ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ உய்யக் கொண்டார் / ஸ்ரீ மணக்கால் நம்பி /ஸ்ரீ யமுனைத் துறைவர் வைபவங்கள் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ உய்யக் கொண்டார் / ஸ்ரீ மணக்கால் நம்பி வைபவங்கள் –

அநந்தரம் ஸ்ரீ உய்யக் கொண்டாரும் ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகளையும் கூட்டிக் கொண்டு
தர்சனார்த்தங்களையும் -திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்து கொண்டு இருக்கும் காலத்தில்
இவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகள்
ஸ்ரீ மணக்கால் நம்பி –ஸ்ரீ திருவல்லிக் கேணி பாண் பெருமாள் அரையர் -ஸ்ரீ செட்டைப் பூசிச் சண்டலங்காரர் ( ஸ்ரீ செட்டலூர் சசெண்டலங்காரர் )-
ஸ்ரீ புண்டரீக தாசர் -ஸ்ரீ உலகு பெருமாள் நங்கை-என்கிற இவ் வைகர்கள்
இவர்களில் ஸ்ரீ மணக்கால் நம்பி பன்னிரண்டு சம்வத்சரம் ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ உய்யக் கொண்டார் திருவடிகளிலே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்ற இளைய பெருமாளை போலே சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு இருக்கையில்

ஸ்ரீ உய்யக் கொண்டார் திருத் தேவிகள் ஆகிய ஸ்ரீ ஆண்டாள் திரு நாட்டுக்கு எழுந்து அருள திரு மாளிகைக் கைங்கர்யம் எல்லாம்
தமக்கே பரமாய் நடத்திக் கொண்டு போகா நிற்கச் செய்தே ஸ்ரீ உய்யக் கொண்டார் திருப் பெண் பிள்ளைகள் இருவரையும் நீராட்டி
அழைத்துக் கொண்டு வருகிற வழியில் வாய்க்கால் சேறாய் இருக்கக் கண்டு அவர்கள் திகைத்து நிற்க
தாம் படியாய்க் கிடந்து அவர்களைத் தம் முதுகில் அடியிட்டு எழுந்து அருளுவித்துக் கொண்டு போக
ஸ்ரீ உய்யக் கொண்டாரும் இச் செய்தியைக் கேட்டருளி இவர் இப்படிச் செய்வதே என்று போர ப்ரீதராய் –
இவர் உத்தம அங்கத்தைத் தம் திருவடித் தாமரைகளாலே அலங்கரித்து பொன்னடிப் பூ முடி சூடி -உமக்கு நாம் செய்ய வேண்டுவது என்
என்று கேட்டு அருள ஸ்ரீ நம்பியும் -உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் -என்று
தேவரீர் திருவடிகளில் சேவையே வேண்டுவது என்ன ஸ்ரீ உய்யக் கொண்டாரும் உகந்து அந்த உகப்பின் மிகுதியால்
அதீதாநா கத ஜ்ஞான மாத்ம தத்வ பிரகாசம் -சர்வ வேதார்த்த விஞ்ஞானம் சர்வ சாஸ்த்ரார்த்த தர்சனம் –
மாந சம்வாசிகம் பாபம் காயிகந்த த்ரிதாக்ருதம் த்வய ஸ்மரண மாத்ரேண நா சம்யாதி ஸூ நிச்சிதம் –என்கிற
வைபவத்தை உடைய பரமார்த்தமான த்வயத்தையே மீளவும் பிரசாதித்து அருளினார்

பின்பு சில நாள் கழிந்தவாறே ஸ்ரீ உய்யக் கொண்டார் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற போது –
இனி தர்சன ப்ரவர்த்தகராவார் யார் என்று ஸ்ரீ மணக்கால் நம்பி விண்ணப்பம் செய்ய அவரும் இங்குள்ள முதலிகளையும் கூட்டிக் கொண்டு
நீரே தர்சனம் நிர்வஹிக்கக் கடவீர் -பின்பு சொட்டைக் குலத்தினரான ஸ்ரீ ஈஸ்வர முனிகள் திரு வயிற்றிலே
ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு ஒரு திரு பேரனார் திரு அவதரிப்பர் –
அவருக்கு யமுனைத் துறைவர் என்று திரு நாமம் சாத்துவித்துத் தர்சன ப்ரவர்த்தகர் ஆகும்படி
சகல தர்சன ரஹஸ்யார்த்த விசேஷங்களையும் உபதேசியும் –
அவர் தர்சன ப்ரவர்த்தகராவார் -இந்தக் கைங்கர்யத்தை ஸ்ரீ மன் நாதமுனிகள் தம் அந்திம தசையில் அடியேனுக்கு நியமித்து அருளினார் –
நான் செய்யப் பெற்றிலேன் -நீர் அவரை அனுவர்த்தித்தாகிலும் ரஹஸ்யார்த்தங்களை உபதேசியும் என்று நியமித்
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -இத்தால் ஆச்சார்ய ஆஞ்ஞா பரிபாலனம் அவசிய கரணீயம் என்றபடி –

ஸ்ரீ உய்யக் கொண்டார் திரு நாட்டுக்கு எழுந்து அருளின படியைக் கண்டு ஸ்ரீ மணக்கால் நம்பி உள்ளிட்ட முதலிகள் எல்லாரும்
மிகவும் சோகார்த்தராய் ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய்க் கோஷித்துக் கொண்டு விழுந்து போரக் கிலேசித்துத்
தங்களிலே தேறி நிற்க ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ உய்யக் கொண்டாரை ப்ரஹ்ம மேதத்தால் சம்ஸ்ஹரித்துப் பள்ளிப் படுத்து
மேலும் செய்ய வேண்டிய க்ருத்யங்கள் எல்லாம் செய்து அருளினார்

ஸ்ரீ உய்யக் கொண்டார் திரு நக்ஷத்ரம் சித்திரையில் கார்த்திகை
அவர் தனியன் -நம பங்கஜ நேத்ராய நாத ஸ்ரீ பாத பங்கஜே ந்யஸ்த சர்வ பராயாஸ் மத் குல நாதாயா தீ மதே

————————————-

ஸ்ரீ யமுனைத் துறைவர் வைபவம்–

அநந்தரம் ஸ்ரீ மணக்கால் நம்பி முதலிகளைக் கூட்டிக் கொண்டு தர்சனம் நிர்வகித்து அருளா நிற்கச் செய்தே
பின்பு சில காலம் கழிந்த வாறே ஸ்ரீ ஈஸ்வர முனிகளுக்கு ஆடி மாசத்தில் உத்தராட திரு நக்ஷத்ரத்திலே
ஒரு திருக் குமாரர் திரு அவதரித்து அருள அது கேட்டு அதி ஸந்துஷ்டராய் ஸ்ரீ நம்பியும் அங்கு ஏற வந்து அவருக்கு
ஜாத கர்மண்ய லாபேது (ஜாத கர்மண்ய வாப்தேது )விஷ்ணோஸ் சக்ரஸ்ய தாரணம் சவ்ள உபநயநே சாபி தன் மந்த்ர
அத்யயநேபிவா -விதிநா வைஷ்ணவஞ் சக்ரந் தாரயித்வாத் விஜோத்தம -என்றும்
வைஷ்ணவைஸ் சைவ ஸூக்தைஸ் ச குர்யாத் சம்மார்ஜனம் சிசோ –தஸ்ய தக்ஷிண கர்ணேது ஜபேதஷ்டாக்ஷரந்
த்வயம் மூர்த்நி ஹஸ்தம் விநிஷிப்ய ஜ்பேச் சத்வா தசாக்ஷரம் நாம குர்யாத் ததபஸ் ஸாத் வைஷ்ணவம் பாப நாசனம் -என்றும்
சொல்லுகிறபடியே ஸ்ரீ ஈஸ்வர முனிகளைக் கொண்டு ஜாத கர்மத்தையும் செய்வித்து
பத்து நாளும் கடந்த இரண்டா நாள் ஸ்ரீ மன் நாத முனிகள் நியமன பிரகாரத்தில் திரு இலச்சினை முன்னாக
ஸ்ரீ யமுனைத் துறைவன் என்ற திரு நாமத்தையும் சாத்தி ப்ரீதராய் அருளினார்

பின்பு ஸ்ரீ ஈஸ்வர முனிகளும் ஸ்ரீ யமுனைத் துறைவருக்கு அன்ன ப்ராசன சவ்ள உபநயநாதி களையும் தத் தத் காலங்களிலே செய்து
அருளி அத்யயனம் பண்ணுவிக்கிற காலத்தில் இரண்டாம் சந்தை சொல்லும் போது இவர் ஸஹ அத்தியாயிகளைப் பார்த்து
ஓதின இடத்தையே ஓதுகிறீர்கள் என்று அருளிச் செய்து சந்தை தவிர்ந்து இருப்பர் -ஓதப் போகிறீர் என்றால்
ஓதின இடத்தையே ஓதா நின்றார்கள் என்பர் – இப்படி அதி மேதாவியாய் இருக்கிற இவர் அங்க உபாங்கங்களோடே
பத க்ரம ஸஹிதமாக அத்யயனம் பண்ணித் திருக் கல்யாணமும் செய்து அருளினார்
பின்பு ஸ்ரீ ஈஸ்வர முனிகளும் திரு நாட்டுக்கு எழுந்து அருள – ஸ்ரீ யமுனைத் துறைவரும் அவரை ப்ரஹமேதத்தால் சமஸ்கரித்துப்
பள்ளிப் படுத்தி செய்ய வேண்டிய க்ருத்யங்களையும் செய்து அருளினார் –

அநந்தரம் யமுனைத் துறைவரும் மஹா பாஷ்ய பட்டருடனே ஸாஸ்த்ர அப்யாஸம் பண்ணுகிற காலத்தில் அந்த ராஜ்யத்தில்
ராஜ புரோஹிதனாய்ப் பெரிய வித்வானான ஆக்கி ஆழ்வானுக்கு அந்தத் தேசத்தில் வித்வான்கள் எல்லாரும்
தச பந்தம் இறுத்துப் போருகையாலே மஹா பாஷ்ய பட்டர் பக்கலிலும் தச பந்தத்துக்கு உத்தரவு வர அத்தைப் பார்த்து
மஹா பாஷ்ய பட்டரும் முசித்துக் கிடக்க ஸ்ரீ யமுனைத் துறைவர் அவரை நீர் இப்படி முசித்துக் கிடக்கிறது என் என்று கேட்க
அவரும் இச் செய்தியை இவருக்குச் சொல்ல அத்தைக் கேட்டருளி இவரும் வந்த தரவைக் கிழித்து விட –
ஆக்கி ஆழ்வானும் இத்தைக் கேட்டு வெறும் கவியோ தந்த்ர பாரகனோ-என்று கேட்டு வரவிட ஸ்ரீ யமுனைத் துறைவரும்
நவயம் கவயஸ்து கேவலம் நவயம் கேவல தந்த்ர பாரகா அபி துப்ர திவாதி வாரண பிரகடாடோப விபாட ந ஷமா -என்ற
இஸ் ஸ்லோகத்தை அருளிச் செய்து எழுதி போக விட்டருள ஆக்கி ஆழ்வானும் அத்தை வாசித்து இப்படி ஒரு வித்வான் உண்டோ என்று
ஆச்சர்யப்பட்டு இத்தை ராஜாவுக்கு அறிவிக்க ராஜாவும் ஸ்ரீ யமுனைத்துறைவரை சடக்கென வருவது என்று ஸ்வ சாசனம் வரவிட
அந்த ராஜ சாசனத்தையும் கிழித்து விட இச் செய்தியை ராஜாவும் கேட்டு -ஆகில் இவர் சாமான்யர் அல்லராய் இருந்தது என்று
இவருக்கு தண்டிகையும் சிவிகையாரும் கொடுத்து வரவிட -இவரும் அந்த கனக தண்டிகையிலே ராஜ ஸ்தானத்து ஏற எழுந்து அருளி

ஆசை லாத த்ரி கன்யா சரணகி சலய ந்யாஸ தந்யோப கண்டா தாரஷோ நீத சீதா முக கமல ச முல்லா சஹே தோஸ் ச சேதோ
ஆச பிராஸ்ய பிரதீஸ்ய ஷிதி தர யுகளா தர்க்க சந்த்ராவ தம்சான் மீமாம்ஸா ஸாஸ்த்ர யுஸ்ம ஸ்ரம விமல
(ஸ்ரம முதித -என்றும் ஸ்ரமம் ருதித-என்றும் பாட பேதங்கள் ) மநாம் ருக்யதாம் மாத்ரு சோ அந்ய-
என்கிற ஸ்லோகத்தில் எழுதிப் போக விட்டருள -ஆக்கி ஆழ்வானும் இத்தைக் கண்டு மிகவும் குபிதனாய்-
இவருடனே நான் தர்க்கிக்கக் கடவேன் என்ன ராஜாவும் ஸ்ரீ யமுனைத் துறைவரைப் பார்த்து இவருடனே தர்க்கியும் என்ன
ஸ்ரீ யமுனைத்துறைவரும் ராஜாவைக் குறித்து நானும் இவரும் தர்க்கித்தால் வெற்றியும் தோல்வியும் உங்களுக்குத் தெரியாது –
நாங்கள் இருவரும் தோற்றோம் என்றும் சொல்லுவது இல்லை -ஆகையால் ஜெய அபஜெயம் அறியும் படிக்கு மத்யஸ்தரான
வித்வான்களை அழைப்பிக்க வேணும் என்ன ராஜாவும் அப்படியேயாம் என்று வித்வான்களை அழைப்பித்துக் கொண்டு
வித்யா ஸ்தான மண்டபத்திலே தன் மஹிஷியையும் கூட்டிக் கொண்டு இருக்க ராஜ மஹிஷியும் ராஜாவுடன்
ஸ்ரீ யமுனைத்துறைவரைக் காட்டி -இவர் தோலார்–தோற்றார் ஆகில் நான் நாய்க்கு எரித்திடக் கடவேன் -என்ன
ராஜாவும் தன் மஹிஷியுடன் -ஆக்கியாழ்வான் தோற்றானாகில் இவர்க்கு அர்த்த ராஜ்யம் தரக் கடவேன் -என்ன –

அவ்வளவிலே ஆக்கி யாழ்வானும் ஸ்ரீ யமுனைத் துறைவரைப் பார்த்து -லௌகிகங்களிலே நீர் அன்று என்றத்தை
நான் ஆம் என்னக் கடவேன் -ஆம் என்றத்தை அன்று என்னக் கடவேன் -வென்றவன் தோற்றவன் தலையிலே தாடனம் பண்ணக் கடவேன் -என்ன
ஸ்ரீ யமுனைத் துறைவரும் அவனைப் பார்த்து
த்வன் மாதா ந வந்த்யா ராஜா ஸார்வ பவ்ம ராஜ பத்நீ பதிவிரதா -என்று இப்படி லௌகிகத்தில் மூன்று வார்த்தை அருளிச் செய்ய
ஆக்கி ஆழ்வானும் நிருத்தனாய் இருந்தான் -பின்பு சாஸ்திரத்தில் புகுந்தவாறே
உத்தமம் மத்யமம் அதமம் -என்று மூன்று -இதில் மூன்று வார்த்தையிலே யாதல் -ஐந்து வார்த்தையிலே யாதல் -ஏழு வார்த்தையிலே யாதல் –
ஜெயித்தாயாகில் உன்னது ஜெயம் -என்று ஸ்ரீ யமுனைத்துறைவர் ப்ரதிஜ்ஜை பண்ணி அருள
அவனும் மூன்று வார்த்தையிலும் ஐந்து வார்த்தையிலும் ஏழு வார்த்தையிலும் முழுக்கத் தோற்றான் –
வென்றவன் தோற்றவன் தலையிலே தாடனம் பண்ணக் கடவன் என்று முன்பே ப்ரதிஜ்ஜை பண்ணின அதுக்கு –
நீ ராஜ புரோஹிதனுமாய் வாயோ வ்ருத்தனுமாகையாலே நான் அது செய்யேன் என்று ஸ்ரீ யமுனைத் துறைவர் அருளிச் செய்ய –
இத்தைக் கேட்டு இருந்த வித்வான்கள் எல்லாரும் சந்தோஷித்து இவரை ப்ரஹ்ம ரதம் பண்ணிக் கொண்டு வர
ராஜ மஹிஷியும் -என்னை ஆளவந்தீரோ -என்று ஸ்ரீ யமுனைத்துறைவரை எடுத்து அணைத்துக் கொண்டு
தன் பர்த்தாவுடன் மணி மாட மாளிகைக்கு உள்ளே புகுந்தாள்-ராஜாவும் இவர்க்கு அர்த்த ராஜ்யம் கொடுத்து
இவர் தேவிகளையும் அழைப்பிக்க ஸ்ரீ ஆளவந்தாரும் பத்நீ ஸஹிதராய்க் கொண்டு ராஜ போகத்தில் ஸூ கமே எழுந்து அருளி இருந்தார் –

அநந்தரம் ஸ்ரீ மணக்கால் நம்பியும் இது கேட்டுக் கொண்டைக் கோல் கொண்டு கூத்தாடி அருளி ஸ்ரீ ஆளவந்தாரைக் காண வேணும்
என்று போர ஆசையோடு அங்கு ஏற எழுந்து அருள -அவ்விடம் ராஜபதமாய் கட்டும் காவலுமாய் இருக்கையாலே
ஸ்ரீ ஆளவந்தாரைக் காணப் போகாமல் திரு மடைப் பள்ளியிலே புகுந்து அவருக்கு திருப் போனகம் சமைக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து -ஸ்ரீ ஆளவந்தார் விரும்பி அமுது செய்யும் கறி அமுது என் என்று கேட்டருள –
அவர்கள் தூ துளை -என்று சொல்ல
ஸ்ரீ நம்பியும் அன்று முதல் ஆறு மாசம் மடைப்பள்ளிக்கு தூதுளை இட்டு நடத்தி அருளினார் –
இப்படி நடத்தின இடத்திலும் ஒரு விசாரம் அற்று இருக்கையாலே இவரும் முசித்து நாலு நாள் தவிர்ந்து இருக்க
ஸ்ரீ ஆளவந்தாரும் அமுது செய்யும் போது நாலு நாளாக தூதுளை இன்றிக்கே இருப்பான் என் என்று தளிகைக்கு செய்கிறவர்களை
கேட்டு அருள -அவர்களும் ஒரு வ்ருத்த ப்ராஹ்மணர் ஆறு மாசம் உண்டு நாள் தோறும் நடத்திப் போருகிறது –
நாலு மூன்று நாள் உண்டு தவிர்ந்து என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ஆளவந்தாரும் கேட்டருளி விஸ்மயப்பட்டு
இனி அவர் வந்தவாறே நமக்கு அறிவியுங்கோள் என்று அருளிச் செய்ய –

மற்றை நாள் ஸ்ரீ நம்பியும் இன்னமும் பார்ப்போம் என்று தூதுளை கொண்டு எழுந்து அருளினவாறே அவர்களும்
ஸ்ரீ ஆளவந்தாருக்கு அறிவிக்க அவரும் அழையும் என்று அருள்பாடிட்டவாறே இவரை எழுந்து அருளப் பண்ணுவித்துக் கொண்டு போய்
அவர்களும் ஸ்ரீ ஆளவந்தாருக்குக் காண்பிக்க ஸ்ரீ ஆளவந்தாரும் இவரைக்கண்டு ப்ரத்யுத்தான அபிவாதன பூர்வகமாக ஆசனமிட்டு –
நீர் இத்தனை நாளும் நமக்கு இந்தத் தூதுளை கொண்டு வந்து இடுகிறது எதுக்காக -உமக்கு அர்த்தம் வேணுமோ க்ஷேத்ரம் வேணுமோ என்று
ஸ்ரீ மணக்கால் நம்பியைக் கேட்டருள -ஸ்ரீ நம்பியும் -நமக்கு இவை ஒன்றும் உண்டோ -உங்கள் பூர்வர்கள் தேடின அர்த்தம் இருக்கிறது –
அந் நிதி கிடக்கிற இடமும் நான் அறிவேன் -அத்தை நீர் கைக் கொண்டு அருளும் தனையும் நித்தியமாக நான் தேவரீர் பக்கல் வந்து
போம்படி வாசலில் தகையாது இருக்க அப்பணை இட வேண்டும் என்று அருளிச் செய்ய –
ஆளவந்தாரும் அப்படியே வாசல் தகையாதபடி கட்டளை இட –

ஸ்ரீ நம்பியும் அன்று முதல் ஸ்ரீ கீதையின் செம்மைப் பொருள் தெரியும்படி பதினெட்டு அத்யாயமும் அருளிச் செய்ய
ஸ்ரீ ஆளவந்தாரும் ஆரண சாரமான கீதையின் உட் பொருளைக் கேட்டருளி ஒரு நாளைக்கு ஒரு நாள் ஆர்த்தி பிறந்து –
அவ்வஸ்துவை சாஷாத் கரிக்கலாம் உபாயம் இல்லையோ என்று ஸ்ரீ நம்பியைக் கேட்க
ஸ்ரீ நம்பியும் சாஷாத்கரிக்கலாம் உபாயம் உண்டு என்று ஏகாந்தத்தில் எழுந்து அருளி இருந்து
மெய்ம்மைப் பெரு வார்த்தையான சரம ஸ்லோகார்த்தத்தை ப்ரசாதித்து அருள அத்தைக் கேட்ட ஸ்ரீ ஆளவந்தாருக்கு
நெல்லுக்கு பால் கட்டக் கட்டத் தலை வணங்குமா போலே சரணாகதி நெஞ்சிலே பட பட ஆனுகூல்யம் மிகுந்து
சரண்ய விஷய ப்ராவண்ய அதிசயத்தாலே இஸ் சம்சாரத்தில் அருசி பிறந்தபடி கண்டு அவரைக் கூட்டிக் கொண்டு

ந சஞ்ஞானஸ்யா சங்கோச ந சைவ யம கோசர தஸ்மாத் ரங்கம் மஹா புண்யம் கோந சேவேத புத்தி மாந் -என்கிறபடியே
ஞான வர்த்தகமுமாய் -நமன் தமரால் ஆராயப்பட்டு அறியாததுமாய்ப் புண்ய வர்த்தகமுமான திருவரங்கன் திருப்பதியில்
அழைத்துக் கொண்டு போய் பெரிய பெருமாளை திருவடி தொழப் பண்ணி -நிதிர் அவ்யய -என்கிறபடியே
உங்கள் பூர்வர்கள் தேடி வைத்த மஹா நிதி இது காணும் -என்று காட்ட ஸ்ரீ ஆளவந்தாரும் பெரிய பெருமாளுடைய
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியை சேவித்து –
பழுதே பலகாலும் போயின என்று அஞ்சி அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன் -என்கிறபடியே
கீழ் இழந்த நாளைக்கு கூப்பிட்டுக் கண்ணும் கண்ணீருமாய் அரங்கத்து அம்மானை அனுபவித்து –
பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆரத் தோள் -என்றும்
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்ராஸ் ச தாரா பசவோ க்ருஹாணி த்வத் பாத பத்ம பிரவணாத் மவ்ருத்தேர் பவந்தி
சர்வே பிரதிகூல ரூபா -என்றும் சொல்லுகிற பிரதிகூலங்களை எல்லாம் பரித்யஜித்து
சர்வ சங்காந் பரித்யஜ்ய -என்கிறபடியே சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஆஸ்ரம பிராப்தி பண்ணி யருளி
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறபடியே
வேறே ஒரு விஷயம் அறியாதே
பரமாத்மிநி யோரக்தோ விரக்தோ அபரமாத்மநி என்கிறபடியே -அபரமாத்மநி வைராக்யம் உடையராய்ப்
பரமாத்ம சக்த சித்தராய்ப் பெரிய பெருமாளை சேவித்துக் கொண்டு எழுந்து இருக்கிற காலத்திலே

ஸ்ரீ பெரிய நம்பி -ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி -ஸ்ரீ பெரிய திருமலை நம்பி -ஸ்ரீ மாறனேர் நம்பி
ஸ்ரீ திருக் கச்சி நம்பி -ஸ்ரீ ஆளவந்தார் ஆழ்வார் -ஸ்ரீ திருமாலை ஆண்டான் -ஸ்ரீ வன மா மலை ஆண்டான்
ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டான் -ஸ்ரீ ஈசான் ஆண்டான் –ஸ்ரீ சீயர் ஆண்டான் -ஸ்ரீ திருக் கூரப்பன்
ஸ்ரீ திரு மோகூர் அப்பன் -ஸ்ரீ திரு மோகூர் நின்றான் -ஸ்ரீ தெய்வப் பெருமாள் -ஸ்ரீ வகுளாபரண சோமயாஜியார் –
ஸ்ரீ திருக் குருகூர் தாசர் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை தாசர் -ஸ்ரீ வடமதுரைப் பிறந்தான் -ஸ்ரீ ஆட் கொண்டி அம்மங்கி
என்ற இவ்விருப்பது முதலிகளும் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தார்கள்

இவர்கள் எல்லாரும் வித்வான்களுமாய்த் தர்சன ப்ரவர்த்தகருமாய் இருக்கிற காலத்தில்
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ ஆளவந்தாரைப் பார்த்து -இன்னம் ஒரு ரஹஸ்ய விசேஷம் ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் பக்கலிலே உண்டு
அங்கே போய்க் கேளும் என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ ஆளவந்தாரும் அது என் தேவரீருக்கு அந்த ரஹஸ்ய விசேஷம் இன்றிக்கே போவான் என் என்ன –
ஸ்ரீ நம்பியும் உங்கள் திருப் பாட்டனாரான ஸ்ரீ மன் நாதமுனிகள் எங்கள் ஆச்சார்யரான ஸ்ரீ உய்யக் கொண்டாருக்கு அந்த ரஹஸ்ய விசேஷத்தை
அருளிச் செய்யத் தேட -அவரும் பிணம் கிடக்க மணம் புணரலாமோ -சரீர அவசான தசையில் அப்யஸிக்க அமையும் -என்று விண்ணப்பம் செய்தார் –
ஆகையால் அந்த ரஹஸ்ய விசேஷம் இல்லை யாய்த்து என்ன –
ஆனால் அங்கே கேட்ப்போம் என்று ஸ்ரீ கோயிலிலே எழுந்து அருளி இருந்து ஸ்ரீ ஆளவந்தார் தர்சனம் நிர்வகிக்க

கண்டு செய்தது வாய்த்து ஸ்ரீ மானாய் ஹர்ஷ பிரகர்ஷத்துடனே வாழ்கிற காலத்தில்
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகள்
ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ தெய்வத்துக்கு அரசு நம்பி -ஸ்ரீ கோ மடத்துத் திரு விண்ணகர் அப்பன் –
ஸ்ரீ சிறுப்புள்ளூருடைய பிள்ளை -சிறுப்புள்ளுடை பிள்ளை என்றும் சொல்வர் -ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சி என்ற இவர்கள் ஐவர்
இவர்களுக்கு ஸ்ரீ நம்பி தர்சன தாத்பர்ய விசேஷங்களை அருளிச் செய்து கொண்டு சில காலம் எழுந்து அருளி இருந்து
தம் அந்திம தசையில் ஸ்ரீ ஆளவந்தாரைப் பார்த்து ஸ்ரீ நாதமுனிகளோடே உபய சம்பந்தம் உடையரான நீர்
அவர் திருவடிகளே உமக்குப் ப்ராப்யமும் பிராபகமும் என்று விஸ்வசித்து உம்மைப் போலே ஒரு தர்சன ப்ரவர்த்தகரையும் உண்டாக்கி அருளிக்
கோயிலை விடாதே இரும் என்று அருளிச் செய்து
ஸ்ரீ உய்யக் கொண்டார் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டு திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

இத்தால் ஆச்சார்ய பரமாச்சார்யர்களுடைய திவ்ய ஆஞ்ஞா பரிபாலனம் பண்ணி உபயருடைய யுக்தி பலித்தபடி
கண்டு உகந்தார் இவர் ஒருவருமே இறே
ஸ்ரீ மணக்கால் நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளின படி கண்டு ஸ்ரீ ஆளவந்தார் உள்ளிட்ட முதலிகள் எல்லாரும்
மிகவும் அவசன்னராய் சோகித்துத் தங்களிலே தரித்து நிற்க –
ஸ்ரீ ஆளவந்தாரும் அவரை ப்ரஹ்ம மேதத்தால் சமஸ்கரித்துத் திருப் பள்ளி படுத்துச் செய்ய வேண்டிய க்ருத்யம் எல்லாம் செய்து அருளினார்

ஸ்ரீ மணக்கால் நம்பி திரு நக்ஷத்ரம் மாசி -மகம்
அவர் தனியன் -அயத்ன தோயா முந மாத்ம தாச மளர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண ய க்ரீதவா நாஸ்தி
தயவ்வ ராஜ்யம் நமாமிதம் ராம மமேய சத்வம்

அநந்தரம் ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளும் ஸ்ரீ அப்பன் யோகத்தில் எழுந்து அருளி இருக்கும் இடத்து ஏற எழுந்து அருளி –
இவரை சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது என்று தும்முதல் இருமுதல் அடியோசைப் படுத்தல் செய்யாதே மவ்வனத்தோடே
சுவர்ப்புறத்தே பின்னே தெரியாதே நிற்க
ஸ்ரீ அப்பனும் யோகத்தில் எழுந்து அருளி இருக்கிறவர் பின்னே திரும்பிப் பார்த்து அருளி இங்கே சொட்டைக் குலத்தவர் யாரேனும்
வந்தார் உண்டோ என்று கேட்டருள
ஸ்ரீ ஆளவந்தாரும் அடியேன் யமுனைத்துறைவன் விடை கொண்டு இருக்கிறேன் என்று எழுந்து இருந்து வந்து
ஸ்ரீ அப்பன் ஸ்ரீ பாதத்தில் சேவித்து -அடியோங்கள் சுவர்ப் புறத்தே பின்னே தெரியாதபடி நிற்கத் தேவரீர்
இங்கன் அருளிச் செய்கைக்கு ஹேது என் என்று கேட்டருள
ஸ்ரீ அப்பனும் அருளிச் செய்த படி -அடியேனும் தானுமாய் அனுபவியா நின்றால் பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி
அணைத்தாலும் அவள் முகம் கூடப் பாராத சர்வேஸ்வரன் என் தோள்களை அமுக்கி நாலு மூன்று தரம் சுவர்ப்புறத்து எட்டிப் பார்த்தான் –
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குலத்தில் உள்ளார் யாரேனும் வந்தார் உண்டாக வேணும்
என்று இருந்தேன் காணும் என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தாரும் இத்தைக் கேட்டுப் போர வித்தராய் அருளி அடியேனுக்கு இந்த யோக ரஹஸ்யத்தை அருளிச் செய்ய வேணும்
என்று ஸ்ரீ அப்பன் ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டுக் கொண்டு விழுந்து கிடக்க ஸ்ரீ அப்பனும் உகந்து அப்படியே செய்கிறோம் -என்று
முடி பிடித்து எடுத்து நம்முடைய சரீர அவசானத்திலே சொல்லுகிறோம் -வருகிற புஷ்ய மாசத்தில் குரு புஷ்ய யோகத்தில்
அபிஜின் முஹூர்த்தத்திலே நமக்கு சரீர அவசானமாய் இருக்கும் -அதுக்கு முன்னாக எழுந்து அருள வேணும் -என்று
திருமுகம் எழுதிக் கொடுத்து அருள
ஸ்ரீ ஆளவந்தாரும் திரு முகத்தைக் கொண்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார்

பின்பு ஸ்ரீ நம்பெருமாள் திரு அத்யயன திரு நாளிலே திரு அத்யயனம் கேட்டு அருளும் போது
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் -கெடும் இடர் -என்கிற திருவாய் மொழியை அபிநயித்துப் பாடி அருளுகிறவர்
ஸ்ரீ ஆளவந்தார் திரு முகத்தைப் பார்த்து அருளி -நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்குச் சொன்னோம் -என்று பலகாலும் பாடி அருள –
ஸ்ரீ ஆளவந்தாரும் இத்தைக் கேட்டு அருளி -ஸ்ரீ ஆழ்வாருடைய தமர்களிலே அந்தர் பூதமாம் போது திருவனந்த புரம் புக்கு
சேவிக்க வேண்டி இருந்தது -என்று அப்போதே திரு ஓலக்கத்தின் நின்றும் எழுந்து இருந்து ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு தண்டன் சமர்ப்பித்து
அவர் அனுமதி கொண்டு புறப்பட்டு அருளி திரு மடத்துக்கு காவலாக ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானை வைத்துத்
திருவனந்த புரத்துக்கு எழுந்து அருளிப் படமுடை யரவில் பள்ளி பயின்ற திரு அனந்த புரத்தம்மானையும் த்வார த்ரயேண திருவடி தொழுது
அங்கே எழுந்து அருளி இருந்த அளவிலே திரு சந்நிதி முதலிகளைப் பார்த்து
ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் நமக்கு இட்டுத் தந்த திரு முகத்தைக் கொண்டு வாருங்கோள் -என்று அருளிச் செய்ய
முதலிகளும் கொண்டு வந்து சமர்ப்பிக்க பார்த்து அருளி மாசமும் திவசமும் நன்றாய் இருந்த படியால்
ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே-என்று போர சோகார்த்தராய் மீண்டு எழுந்து அருளா நிற்க

ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானுக்கு ஸ்ரீ ஆளவந்தார் விஸ்லேஷம் பொறாமல் திருமேனி சோஷிக்க இங்கு இருந்த முதலிகள்
இவர்க்கு வைத்தியர்கள் பலரையும் அழைத்துப் பார்ப்பித்த இடத்தில் அவர்கள் இவர்க்கு விஷய ஸ்ப்ருஹை யாக்கும் இப்படி யாய்த்து -என்ன
உமக்கு எந்த விஷயத்திலே ஸ்ப்ருஹை இருக்கிறது என்று முதலிகள் கேட்க அவரும் அடியேனுக்கு ஸ்ரீ ஆளவந்தார் விஷயம் ஒழிய
வேறே ஒரு விஷயம் உண்டோ என்று அருளிச் செய்ய -ஆகில் இவரை அங்கே ஏறக் கொண்டு போங்கோள்-என்று வைத்தியர்கள்
பலரும் சொல்ல முதலிகள் இவரைக் கட்டணத்தில் கொண்டு போக
ஒரு நாளைக்கு ஒரு நாள் திருமேனியில் வாட்டம் தீர்ந்து பின்பு நடக்க வல்லராய் வருகிற அளவிலே
ஸ்ரீ ஆளவந்தாரும் திருவனந்த புரத்தின் நின்றும் மீண்டு எழுந்து அருளுகிற வழியிலே திருவனந்த புரத்துக்கு அரைக்காதம் வழியிலே
கரைமனை ஆற்றங்கரையில் விட்டு எழுந்து அருளி இருக்க ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானும் ஸ்ரீ ஆளவந்தாரை சேவித்து
அவர் ஸ்ரீ பாதத்தில் தெண்டன் சமர்ப்பித்துக் கொண்டு விழுந்து கிடக்க
ஸ்ரீ ஆளவந்தாரும் இவர் எழுந்து இருக்க மாட்டாமல் கிடக்கிற படியைக் கண்டு
பெருமாள் ஸ்வ தந்திரருமாய் ஸூரருமாய் இருக்கையாலே ஸ்ரீ பரத்தாழ்வான் வைத்த இடத்தே இருந்தார் –
அடியேன் ஸ்வ தந்த்ரனும் இன்றிக்கே ஸூரனும் இன்றிக்கே இருக்கையாலே
நீர் வைத்த இடத்திலே இராமல் வந்தது -என்று அருளிச் செய்ய

இத்தைக் கேட்ட ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானும் -வந்து ஸ்வரூப ஹானி பட்டேன்-என்று மிகவும் சத்தை குலைந்து கிடக்க –
இவர் எழுந்து இராதபடியைக் கண்டு -என்னை ஸ்வ தந்திரனாயும் ஸூரனாயும் ஆக்கினால் ஒழிய எழுந்திரேன் என்று கிடக்கிறாயோ என்று
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ய -ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானும் இவ்வார்த்தையைக் கேட்டு வந்து ஸ்வரூப ஹானி பட்டதோபாதி
இதுவும் ஒரு ஸ்வரூப ஹானி ஆயிற்றோ என்று பர பர என்று எழுந்து இருந்து நிற்க
ஸ்ரீ பாதத்து முதலிகளும் -ஜலாந் மத்ஸ்யா விவோத் த்ருதவ் -என்ற ஸ்ரீ இளைய பெருமாள் நிலை இவருக்கு உண்டாய்த்தே என்ன
ஸ்ரீ ஆளவந்தாரும் ஈது ஒரு அதிகார விசேஷம் இருந்தபடி என் தான் என்று போர உகந்து அருளி –
மிகவும் மெலிந்தீரே என்று முதுகு தடவி அதி கிருபார்த்த சித்தராய் -திருவனந்தத் திருக் கோபுரம் அதோ தோன்றுகிறது –
அங்கே போய் ஆயிரம் பைந்தலை அனந்த சயநனை சேவித்து வாரும் என்று அருளிச் செய்ய –
இவரும் என்னுடைய திருவனந்த புரம் எதிரே வந்தது என்று ஸ்ரீ ஆளவந்தாரைக் காட்டி ஆள ஸ்ரீ ஆளவந்தாரும்

யேநைவ குருணா யசய ந்யாஸ வித்யா பிரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவச-என்றும்
வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்ற முதல் செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம் மருளாம் இருளோடு
மத்தகத்து தந்தாள் அருளாலே வைத்தவர் -என்றும்
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற் கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த் தாள் என் தனக்கும் அது இராமானுசர் இவை ஈந்து அருளே -என்றும்
சொல்லுகிறபடியே விசேஷ அதிகாரியான ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானைக் கூட்டிக் கொண்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளி
ஸ்ரீ பெரிய பெருமாளையும் சேவித்துக் கொண்டு அங்கே தாமும் ஸ்ரீ பாதத்து முதலிகளுமாக இருந்து தர்சனம் நிர்வஹித்து அருளுகிற போது –
இனி மேல் தர்சன பிரவர்த்தகர் ஆவார் யார் என்று விசாரம் உண்டாய் ஒருவரையும் காணாதே முசித்துச் சிந்தித்து இருந்த காலத்திலே –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: