ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ யமுனைத் துறைவர் /ஸ்ரீ இளையாழ்வார் வைபவங்கள் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ இளையாழ்வார் வைபவம்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த முதலிகளில் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி –
வேங்கடத்தைப் பாதியாக வாழ்வீர்காள் என்கிறபடியே திருவேங்கடமுடையானை திருவடிக் கீழ் அமர்ந்து புகுந்து சேவித்துக் கொண்டு
எழுந்து அருளி இரா நிற்க -அவருடன் பிறந்த பெண் பிள்ளையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் என்றும் ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்றும்
பெயரை உடைய இருவரில்
மூத்த ஸ்ரீ பூமிப் பிராட்டியார் ஸ்ரீ பெரும்பூதூரிலே ஸ்ரீ ஆஸூரி கேசவப் பெருமாள் என்ற சர்வ க்ரது தீஷிதர்க்கு வாழ்க்கைப் பட்டாள்-
இளைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ மழலை மங்கலத்தில் வட்ட மணிக் குலத்திலே ஸ்ரீ கமல நயன பட்டரைத் திரு மணம் புணர்ந்தாள்-
அவர்களும் தம் தம் புக்கங்களிலே வாழும் காலத்தில்

அனந்தம் பிரமம் ரூபம் லஷ்மணஸ் ச தத பர பலபத்ரஸ் த்ருதீயஸ் து கலவ் கச்சித் பவிஷ்யதி -என்கிற வசனத்தின் படியே
திருவனந்த ஆழ்வானும் கலியுகத்தில் அகில ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக தம் திரு அவதாரத்துக்கு இடம் பார்த்து
ராம திவாகர அச்யுதா பானுக்கள் கௌசல்யா தேவகீ தேவிகளுடைய கர்ப்பங்களை விரும்பினால் போலே
ராமானுஜ திவாகரராய் ஸ்ரீ பெரும் புதூரில் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் கர்ப்பத்தைப் பிராபித்து அருளி
ஸ்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதாத்விஜா அங்கா நிசவிஸீர்ணாநி ஹா வ்ருத்தோ வர்த்ததே கலி -என்கிறபடியே
கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற -இருள் தரு மா ஞாலத்தில் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்கிறபடியே
கலி இருள் நீங்கிப் பெரிய கிருத யுகம் பற்றிப் பேர் இன்ப வெள்ளம் பெருகும்படி -தீர் லப்தா –என்கிற கணக்கின் படியே
சக வருஷம் -939- சென்ற வர்த்தமான பிங்கள சம்வத்சரத்தில் ஸ்ரீ மத்தான சைத்ர மாசத்தில் ஸூக்ல பக்ஷத்தில்
பஞ்சமி குரு வாஸர ஸஹிதமான திருவாதிரை நஷத்ரத்தில் ஸூப முஹூர்த்தத்திலே பார் எல்லாம் உய்யலாம் படி
ப்ராதுர்ப்பவித்து அருள ஆஸூரி கேசவாப் பெருமாள் இவர்க்கு ஜாத கர்மம் செய்து அருளினார்

இச் செய்தியை ஸ்ரீ பெரிய திருமலை நம்பி கேட்டருளி ஸ்ரீ பெரும்பூதூர் ஏறச் சென்று
சர்வ க்ரது ஸ்ரீ கேசவ சோமயாஜியாரைக் கண்டு சத்கரித்து -அவர் புத்ரனையும் முக ஓளி திகழக் கடாக்ஷித்து அருளி –
இவன் சர்வ லஷ்மீ ஸம்பன்னன்-சகல சாஸ்திரங்களையும் அதிகரிப்பன்- ஆகையால் லஷ்மனோ லஷ்மீ ஸம்பன்ன -என்கிற
இளைய பெருமாள் திரு நாமம் சாத்துகைக்குத் தகுதியாய் இருந்தான் என்று பன்னிரண்டாம் திவசத்தில் –
தஷிணந்து புஜம் பூர்வம் சக்ரேண பிரதி பேச்சிசோ வாமாம் ஸம்ப்ரதபேத் பஸ்ஸாத் சங்கே நைவ த்விஜோத்தம –என்கிறபடி
இவருக்கு நாம கரணத்தில் திரு இலச்சினை முன்னாக இளைய ஆழ்வார் என்ற திரு நாமம் சாத்தி அருளிப் பின்பு
அன்ன ப்ராசன சவ்ள உபநய நாதிகளையும் தத் தத் காலங்களிலே ஸாஸ்த்ர யுக்த பிரகாரத்தில் செய்விக்க
இளைய ஆழ்வாரும் அங்க உபாங்கங்களோடே கூடப் பத க்ரம ஸஹிதமாக வேத அத்யயனத்தையும் பண்ணிச்
சதுர்வித வித்யா பாரங்கதராய் ஷோடச கலா பூர்ணனான சந்திரனைப் போலே ஷோடச வார்ஷிகரான வாறே
சர்வ உபகார சமமான க்ருஹஸ்தாச்ரமத்தை அங்கீ கரித்து அருளி ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு யாருக்கான
ஸ்ரீ திருப்புட் குழியிலே யாதவ பிரகாசன் என்பான் ஒருவன் ஏக தண்டி மாயா ஸந்நியாசி பூர்வ பக்ஷ வேதாந்தம் வாசிப்பிக்கிறான்
என்று கேட்டருளி அங்கே எழுந்தருளி அவன் பக்கல் ஸ்ரோத்தாக்களோடே தாமும் ஸஹ ஸ்ரோதாவாய் வேதாந்தம் வாசித்து அருளா நிற்க

அவ்வளவில் மழலை மங்கலத்துக் கமல நயன பட்டருக்கு ஒரு புத்ரன் அவர் பத்னி பெரிய பிராட்டியார் இடத்திலே
க்ரோதந சம்வத்சரத்திலே தை மாசமும் பவ்ர்ணமியும் சோமா வாரமும் கூடின புனர்பூச நக்ஷத்திரத்தில் அவதரித்து அருள
ஜாத கர்ம அநந்தரம் -ஸ்ரீ திருமலை நம்பியும் அங்கு ஏற எழுந்து அருளி ஸ்ரீ கமல நயன பட்டரையும் கண்டு சத்கரித்து
பெரிய பிராட்டியார் புத்ரனையும் தம் தாமரைக் கண்களால் நோக்கி இவன் சத் ஆத்ம குணங்களையும் உடையனாய்
சர்வ வித்யைகளையும் அதிகரித்து வைதிக பக்ஷவானாம் என்று திரு உள்ளம் உகந்து அருளி
ஸ்ரீ கமல நயன பட்டரைக் கொண்டு கோவிந்தன் என்ற திரு நாமம் சாத்துவித்து அருளினார்
இவரும் சவ்ள உபநயநாதி ஸம்ஸ்கார விசிஷ்டராய் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தை பிராபித்து அருளி சர்வ சாஸ்திரங்களையும் அப்யஸித்து
ஸ்ரீ திருப் புட் குழியிலே யாதவ பிரகாசன் இடத்திலே இளையாழ்வார் வாசிக்கிறார் என்று கேட்டுப் போர ஆசையோடு
அங்கே வந்து தாமும் வேதாந்தம் வாசிக்கத் தொடங்கினார்

யாதவ பிரகாசனும் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்கிற ஸ்ருதி வாக்யத்துக்கு
கண்டத்வ முண்டத்வ பூர்ண ஸ்ருங்கத்வங்கள் ஒரு கோ வ்யக்தியிலே கடிக்கும் போது இறே ப்ரஹ்மத்துக்கு இந்த விசேஷணம் கூடுவது –
என்று அபார்த்த ப்ரதிபாதனம் பண்ண -இளையாழ்வார் அத்தை நிஷேதித்து –
ஸத்ய சப்தத்தால் க்ஷணிக வ்யாவ்ருத்தியையும் -ஞான சப்தத்தால் அசித் வ்யாவ்ருத்தியையும் –
அனந்த சப்தத்தால் பரிச்சின்ன -சேதன வ்யாவ்ருத்தியையும் பண்ணி சேதன அசேதன விலக்ஷணமாய் நித்தியமாய் இருக்கும்
ப்ரஹ்மம் என்ன அவனும் ஹூங்காரம் பண்ணினான் –

பின்பு ஒரு நாள் இளையாழ்வார் யாதவப்ரகாசனுக்கு அப்யஞ்சனத் தொழில் செய்யா நிற்க அவ்வளவில்
தஸ்யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-என்கிற ஸ்ருதிக்கு அவன் அநுசித அர்த்தம் சொல்ல அது கேட்டு இவருக்கு
சோகம் உண்டாய் அந்த சோகாஸ்ரு அவன் தொடையில் விழ அது நெருப்பு பட்டால் போலே அவன் தொடையைச் சுட –
அவனும் பதறி இவர் முகத்தைப் பார்த்து உமக்குத் துக்கம் ஆவான் என் -என்ன இவரும் கம்பிபதீ திகபீ என்று ஸூர்யனாய்
ஆச உபவேசநே -என்று உபவேசனமாய் ஸூர்ய ஆஸ்ரயணத்தை யுடைத்தான கமலம் போலே -என்று இத்யாதி யோஜனை இருக்க
அயதார்த்தம் கேட்டவாறே துக்கமாயிற்று என்ன யாதவப்ரகாசனும் அது கேட்டுக் குபிதனாய் –
நான் சொன்ன படி கேட்க்கில் வாசித்து இரும் -இல்லாவிடில் விட்டுப் போம் -என்ன இவரும் அப்படியே சிந்தை கலங்கித் தவிர்ந்து இருக்க

அவனும் ஏகாந்தத்தில் தன்னுடைய சிஷ்யர்களில் அனுகூலரை அழைத்து நீங்கள் நான் சொன்ன அர்த்தத்தை சம்மதித்து இருக்க
இளையாழ்வான் ஒருவனுமே எதிர்த்தட்டாக வாதியா நின்றான் -இவனால் நம்முடைய அத்வைத ரீதி சிறுக்கும் –
இவன் முடியும் விரகு என் என்று கேட்க அவர்களும் பலபடி படும் வகை சொல்ல அவனும் அவ்வோ வகைகளுக்குப் பழி பாவங்கள் உண்டாம் –
அவை வராமல் நினைத்தபடி கூடுகைக்கு மணி கர்ணிகையிலே ம்ருதி யுண்டாக்குகையே என் அகவாயில் உள்ளது என்ன –
அழகு இது என்று சர்வரும் ஐக மத்யம் பண்ணிக் கொண்டு துரியோதனன் தர்ம புத்திரர் விஷயத்தில் ஜது க்ருஹத்தில்
விசஸனம் எண்ணினாப் போலே அந்தரங்கித்து இளையாழ்வாரை அழைத்து நீர் இல்லாவிடில் எங்களுக்கு ஒரு சாயலாய் இருக்கிறது –
கோபியாமல் கிரந்தத்தை அவிச்சின்னமாக நடத்தும் என்று நன்மை யுரைத்து உள்ளிட்டுக் கொண்டு ஒரு நாள் கங்கா யாத்திரையை
உத்யோகித்துப் புறப்பட்டு போம் போது நின்ற நின்ற இடங்களிலே இளையாழ்வாரும் கோவிந்த பட்டரும் கூட்டரவு படாத படி பண்ணிக் கொண்டு
ஸாத்ர கோடி கணித சிஷ்யர்கள் ஸுஸ்ரூஷிக்க வழி செல்லா நிற்க விந்திய பிரதேசத்தில் ஒரு பள்ளக் கரையிலே ஜல ஸ்பர்ச அர்த்தமாக
இளையாழ்வாரும் கோவிந்த பட்டரும் கூடி நின்றவாறே கோவிந்த பட்டரும் விஜனமான சமயம் அறிந்து இவர்களுடைய
கங்கா யாத்ரா நிமித்தத்தை இளையாழ்வாருக்கு ஸூசிப்பித்து அகன்று போகச் சொல்லித் தாம் ஒருவரே போந்தார்

இளையாழ்வாரும் வ்யாகுலப்பட்டு அவ்வழியை விட்டு குறுக்கறுத்துப் போய் ஒரு மரத்தடியில் நின்று பார்க்க அவ்விடம்
வெம்பி எரி கானகமாய் நிர்ஜல பிரதேசமுமாய் ஸூஷ்க கண்டகா வ்ருதமாய்-
பொருந்தார் கை வேல் நிதி போல் பரல் பாய மெல்லடிக்கள் குருதி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர-என்கிறபடியே -ஊன்று வெம் பரற்களை யுடைத்தாய் தீக்ஷண தாப கர ரவி கிரணங்களை யுடைத்தான
விந்தியாட வீஷ்வ அதோ யா ஸூ -என்று சொல்லுகிற விந்தியாடவியாய் இருக்க சிந்த அக்காட்டில் தனியாக நின்று
ஆவாரார் துணை என்று –பக்கம் நோக்கி –வழி திகைத்து அலமருகின்றேன் –என்னும்படி திக் பிரமம் பிறந்து –
மதி எல்லாம் உள் கலங்கி அடி இடத் திமிர்த்துக் கொண்டு திகைத்து நிற்க

சர்வேஸ்வரனும்
நாஹமாத்மா நமாசாசே மத் பக்தைஸ் சாது பிர்விநா-என்று இருக்குமவன் ஆகையால்
சாதாரஸ் சர்வ ஸூலப -என்கிறபடியே வாளும் வில்லும் கொண்டு இடர் கெட பத்நீ ஸஹிதனாய்
ஒரு வில்லியாய் வந்து இவர் முன்னே தோன்ற இவரும் அவர்களைக் கண்டு கலக்கம் தீர்ந்து உள்ளம் தேறி நின்று
நீங்கள் எங்கு நின்றும் வந்தி கோள்-எங்கு ஏறப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் உத்தர தேசத்தில்
சித்தாஸ்ரமத்தின் நின்றும் வருகிறோம் சத்யவ்ரத க்ஷேத்ரம் ஏறப் போகிறோம் என்ன இவரும்
நானும் உங்களுடனே புண்ய கோடி ஏற வருவானாக நினைத்து இரா நின்றேன் -என்ன
நல்லது வாரும் என்று அவர்கள் முன்னடி இட இவரும் அவர்கள் பின்னே செல்ல அவர்களும் ஸ்வ அதீனமாக வழி நடத்த
விந்த்யம் பிற்காலித்து சந்த்யா காலமான அளவிலே கால உசித கர்ம அனுஷ்டானங்களையும் செய்து அவர்களுடன்
ஓர் இடத்தே உபவசித்து இருக்க வல்லிரவாய் முன்னடி தோன்றாமல் காடாந்தகார பூயிஷ்டமாய் நள்ளிரவானவாறே
கண் புதைய மூடி ராஜ வ்ருக்ஷத்தின் அடி இருந்தார்கள் –

அப்போது வியாத பத்னியும் நல்ல தண்ணீர் மடுக்க ஆசைப்பட வியாத புருஷனும் -விடிவோரை சமீபத்தில்
பான அர்ஹமான கிணற்றில் மதுர நிர்மல சீதள கந்த யுத பாத நீயம் காட்டுகிறேன் என்ன இளையாழ்வாரும் அது கேட்டு –
ஐயோ பரம உபகாரிகளான இவர்களை லப்த மநோ ரதர் ஆக்குகைக்கு இது நமக்கு அநபிஜ்ஞதேசமாய் விட்டதே என்று
நிர்விண்ணராய் இருக்க -கனவிருள் அகன்று -கீழ் வானம் வெள்ளென்றவாறே -கொழு மலர் அணவிக் கூர்ந்தது குணதிசை மாருதம் வீச –
அரி என்ற பேர் அரவம் கேட்டு எழுந்து இருந்து சடக்கென காலிக கர்மத்தைச் செய்து வழி நடத்துமவர்களைத் தேடித் காணாமையால்
சர்வோ திக்கமாக நோக்கிக் கூப்பிட்டு நாலடி தோன்றின வழியே நடந்து வர கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைய
ஜன பதங்கள் ஸ்பஷ்டங்களாகத் தோற்றக் கண்டு நேற்று நின்ற நிலைக்கு இப்படியும் ஒரு நல் விடிவு -வெளி நாடு -காணப் பெற்றதே
என்று போர ஆச்சர்ய உக்தராய் -அங்கே ஒரு தோப்பும் கிணறும் நாலிரண்டு பேருமாய் நிற்கக் கண்டு இவரும்
எத்தேசம் எவ்வூர் என்று அவர்களைக் கேட்க -அவர்களும் இது என்ன ப்ராஹ்மணா -புண்ய கோடி விமானம் முன்னே நிற்கத் தெரியாதோ என்ன
இவரும் அது கேட்டு ஸந்துஷ்டாராய் ராவணவதம் கேட்ட பிராட்டியைப் போலவும்
த்ருஷ்டா சீதா என்ற வார்த்தையைக் கேட்ட பெருமாளையும் போலேயும் –
மது வனத்தில் புகுந்த திருவடியைப் போலவும் –
தத் க்ஷணத்தில் கர்த்தவ்யதா மூடராய் அவர்களை பெருமாளும் பிராட்டியாகவுமாய் நினைத்து
கிருஷ்ணாவதார ஸுலப்யத்தை நினைத்து எத்திறம் என்ற ஆழ்வாரைப் போலே மோஹித்துக் கிடந்தார் –

பின்பு -சநைராஸ் வாசிதஸ் ஸ்வயம் -என்னும்படியே தன்னிலே வ்யாமோஹம் தெளிந்தவாறே –
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகே -என்னும்படியே கூடத்திரிந்த அர்ஜுனனைப் பிரமிப்பித்தால் போலவும்
என்னையும் நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து -உருக்காட்டாதே ஒழிப்பதே -என்று பலவகை சொல்லிப் புலம்பித்
தம்மிலே உள்ளம் தேறி ஆனந்த நிர்ப்பரராய் பெரிய ராஜ மார்க்கத்தாலே சென்று வையமாளிகை ஏறி-
தென்னத்தியூர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் -என்னும்படி -திருப் பொலிந்த சேவடிகளைச் சேவித்து
எழுவது தொழுவதாய் ஆனந்தாஸ்ருக்கள் பனிப்ப புளகீக்ருத காத்ரராய் ஆனந்தித்து அவன்
அந்தரத்தானம் பண்ணினதின் கருத்து அறிந்து அச் சாலைக் கிணற்றில் பேர் அருளாளர் திரு ஆராதனத்துக்கு உதவத்
திரு மஞ்சனம் கொண்டு வந்து சமர்ப்பித்துப் போரா நின்றார் –

அங்கே யாதவ பிரகாசனும் திரளுமாக இவர்கள் வரும் அளவும் நிற்க அவ்வளவில்
ஸ்ரீ கோவிந்த பட்டர் வர வந்தீரோ இளையாழ்வார் எங்கே என்று கேட்க அவரை நான் கண்டிலேன் என்ன
அவரும் தன் சமீப வர்த்திகளைப் பார்க்க விட அவர்களும் தேடித் பார்த்துக் காணாமையாலே –
ஐயோ காட்டிலே என்ன தீங்கு வந்ததோ -என்று சர்வரும் துக்காகுலராய் முன்னே நடந்து பிரயாண கதியில் போய்
கங்கா தீரத்தை அடைய கங்கையிலே மாக ஸ்நானம் பண்ணா நிற்க –
ஒரு நாள் கோவிந்த பட்டர் அகர்மஷண ஸ்நானம் பண்ணுகிற போதிலே ஒரு லிங்கம் கையிலே வந்து சேர விஸ்மிதராய்
இது என் என்று யாதவ பிரகாசனுக்குக் காட்ட போர ப்ரீதனாய் நீர் தெய்வஞ்ஞர் ஆகையால் கங்கா ஸ்நான பலம் கை வந்தால்
போலே கங்கா தரனே கை புகுந்தான் என்று யாதவ பிரகாசனும் இவர் இடத்தே விசேஷ பிரதிபத்தி உக்தனாக எல்லாரும்
லிங்கம் கை சேர்ந்ததுவே நிரூபகமாக இவருக்கு உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்று பேரிட்டு அழைக்கத் தொடங்கினார்கள் –
யாதவ பிரகாசனும் கங்கா ஸ்நானம் பண்ணி மீண்டு ஜெகந்நாதம் அஹோபிலம் வழியாக வர
உள்ளங்கை கொணர்ந்த நாயனாரும் இந்த லிங்கத்தை ஒரு உசித ஸ்தலத்தில் ப்ரதிஷ்டிப்பித்து வருகிறேன் என்ன
யாதவ பிரகாசனும் அப்படியே செய்யும் என்று இவரை மார்க்க மத்யே அனுப்பி விட்டுப் பெருமாள் கோயில் ஏறப் போந்தான் –

பின்பு உள்ளங்கை கொணர்ந்த நாயனாரும் தம் ஜென்ம பூமியான மழலை மங்கலத்தில் சென்று அங்குள்ள அசேஷ வித்வன்
மஹா ஜனங்களையும் திரட்டி ஸ்வ கரஸ்த லிங்கத்தை அங்கே ப்ரதிஷ்டிப்பித்து தத் பக்தராய் இருக்கிற அளவிலே
காளஹஸ்தி நாதன் இவர் இருப்புக்கு விரும்பி நீர் நம் பக்கல் வந்து இருக்க வேணும் என்று நாயனாருக்கு ஸ்வப்னம் காட்டித்
தன் ஸ்தானத்தார் ஸ்வப்னத்திலும் -உள்ளங்கை கொணர்ந்த நாயனாரை அழைத்துக் கொண்டு வாருங்கோள் என்று ப்ரேரிக்க-
அப்படியே அனைத்துக் கொத்தில் உள்ளாரும் மழலை மங்கலத்தில் வந்து இவரைப் பலவகை பஹு மானம் பண்ணி
அழைத்துக் கொண்டு போய் ஸ்தான நிர்வாஹத்துக்கு வேண்டின இலச்சினை மோதிரமும் கொடுத்து
இவரைத் தங்களுக்கு முக்யராக இவரும் தத் பக்தி உக்தராக அங்கே இருந்தார் –

அநந்தரம் யாதவ பிரகாசனும் பெருமாள் கோயிலிலே வந்து இளையாழ்வாரைக் கண்டு ஆச்சர்யப்பட்டு மிகவும் சந்தோஷித்து
விந்திய பிரதேசத்தில் உம்மைக் காணாமையாலே அந்யதா சங்கை பண்ணி கனக்க நிர்வேதப் பட்டு இருந்தோம் –
இவ்வளவு காணப் பெற்றதே என்ன -இவரும் வழி தப்பிக் காணாமல் அகன்று போய் வில்லி வ்யாஜேன போந்த விருத்தாந்தத்தை
ச விஸ்தாரமாகச் சொல்ல அவனும் கேட்டு இவர் நடை லோகாதீதமாய் இருந்தது என்று நினைத்து ஸூ ப்ரீதனாய்
ஸ்வ கோஷ்ட்டியில் கூட்டிக் கொண்டு கிரந்தத்தை நடத்தா நிற்க

அவ்வளவில் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியின் நின்றும் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி
ஸ்ரீ நம்பெருமாளைத் திருவடி தொழுது ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளிலே சேவித்து நிற்க ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ பெருமாள் கோயில்
விசேஷம் கேட்டு அருளும் போது ப்ராசங்கிகமாக யாதவ பிரகாசன் என்பான் ஒரு ஏக தண்டி சந்நியாசி பக்கல்
ஸ்ரீ பெரும் பூதூர் இளையாழ்வார் என்று ஒருவர் வேதாந்தம் வாசியா நிற்க
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் – என்கிற ஸ்ருதி வர அவன் அதுக்கு வ்யாவ்ருத்தி தோன்ற அர்த்தம் சொல்ல
இளையாழ்வாரும் குண யோகம் சொல்லலாய் இருக்க வ்யாவ்ருத்தி சொல்லல் சேராது என்ன அவனும் ஹூங்காரம் பண்ணினான் –
பின்னையும் ஒரு நாள் இளையாழ்வார் அவனுக்கு அப்யஞ்சனம் இடும் போது தஸ்யயதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷிணீ-
என்கிறதுக்கு அநுசித அர்த்தம் சொல்லக் கேட்டு கிலேசிக்கும் போது சோக அஸ்ரு அவன் தொடையில் விழ
அது நெருப்புப் பொறி பட்டால் போலே வேக அவனும் பதறி இவர் முகத்தைப் பார்த்து கிலேச ஹேது ஏது என்ன இவனும்
ஸூர்யனைக் கண்டு அப்போது அலர்ந்த கமலம் போலே இருக்கும் பரம புருஷன் திருக் கண்கள் என்று இங்கனே யோஜனை இருக்க
அபார்த்தம் கேட்டவாறே கிலேசமாயிற்று என்றார் -என்ற இந்த வ்ருத்தாந்தங்களை ச விஸ்தாரமாக விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ ஆளவந்தார் கேட்டருளி
அசந்த ஏவாத்ரஹி சம்பவந்தி தத்ரை வலாபஸ் ஸரஸீரு ஹாணாம் -என்கிறபடியே இந்தளத்தில் தாமரைப் பூத்தால் போலே
இவ்விபூதியிலே இப்படி ஒரு மஹாநுபாவன் உண்டாக்கப் பெற்றதே என்று போர ப்ரீதராய் அப்பொழுதே அவரைக் காண வேணும்
என்ற பேராசையோடே முதலிகளும் தாமுமாகப் புறப்பட்டு ஸ்ரீ நம்பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து அவர் அனுமதி கொண்டு
எழுந்து அருளி பயண கதியில் ஸ்ரீ திருக் கோவலூர் வழியாக வந்து ஆழ்வார் நாயனாரையும் திருவடி தொழுது
புரீணாம் அபி ஸர்வாசாம்ஸ்ரேஷ்டா பாப ஹராஹிசா –நாம்நா காஞ்சீதி விக்யாதா புரீ புண்ய விவர்தநி –என்று சொல்லப்படுகிற
மஹாத்ம்யத்தை உடைத்தான ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருள -ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் ஸ்வ ஆச்சார்யரான
ஸ்ரீ ஆளவந்தார் எழுந்து அருளினார் என்று கேட்டு மிகவும் சந்தோஷத்துடன் எதிர் கொள்ள எழுந்து அருள அங்குள்ள
ஸ்ரீ வைஷ்ணவர்களும் வரம் தரும் பெருமாள் அரையரும் ஸ்ரீ சடகோபனும் தீர்த்த பிரசாதங்களும் கொண்டு
அதி சம்பிரமத்துடன் எதிர் கொள்ள ஸ்ரீ ஆளவந்தாரும் மிகவும் ஸந்துஷ்டராய் சாஷ்டாங்க பிரணாமம் பண்ணித்
தீர்த்த பிரசாதங்களை ஸ்வீகரித்து அருள

திருக் கச்சி நம்பியும் மிகவும் உகப்போடே திருவடிகளிலே அடைவு கெட விழுந்து சேவிக்க ஸ்ரீ ஆளவந்தாரும் அதி ப்ரீதியுடனே
அவரை முடி பிடித்து எடுத்து -ஸ்ரீ கஜேந்திர தாஸரே-ஸ்ரீ பேர் அருளாளருக்கு அந்தரங்கமான திரு ஆலவட்ட கைங்கர்யம்
அவிச்சின்னமாக நடந்து வருகிறதோ -என்ன அவரும் வாய் புதைத்து -தேவரீருடைய கிருபையாலே ஸ்ரீ பேர் அருளாளர் கண்டு அருளுகிறார் –
என்று விண்ணப்பம் செய்ய பின்பு ஸ்ரீ நம்பியும் கூட்டிக் கொண்டு -உலகு ஏத்தும் ஆழியான் அத்தி யூரான்-என்கிற
அர்த்தி தார்த்த பரிதான தீஷிதரான ஸ்ரீ பேர் அருளாளரை சேவிப்பதாகப் புகுந்து ப்ரதமம்
ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ பெரும் தேவியாரைத் திருவடி தொழுது ப்ரதக்ஷிணமாக எழுந்து அருளா நிற்க
உதக் பஸ்சிம பாகஸ்தவம் வல்மீகம் மஹதோகிர பூஜ நீயஸ் சதத் ராஸ்தே சேஷ பண ப்ருதாம் வர -என்று சொல்லுகிற
திருப் புற்றின் சமீபத்திலே திருவனந்த ஆழ்வானையும் அதுக்குக் கிழக்காகக் கரிய மாணிக்கத்து ஆழ்வாரையும் சேவித்து
ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளும் எழுந்து அருளி இருக்கிற அளவிலே

யாதவ பிரகாசனும் திரளுமாக ஸ்ரீ பேர் அருளாளரை சேவித்து ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு வாரா நிற்க
ஸ்ரீ ஆளவந்தாரும் இவர்களில் இளையாழ்வார் யார் என்று ஸ்ரீ நம்பியைக் கேட்டு அருள அவரும்
சிவந்து நெருக்கி வலியராய்-ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா -என்கிறபடியே ஆஜானுபாஹுவாய் நடுவே வருகிறவர்
என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ ஆளவந்தாரும் சந்தோஷத்தால் ப்ரசன்ன மதுர கம்பீர நயனங்களாலே
பூயோ பூயோ செவ்வரியோடே அவரைப் பார்த்து அருளி -ஆம் முதல்வன் -இவன் என்று விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி

பெருமாளை நோக்கி -யஸ்ய பிரசாத கலயாபதிரஸ் ஸ்ரருனோதி பங்கு ப்ரதாவதி ஜவேநச வக்திமூகே —
அந்த பிரபஸ்யதி ஸூதம் லபதேச வந்த்யா தந்தேவ மேவ வரதம் ஸ்ரணங்கதோ அஸ்மி -என்றும்
தாம் வேண்டும் காமமே காட்டும் கடிது -என்றும் சொல்லுகிறபடியே அவ்வவருடைய இஷ்ட காமங்களைத் தந்து
அருளுகிறவராகையாலே அடியேனுக்கும் இளையாழ்வார் ஆகிற மஹாநுபாவர் நம் தர்சன ப்ரவர்த்தரகராம் பண்ணி
விசேஷ கடாக்ஷம் செய்து அருள வேணும் என்று தேவரீரைச் சரணம் புகுந்தேன் என்று விண்ணப்பம் செய்து
பின்பு ஹஸ்தி கிரியின் மேலே எழுந்து அருளி ஸ்ரீ பேர் அருளாளரையும் சேவித்துத் தீர்த்த பிரசாதமும் ஸ்வீ கரித்து அருளி
ஸ்ரீ திருக் கச்சி நம்பியையும் நிறுத்தி அப்போது இவருக்கு ஒரு நல் வார்த்தை சொல்ல அவசரம் காணாமையாலே
மீண்டு முதலிகளும் தாமுமாக ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளினார்

அநந்தரம் யாதவ ப்ரகாசனும் தம் பக்கல் ஸ்ரோதாக்களுடன் வேதாந்த வ்யாக்யானம் பண்ணிக் கொண்டு இருக்கச் செய்தே
அந்த ராஜ்யத்தில் ராஜாவின் பெண் பிள்ளையை ப்ரஹ்ம ரஜஸ்ஸூ பிடிக்க இவ்விடங்களில் இத்தைப் பரிஹரிக்கத் தக்க
மந்திரவாதிகள் உண்டோ என்று ஆராய யாதவ பிரகாசன் போர மந்திரவாதியாய் இருக்கும் என்று சிலர் சொல்லக் கேட்டு
ராஜாவும் அவனுக்கு இச் செய்தியை அறிவியுங்கோள் என்று ஆள் போக விட ராஜ மனுஷ்யர் வந்து இவனுடன்
ராஜாவின் பெண் பிள்ளையை ப்ரஹ்ம ரஜஸ் ஸூ பிடித்தது என்று ராஜா உமக்கு அறிவிக்கச் சொன்னார் என்று சொல்ல
இவனும் யாதவ பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று ப்ரஹ்ம ரஜஸ் ஸூ க்குச் சொல்லுங்கோள் என்று
வந்தர்வர்களுடன் சொல்லிப் போக விட அவர்களும் போய் யாதவ பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று சொன்னவாறே –

அவன் தன்னை அங்கு நின்றும் போகச் சொன்னேன் என்று சொல்லுங்கோள் என்று அந்த ப்ரஹ்ம ரஜஸ் ஸூ சொல்ல
ராஜ மனுஷ்யர் இச் செய்தியை யாதவ பிரகாசனுக்கு அறிவிக்க அவனும் மிகவும் குபிதனாய்த் தானும் திரளுமாகப் போய்
ராஜ கோஷ்டியிலே மஹா மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு ப்ரஹ்ம ராஜஸ்ஸின் அருகில் நின்று முஷ்டி பிடிக்க
அதுவும் முடக்கின காலை நீட்டி -அடா யாதவ பிரகாசா நீ ஜெபிக்கிற மந்த்ரம் நான் அறியேனோ -என்று அந்த மந்திரத்தையும் சொல்லி –
நான் இந்த மந்த்ரத்துக்கும் உனக்கும் போவேனோ –நீ உன் ஜென்மமும் அறியாய்-என் ஜென்மமும் அறியாய் -என்ன
யாதவ பிரகாசனும் ஆகில் நீ பிரானுமாய் சர்வஞ்ஞனுமாய் இருந்தாய் -என்னுடைய ஜென்மம் ஏது உன்னுடைய ஜென்மம் ஏது என்று கேட்க –
அதுவும் உன்னுடைய ஜென்மம் ஸ்ரீ மதுராந்தகத்தில் எரிக் கரையில் இருப்பதோர் புற்றில் ஒரு உடும்பாய் இருப்புதி-
ஸ்ரீ கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ திரு மலைக்கு எழுந்து அருளும் போது அங்கே நீராடி அமுது செய்கிற இடத்தில் சிந்தின
பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் ஸ்வீகரித்தாய்-அத்தாலே உனக்கு இந்த வித்வத் ஜென்மம் உண்டாய்த்து –
நான் ப்ராஹ்மண வர்ணத்தில் பிறந்து யாகம் பண்ண அதிலே மந்த்ர லோபம் கிரியா லாபங்கள் பிறந்து அத்தாலே ப்ரஹ்ம ரஜஸ் ஸூ ஆனேன் –
என்று சொல்ல -ஆகில் நீ யாருக்குப் போவுதி- என்ன –
ரஜஸ் ஸூவும் உன் பக்கலிலே வாசிக்கிறவர்கள் ஒருவர் நித்யஸூரிகளில் தலைவராய் இருப்பார் கான் -என்ன
அவர் யார் -என்று கேட்க அதுவும் இவர் என்று இளையாழ்வாரைக் காட்டி அவரைத் தண்டன் இட்டு
இவர் போகச் சொன்னால் போகிறேன் என்ன
ஆகில் இளையாழ்வீர் நீர் இத்தைப் போகச் சொல்லும் என்று அவன் சொல்ல இவரும் நீ இவளை விட்டுப் போ என்ன
அதுவும் உம்முடைய திருவடித் தாமரைகளை என் தலை மேலே வைத்தால் ஒழியப் போகேன் என்ன
இவரும் உகந்து அப்படியே செய்து அருள அதுவும் ஸந்துஷ்டமாய்ச் சிரித்துக் கும்பிட்டு எழுந்திருந்து போகிறேன் என்ன
இளையாழ்வாரும் ஆகில் நீ போகிறதற்கு அடையாளம் காட்டிப் போ என்ன
அதுவும் இவ்வரசில் நான் இருப்பேன் இப்போது இவ்வரசை முறித்துக் கொண்டு போகிறேன் என்று சொல்லி
அவ்வரசை முறித்துக் கொண்டு போய்த்து-
யாதவ பிரகாசனும் இளையாழ்வாரை மிகவும் ஸ்லாகித்து மீண்டு தன்னுடைய மட்டுமே வந்து புகுந்தான்

அநந்தரம் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கோயிலிலே ஒரு நாள் வியாக்கியான சமயத்திலே -\
இலங்கத்திட்ட புராணத்தீரும் -என்கிற பாட்டு பிரஸ்த்துதமாக -அப்போது நமக்குத் பின்பு இத்தரசனம் நிர்வஹிப்பார் ஒருவரையும்
காணப் பெற்றிலோமே என்கிற விசாரத்தில் இளையாழ்வார் பக்கல் திரு உள்ளமாய் –
இப்போது இளையாழ்வாரை யாதவ பிரகாசனோடு உறவு அறுத்து நம் பக்கல் சேர்க்கும் விரகு உண்டோ என்று அருளிச் செய்து
பின்னையும் ஸ்ரீ பேர் அருளாளரைக் குறித்து நம் பிரபத்தியை சபலமாக்கி அருள வேணும் என்று மிகவும் பிரார்த்தித்து அருளினார்
பின்பு யாதவ பிரகாசனும் மீளவும் ஒரு நாளும் கிரந்தம் நடத்தா நிற்கச் செய்தே –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -நேஹா நாஸ்தி கிஞ்சன -இத்யாதி வாக்கியங்களை அத்வைத பரமாக யோஜித்து
ஜீவ ப்ரஹ்மண ஐக்கியம் ப்ரதிபாதிக்க இவரும் அத்தை நிராகரித்து அவ்வாக்கியங்களை விசிஷ்டாத்வைத பரமாக யோஜித்து
அர்த்தம் சொல்ல அவனும் அதி குபிதனாய்-இன்று தொடங்கி என்னிடம் வாசிக்க வேண்டாம் –
உம்முடைய புத்திக்குத் தகுதியான இடத்தே போய் கிரந்தம் கேளும் என்று போகச் சொன்னான்

இவரும் அதி ப்ரீதியோடே மீண்டு தம் திருமாளிகையிலே வந்து திருத் தாயாருக்கு இச் செய்தியைச் சொல்ல
அவரும் வாரீர் பிள்ளாய் -இதி வரைக்கும் நீர் படித்தது போதும் -ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ பேர் அருளாளருக்கு அந்தரங்கராய இருக்கிறார் –
நீர் அவரை சேவித்து அவர் அருளிச் செய்வதைச் செய்து கொண்டு இரும் என்று சொல்ல –
அப்படியே இளையாழ்வாரும் திருக் கச்சி நம்பியை சேவித்து க்ருதார்த்தராய் -க்ரியதாம் இதி மாம் வத -என்றால் போலே
அடியேன் செய்யும் கைங்கர்யத்தை நியமித்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ பேர் அருளாளருக்கு சாலைக்கு கிணற்று தண்ணீர் உகப்பாய் இருக்கும் -திரு ஆராதன காலத்துக்கு உதவும்படி
முன்பு போலே பிரதி தினம் ஒரு குடம் திரு மஞ்சனம் கொண்டு வந்து சமர்ப்பியும் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ இளையாழ்வாரும் அப்படியே தப்பாமல் அந்தக் கைங்கர்யம் செய்து கொண்டு இரா நிற்க

அவ்வளவில் ஸ்ரீ ஆளவந்தார் திருமேனியில் நோவு சாத்தி எழுந்து அருளி இருக்கச் செய்தே
திருவரங்கப் பெருமாள் அரையரைப் புருஷகாரமாகக் கொண்டு ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பியும் ஸ்ரீ பெரிய நம்பியும்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் தண்டனிட்டு -அடியோங்களுக்குத் தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் ப்ரசாதித்து
அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகள் இருவரையும் திரு உள்ளம் பற்றி உங்களுக்குத் தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் இது –
ஸ்ரீ கோயில் ஆழ்வாரே உங்களுக்கு உயிர் நிலை -உங்களுக்குத் தஞ்சம் என்று புத்தி பண்ணிப் போருங்கோள்-என்றும் –
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாக சேவித்து இருக்கும் ஸ்ரீ திருப் பாணாழ்வார் விக்ரஹத்தைப்
பாதாதி கேசாந்தமாக சேவித்துக் கொண்டு போருங்கோள் -என்றும் திரு உள்ளமதாக –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் முதலான முதலிகள் மூவரையும் குறித்து இதுக்கு பிரமாணமாக
திருவேங்கடமுடையான் உயிர் நிலை அறிந்து போரும் குறும்பு அறுத்த நம்பியையும்
ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாள் உயிர் நிலை அறிந்து ஸ்ரீ திருக் கச்சி நம்பியையும்
ஸ்ரீ பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்து போரும் ஸ்ரீ திருப் பாணாழ்வாரையும் –
ஸ்ரீ திருப் பாணாழ்வார் உயிர் நிலை அறிந்து போரும் ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் காட்டி அருளி
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரைப் பார்த்து அருளி
நீர் ஸ்ரீ பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்து சேவித்துப் போருகிற விக்ரஹமே அடியேனுக்கு
உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போருவன் -என்று அருளிச் செய்ய –

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் ஸ்ரீ ஆளவந்தார் திருப்பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து
தேவரீர் நித்ய விபூதியில் சென்று ஸ்ரீ பரமபத நாதனை சேவித்து இமையாத கண்ணராய்க் கொண்டு
போரத் திரு உள்ளம் பற்றி அருளிற்றோ என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ ஆளவந்தாரும் அவரைக் குறித்து நீர் பர ஸம்ருத்திக்கு உகந்து அத்யவசித்து இரும் என்று அருளிச் செய்து –
பின்னையும் ஸ்ரீ ஆளவந்தார் இம்முதலிகள் மூவரையும் திரு உள்ளம் பற்றி -ஒருவன் பிரபன்னனால் பகவத் அதீனமான
ஆத்ம யாத்திரையிலும் கர்ம அதீனமான தேஹ யாத்திரையிலும் அந்வயம் உண்டு என்று இருந்தான் ஆகில்
ஆத்ம சமர்ப்பணம் குலைந்து நாஸ்திகனாய் விடும் –
ஆகையால் த்ரிவித கரணங்களாலும் உபய யாத்ரையிலும் அந்வயம் இல்லை –
நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம் -தம் பக்கல் பேற்றுக்கு நம என்னாதவர்களை-
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்பது ஒரு ஓவ்தார்ய விசேஷம் உண்டு –
நாரங்களுக்கு நைரந்தர்ய வேஷம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கிறபடியே
நிர்ப்பரங்களாய் இருக்கை என்று இராதே
தம் பேற்றுக்கு த்வரிக்கையும் ஸ்வரூப ஹானி –
எம்பெருமானே ரக்ஷகன் என்று இருக்கையும் ஸ்வரூப ஹானி –
எம்பெருமான் ரஷ்யன் என்று இருக்கையும் ஸ்வரூப ஹானி –
இப்படி இருந்தானாகில் அநந்யார்ஹ சேஷத்வத்துக்கும் ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தத்துக்கும் சேராது என்று அருளிச் செய்ய –

மீளவும் இவர்கள் ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு அடியோங்களுக்குப் பற்றும் உபாயம் ஏது என்று கேட்க –
ஸ்ரீ ஆளவந்தாரும் நீங்கள் அடியேனை உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போருங்கோள் என்கை அடியேனுக்கு ஸ்வரூப ஹானி –
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே-என்கிற அதுவே
உங்களுக்கு உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போருங்கோள் -என்று அருளிச் செய்ய
முதலிகளும் திரு உள்ளத்தில் முசித்து இருக்க ஸ்ரீ ஆளவந்தாரும் இவர்களைக் கண்டு நீங்கள் முசிக்க வேண்டா –
உங்களுக்கு திருமந்த்ரார்த்தம் போக மண்டபம் –
சரம ஸ்லோகார்த்தம் புஷ்ப மண்டபம் –
மந்த்ர ரத்நார்த்தம் தியாக மண்டபம் -இதற்கு பிரமாதாக்கள் திருப்பாணாழ்வார் முதலானார்கள் என்று அருளிச் செய்தார்

இத்தை ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் திரு உள்ளம் பற்றி -தேவரீர் அவதாரம் தீர்த்தம் ப்ரசாதித்து போம் அளவில்
கிருமி கீடாதிகளுக்கு ஓர் அழிவு வந்தால் சேதம் இல்லை என்று அருளிச் செய்ய
ஸ்ரீ ஆளவந்தாரும் அவ்வார்த்தையைக் கேட்டுப் பராக்கடித்து ப்ரத்யுத்தரம் அருளிச் செய்யாமல் இருக்க
இவ் வார்த்தையை முதலிகள் இருவரும் திரு உள்ளம் பற்றி ஸ்ரீ ஆளவந்தார் வியோகத்தில்
நாம் பிராண தியாகம் பண்ணக் கடவோம் -என்று நிச்சயித்து இருக்கிற அளவில்

பெரிய பெருமாள் திரு ஓலக்கத்திலே இவ் விசேஷம் பிறக்க ஸ்ரீ பெரிய பெருமாளும்
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி முதலாக அருளப் பாடிட்டு –
ஸ்ரீ ஆளவந்தார் வியோகத்திலே நீங்கள் அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில் நம் ஆணை என்று ஆஞ்ஞாபித்து
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் திருக் கையிலே அவர்களைக் காட்டிக் கொடுத்து அருள அவரும் முதலிகள் இருவரையும்
கையைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் சென்று இவ் விசேஷத்தை விண்ணப்பம் செய்ய
அவரும் இதைக் கேட்டு நம் பேற்றுக்கு சஹியாதவர்கள் ஸ்ரீ பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கும் நடுவே
திரு ஆராதனம் கண்டு அருள சஹியாதவர்கள் என்று அருளிச் செய்து நம்முடைய வியோகத்தில் அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில்
ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ மணக்கால் நம்பி முதலான ஸ்ரீ பெரிய பெருமாள் உகந்த முதலிகளுடைய திரு உள்ளத்தை
மறுத்தவர்கள் ஆவுதிகோள் என்று தம்முடைய திவ்ய ஆஜ்ஜை இட
இவர்களும் திரு உள்ளத்திலே நொந்து இருக்கும் அளவிலே ஸ்ரீ ஆளவந்தாரும் –

பகவத் பாகவத விஷயங்களிலே தரமிடாதே பாகவத விஷயத்திலே பகவன் நோக்கானவனாய்ப் பகவானைக் குரு பரம்பராதியாகத்
திருவடி விளக்குமா போலே பாகவத விஷயத்திலும் தன் சத்தை மாண்டு ஆச்சார்ய விக்ரஹத்தை அனுசந்தித்து தீர்த்தம் கொண்டு போருகையும்
அவர்களுக்குத் தீர்த்தம் கொடுக்கும் இடத்தில் அர்த்த காம பரவசர் இன்றிக்கே தாங்களும் நேரே ஆச்சார்யனை நோக்கி
குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தை அனுசந்தித்துக் கொடுக்கையும் இருவருக்கும் உபாதேயம் –
ஞானாதிக விஷயமுமாய் சமூகமுமாய் சென்ற அளவிலே இருவரும் அர்த்த காம பரவசராய் பிராகிருத சரீரத்தில் நோக்காய்
சமூகத்தில் சென்ற முதலிகளை இகழ்ந்து திரு உள்ளம் கன்றுமாகில் ஆச்சார்யனே யாகிலும் இவர்களுக்கு
அத்தீர்த்தம் உபாதேயம் அன்று என்று அருளிச் செய்ய

இம் முதலிகளும் அவ்வார்த்தையைத் திரு உள்ளம் பற்றி இருக்கிற அளவிலே
ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளைப் பார்த்து உங்களுக்கு சரமார்த்தம் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே
ஒரு கருமுகை முகிழ் வெடிக்க வைக்கையும்
ஆச்சார்ய விஷயத்தில் பிரதம தசை மத்யம தசைகளைச் சரம தசையாக அனுசந்தித்துப் போருகையும்
உத்தாரக பிரதிபக்தி என்று அருளிச் செய்து
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைத் தண்டன் இட்டு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியையும் ஸ்ரீ பெரிய நம்பியையும்
அவர் கையிலே காட்டிக் கொடுக்க ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் அவர்களைக் கைக் கொண்டு நீங்கள் ஆச்சார்ய விஸ்லேஷத்தில்
அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில் உங்களுக்கு ஒரு தேச விசேஷமும் இன்றிக்கே நித்ய ஸூரிகள் திரளிலும் புகுரப் பெறாதே இழப்புதிகோள்
என்று அருளிச் செய்ய ஸ்ரீ ஆளவந்தாரும் இதைக் கேட்டு திரு உள்ளம் உகந்து
உங்களுக்கு ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையருடைய விக்ரஹமே உபாதேயம் என்று புத்தி பண்ணிப் போருங்கோள் -என்று அருளிச் செய்ய
அவர்களும் அப்படியே புத்தி பண்ணி இருந்த அளவில் ஸ்ரீ ஆளவந்தார் திரு மேனியில் நோவு ஆறி ஆரோக்யம் உண்டாய் நீராடி
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும் உத்சவமாய்ப் பெரிய திரு மஞ்சனம் கண்டருளி உடுத்து முடித்துச் சாத்துப்படி சாத்தி
அங்குள்ள ஸ்ரீ ரெங்க மா மறையோர் சேவிக்க அமுது செய்து அருளித் திருத் திரை நீக்கி இருக்கிற அளவில்

ஸ்ரீ ஆளவந்தார் திரு ஒலக்கத்து ஏற எழுந்து அருளி க்ருதாஞ்சலி புடராய் சேவித்து நிற்க -ஸ்ரீ பெரிய பெருமாளும் நினைவு அறிந்து
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரை அருள் பாடிட்டு அருள அவரும் சேவிக்கும் அடைவு ஒழிய
சூழ் விசும்பு அணி முகில் சேவிக்க -திரு ஓலக்கம் அடைய இது என் என்று விஸ்மயப்பட ஸ்ரீ பெரிய பெருமாள் நெற்றி மாலை நழுவி விழ
ஸ்ரீ நம்பியார் எடுத்து ப்ரசாதிக்கிறோம் என்று இருக்கிற அளவில் ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் சடக்கென எடுத்து
ஸ்ரீ ஆளவந்தாருக்கு ப்ரசாதித்து அருள -ஸ்ரீ ஆளவந்தாரும் திரு உள்ளம் உகந்து நிற்க –
ஸ்ரீ அரையரும் உம்முடைய நினைவு சித்தித்ததே என்ன -ஸ்ரீ பெருமாளும் தீர்த்தம் பிரசாதம் ஸ்ரீ சடகோபன் ப்ரசாதித்து விடை கொடுத்து அருள
ஸ்ரீ ஆளவந்தாரும் திரு மடத்து ஏறச் சென்று ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பெரிய நம்பி முதலான
முதலிகள் எல்லாரையும் தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி தண்டன் இட்டு சர்வ அபராதங்களையும் பொறுத்துக் கொள்ள வேணும்
என்று ஷமை கொண்டு எழுந்து இராமல் நிற்க ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் உமக்கு ஒரு அபசாரம் உண்டோ என்று
திருமுடி பிடித்து எடுக்க எழுந்து இருந்து பின்பு அமுது செய்து இவர்களுக்கு பூர்வம் போலே நல் வார்த்தை அருளிச் செய்து கொண்டு இருக்க

அவ்வளவில் ஸ்ரீ ஆளவந்தார் திரு மேனியில் நோவு சாத்தினார் என்று கேட்டு இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில் நின்றும் ஸ்ரீ கோயில் ஏறச் சென்று ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளிலே சேவித்து இருக்க
ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ பெருமாள் கோயில் விசேஷம் கேட்டு ஸ்ரீ இளையாழ்வார் செய்கிறது என் என்று கேட்டருள
அவர்களும் இப்போது ஸ்ரீ இளையாழ்வார் யாதவ பிரகாசன் இடத்தில் சீற்றம் பிறந்து அவனைத் துறந்து ஸ்ரீ பேர் அருளாளர் பக்கல்
ப்ரவணராய் நில்லா நின்றார் என்று விண்ணப்பம் செய்ய அத்தை ஸ்ரீ ஆளவந்தார் கேட்டருளி உகந்து
ஸ்ரீ பேர் அருளாளர் நம்முடைய ப்ரபத்தியை சபலமாக்கி அருளினார் என்ற பெரிய ப்ரீதியோடே ஸ்ரீ பேர் அருளாளன் பெருமையை பேச
வல்லவராய்க் கொண்டு ஸ்தோத்ரத்தை விண்ணப்பம் செய்து ஸ்வ அபிமான அந்தர்பூதரான ஸ்ரீ பெரிய நம்பி திருக் கையிலே கொடுத்து
அவரைப் பார்த்து ஸ்ரீ இளையாழ்வார் இப்போது யாதவ பிரகாசன் இடத்தே சேராதே அவனை விட்டு ஸ்ரீ தேவ பெருமாள் பக்கலிலே
ப்ரவணராய் இரா நின்றார் என்று கேட்டோம் இக்காலத்தில் நீர் அங்கு ஏறப் போய் அவரை நம்மோடே சேர்க்க வேணும் என்று
நியமித்து அருள அவரும் அப்படியே சடக்கெனப் புறப்பட்டு ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளினார் –

அநந்தரம் ஆளவந்தார் பின்னையும் நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்து அருள அருகில் இருந்த முதலிகளும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு உள்ளம் ஏதோ என்று தங்களில் சிந்தித்து இருக்கிற அளவில்
ஸ்ரீ பேர் அருளாள பெருமாளுடைய அயன் கண்ட திரு வைகாசித் திரு நாளில் அவப்ருதத்தின் அன்று ஸ்ரீ ஆளவந்தாரும் நீராடி
ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழச் சென்று உத்தம சந்தி அமுது செய்து திருத் திரை நீக்கின அளவிலே தண்டம் சமர்ப்பித்து
திருப் பாதாதி திருக் கேசாந்தமாகவும் திருக் கேசாந்த திருப் பாத்தாந்தமாகவும் ஸ்ரீ பெரிய பெருமாளை சேவித்து
திருவடிக் கீழ் திருப் பாணாழ்வாரையும் அனுபவித்து நம்பியார் ஸ்ரீ சடகோபன் தீர்த்தம் பிரசாதம் பிரசாதிக்கப் பெற்று
திருப்பதியாரும் திருத் தளிகை பிரசாதம் ப்ரசாதித்து விடை கொடுத்து அருள

ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ பாதத்து முதலிகளுடனே திருமடம் ஏற சென்று மீண்டு முதலிகளைத் தீர்த்தம் கொண்டு அமுது செய்து அருளப் பண்ணி
முஹூர்த்தம் இட்டு வைகாசி மாசம் ஆறாம் தேதி சரவண நக்ஷத்ரத்தின் அன்று அபிஜின் முஹூர்த்தத்திலே முதலிகள் சேஷமும் அங்கீ கரித்து
ஆழ்வார்களைச் சரணம் புகுந்து ஆச்சார்யர்கள் முதலிகள் ஸ்தானத்தார் முதலாக எல்லாரையும் அழைப்பித்து ஷமை கொண்டு வேண்டிக் கொள்ள
அவர்களும் ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு ஒரு அபராதம் உண்டாகில் அன்றோ உமக்கு அபராதம் உண்டாவது என்ன
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் முதலான முதலிகளை அங்குள்ள முதலிகள் திருக்கையிலே காட்டிக் கொடுத்து அருளி
ஸ்தானத்தாரைப் பார்த்து ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு ஆராதனம் திருமந்த்ர புஷ்பம் காலா காலத்தில் நடத்திக் கொண்டு போருங்கோள் –
ஆச்சார்யர்கள் முதலிகள் தேசாந்திரிகள் முதலானோரை அரவணைத்துக் கொண்டு போருங்கோள் என்று காட்டிக் கொடுத்து அருள
அவர்களும் அப்படியே ஆகிறது என்று அங்கீ கரித்து– இது புதுமையாய் இருந்தது என்று எல்லாரும் விடை கொடுத்துப் போக
அநந்தரம் ஸ்ரீ மணக்கால் நம்பியைத் த்யானித்துக் கொண்டு பத்ம ஆசனத்தில் யோகமாய் எழுந்து அருளி இருந்து
அவர் திருவடிகளை தம்முடைய நெஞ்சிலும் கண்ணிலும் திரு முடியிலும் ஒற்றிக் கொண்டு அவர் திருவடிகளைத் தம் முன்னே வைத்துக் கொண்டு
ப்ரஹ்ம வல்லி பிருகு வல்லி புருஷ ஸூ க்தம் அர்ச்சிராதி சூழ் விசும்பு அணி முகில் முதலாக முதலிகள் சேவிக்க
திருச் சங்கு பணிமாற சகல வாத்தியங்களும் முழங்க ஸ்ரீ ஆளவந்தார் ப்ரஹ்ம ரந்தரத்தாலே திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

ஸ்ரீ யமுனைத் துறைவரைத் திருப்பள்ளி படுத்த பிரகாரம்

ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையர் முதலான எல்லாரும் வேர் அற்ற மரம் போலே கோஷித்துக் கொண்டு விழுந்து சோகிக்க-
அங்கு உள்ளார் இவர்களைத் தேற்றி ஸ்ரீ ஆளவந்தார் திருக் குமாரரான ஸ்ரீ பிள்ளைக்கு அரசு நம்பியைக் குறித்து
இனி முன்பு நடக்கும் க்ரமத்தை செய்து அருள வேணும் -என்ன தாசிகள் வந்து திருவாசல் திரு அலகு இட்டுத் திரு நீர் பரிமாறி
ஸ்தல சுத்தி பண்ணித் திருக் காவணம் இட்டுக் கோடித்து தர்ப்பை மாலை கட்டிச் செங்கழு நீர் மாலை கட்டி பல பட்டுக்களாலும்
ஸூப்ர சாமரங்களாலும் குச்சிக்கட்டி அலங்கரித்து -திருக் காவணத்தின் நாலு வாசலிலும் கதளித் தாறு நாற்றி இளம் கமுகு கரும்பு நாட்டி
பல பலங்கள் நாற்றி நாலு வாசலிலும் கொடியாடை கட்டி சித்ர பத்ரங்களை வைத்து பூர்வ தக்ஷிண பஸ்ஸிம உத்தர த்வாரங்களிலே
பலாச அஸ்வத்த கதிர உதும்பர தோரணங்கள் நாற்றி அலங்கரித்து திருக் காவணத்தில் த்ரோண வ்ரீஹீ சொரிந்து பரப்பி –
நடுவே பூர்ண கும்பம் வைத்து நாலு கோணங்களிலும் பூர்ண கும்பங்களை வைத்து கேசவாதி துவாதச நாம உச்சாரணம்
பண்ணிக் கொண்டு துவாதச கலசங்களை பராக் ஆதியாக ஸ்தாபித்து கலசங்களுக்கு குச தூர்வா தர்ப்ப விஷ்ணு க்ராந்தி
முதலான புஷ்பங்களை இட்டு குரு பரம்பரா பூர்வகமாக த்வய அனுசந்தானத்துடன் கும்ப அர்ச்சனை பண்ணி
துவாதச நாமத்தால் கலச ஸ்தாபனம் பண்ணுவித்து பின்பு பஞ்சாம்ருத ஸ்நானம் பண்ணுவித்து ஈசான பாகத்தில் சங்கர்ஷண கும்பம் ஒழிந்த
நாலு கும்பங்களையும் கொண்டு ஸ்ரீ புருஷ ஸூக்தத்தாலே திரு மஞ்சனம் பண்ணுவித்து முதலிகள் தீர்த்தம் கொண்டு
சுருள் அமுது திருத்தி வேண்டிக் கொண்டு அவர்களை வலம் வந்து வாசல் முன்னிலை கோமயக்ருத ஸ்தலத்தின் –
ஸ்தண்டிலத்தின் -மேலே த்ரோண வரீஹி பரப்பி உலூகலமுஸலன்களை மந்த்ர பூத ஸ்நானம் பண்ணுவித்து நவ வஸ்திர
வேஷ்டனம் பண்ணி அவ்வுலூகலத்தை ஸ்தண்டிலோ பரிக்ருத வரீஹியின் மேலே வைத்து அதிலே ஹரித்ரா நிஷேபணம் பண்ணி
ஸூத்த வஸ்திர ஸூக்ல மாலா அலங்க்ருதைகளாய் சக்ர முத்ரா முத்ரிதைகளாய் வைஷ்ணவிகளான தாசிகள்
த்ரிவிக்ரமன் திரு வீதியை வலம் வந்து திரு வாசலில் ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்துக்குத் தண்டன் இட்டு ஸ்ரீ வைஷ்ணவ அநுஜ்ஜை கொண்டு
நடுவே வந்து நவ வஸ்திர வேஷ்ட்டித மேரு தைவத்யமான அம்முஸலத்தைக் கைக் கொண்டு துவாதச நாம உச்சாரணம் பண்ணி

திருச் சூர்ணமிடிக்க ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் முதலானோர் ஸ்தண்டில மத்யஸ்தமாய்
நவகண்ட ப்ருதிவ்யாகாரமாக உல்லேகநம் பண்ணி வரீஹி யுபரி ஸ்தாபிதமாய் பூமி தைவத்யமான உல்லேகநத்தில் அஷ்ட திக்குகளிலும்
திவ்ய சூர்ண திவ்ய தைல திவ்ய அநு லேபந திவ்ய மால்ய திவ்ய லாஜ திவ்ய துக்த திவ்ய ததி திவ்ய சுத்த ஜல பூர்ணங்களாய்
தர்ப்ப பவித்ராஸ் வத்த பத்ர பவித்ரிதங்களான கலசங்களை த்வய அனுசந்தானத்துடன் ஸ்தாபித்து பரமாகாச தைவத்யமான
நவ சூர்ப்பத்திலே திவ்ய நக்ஷத்ர தைவத்யமான நிஸ் துஷநவலாஜத்தை நிறைத்து பூர்வ திக்கில் வைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தீர்த்தம் கொண்ட
ஸ்ரீ பாத தீர்த்தம் நிறைந்த கும்பத்தை மேற்கே வைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பணீயமான த்ரவ்யக் கிழியை வடக்கே வைத்து
பெருமாள் சாத்திக் களைந்து வர விட்டு அருளிய திருமாலை திருப் பரியட்ட ப்ரசாதங்களையும் பொற்றளிகையிலே தன்னருகே வைத்து
ஸ்ரீ ஆளவந்தாரை தண்டன் இட்டு விமல சரம விக்ரஹத்தை நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் தேக்கிக் கொண்டு சூழ எழுந்து அருளி இருந்து
திருப்பல்லாண்டு கண்ணி நுண் சிறுத் தாம்பு சூழ் விசும்பு அணி முகில் இவைகளை ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் இசையுடன்
இயலாக அனுசந்தித்து திவ்ய ந்ருத்த கீத வாத்யத்துடனே திரு வீதியிலே திரு விருத்தத்தை இயலாக அனுசந்தித்துக் கொண்டு
வலம் வந்து திரு மடத்து வாசலிலே இயல் சாத்தி திவ்ய தைல திவ்ய சூரணங்களை சாத்தி நீராடி

பெருமாள் சாத்திக் களைந்து வர விட்டு அருளின திவ்ய அநு லேபன திவ்ய மால்ய திவ்ய பீதாம்பரங்களையும்
ஸ்ரீ ஆளவந்தாருக்கு சாத்தி அலங்கரித்து ஸ்ரீ ஆளவந்தார் திருமேனியில் சாத்திக் களைந்ததாய் தத் ப்ரசாதமாய் சேஷித்த எண்ணெய்
பிரசாதம் ஸ்ரீ சூர்ண பிரசாதங்கள் எல்லாம் ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் முதலானோர் எல்லாரும் பிரசாத்தப்பட்டு
அப்போதையில் இருப்பை நெஞ்சிலே ஸூபாஸ்ரயமாகத் தேக்கிக் கொண்டு ஸ்ரீ திருப் பாதத்தில் விழுந்து திருவடிகளைத்
திருக்கங்களிலும் திரு மார்பிலும் திரு முடியிலும் தரித்து அவர் ப்ரபத்தியை அனுசந்தித்துத் திரு மிடறு தழு தழுப்பத் திருமேனிகள் வாடத்
திரு முத்து உதிர்த்துத் திரு மூக்கு வெப்படிக்க ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய் ஆர்த்தராய் பரவசராய் கொண்டு சோகிக்க
அங்குள்ள முதலிகள் வந்து இவர்கள் திருக் கண்களைத் துடைத்து ஆஸ்வசிப்பிக்கத் தேற்ற தேறி நின்று மென்மையில் மெள்ள நடையிட்டு வந்து
பீடயா நத்திலே ஸ்ரீ ஆளவந்தாரை ஏறி அருளப் பண்ணி அனுசந்தானத்துடனே ஸ்ரீ பாதம் தாங்கிக் கொண்டு திருச் சங்கு பணியாற
ந்ருத்த கீத வாத்தியங்கள் எங்கும் முழங்க வேத பாராயணம் பண்ண அருளிச் செயல் இயல் நடக்க நடை பாவாடை இட்டு
கரும்பும் குடமும் ஏந்தி பொரியும் புஷ்ப புஞ்சமும் எங்கும் சிதற திருப்பதியில் ஸூ மங்கலிகள் மங்கள தீபம் ஏந்தி முன்னே செல்ல
இரு பக்கமும் சாமரம் இரட்ட வெள்ளை வட்டமிட தரிசனத்தில் ஸ்ரீ ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று திருச்சின்னம் பணிமாற
திருவீதிகள் தோறும் வலம் வந்து திருக் கரம்பன் துறையிலே எழுந்து அருள்வித்துக் கொண்டு போய் ஒழிந்த சங்கர்ஷண
கும்ப பூர்ண ஜலம் கொண்டு அனுசந்தானத்துடன் திவ்ய ஸ்தல ஸூத்தி பண்ணி யதி ஸம்ஸ்கார விதி யுக்தமான படிகள்
அடங்கச் செய்து கநித்து திருப்பள்ளி படுத்துகிற அளவிலே

அங்கே பெரிய நம்பி பயணகதியிலே போய்ப் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி இச் செய்தியை ஸ்ரீ திருக் கச்சி நம்பிக்கு அருளிச் செய்து –
அவர் புருஷகாரமாக ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதிக்குச் சென்று அவர் முன்பே ஸ்தோத்ரத்தை அனுசந்தித்துத் தீர்த்த பிரசாதமும் ஸ்வீ கரித்து
சந்நிதியின் நின்றும் புறப்பட்டு ஸ்ரீ இளையாழ்வார் திருமஞ்சனம் கொண்டு வருகிற சாலைக்கு கிணற்று வழியிலே
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரத்தை அனுசந்தித்துக் கொண்டு இருக்க
ப்ரஹ்மா சிவஸ் சதமக பரம ஸ்வராட் இத்யேத அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே -என்கிற ஸ்லோகத்தை இளையாழ்வாரும் கேட்டருளி –
இது அருளிச் செய்தார் யார் -என்று ஸ்ரீ பெரிய நம்பியைக் கேட்க ஸ்ரீ ஆளவந்தார் திவ்ய ஸ்ரீ ஸூக்தி என்று ஸ்ரீ பெரிய நம்பி அருளிச் செய்ய
இவரும் அவரை அடியேன் சேவிக்க வேணும் என்ன நம்பியும் ஆகில் நீர் நம்மோடு சேர வாரீர் என்று அருளிச் செய்ய
இவரும் திரு மஞ்சனத்தை பெருமாள் திரு முன்பே சமர்ப்பித்து பெருமாளை சேவித்து விடை கொண்டு ஸ்ரீ திருக் கச்சி நம்பியையும் சேவித்து
அவருக்கு இச்செய்தியை விண்ணப்பம் செய்து ஸ்ரீ பெரிய நம்பியுடன் புறப்பட்டு ஸ்ரீ கோயிலுக்கு ஆசன்னமாக எழுந்து அருளி வாரா நிற்க
திருக் கரம்பன் துறையிலே பெரிய திரளைக் கண்டு இத்திரள் ஏது என்று எதிரே வருவர்களைக் கேட்க அவர்களும்
ஸ்ரீ ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்ன இத்தைக் கேட்டு இவரும் ஏங்கி மோஹித்து விழுந்து
சோகார்ணவ நிமக்நராய்க் கிடந்து துடிக்க அவ்வளவில்

இளையாழ்வாரும் -பஹுதா விலலாப ஹா -என்னுமா போலே பலவகையாகப் புலம்பி அஸ்மித அந்நிய பாவராய் நிவர்த்தன உன்முகராய்
கண் பனி சோர நிற்க -ஸ்ரீ பெரிய நம்பியும் வாளேறு காணத் தேளேறு மாயுமா போலே தம்முடைய வ்யசனத்தை மறந்து –
ஸ்ரேயாம்சி பஹு விக்நாநி பவந்தி மஹதாம் அபி -என்கிறபடியே ஸ்ரேயஸ்ஸூக்களுக்கு அநேக விக்னங்கள் பெரியோர்களுக்கும் உண்டாம் –
ஆகையால் நீர் சோகிக்க வேண்டா -என்று ஸ்ரீ இளையாழ்வாரைத் தேற்றி அவரைக் கையைப் பிடித்துக் கொண்டு போய்
ஸ்ரீ ஆளவந்தாருடைய விமல சரம விக்ரஹத்தை சேவிக்கப் பண்ண ஸ்ரீ இளையாழ்வாரும் அவரைத் தண்டன் இட்டு
இது அலாப்ய லாபம் இருக்கும் படி என் என்று விஸ்மிதராய் ஆபாத சூடமாக சேவிக்கும் அளவில்
மூன்று திரு விரல்கள் முடங்கி இருக்க இவரும் அது கண்டு முன்னும் இவருக்கு இப்படி உண்டோ என்று முதலிகளைக் கேட்க
அவர்களும் முன்பு இல்லை இப்போது கண்டது இத்தனை என்ன இளையாழ்வாரும்

இவர் திரு உள்ளத்திலே ஏதேனும் ஒரு கருத்து உண்டாக வேணும் என்று விசாரித்து அருளி முதலிகளைப் பார்த்து –
முன்பு வியாக்கியான சமயங்களில் அபிமத சல்லாபங்களைக் கேட்டு இருந்தவர்கள் உண்டோ என்ன ஸ்ரீ பாதத்து முதலிகள் எல்லாரும் கூடி –
வேறு ஒன்றும் அறியோம் வ்யாஸ பராசரர் இடத்தில் உபகார ஸ்ம்ருதியும் நம்மாழ்வார் பக்கல் ப்ரேம அதிசயமும் வ்யாஸ ஸூத்ரத்துக்கு
விசிஷ்டாத்வைத பரமாக வ்யாக்யான லாஞ்சையும் பலகாலும் அருளிச் செய்யக் கேட்டு இருக்கையாய் இருக்கும் என்ன
இவரும் அகவாயில் எண்ணம் அறிந்து இஸ் ஸரீரம் த்ருடமாய் இவ்வாச்சார்யார் கிருபையும் அடியேன் இடத்தில் பரிபூர்ணமாய்
சர்வேஸ்வரன் அடியேன் நினைத்தபடி கூட்டுவானாகில் இம்மூன்று இழவுகளையும் தீர்க்கக் கடவேன் என்ன
உடனே திரு விரல்கள் நிமிர இத்தை அகிலரும் கண்டு ஆச்சர்யப்பட்டு -இவ்வாச்சார்யார் கிருபையும் உம்மிடத்தே உண்டு
இவருடைய திவ்ய ஸக்தியும் உம்மிடத்தில் கூடும் -நீரே இத் தரிசனத்துக்கு நிர்வாஹர் ஆவீர் என்று இவரை
மங்களா சாசனம் பண்ண இளையாழ்வாரும்

கண்ணுள் நீங்கா என் நெஞ்சுள்ளும் நீங்காவே -என்கிறபடியே அவ்விக்ரஹத்தை சேவித்துக் கண்ணிலும் நெஞ்சிலும் தேக்கிக் கொண்டு
ஸ்ரீ நம்பெருமான் நமக்குச் செய்தபடி என் -என்று போரக் கிலேசித்து அவப்ருத ஸ்நானம் செய்து அருளி
ஸ்ரீ பெரிய நம்பியை தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ நம்பெருமாளையும் திருவடி தொழாதே அவரை வெறுத்து மீண்டு
ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளினார்
பின்பு ஸ்ரீ ஆளவந்தாரை கநித்துத் திருப் பள்ளி படுத்துச் செய்ய வேண்டும் க்ருத்யங்களை எல்லாம் செய்து அருளினார்கள்
அநந்தரம் ஸ்ரீ இளையாழ்வாரும் பயணகதியில் ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு
இச் செய்தியை விண்ணப்பம் செய்ய அவரும் போர கிலேசிக்க இவரும் எண்ணினவாறு ஆகாமையாலே அத்யந்தம் அவசன்னராய் க்லேஸிக்க
ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் ஸ்ரீ பேர் அருளாளர் சர்வஞ்ஞரும் சர்வசக்தரும் அன்றோ -உம்முடைய நினைவின் படியே தலைக்கட்டி அருளுவர் –
அஞ்ச வேண்டா என்ற தேற்றமிட்டு பின்பு ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஸ்ரீ சூர்ண பரிபாலனம் செய்து பெருக்கத் திரு அத்யயனம் நடத்தி அருளினார்

ஸ்ரீ ஆளவந்தார் திரு நக்ஷத்ரம் –திரு ஆடி -திரு உத்தராடம்

அவர் தனியன் –

ஸ்ரீ ராம மிஸ்ர ஸச் ஸிஷ்யம் வந்தே தத்வார்த்த கோவிதம்–வாதாத வாப்த ராஜ் யாத்யோ விரக்தோயா முனோ அபவத்
(ராஜ்யஸ்து விரக்தோயோ பவந் முனி -பாட பேதம் )

யத்பதாம் போரு ஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ வஸ்து தாம் உபயாதோஹம் யாமு நேயம் நமாம் இதம்

சிம்ஹாந நாம் சபவமீஸ்வர யோகி சிந்து முக்தாமணிம் மஹித நாத முனீத்ர பவ்த்ரம் –
பிரஞ்ஞா விசேஷ ஜலதிம் பிரதிவாதி தூல ஜஜ்ஞாநிலம் ஹ்ருதய சிந்தயயா முநார்யம்

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: