ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் –

ஸ்ரீ இளையாழ்வாரும் தைர்யா வலம்பியாய் ஸ்ரீ பேர் அருளாளரை சேவித்துப் பூர்வம் போலே
திருமஞ்சன கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்
பின்பு ஸ்ரீ திருக் கச்சி நம்பி பக்கல் இளையாழ்வாருக்கு ப்ரேமம் முதிர்ந்து வர ஸ்ரீ நம்பிக்கும் இவர் பக்கல் கிருபை மிகுந்து வர
ஸ்ரீ நம்பியுடைய பிரபாவம் எல்லாம் அறிந்து அவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்க வேணும் என்று சென்று தண்டன் சமர்ப்பித்து
இவ்வாத்மாவைத் தேவரீர் உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் என்ன
ஸ்ரீ நம்பியும் வாரீர் ஸ்ரீ இளையாழ்வார்
ஸ்ரீ பேர் அருளாளர் பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டது கண்டு நீர் விரும்பினீர்
கிமப்யத்ர அபி ஜாயந்தே யோகிநஸ் சர்வயோ நிஷு ப்ரத்யஷி தாத்மநா தாநம் நைஷாம் சிந்த்யங்குலாதிகம்-என்கிறபடியே
ஆத்ம குணத்துக்கு சேர்ந்து இருந்துள்ள பரம வைதிக நிஷ்டையை யுடையராய் ஆஸ்ரயிக்க நினைத்தீர் –
ஆகிலும் வர்ணாஸ்ரமத்துக்கு அடுத்த வைதிக மரியாதைக்கு போந்து இராது என்று விலக்கி அருளினார் –

அதின் மற்றை நாள் ஸ்ரீ இளையாழ்வாருக்கு ஸ்ரீ திருக் கச்சி நம்பியின் இடத்தில் பிரசாத பிரதிபத்தி பிறந்து
தத் அந்வய புத்யா ஸ்ரீ நம்பியை-அடியேன் குடிசையில் அமுது செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் சம்மதித்து அருள -ஸ்ரீ இளையாழ்வாரும் அதி ப்ரீதியோடே தம் திருமாளிகையிலே எழுந்து அருளி
இச் செய்தியை தேவியாருடன் அருளிச் செய்து -தளிகைக்குப் பங்காகப் பண்ணி நன்றாக ஸவ்யஞ்ஞ அன்னம் செய் என்று
நியமித்து அருளித் தாமும் நீராடி நித்ய கர்ம அனுஷ்டானங்களையும் செய்து அருளி திரு மஞ்சனமும் சடக்கெனக் கொண்டு வந்து
ஸ்ரீ பேர் அருளாளர்க்கு சமர்ப்பித்துத் தம்முடைய க்ருஹ அர்ச்சனையான ஸ்ரீ பேர் அருளாளரையும் அமுது செய்து அருளப் பண்ணி
ஸ்ரீ நம்பியை அழைக்க தெற்குத் திருவீதியாலே ஸ்ரீ நம்பி மடத்தை நோக்கி மேற்கே எழுந்து அருளினார் -அதற்கு முன்பே ஸ்ரீ நம்பியும்
திரு மடத்தின் நின்றும் புறப்பட்டு பெருமாளையும் சேவித்து மற்றொரு திருவீதியாலே ஸ்ரீ இளையாழ்வார் திரு மாளிகையில் எழுந்து அருளி
திருவால வட்ட கைங்கர்யத்துக்கு உதவப் போக வேணும் என்று சடக்கென அமுது செய்து எழுந்து அருளினார் –
அநந்தரம் இளையாழ்வார் தேவிகளும் அவர் அமுது செய்து அருளின தளிகையை கோலால் தள்ளி அவ்விடத்தை கோமயத்தாலே
ஸ்தல ஸூத்தி பண்ணித் தெளித்துத் தாமும் நீராடி நிற்கிற அளவிலே ஸ்ரீ இளையாழ்வாரும் திரு மடத்தே தேடிக் காணாமையால்
மீண்டும் எழுந்து அருளி தேவிகள் நீராடின படியைக் கண்டு இது என் என்று கேட்டு அருள தேவிகளும் அந்த ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளி
அமுது செய்து திருவாலவட்ட கைங்கர்யம் செய்ய வேணும் என்று மீண்டு எழுந்து அருளினார் -அவர் சாத்தாதவர் ஆகையால்
அவர் அமுது செய்த இலைத்தளிகையை கோலால் தள்ளி கோமயத்தாலே ஸ்தல ஸூத்தி பண்ணினேன் -அத்தாலே சரீரம் அலம்ப வேண்டிற்று என்ன
இவரும் அவளைப் பார்த்து நீராடினத்துக்கு மிகவும் கோபித்து தம் அபீஷ்டம் சித்தியாத படியால் போர கிலேசித்து

இனி நமக்குச் செய்ய அடுப்பது என் என்று எண்ணாதனகள் எண்ணும் என்னும்படி தம் திரு உள்ளத்திலே விசாரித்து அருளி
ஸ்ரீ நம்பி திரு மடத்தே ஏற எழுந்து அருளி ஸ்ரீ நம்பி பாடே சென்று அடியேன் சில நினைவுகள் நினைத்து இருந்தேன்
அவை எவை என்று தேவரீர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து அவர் அருளிச் செய்ததைத் தேவரீர் அடியேனுக்கு அருளிச் செய்ய வேணும்
என்று ஸ்ரீ இளையாழ்வார் விண்ணப்பம் செய்ய ஸ்ரீ நம்பியும் அன்று ராத்ரி ஸ்ரீ பெருமாளை அனுபவித்து ஏகாந்தமான அளவிலே –
நம்பீ நம்முடன் சில வார்த்தை சொல்லுவான் போலே இருந்தாயீ -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளமாய் அருள
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ பெருமாளுடன் -ஸ்ரீ இளையாழ்வார் சில நினைவுகள் -அவை எவை என்று தேவரீரைக் கேட்டு வந்து சொல்ல வேணும்
என்று மிகவும் ஆதரவாய் இரா நின்றார் -அவற்றை அருளிச் செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் சஹஜ தாஸ்யத்தை உடையனாய் சந்த அனுவர்த்தனம் பண்ணி இருப்பான் ஒருத்தன்
நான் சாந்தீபன் உடனே வித்யா அப்யாஸம் பண்ணினால் போலே பல இடங்களில் சகல சாஸ்திரங்களையும் அலகலகாக அறிந்து இருப்பான்
ஒருவன் நம்மைக் கேடப்பிக்கிறான் அத்தனை
பரதத்வம் நாமே -பேதமே தர்சனம் -உபாயமும் பிரபத்தியே -அந்திம ஸ்ம்ருதியும் வேண்டா -சரீர அவசானத்திலே மோக்ஷம் –
பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயிப்பது -என்று இவ்வாறு வார்த்தையும் பேர் அருளாளர் திரு உள்ளமாய் அருள
ஸ்ரீ நம்பியும் இவற்றைக் கேட்டு வந்து விடிவோரை இவரை அழைத்து இளையாழ்வீர் ஸ்ரீ பேர் அருளாளர் திரு உள்ளம் பற்றி அருளின
வார்த்தைகளைக் கேளீர் என்று அவற்றை அருளிச் செய்து இவையே உமக்கு நினைவு என்ன
ஆம் என்று ஸ்ரீ இளையாழ்வார் போர ப்ரீதராய் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் சமர்ப்பிக்க
ஸ்ரீ நம்பியும் இவர் நினைவும் ஸ்ரீ பெருமாள் திரு உள்ளமும் ஒன்றாய் இருந்த படி என் என்று மிகவும் உகந்து அருளினார்-

ஸ்ரீ இளையாழ்வார் ஸ்ரீ பெரிய நம்பிகள் இடத்து ஆஸ்ரயித்த வைபவம் –
அக்காலத்திலே ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்து முதலிகள் எல்லாரும் திரளாக இருந்து ஸ்ரீ பெரிய நம்பியுடன்
இந்த தரிசனத்துக்குக் கடவர் யார் என்ன ஸ்ரீ பெரிய நம்பியும் முதலிகளைக் குறித்து -ஸ்ரீ ஆளவந்தார் முன்பு நினைவிட்டு
விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளினதும் திரு விரல்கள் நிமிர்ந்த ஏற்றமும் உங்கள் திரு உள்ளங்களில் நிலையிட வில்லையோ –
ஸர்வதா ஸ்ரீ ஆளவந்தார் அபிமானம் பொய்யாக மாட்டாது என்ன -முதலிகள் எல்லாரும் கூடி சம்மதித்து இன்னமும் தேவரீர் எழுந்து அருளி
ஸ்ரீ இளையாழ்வாரை விசேஷ கடாக்ஷம் செய்து அருளி நம் தர்சன பிரவர்த்தகராம் படி திருத்தி அழைத்துக் கொண்டு வர வேணும் -என்று
ஸ்ரீ பெரிய நம்பிக்கு விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெரிய நம்பியும் அப்போதே குடும்ப ஸஹிதமாகப் புறப்பட்டு ஸ்ரீ நம் பெருமாள் சந்நிதியில்
சென்று சேவித்து விண்ணப்பம் செய்து அவர் அனுமதி கொண்டு த்வரித்துப் புறப்பட்டு ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
ஸ்ரீ மதுராந்தகத்திலே ஸ்ரீ ஏரி காத்த கோயிலிலே அவசரித்து எழுந்து அருளி இருந்த அளவிலே

ஸ்ரீ இளையாழ்வாரும் தமக்கு ஸ்ரீ பேர் அருளாளர் ஸ்ரீ திருக் கச்சி நம்பி முகேன நியமித்து அருளின படியே
ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிப்பதாகப் புறப்பட்டு ஸ்ரீ திருக் கச்சி நம்பியையும் ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளையும் சேவித்து
அவர்கள் அனுமதி கொண்டு ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளா நிற்க ஸ்ரீ மதுராந்தகம் வழி யாகையாலே இவரும் அங்கே
ஸ்ரீ ஏரி காத்த பெருமாளை சேவிப்பதாக எழுந்து அருள -ஸ்ரீ ஏரி காத்த பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பெரிய நம்பி எழுந்து அருளி இருக்க
ஸ்ரீ இளையாழ்வாரும் தூரத்திலே கண்டு அத்யாச்சர்யப்பட்டு -எண்ணின் பலம் எதிரே வந்து வாய்த்தது போலே ஸ்ரீ நம்பி நமக்கு எதிரே
எழுந்து அருளி கிருபை செய்ய வந்தபடி -கண்டாயே நெஞ்சே -என்று நிர்ப்பர ஆனந்த பாஷ்பங்களை உடையராய்
ஸ்ரீ பெரிய நம்பி திருவடிகளிலே ஹர்ஷ சம்பிரமத்துடனே தண்டன் சமர்ப்பித்து நிற்க -ஸ்ரீ நம்பியும் தம் அபிலாஷை அதி சீக்கிரமாய்
எதிரே வந்து சித்திக்காக கண்டு ஆனந்த நிர்ப்பரராய் ஸ்ரீ இளையாழ்வாரை வாரி எடுத்து அணைத்துக் கொள்ள
ஸ்ரீ இளையாழ்வாரும் அடியேனுக்கு இப்போதே தேவரீர் ஹித உபதேசம் செய்து அருளி ரக்ஷித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ நம்பியும் -அஸ்தி ஹஸ்தி கிரிர் நாம தத்ர சைலவ ரோமஹான் விதாத்ராப் யர்ச்சிதோ விஷ்ணுஸ் தஸ்ய சைலஸ்ய மூர்த்தநி
புண்ய கோடீதி விக்யாதம் விமானம் புண்ய வர்த்தனம்–என்று சொல்லப்படுகிற ஸ்ரீ ஹஸ்த கிரியிலே
ஸ்ரீ புண்ய கோடி விமான மத்யத்திலே ப்ரஹ்மாதி சகல சேதனராலும் ஸேவ்யமானரான ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில் செய்கிறோம்
என்று அருளிச் செய்ய -ஸ்ரீ இளையாழ்வாரும் கால ஷேபம் பண்ண ஒண்ணாமைக்கு ஸ்ரீ ஆளவந்தார் பக்கல் கண்டது அமையாதோ-
மின்னின் நிலையில்லாத அடியேனுடைய இஸ் சரீரம் இருக்கிற போதே கிருபை பண்ணி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
திருவடிகளிலே விழுந்து கிடக்க ஸ்ரீ பெரிய நம்பியும் இவரை முடி பிடித்து எடுத்து இவருடைய ஆர்த்தி இருந்த படி என் என்று மிகவும்
உகந்த திரு உள்ளத்தராய் ஸ்ரீ இளையாழ்வாரைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய்
ஸ்ரீ ஏரி காத்த பெருமாள் கோயில் திரு மகிழ் அடியிலே எழுந்து அருளி இருந்து

மந்த்ர ஸம்ஸ்கார சித்யர்த்தம் மந்த்ர தீஷா விதவ் ததா -சக்ரஸ்ய தாரணம் ப்ரோக்தம் மந்தரை பஞ்சாயுத நிவா என்றும்
சக்ராதி தாரணம் பும்ஸாம் பர சம்பந்த வேதனம் -பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் -என்றும்
சொல்லுகிறபடியே திரு இலச்சினை பிரசாதித்து
நிவேஸ்ய தஷிணே ஸ்வஸ்ய விநீ தாஞ்சலி சம்யுக்தம் மூர்திநி ஹஸ்தம் விநிஷிப்ய தக்ஷிணம் ஞான தக்ஷிணம் ஸ்வ யந்து ஹ்ருதி
விந் யஸ்ய க்ருபயா வீக்ஷ யேத்குரு ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குரு பரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேச மாசார்ய
க்ருபயா ஸ்வயம் அத்யாபயேந் மந்த்ர ரத்னம் சர்ஷிச் சந்தோதி தைவதம் -என்று சொல்லுகிற கிரமத்தில்
ஸ்ரீ பெரிய நம்பியும் ச விநயரான ஸ்ரீ இளையாழ்வாரைத் தம்முடைய வலப்புறத்தில் வைத்துத் தம் திருக்கைகளாலே அவர் சிரசை
ஸ்பர்சித்துக் கொண்டு சதாசார்யரான ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை ஸ்மரித்துக் கொண்டு குருபரம்பரா பூர்வகமாக
மந்த்ர ரத்ன த்வயத்தை சாங்க உபாங்கமாக ஸ்ரீ இளையாழ்வாருடைய வலது திருச் செவியில் உபதேசித்து அருளி
ஸ்ரீ பெருமாள் நாட்டுக்காக ஸ்ரீ பரத்தாழ்வான் தலையிலே திருவடி நிலைகளை வைத்துக் காட்டுக்கு எழுந்து அருளினால் போலே
ஸ்ரீ ஆளவந்தாரும் உமக்காகத் தம்முடைய திருவடித் தாமரைகளை என் தலை மேலே வைத்துத் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்று இரும் கிடீர் –
என்று ஸ்ரீ இளையாழ்வாருக்கு அருளிச் செய்து அருளினார் -ஸ்ரீ ஆளவந்தாருக்கு கரண பூதர் இறே ஸ்ரீ பெரிய நம்பி –
ஸ்ரீ இளையாழ்வாருக்கு நேரே ஆச்சாரியார் ஸ்ரீ யமுனைத் துறைவரே யாம் ஆகையால் இறே
யதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய ராமானுஜன் -என்று
ஸ்ரீ பிள்ளை அமுதனார் அருளிச் செய்ததும் –

ஸ்ரீ இளையாழ்வாரும் -பிரமாணம் ஏது -ப்ரமேயம் ஏது -பிரமாதாக்கள் யார் -என்று ஸ்ரீ பெரிய நம்பியைக் கேட்க –
அவரும் -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு என்கிறபடியே பிரமாணமும் த்வயமே -ப்ரமேயமும் இத்தால் பிரதிபாத்யனாய்
ஸ்ரீ ஹஸ்திகிரியின் மேலே கையும் திருவாழியுமாய் நிற்கிற பெருமாளே –
பிரமாதா நீர் தாம் -இந்த ப்ரமாணத்தாலே ப்ரமேயத்தை அனுபவிக்க வாரும் என்று அருளிச் செய்து –
அதின் மற்றை நாள் புறப்பட்டு ஸ்ரீ ஏரி காத்த பெருமாளை திருவடி தொழுது -ச ராமோ லோக ரஞ்சந -என்னுமா போலே
தேவரீர் திரு நாமத்துக்குத் தகுதியாக இத்தர்சனம் பின்ன தடாகம் ஆகாதபடி செய்து அருளிட்டீரே என்று மங்களா சாசனம் பண்ணி அருளி
ஸ்ரீ பெருமாள் கோயில் எழுந்து அருள ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் எதிரே வந்து ஸ்ரீ பெரிய நம்பியை சேவிக்க அவரையும் கிருபை பண்ணி
அவர் புருஷகாரமாக உலகம் ஏத்தும் ஆழியான் அத்தியூரான் ஸ்ரீ பேர் அருளாளனையும் சேவித்து
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீ உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தபடியை ஸ்ரீ உய்யக்கொண்டார் நியோகத்தால் ஸ்ரீ மணக்கால் நம்பி
ஸ்ரீ ஆளவந்தாருக்கு பச்சையிட்டு உபதேசித்து ஸ்ரீ கோயிலிலே கொண்டு போய் ஸ்ரீ பெரிய பெருமாளை சாஷாத்கரிப்பித்து
அனுபவிப்பித்தால் போலே ஸ்ரீ பெரிய நம்பியும் ஸ்ரீ ஆளவந்தார் நியோகத்தால் பலகால் தட்டி உபதேசித்து
ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளை சாஷாத்கரிப்பித்து அனுபவிப்பித்து அருளினார் –

அநந்தரம் ஸ்ரீ இளையாழ்வார் திருமாளிகையிலே எழுந்து அருளி தம் திரு மாளிகையில் மேல் பாதியிலே ஸ்ரீ பெரிய நம்பி
குடும்ப ஸஹிதமாக எழுந்து அருளி இருக்கத் தக்கதாக இடம் சமர்ப்பித்து தளிக்கைக்கு வேண்டும் பதார்த்தங்களும் சமர்ப்பிக்க
ஸ்ரீ நம்பியும் ஆறு மாசம் அங்கேயே எழுந்து அருளி இருந்து ஸ்ரீ இளையாழ்வாருக்கு திராவிட வேத பிரபந்தங்களையும்
தர்சன விஷய ரஹஸ்ய விசேஷங்களையும் ப்ரசாதிக்க ஸ்ரீ இளையாழ்வாரும் ப்ரீதியுடனே செவிக்கு இனிய செஞ்சொல் கேட்டு
க்ருதார்த்தராய் இருக்கும் காலத்தில்

ஒரு நாள் திருமஞ்சன முறையில் எண்ணெய் காப்புச் சாத்த வந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஷூத்து நலியா நின்றது என்றவாறே
ஸ்ரீ இளையாழ்வாரும் தம் தேவிகளை அழைத்து -ஸ்ரீ வைஷ்ணவர் விடாய்த்து இருக்கிறார் -பர்யுஷித அன்னம் இல்லையோ என்ன –
தேவிகளும் அல்பமும் ஆகிலும் இல்லை -என்ன இவரும் தேவிகளை ஒரு காரியத்தில் ஏவ விட்டு உள்ளே புகுந்து சோதித்து
அருளிப் பாத்ரத்திலே பழைய பிரசாதம் சம்ருத்தமாய் இருக்கக் கண்டு எடுத்துத் தேவியாரை அழைத்து ஸ்ரீ வைஷ்ணவர் இளைத்து இருக்க
இப்படிச் செய்தாயீ இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று நெடும் சொல்லால்
மறுத்த நீசை இறே நீ என்று கனக்கக் கோபித்து விட்டார் –

பின்னையும் ஒரு நாள் கிணற்றின் கரையில் ஸ்ரீ இளையாழ்வார் தேவிகளுக்கும் ஸ்ரீ பெரிய நம்பி தேவிகளுக்கும் ஒரு தோண்டி
வியாஜமாக சண்டையான வளவிலே இத்தை ஸ்ரீ பெரிய நம்பி கேட்டருளித் தம்முடைய தேவிகளை மிகவும் கோபித்து
ஸ்ரீ இளையாழ்வாருக்கும் அறிவியாதே தேவிகளை அழைத்துக் கொண்டு மீண்டு ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளினார் –
ஸ்ரீ இளையாழ்வாரும் அனுஷ்டானம் பண்ணி எழுந்து அருளி ஸ்ரீ பெரிய நம்பியை சேவிக்கப் பெறாமல் திருமாளிகையில்
வர்த்திக்கிறவர்களை பெரிய நம்பி எங்கே என்று கேட்டருள -மீண்டு கோயிலுக்கு எழுந்து அருளினார் என்று அவர்கள் விண்ணப்பம் செய்ய –
இவரும் அது என் -அவர் அருளிச் செய்யாமல் எழுந்து அருளுகைக்கு ஹேது என் என்ன -ஒரு தோண்டி அடியாக மதினியாருக்கும் மதினியாருக்கும்
சண்டையானவாறே தம் தேவிகளைக் கோபித்து பாகவத அபசாரத்துக்கு இறாயத்து அப்போதே ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் -என்றார்கள் –

இளையாழ்வாரும் அச்செய்தியைக் கேட்டு திரு உள்ளம் கலங்கி தேவிகளை பார்த்து அதி குபிதராய் –
பாபா நாமா கரஸ் ஸ்த்ரிய–என்னும்படி ஸ்பஷ்டம் ஆக்கினாயே -முன்பே ஸ்ரீ திருக்கச்சி நம்பி விஷயமாகவும்
ஸ்ரீ வைஷ்ணவர் விஷயமாகவும் பாகவத அபசாரம் பட்டாய் –
இப்போது ஸ்ரீ பெரிய நம்பி தேவிகளுடன் பிணங்கி அஸஹ்ய அபசாரம் பட்டாய் -இப்படி செய்கிற நீ இப்பொழுதே புறப்பட்டுப் போ என்று
தத் அனுபந்தியான தனங்களையும் கொடுத்து பயணமாகி பிறந்தகம் போகவிட்டு இல்லறம் அல்லேல் துறவறம் என்கிறபடியே
அதிதி ஸத்கார யோக்யை இன்றிக்கே பிரதிகூலையாய் இருக்கிற பார்யையை சவாசனமாக த்யஜித்து சன்யசிக்கக் கடவேன் -என்கையாலே
ஸ்ரீ இளையாழ்வாரும் நமக்கு இஸ் சம்சாரம் த்யாஜ்யம் என்று அத்யவசித்து —
அனந்த சரஸ்ஸிஸ் நாத்வா விமானச் சாயாஞ்சிதே -சாயையா அன்விதே- விமுக்தஸ் சர்வ பாபேப்யோ விஷ்ணு லோகம் ச கச்சதி -என்னும்
மஹாத்ம்யத்தை உடைய -திருவனந்த சரஸூக்கு எழுந்து அருளி

சம்யங் நாபாஹ்வயே தீர்த்தே விபாஹ்யத கில்பிஷ நிரஸ்தே தரபோபாசோ வரதம் சரணம் கத -என்கிறபடியே –
திருவனந்த சரஸ்ஸிலே நீராடி -யதோக்தகாரிணம்பி ஷும் பகவந்தம்வா குருத்வே நாங்கீ க்ருத்ய சந்யாஸாஸ்ரமம் ஆஸ்ரயிஷ்யாமி –
என்கிறபடியே ஸன்யஸிக்க சங்கல்பித்துக் கொண்டு -தொழுது எழு தொண்டர்கள் தமக்குப் பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்
ஸ்ரீ பேர் அருளார் சந்நிதியில் எழுந்து அருளி சேவித்து தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் -என்றும்
என்கிறபடியே பகவத் பாகவத ஆச்சார்ய அனுவர்த்தனத்துக்கு விலக்கடியான இஸ் சம்சார சம்பந்தம் வேண்டுவது இல்லை –
அடியேனுக்குத் தேவரீர் திருவடித் தாமரைகளின் சேவையே வேண்டுவது – ஆகையால்
த்ரிதண்டம் வைஷ்ணவம் லிங்கம் விப்ராணாம் முக்தி சாதனம் -நிர்மாணம் சர்வ தர்மாணாம் இதி வேத அநு சாதனம் -என்று
இப்படிச் சொல்லப்பட்ட த்ரிதண்ட காஷாயாதிகளைத் தேவரீர் அடியேனுக்குப் பிரசாதித்து அருள வேணும் என்று ஸ்ரீ இளையாழ்வார்
ஸ்ரீ பேர் அருளாளரை ஆச்சார்யத்வேன அங்கீ கரித்து விண்ணப்பம் செய்ய ஸ்ரீ தேவப் பெருமாளும் திரு உள்ளம் உகந்து அருளி –
த்ரிதண்டம் உபவீதஞ்ச வாச கௌபீன வேஷ்டநம் -சிக்யங்கவசமித் யேதத் பிப்ருயாத்யாவதாயுஷம் -என்கிறபடியே
த்ரிதண்ட காஷாயாதிகளை நீருள்ள தனையும் தரிக்கக் கடவீர் என்று அர்ச்சக முகேன நியமித்து பிரசாதித்து அருளி –
இராமானுச முனி -என்று திரு நாமம் சாத்தி உகந்து அருளி -நம் இராமானுஜனை திரு மடத்தில் வைத்து வாரும் -என்று
ஸ்ரீ திருக்கச்சி நம்பிக்கு அருளிச் செய்து அருள அவரும் அப்படியே உபலாளித்துக் கொண்டு போய் திரு மடத்தில் வைத்து எழுந்து அருளினார் –

பின்பு ஸ்ரீ ராமானுசனும் ஆஸ்ரம தர்மங்களைக் குறையற நடத்திக் கொண்டு நமக்கு ஸ்ரீ ஆளவந்தார் விசேஷ கடாக்ஷம் பண்ணினதற்கு ஈடாக
விரோதிகளும் கழிந்து ஆனுகூல்யமும் கூடா நின்றது இ றே –ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளக கருத்து நிறைவேறும்படி நமக்கு
ஒரு சகாயம் உண்டாக வேணும் என்று விசாரம் உண்டாய்த் தத் அனுரோதேந ஸ்ரீ கோவிந்த பட்டரை நினைத்து –
அவன் நமக்கு ஹித ப்ரவர்த்தகன் -சர்வ விஷய விரக்தன் -ஸாஸ்த்ர வைதக்யம் உள்ளவன் – இனி அவனை நம்மோடே சேர்ப்பார் உண்டாகில் நல்லது –
இப்போது அவன் தேவதாந்த்ர பரனாய் இரா நின்றான் அவ்வுள்ளங்கை கொணர்ந்த இடத்தே சுருள் நாற்றம் எழுப்பி
சர்வ கந்த சர்வ ரஸ-என்னுமவனுடைய ஸுகந்தயத்தைக் காட்டி மீட்க்கும் விரகர் யாரோ என்ற நினைவிட
விசேஷ ஆத்ம குணங்களை உடையராய் வேத வேதாந்த அக்ரேஸராய் வகுளாபரண பிரபந்த முகிளா மோதித சித்தராய் –
திலதம் உலகுக்காய் நின்ற தகிருவேங்கடத்து எம்பெருமானை அநவரதம் பாவனை பண்ணி பிரியா அடிமை செய்யா நின்றுள்ள
தேசிக அக்ரேஸரான ஸ்ரீ பெரிய திருமலை நம்பி கடவர் என்று நிச்சயித்து ஒரு அனுகூல ஸ்ரீ வைஷ்ணவரை அவர் சந்நிதிக்குப்
போகச் சொல்லி -தேவரீருடைய மருமகனான வட்டமணி கோவிந்த பட்டன் அடியேனுடன் ஸஹ அத்யாயியாய் அனுகூலித்து இருந்தவன்
துர்வாச அதிசயத்தால் அந்நிய பரனாய் கால ஹஸ்தி யாகிற நடும் காட்டில் நில்லா நின்றான் -தேவரீர் அடியேனுக்காக அவன் இடத்தே
நிர்ஹேதுக கிருபை பண்ணி தேவரீர் திருவடிகளுக்கு அவனை ஆட் கொண்டு அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து போக விட்டு அருளினார் –

ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ முதலியாண்டானும் ஸ்ரீ இளையாழ்வார் இடம் ஆஸ்ரயித்தல்

அநந்தரம் இப்படி ஆஸ்ரம பிராப்தி பண்ணி அருளின செய்தியை ஸ்ரீ கந்தாடை முதலியாண்டானும் ஹாரீத குல திலகரான
திரு மறு மார்பன் என்கிற திருநாமத்தை யுடைய ஸ்ரீ கூரத்தாழ்வானும் கேட்டருளி அதி ப்ரீதியோடே ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு
எழுந்து அருளி ஸ்ரீ ராமானுசனை சேவித்து அடியோங்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காராதிகளை ப்ரசாதித்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ராமானுஜனுக்கு திரு உள்ளம் உகந்து அருளி அவர்கள் பிரார்த்தித்த படியே செய்து அருள
அவர்களும் பஞ்ச ஸம்ஸ்காராதிகளை லாபித்து க்ருதார்த்தரார்களாய்-
அதீத்ய மந்த்ரம் ஆஸ்ரயம் பூஜையேச் சக்தி தோத் விஜ ஆச்சார்யா தீந வ்ருத்திஸ் து யாவஜ்ஜீவம் சதா ஸூசி -என்கிறபடியே
ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ ராமானுஜனை ஒரு காலும் பிரியாமல் தத் கைங்கர்ய ஏக ரசராய் சேவித்துக் கொண்டு இருந்தார்கள்

யாதவ ப்ரகாசன் ஸ்ரீ இளையாழ்வாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தல்

பின்பு யாதவப்பிரகாசனுடைய மாதாவுக்கு பலகாலும் ஸ்ரீ பேர் அருளாளர் சேவையும் ஸ்ரீ திருக்கச்சி நம்பி பார்வையும்
ஸ்ரீ ராமானுஜன் இடத்தே ப்ரேம சம்பாஷணமும் நடக்கையாலே அதுவே நிதானமாக அவளுக்கும் நம் தர்சனத்திலே ஊற்றம் பிறந்து
இத் தரிசனத்தில் நம் யாதவனும் இறங்கினாலோ -என்று நினைத்து வையமாளிகைப்படி ஏறா நிற்க நல்லது நல்லது என்று
கிம்வதந்தி உண்டாக அது கேட்டு சந்தோஷத்துடன் யாதவ பிரகாசன் பக்கலிலே சென்று இச் செய்தியைச் சொல்லி நீயும் நம்
ஸ்ரீ ராமானுஜனைப் போலே சிகா யஜ்ஜோபவீத பூர்வகமாக த்ரிதண்டத்தைத் தரியாய் என்ன
யாதவ பிரகாசனும் ஸ்வ மத அபிமானத்தாலே அர்த்தம் சொல்லுகை ஒழிந்து பாரமார்த்திகதயா ஸ்வ அபிமத அர்த்தத்தில்
அருசி தோன்றா நிற்கையாலும் ஸ்ரீ இளையாழ்வார் அந்நாள்களில் பிரதியோகித்வேன சொன்ன அர்த்தங்கள் நெஞ்சிலே
புண் படுத்தா நிற்கையாலும் அவர் மஹாத்ம்யங்களை ப்ரஹ்ம ரஜஸ்ஸூ சொல்லி இருக்கையாலும்
அவருக்கு கங்கா யாத்திரையில் வியாத ரூபேண வந்த ராம சாஷாத்கார ஸஹாயத்தாலும் -மாத்ரு வாக்யத்தாலும் சம்மதித்து
ஸ்வ மாதா உடனே த்ரி தண்ட தாரணம் பண்ணும் இடத்தில் நான் சிகா யஜ்ஜோ பவீத தியாகம் பண்ணுகையாலே
அதுக்கு பிராயச்சித்தமாக பூ ப்ரதக்ஷிணம் பண்ண வேண்டி இருந்தது -அது வாயோ வ்ருத்தனான என்னால் செய்ய முடியாது –
இனி அசக்தனான நான் செய்ய அடுப்பது என் என்ன என்று சொல்லி முசித்துக் கிடக்க அவ்விரவிலே
ஸ்ரீ பேர் அருளாளர் அவன் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி -நம் இராமானுஜனை ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணி
அவர் தர த்ரிதண்ட காஷாயாதிகளைத் தரித்து சன்யசியாய் -என்ன யாதவனும்

அத்தை விஸ்வசியாமல் ஸ்ரீ திருக் கச்சி நம்பியுடனே -நான் ஒரு நினைவு நினைத்து இரா நின்றேன் –
அத்தை ஸ்ரீ பேர் அருளாளர்க்கு விண்ணப்பம் செய்து அவர் திரு உள்ளமான படியை எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்ன –
ஸ்ரீ நம்பியும் அன்று இராத்திரி பெருமாளை சேவித்து விடை கொள்ளும் அளவில் -யாதவ பிரகாசன் ஒரு நினைவு நினைத்து இருந்தேன் என்றான் –
என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பேர் அருளாளரும் அவன் தாயார் இராமானுசனைப் போலே நீயும் த்ரிதாண்டி சந்நியாசி ஆகா என்றாள்-
தான் பூ ப்ரதக்ஷிணம் பண்ண வேண்டும் என்று முசித்துக் கிடந்தான் -நாம் நம் இராமானுஜனை ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணி சன்யசியாய்
என்று சொன்னோம் நாம் ஸ்வப்ன முகேன சொன்ன வார்த்தையை விஸ்வசியாமல் உம்மை இடுவித்துக் கிடக்கிறான் அத்தனை -என்று
அருளிச் செய்ய ஸ்ரீ நம்பியும் இச்செய்தியை விடிவோரை யாதவ பிரகாசனுக்கு அருளிச் செய்ய -அவனும் விசுவாசித்து வந்து
ஸ்ரீ ராமானுஜன் திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்து -அடியேனுக்கு த்ரிதண்ட தாரணம் பண்ணுவித்து அருள வேணும் என்ன
இவரும் அவனுடைய உசித நிர்வேதத்தைக் கண்டு அது செய்யும் இடத்தே பிராயச்சித்த அபேக்ஷை உண்டு என்ன
அவனும் பகவத் யுக்தி பிரகாரத்தை விண்ணப்பம் செய்து அவர் தம்மையே வலம் வந்து ச விநயனாய் நிற்க
அவ்வளவில் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும் பகவத் ஆனுகூல்யமும் இவருடைய நினைவும் ஒத்து இருந்தபடியே என்று விஸ்மிதராய் –
த்வேஷாச் சைத்யா தயா -என்கிறபடி தேவரீருக்கு பண்ணா நின்ற த்வேஷம் தானே இவருக்கு உஜ்ஜீவன ஹேது வாய்த்து
என்று சொல்லி ஆச்சர்யப்பட்டு

அஸ்மாபிஸ் துல்யோ பவது -என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ராமானுசனும் போர உகந்து அருளி
ஸாஸ்த்ர யுக்த பிரகாரேண பிராயச்சித்த பூர்வகமாக சவ்ள உப நயனாதிகளையும் பண்ணுவித்து த்ரிதண்ட காஷாயாதிகளையும்
பிரசாதித்து அருளி கோவிந்த ஜீயர் -என்ற திரு நாமமும் பிரசாதித்து அருளி இப்படி பஞ்ச ஸம்ஸ்கார உக்தராக்கி குரு பரம்பரா பூர்வகமாக
மந்த்ர ரத்ன அர்த்தத்தையும் ப்ரசாதித்து அருளி சாஸ்திரங்களில் இதரேதர வசன வையர்த்த்யம் வாராத படி யதி தர்ம சமுச்சயம் -என்கிற
பிரபந்தத்தைப் பண்ணும் என்ன கோவிந்த சீயரும் விதி கர்த்ருத சா லிங்கம் பிரயோ போ முக்கிய கர்மச அஹோ ராத்ர க்ரியா
ஆஸாரோ லிங்க தர்மோ கதிஸ்தி தி ப்ராயச்சித்தாநி ஸம்ஸ்கார இத்யேகாதச பர்வக என்று ஏவம் பிரகாரேண ஸங்க்ரஹ
பிரபந்தத்தைச் செய்து சந்நிதியில் வைத்து தண்டன் சமர்ப்பிக்க ஸ்ரீ ராமானுசனும் ஆதி அந்தமாக திருக்கண் சாத்தி சந்தோஷித்து அருள
இவரும் ஆச்சார்ய பரதந்த்ரராய் சில காலம் எழுந்து அருளி இருந்து அசிரேண பரம பதத்தை பிராபித்து அருளினார் –

அநந்தரம் ஸ்ரீ ராமானுசனும் ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கும் ஸ்ரீ முதலியாண்டானுக்கும் மீமாம்ச ஸாஸ்த்ர யுக்ம ஸ்ரமம் பண்ணுவித்துக் கொண்டு
இரா நிற்க இவருடைய ஆஸ்ரம பிராப்தி முதலான இச் செய்திகளை ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ ஆளவந்தார் முதலிகள் எல்லாரும் கேட்டுப்
போர யுகந்து தங்களிலே விசாரித்துக் கொண்டு ஸ்ரீ நம் பெருமாள் சந்நிதியில் சென்று -ஸ்ரீ இளையாழ்வாரை நித்ய வாசம் பண்ணும்படி
இங்கே அழைப்பித்துக் கொண்டு அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ பேர் அருளாளருக்கு அப்போதே
திரு முகம் போக விட்டருள ஸ்ரீ பேர் அருளாளரும் கேட்டருளி தம் தாம் அபிமானத்தை புறம்பே போக விடில் அன்றோ
நம் இராமானுஜனை விடுவது -என்று அருளிச் செய்து விட -இச் செய்தியை ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ பெரிய நம்பி முதலான முதலிகள்
எல்லாரும் கேட்டு இனி செய்ய அடுப்பது என் என்று தங்களில் விசாரித்து அருளி ஸ்ரீ தேவப்பெருமாள் பரம உதாரராய் இருப்பர் –
பாட்டுக்குப் போர நல்லராய் இருப்பர் -என்று ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரைக் குறித்து –
வேகவத் யுத்தரே தீரே க்ஷேத்ரே ஸத்ய வ்ரதாக்யே அஸ்தி காஞ்சீதி விக்யாதா புரீ புண்ய விவர்த்தி நீ -என்று
புண்ய வர்த்தகமாகச் சொல்லப்பட்ட ஸ்ரீ காஞ்சீ மா நகரியிலே தேவரீர் எழுந்து அருளி புண்ய கோடி விமான மத்யஸ்ராய்
அகிலார்க்கும் சர்வ அபேக்ஷித பிரதராய் இருக்கிற ஸ்ரீ பேர் அருளாளரைப் பாடி உகப்பித்து -நமக்கு ஸ்ரீ ராமானுசனைத் தர வேணும் -என்று
கேட்டு வாங்கி அழைத்துக் கொண்டு எழுந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –

அவரும் அப்பொழுதே புறப்பட்டு ஸ்ரீ நம்பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து ஸ்ரீ பெருமாள் கோயிலை நோக்கி எழுந்து அருள இவர் இப்படி
எழுந்து அருளுகிற செய்தியைக் கேட்டு ஸ்வ ஜனமான ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அரையர் எதிரே வந்து தம்முடைய திரு மாளிகைக்கு எழுந்து
அருளுவித்துக் கொண்டு போய் சத்கரித்து அமுது செய்விக்க -இவரும் அதி ப்ரீதராய் எழுந்து அருளி இருக்க அதின் மற்றை நாள் விடிவோரை
ஸ்ரீ பேர் அருளாளர் வையமாளிகையில் ஸ்ரீ கச்சிக்கு வாய்த்தான் திரு மண்டபத்திலே ஏறி அருளி அனைத்துத் கொத்தில் உள்ள பரிகரமும்
சேவித்து இரா நிற்க ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் திருவாலவட்டம் பரிமாற அருகே ஸ்ரீ ராமானுசனும் அவர் அருளிச் செய்த
ஸ்ரீ வரதராஜ அஷ்டகத்தை அனுசந்தித்துக் கொண்டு சேவித்து நிற்கச் செய்தே ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் எழுந்து அருளின செய்தியை
ஸ்ரீ திருக் கச்சி நம்பி கேட்டருளி எதிர் கொண்டு அரையரை சேவிக்க அவரும் கிருபை பண்ணி அந்யோந்யம் குசல ப்ரச்னம் பண்ணிக் கொண்டு
இருக்கச் செய்தே ஸ்ரீ அரையரும் ஸ்ரீ நம்பியுடனே ஸ்ரீ பேர் அருளாளரை சேவிக்க வேணும் என்று விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ பெருமாளுடைய திரு ஒலக்கத்திலே அழைத்துக் கொண்டு போக -அரையரும் ஸ்ரீ வரத ராஜனை சேவித்து –
கதாபுநஸ் சங்க ரதாங்க கற்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம் -த்ரிவிக்ரம த்வத் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தனாம்
அலங்கரிஷ்யதே-என்று அனுசந்தித்துக் கொண்டு தண்டன் சமர்ப்பித்து நிற்க -ஸ்ரீ பெருமாளும் தீர்த்த பிரசாதங்களை ஸ்ரீ சடகோபனையும்
பிரசாதித்து அருள இவரும் திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் என்று ப்ரீதராய் நிற்கிற அளவிலே
ஸ்ரீ பெருமாளும் இவரை அருளப்பாடிட்டு அருள ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் பக்தி புரஸ்சரமாக –
என் நெஞ்சமேயான் -என்று தொடங்கி உலகம் ஏத்தும் ஆழியான் அத்தியூரான் -என்றும்
பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேர் அருளாளர் -என்றும்
தொழுது எழு தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் என்றும்
இப்படி ஆழ்வார் திவ்ய ஸூக்தியான பாலேய் தமிழன பண்ணார் பாடலான கவிகளைத் தேவ கானத்திலே இயலும் இசையுமாக நாடகத்துடனே பாட –
தென்னா என்னும் என் அம்மான் -என்கிறபடியே ஸ்ரீ பேர் அருளாளரும் போர உகந்து அருளி
தாம் சாத்தி இருந்த திரு முத்தின் தாழ் வடம் திருப் பரிவட்டம் சத்ர சாமராதி மற்றும் உண்டான வரிசைகள் எல்லாம் பிரசாதித்து அருள –

இவரும் நாயந்தே -அடியேனுக்கு இவை ஒன்றிலும் அபேக்ஷை இல்லை -தேவரீர் அர்த்திதார்த்த பரிதாந தீக்ஷிதர் ஆகையால் அடியேன்
அரித்தித்தத்தைத் தந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்து பின்னையும் கனக்கப் பாடி அருள
ஸ்ரீ பெருமாளும் அத்தைக் கேட்டு அருளி ப்ரீதராய் நாமும் நம் பெண்டுகளும் ஒழிய நீர் வேண்டினத்தைத் தருகிறோம் –
அத்தைச் சொல்லிக் கண்ணீர் என்ன ஸ்ரீ அரையரும் ஸ்ரீ ராமானுசனைக் காட்டி இவரை அடியேனுக்குத் தந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் அப்போதே அறியப் பெற்றிலோமே -இவரை ஒழிய நீர் வேண்டினது எல்லாம் தருகிறோம் கேளீர் என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ அரையரும் ராமோ த்விர் நாபி பாஷதே -என்கிற தேவரீர் இரண்டு வார்த்தை அருளிச் செய்யலாமோ என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பேர் அருளாளரும் இன்னாப்புடன் தந்தோம் கொண்டு போகலாகாதோ என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் ஸ்ரீ உடையவரைக் கைப்பற்றி வாரும் என்ன ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பேர் அருளாளருக்குத் தெண்டன் சமர்ப்பித்து
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையருடனே ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளப் புறப்பட ஸ்ரீ பெருமாளும் இவருக்கு விடை கொடுத்து அருளினார் –
பின்பு ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ முதலியாண்டானையும் பார்த்து அருளி திரு மடமே போய் நம்முடைய திருவாராதனமான
ஸ்ரீ பேர் அருளாளரையும் மற்றும் உண்டான சம்பந்தங்களையும் கொண்டு வாருங்கோள் என்று அருளிச் செய்து
திரு மடமும் புகுராமல் எழுந்து அருள அவர்களும் அப்படியே எழுந்து அருளுவித்துக் கொண்டு கூடின அளவிலே
ஸ்ரீ திருக்கச்சி நம்பியும் அவர்களை வழி விட்டு மீண்டு எழுந்து அருளினார்

ஸ்ரீ உடையவரும் -யத் கத்வாந நரோயாதி நர கஞ்சாப்ய தோகதிம் -என்று சொல்லுகிற பெருமையை யுடைய
ஸ்ரீ ரெங்க தாமமாகிற திருவரங்கத் திருப்பதியை நோக்கிப் பயண கதியில் எழுந்து அருளி வடவாற்றிலே நீராடி
கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரங்களைச் சாத்திக் கொண்டு இருந்த அளவிலே இவர் எழுந்து அருளின செய்தியை
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்து ஸ்ரீ பெரிய நம்பி முதலான முதலிகளும் சீயர்களும் ஏகாங்கிகளும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் கேட்டருளி
ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் சேனை முதலியாருக்கு அருள்பாடிட்டு அருளி நம் இராமானுஜனை எதிர் கொண்டு
அழைத்து வாரும் -என்று திரு உள்ளமாய் அருள அவர் ஸ்ரீ பெரிய நம்பி உள்ளிட்ட முதலிகள் சீயர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுடனே
ஸ்ரீ பெருமாள் பரிகரமான அனைத்துத் கொத்தில் உள்ளவர்களும் சேவிக்க அகில ந்ருத்த கீத வாத்யத்துடனே முக்தராய் போருமவர்களை
நித்ய ஸூரிகள் விரஜைக்கரை அளவாக வந்து எதிர் கொள்ளுமா போலே திருக் காவேரி வட ஆற்றின் கரை அளவாக வந்து எதிர் கொள்ள
ஸ்ரீ ராமானுஜனும் ஸ்ரீ சேனை முதலியார் ஸ்ரீ பெரிய நம்பி முதலானோரையும் சேவித்து அவர்களை பின் சென்று கொண்டு போய் –
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் என்கிறபடியே திண் கொடி மதிளையும் தாமோதரன் திருக் கோபுரத்தையும் கிட்டி சாஷ்டாங்க பிரணாமம்
பண்ணி திருமாலை தந்த பெருமாள் திருவீதி முன்னாகப் புகுந்து ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி த்ரிவிக்ரமன் திரு வீதியையும் பிரதக்ஷிணமாக
எழுந்து அருளி புகுந்து பெரிய பலி பீடத்து அடியிலே சென்று தண்டன் சமர்ப்பித்து சேவா க்ரமத்தில் ஆளரியையும் திருவடி தொழுது
ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் சேவித்து ஸ்ரீ சந்த்ர புஷ்கரணியிலே தீர்த்த பிரசாதம் பண்ணி அருளி திருக் கோபுரத்து நாயன்மார்களும்
சேவித்து புகுந்து கடைத்தலை இருந்து வாழும் சோம்பரான நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களையும் சேவித்து மற்றும் சுற்றும் உள்ள
எம்பெருமான்களையும் சேவித்து -அணியனார் செம்பொனாய அருவரை யனைய கோயிலாகிற அணி அரங்கன் திரு முற்றத்தே புகுந்து
தண்டன் சமர்ப்பித்து உள்ளே சென்று ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி ப்ரணவாகாரமான திவ்ய விமானத்தையும் சேவித்து
ஸ்ரீ சேனை முதலியாரையும் திருவடி தொழுது அழகிய மணவாளன் திரு மண்டபத்து ஏற எழுந்து அருளின அளவிலே

வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து என்கிறபடியே முக்தனாய் போருமவனை ஸ்ரீ வைகுண்ட நாதன் எதிர் கொள்ளுமா போலே
ஸ்ரீ நம்பெருமாள் திருக்கைத் தலத்திலே எழுந்து அருளிப் புறப்பட்டு அழகிய மணவாளன் திரு மண்டபத்து அளவாக எழுந்து அருளி
எதிர் கொண்டு உள்ளே புகுந்து அருள ஸ்ரீ உடையவரும் விழுவது எழுவது தொழுவதாய் சேவித்து திருப் பள்ளி அறையிலே புகுந்து –
அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உகந்து –
மணத்தூணே பற்றி நின்று -வாயார வாழ்த்தி ப்ரேம பரவசராய் -அமலனாதிபிரான் படியே பாதாதி கேசாந்தமாக
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே என்னும்படி ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து திருப்பல்லாண்டையும் அனுசந்தித்து –
நமோ நமோ வாங் மனசாதி பூமயே நமோ நமோ வாங் மனஸைக பூமயே நமோ நமோ அனந்த மஹா விபூதயே நமோ நமோ அனந்த தயைக சிந்தவே
ந தர்ம நிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமாம்ஸ் த்வத் சரணாரவிந்தே அகிஞ்சன அநந்ய கதிஸ் சரண்ய த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று
தம் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தியை அனுசந்தித்து சேவித்து நிற்க

ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ராமானுசனை கிருபை பண்ணி அருளி
தீர்த்த ப்ரசாதங்களும் ப்ரசாதித்து -நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே-
தேனே மலரும் திருக் கமல பாதமான துயரறு சுடர் அடிகளாலே இவருடைய உத்தம அங்கத்தை அலங்கரிக்க இவரும்
தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று நிரதிசய ஆனந்த நிர்ப்பரராய் சேவித்துக் கொண்டு நிற்க ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ உடையவரை
தம் தாமரைக் கண்களால் நோக்கி -சோதிவாய் திறந்து -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் -என்கிற உபய விபூதி ஐஸ்வர்யத்தையும்
உமக்கும் உம் உடையார்க்கும் தந்தோம் -நம்முடைய வீட்டின் கார்யம் எல்லாம் ஆராய்ந்து நடத்தும் என்று திரு உள்ளமாய் அருளி
ஸ்ரீ உடையவர் என்ற திரு நாமமும் பிரசாதித்து அருளி – ஸ்ரீ உடையவரும் தீர்த்த பிரசாதமும் சூடிக் களைந்த தண் துழாய்
விரை நாறு கண்ணித் திரு மாலை பிரசாதமும் -பொது நின்ற பொன் அம் கழலான ஸ்ரீ சடகோபனும் வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்
என்கிற உபய விபூதி ஐஸ்வர்யமும் கரதலாமலமாக ப்ரசாதிக்கப் பெற்று
ஸ்ரீ பெரிய திரு நம்பி திரு முக மண்டலத்தைப் பார்த்து அருளி பெரியாருக்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு என்று
தேவரீர் திருவடிகள் சம்பந்தத்தை இட்டு ஸ்ரீ பெருமாள் இப்படி அடியேனை வாழ்வித்து அருளினார் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெரிய நம்பியும் கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பவிஷ்யத்தர்த்தம் ப்ரத்யக்ஷமாச்சது -என்று
அருளிச் செய்து ஸ்ரீ பெருமாள் நியமித்து அருளின கார்யம் செய்து அருளலாகாதோ என்ன

ஸ்ரீ உடையவரும் பெரிய திரு மண்டபத்தே எல்லாருடனே எழுந்து அருளி இருந்து கருவூலங்களை எல்லாம் ஆராய்ந்து
அமுதுபடி சாத்துப்படி திருமாலை திரு விளக்குகள் எல்லாம் ஆராய்ந்து நடத்தி மற்றும் திருவாராதனத்துக்கு வேண்டியவை எல்லாம்
குறைவற நடத்தி கோயில் அனைத்துத் கொத்தில் உள்ளவர்களுடையவும் ஏற்றத் தாழ்வுகளும் ஆராய்ந்து திரு மதிள்கள் முதலான இடங்களில்
திருப்பணி களும் நடத்தி அருளி –
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை –
கடியார் பொழில்களில் திருச் செண்பகம் தொடக்கமான திருப் பூ மரங்களும் திரு நந்தவனங்களும் ஆராய்ந்து அருளி
மற்றும் உண்டான திரு விளையாட்டு சீமைகள் எல்லாம் ஆராய்ந்து கொண்டு போருகிற அளவிலே
அகளங்க நாட்டாழ்வானை சிஷ்யனாக்கி ஸ்ரீ கோயிலுக்கு மேல் காவலாக வைத்து அருளி –
திங்களும் நாளும் விழா வறாத-என்கிறபடியே நித்ய உத்சவ பக்ஷ உத்சவ மஹா உத்சவ சம்வஸ்தர உத்சவங்கள் எல்லாம்
தாழ்வு அற நடத்திக் கொண்டு போந்து அருளினார்–

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: