட்டணத்து முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள்
இதுக்கு அடி என் என்றவாறே -ஸ்ரீ உடையவரும் நாம் அவர்களுக்கு பகவத் விஷயத்தில் சில நல்ல வார்த்தை சொல்லுகையாலே
காண் என்று அருளிச் செய்து அருள அந்த நல் வார்த்தையை அடியேனுக்கும் பிரசாதித்து அருளல் ஆகாதோ -என்றேன் –
அப்போது ஹிதம் அருளிச் செய்து எழுந்து அருளினார் -பின்பு எங்கள் நாட்டில் வர்ஷம் உண்டாய் நாங்கள் எங்கள் நாடு ஏறப் போகும் போது
அவர் அருளிச் செய்த நல் வார்த்தையை மறந்தேன் -ஸ்ரீ உடையவரை சேவிக்கப் பெற்றிலேன் என்ற இழவோடே நினைத்து இருக்க –
அற்றைக்கும் அங்கு ஏற எழுந்து அருள அடியேனும் மச்சில் நின்றும் இறங்கி வந்து தண்டன் இட்டு நின்று நாங்கள் எங்கள் நாடு ஏறப் போகா நின்றோம் –
தேவரீர் முன்பு அருளிச் செய்த நல் வார்த்தையை மறந்தேன் என்ன இப்போது ஸ்ரீ உடையவரும் மீளவும் த்வயத்தை நெஞ்சிலே நிலை நிற்கும்படி
குரு பரம்பரா பூர்வகமாக உபதேசித்து மீண்டு எழுந்து அருளத் தேட -அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் ஓன்று தந்து அருள வேணும்
என்று விண்ணப்பம் செய்தேன் -அப்போது சாத்தி இருந்த ஸ்ரீ பாதுகைகளை ப்ரசாதித்து அருளினார் –

அடியோங்களும் அன்றே போந்தோம் -பின்னை சேவிக்கப் பெற்றிலோம் -என்றவாறே -ஸ்ரீ உடையவரும் தம் திரு உள்ளத்திலே விசாரித்து அருளி
திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து -இவள் செய்யுமது பார்த்து இரும் -என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க –
அவரும் பார்த்து இருக்க அவளும் அடைவாகச் சமைத்து உடுத்துப் புடைவையை அவிழ்த்து ஸூத்தமான புடைவையை உடுத்து உள்ளே புகுந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து அவர் ஸ்ரீ பாதுகைகளை ஏறி அருளப் பண்ணித் திருவடி விளக்கி
அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு முதலிகளுக்கு தெண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பாதம் விளக்கி -அமுது செய்ய எழுந்து அருள வேணும் -என்று
விண்ணப்பம் செய்ய முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தபடி என் -என்று கேட்டு அருள –
அவரும் இவள் திருப் போனகம் அடைவாகச் சமைத்து முன்பு உடுத்த புடவையையும் விடுத்து ஸூத்தமான புடைவையையும் உடுத்துத்
திருப் போனகத்தை எடுத்துக் கொண்டு போய் உள்ளே புகுந்து கதவை அடைத்து த்யானம் பண்ணி இருந்து அமுது செய்யப் பண்ணினாள்-

அது கறுத்து நீண்டு இருந்தது – எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவாறே அவளை அழைத்து நீ உள்ளே செய்தது என் என்று கேட்டு அருள
அவளும் முன்பு அடியேனுக்கு தஞ்சமாக பிரசாதித்து அருளின ஸ்ரீ பாதுகைகளை திருவடி விளக்கி அமுது செய்து அருளப் பண்ணி யாய்த்து பிரசாதம் சூடுவது –
இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய -ஆகில் அவை தன்னை இங்கே கொண்டு வந்து காட்டு என்ன –
அவளும் கொண்டு வந்து காட்ட-அவை அங்குத்தைக்கு எதித் தலை நாதன் இராமானுசன் தன் இணை அடிகளுக்கு ஒத்து இருந்தது –
அப்பொழுது ஆகில் இந்தக் கோஷ்டியில் ஸ்ரீ எம்பெருமானார் உண்டோ பார்த்துக் காணாய் என்ன அவளும் திரு விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து
அடைவே பார்த்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளைப் போலே இரா நின்றது -காஷாயம் இல்லாமையால் தெரிகிறது இல்லை என்றவாறே
நான் காண் என்று அருளிச் செய்ய -அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே கண்ணைத் துடைத்து
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள்-
அத்தை என் செவியில் சொல்லிக் காணாய் என்ன அவளும் விண்ணப்பம் செய்ய -அந்த வார்த்தையும் ஒத்து இருந்தது –
ஆகில் விதுர அந்நாநி புபுஜே ஸூஸீ நிகுண வந்திச-என்கிற பாவனத்வ போக்யத்வங்களை உடைத்தாய் இருந்தது –
இனி முதலிகள் அமுது செய்யக் குறையில்லை என்று அருளிச் செய்து நமக்கு மாத்திரம் கூடாது -ஒரு பகவத் விக்ரஹம் அமுது செய்ய வில்லை -என்ன
அவளும் ஆகில் பாலும் பழமும் சக்கரையும் கொண்டு வந்து சமர்ப்பிக்கிறேன் என்று சமர்ப்பிக்க
இவரும் தம்முடைய எம்பெருமானுக்கு அமுது செய்யப் பண்ணித் தாமும் அமுது செய்து அருள –
முதலிகளும் அமுது செய்து கண் வளர்ந்து அருள –

அப் பெண்பிள்ளை முதலிகள் தளிகை பிரசாதத்தையும் கூட்டிக் கலந்து மச்சிலே இருக்கிற தன் பார்த்தாவை எழுப்பி பிரசாதம் இட்டு
ப்ரஸாதப்படப் பண்ணித் தான் ப்ரஸாதப்படாமல் இருக்க -அவனும் இது என் என்று கேட்க -அவளும் ஸ்ரீ கோயிலில் நின்றும்
ஸ்ரீ எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி இருந்து அமுது செய்ய மாட்டோம் என்று கண் வளர்ந்து அருளினார்கள் என்றவாறே –
அவனும் அதற்கு நான் என்ன செய்ய வேணும் என்ன -நீர் ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்க வல்லீரோ என்ன –
அவனும் இசைந்து பிரத்யயயம் பண்ணிக் கொடுக்க அவளும் உகப்புடன் பிரஸாதப்பட்டு நித்திரை பண்ணினாள் –
மற்றை நாள் பொழுது விடிந்தவாறே எழுந்து இருந்து வந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து -இற்றைக்கு எழுந்து அருளி
இருந்து இவரை கிருபை செய்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ எம்பெருமானாரும் அற்றைக்கு அங்கே அவசரித்து அருளி அவளுக்காக அவனுக்கு ஹித உபதேசம் பண்ணி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி
அங்கே நாலு ஐந்து நாள் எழுந்து அருளி இருந்து த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்துத் தம் திரு ஆராதனமான
ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில் வைத்துத் தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே அவற்றைத் தரித்து அருளினார் –

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: