ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் -/ஸ்ரீ எம்பார் பிரபாவம்-/திவ்ய தேச யாத்ரை-

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ எம்பார் பிரபாவம்-

ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் ஸ்ரீ திருமலை நம்பி திருமாளிகையிலே சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு
இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ உடையவர் ப்ரீதராய் இருக்கிற அளவிலே ஒரு நாள் ஸ்ரீ நம்பிக்கு திருப் படுக்கை படுத்து
முந்துறத் தாம் அதிலே கண் வளர்ந்து பார்க்க இத்தை ஸ்ரீ எம்பெருமானார் கண்டு அருளி –
இப் பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் என்று அத்தை ஸ்ரீ பெரிய திருமலை நம்பிக்கு விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் அவரை அழைத்து ஸ்ரீ கோவிந்த பெருமாளே நீர் நமக்குப் படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் -என்று கேட்டோம்
இப்படி செய்யலாமோ இதற்குப் பலம் என் என்று கேட்டு அருள ஸ்ரீ கோவிந்த பெருமாளும் நமக்கு நரகமே பலன் என்ன –
ஸ்ரீ நம்பியும் இத்தை அறிந்தும் செய்வான் என் -என்ன
இவரும் தேவரீர் திரு மேனியில் ஓன்று உறுத்துதல் ஊர்தல் கடித்தல் செய்யாமல் கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு
நரகமே அமையும் என்று விண்ணப்பம் செய்ய –
இத்தை ஸ்ரீ உடையவர் கேட்டு அருளி ஈது ஒரு பிரதிபத்தி விசேஷம் இருந்த படி என் என்று உகந்து அருளினார்

ஒரு நாள் ஸ்ரீ நம்பியினுடைய திரு நந்தவனத்தை நோக்கிக் கொண்டு ஸ்ரீ உடையவர் எழுந்து அருளா நிற்க ஓர் இடத்திலே
ஸ்ரீ கோவிந்தப்பெருமாள் ஒரு பாம்பின் வாயிலே கையிட்டு மீளவும் நீராடிக் கைங்கர்யத்தில் போக ஸ்ரீ உடையவரும் இது கண்டு
என் செய்தீர் என்று கேட்க அவரும் பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு நோவுபடும்படியைக் கண்டு அதன் நாக்கிலே
முள் இருக்க வாங்கினேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் இவருடைய பூத தயை இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –

அநந்தரம் ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ ராமாயணம் சாத்தினவாறே ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து
அடியேன் திருவரங்க பெரு நகரை நோக்கி விடை கொள்ளுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் இத்தனை தூரம் எழுந்து அருளின உமக்கு நாம் ஒன்றுமே தரப் பெற்றிலோமே என்ன –
இவரும் அப்படித் தந்து அருள திரு உள்ளமாகில் சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து
தன் பால் மனம் வைக்காத திருத்தி என்கிறபடியே இவருடைய துர்வாசனையை சேதித்து பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி பண்ணி அருளி -உடன் கூடுவது என்று கொலோ என்று இருந்த அடியேன்
நினைவைத் தலைக்கட்டி அருளின தேவரீர் அடியேனுக்கு இந்தக் கோவிந்தப் பெருமாளை தந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெரிய திருமலை நம்பிய அவரை அழைத்து வாரீர் கோவிந்தப் பெருமாளே ஸ்ரீ எம்பெருமானாரை நம்மைக் கண்டால் போலே
சேவித்து இரும் என்று உதக தாரா பூர்வகமாக கொடுத்து அருளினார்

ஸ்ரீ உடையவரும் அவரைக் கூட்டிக் கொண்டு ஸ்ரீ நம்பிக்கு தெண்டன் சமர்ப்பித்து புறப்பட்டு
வண்டு வளம் கிளரும் நீர் சோலை வண் பூம் கடிகையிலே சென்று ஸ்ரீ கடிகாசலம் ஏறி மிக்கார் வேத விமலர் விழுங்கும்
அக்காரக் கனியையும் கண்டு சேவித்து களித்து அங்கு நின்றும் புறப்பட்டு திருப் புட் குழியிலே எழுந்து அருளி
ஸ்ரீ க்ருத்ர புஷ்கரணியிலே தீர்த்தம் பிரசாதித்து பெரிய உடையாரையும் திருவடி தொழுது சண்ட ப்ரசண்டர்களையும் சரணம் அடைந்து
உள்ளே புகுந்து ஸ்ரீ மரகத வல்லி நாச்சியாரையும் திருவனந்த ஆழ்வானையும் சேவித்து மற்றும் சேவாக்ரமம் தப்பாமல் சேவித்து
ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி புகுந்து சேனை முதலியாரையும் திருவடி தொழுது
பொன் முடி யம் பொற் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனையும் சேவித்து நின்று
ஸூ வர்ண மகுடா நந்த துளஸீ மால்ய சோபித ஸமஸ்த ஜெகதாதார சங்க சக்ர கதா தர தாமோதர ஹ்ருஷீகேச த்ரயீ மய ஜநார்த்தன
தானவாரே ஜெகந்நாத சார்ங்க பாணே நமோஸ்துதே -என்று அனுசந்தித்து நிற்க
தீர்த்த பிரசாதமும் பிரசாதிக்க ஸ்வீ கரித்து தெண்டன் இட்டு புறப்பட்டு திரு வெக்கா முதலான திருப்பதிகளையும் சேவித்து மீண்டு
ஸ்ரீ திருக் கச்சி நம்பி சந்நிதியில் எழுந்து அருளினார் –

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா -என்னுமா போலே ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் திருமேனியில் வைவர்ணயம் பிறந்து
முகம் உறாவின இருப்பைக் கண்டு ஸ்ரீ உடையவரும் இவர் அகவாயில் எண்ணம் அறிந்து
ஸ்ரீ கோவிந்தப்பெருமாளே ஸ்ரீ நம்பியை சேவித்து வாரும் என்று இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கூட்டி அனுப்பி ஸ்ரீ திருக் கச்சி நம்பி யுடன்
ஸ்ரீ பேர் அருளாளரை சேவித்து இருந்தார் -ஸ்ரீ கோவிந்தப் பெருமாளும் திருப்பதியில் எழுந்து அருளி ஸ்ரீ நம்பி திருமாளிகையில்
தண்டன் சமர்ப்பித்து நிற்க அங்குள்ளார் அவரைக் கண்டு உள்ளே சென்று ஸ்ரீ பெரிய திருமலை நம்பிக்கு விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் திரு உள்ளம் கலங்கி பித்தனைப் போகச் சொல்லுங்கோள் என்ன தேவிகளும் இத்தனை தூரம் இளைத்து வந்தவரை அழைத்து
சேவையும் ஸ்ரீ பாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ப்ரசாதிக்க வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ என்று நைஷ் டூர்யத்தையே பிரகாசிப்பித்து முகம் கொடாமல் தள்ளி விட
ஸ்ரீ கோவிந்தப்பெருமாளும் அங்கு நிராசரராய் திரு வாசலிலே தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ வைஷ்ணவர்களுடனே மீண்டு
ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளி ஸ்ரீ உடையவரை சேவித்து நிற்க ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த வ்ருத்தாந்தத்தை
விண்ணப்பம் செய்யக் கேட்டருளி ஸ்ரீ நம்பியுடைய சர்வஞ்ஞதையை ஸ்லாகித்து ஸ்ரீ கோவிந்தப் பெருமாளையும் பிற்காலியாதபடி
தம் ஸுலப்ய ஸுஸீல்யாதி குணங்களால் ஆழங்கால் படுத்திக் கொண்டு ஸ்ரீ திருக்கச்சி நம்பிக்கு தண்டன் சமர்ப்பித்து
விண்ணப்பம் செய்து புறப்பட்டுத் திருவரங்கன் திருப்பதியை நோக்கி எழுந்து அருள அங்குள்ள முதலிகள் எல்லாரும் எதிர்கொள்ள
எழுந்து அருளி அங்குள்ள முதலிகள் எல்லாரும் எதிர் கொள்ள எழுந்து சேவா க்ரமத்தில் ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து நிற்க
ஸ்ரீ பெருமாளும் சோதி வாய் திறந்து நம் வடமலைக்குப் போய் வந்தீரோ என்று வினவி அருளித் தீர்த்த பிரசாதமும் ஸ்ரீ சடகோபனும் ப்ரசாதிக்க
ஸ்வீ கரித்துப் புறப்பட்டு திரு மடமே எழுந்து அருளி ஸ்வ அபிமான அந்தர்பூதரான முதலிகளையும்
கிருபை பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

ஸ்ரீ கோவிந்தப்பெருமாளுக்கு ஸ்ரீ எம்பெருமானார் கோஷ்ட்டியில் அனுபவமும் அவர் விக்ரஹ அனுபவமும் அவர் சல்லாபங்களும்
அவர் திருவடிகளிலே கைங்கர்யங்களுமே கால க்ஷேபமுமாய் நித்ரா ஆலஸ்யங்களும் இன்றிக்கே ப்ரயத்யஹம் நடவா நிற்க ஒரு நாள்
ஸ்ரீ உடையவரும் முதலிகளும் பெரிய திரு ஓலக்கமாக எழுந்து அருளி இருக்க முதலிகள் எல்லாரும் ஸ்ரீ கோவிந்தப் பெருமாளுடைய
ஞான பக்தி வைராக்யங்களையும் ஸ்வ ஆச்சார்ய பத ஏக நிஷ்டையையும் சொல்லித் தலை துலுக்கிக் கொண்டாட
ஸ்ரீ கோவிந்தப்பெருமாள் தாமும் அது ஒக்கும் ஒக்கும் என்று அவர்களைக் காட்டில் தம்மைத் தாமே மிகவும் ஸ்லாகித்துக் கொள்ள
ஸ்ரீ உடையவரும் அது கண்டு அவரைக் குறித்து எல்லாரும் உம்மை ஸ்லாகித்தால் நீரின் நைச்ய அனுசந்தானம் பண்ண வேண்டி இருக்க
அது செய்யாதே நீர் தாமே உம்மை ஸ்துதித்துக் கொள்ளா நின்றீர் -இப்படிச் செய்யுமது ஸ்வரூபத்துக்குச் சேருமோ என்று அருளிச் செய்ய
ஸ்ரீ கோவிந்த பெருமாள் ஸ்ரீ உடையவரைப் பார்த்து ஐயோ முதலிகள் அடியேனைக் கொண்டாடில் காளஹஸ்தியில் கையும் குடமும்
கழுத்தில் இலந்தைக் கொட்டை வடமுமாய் கொண்டு எளிவரவு பட்டு நின்ற அந்நிலையைக் கொண்டாடும் அத்தனை அன்றோ
அடியேனுக்கு உள்ளது -இப்படியான பின்பு பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே தேவரீர்
இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திரு அவதாரம் செய்து அருளின க்ருஷி பரம்பரைகளை அனுசந்தித்தால்
நம் முதலிகள் எல்லாரையும் போல் அன்றிக்கே நித்ய சம்சாரிகளிலும் கடை கெட்டுக் கிடந்த அடியேன் கால தத்வம் உள்ளதனையும்
எனக்கு இனி யார் நிகர் அகல் நீள் நிலத்தே என்றும் இனி யாவர் நிகர் அகல் வானத்தே என்றும்
நெஞ்சே நல்லை நல்லை என்றும் சொல்லுகிறபடியே
அடியேனையே ஸ்லாகித்துக் கொள்ள பிராப்தி உண்டே -ஆகையால் அடியோங்கள் எல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்கு உண்டான
நன்மைகளை ஸ்லாகித்தால் தேவரீரைக் கொண்டாடிற்றாம் அத்தனை அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ கோவிந்தப்பெருமாளை நல்லீர் நல்லீர் என்று போர உகந்து அருளி உம்முடைய குணங்கள் நமக்கும் உண்டாம் படி
அழகிய நெஞ்சால் நம்மை அணைத்துக் கொள்ளீர் என்று வாரி எடுத்து அணைத்துக் கொண்டு அருளினார் –

ஒரு நாள் ஸ்ரீ கோவிந்தப்பெருமாள் ஸ்ரீ எம்பெருமான் -எம்பெருமானார் -அடியாள் வாசலிலே கால்ய கர்மங்களையும் இழந்து நிற்கக் கண்டு
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ உடையவர் கோஷ்டியில் அத்தை வெளியிட ஸ்ரீ உடையவரும் -ஸ்ரீ கோவிந்தப் பெருமாளே –
நீர் அங்கே நிற்பான் என் என்ன -இவரும் தேவரீர் தாலாட்டு மதுரமாய் இசை ஏறி செவிக்கு இனிய செஞ்சொல்லாய் இருக்க
தேவரீர் குண அனுபவமும் முன்னடி வலையகக் கட்ட போக்கடி அற்று நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ வைஷ்ணவரும் தாலாட்டு நடந்தது உள்ளது என்ன ஸ்ரீ உடையவரும் இவர் ப்ராவண்யம் இருந்தபடி என் என்று உகந்து அருளினார்

பின்பு இவருக்கு இருளும் ஏகாந்தமும் இன்றிக்கே த்ரிவித கரணத்தாலும் -இராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளது என் நெஞ்சு –
என்கிறபடியே இராமானுசன் மெய்யில் பிறங்கிய சீரும் அவர் குண அனுபவமுமே கால ஷேபமாகச் செல்லா நிற்க
ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் திருத் தாயார் வந்து ஸ்ரீ கோவிந்த பெருமாளே உம்முடைய தேவிகள் பக்வமானாள்-என்ன
இவரும் ஆகில் இருட்டும் தனியாய் இருக்கும் அவகாசம் பார்த்து அவளை வரக்காட்டும் என்ன அவரும் பஹு நாள் அவகாசம் பார்த்து
ஒரு நாளும் அவகாசம் காணாதே ஸ்ரீ உடையவருக்கு விண்ணப்பம் செய்ய அவரும் இவரை அழைத்து –
கோவிந்தப் பெருமாளே நம் ஆணை ஒரு ருத்தி காலத்திலே நீர் போம் என்று அருளிச் செய்து போக விட்டருள
ஸ்ரீ கோவிந்தப் பெருமாளும் தேவிகளுக்கு இரா முற்ற அந்தர்யாமியை அனுபவிப்பித்து தத் குண சேஷ்டிதங்களை கீர்த்தித்து அருளிப் போக விட
இவர் திருத் தாயார் விடிவோரை வந்து இங்கன் செய்யலாமோ என்ன இவரும் அந்தர்யாமி பிரகாசித்து இருக்க அழிச்சாட்டம் கூடுமோ என்ன
இச் செய்தியை அருகில் இருந்தவர்கள் ஸ்ரீ எம்பெருமானாருடனே விண்ணப்பமும் செய்ய இவரும் திருவடிகளிலே சேவித்து நின்ற அளவிலே
அவரும் இரா முற்றும் என் செய்தீர் என்று மந்த ஸ்மிதம் செய்து கேட்டருள -இவரும் அந்தர்யாமி பிரகாசிகையாலே இதுக்கு
ஏகாந்தம் கண்டிலேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் வாரீர் ஸ்ரீ கோவிந்தப் பெருமாளே உமக்கு விஷயாந்தர விரக்தி
இத்தனை உண்டாகில் அநாஸ்ரமீந சந்திஷ்டேத் -என்கிற ஸாஸ்த்ர வசனம் நீர் அறியீரோ என்ன
இவரும் அடியேனுக்கு சந்யாச ஆஸ்ரமம் பிரசாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் த்ரிதண்ட காஷாயாதிகளை
பிரசாதித்து தம் திரு நாமத்தையே பிரசாதித்து அருள இவரும் ஸ்ரீ பாதாச்சாயா பன்னனாய் இருக்குமவனுக்கு பொறுக்கும்படி பிரசாதித்து
அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து திருவடிகளிலே தண்டன் இட்டுக் கிடக்க
ஸ்ரீ உடையவரும் அத் திருநாமத்தை ப்ரத்யாஹரித்து -எம்பார் -என்ற திரு நாமம் சாத்தி முடி பிடித்து எடுத்து கிருபை செய்து அருளினார் –

————————————

அநந்தரம் தேசாந்தரத்தின் நின்றும் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி திருவீதியில் நின்றவர்கள்
சிலரைப் பார்த்து ஸ்ரீ எம்பெருமானார் மடம் எது என்று கேட்க -அவர்களும் எந்த ஸ்ரீ எம்பெருமானார் மடம் -என்ன
புதுக்க எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெஞ்சு உளைந்து-நீங்கள் இரண்டிட்டுச் சொல்லுவான் என் –
நம் தரிசனத்துக்கு இரண்டு எம்பெருமானார் உண்டோ என்ன
அவர்களும் உண்டு அருளாள பெருமாள் எம்பெருமானாரும் எழுந்து அருளி இருக்கிறார் ஆகையால் சொன்னோம் என்ன –
நாங்கள் அவரை அறியோம் -ஸ்ரீ உடையவர் மடத்தைக் கேட்டோம் என்ன -ஆனால் ஸ்ரீ ராமானுஜன் மடம் ஈது என்று அவர்கள் காட்ட
அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் உடையவர் திரு மடம் சென்று புக்கார்கள்
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் இப்பிரசங்கத்தை யாதிருச்சிகமாக கேட்டு ஐயோ நாம் ஸ்ரீ உடையவரைப் பிரிந்து
ஸ்தாலாந்தரத்தில் இருக்கையால் அன்றோ லோகத்தார் நம்மை ஸ்ரீ எம்பெருமானாருக்கு எதிர்த்தட்டாகச் சொன்னார்கள் –
ஆகையால் நாம் அநர்த்தப் பட்டோம் என்று மிகவும் வ்யாகுலப்பட்டு அப்போதே தம்முடைய மடத்தை இடித்துப் பொகட்டு வந்து
ஸ்ரீ உடையவர் திருவடிகளைக் கட்டிக் கொண்டு அநாதி காலம் இவ்வாத்மா தேவரீர் திருவடிகளை அகன்று அநர்த்தப் பட்டுப் போந்தது
போராமல் இப்படி அகற்றி விடாத திரு உள்ளமாய் விட்டதோ -என்று மிகவும் கிலேஸிக்க ஸ்ரீ உடையவரும் இதற்கு காரணம் என் என்ன –
அவரும் இங்குப் பிறந்த வ்ருத்தாந்தத்தை விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அச் செய்திகளை அடையக் கேட்டு ஆனால்
இனி உமக்கு நாம் செய்ய அடுப்பது என் என்ன ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் அடியேனை இன்று தொடங்கி
நிழலும் அடிதாறும் போலே -நின் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் என்கிறபடியே
தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய-
ஸ்ரீ உடையவரும் ஆனால் இனி இங்கே வாரும் என்று அவரை தம் சந்நிதியில் அரை க்ஷணமும் பிரியாமல் வைத்துக் கொண்டு
அகில அர்த்தங்களையும் பிரசாதித்து அருள அவரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ உடையவரை ஒழிய வேறு ஒரு தெய்வம் அறியாதவர் ஆகையால்
சகல வேதாந்த சாரார்த்தங்களையும் பெண்ணுக்கும் பேதைக்கும் ஸூ க்ரஹமாகக் கற்று உஜ்ஜீவிக்கலாம் படி
ஸ்ரீ ஞான சாரம்- ஸ்ரீ ப்ரமேய சாரம் என்கிற திவ்ய பிரபந்தங்களையும் இட்டு அருளி –
அதிலே ஸச் சிஷ்யன் என்பானுக்கு சதாசார்யனே பர தேவதை – அவன் திருவடிகளில் கைங்கர்யமே பரம ப்ராப்யம் –
அவன் தான் பகவத் அவதார விசேஷம் என்னும் அத்தையும் அருளிச் செய்து அருளினார் –

———————————-

அநந்தரம் ஸ்ரீ கூரத்தாழ்வானையும் -ஸ்ரீ முதலியாண்டானையும் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் -மற்றும் உள்ள
முதலிகளையும் கூட்டிக் கொண்டு எழுந்து அருளி இருந்து -இலங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் மலிந்து வாத்து செய்வீர்களும்
என்று அருளிச் செய்து இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைகைக்காகவும் –
தத் தவம் அசி -இத்யாதி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷம் -என்கிற மாயாவாதிகளையும் –
ஞான கர்ம சமுச்சயமே மோக்ஷ சாதனம் என்கிற குத்ருஷ்டிகளையும் நிரசித்து –
வேத மார்க்கமாய் -வேத கர்ம அங்கமாய் -வேதனத்துக்கு கர்மம் அங்கமாய் -வேதன த்யான உபாசனாதி சப்த வாஸ்யமாய் –
பக்தி ரூபா பன்னமான உபாசனை ஆத்மக ஞானமே வேதாந்த ப்ரதிபாத்யமான மோக்ஷ சாதனம் என்கைக்காகவும்
நாம் வேதாந்தம் நடத்த வேணும் என்று அருளிச் செய்ய -அப்படியே செய்து அருள என்று முதலிகள் விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வானைப் பார்த்து நான் சொன்ன ஸ்ரீ பாஷ்ய வாக்கியம் உம்முடைய திரு உள்ளத்துக்கு ஒத்து இருந்தால் ஒழிய
நீர் திரு எழுத்துச் சாத்த வேண்டா என்று நியமித்து அருள ஸ்ரீ ஆழ்வானும் அப்படியே திரு எழுத்து சாத்தி வரும் அளவில்
ஆத்மாவுக்கு சேஷத்வ விதுரமான ஞாத்ருத்வம் ப்ரதிபாதித்து ஒரு வாக்கியம் அருளிச் செய்து அருள
ஜீவாத்மாவுக்கு பகவச் சேஷத்வ விதுரமான ஞாத்ருத்வத்தோடு தேக ஆத்ம அபிமானத்தோடு ஒரு வாசி இல்லாமையால்
ஸ்ரீ ஆழ்வானும் திரு எழுத்து சாத்தாமல் இருக்க ஸ்ரீ உடையவரும் அத்தை நிரூபித்துப் பாராமல் எழுதும் என்ன

இவரும் எழுதாது இருக்க அது கண்டு குபிதராய் -ஆகில் நீரே ஸ்ரீ பாஷ்யம் செய்யும் -என்று அருளிச் செய்கை தவிர்ந்து
ஸ்ரீ ஆழ்வானை உதைத்துப் போக விட முதலிகள் ஸ்ரீ ஆழ்வானை ஆச்சார்யர் கோபித்துத் தள்ளி விட்டாரே
இப்போது நீர் என்ன நினைத்து இருக்கிறீர் என்று கேட்க -ஸ்ரீ ஆழ்வானும் உடைமை உடையவன் இட்ட வழக்காய் இருக்கும் –
அடியேனுக்கு இதில் அந்வயம் இல்லை என்று அருளினார் -பின்பு ஸ்ரீ உடையவரும் வாக்யார்த்தை நன்றாக ஆலோசித்துக் கொண்டு
ஸ்ரீ ஆழ்வானை அழைத்து கோபித்ததற்கு அனுதபித்து பகவச் சேஷத்வத்தோடே கூடின ஞாத்ருத்வ ப்ரதிபாதகமான வாக்கியம்
அருளிச் செய்து அருள ஸ்ரீ ஆழ்வானும் அதி ஸீக்ரமாகத் திரு எழுத்துச் சாத்த இப்படி
ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ வேதாந்த தீபம் ஸ்ரீ வேதாந்த சாரம் ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹம் ஸ்ரீ கீதா பாஷ்யம் இவற்றை அருளிச் செய்து
ஸ்ரீ ஆளவந்தாருடைய பிரதமமான இழவைத் தீர்த்து அருளினார் –

ஸ்ரீ உடையவரை முதலிகள் எல்லாரும் தண்டன் இட்டு -தேவரீர் இதர சமய நிராகரண பூர்வகமாகத் தர்சன ஸ்தாபனம் பண்ணி அருளிற்று –
இதில் தீதில் நன்னெறி காட்டித் தேசம் எங்கும் திரிந்து திக் விஜயம் பண்ணி அங்குள்ள திவ்ய தேசங்களையும் சேவித்து எழுந்து அருள
வேணும் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக ஸ்ரீ நம்பெருமாள் திரு முன்பே சென்று தண்டன் சமர்ப்பித்து
இச் செய்தியை விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் அப்படியே செய்யீர் என்று திரு உள்ளமாக அங்கு நின்றும் புறப்பட்டு அருளி
சோழ மண்டலத்தில் எழுந்து அருளி திருக்குடந்தை முதலான திருப்பதிகளையும் சேவித்து அங்கு உண்டான இதர சித்தாந்த
வித்வான்களையும் தர்க்கித்து ஜெயித்து அங்கு நின்றும் புறப்பட்டு தெற்கு ஏற எழுந்து அருளி
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை முதலான திருப்பதிகளையும் சேவித்து
பாண்டி மண்டலத்தில் உண்டான பரவாதிகளையும் ஜெயித்து
திருப்புல்லாணியையும் சேவித்து ஸ்ரீ சேது தர்சனம் பண்ணி
திரு நகரி ஏறச் சென்று கண்ணி நுண் சிறுத் தாம்பை அனுசந்தித்து ஸ்ரீ நம்மாழ்வாரை சேவித்து நிற்க –
ஆழ்வாரும் மிக கிருபை பண்ணி அருளி தம் தீர்த்த பிரசாதமும் திருமாலை பிரசாதமும் ஸ்ரீ சடகோப பத த்வயமான
ஸ்ரீ மதுரகவிகளையும் பிரசாதிக்க

ஸ்ரீ ராமானுசனும் வகுள தவள மாலா வக்ஷஸம் வேத பாஹ்ய பிரபல வாதச் சேதனம் ( வேதா பாஹ்யா வர சமய விவாத -பாட பேதம் )–
பூஜ நீயம் விபுல குருக நாதங்காரி ஸூ நுங்க வீசம் சரண முகதோ அஹம் சக்ர ஹஸ்தேப சக்ரம் (சக்ர ஹஸ்தாக்ரதஸ் சகம் -பாட பேதம் ) என்று
அனுசந்தித்து தண்டன் சமர்ப்பித்து புறப்பட்டு திருப்புளி ஆழ்வாரையும் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானையும் திருவடி தொழுது புறப்பட்டு
மற்றும் சுற்றிலும் உள்ள திருப்பதிகளையும் சேவித்து அங்குள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளையும் ஜெயித்துப் புறப்பட்டு
திருக்குறுங்குடிக்கு எழுந்து அருளி கோலத் திருக்குறுங்குடி நம்பியை சேவித்து தீர்த்த பிரசாதமும் ஸ்வீகரித்து நிற்கிற அளவிலே
ஸ்ரீ நம்பியும் அர்ச்சக முகேன -நாம் ஸ்ரீ ராம கிருஷ்ணாதி அவதார முகேன ஜன்மம் பல பல செய்து வந்து பிறந்து சேதனரை திருத்தப் பார்த்த இடத்தில்
அவர்கள் அஸூர பிரக்ருதிகளாய் ஒருவரும் நம்மை வந்து சேர்ந்தார்கள் இல்லை -நீர் இத்தனை பேரையும் எங்கனம் திருத்தினீர் என்று கேட்டருள
ஸ்ரீ உடையவரும் தேவரீர் கேட்க்கும் கிரமத்தில் கேட்டால் சொல்லும் அடைவிலே சொல்லுகிறோம் என்ன
ஸ்ரீ நம்பியும் திவ்ய சிம்ஹாசத்தின் நின்றும் இறங்கி அருளி ரத்ன கம்பளத்தில் இருந்து இவருக்கு ஒரு திவ்ய சிம்ஹாசனத்தை இட்டு அருள
அதிலே ஸ்வ ஆச்சார்யரான பெரிய நம்பி எழுந்து அருளி இருக்கிறாராகப் பாவித்துக் கொண்டு தாம் நிலத்திலே இருந்து
ஸ்ரீ நம்பி திருச் செவியில் -ஸர்வேஷா மேவ மந்த்ராணாம் மந்த்ர ரத்னம் ஸூபாவஹம் -ஸக்ருத் ஸ்மரேண மாத்ரேண ததாதி பரமம் பதம்
மந்த்ர ரத்ன த்வயம் ந்யாஸ பிரபத்திஸ் சரணாகதி ஸ்ரீ லஷ்மீ நாராயணாயேதி ஹிதம் சர்வ பல ப்ரதம் -என்கிற மஹாத்ம்யத்தை உடைய
த்வயத்தை உபதேசிக்க ஸ்ரீ நம்பியும் போர உகந்து ஸ்ரீ ராமானுசனை உடையோம் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ உடையவரும் அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற தாஸ்ய நாமம் பிரசாதித்து அருள ஸ்ரீ நம்பியும் இவரை
ப்ரஹ்ம ரதம் ஏற்றி உபலாளித்து அருளினார் -ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ நம்பியை சேவித்து நின்று –
அபசாரா நிமான் சர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம -என்று விண்ணப்பம் செய்து அங்கு நின்றும் புறப்பட்டு

திரு வண் பரிசாரத்தையும் திரு வாட்டாற்றையும் திருவடி தொழுது திருவனந்த புரத்திலே எழுந்து அருளி
படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ பத்ம நாபப் பெருமாளையும் த்வார த்ரயத்தாலும் பாதாதி கேசாந்தமாக சேவித்து அருளி
அங்குள்ள பிரதிவாதிகளையும் ஜெயித்து ஸ்ரீ ராமானுஜ மடத்தையும் உண்டாக்கி புறப்பட்டு மலையாள தேசத்தில் உண்டான
திருப்பதிகளையும் சேவித்து அத்தேசத்தில் அந்நிய சித்தாந்திகளையும் ஜெயித்து மேலை சமுத்திரக் கரை வழியே
உத்தர தேசத்தில் எழுந்து எழுந்து அருளி வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுண்ட ஸ்தான த்வாரவதீ அயோத்தி உத்தர பத்ரிகாஸ்ரமம்
நைமிசாரண்யம் புஷ்கரம் என்று சொல்லப்பட்ட திவ்ய தேசங்களையும் மற்றும் உண்டான திருவாய்ப்பாடி ஸ்ரீ கோவர்த்தன கிரி
ஸ்ரீ பிருந்தாவனம் முதலான திருப்பதிகள் எல்லாவற்றையும் சேவித்துக் கொண்டு அவ்வவ் இடங்களில் உள்ள குத்ருஷ்ட்டி ஜனங்களையும் ஜெயித்து

பட்டி மண்டபத்தைக் கிட்டி ஸ்ரீ சரஸ்வதி பண்டாரத்து ஏற எழுந்து அருளின அளவிலே சரஸ்வதி தானே வாசல் திறந்து கொண்டு வந்து
எதிரே புறப்பட்டு நின்று ஸ்ரீ உடையவரைப் பார்த்து தஸ்யயதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ -என்கிற ஸ்ருதிக்குப் பொருள் சொல்லிக் காணீர் -என்ன
இவரும் கபிஸ் த்வாதித்ய கம் பிபதி கிரணைரித்யபி கபிர் பிபஸ்தீத்யாம் நாதஸ் சகபிரமுநா ஸ்தம்யதி ஹதத் ப்ரதீம கப்யாசந்திவச கர தேஜோ
விகசிதம் ஸூ பத்மம் ஸ்ரீ மத் த்வாத அணி பகவச் சஷுருபமா –என்று கம் என்று ஜலமாய்-கிரணங்களால் அத்தைப் பானம் பண்ணுகையாலே
கபி சப்த வாச்யனான ஆதித்யனாலே அஸூ ஷேபணே -என்று விகாச வாசகமாய் –
அலர்த்தப் பட்ட தாமரைப் பூப் போலே இருக்கும் பரம புருஷன் திருக் கண்கள் என்று கப்யாஸத்துக்குப் பொருள் அருளிச் செய்ய
ஸ்ரீ சரஸ்வதியும் கேட்டு சந்துஷ்டையாய் இவர் இட்டு அருளின ஸ்ரீ பாஷ்ய க்ரந்தத்தையும் சிரஸா வஹித்துத் தன் கையை நீட்டி
ஸ்ரீ உடையவர் திருக் கையைப் பிடித்துக் கொண்டு போய் இது ப்ரஷிப்தம் அன்று ஸூத்தமாய் இருந்தது என்று அங்கீகரித்து
இவருக்கு ஸ்ரீ பாஷ்ய காரர் என்று திரு நாமம் சாத்தி ஸ்ரீ ஹயக்ரீவரையும் எழுந்து அருளுவித்துக் கொடுத்து மிகவும் ஸ்லாகிக்க –
ஸ்ரீ பாஷ்யகாரரும் நம்மை இத்தனை ஆதரிக்கைக்கு அடி என் என்று கேட்டு அருள அவளும் முன்பு இங்கு வந்த சங்கரனை
இஸ் ஸ்ருதிக்கு அர்த்தம் கேட்ட அளவிலே அவனும் குரங்கு ப்ருஷ்டம் போலே இருக்கும் என்று அபஹாஸ்யமான அர்த்தம் சொன்னான் –
நீர் என் கருத்து அறிந்து பொருள் சொல்லுகையாலே ஆதரித்தேன் என்றாள் –

இத்தை அத்தேசத்தில் உள்ள பிரதிபக்ஷ சித்தாந்திகள் கேட்டு வந்து ஸ்ரீ உடையவருடன் தர்க்கிக்க அவர்கள் எல்லாரையும் ஜெயித்து
தம் சித்தாந்தத்தை ஸ்தாபித்த படியை அத்தேசத்தின் ராஜா கேட்டு இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் என்று வந்து
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்க அவனையும் கிருபை பண்ணி எழுந்து அருளி இருக்கும் அளவிலே அங்குள்ள அஸூயாளுக்களான
வித்வான்கள் இவரை அபசரிக்கத் தேட ஸ்ரீ உடையவரும் கேட்டு அருளி இத்தைக் காணக் கடவோம் என்று திரு உள்ளம் பற்றி இருக்க
அவ்வளவில் வித்வான்கள் பித்தேறித் தங்களைத் தாங்களே மோதிக் கொண்டு பேய்களாய் ஒடித் திரிய ராஜாவும் இத்தைக் கண்டு
ஸ்ரீ உடையவரைத் தண்டன் இட்டு -தேவரீர் இப்படி செய்து அருளலாமோ என்று வேண்டிக் கொண்டு அவர்களையும் ஸ்வஸ்தராம் படி
பண்ணுவித்து அவருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து தன் சர்வ பரிகரத்துடன் இருகாத வழி
சேவித்துக் கொண்டு வந்து வழி விட்டு மீண்டு போக

ஸ்ரீ உடையவரும் வாரணாசீ வழியாக எழுந்து அருளி கங்கையைக் கிட்டி கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் எல்லாம்
இறைப் பொழுது அளவினில் கழுவிடும் பெருமையை யுடைய கங்கையில் திருமால் கழல் இணைக் கீழே குளித்து என்கிறபடியே நீராடி –
கபாலி ஸ்பர்ச தோஷத்தையும் கழித்து கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரங்களையும் தரித்துக் கொண்டு ஸ்ரீ கண்டம் என்னும் கடி நகரிலே
எம்பெருமானையும் கை தொழுது கழல் இணை பணிந்து புறப்பட்டு ஸ்ரீ புருஷோத்தமத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஜெகந்நாதனையும்
திருவடி தொழுது அங்குள்ள ப்ரசன்ன பவ்த்த வித்வான்களையும் ஜெயித்து அங்கே ஸ்ரீ ராமானுஜ மடம் ஓன்று உண்டாக்கி
அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ கூர்மத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ கூர்ம நாதனையும் சேவித்து ஸ்ரீ ஸிம்ஹாத்ரி ஏற எழுந்து அருளி
ஸ்ரீ ஸிம்ஹ கிரி அப்பனையும் சேவித்து அவ்விடத்தில் அந்நிய சமயங்களையும் தர்க்கித்து ஜெயித்து
அங்கு இருந்து புறப்பட்டு ஸ்ரீ அஹோபிலத்து ஏற நின்று ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹனையும் சேவித்துப் புறப்பட்டு

தெழி குரல் அருவித் திருவேங்கட மலை ஏறித் திருவேங்கடமுடையானையும் சேவித்து நிற்க அவ்வளவில் –
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் திரண்டு அருவி பாயும்
திருமலை மேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாம் இசைந்து -என்று ஆழ்வார் அனுபவித்த ஹரிஹர ஆகாரம் ஒத்து இருக்கையாலே
சைவர் கண்டு எங்கள் நாயனார் என்று பிணங்கி வர ஸ்ரீ உடையவரும் உங்கள் தம்பிரானுக்கு அசாதாரண சிஹ்னமான
த்ரி ஸூல டமருகத்தையும் எங்கள் பெருமாளுக்கு அசாதாரண சிஹ்னமான திருவாழி திருச் சங்கு ஆழ்வார்களையும் பண்ணித்
திருவேங்கடமுடையான் திரு முன்பே வைப்போம் -அவர் எத்தை எடுத்துத் தரித்துக் கொள்வாரோ அத்தை இட்டு
அவர் ஸ்வரூப நிரூபணம் பண்ணக் கடவது என்று அவ்வாயுதங்களைப் பண்ணி அவர் சந்நிதியில் வைத்து கர்ப்ப க்ருஹத்திலே
ஒருத்தரும் இல்லாதபடி சோதித்து திருக் காப்பைச் சேர்த்துக் கொண்டு புறப்பட்டு வந்து ப்ராதக்காலம் ஆனவாறே
திருக்காப்பை நீக்கி சேவிக்கிற அளவிலே கூராழி வெண் சங்கு ஏந்தி த்ரி ஸூல டமருகங்களைக் காற்கடைக் கொண்டு இருக்கக் கண்டு
ஆனந்த அஸ்ருக்கள் பனிப்பக் கொந்தளித்துக் குணாலைக் கூத்தடித்துக் கொண்டு சைவரை அடித்தோட்டி விட்டு
பொன்னை மா மணியை அணி ஆர்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு என்கிறபடியே வர்ஷுக வலாஹகம் போலே
அகிலர்க்கும் அகில தாபத்தையும் போக்கி அகில அபேக்ஷித பிரதரான திருவேங்கடத்து எந்தையைத் திருவடி தொழுது
அப்போதே திருமலையில் இறங்கித் திருத் தாழ்வரையில் ஆழ்வார்களையும் திருவடி தொழுது புறப்பட்டு

ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ பேர் அருளாளரையும் சேவித்து புறப்பட்டுத் திருவல்லிக்கேணி திரு நீர்மலை முதலான
கிழக்கில் திருப்பதிகளையும் சேவித்து ஸ்ரீ மதுராந்தகத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஏரி காத்த பெருமாளையும் சேவித்து
ஸ்ரீ பெரிய நம்பி தம்மை கிருபை பண்ணி அருளின திரு மகிழ் அடியைத் தண்டன் இட்டு தொண்டை மண்டலத்தில் உள்ள
மாயாவாதிகளையும் ஜெயித்து ஸ்ரீ திருவயிந்த்ர புரத்தில் ஸ்ரீ தெய்வ நாயகனையும் திருவடி வணங்கி புறப்பட்டு
ஸ்ரீ வீர நாராயண புரத்தே சென்று ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ மன்னனாரையும் சேவித்து ஸ்ரீ நாதமுனிகள் யோகத்தில் எழுந்து அருளி இருந்த
இடத்தையும் சேவித்து இப்படி பூ பிரதக்ஷிணம் பண்ணி மடங்கித் திருவணை ஆடி திருவரங்கம் பெரிய கோயிலிலே எழுந்து அருளி
ஸ்ரீ பெரிய பெருமாளை அமலானாதி பிரானில் படியே திருவடி முதல் திருமுடி அளவாக முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியையும் அனுபவித்து
அஞ்சலித்துக் கொண்டு ஜெய ஸ்ரீ உடன் நிற்க ஸ்ரீ பெருமாளும் பவள வாய் திறந்து உமக்கு ஒரு குறையும் இல்லையே என்ன
ஸ்ரீ பாஷ்யகாரரும் திருமால் உருவொடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
என்கிறபடியே அங்கும் தேவரீரையே சிந்தித்து எங்கும் திரிந்து வந்த அடியேனுக்கும் ஒரு குறை உண்டோ என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் உகந்து தீர்த்த பிரசாதம் ப்ரசாதிப்பிக்க ஸ்வீ கரித்து புறப்பட்டு திரு மடமே எழுந்து அருளி
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவு கண்டு உகந்து
அவர்களை கிருபை பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: