ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் -ஸ்ரீ எம்பாரை திருத்தி அருளிய வ்ருத்தாந்தம்-/ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பியிடம் விசேஷ அர்த்தம் கேட்டு அருளுதல்-/திருமாலை ஆண்டான் இடம் திருவாய் மொழி கேட்டல் – /ஸ்ரீ திருமலை நம்பியின் இடத்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ராமாயணம் கேட்டல் —

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ எம்பாரை திருத்தி அருளிய வ்ருத்தாந்தம் –

முன்பு ஸ்ரீ திருமலை நம்பி சந்நிதிக்குப் போக விட்டு இருந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஹர்ஷ பிரகர்ஷத்துடன் மீண்டு எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளில் சேவிக்க ஸ்ரீ உடையவரும் அவரது முக விலாசத்தைக் கண்டு கார்ய சித்தியை நிச்சயித்து ப்ரீதியுடனே –
அந்த வ்ருத்தாந்தத்தை விவரமாக சொல்லும் என்ன –
ஸ்ரீ வைஷ்ணவர் -தேவரீர் விடை பிரசாதித்து அருளிய பின்பு திருமலைக்குப் போய் திருமலை நம்பியை சேவித்து
தேவரீர் நியமனப்படியே விண்ணப்பம் செய்தென் -ஸ்ரீ நம்பியும் கேட்டருளி -இது நாமே செய்யக் கடவதாக இருக்க
நம் இராமானுசனும் எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதாகப் பெற்றதே என்று தேவரீர் ஆனுகூல்யத்துக்கு உகந்த திரு உள்ளத்தராய் –
தத் க்ஷணமே ஸ்ரீ பாதத்து முதலிகள் உடனே அடியேனையும் கூட்டிக் கொண்டு காள ஹஸ்தி குளக்கரையில் ஒரு மரத்தடியில்
எழுந்து அருளி இருக்க உள்ளங்கை நாயனாரும் அங்கே ருத்ர அபிஷேக அர்த்தமாக குடம் கொண்டு ருத்ர பரமான பாட்டுக்களையும்
கதறிக் கொண்டு வர ஸ்ரீ நம்பியும் -கொன்றைச் (சடை முடியானை-)சடையானை குளிர நீராட்டினால் என் உனக்கு உண்டாம் பயன் -என்று
அருளிச் செய்ய நாயனாரும் இப்பாசுரம் கேட்டு ஸ்ரீ நம்பியை ஸ்மயமாந முகனாய் ஏறப் பாரா நின்று கொண்டு போக
இவரும் அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்ற சிந்தையராய் மீண்டு திருமலையில் போய் வ்யாக்யானித்துக் கொண்டு
எழுந்து அருளி இருந்தார் –

பின்னையும் ஒரு நாள் முன்பு போலே அக்குளக் கரையிலே வட வருஷ சாயையிலே எழுந்து அருளி இருக்க
அங்கே நாயனாரும் அபிஷேக ஜல ஹரண அர்த்தமாக குடம் எடுத்து வருமது கண்டு ஸ்ரீ நம்பியும் அப்போது ஒரு சிந்தை செய்து –
என் மனம் சூழ வருவானாய் -உறங்குவான் போல் யோகு செய்வான் தானே -உணர்வைப் பெற ஊர்ந்தவன் உறங்குகிறானோ -என்று
தம்முடைய ஆச்சார்ய திவ்ய ஸூக்தி யிலே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் -என்கிற ஸ்லோகத்தை
ஒரு ஓலைப் புறத்திலே எழுதி அவன் வருகிற வழியிலே போக விடுத்து இருக்க -அவனும் அவ்வழியில் வந்து
அவ் ஓலையைக் கண்டு எடுத்து வாசித்துக் கொண்டு கடுகப் பொகட்டு ஜலத்தை ஆஹரித்துக் கொண்டு
மீண்டு போகிறவன் ஜலத்தையும் இறக்கி முன்பு எறிந்து ஏட்டைத் தேடி எடுத்து மீண்டு குடம் எடுத்துக் கொண்டு வருகிறவன்
எங்களைக் கண்டு -சோகஸ் ஸ்லோஹத்வம் ஆகத -என்று ஸ்ரீ வாலமீகி பகவான் அர்த்த சிந்தனை பண்ணினால் போலே
இவனும் ஸ்லோக அர்த்த பர்ய ஆலோசனை பண்ணா நின்று கொண்டு கிட்ட வந்து நின்று –

உங்கள் கையில் நழுவின பொருள் இதுவோ -என்ன ஸ்ரீ நம்பியும் -வேறே சிலர் பொருள் நழுவுமது ஒழிய
எங்கள் பொருள் நழுவதுமது அல்ல என்ன -அவனும் அது கிடக்கிடீர் –
நீங்கள் எல்லாரும் ஓர் இடத்தில் நடக்கிறது என் என்ன -ஸ்ரீ நம்பியும் மார்க்கம் கலக்கம் அற்று இருக்கையாலே என்ன –
அவனும் கேவலருக்கு மார்க்கங்கள் உண்டோ என்ன – இவரும் பொருள் கை உண்டாய் செல்லுமவனுக்கு அடுப்பது இதுவன்றோ என்ன –
அவனும் இப்போது நீங்கள் உற்றாரை விட வந்தீர்களோ -என்ன இவரும் -அது அல்ல கறைவைகள் கொள்ள வந்தோம் என்ன –
அவனும் அனுஷ்டாதாக்களுக்கும் பஹு பாத தூளி பவித்ரம் அன்றோ என்ன -இவரும் அது இடம் அறிந்து நேர் படில் நல்லது என்ன –
அவனும் குறுக்கு நெடுக்காகில் பேதம் என் என்ன -இவரும் செவ்வை இருக்க திர்யக்காகையே பேதம் என்ன –
அவனும் இது புது வார்த்தைக் கட்டுகளோ என்ன இவரும் பழைய வார்த்தைக் கட்டுக்களும் இப்படியே என்ன –
அவனும் இதில் பூர்வ விசாரம் வேண்டாவோ என்ன நம்பியும் பரத்வத்திலே காண் விசாரம் இருப்பது என்ன
நாயனாரும் நிருத்தரனாய் ஸ்ரீ நம்பியை ஏறப் பாரா நின்று கொண்டு யதா ஸ்தானமே போம் போது
தலை துலுக்கி அடைவு கேடு காணலாம் படி போனான்

ஸ்ரீ நம்பியும் அது கண்டு — பிரசாதம் அஹமச்சித்தம்-என்னுமா போலே நெஞ்சம் உருகா நின்றதே -அவரே இனி யாவாரே-என்று
அனுசந்தித்து ஸாத்ய கோடியில் ஏறிட்டு முதலிகளுடன் சல்லாபித்துக் கொண்டு திருமலையே மீண்டு எழுந்து அருளினார் -என்றவாறே
ஸ்ரீ உடையவரும் மிகவும் ஆனந்தித்து ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ முதலியாண்டானையும் இருந்த முதலிகளையும் பார்த்து அருளி –
கேட்டீர்களா கோவிந்தனுக்கு ஸ்ரீ ஆளவந்தார் திவ்ய ஸூக்தி நெஞ்சில் உற்று அதற்கு வாங் மாத்திரத்தாலே வைதண்டிகச் சாயையைக் காட்ட
அதற்கு ஸ்ரீ நம்பி சாயா மாத்திரத்தாலே சதுத்தரங்களை வாக் சாதுர்யங்களாலே ரசிக்க கோவிந்தனும் ஸாஸ்த்ர விதக்தனாகையாலே
ஸ்ரீ நம்பியினுடைய ஸ்ரீ ஸூக்தி வைசாரத்ய க்ரமங்களிலே ஈடுபட்டு நிருத்தரானான் இறே -எங்கனே என்னில்

கூடஸ்தோ அக்ஷர உச்யதே –அமரர்கள் ஆதி முதல்வன்
தேஹீ சன்மார்க்க வர்த்தந -நெறி வாசல் தானேயாய் நின்றான்
கச்சிந் மாம் வேத்தி தத்வத – யானே நீ என் உடைமையும் நீயே
ஞாநேந ஹீந பஸூபிஸ் ஸமான – என் நினைந்து போக்குவார் இப்போது
யேவா லலாட பலகேலச தூர்த்வ புண்ட்ரா -நீறு செவ்வே இடக் காணில்
வேத மூல ப்ரமாணாத்-மிக்க வேதியர் வேதம்
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் –தர்மே சர்வம் ப்ரதிஷ்டிதம் -அவித்யயாம்ருத் யுந் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்நுதே –
பிரணவோதா நுஸ்சரோஹ்யாத் மா ப்ரஹ்ம தல்லஷ்யம் உச்யதே -அப்ரமத்தேந வேத்தவ்யம் சரவத் தன்மயோ பவத் —
(போத்தவ்யம்-என்றும் சரவத் தத்வயோவித் -பாட பேதம் )
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணா த்ருத்ரோ ஜாயதே
என்று இப்படிப்பட்ட ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணாதிகளிலே ப்ரதிபாதிக்கிற அர்த்தங்களை எல்லாம் தத் காலத்திலே
மனஸ்ஸானது அவகாஹிக்க கோவிந்தனும் நிருத்தரனாய் டோலாயமான சித்தனாய்ப் போகையாலும் இவரும் அவனை
ஸாத்ய கோடியிலே ஏறிட்டுத் திரும்பி அருளுகையாலும் ஸ்ரீ நம்பிக்கு அவனுடன்
ஓடின சாமர்த்தியம் இருந்தபடி என் -என்று விஸ்மிதராய் ஸ்ரீ வைஷ்ணவரை உபலாளித்து அருளி பின்னை என் என்று கேட்டருள

அவரும் –யம்யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் -யம்யம் பச்யதி சஷுஷா ஸ்தாவராண் அபி முச்யந்தே கிம்புநர் பாந்தவாஜநா -என்கிறபடியே
தேவரீருடைய உபயவித சம்பந்தம் பழுது போமோ -மூன்றாம் கதியில் கார்ய சித்தியைக் கேட்டருள வேணும் என்று விண்ணப்பம் செய்தார் –
எங்கனே என்னில்
ஸ்ரீ திருமலை நம்பியும் திருமலையில் சிந்தாமணியைத் திருவடி தொழுது புறப்பட்டு காளஹஸ்தி எல்லை நிலத்தோப்பில்
எழுந்து அருளி இருந்து ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு திருவாய் மொழி வியாக்யானம் ப்ரசாதித்து அருளா நிற்க நாயனாரும்
ஒரு பாதிரி மரம் ஏறி புஷ்பாபசயம் பண்ணா நிற்க அவ்வளவில் -திண்ணன் வீடு -என்கிற திருவாய் மொழிக்கு அர்த்தம்
அருளிச் செய்யா நிற்க நாயனாரும் மூன்றாம் பாட்டு அளவும் பூ பறிக்கை தவிர்ந்து கேட்டுக் கொண்டு இருந்து நாலாம் பாட்டில் –
எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே என்று வர நாயனாரும் அம்மரத்தின் நின்றும் திடுக்கென குதித்து
கையில் இருந்த பூப் படலிகையும் சுழற்றி எறிந்து தரித்து இருந்த ருத்ராஷத்தையும் அலங்கல் அழிய வாங்கி வீசிப் பொகட்டு –
தகாது தகாது -என்று ஸ்ரீ நம்பி திருவடிகளிலே அடைவுகெட விழுந்து கிடந்து –
அஞ்ஞஸ் சா சா ரஹீ நஸ்ச மலிநோ துக்க சாகோ நிமக்நா–என்றும் நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்றும் சொல்லுகிறபடியே
தம் வர்த்தமானத்தைச் சொல்லி அதி விஷண்ணராகிறார்-எங்கனே என்னில்
உபய விபூதி நிர்வாகத்துக்கு முடி சூடியவன் இருக்க விரி தலை யாண்டியை விரும்பினேன் -என்றும்
புதுக் கணிப்புடைய புண்டரீகாக்ஷன் இருக்க புகைக் கண்ணனை-பொறி பறக்கும் கண்ணனைப் பூசித்தேனே -என்றும்
கடல் மண்ணுண்ட கண்ணன் இருக்க கறை கொண்ட கண்டத்தனை காமித்தேனே -என்றும்
கல் எடுத்த கன் மாரி காத்த கற்பகம் இருக்க கையார் கபாலியைக் கண்டு வணங்கினேன் -என்றும்
திருவிருந்து மார்பன் இருக்க திருவில்லாத தேவரைத் தொழுதேன் -என்றும்
பீதகவாடைப் பிரான் இருக்க புலியுரி உடையானை பின் தொடர்ந்தேனே என்றும்
சதிரான கங்கை யடியான் இருக்கச் சுடுகாடு காவலனைச் சுற்றி வலம் வந்தேனே -என்றும்
பெரு மலராகிற பெரும் துழாய் வனம் இருக்க பெரும் கையால் குடம் எடுத்து பேய்ச் சுரைக்கு நீர் வார்த்தேனே -என்றும்

இப்படி பலவகையாகப் புலம்பி இவ்வாத்மாவை உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்று தண்டன் இட்டு எழுந்திராமல் இருக்க
ஸ்ரீ நம்பியும் முதலிகளை முகம் பார்த்து ஸூத்தி யோகம் உண்டாய் இருந்தது -ஸ்ரீ ஆளவந்தார் கிருபை பண்ணும் படிக்கு
குறை இல்லை என்று அருளிச் செய்து இவரையும் முடி பிடித்து எடுத்து உடம்பையும் தடவி பலபடியாக சாந்த்வ வாதனம் பண்ணி –
ஆபபந்நிவ சஷுர்ப்யாம் -என்கிறபடியே குளிர நோக்கி விஸ்ரம்ப கதனம் நடவா நிற்க இச் செய்தியை அடையக் கேட்டு
தத் ஸ்தானத்தார் அனைவரும் வந்து ஸ்ரீ நம்பியுடனே -எங்கள் ஸ்தானத்துக்கு கடவரான இவரை நீங்கள்
எங்கனே அம்மான் பொடி இட அடுக்கும் என்ன ஸ்ரீ நம்பியும் அம்மான் பொடிக்கு ஈடுபட்ட இவரையே கேட்டுக் கொள்ளுங்கோள்-
எங்கள் வழி அந்யாத்ருசம் -அசல் வழி வருகிறோம் அல்லோம் என்ன -அவர்கள் நாயனாரை வாரும் என்று கையைப் பிடிக்க
இவரும் கையை உதறி நம் கையைப் பிடிக்கக் கூடுமோ என்று கருவூலத்தின் திறவு கோல் இலச்சினை மோதிரம் முதலானவற்றையும் பொகட்டு –
இனி உங்களுக்கும் நமக்கும் பணி இல்லை என்று கை தட்டி முகம் திருப்பி நிற்க அவர்களும் நிராசராய்
ஸ்ரீ நம்பியுடனே நாங்கள் இச்செய்திகள் எல்லாம் நேற்றே கேட்டோம் -நாங்கள் பிரான் நம் வழி வருவார் என்று
உங்களுடனே சண்டைக்கு நிற்பதாக எண்ணி இருந்தோம் -காளஹஸ்தி உடையாரும் எங்கள் கனவிலே

பாஷண்ட பவ்த்த சார்வாகைஸ் த்ரயீ தர்மோ விலோபித -என்கிறபடியே வேத பாஹ்யரான பவ்த்தாதிகளாலே
வேத சாஸ்திரங்கள் ப்ரமுஷிதங்கள் ஆகா நிற்க –
த்ரிதண்ட தாரினாபூர்வம் விஷ்ணு நார ஷிதா த்ரயீ -என்று சொல்லுகிறபடியே நாஸ்திக நிரசன அர்த்தமாக த்ரிதண்ட சன்யாசியான
தத்தாத்ரேயரைப் போலே சேஷாசன அனந்த வைநதேயர்கள் யமுனைத் துறைவர் இளையாழ்வார் கோவிந்த பட்டராகவும்
இவர்கள் சேர்த்திக்கு சங்கு சக்ராம்சங்கள் முதலியாண்டான் கூரத்தாழ்வானாகவும் மற்றும் உள்ள விஷ்ணு பார்ஷதங்களும்
இப்படியே வந்து அவதரித்தார்கள்-இது நமக்கு பிரியம் ஆகையால் கோவிந்த பட்டருக்கு முன்பு காசி வாச அபேக்ஷை இருக்கையாலே
அந்தப் புத்தியைத் தவிர்க்கைக்காக நாமே உள்ளங்கை கொணர்ந்த வியாஜ்யம் இட்டு அழைத்து வைத்துக் கொண்டது ஒழிய மற்று இல்லை –
ஆகையால் அவர்கள் ஸ்வ இச்சா விஹாரிகள் என்று சொன்னார் என்று சொல்லி மீண்டு போக
ஸ்ரீ நம்பியும் இவரைக் கூட்டிக் கொண்டு திருப்பதி ஏற எழுந்து அருளி தத் க்ஷணமே உபநய நாதிகளையும் செய்வித்து
ஸம்ஸ்கார பஞ்ச கர்த்தவ்ய -என்று நெடுமால் அருவியாகிய ஸ்வாமி புஷ்கரணிக் கரையிலே பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்
பிரசாதித்து அருளி திருப்பல்லாண்டு முதலாக ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்தங்களையும் ஓதுவித்து அர்த்த பஞ்சக ஞானத்தையும் உண்டாக்கி
விசேஷித்து கிருபை பண்ணி அருளினார் –
இவரும் தேவு மற்று அறியாதே ஆச்சார்ய பத ஏக நிஷ்டராய் -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று இருக்குமவரைப் போலே
ஒழிவில் காலத்தில் படியே அவர் திருவடிகளிலே சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்து கொண்டு இரா நின்றார்
இந்நாள் சேவித்து இருந்து விடை கொண்டேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அந்த
ஸ்ரீ வைஷ்ணவரை மிகவும் கிருபை செய்து அருளினார் –

அநந்தரம் ஸ்ரீ ராமானுசனும் ஸ்ரீ பெரிய நம்பி திரு மாளிகைக்கு எழுந்து அருளி அவர் திருவடிகளிலே தாளும் தடக்கையும்
கூப்பித் தண்டன் சமர்ப்பித்து -ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் சேவியாத இழவு தீரத் தேவரீர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்கப் பெற்றேன் –
தேவரீர் திரு உள்ளத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை அடியேனுக்கு ப்ரசாதித்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் அப்படியே ஆகிறது என்று –
அஹோ த்வயஸ்ய மஹாத்ம்ய மஹோ வீர்ய மஹோ பலம் -மந்த்ர ரத்னம் ஸூப கரம் வேத சாரம் சனாதனம் சர்வ பாப க்ஷய கரம்
சர்வ புண்ய விவர்த்தநம் -ஸ்ரீ கரம் லோகவஸ் யஞ்ச சத்யம் சம்சார தாரணம் -( சத்யஸ் சம்சார தாரகம் பாட பேதம் ) என்கிறபடியே
பாப ஹரமுமாய் புண்ய வர்த்தகமுமாய் சம்சார பந்தத்தை அறுக்க வற்றதாய் மிகவும் ஸ்லாகிக்கப் பட்டு வேத சார தமமாய்
மாங்கள்யகரமாய் மந்த்ர ரத்னம் ஆகிற த்வயார்த்தத்தை ச விசேஷமாக பிரசாதித்து அருளி இன்னமும் சில அர்த்த விசேஷங்கள் உண்டு –
அவற்றை ஸ்ரீ ஆளவந்தாருடைய அபிமான அந்தர்பூதரான ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று கேளும் -என்று அருளிச் செய்தார்

பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகள் -ஸ்ரீ இளையாழ்வார் -ஸ்ரீ மலை குனிய நின்ற பெருமாள் –
ஸ்ரீ பிள்ளை திருக்குல முடையார் -ஸ்ரீ பட்டாரியரில் சடகோபர் தாசர் ஆகிய நான்கு முதலிகளும்

—————————————

ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பியிடம் விசேஷ அர்த்தம் கேட்டு அருளுதல்-

ஸ்ரீ ராமானுசனும் அங்கே ஏற எழுந்து அருளி திருக் கோஷ்டியூர் வாசிகளான மாற்றிலி சோறிட்டுத் தேச வார்த்தை படைக்குமவர்களை
ஸ்ரீ நம்பி திருமாளிகை எங்கே என்று கேட்டருளி -அவர்களும் அப்பாலே தோன்றுகிற கூரை என்று காட்ட –
அவ்விடம் தொடங்க ஸ்ரீ நம்பி திருமாளிகை அளவும் தண்டன் இட்டுக் கொண்டு எழுந்து அருள
அப்போது அவ் வூரில் குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலரான சத்துக்கள் நம்பி பிரபாவம் அறிந்தார்கள் –
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று சாஷ்டாங்க பிரணாமாம் பண்ணி -தேவரீர் அடியேனுக்கு ரஹஸ்யார்த்த விசேஷங்களை
எல்லாம் ப்ரசாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
அவரும் இவருடைய அத்யாவசிய பாஹுள்யத்தை அறிய வேணும் என்று ஆருக்கு என் சொல்லுகேன் என்று முகம் கொடுக்காமல்
எழுந்து அருளி இருக்க ஸ்ரீ உடையவரும் மீண்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் –
பின்பு ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ கோயிலுக்கு திருநாள் சேவிக்க எழுந்து அருளித் தம்மூரே திரும்பி எழுந்து அருளுகிறவரை
ஸ்ரீ நம்பெருமாள் அருள்பாடிட்டுத் திருமாலை திருப்பரியட்டம் தீர்த்தம் ஸ்ரீ சடகோபனும் பிரசாதித்து நம் ராமானுஜனுக்கு
ரஹஸ்யார்த்தங்களை உபதேசியும் என்று அர்ச்சக முகேன நியமித்து அருள
ஸ்ரீ நம்பியும் -ந சம்வத்சர வாசிநே ப்ரப்ரூயாத் என்றும்
இதம் தே நாத பஸ்காய-என்று தொடங்கி நசாஸூஷ் ரூஷவே வாஸ்யம் -என்றும்
தேவரீர் நியமித்து அருளிற்று இ றே என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் அப்படி அன்று -சரீரம் வஸூ விஞ்ஞானம் என்று தொடங்கி சொல்லப்பட்ட சிஷ்ய லக்ஷண பூர்த்தி யுள்ள
ஸ்ரீ உடையவருக்குச் சொல்லக் குறையில்லை என்று அருளிச் செய்ய
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ உடையவரைக் குறித்து ஊரேறே வாரும் என்று அருளிச் செய்து எழுந்து அருள
ஸ்ரீ ராமானுஜரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி சந்நிதிக்குச் செல்ல அவரும் இற்றைக்குப் போய் வாரும் என்ன
இவரும் மீண்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் -இப்படி பதினெட்டு பர்யாயம் எழுந்து அருளி ஸ்ரீ பாதத்தில் சேவித்து நின்ற அளவிலும்
ஸ்ரீ நம்பியும் இவருடைய த்ருட அத்யாவசிய பரீஷார்த்தமாக ஒன்றும் அருளிச் செய்யாமல் இருக்க
ஸ்ரீ ராமானுசனும் பெரிய ஆர்த்தியோடே மீண்டு -இணை மலர்க் கண் ததும்ப ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் –

அவ்வளவில் ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பி சிஷ்யரான ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்து ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து மீண்டு எழுந்து அருளுகிறவர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் சேவித்து நிற்க அவரும் தம்முடைய ஆர்த்தி எல்லாம் தோன்றும்படி பூந்துழாய் முடியார்க்குத் தகவல்ல-
பொன்னாழிக் கையாருக்குத் தகவில்லை-என்று விண்ணப்பம் செய்து போக விட்டு அருள அந்த ஸ்ரீ வைஷ்ணவரும்
ஸ்ரீ நம்பி திருவடிகளிலே சென்று தண்டன் இட்டு அச் செய்தியை விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் இத்தனை ஆர்த்தி உண்டாவதே
என்று உகந்து அருளி தண்டும் பவித்ரமுமாக தாம் ஒருவரே வருவது என்று அவரையே மீண்டும் இராமானுசன் பக்கல் போக விட்டு அருள
ஸ்ரீ வைஷ்ணவரும் ஸ்ரீ உடையவர் திருவடி ஏறச் சென்று தண்டன் இட்டு ஸ்ரீ நம்பி அருளிச் செய்ததை விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் கேட்டு அருளி மிகவும் உகப்போடு அவரைத் தண்டன் இட்டு ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ முதலியாண்டானையும் கூட்டிக் கொண்டு
அதி த்வரையோடே திருக் கோட்டியூர் ஏறச் சென்று ஸ்ரீ நம்பி திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து நிற்க
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ உடையவரைப் பார்த்து உம்மை ஒருவரையும் அன்றோ வரச் சொன்னோம் -இவர்களைக் கொண்டு வருவான் என் என்று கேட்டு அருள
ஸ்ரீ உடையவரும் தேவரீர் தண்டும் பவித்ரமும் ஆகவன்றோ வரச் சொல்லி அருளிற்று –
இவர்களை தண்டும் பவித்ரமுமாகவே கூட்டிக் கொண்டு வந்தேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் தண்டு யார் பவித்ரம் யார் -என்று கேட்டு அருள ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ முதலியாண்டானைக் காட்டி
இவர் த்ரிதண்டம் -ஸ்ரீ கூரத்தாழ்வானைக் காட்டி இவர் பவித்ரம் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ நம்பியும் ஆகில் இவ்வர்த்தத்தை இவர்களுக்கு ஒழிய மற்று ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும் என்று நியமித்து அருளி
தம் திருவடிகளைத் தொடுவித்து சூளுறவு கொண்டு பரம கிருபையால்

ப்ரணவாத்யம் நமோ மத்யம் நாராயண பதாந்திமம் -மந்த்ரம் அஷ்டாக்ஷரம் வித்யாத் சர்வ சித்திகரம் சதா ந்ருணாம் முமுஷுணாம்
சதா ஜப்யம் புக்தி முக்தி பல ப்ரதம் வைஷ்ணவானாம் சதா ஜப்யம் பக்தி ஞான ப்ரவர்த்த நம் —
என்கிறபடியே எட்டுத் திரு அக்ஷரமாய் பத த்ரயாத்மகமாய் -ஞான பக்தி வைராக்ய ஜனகம் ஆகையால் முமுஷுக்களான
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நாத் தழும்பு எழ சதா அனுசந்தேயமாய் நலம் தரும் சொல்லான பெரிய திருமந்திரத்தை பிரசாதித்து அருளினார் –
ஸ்ரீ ராமானுசனும் க்ருதார்த்தராய் அதின் மற்றை நாள் அவ் வூரில் எம்பெருமானான தெற்கு ஆழ்வார் திரு ஓலக்கத்தில்
அநேகம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அப்பரம ரஹஸ்யார்த்தத்தை அருளிச் செய்து அருளினார்

இச்செய்தியை ஸ்ரீ நம்பி கேட்டு அருளி ஸ்ரீ உடையவரை அழைத்து இந்த பரம ரஹஸ்யத்தை வேறு ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும்
என்று அன்றோ நாம் உமக்குச் சொன்னோம் -அத்தை மறுத்து நீர் அநேகம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சொன்னீர் என்று கேட்டோம் என்று கேட்டு அருள
ஸ்ரீ உடையவரும் உள்ளது தேவரீர் திருவடிகளை முன்னிட்டு சொன்னேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் ஒருவருக்கும்
சொல்ல வேண்டா என்று நியமித்து அன்றோ சொன்னோம் -அத்தை மறுத்துச் சொன்ன உமக்கு பலம் ஏது என்று கேட்டு அருள
ஸ்ரீ உடையவரும் ஆச்சார்ய நியமனத்தை மறுத்த எனக்கு நரகமே பலம் என்று அருளிச் செய்ய -இத்தை அறிந்து சொல்லுவான் என் என்று கேட்டு அருள
ஸ்ரீ ராமானுசனும் அடியேன் ஒருவனே அன்றோ நரகம் புகுவது -தேவரீர் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு சொல்லுகையாலே
இவ்வாத்மா கோடிகள் எல்லாம் தேவரீர் திருவடி சம்பந்தத்தால் உஜ்ஜீவிப்பர்கள் என்று சொன்னேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் இந்த பர ஸம்ருத்தி நமக்கு கூடிற்று இல்லையே என்று இவர் பர ஸம்ருத்திக்கு போர உகந்து அருளி
எம்பெருமானாரே வாரும் என்று எடுத்து அணைத்துக் கொண்டு அவரோ நீர் என்று அருளிச் செய்து –
இது வரையில் இத்தர்சனம் பரம வைதிக சித்தாந்தம் என்று இருந்தது –
இன்று முதல் எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று எல்லாருக்கும் அருளிச் செய்து அந்த உகப்பின் மிகுதியால்
வாரீர் எம்பெருமானாரே இன்னும் ஒரு சரம ஸ்லோகார்த்த விசேஷம் சொல்லுவதாக இரா நின்றோம் –
இவ்வளவிலே நீர் த்ருபதராய் இரா நின்றீர்-உம்முடைய அத்யாவசாயத்தை சொல்லிக் கண்ணீர் என்ன

ஸ்ரீ எம்பெருமானாரும் தேவரீர் அருளிச் செய்த அர்த்தத்துக்கு மேலே ஓர் அர்த்தம் உண்டு என்று இருந்தேன் ஆகில் அவிசுவசி யாவேன் –
கேளாது இருந்தேன் ஆகில் அருளிச் செய்த அர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாம் -என்று விண்ணப்பம் செய்ய
விரகு அறியாமல் ஸ்ரோதவ்ய சாபேஷனாய் வியாகுல அந்தக்கரணனாய் இரா நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் இப்போது போய் ஏகாந்தமாக நீர் ஒருவருமே வாரும் என்று அருளிச் செய்ய இவரும் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார்
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருமே ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்று தண்டன் சமர்ப்பித்து நிற்க
ஸ்ரீ நம்பி இவர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு போய் ஏகாந்தமாக மேல் தளத்தில் ஏறிப் படிக்கதவை விழ விட்டு எழுந்து அருளி இருந்து
ஒருவருக்கும் சொல்லாதபடி தம் திருவடிகளை தொடுவித்து சூளூருவு கொண்டு தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே –
சர்வ குஹ்ய தமம் பூய ஸ்ருணுமே பரமம் வச இஷ்டோ அசி மே த்ருட இதி ததோ வஹ்யாமி தேஹிதம்-என்று ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்தது போலே
ஸ்ரீ நம்பியும் சர்வ குஹ்ய தமமாக பரம ரஹஸ்யமான சரம ஸ்லோகார்த்தத்தையும் அருளிச் செய்து அத்தாலே ப்ரதிபாதிக்கப் படுகிற
இதர உபாய தியாக பூர்வகமான சித்த உபாய வைலக்ஷண்யத்தையும் பிரசாதித்து இந்த பரம ரஹஸ்யார்த்தத்தை
இதந்தே நாத பஸ்காய நா பக்தாய கதாசன நசாஸூஸ் ரூஷவே வாஸ்யம் நசமாம் யோ அப்யஸூயதி –என்று சொல்லுகிறபடியே
பகவத் விமுகர் முதலான நாஸ்திகர் செவிப்படாத படி பேணிக் கொண்டு போரும் என்று நியமித்து அருள
இவரும் அடியேன் அப்படிப்பட்ட பேருக்கு சொல்லக் கடவேன் அல்லேன் -பகவத் ப்ரவணரான ஸ்ரீ கூரத்தாழ்வான் ஒருவருக்கும் சொல்லாது
இருக்க ஒண்ணாதே என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் இவ்வர்த்தம் கேட்க்கைக்கு அதிகாரம் உண்டே யாகிலும் –
சம்வஸ்த்ர ந்ததர்த்தம் வா மாச த்ரய மதாபிவா பரீஷ்ய விவிதோபாயை க்ருபயா நிஸ்ப்ருஹோ வதேத் -என்கிறபடியே
பஹு பிரகாரத்தாலும் அவருடைய அத்யாவசாயத்தை அறிந்து ஒரு சம்வத்சரம் ஸூஷ்ருஷை கொண்டு சொல்லும் என்று நியமித்து அருள
எம்பெருமானாரும் மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கற்று யதார்த்த ஞானம் உடையராய் அர்ஜுனன் ஷட்க த்ரயத்தாலும்
எடுப்பும் சாய்ப்புமாக போந்து இவ்வர்த்தம் கேட்டு தரித்தால் போல் அன்றிக்கே மெய்ம்மைப் பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர்
என்கிறபடியே நிர்ப்பரராய் நிர்பரத்வ அனுசந்தானத்தாலே வந்த ப்ரீதி யுத்ருதியால் உண்டான ராஜ குல மஹாத்ம்யத்தோடே புறப்பட்டு
ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார்

அநந்தரம் ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு நிற்க அவரைப்பார்த்து அருளி
ஸ்ரீ ஆளவந்தார் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணி ஸ்ரீ பேர் அருளாளரை நோக்கி பிரபத்தி அருளினது சபலமாம் படி
ஸ்ரீ நம்பி நம்மை வாழ்வித்து அருளினார் கண்டீரோ என்று அருளிச் செய்து ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வானைக் குறித்து உமக்கு
உட்பட ஒரு சம்வத்சரம் ஸூஷ்ருஷை கொண்டு அத்யாவசிய பாஹுல்யத்தை அறிந்து சொல் என்று நியமித்து அருளினார் என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் ஒரு சம்வத்சரம் இஸ் சரீரத்துக்கு நிலை உண்டோ இல்லையோ என்று வியாகுல அந்தக்கரணராய் விசாரித்து அருளி பெற்றால்
அல்லது தரியாத பேராசையால் சம்வத்சர ஸூஷ்ரூஷா சமம் -ஆச்சார்யர் திரு மாளிகை வாசலில் மாச உபவாசம் பண்ணுகை என்று
சாஸ்திரம் உண்டாகையாலே அப்படிச் செய்ய ஸ்ரீ உடையவரும் இரங்கி ப்ரசாதித்து அருளினார்

ஸ்ரீ முதலியாண்டானும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே தெண்டன் சமர்ப்பித்து அடியேனுக்கும் இவ்வர்த்தம் பிரசாதித்து அருள வேணும்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வான் ஒருவருக்கும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் விண்ணப்பம் செய்து கொண்டது –
நீர் நம்பி ஸ்ரீ பாதத்து ஏறப் போய்க் கேளும் என்று அருளிச் செய்ய ஸ்ரீ முதலியாண்டானும் திருக் கோட்டியூர் ஏற எழுந்து அருளி
ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் சமர்ப்பித்துக் கொண்டு ஆறு மாசம் நின்ற இடத்திலும் அவர் முகம் கொடாமல் இருக்க பின்பு
ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ நம்பி திருவடிகளில் சேவித்து நிற்க அவரும் ராமானுஜ பரிக்ருஹீதனைப் போலே இருந்தாயீ என்ன –
அடியேன் தாசாரதி என்ன ஆகில் என் என்று கேட்டு அருள இவரும் சரம ரஹஸ்யார்த்தம் அடியேனுக்கும் பிரசாதித்து அருள வேணும்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும்
வித்யா மதோ தன மதஸ் த்ருதீயோ அபி ஜநாந் மத -ஏதே மதா வலிப்தா நா மேத ஏவச தாந்தமா -என்கிற
இம் மூன்று குறும்பும் போனால் ஸ்ரீ எம்பெருமானார் தாமே கிருபை பண்ணி பிரசாதித்து அருளுவார் அஞ்சாதே போம் என்று
தம் திருவடித் தாமரைகளாலே இவர் உத்தம அங்கத்தைப் பூஷிக்கும் படி ப்ரசாதித்து விடை கொடுத்து அருளினார் –
ஸ்ரீ முதலியாண்டானும் மிகவும் சம தம ஆத்ம குணங்களை உடையராய் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில்
தண்டன் சமர்ப்பித்து தன்னுடைய ஆர்த்தி எல்லாம் தோற்ற ஸ்ரீ நம்பி அருளிச் செய்த படியை விண்ணப்பம் செய்து
ச விநயராய் நிற்க ஸ்ரீ உடையவரும் தம் சந்நிதி முதலிகளையும் பார்த்து அருளி ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ நம்பி சந்நிதியில்
ஸ்வரூப சிஷை பெற்று வந்த வேஷம் இருந்தபடி பாருங்கோள் என்று அருளிச் செய்து மிகவும் உகப்போடே
ஸ்ரீ ஆண்டானுக்கும் சர்வ குஹ்ய தமமான சரம ஸ்லோஹார்தத்தை உபதேசித்து அருளி அதி ஸந்துஷ்டராய்-
இப்போது அன்றோ நமக்குத் தண்டும் பவித்ரமும் கை புகுந்தது என்று அருளிச் செய்தார் –

—————————–

திருமாலை ஆண்டான் இடம் திருவாய் மொழி கேட்டல் – –

அநந்தரம் சில நாளைக்குப் பின்பு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து புறப்பட்டு
ஸ்ரீ திருமாலை ஆண்டானையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் திரு மடம் எழுந்து அருளினவாறே
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் சேவித்து நிற்க அவரைக் கடாக்ஷித்து –
நீர் ஸ்ரீ திருமாலை ஆண்டான் பக்கலில் திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் என்று ஸ்ரீ உடையவரை அவர் திருக் கையிலே காட்டிக்
கொடுத்து அருளித் தாம் மீண்டு ஸ்ரீ திருக் கோட்டியூர் ஏற எழுந்து அருளினார்
ஸ்ரீ திருமாலை ஆண்டானும் ஸ்ரீ நம்பி அருளிச் செய்ய படி திருவாய் மொழி தொடங்கி நடத்தா நிற்க ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த படி
ஸ்ரீ ஆண்டான் நிர்வஹித்தது ஒழிய பாட்டுக்கள் தோறும் சில அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதித்து ஸ்ரீ உடையவர் அருளிச் செய்ய –
இது ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டிலோம் என்று அருளிச் செய்து அருளி
அறியாக் காலத்துள்ளே-என்கிற பாட்டுக்கு அறிவு நடையாடாத தசையில் சம்பந்த ஞானத்தை பிறப்பித்து பிறந்த ஞானத்தை
அழிக்கக் கடவதான தேக சம்பந்தத்தோடே பின்னையும் வைத்தாய் என்கிற இழவால் அருளிச் செய்கிறார் -என்று
ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்ய
ஸ்ரீ உடையவரும் கேட்டருளி முன்னில் பாட்டுக்களிலும் பின்னில் பாட்டுக்களிலும் பெரிய ப்ரீதியோடே நடவா நிற்க
நடுவே அப்ரீதி தோற்ற சொல்லுமது சேராது -ஆகையால் இங்கனேயாம் அத்தனை –
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -என்று அருளிச் செய்கிறார் என்று
இத்தையும் ஒரு உபகார ஸ்ம்ருதி பரமாக்கி அருளிச் செய்தவாறே இது விச்வாமித்ர ஸ்ருஷ்ட்டி ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டிலோம் –
என்று திருவாய் மொழிக்கு அர்த்தம் அருளிச் செயகை தவிர்ந்து இருக்க ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி இத்தைக் கேட்டருளி

ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திருமாலை ஆண்டான் பக்கல் எழுந்து அருளி திருவாய் மொழி நடக்கிறதோ என்று கேட்டு அருள –
ஸ்ரீ ஆண்டானும் அடியேன் ஸ்ரீ ஆளவந்தார் பக்கல் கேட்ட அர்த்தம் ஒழிய இவர் வேறே சில அர்த்தங்களை ஸ்வ கல்பிதமாக
சொல்லுகையாலே தவிர்ந்தேன் என்ன ஸ்ரீ நம்பியும் அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன
ஸ்ரீ ஆண்டானும் அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டுக்கு உபகார ஸ்ம்ருதியாக வேணும் என்கிறார் என்ன
இவ்வர்த்தமும் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ய நாம் கேட்டு இருக்கிறோம் என்று ஸ்ரீ நம்பி அருளிச் செய்து
சாந்தீபினி பக்கலிலே ஸ்ரீ கிருஷ்ணன் வேத அத்யயனம் பண்ணினால் போலே காணும் உம்முடைய பக்கல் ஸ்ரீ எம்பெருமானாரும்
திருவாய்மொழி கேட்க்கிறதும் -ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளத்தில் உள்ள அர்த்தம் ஒழிய இவருக்கு வேறே ஒன்றும் பிரகாசியாது –
இவருக்கு நாம் அஞ்ஞாத ஞாபநம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் என்று அருளிச் செய்து
ஸ்ரீ திருமாலை ஆண்டானையும் ஸ்ரீ பெரிய நம்பியையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் திரு மடம் எழுந்து அருள
ஸ்ரீ உடையவரும் அதி ப்ரீதியுடன் தாளும் தடக்கையும் கூப்பி இவர்கள் திருவடிகளில் சேவித்து நிற்க இவர்களும் திருவாய் மொழி
விட்ட தறுவாய் தொடங்கி நீரே பலகால் அனுவர்த்தித்து ஆகிலும் பிரபந்தத்தைத் தலைக்கட்டும் என்று ஸ்ரீ ஆண்டானுக்கு அருளிச் செய்தார்கள்

பின்னையும் திருவாய் மொழி தொடங்கி நடவா நிற்கச் செய்தே மீண்டும் ஒரு அர்த்த பிரஸ்தாபத்தில் ஸ்ரீ ஆண்டான் ப்ரதிபாதித்த
அர்த்தம் கேட்டு ஸ்ரீ ஆளவந்தார் இப்படி அருளிச் செய்யார் என்று ஸ்ரீ உடையவர் விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஆண்டானும் நீர் ஸ்ரீ ஆளவந்தாரை கண்ணிலும் காணாது இருக்க இப்படி அருளிச் செய்யார் என்கைக்கு நிதானம் என் என்று கேட்டருள
ஸ்ரீ உடையவரும் நான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் அன்றோ என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி நமக்கு உரைத்தது ஒத்து இருந்தது -இதுவும் ஒரு திரு அவதாரம் –
ஸ்ரீ ஆளவந்தார் பக்கல் கேளாத அர்த்தம் எல்லாம் இங்கே கேட்டோம் என்று இவரைத் தண்டன் இட்டு அருளினார்

——————————————

ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையர் இடத்தில் சரம உபாயத்தை உணர்தல் –

பின்பு ஸ்ரீ எம்பெருமானாரும் திருவாய் மொழி சாத்தி போர ப்ரீதராய் இருக்க அவரைப் பார்த்து ஸ்ரீ பெரிய நம்பியும்
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் பக்கல் இன்னம் ஒரு அர்த்த விசேஷம் உண்டு அத்தை அவர் பக்கலிலே கேளும்
என்று அருளிச் செய்ய ஸ்ரீ உடையவரும் அது லபிக்கைக்காக அன்று முதல் ஆறு மாசம் அரையருக்கு உகப்பாக பால் அமுது காய்ச்சி
ஸமர்ப்பித்தும் திரு அத்யயன காலங்களில் ஸ்ரீ அரையர் திருமேனிக்கு அனுரூபமாக மஞ்சள் காப்பு அரைத்து ஸமர்ப்பித்தும்
அனுவர்த்தித்துப் போரும் காலத்தில் ஒரு நாள் மஞ்சள் காப்பு அரைத்து நீராடப் பண்ணுகிற காலத்தில்
அவருடைய திருமேனிக்கு அனுரூபம் இல்லாது இருக்கிறபடியை அவர் திருமுக மண்டல விகாரத்திலே கண்டு மஞ்சள் பாத்ரத்தை கடக்க வைத்து
வேறே பங்காக மஞ்சள் காப்பை அரைத்து சாத்தி நீராடப் பண்ணி அருள ஸ்ரீ அரையரும் அத்தைக் கண்டு மிகவும் திரு உள்ளம் உகந்து அருளி
ஸ்ரீ உடையவரைக் குறித்து என்னுடைய சர்வத்தையும் கொள்ளை கொள்ளவோ நீர் இப்படிச் செய்தது என்று அருளிச் செய்து

வாரீர் எம்பெருமானாரே உமக்கு ஒரு சரம புருஷார்த்தம் சொல்லுகிறோம் கேளீர் என்று தேவு மற்று அறியாத ஸ்ரீ மதுரகவிகளைப் போலே நீரும் –
குருரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரந்தனம் குரு ரேவ பர காமோ குரு ரேவ பாராயணம் குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பாரங்கதி
யஸ்மாத் தத் உபதேஷ்டா அசவ் தஸ்மாத் குருதரோ குரு -என்று சொல்லுகிறபடியே –
தீ மனம் கெடுத்தும் -மருவித் தொழும் மனமே தந்தும் -அறியாத அறிவித்த ஆச்சார்யனே உபாய உபேயம் -என்று விஸ்வசித்து –
ஆச்சார்யஸ் ஸஹ ஹரிஸ் சாஷாத் சர ரூபி ந சம்சய -என்றும் பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே
உறங்கும் பெருமாள் தானே உலாவும் பெருமாளாய் வந்தார் என்று இரும் என்று பஞ்சம உபாய நிஷ்டையான
சரம பார்வார்த்த விசேஷத்தை பிரசாதித்து அருளினார்

ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த போது ஸ்வரூப சித்தி யுண்டாய் இருக்க இவர் பலர் ஸ்ரீ பாதத்தாலும் உபதேசம் கேட்க்கைக்கு அடி என் –
அவர்கள் தாம் மேல் விழுந்து அர்த்தங்களை உபதேசிகைக்கு அடி என் -என்னில்
ஒரு ராஜா ஸ்வ குமார அர்த்தமாகப் பல மந்திரிகள் இடத்தே நிதிகளை வைத்துத் தன் குமாரன் பிரபுத்தனானவாறே கொடுக்கச் சொல்லிப் போமா போலே
ஸ்ரீ ஆளவந்தாரும் இவர்கள் இடத்தே ஒவ் ஒரு அர்த்த விசேஷத்தை உபதேசித்து வைக்கையாலே ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் சேவித்து
அவ்வர்த்தங்களைப் பெறாது இழவு தீர இவர்கள் பக்கல் அவ்வர்த்தங்களைப் பெற்று இழவு தீர்ந்தார் அத்தனை –
இனி இவ்வாச்சார்யார்களுக்கு ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ இளையாழ்வாரை ஆம் முதல்வன் என்று கடாக்ஷித்து நாம் உங்களுக்குத் சொல்லும்
பரம ரஹஸ்யத்தை ஸ்ரீ இளையாழ்வாருக்குச் சொல்லுங்கோள் என்று நியமித்து அருளுகையாலே –
சிஷ்யனும் ஆகிலுமாம்-ஆச்சார்யர் ஆகிலுமாம் -விலக்ஷண சம்பந்தமே வேண்டுவது – என்று மேல் விழுந்து உபதேசித்தார்கள்-
ஆகையால் முன்புள்ள ஆச்சார்யர்கள் இவருக்கு ஆச்சார்யராக வீறு பெற்றார்கள் -பின்புள்ளவர்கள் இவருக்கு சிஷ்யர்களாக ஸ்வரூபம் பெற்றார்கள் –
ஒரு ஹாரத்தின் நடுவே மாணிக்கம் கிடந்து அந்த ஹாரத்தை சோபிதம் ஆகுமா போலே இடையே இராமானுச முனியாய் விளங்கினார் இறே

——————-

ஸ்ரீ உடையவர் கத்ய த்ரயமும் -நித்ய திருவாராதனைப்படியும் அருளிச் செய்து -பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணனே -என்று அறுதியிட்டு
தர்சன ப்ரவர்த்தனம் பண்ணிக் கொண்டு போருகிற காலத்திலே இவர் ஏழு அகம் மாதுகரம் பண்ணும் போது -ஸ்தானத் துறையை -ஸ்தானத்தாரை –
நெருக்கிக் கொண்டு போருகையாலே அவர்களில் ஒருவர் இவர் மாதுகரம் பண்ணுகிற இடத்தில்
விஷ மிஸ்ர அன்னத்தை பிரயோகிக்கும் படி நியமித்து வைக்க அந்த க்ருஹஸ்தரும் ஸ்வ ஸ்திரீயைப் ப்ரேரிக்க அவளும் கூடாது என்ன
அவனும் நிர்பந்திக்க அவளும் விஷ மிஸ்ர அன்னத்தை மறித்து சமர்ப்பித்து தண்டன் இட்டுப் போக
இவரும் இது என் என்று திகைத்து பாவம் அறிந்து ச கர அன்னத்தை ச கர காமினியான திருக் காவேரியில் கரைத்து விட்டு உபவசித்து இருக்க
இச் செய்தியை ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி கேட்டு அருளி ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
மத்யாஹன காலத்திலே திருக் காவேரியில் எழுந்து அருளா நிற்க ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக எழுந்து அருளி
ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டுக் கொண்டு கிடக்க ஸ்ரீ நம்பியும் அவரை எழுந்து இருக்கச் சொல்லாமல் இருக்க
ஸ்ரீ கிடாம்பி ஆச்சாணும் இது என்ன சிஷ்ய ஆச்சார்ய க்ரமம் தான் -கருமுகை மாலையை வெய்யிலில் பொகடுவார்களோ என்று பரிந்து எடுக்க –
ஸ்ரீ நம்பியும் உம்மைக் காணும் தேடுகிறோம் -திருமேனிக்குப் பரிவர் நீர் தாம் -இன்று முதல் தளிகைக்கு பண்ணி இவருக்கு
ஏக மாது கரமாக பிரசாதியும் என்று நியமித்து அருள ஸ்ரீ கிடாம்பி ஆச்சானும் அப்படியே பண்ணி சாதித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

————————

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ உடையவரை ஆஸ்ரயித்தல் –

பின்பு யஞ்ஞ மூர்த்தி என்கிற மஹா வித்வானான ஒரு ப்ராஹ்மணன் கங்கா ஸ்நானத்துக்குப் போய் ஒரு ஸ்நானம் பண்ணி
அங்குள்ள வித்வான்களை ஜெயித்து அங்கே மாயாவாத சந்யாச ஆஸ்ரமத்தையும் பரிக்ரஹித்து வித்யையாலும் சிஷ்ய சம்பத்தாலும்
மிகுந்தவனாய் இரா நிற்க -அவனும் அங்கே ஸ்ரீ உடையவருடைய வைபவத்தைக் கேட்டு நாம் அங்கே ஏறப் போய்
அவருடன் தர்க்கிக்க வேணும் என்று அநேக சாஸ்திரங்களை எழுதி கிரந்தங்களையும் சுமை சுமையாகக் கட்டி எடுத்துக் கொண்டு
தன் வித்யா கர்வம் எல்லாம் தோற்ற பெரிய மதிப்புடன் அதி த்வரையிலே ஸ்ரீ கோயில் ஏற வந்து ஸ்ரீ உடையவரைப் பார்த்து
என்னுடன் தர்க்கிக்க வேணும் என்ன
இவரும் அப்படியே செய்கிறோம் நீ தோற்றால் என்ன செய்கிறாய் -என்ன
அவனும் நான் தோற்றேன் ஆகில் உம்முடைய பாத ரக்ஷையை சுமந்து உம்முடைய பேரையும் இட்டுக் கொண்டு
உம்முடைய சித்தாந்தத்தில் புகுரக் கடவேன் என்ன –
ஸ்ரீ உடையவரும் நாம் தோற்றோம் ஆகில் கிரந்த சன்யாசம் பண்ணி தோற்றோம் என்கிறோம் அத்தனை என்ன
அவனும் சம்மதித்து இப்படி அந்யோந்யம் ப்ரதிஜ்ஜை பண்ணிக் கொண்டு பதினெட்டு நாள் அவதியும் இட்டு இருவரும் ஒருவருக்கு
ஒருவர் தோலாமல் மத்த கஜங்கள் பொருமா போலே தர்க்கிக்க இப்படி பதினாறு நாள் ஒருவருக்கு ஒருவர் தோலாமல் தர்க்கித்து
அவனை ஜெயிக்கப் போகாமல் பதினேழாம் நாள் அவனுடைய யுக்தி பிரபலமாக இவரும் அதுக்கு மேல் ஒன்றும் தோன்றாமல் நிற்க
அவ்வளவில் அவனும் தன் வெற்றி தோற்ற எழுந்து இருந்து அற்றைக்குப் போக ஸ்ரீ ராமானுசனும் வியாகுல அந்தக்கரணனாய்

திரு மடமே எழுந்து அருளி தன் திருவாராதனமான ஸ்ரீ பேர் அருளாளரையும் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ணி
ஸ்ரீ பெருமாளுடன் வெறுத்து ஸ்ரீ பெருமாளே ஆழ்வார் தொடங்கி ஸ்ரீ ஆளவந்தார் அளவாக இத்தனை காலம் ஓர் ஆண் வழியாய்
ப்ரதிஷ்டிதமாய் வந்த இத் தர்சனம் அடியேனை தொற்றித் தோற்கக் கடவதோ -இந்நாள் வரையில் தேவரீர் ஸ்வரூப ரூப குண விபூதிகள் சத்யம்
என்று பிரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்-இப்போது ஒரு ம்ருஷாவாதியைக் கொண்டு வந்து என்னுடைய காலத்தில்
எல்லா ப்ரமாணங்களையும் அழித்துப் பொகட்டு லீலை கொண்டாட திரு உள்ளமாகில் அப்படியே செய்து அருள என்று விண்ணப்பம் செய்து
தாமும் அமுது செய்யாமல் கண் வளர்ந்து அருள ஸ்ரீ பேர் அருளாளரும் அன்று இராத்திரி இவர் ஸ்வப்னத்தில் எழுந்து அருளி
ஸ்ரீ இளையாழ்வீர் நீர் முசிப்பான் என் என் -உமக்கு சமர்த்தனாய் இருப்பான் ஒரு சிஷ்யனை உண்டாக்கித் தந்தோம் காணும் –
உம்முடைய பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த மாயாவாத கண்டனத்தைச் சொல்லி அவனை ஜெயியும் என்று அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் விடிவோரை திரு நாம உச்சாரணம் பண்ணி எழுந்து இருந்து திருக் கண்களை விழித்து
இது ஒரு ஸ்வப்னம் இருந்தபடி என் என்று மிகவும் திரு உள்ளம் உகந்து ஸ்வப்னத்தில் அருளிச் செய்த யுக்தியை தம் திரு உள்ளத்தில் கொண்டு
எழுந்து அருளி இருந்து சந்தோஷத்துடன் நித்ய கர்ம அனுஷ்டானம் செய்து அருளி தம் திருவாராதனமான ஸ்ரீ பேர் அருளாளரையும்
சேவித்துப் புறப்பட்டு ப்ரசன்ன கம்பீரமாய்க் கொண்டு தர்க்க கோஷ்டியிலே எழுந்து அருள –

அவ்வளவில் அந்த வித்வானும் பாவஞ்ஞன் ஆகையால் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளுகிற காம்பீர்யத்தையும் சந்தோஷத்தையும் கண்டு –
இவர் நேற்று இங்கு நின்றும் எழுந்து அருளும் போது சோம்பிக் கொண்டு போனார் -இப்போது மத்தகஜம் போலே இங்கே வாரா நின்றார் –
ஆகையால் இது மானுஷம் அன்று அதி மானுஷ சேஷ்டிதமாய் இரா நின்றது என்று நிச்சயித்து சடக்கென எழுந்து இருந்து எதிரே சென்று
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே சேவித்து தேவரீருக்குத் தோற்றேன் என்று ஸ்ரீ பாத ரக்ஷைகளை சிரஸா வஹித்துக் கொண்டு
அடியேனை இரங்கி அருள வேணும் என்ன

அநந்தரம் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ ஆண்டானையும் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் கிருபை பண்ணிக் கொண்டு
வித்வத் கோஷ்டியாக நடக்கும் காலத்திலே ஆச்சார்யர்கள் எல்லாரும் வந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயித்ததைக் கேட்டு
ஸ்ரீ அனந்தாழ்வானும் ஸ்ரீ எச்சானும் ஸ்ரீ தொண்டனூர் நம்பியும் ஸ்ரீ மருதூர் நம்பியும் -ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணும் என்று
எழுந்து அருள அவர்களை ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிப்பித்து அருளினார் –
அப்போது அவரும் பீதராய் அவர்களைக் குறித்து குருவியின் கழுத்தில் பனங்காயைக் கட்டினால் போலே ஸ்ரீ உடையவர் செய்தார் –
நீங்கள் ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்து அருளினார்

————————-

பின்பு ஸ்ரீ உடையவரும் அமர் சுவை ஆயிரமான திருவாய் மொழிக்கு அர்த்தம் அருளிச் செய்து கொண்டு திவ்ய கோஷ்டியாக
எழுந்து அருளி இருக்கிற அளவிலே ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்கிற திருவாய் மொழி நடவா நிற்க
சிந்து பூ மகிழும் திருவேங்கடம் என்கிற இடத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறவர் முதலிகளைப் பார்த்து அருளி –
புஷ்ப மண்டபமான பெரிய திருமலையில் திருவேங்கடமுடையானுக்கு உகப்பாக திரு நந்தவனம் செய்து திருமாலை கட்டி சாத்துவார்
யாரேனும் உண்டா -என்று அருளிச் செய்ய -அவ்வளவில் ஸ்ரீ அனந்தாழ்வான் எழுந்து இருந்து அடியேன் விடை கொள்ளுகிறேன் என்று
விண்ணப்பம் செய்து தண்டன் சமர்ப்பித்து திருமலைக்கு எழுந்து அருளி திருவேங்கடமுடையானையும் திருவடி தொழுது
திரு நந்தவனம் செய்து அத் திரு நந்தவனத்துக்கு ராமானுஜன் என்று திரு நாமம் சாத்தி திருமாலை கட்டி திருவேங்கடமுடையானுக்கு
சமர்ப்பித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்க அத்தை ஸ்ரீ உடையவர் கேட்டு உகந்து அருளி
திருவாய் மொழி பிரபந்த அர்த்தத்தை தீவிரமாக நடத்திச் சாத்தி அருளினார்

பின்பு ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ நம்பெருமாளையும் சேவித்து அடியேன் ஸ்ரீ பேர் அருளாளரையும் ஸ்ரீ திருவேங்கடமுடையானையும்
திருவடி தொழுது மீண்டு விடை கொள்ளுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் போய் கடுக வருவது என்று
திரு உள்ளமாய் அருள ஸ்ரீ உடையவரும் முதலிகளுடனே புறப்பட்டு திருக் கோவலூரிலே ஆழ்வார்கள் நாயனாரையும்
திருவடி தொழுது ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளி ஸ்ரீ திருக் கச்சி மடம் ஏறி சென்று
ஸ்ரீ மத் காஞ்சீ முனிம் வந்தே கமலா பதி நந்தனம் வர தாங்க்ரி சதா சங்கர சாயன பராயணம் -என்று விண்ணப்பம் செய்து கொண்டு
ஸ்ரீ நம்பி திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்து நிற்க அவரும் கிருபை பண்ணி அருள அவருடனே கூட எழுந்து அருளி
அவர் புருஷகாரமாக ஸ்ரீ கோபுர ராஜனையும் ஆனை காத்த பெருமாளையும் சேவித்து உள்ளே புகுந்து
மஹா வராஹந்தேவேசம் த்ரஷ்டுகாமோர சாதலாத் நிர்யயவ் யத்ர பகவாந நந்த பன்னகேஸ்வர தீர்த்தே தஸ்மின்
மஹா புண்யே சித்த சங்க நிஷேவிதே -சமாஹ்ருதாநி தீர்த்தானி ஸர்வாணி முநிபிஸ் ததா –என்று சொல்லப்பட்ட
மஹாத்ம்யத்தை உடைய திருவனந்த சரஸ்ஸிலே நீராடி கேசவாதி துவாதச நாமங்களையும் சாத்தி அருளி எறி திரை வையம் முற்றும்
ஏனத் துருவாய் இடிந்த ஞானப் பிரானையும் சேவித்து -ஸ்ரீ பலி பீடத்தையும் தண்டனிட்டு ஜய விஜயர்களையும் சேவித்து
ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி திருவனந்த ஆழ்வானையும் சேவித்து திருப் புற்று அடியிலேயும் தண்டன் இட்டு
அதற்கு கிழக்காக தம்மை விசேஷ கடாக்ஷம் செய்து அருளின ஸ்ரீ யமுனைத் துறைவர் திரு முற்றத்திலே
நமோ நமோ யாமு நாய யாமு நாய நமோ நமோ -என்று அனுசந்தித்து தண்டன் சமர்ப்பித்து

ஸ்ரீ கரிய மாணிக்கத்து எம்பெருமானையும் திருவடி தொழுது -ஸ்ரீ புண்ய கோடி விமானத்தையும் சேவித்து திரு மடைப் பள்ளியையும்
திரு மடைப் பள்ளி நாச்சியாரையும் சேவித்து உள்ளே புகுந்து ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ பெரும் தேவியாரையும் திருவடி தொழுது
ஆகார த்ரய சம்பன்னாம் அரவிந்த நிவாஸ நீம் அசேஷ ஜெகதீஸி த்ரீம் வந்தே வரத வல்லபாம் -என்று
அனுசந்தித்து தீர்த்த பிரசாதமும் ஸ்வீ கரித்து சேண் தலத்து அமரர் தமையாளும் ஸ்ரீ சேனை நாதன் கழல் வணங்கி எழுந்து அருளி
அசேஷ கிரி ராஜாய ஸ்ரீ ஹஸ்தி கிரயே நம -என்று தண்டன் சமர்ப்பித்து வையமாளிகையிலே ஏறி சேவா கிராமத்திலே
ஸ்ரீ நம்பியை முன்னிட்டுக் கொண்டு உள்ளே புகுந்து உலகம் ஏத்தும் ஆழியான் அத்தியூரான ஸ்ரீ பேர் அருளாளரையும் சேவித்து நின்று
திருப்பல்லாண்டு ஸ்ரீ வரதராஜ அஷ்டகத்தையும் அனுசந்தித்து தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளராய் நிற்க
ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் இவருக்கு தீர்த்த பிரசாதமும் துயரறு சுடரடியான ஸ்ரீ சடகோபனும் பிரசாதிப்பித்து அருள ஸ்வீ கரித்து
க்ருதார்த்தராய் புறப்பட்டு ஸ்ரீ திருக் கச்சி நம்பியுடனே அடியேன் பெரிய திருமலைக்கு விடை கொள்ளுகிறேன் என்று
விண்ணப்பம் செய்ய -அவரும் சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை என்று அருளிச் செய்து விடை கொடுத்து அருளினார்

————————————

ஸ்ரீ திருமலை நம்பியின் இடத்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ராமாயணம் கேட்டல்

ஸ்ரீ உடையவரும் அதி ப்ரீதியோடே திருப்பதிக்கு எழுந்து அருளும் அளவிலே மார்க்க மத்யத்திலே -வழி திகைத்து அலமருகின்றேன் –
என்கிறபடியே வழி தப்பித் திகைத்து நிற்க -முதலிகளும் அங்கே ஒரு ஏற்றம் இறைப்பானைக் கண்டு –
திருமலைக்கு வழி எங்கனே என்று கேட்ட அளவிலே அவனும் செவ்வையான வழியைக் காட்ட ஸ்ரீ உடையவரும் இது
ஒரு அமானவன் புருஷகாரம் இருந்தபடி என் என்று அவனைத் தண்டன் இட முதலிகளும் இப் பரம ஆஸ்திகத்வத்தையும் கண்டு களித்து
அவர்களும் தண்டன் இட இவரும் முன் நடந்து எழுந்து அருளி ஸ்ரீ திருமலை ஆழ்வாரையும் திருத் தாழ்வரையிலே எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பரகால ப்ரப்ருதிகளான ஆழ்வார் பதின்மரையும் சேவித்து திருப்பதியில் எழுந்து அருளி இருந்து
விடல தேவனையும் சிஷ்யனாக்கிக் கொண்டு திருப்பதியில் ஸ்வ சிஷ்யர்கள் முப்பது திரு நாமங்களை குடி ஏற்றி
இள மண்டியத்தையும் கைப்பற்றாக விடுவித்து அங்கே எழுந்து அருளி இருக்க இச் செய்தியை

ஸ்ரீ அனந்தாழ்வான் தொடக்கமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் கேட்டருளி
திருமலையின் நின்றும் இறங்கி வந்து ஸ்ரீ எம்பெருமானாரை சேவித்து தேவரீர் அப்பனை சேவிக்க எழுந்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் ஆழ்வார்கள் திருமலை மிதியாமையாலே நாமும் ஏறக் கடவோம் அல்லோம் –
திருத் தாழ்வரையிலே எழுந்து அருளி இருக்கிற ஆழ்வார்களை சேவித்து இருக்கிறோம் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ அனந்தாழ்வானும் தேவரீர் ஏறாது போது அடியோங்களும் ஏறோம்-மற்றும் உள்ளார் ஒருவரும் ஏறுவது இல்லை என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அப்படியே செய்கிறோம் என்று தத் அனுகுணமாக திரு மேனியை சோதித்துக் கொண்டு
எழுந்து அருளி அடிப்புளி ஆழ்வார் அடியிலே திருமலை ஆழ்வாரையும் சேவித்து -பாதே நாத்யா ரோஹதி -என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாத நியோகாத் முக்த சேதனன் பாத பீடத்தில் அடியிட்டு ஏறுமா போலே பிரதிபத்தி பண்ணிக் கொண்டு
திருவேங்கடமுடையான் அருள்பாடிட திருமலை ஏறி

செப்பார் திண் வரையையும் -பன் மணி நீரோடு பொருதுருளும் கானாற்றையும் -அன்னனைய பொற் குவடுகளையும் –
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரியும் -கானமும் வானரமும் வேடும் உடைய வேங்கடத்தைக் கண்டு களித்துக் கொண்டு
திருப் பரியட்டப் பாறை அளவிலே எழுந்து அருளா நிற்க திருவேங்கடமுடையான் தீர்த்த பிரசாதம் கொண்டு
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி எதிரே எழுந்து அருளி ப்ரசாதித்து அருள ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பெரிய நம்பி திருவடிகளில்
சாஷ்டாங்க பிரணாமாம் பண்ணி தீர்த்த பிரசாதம் ஸ்வீ கரித்து அருளி -தேவரீர் எழுந்து அருள வேணுமோ -ஒரு சிறியார் இல்லையோ என்று
விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ நம்பியும் நாலு திருவீதியிலும் ஆராய்ந்து பார்த்த இடத்தில் என்னில் காட்டிலும் சிறியாரைக் கண்டிலேன் என்ன
ஸ்ரீ உடையவரும் முதலிகளும் இத்தைக் கேட்டருளி அத்தியாச்சர்யப் பட்டு கல்வேலி அளவிலே எழுந்து அருளா நிற்க
சீயர்கள் ஏகாங்கிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமலையில் உள்ள ஸ்தானத்துறை ஸ்ரீ பாதம் தாங்குவார் முதலான அனைத்துக் கொத்தில்
உள்ளவர்களும் வந்து எதிர் கொண்டு சத்கரிக்க ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக எழுந்து அருளி வைகுந்தன் திரு வாசலிலே
தண்டன் சமர்ப்பித்து திருக் கோனேரியிலே நீராடி கேசவாதி துவாதச நாமங்களையும் சாத்தி அருளி
நாலு வீதியையும் ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் -என்கிறபடியே

கசித அநர்க்க ரத்ன த்யுதி ரஞ்சிதமான மாட கூட பிரசாத தோரண கோபுர பிரகாரங்களையும் அனுபவித்து அங்கே தம் கைங்கர்யமான
இராமானுசன் என்கிற திரு நந்தவனத்தில் எழுந்து அருளி திருக் கண் சாத்தி உகந்து அருளி ஸ்ரீ அனந்தாழ்வானைப் பார்த்து
அணைத்துக் கொண்டு வளர்த்தனால் பயன் பெற்றேன் என்று மிகவும் கிருபை பண்ணி அருளி மற்றும் அங்கு உண்டான –
தேனேய் பூம் பொழில் -என்றும் விரையார் பொழில் -என்றும் -கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை -என்றும் சொல்லுகிற
மொய்த்த சோலைகளையும்-அச் சோலைக்கு அலங்காரமாக செண்பகமாய் இருக்கும் திருவுடைய செண்பகம் சேர்ந்து திரு மகிழ் பாடலம்
சுர புன்னை புன்னாகம் முதலான மதுஸ் ரவகுஸூம பிரகர்ஷத்தை யுடைய திருப் பூ மரங்களின் எழிலையும் –
செவ்வந்தி பிச்சி இருவாட்சி மல்லிகை முல்லை தொடக்கமான கொடி மலர் அழகையும் -மொய்ப் பூம் தடம் தாழ்வரே -என்று சொல்லுகிற
செந்தீ மலரும் -சேறார் சுனைகளில் மத்தப்ரமர நாதித மநோ ஹாரி செந்தாமரை ஸ்ரீ யையும் –
திரு வேங்கடத் தெண்ணீர் சுனைகளில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையாரையும்
கோனேரி வாழும் குருகு கொக்கு நாரை தாரா முதலான பஷி சங்கங்களையும்
வ்ருஷ சாகா ரூடாபிக கூஜித காஹளீ நாதங்களையும்
கொண்டல் அதிரத் தோகை விரித்து நடமாடுகிற மயூர கேகாரவத்தையும் வண்டினங்கள் தென்னா தெனா வென்று பண் பாடுகிற

பாடலையும் கண்டு கேட்டு ஆனந்தித்து நிலம் கோட்டிடை கொண்ட ஞானப்பிரானையும் சேவித்து
அவா வறச் சூழ்ந்தான் திருவாசலிலே தண்டன் இட்டு அத்தாணிப் புளியையும் சேவித்து
ஸ்ரீ பலி பீடத்து அடியிலே தண்டன் இட்டு யமுனைத்துறைவர் என்கிற திருப் பூ மண்டபத்தையும் சேவித்து
ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி –
தனுர் மாஸே சிதே பக்ஷே த்வாதஸ்யே மருணோதய -ஆயாந்தி சர்வ தீர்த்தாநி ஸ்வாமி புஷ்கரணீ ஜலே–என்று சொல்லப்படுகிற
மஹாத்ம்யத்தை உடைத்தான ஸ்வாமி புஷ்கரணியிலே தீர்த்த ஸ்வீ காரம் செய்து செண்பகத் திரு வாசலுக்குள்ளே புகுந்து தண்டன் சமர்ப்பித்து
திருமடைப்பள்ளி யாக சாலை திரு மா மணி மண்டபத்தையும் சேவித்து சேனை முதலியாரையும் சேவித்து –
வேங்கடத்து அரியையும் திருவடி தொழுது ஸ்ரீ ஆனந்த நிலையம் என்னும் திவ்ய விமானத்தையும் கண்ணாலே பருகுவாரைப் போலே அனுபவித்து
உள்ளே எழுந்து அருளி -அடியாரும் வானவரும் அரம்பரையும் கிடந்து இயங்கும் குலசேகரன் படியைக் கடந்து உள்ளே புகுந்து

திலதம் உலகுக்காய் நின்ற -தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனான-
எண்ணம் புகுந்து தித்திக்கும் செந்தாமரைக் கண் செங்கனிவாய் நால் தோள் அமுதையும் செங்கமல கழலில் படியும்
சீதக்கடல் என்கிற திரு மொழிப்படியும்
மணி நூபுராதி கிரீடாந்த சர்வ திவ்ய ஆபரண திவ்ய மால்யாம் பர திவ்ய அங்க ராக சோபிதமான அவ்வடிவு அழகைப்
பாதாதி கேசாந்தமாக அனுபவித்து
அலர்மேல் மங்கை யுறை மார்பா –புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் என்று அடிக் கீழ் அமர்ந்து புகுந்து
பூவார் கழல்களைக் கிட்டி க்ருதாஞ்சலி புடராய் அனுபவித்து நிற்க இவருக்கு தீர்த்த பிரசாதமும் ப்ரசாதிக்க ஸ்வீ கரித்து க்ருதார்த்தராய் அருளி
இது பூ லோக வைகுண்டமாய் இருந்தது என்று ஆச்சர்யப்பட்டு திருமஞ்சனம் சேவித்து அருளி அழகப்பிரானுடைய ஸ்ரீ பலித் திரு நாளையும் சேவித்து அருளி –
விண்ணோர் வெற்பு ஆகையால் நிகரில் அமரர் முனிக் கணங்கள் -என்று அருளிச் செய்த நித்ய ஸூரிகள் அன்றோ இங்கு வர்த்திப்பார் –
நாம் இங்கே வர்த்திக்க ஒண்ணாது என்று அப்போதே திருமலையினின்றும் இறங்க வேணும் என்று உத்யோகிக்க
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியும் திவ்ய தேசத்தில் மூன்று நாள் இருக்க வேணும் காணும் என்று அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் சம்மதித்து மூன்று நாளும் அமுது செய்யாமல் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமான அப்பனை அனுபவித்து
அதுவே தாரகமாக எழுந்து அருளி இருந்து இப்படியே மூன்று நாள் சென்றவாறே ஸ்ரீ நம்பியுடன் ஸ்ரீ அப்பன் சந்நிதிக்கு சென்று
திருப்பல்லாண்டை அனுசந்தித்து அஞ்சலித்து நிற்க ஸ்ரீ அப்பனும் மிகவும் உகப்புடனே இவருக்கு தீர்த்த பிரசாதமும் பிரசாதித்து
தம் பூவார் கழல்களை ஸீரோ பூஷணமாக்கி உமக்கும் உம்முடையாருக்கும் உபய விபூதி ஐஸ்வர்யமும் தந்தோம் என்று
நம் தெற்கு வீட்டில் சொன்னோமே என்று தம் திருப் பவளச் சோதி வாய் திறந்து அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் மகா பிரசாதம் என்று அங்கீ கரித்து நிற்க ஸ்ரீ அப்பனும் விடை கொடுத்து அருள ஸ்ரீ நம்பியுடன் புறப்பட்டு
அப்பொழுதே இறங்கி அருளி திருப்பதியில் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திரு மாளிகை ஏறச் சென்று
அங்கே அமுது செய்து அவர் சந்நிதியில் இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்துக்கு அர்த்தம் கேட்டுக் கொண்டு
ஒரு சம்வத்சரம் எழுந்து அருளி இருந்தார் –

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: