ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ மன் நாதமுனிகள் வைபவம் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ மன் நாதமுனிகள் வைபவம்

ஆழ்வார்கள் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளி நெடும் காலம் கழிந்தவாறே –
ஸ்ரீ வீர நாராயண புரத்திலே திரு மன்னனார் திருவடிகளிலே சர்வவித கைங்கர்யங்களையும் செய்து கொண்டு போருகிற
ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வாரும் -அவர் திருக் குமாரர் ஸ்ரீ நாத முனிகளும் –
அவர் திருக் குமாரர் ஈஸ்வர முனிகளும் ஒரு நாள் அளவிலே திரு மன்னனார் திரு முன்பே சென்று தண்டன் சமர்ப்பித்து –
தேவரீர் -பரித்ராணாயா ஸாதூ நாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்கிறபடியே
திரு முகப்படியே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன அர்த்தமாக திருவவதரித்து விளையாடின அளவிலே
ஸ்ரீ வடமதுரை ஸ்ரீ திருவாய்ப்பாடி -ஸ்ரீ பிருந்தாவனம் -ஸ்ரீ யமுனா தீரம் -ஸ்ரீ கோவர்த்தன கிரி -ஸ்ரீ மத் துவாரகை –
ஸ்ரீ அயோத்தியை -ஸ்ரீ சாளக்கிராமம் -ஸ்ரீ பத்ரிகாஸ்ரமம் -ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ நரஸிம்ஹ கிரி -முதலான வடதிசையில்
உள்ள திவ்ய தேசங்கள் எங்கும் திருவடி தொழுது வர வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ மன்னனாரும் அப்படியே செய்யுங்கோள் என்று அர்ச்சா முகேன விடை கொடுத்து அருள

இவர்களும் ச குடும்பமாகப் புறப்பட்டுப் போய் உத்தர தேசத்தில் உண்டான
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தியை இடமுடை வதரி முதலான திவ்ய தேசங்களைத் திருவடி தொழுது –
யமுனாஞ்சாதி கம்பீராம் நாநா வர்த்தச ஷா குலாம் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லுகிறபடியே
அதி கம்பீரமாய்ப் பல சுழிகளை உடைத்தாய்ப் பெருகா நிற்கிற யமுனா தீரத்தில் –
ஸ்ரீ கோவர்த்தன புரம் என்கிற கிராமத்திலே -தூய பெரு நீர் யமுனைத் துறைவன் – என்கிற எம்பெருமானைத் திருவடி தொழுது
மிகவும் ப்ரீதராய் இவ்விடத்தில் நித்ய வாசம் பண்ணக் கடவோம் என்று நிச்சயித்துக் கொண்டு அவர் திருவடிகளிலே
சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு சேவித்து இருக்கிற காலத்தில்
ஸ்ரீ மன்னாரும் நம்முடைய ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏற வாரும் என்று ஸ்ரீ நாதமுனிகளுக்கு ஸ்வப்னம் காட்டி அருள –
ஈது ஒரு ஸ்வப்னம் இருந்த படி என் -என்று இவர்களும் தங்களிலே விசாரித்து -இனி நமக்குச் செய்ய அடுப்பது என் -என்று
யமுனைத் துறைவர் திரு முன்பே சென்று தண்டன் சமர்ப்பித்து இச்செய்தியை விண்ணப்பம் செய்ய
அவரும் அர்ச்சக முகேன -அப்படியே செய்யுங்கோள்-என்று தீர்த்த பிரசாதமும் பிரசாதித்து விடை கொடுத்து அருளினார்

இவர்களும் அங்கு நின்றும் குடும்ப ஸஹிதமாகப் புறப்பட்டு வாரணாசீ வழியாக எழுந்து அருளி
சப்த சப்தஸூ லோகேஷு லோகா லோகேசராசரே –நாஸ்தி நாஸ்தி சமம் க்ஷேத்ரம் உத்தமம் புருஷோத்தமம் – என்று
சதுர்தச புவனங்களிலும் ஸ்வ சத்ருச ரஹிதமாகச் சொல்லப்படுகிற ஸ்ரீ புருஷோத்தமத்து ஏற எழுந்து அருளி
ஸ்ரீ ஜெகந்நாதனையும் திருவடி தொழுது -அங்கு நின்றும் புறப்பட்டு ஸ்ரீ ஸிம்ஹாத்ரி ஏற எழுந்து அருளி
ஸ்ரீ ஸிம்ஹகிரி அப்பனையும் சேவித்து அங்கு நின்றும் போந்து
அஹோ வீர்ய மஹோ சவ்ர்யம் அஹோ பாஹு பராக்ரம நாரஸிம்ஹ பரந்தெய்வம் அஹோ பலம் அஹோ பிலம்–என்று
சொல்லப்பட்ட அஹோ பில ஸ்ரீ நரஸிம்ஹனையும் திருவடி தொழுது -அங்கு நின்றும் போந்து
பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை -என்கிற திருமலை ஆழ்வாரையும் சேவித்து திருமலை ஏற எழுந்து அருளி

மாயாவீ பரமாநந்தந் த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் –ஸ்வாமி புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே -என்கிறபடியே
ஜகந் நாடக ஸூத்ர தாரியான ஸ்ரீ வைகுண்ட நாதன் பரம ஆகாசமான பரமபதத்தையும் உபேக்ஷித்து
இவ்விபூதில் உள்ளாரை ரஷிக்கையில் உள்ள நசையாலே திருக் கோனேரிக் கரையிலே திரு மா மகளுடனே சர்வ ஸூலபனாய்
எழுந்து அருளி இருக்கிற திரு வேங்கடத்து அப்பனையும் திருவடி தொழுது
அவ்விடத்தே நித்ய வாசம் பண்ணுவோம் என்று பார்க்க
ஸ்ரீ மன்னனார் திரு உள்ளம் ஆகையால் அதி ஸீக்ரமாக அங்கு நின்றும் புறப்பட்டு ஸ்ரீ கடிகாசலத்து ஏற எழுந்து அருளிக்
கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கன்னியான ஸ்ரீ அழகிய ஸிம்ஹரையும் சேவித்து அங்கு நின்றும் போந்து
நகரீணாஞ்ச ஸர்வாசாம் புரீ காஞ்சீ விசீஷ்யதே-கிரீணாஞ்சாபி ஸர்வேஷாம் ஸ்ரேஷ்டோ ஹஸ்திகிரிஸ் ஸ்ம்ருத —
வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் –வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே -என்று
சொல்லப்படுகிற வேகவதியின் வடகரையில் உத்தமமான கச்சி மா நகரத்திலே கிரிகளில் வைத்துக் கொண்டு
ஸ்ரேஷ்டமான ஹஸ்தி கிரியின் மேலே புண்ய கோடி என்கிற திவ்ய விமானத்தின் மத்யத்திலே எழுந்து அருளி நின்று
சர்வ சேதனராலும் ஸேவ்யமாநராய் சர்வ பல பிரதரான பேர் அருளாளரையும் சேவித்து –
அவ்விடத்தில் மற்றும் உண்டான திருப்பதிகளையும் சேவித்து அங்கு நின்றும் போந்து
திரு அயிந்திர புரத்தில் ஸ்ரீ தெய்வ நாயகனையும் திருவடி தொழுது –
அங்கு நின்றும் எழுந்து அருளி திருக் கோவலூரிலே ஆழ்வார்கள் நாயனாரையும் திருவடி தொழுது –

அங்கு நின்றும் போந்து – ரங்கம் அரங்கம் இதி ப்ரூயாத ஷூதப்ரஸ்கல நாதிஷு –விஷ்ணு லோக மவாப்நோதி
ஸத்ய பாப ஷயான் நர –என்று சொல்லுகையாலே தும்மல் இருமல் தொடக்கமான கலக்கங்கள் வந்தால்
தத் தோஷ நிவ்ருத்யர்த்தமாக திருவரங்கம் பெரிய கோயில் என்று அனுசந்தேயமாய்ப் பாப ஹரமாய் மோக்ஷ பிரதமுமான
திருவரங்கப் பெரு நகரிலே எழுந்து அருளி நம் பெருமாளையும் சேவித்து -அங்கு நின்றும் எழுந்து அருளி
திருக் குடந்தையில் ஆராவமுதாழ்வாரையும் சேவித்து அங்கு நின்றும் மீண்டு ஸ்ரீ வீர நாராயண புரத்திலே
ஸ்ரீ மன்னனார் திருக் கோயிலிலே எழுந்து அருள அங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் எதிர் கொள்ள புகுந்து
ஸ்ரீ மன்னனாரைத் திருவடி தொழுது அதி ப்ரீதராய் நிற்க

ஸ்ரீ மன்னனாரும் திரு உள்ளம் போர யுகந்து அருளி அங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரையும் அழைத்து அருளி
நமக்குப் பிரியமாக இருக்கும் இவர்களை போர ஆதரித்துப் போருங்கோள்-என்று அருளிச் செய்ய
அவர்களும் அதுக்கு ஈடாகத் திரு மாளிகை கட்டிக் கொடுத்து அமுதுபடி முதல் மற்றும் திரு மாளிகைக்கு வேண்டுமவை எல்லாம்
நடத்திக் கொண்டு போருகிற காலத்திலே இவர்களும் ஸ்ரீ மன்னனாருக்குத் திரு நந்தவனம் செய்து திருமாலை கட்டிச் சாத்தி
அமுதபடி சாத்துப்படி திரு விளக்கு முதலானவைகள் எல்லாம் குறைவற நடத்திக் கொண்டு
வித்வத் கோஷ்டிகளும் ஸாஸ்த்ர ப்ரவர்த்தனங்களும் எல்லாம் பண்ணிக் கொண்டு இருக்கச் செய்தே

மேல் நாட்டில் நின்றும் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்து அருளி ஸ்ரீ மன்னனாரைச் சேவித்து அவர் திரு முன்பே
ஆராவமுதே என்கிற திருவாய் மொழியை அனுசந்தித்து அருள -அத்தை ஸ்ரீ நாதமுனிகள் கேட்டு அருளி அதி ப்ரீதராய்
அவர்களை பார்த்து ஆயிரத்துள் இப்பத்தும் -என்று இருந்தது -இப்பிரபந்தம் உங்களுக்கு முற்றாய் போமோ -என்று கேட்டருள-
அவர்களும் இப்பத்து பாட்டுமே வருவது -என்று விண்ணப்பம் செய்ய –
இவரும் உங்கள் நாட்டிலே ஸ்ரீ கோசம் உண்டோ -பாடம் போவார் உண்டோ என்று கேட்டருள –
எங்களுக்கு இவ்வளவு பாடம் வருவது -மற்றோர் இடத்தும் இல்லை -என்று அவர்கள் விண்ணப்பம் செய்ய –
இவரும் அவர்களுக்கு மன்னனாருடைய தீர்த்த பிரசாதமும் பிரசாதிப்பித்து சத்கரித்துப் போக விட்டருளி
இப்பிரபந்தம் ஸ்ரீ சடகோபர் திரு அவதரித்து அருளின திருக் குருகூர் பிரதேசத்தில் யுண்டாக வேணும் என்று
திருநகரிக்கு எழுந்து அருளி ஸ்ரீ நம்மாழ்வாரையும் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானையும் சேவித்து
அங்கே ஸ்ரீ மதுரகவிகளுடைய சிஷ்யரான ஸ்ரீ பராங்குச தாசரை சேவித்து
இவ்விடத்தில் திருவாய் மொழி ஓதினவர்கள் உண்டோ -ஸ்ரீ கோசங்கள் உண்டோ -என்று கேட்டருள –
அவரும் திருவாய் மொழியும் மற்றும் உண்டான திவ்ய பிரபந்தங்களும் நெடும் காலம் உண்டு -பிரமுஷிதமாய்த்து-

இப்போது எங்கள் ஆச்சார்யரான ஸ்ரீ மதுர கவிகள் அடியேனுக்கு கண்ணி நுண் சிறுத் தாம்பு என்கிற திவ்ய பிரபந்தத்தை
பிரசாதித்து அருளி இக் கண்ணி நுண் சிறுத் தாம்பு பிரபந்தத்தை ஸ்ரீ நம்மாழ்வார் திரு முன்பே ஏக ஆசனத்தில் இருந்து
ஏகாக்ர சித்தராய் ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டு நியமத்துடன் பன்னீராயிரம் உரு அனுசந்திக்க
ஸ்ரீ நம்மாழ்வார் பிரசன்னராவார் என்று அருளிச் செய்தார் என்ன –
ஸ்ரீ மன் நாதமுனிகளும் அந்த திவ்ய பிரபந்தத்தை அடியேனுக்கு ப்ரசாதித்து அருள வேணும் -என்று தண்டம் சமர்ப்பித்து
விநயத்துடன் விண்ணப்பம் செய்ய அவரும் மிகவும் உகப்புடனே இவருக்கு அந்தத் திவ்ய பிரபந்தத்தை ஓதுவித்து அருள –
ஸ்ரீ மன் நாதமுனிகளும் ஓதித் திருப் புளி ஆழ்வார் அடியிலே ஸ்ரீ நம்மாழ்வார் திரு முன்பே பன்னீராயிரம் உரு
ஸ்ரீ கண்ணி நுண் சிறு தாம்பு பிரபந்தத்தை நியமத்தோடே அனுசந்திக்க –

ஸ்ரீ நம்மாழ்வாரும் ஆஸ்திகோ தர்ம சீலஸ் ச ஸீலவான் வைஷ்ணவஸ் ஸூசி -கம்பீரஸ் சதுரோ தீரஸ் சிஷ்ய இத்யபீதியதே —
என்று சொல்லப்படுகிற சிஷ்ய லக்ஷணமான ஆஸ்திக்யாதி குணங்களை யுடையரான ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் நியோகேந மிகவும் பிரசன்னராய் அருளி இந்த ஸ்ரீ மன் நாதமுனிகளைக் குறித்து
அசரீரி வாணீ சொல்லுமா போலே திருவாய் மலர்ந்து -ஏன் காணும் நம்மைக் குறித்து பஹு ச உபாசியா நின்றீர் என்று கேட்டருள
ஸ்ரீ மன் நாதமுனிகளும் திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை அடியேனுக்கு இரங்கி அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ நம்மாழ்வாரும் ப்ரீதியுடனே சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதிநலம் அருளினால் போலே
ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு திவ்யம் ததாமிதே ஸஷுஸ் என்கிறபடியே திவ்ய ஞான சஷுஸ்ஸை பிரசாதித்து அருளி

ஸ்ரீ ரஹஸ்ய த்ரயத்தையும் திருவாய் மொழியையும் மற்றுமுள்ள மூவாயிர திவ்ய பாசுரங்களையும் –
அகில தர்சன தாத்பர்யங்களையும் அஷ்டாங்க யோக ரஹஸ்த்தையும் ப்ரசாதித்து அருளினார் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -என்று சொல்லுகிறபடியே
ஸ்ரீ மன் நாதமுனிகளும் க்ருதார்த்தராய்ப் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானையும் ஸ்ரீ நம்மாழ்வாரையும் சேவித்து இருக்கிற அளவிலே
ஸ்ரீ மன்னனார்-இத் திவ்யப் பிரபந்தங்களை நம்முடைய முன்பே ஒரு உருச் சொல்ல வாரும் என்று
ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய இவரும் மற்றை நாள்
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானையும் ஸ்ரீ நம்மாழ்வாரையும் சேவித்து இச்செய்தியை விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்மாழ்வாரும் அர்ச்சக முகேன -ஆகில் நீர் ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏறப் போய் இத் திவ்ய பிரபந்தங்களை
சம தம ஆத்ம குணங்களை யுடையரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அறியக் கற்று வல்லராம்படி ஓதுவியும் என்று நியமித்து
தீர்த்த பிரசாதங்களை பிரசாதித்து விடை கொடுத்து அருளினார் –

ஸ்ரீ மன் நாதமுனிகளும் மீண்டு ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏற எழுந்து அருளும் போதே
வழியில் உள்ள திருப்பதிகளையும் அந்தத் திருப்பதி வைபவமான திவ்ய பிரபந்தங்களையும் அனுசந்தானம்
பண்ணிக் கொண்டு சேவித்து மீண்டு ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏற வந்து புகுந்து
ஸ்ரீ மன்னனாரைத் திருவடி தொழுது நின்று தம்மை ஆழ்வார் விசேஷ கடாக்ஷம் பண்ணித் திவ்ய பிரபந்தங்களையும்
ப்ரசாதித்து அருளின செய்தியை ஸ்ரீ மன்னனாருக்கு விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ மன்னனாரும் மிகவும் உகப்புடனே ஸ்வப்ன முகேனே ஓர் உரு இவர் உடனே அருளிச் செய்து –
சம்சாரிகளை உஜ்ஜீவிப்பைக்காக கரண களேபரங்களைக் கொடுத்தும் -சாஸ்திரங்களைத் தந்தும் -நாமே வந்து பிறந்தும்
இவை இத்தனையும் செய்த இடத்திலும் கார்யகரம் ஆயிற்று இல்லை –

ஆனபின்பு ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்த முகேன வாய்த்து திருத்திற்று -இப்படிப்பட்ட திவ்ய பிரபந்தங்கள்
பிரமுஷிதமாய்க் கிடக்க ஒண்ணாது -என்று பார்த்து அருளி -இவரைக் கொண்டு இவற்றைப் பிரகாசிப்பிக்க வேணும் –
என்று நினைத்து -நீர் இவற்றை இயலும் இசையும் ஆக்கும் -என்று அர்ச்சக முகேன நியமித்து அருள –
ஸ்ரீ மன் நாதமுனிகளும் தம்முடைய மருமக்களான கீழை அகத்து ஆழ்வாரையும் மேலை அகத்து ஆழ்வாரையும் அழைத்து அருளி
ஆழ்வார் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி ப்ரசாதித்து அருளின இத் திவ்ய பிரபந்தங்களை இயலும் இசையும் ஆக்க வேணும் –
அது செய்யும் இடத்து இன்கவி பாடும் பரம கவிகள் அருளிச் செய்ததாய் –
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன்மாலையான திவ்ய பிரபந்தங்கள் ஆகையால் இத்தை
திவ்ய கானத்திலே சேர்த்துப் பாட வேண்டும் -என்று அவர்களையும் கூட்டிக் கொண்டு
ஸ்ரீ வேத வ்யாஸ பகவான் வேதங்களை உதாத்த அநுதாத்த சவரித பிரசய யுக்தங்களாக உச்சரிக்கலாம் படி பண்ணினால் போலே
ஸ்ரீ மன் நாதமுனிகளும் இத் திவ்ய பிரபந்தங்களைத் திவ்ய கானத்திலே அடைத்து
இயலும் இசையும் ஆக்கிப் பாடுவித்து அருள இதி லோகத்தில் எங்கும் ப்ரஸித்தமாயிற்று

அநந்தரம் கங்கை கொண்ட சோழ புரத்திலே அந்த ராஜ்யத்துக்கு ராஜாவான சோழன் வாசலிலே தேவ கானம் பாடுவாள் ஒருத்தியும்
மனுஷ்ய கானம் பாடுவாளுமாய் ஒருத்தி இரண்டு வார ஸ்த்ரீகள் தங்களில் விவாதமாய் வந்து ராஜ சந்நிதியில்
வித்வான்களைத் திரட்டிப் பாட ராஜாவும் அங்கு உள்ள வித்வான்களும் மனுஷ்ய கானம் பண்ணுகிறவளைக் கொண்டாடி
அவளுக்கு மணியும் மாலையும் தியாகமும் கொடுத்துப் போக விட்டுத் தேவ கானம் பாடினவளை அநாதரித்துத் தள்ளி விட
அவளும் நான் பாடுகிற கானம் தேவதைகள் அறியும் அத்தனை –என்று தேவாலயங்கள் தோறும் புக்குப் பாடிக் கொண்டு வந்து
ஸ்ரீ மன்னனார் திருக் கோயிலிலே அவர் திரு முன்பே பாட ஸ்ரீ மன் நாதமுனிகளும் அத்தைக் கேட்டு உகந்து கொண்டாடி
அவளுக்கு ஸ்ரீ மன்னனாருடைய தீர்த்த பிரசாதமும் திருப் பரியட்டமும் பிரசாதிப்பித்து அருள அவளும் இவரைத் தெண்டன் இட்டுப் போய்
இந்த ராஜாவுடன் -நான் பாடுகிற தேவ கானம் அறிவாராய் ஸ்ரீ மன் நாத முனிகள் என்னும் திரு நாமம் உடையார் ஒருவர்
ஸ்ரீ வீர நாராயண புரத்திலே ஸ்ரீ மன்னனார் திருக் கோயிலிலே இருக்கிறார் என்ன –
ராஜாவும் ஸ்ரீ மன் நாதமுனிகளை எழுந்து அருள வேணும் என்று அழைத்து விட
இவரும் திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை திவ்ய கானத்திலே அடைத்தோம் -நாட்டார் இதன் வைபவம் அறியார்கள்
இத்தை நாம் அறிவிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி ராஜ கோஷ்ட்டி ஏற எழுந்து அருள
ராஜாவும் எழுந்து இருந்து தண்டன் சமர்ப்பித்து ஆசனம் இட

இவரும் எழுந்து அருளி இருந்து ஆசீர்வதிக்க -ராஜாவும் அதி ஆதாரத்துடன் இவள் பாடுகிற தேவ கானம் தேவரீர் அறிவீரோ -என்று கேட்க –
இவரும் மானுஷ்ய கானம் பாடுகிறவளையும் தேவ கானம் பாடிகிறவளையும் பாடச் சொல்லி கேட்டருளி – ராஜாவைக் குறித்து –
இவள் பாடுகிற மானுஷ்ய கானம் உங்களுக்குத் தெரியும் இவள் பாடுகிற தேவ கானம் தேவர்களுக்குத் தெரியுமது போக்கி
உங்களுக்குத் தெரியாது என்ன -ராஜாவும் தேவரீர் அறியும் என்னும்படி நாங்கள் அறியும்படி எங்கனே என்ன —
நாற்பது நூறு தளத்தைச் சேர ஒற்றிச் சொல்லு இது எத்தனை எடை இது எத்தனை இடை -என்று ஸ்ரீ மன் நாதமுனிகள் அருளிச் செய்ய
அவற்றை ராஜாவும் தனித் தனியே நிறுத்திச் சோதித்துப் பார்க்க -அவை எல்லாம் முந்தரை ஏறாமல் குறையாமல் இருந்தபடியைக் கண்டு
மிகவும் ஆச்சர்யப்பட்டு ஸ்ரீ மன் நாத முனிகளுடைய ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு பஹு த்ரவ்யத்தை சமர்ப்பிக்கத் தேட இவரும்
சதுர்முக பசுபதி சதமக ப்ரப்ருதி பதங்களை நிராகரித்து இருக்கும் நிஸ்ப்ருஹராகையாலே -நமக்கு இவை ஒன்றும் வேண்டா என்று
ராஜாவை ஆசீர்வதித்து -மீண்டும் ஸ்ரீ வீர நாராயண புரத்து எழுந்து அருளி ஸ்ரீ மன்னனார் திருவடிகளில் கைங்கர்ய ஏக நிரதராய்
வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்திலே இவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தவர்களாய்

சரீரம் வஸூ விஞ்ஞானம் வாச கர்ம குணாந ஸூந் குரவர்த்தந்தா சயேத்யஸ்து ச சிஷ்யோ நேதரஸ் ஸ்ம்ருத -என்று
சொல்லப்படுகிற குணங்களை உடையரான
ஸ்ரீ உய்யக் கொண்டார் – ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் -ஸ்ரீ நம்பி கருணாகர தாசர் -ஸ்ரீ ஏறு திருவுடையார் –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை ஆண்டான் -ஸ்ரீ வான மா மலை தேவி ஆண்டான் -ஸ்ரீ உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை –
ஸ்ரீ சோகத்தூர் ஆழ்வான் -ஆகிய எண்மருக்கும்
அஹோ க்வயஸ்ய மஹாத்ம்யம் அஹோ வீர்ய மஹோ பலம் -மந்த்ர ரத்னம் ஸூ பகரம் வேத சாரம் சனாதனம் -என்கிறபடியே
மந்த்ர ரத்னம் என்று சிலாகித்துச் சொல்லப்படுகிற த்வயார்த்தத்தையும் பிரசாதித்து –
திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் ஓதுவித்து -வேத சாஸ்திரங்களையும் அதிகரிப்பித்து –
ரஹஸ்ய த்ரய சாரார்த்தமாய் -சகல ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயமான ஸ்ரீ புருஷ நிர்ணயத்தையும்
ந்யாஸ தத்துவத்தையும் அருளிச் செய்து -கரிய கோலத் திரு உருவை தியானித்துக் கொண்டு யோகத்தில் எழுந்து அருளி இருந்தார்

ராஜா இவருடைய யோக வைபவத்தைக் கேட்டு அங்கு ஏறப் போய் ஸ்ரீ மன்னனாரையும் சேவித்து –
தானும் ஸ்த்ரீகளுமாய் இவர் யோகத்தில் எழுந்து அருளி இருக்கிறபடியைக் கண்டு ஆச்சர்யப்பட்டு மீண்டு போகிற அளவில் –
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் -என்கிறபடியே அவர்களை ஸ்ரீ கிருஷ்ணனும் கோபிமாருமாக நினைத்து
அவர்கள் பின்னே கங்கை கொண்ட சோழ புரத்துக்கு ஏற எழுந்து அருளா நிற்க இது கேட்டு
ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ குருகை காவல் அப்பன் உள்ளிட்ட முதலிகள் அடையப் பின் தொடர்ந்து எழுந்து அருளிக்
கங்கை கொண்ட சோழ புரத்தே கண்டு தேவரீர் இப்படி செய்யலாமோ -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ மன் நாதமுனிகளும் ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்டுகளுமாக நினைத்து அவர்கள் உடனே வந்தேன் என்று அருளிச் செய்து
மீண்டு எழுந்து அருளினார்
சில நாள் கழிந்தவாறே பின்னையும் ஒரு கால் ராஜா வந்து ஸ்ரீ மன்னனாரை சேவித்து மீண்டு போகிறவன்
தன் சாமந்தன் தலையிலே அடி இட்டு யானைக் கழுத்தில் ஏற இத்தை ஸ்ரீ மன் நாதமுனிகளைக் கண்டு
சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ராதிகள் தலையிலே அடி இட்டு பெரிய திருவடியை மேற்கொள்ளும்படி இது வாகாதே என்று
மோஹித்தார்-என்று பிரசித்தம் இறே

பின்னையும் சிறிது காலம் யோகத்தில் எழுந்து அருளி இருந்து ஸ்ரீ குருகைக் காவல் அப்பனைப் பார்த்து –
நீர் யோக ரஹஸ்யத்தை அப்யசியும் -என்று அஷ்டாங்க யோக க்ரமத்தை அவருக்கு அருளிச் செய்து அருளினார் –
ஸ்ரீ உய்யக் கொண்டாரைப் பார்த்து -நீரும் யோக ரஹஸ்யத்தை அப்யசியும் என்ன
ஸ்ரீ உய்யக் கொண்டாரும் -பிணம் கிடக்க மணம் புணரலாமோ–இந்த சரீர அவசானத்திலே அப்யஸிக்க அமையும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் நீர் சாஸ்திரங்களையும் திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் ப்ரவர்த்திப்பியும் -என்று அருளிச் செய்து –
தர்ம புத்ரராகிய ஸ்ரீ ஈஸ்வர முனிகளைப் பார்த்து -உமக்கு ஒரு குமாரர் உண்டாக்கப் போகிறார் -அவனுக்கு யமுனைத் துறைவன் -என்று
திரு நாமம் சாத்தும் என்று அருளிச் செய்து –
ஸ்ரீ உய்யக் கொண்டாரையும் ஸ்ரீ குருகைக் காவல் அப்பனையும் குறித்து உங்களுக்கு நாம் சொன்ன தர்சன தாத்பர்யங்களையும்
யோக ரஹஸ்யார்த்த விசேஷங்களையும் யமுனைத் துறைவனுக்கு உபதேசியுங்கோள்-என்று நியமித்து அருளி
முன்பு போலே யோகத்தில் எழுந்து அருளி இருந்தார்

அநந்தரம் அந்த ராஜா ச பரிகரனாய் வேட்டைக்கு வந்து மீண்டு போகா நிற்கச் செய்தே இவருடைய பெண் பிள்ளைகள் வந்து
ஐயா நம் அகத்தில் ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண் பிள்ளையாக வந்து ஸ்ரீ மன் நாதமுனிகள் எங்கே என்று
தேடித் போனார்கள் என்றவாறே ஸ்ரீ மன் நாதமுனிகளும் அவர்கள்
அக்ரத பிரயவ் ராமஸ் சீதா மத்யே ஸூ மத்யமா ப்ருஷ்டதஸ்துத நுஷ் பாணீர் லஷ்மனோ அநுஜகா மஹா -என்று சொல்லப்பட்ட
பெருமாளும் பிராட்டியும் இளைய பெருமாளும் ஐந்தர வ்யாக்ரண பண்டிதனுமாக அடுக்கும் என்று திரு உள்ளம் பற்றிப் பின் தொடர்ந்து
எழுந்து அருளி வழியில் எதிர்ப்பட்ட பலரையும் -இப்படி போகிறவர்களைக் கண்டீர்களா என்று கேட்டு அருள
அவர்களும் போகிறார்கள் போகிறார்கள் என்று சொல்ல கடுநடையிட்டு நெடும் தூரம் எழுந்து அருளிக் கங்கை கொண்ட சோழ புரத்திலே
கீழ் வாசல் அளவாக எழுந்து அருளி அங்கு உள்ளவர்களை இப்படி போகிறவர்களைக் கண்டீர்களோ என்று கேட்டருள –
அவர்களும் கண்டிலோம் என்ன போகிற வில்லிகளும் காணக் காண மறைந்திட யவரும் ஏங்கி அடித்துக் கொண்டு விழுந்து மோஹித்து
அதுவே ஹேதுவாக
பரந்து வைஷ்ணவ லோகம் நித்ய அநந்தம் -ஆனந்தம் -ஸூகாவஹம் தத்ர சம்வாஹி நீந்திவ்யாம் விரஜாம் வேத சம்பவாம் சர்வே
ஹிரண்மயாஸ் தத்ர சர்வே வேத மயாஸ் ஸூபா அப்ராக்ருத மயா நித்யா புநரா வ்ருத்தி வர்ஜிதா –
ஏகாந்தி நஸ் சதா ப்ரஹ்ம த்யாநிநோ யோகிநோ ஹியே தேஷான் தத் பரமம் ஸ்தானம் யத்வை பஸ்யந்தி ஸூரய-என்கிறபடியே
பிணை கொடுக்கிலும் போக ஒட்டாத -அடியார் நிலாகின்ற ஸ்ரீ வைகுந்த மஹா நகரை பிராபித்து அருளினார்

இச் செய்தியை ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் ஸ்ரீ ஈஸ்வர முனிகள் முதலானோர் கேட்டு வ்யாகுலப்பட்டு-
அங்கு ஏறப் போய் -அவருடைய விமல சரம விக்ரஹத்தை சேவித்து -தங்கள் கண்ணிலும் நெஞ்சிலும் தேக்கிக் கொண்டு
சோகார்த்தமாகக் கிடந்து துடித்துத் தங்களிலே தேறித் தரித்து நின்று சரம கைங்கர்யத்தை ஸ்ரீ ஈஸ்வர முனிகள் திருக் கையாலே
ப்ரஹ்ம மேதா ஸம்ஸ்கார விதி அடங்கச் செய்வித்துப் பள்ளிப் படுத்து ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏற எழுந்து அருளி
மற்றும் செய்ய வேண்டும் க்ருத்யங்கள் எல்லாம் செய்வித்தார்கள் –
ஸ்ரீ குருகைக் காவல் அப்பனும் ஸ்ரீ மன் நாத முனிகள் எப்போதும் யோகத்தில் எழுந்து அருளி இருக்கும் இடத்துக்கு
அருகே யோகத்தில் எழுந்து அருளி இருந்தார் –

ஸ்ரீ மன் நாதமுனிகள் திரு நக்ஷத்ரம் ஆனி மாசம் அனுராதை

அவர் தனியன் –
வ்யோம் ந பரஸ்தாத் ஸவிதம் ச மேத்ய லஷ்ம்யா நியோகாத் குருகாதிராஜ சமந்தர ரத்னந் த்வயமாஹ
யஸ்மை நாதாய தஸ்மை முநயே நமோஸ்து –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: