ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ திவ்ய பிரபந்த ப்ராமாண்ய சமர்த்தநம் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ திவ்ய பிரபந்த ப்ராமாண்ய சமர்த்தநம் –

இப்படி தத்வ தர்சிகளாக அவதரித்து அருளின இவ்வாழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள்
முக்கிய தமமான ப்ரமாணங்களாய் இருக்க -தேவதாந்த்ர விஷயமாக
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மூவுலகும் விளைத்த உந்தி -என்றும்
பூவில் நான்முகனைப் படைத்த தேவன் -என்றும்
நான்முகனை மூழ்த்த நீர் உலகு எல்லாம் படி என்று முதல் படைத்தாய் -என்றும்
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
பிரமன் சிவன் இந்த்ரனாதிக்கு எல்லாம் நாபிக் கமல முதல் கிழங்கு -என்றும்
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து -என்றும்
இரும் தண் கமலத்து இரு மலரினுள்ளே திருந்து திசை முகனைத் தந்தாய் -என்றும்
நின் உந்திவா அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் -என்றும்
நான்முகனை நாராயணன் படைத்தான் என்றும்
உந்தியில் ஏற்றினாய் நான்முகனை -என்றும்
உந்தி எழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் -என்றும்
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் -என்றும்
இப்படி ஆழ்வார்கள் எல்லாரும் ப்ரஹ்ம ருத்ராதிகளை சர்வேஸ்வரன் தானே ஸ்ருஷ்ட்டித்தான் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத்துந்தித் தலத்து எழு திசை முகன் -என்றும்
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழ தன்னுள் வைத்து -என்றும்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் ஒரு விடமும் பெருமாற்கு அரன் -என்றும்
எறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன்-என்றும்
சிவனொடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாகம் -என்றும்
மலர் மகள் நின்னாகத்தாள் செய்ய மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான நின் ஆகத்து இறை -என்றும்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்துக்
கறை தங்கு வேல் தடம் கண் திருவாய் மார்பில் கலந்தவன் -என்றும்
விஷ்ணோஸ் ஸ்ரீர் அநபாயிநீ-என்றும் சொல்லப்படுமவளாய்
இறையும் அகலகில்லாத நித்ய சித்த மங்களாவஹையாய்ப் பரம மஹிஷியான பெரிய பிராட்டியாருடனே
ரஜஸ் தாமஸ் குண மிஸ்ராரான ப்ரஹ்ம ருத்ரர்களுடன் வாசி அறத் தன் திரு மேனியில்
இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறான் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
நிரை மலர்ப் பாதங்கள் சூடிக் கண்ணபிரானைத் தொழுவார் ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும்
இந்திரனும் மற்றை அமரர் எல்லாம் -என்றும்
கள்வா எம்மையும் எழு உலகையும் நின் உள்ளே தோற்றிய இறைவன் என்று வெள்ளேறன் நான்முகன்
இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவார் -என்றும்
நாடொறும் வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும் செம்மையால்
அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவர் என்றும்
நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் திருவேங்கடத்தானே -என்றும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை -என்றும்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் என்றும்
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு மற்றுமுள்ள
வானவர் கற்ற பெற்றியால் வணங்கு பாத -என்றும்
நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மால் -என்றும்
அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் செழும் கதிரோன்
ஒண் மலரோன் கண் நுதலோன் என்றே தொழும் தகையார் நாளும் தொடர்ந்து என்றும்
இப்படி ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகள் எம்பெருமானைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணித் திரிவார்கள் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
கேழ்த்த சீரான் முதலாகக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்த அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே -என்றும்
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு
ஏந்தி வணங்கினால் –உன் பெருமை மாசூணாதோ மாயோவே –என்றும்
மாசூணா யுன மலர்ச்சோதி மழுங்காதே -என்றும்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாது அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே -என்றும்
இப்படி ப்ரஹ்ம ருத்ராதிகள் சத்வ குணோத்தரான போது எம்பெருமானைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணினால்
எம்பெருமானுக்கு அவத்யாவஹம் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
நளிர் மதிச் சடையன் என்கோ நான்முகக் கடவுள் என்கோ -என்றும்
சிவனாய் அயனானாய் -என்றும்
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான் மூகக் கடவுளே -என்றும்
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் சடையாய் வாய்த்த என் நான்முகன் -என்றும்
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை அகம் பால் கொண்ட நான் முகனை -என்றும்
முனியே நான்முகன் முக்கண் அப்பா -என்றும்
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று -என்றும்
இப்படி இத்திவ்ய பிரபந்தங்களிலே ஆதி மத்ய அவசானமாக ப்ரஹ்ம ருத்ராதிகளிலே சர்வேஸ்வரன் தானாக அருளிச் செய்தும்
ஆக இப்படி ஒரு கால் அருளிச் செய்தது ஒரு கால் அருளிச் செய்யாது இருக்கையாலே
இவற்றை முக்கிய தமமான பிரமாணம் என்று விஸ்வசிக்கலாய் இருந்தது இல்லையே என்னில்-விஸ்வசிக்கக் கூடும்

எங்கனே என்னில் –
இவ்வாழ்வார்கள் தாங்கள் தங்களுக்கு தேவதாந்த்ர விஷய வைராக்யம் உண்டு என்று தோற்ற
ஓ ஓ உலகினது இயல்வே -ஈன்றோள் இருக்க மணை நீராட்டிப் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து
தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்பப் புடைப்பல தானறி தெய்வம் பேணுதல்
தான் புல்லறிவாண்மை பொருந்தக்காட்டி -என்றும்
எம்பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையோமே யாமே -என்றும்
பிதிரும் மனம் இலேன் பிஞ்சகன் தன்னோடு எதிர்வன் அவன் எனக்கு நேரான் -என்றும்
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்-என்றும்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் -என்றும்
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே என்றும்
அவ்வளவும் அன்றிக்கே

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் சுடர் மிகு ஸ்ருதியும் இவை உண்ட சுரனே -என்றும்
போதின் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும் போது தங்கு நான் முகன் மகன் அவன் மகன் சொலின்
மாது தங்கு கூறன் ஏற தூர்தி என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை -என்றும்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசிக் கிடந்ததே என்றும்
கபால நன் மோக்கத்துக்குக் கண்டு கொண்மின் -என்றும்
மார்க்கண்டேயனும் கரியே கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -என்றும்
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
சத்தியம் காண்மின் இனைய சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
இப்படி பிரமாணத்தாலும் பிரத்யஷத்தாலும் சாக்ஷியாலும்

யதே தத் பரமம் ப்ரஹ்ம லோகே வேதேஷு பட்யதே -சதேவ புண்டரீகாஷஸ் ஸ்வயம் நாராயணா பர -என்று
சொல்லப்படுகிற ஸ்ரீமன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று சாதித்தும்
அதுவும் அன்றியே
பெரியாழ்வார் பர பராணாம் புருஷோ யஸ்ய துஷிடோ ஜநார்த்தன ச ப்ராப்னோத்யஷயம் ஸ்தான மேதத் சத்யம் மயோதிதம் -என்றும்
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -ஏதேந சத்ய வாக்யேந சார்வார்த்தான் சாதயாம் யஹம் -என்றும்
சொல்லுகிற ரிஷிகள் வாக்கியங்களையும் -அவற்றுக்கு அடியான சுருதி வாக்கியங்களையும் கொண்டு
வித்வத் கோஷ்டியான ராஜ ஸ்தானத்தில் பரதத்வ நிர்ணயம் பண்ணி விரைந்து கிழி அறுத்தும்
இப்படி நிச்சயம் பண்ணின ஆழ்வார்கள் ஒருகால் அருளிச் செய்தது ஒருகால் அருளிச் செய்திலர்கள் என்ன ஒண்ணாது –
ஆனால் இவற்றுக்கு கருத்து என் என்னில்
அந்த தேவதாந்தரங்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களுக்கு ஈடாக அருளிச் செய்தார்கள் இத்தனை

எங்கனே என்னில்
இவர்கள் கர்ம வஸ்யரில் பிரதான ஆகையால் –
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ -புநஸ் த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி ஸூஸ்ரும -என்றும்
மஹா தேவஸ் சர்வமேதே மஹாத்மா ஹூத்வா ஆத்மாநம் தேவதேவோப பூவ–என்றும்
சொல்லுகிறபடியே பூர்வ ஜென்மங்களில் ப்ரஹ்ம பதம் ருத்ர பதம் பெறுகைக்காக தபஸ் ஸூ பண்ணுகையாலே
தத்பல போகார்த்தமாக எம்பெருமானாலே ஹ்ருஷ்டரானார்கள் என்றும்
இவர்கள் எம்பெருமான் திரு மேனியைப் பற்றி லப்த ஸ்வரூபராய் இராத போது இவர்களுக்கு சத்தை குலையும் என்றும்
இவர்கள் சத்வ உத்ரிக்தரான போது பகவத் ஸ்தோத்ராதிகளுக்கு யோக்யராய் இருப்பர்கள் என்றும்
இவர்கள் ராஜஸ தாமச பிரசுரரான போது அஹங்காரத்தாலே பண்ணும் துர்மானம் கனத்து இருக்கையாலே
இவர்கள் எம்பெருமானைக் கிட்டி
இவர்களுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் அதீனமாய் சரீரவச் சேஷமாய் இருக்கையாலும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமான் அச்யுத பிரபு ததம் ஸாத் சக்திமந்தோ அந்யே ப்ரஹ்ம ஈஸா நாதாயோ அமரா -என்கையாலும்
அவன் தானாகவே அருளிச் செய்தும் போருகையாலே இத்திவ்ய பிரபந்தங்களை முக்கிய தமமான பிரமாணங்கள் என்னக் குறை இல்லை

இவர்கள் சர்வேஸ்வரனுக்கு சரீரமான படியை
ச ஏவ ஸ்ருஜ்யஸ் ச சர்வ கர்த்தா ச ஏவ பாத்யத்தி ச பால்ய தேச ப்ரஹ்மாத்ய வஸ்தாபிர சேஷ மூர்த்திர்
விஷ்ணுர் வரிஷ்டோ வரதோ வரண்ய -என்றும்
கல்பாந்தே ருத்ர ரூபீ யோக்ர சதே சகலம் ஜகத் -தமாத்யம் புருஷம் விஷ்ணும் ப்ரணதோ அஸ்மி ஜனார்த்தனம் -என்றும்
ஸ்ருஷ்டி ஸ்திதி யந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் ச சம்ஞ்ஞாம்யாதி பகவாநேக ஏவ ஜநார்த்தன -என்றும்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்-என்றும்
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே என்றும் அருளிச் செய்தார்கள்

இவர்கள் சர்வேஸ்வரனுக்கு சரீர பூதராக-அவன் தான் ஆத்மாவாக -இவர்களை அவன் தானாகச் சொல்லும்படி
எங்கனே என்னில்
சரீர வாச சப்தம் சரீர பர்யந்த ஸ்வார்த்த அபிதானம் பண்ணக் கடவது இறே
ஒரு சரீரீ யானவன் ஸ்தூலோஹம் க்ரூசோஹம் -என்று தானும் சொல்லி-
பிறரும் நீ தடித்தாய் இளைத்தாய் என்று சொல்லுமோபாதி இவர்களையும் சர்வேஸ்வரன் தானாகச் சொல்லக் குறையில்லை –
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் -என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்றும்
தேவராய் நிற்கும் அத்தேவு மத்தேவரின் மூவராய் நிற்கு முது புணர்ப்பும் யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்றும்
முதலாவார் மூவரே யம்மூவர் உள்ளும் முதலாவான் முரி நீர் வண்ணன் –என்றும்
இத்யாதிகளாலே அவனை ஒழிந்த சகல சேதன அசேதனங்களும் அவன் தானாகவே அருளிச் செய்தார்கள்

இப்படி அருளிச் செய்கைக்கு அடி
யஸ்ய ஆத்மா யஸ்ய ப்ருத்வீ சரீரம் -என்கிறபடியே சர்வேஸ்வரனுக்கு ஆத்மாவும் சரீரம் அசித்தும் சரீரம் என்று
வேதத்திலே சொல்லுகையாலும்
விஸ்வ ரூபஞ்ச மாமஜம் -என்று அவன் தானே அருளிச் செய்கையாலும்
திருத் தேர் தட்டிலே அர்ஜுனனுக்கு விஸ்வரூபத்தைக் காட்டுகையாலும் அவன் தானாகச் சொல்லக் குறை இல்லை
க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் சர்வ தேஹி நாம் -ஆவாந்த வாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே
நாராயணன் பக்கலிலே ப்ரஹ்ம ருத்ராதிகள் ஜாதரானார்கள் என்றும்
இவர்கள் திரு நாபீ கமலத்தையும் தக்ஷிண பார்ஸ்வத்தையும் பற்றி லப்த ஸ்வரூபராய் இருப்பர்கள் -என்றும்
பாதேந கமலாபேந ப்ரஹ்ம ருத்ரார்ச்சிதேந ச -என்று இவர்கள் சேஷ பூதராய் எம்பெருமானை அர்ச்சிப்பவர்கள் என்றும்
இவர்கள் ததீனமான சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையவர் ஆகையால்
எம்பெருமான் தானே என்றும் ஸ்ருதி இதிஹாச புராணங்களும் சொல்லிற்றின

பரமாத்மா பரோயோ அசவ் நாராயண சமாஹ்வய தஸ்ய அநபாயிநீ சக்திர் தேவீ தத் தர்ம தர்மிநீ-என்கிறபடியே
எத்தனையேனும் பிரிவு ஆற்றகில்லாத பெரிய பிராட்டியாரோபாதி ப்ரஹ்மருத்ராதிகளும்
இவன் திரு மேனியில் சர்வ காலமும் இருப்பர்களோ என்னில் –
ஆபத்காலத்தில் எம்பெருமான் திருமேனியில் ஒதுங்க அவர்களுக்கும் இடம் கொடுக்கும் அத்தனை அல்லது
எப்போதும் இரார்கள்-
இது தான் சர்வேஸ்வரனுக்கு மஹத்தான சீல குணமாகையாலே ஆழ்வார்கள் எப்போதும் அத்தையே
அருளிச் செய்து கொண்டு போருவர்கள்
தாள தாமரையான் உனது உந்தியான் வாள் கொள் ஈண் மழுவாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் நாளும் என் புகழ் கோ யுன சீலமே-என்றும்
அக்கும் புலியின தளுமும் உடையாராவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்-என்றும் சொல்லக் கடவது இறே
கலகங்களானால் அடைய வளைந்தானுக்கு உள்ளே இன்ன ஜாதி என்னாமல் எல்லாரும் கூடி இருந்து
கலஹம் தெளிந்தவாறே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னான் பற்று இவ்விடம் இன்னான் பற்று என்று சொல்லுமா போலே
என்று நஞ்சீயருக்குப் பட்டர் அருளிச் செய்தார் இறே

கீழ் இவர்களுக்கு சொன்ன இத்தனையும் நமக்கும் ஒக்கும் என்று அருளிச் செய்தார்கள் -எங்கனே என்னில்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று -என்றும்
என்னை ஆக்கிக் கொண்டு -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும் -இவ்வளவும் அன்றியே
என்னைத் தன் பொன்னடிக் கீழ் இருத்தி என்றும்
இங்கன் அன்றிக்கே
குல தொல் அடியேன் என்றும் -குடி குடி வழி வந்து ஆட் செய்யும் தொண்டர் என்றும்
அடியோம் போற்றி என்றும் -லிங்கன் அன்றிக்கே
அரு வினையேன் களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்-என்றும் -இவ்வளவும் அன்றியே
உயிர் வேறு இன்றி ஒன்றாகவே என்றும் தமக்கு ஒன்றும் பிறர்க்கு ஒன்றுமாகாமல் அருளிச் செய்தார் இறே

இனி இவர்களோடு சமரோ இவ்வாழ்வார்கள் என்னில் -அன்று –
கர்மத்தை இட்டு ஸ்ருஷ்ட்டித்தான் என்றது அவர்களை –
ஸ்வ இச்சையால் அவதரிப்பித்தான் என்றது இவர்களை –
ஆபத் காலத்தில் ஆபன் நிவாரண அர்த்தமாகக் காதாசித்கமாகத் தன் திரு மேனியில் இடம் கொடுத்து வைத்தான் என்றது அவர்களை
நீக்கமில்லா அடியார் -என்னக் கடவது இறே இவர்களை
ராஜஸ தாமச மிஸ்ர சத்வம் தலை எடுத்த போது பகவத் விஷய ப்ரவ்ருத்தி கனத்து இருக்கையாலே சேஷ பூதர் என்கிறது அவர்களை
முக்குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று என்றும்
நிலை நின்ற தொண்டரான அறம் திகழ் மனத்தவர் என்றும் சொல்லுகிற ஸூத்த சத்வ நிஷ்டராகையாலே
தெளிவுற்ற சிந்தையரான சேஷ பூதர் என்கிறது இவர்களை
அவர்கள் சத்வ குணம் குலைந்து ராஜஸ தாமச பிரசுரரான போது அஹங்கரித்து கோயம் விஷ்ணு என்றும்
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த என்றும் இப்படி பாணாசூர யுத்தாதிகளிலே
ஈஸ்வரனோடே எதிர் அம்பு கோக்கையாலே ஈஸ்வரனைக் கிட்டுகை அவத்யம் என்றும்
பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு உண்டான ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளிலே பொல்லாங்குகளை அனுசந்தித்தும்
பிதிரும் மனம் இலேன் பிஞ்சகன் தன்னோடும் எதிர்வன் அவன் எனக்கு நேரான் என்று தாமும் அருளிச் செய்தார் இறே –
ஆகையால் சமர் என்ன ஒண்ணாது

ஆனால் உத்க்ருஷ்ட வர்ண ஜாதர் அன்றிக்கே நிக்ருஷ்ட வர்ண ஜாதரான இவ்வாழ்வார்கள் செய்து அருளினதாய்
பாஷா கான ரூபமாய் பவ்ருஷேயமாய் அநித்யமாய் இருக்கிற இவற்றை அபவ்ருஷேயமாய் நித்யமாய்
நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தோடே ஓக்க த்ருட தர பிரமாணம் என்னும்படி எங்கனே என்னில்
இவர்கள் உத்க்ருஷ்ட ஜென்மத்தில் அவதரித்தால் உத்க்ருஷ்ட ஜென்ம ஜாதர்க்கு ஒழிய அபக்ருஷ்ட ஜென்ம ஜாதர்க்கு
ஈடேற வழி இல்லை என்றதாம் ஆகையாலும்-பிரபத்தி சர்வாதிகாரம் ஆகையாலும் –
இவர்கள் சம்சார நிமக்நரையும் யுயர்த்தத் தாழ இழிந்தார்கள் இறே

ஹரிகீர்த்திம விநைவாந்யத் ப்ராஹ்மணேன நரோத்தம -பாஷா காநம் நகா தவ்யம் தஸ்மாத் பா பந்த்வயா க்ருதம் –
என்கையாலே பகவந் நாம சங்கீர்த்தனத்துக்கு பாஷா கான ரூப தோஷம் இல்லாமையாலும்
வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்தாகையாலும்
செந்நிறத்த தமிழ் ஓசை வட சொல்லாகி -என்றும்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் -என்றும்
பொய்யில் பாடல் -என்றும்
பொய்ம்மொழி ஓன்று இல்லா மெய்மையாளன் -என்றும்
ஆகஸ்த்யமும் அநாதி -என்று சடத்வேஷி கலிஜித் வசன சித்தம் ஆகையாலும்
பாஷா கான ரூப தோஷமே இல்லை

இனி புருஷ புத்தி மூலமான தோஷத்துக்கு -யானாய்த் தன்னை தான் பாடி தென்னா என்னும் என் அம்மான் -என்கிறபடியே
இவ்வாழ்வார்கள் நாவில் இருந்து இன்கவி பாடும் பரம கவிகளாய் நன்கு வந்து -உவந்து -பரம சேதனான
பர வா ஸூ தேவன் தானே நன்றாகக் பாடி பிரகாசிப்பததாகையாலும்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த என்றும்
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் -என்றும் சொல்லுகிறபடியே ஹம்ஸாவதாரமாய்
ப்ரஹ்மாவுக்கு வேதத்தை உபதேசித்தால் போலேயும்
வ்யாஸ பகவானை ஆவேசித்து வேதங்களை விஸ்தரிப்பித்தால் போலேயும் இவர்களைக் கொண்டு
பிரகாசிப்பித்ததாகையாலே இப்பிரபந்தங்களுக்கு புருஷ புத்தி ஜெனித தோஷம் இல்லை

ஸூப்த ப்ரபுக்தரான சிஷ்யர்களை உபாத்தியாயர் ஓதுவிக்குமா போலேயும் பிரளய அவஸ்தையிலும்
தன் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருந்து ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே வேதத்தை பிரகாசித்தால் போலேயும்
பிரகாசிப்பித்த தாகையாலே அநித்ய தோஷ பிரசங்கமே இல்லை
ஆகையால் வேதத்துக்கு உண்டான பிராமண்யம் இதுக்கும் ஒக்கும் இறே
யோ வேத வர்ணேஷுது வர்ண புத்திம் சாமான்ய தோவை விததாதி மர்த்ய-சயாதி கோராந் நரகா ந சங்க்யாந்
பிசாச தாமேதி மஹா வநேஷு -என்கிறபடியே த்ரை குண்யா விஷயா வேதா -என்று த்ரி குணாத்ம புருஷர்களை
விஷயீ கரிக்கும் வேதத்துக்கு இப்படியானால் மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
த்ரமிட உபநிஷத் சாரத்துக்குச் சொல்ல வேண்டா இறே
அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ருயோநி பரிஷாயாஸ் துல்யம் ஆஹுர் மநீஷிண-என்கிற இவ்வர்த்தத்தை –
வீட்டு இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் சமம் இன்மை மாரியில் ஆராய்ச்சி -என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அருளிச் செய்தார் இறே
ஆகையால் அருளிச் செயலில் அப்ராமண்ய புத்தி மாத்ரு கமன தோஷத்தோடே ஒக்கும் இறே –
ஆனபின்பு இவையே முக்கிய தம பிரமாணங்கள் என்னா நின்றது –

ஆழ்வார்களுக்கு எம்பெருமான் ப்ரத்யக்ஷ சாஷாத்காரமோ -ஞான சாஷாத்காரமோ என்னில் –
ஞான சாஷாத்காரம் அல்லது ப்ரத்யக்ஷ சாஷாத்காரம் இல்லை –
ஆகில் கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான் காண்பன் என்றும்
நம்பியை நான் கண்ட பின் -என்றும்
கண்ணுள் நீங்கா -என்றும் சொல்லுகிறவை சேரும்படி எங்கனே என்னில் அவையும் பிரத்யக்ஷ சாமானாகாரமான
ஞான சாஷாத்காரமாகக் கடவது –
நல்லுறவும் நன்பகலும் நான் இருந்து ஓலமிட்டால் கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே -என்றும்
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -என்றும் மற்றும் இப்படி பாட்டுக்கள் தோறும் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்டு
காண வந்து என் கண் முகப்பே என்கிற பாட்டின்படியே ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அகப்பட கூப்பிட்டாலும் காண ஒண்ணாத வஸ்துவை –
நடை அழகு -நிலை அழகு -கண் அழகுகளை ப்ரத்யக்ஷமாக அனுபவிக்க வேணும் என்று கூப்பிடுகிற இதுக்கு பிரயோஜனம் இல்லை
என்று நிராசராவது -பின்னையும் அவனை சாபல அதிசயத்தாலே அப்பனே அடல் ஆழியானே-என்கிற பாட்டின் படியே
பிரதம பரிஸ்பந்தம் தொடங்கி காண வேணும் என்கிற அசோஷ்யமான ஆத்ம வஸ்து குருத்து வற்றாக உலரும்படி பார்த்துக்
கண் மறைந்து காண்கின்றிலேன் -என்றும் -ந மாம்ச ச ஷூர் அபி வீக்ஷதேதம் என்றும் பிரத்யக்ஷமாக மாம்ச சஷூஸ்ஸூக்கு
காண ஒண்ணாது என்று நிராசராய்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவன் என்று தர்சன சமமான ஞான சாஷாத்காரம் ஒழியக் கட் கண்ணாலே காண விரகு இல்லை
என்று நிர்த்தரிக்கையாலே கீழ் கண்டேன் என்று பல இடங்களில் அருளிச் செய்ததும் ஞான சாஷாத்காரமாகக் கடவது
கண்டேன் என்ற பத்தும் உட் கண்ணாலே என்று ஆச்சார்ய ஹிருதயத்தில் அழகிய மணவாள பெருமாள் நாயனாரும் அருளிச் செய்தார் இறே –
ஆகையால் இவ்வர்த்தம் ஸூத்த சம்பிரதாய சித்தம் –

உள்ளதனைக் காலம் யத்தனித்தாலும் மாம்ச த்ருக்கோசரன் அன்று என்னும் இடத்தை
என்றேனும் -என்றேனும் கட் கண்ணால் காணாத அவ்வுரு -என்றும் –
ஞான சஷூஸ்சாலே காணும் அத்தனை என்னும் இடத்தை –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து -என்றும் பிறருக்கும் உபதேசித்தார் இறே –
ஞான சாஷாத்காரமே உள்ளது என்னும் இடத்தை தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனும்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் என்றும்
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழு நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம்
எண்ணுங்கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் -என்றும்
சிறிதும் திரு மேனி இன்ன வண்ணம் என்று கேட்டீர் -என்றும் அருளிச் செய்தார் இறே திருமங்கை ஆழ்வாரும்
முதல் ஆழ்வார்களும் ஞானச் சுடர் விளக்கு ஏற்றி இறே திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றும் அருளிச் செய்ததும் –
இனி ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கலாவது அர்ச்சாவதார ஒன்றுமே இறே

ஆகையால் அவதார விசேஷங்களாய் ஸ்ரேஷ்ட தம ஜென்ம ஜாதராய் அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி அவதரித்தவர்களாய்
அகஸ்திய பாஷா ரூபமான திராவிட வேத பிரபந்தங்களைப் பெண்ணும் பேதையும் அதிகரிக்கும் படி உபகரித்து அருளின
ஆழ்வார்கள் பக்கலிலும் அருளிச் செயல்களிலும் விசுவாச பாஹுள்யம் உடையவர்கள் ஜீவன் முக்தர் என்கிறது –
ந சப்த சாஸ்த்ரா ப்ரதஸ்ய மோஷோ நசைவரம் யாவசத ப்ரியஸ்ய -ந போஜனாச் சாதன தத் பரஸ்ய ந லோக வ்ருத்தி க்ரஹனே ரதஸ்ய-
ஏகாந்த சீலஸ்ய த்ருட வ்ரதஸ்ய பஞ்சேந்திரிய ப்ரீதி நிவர்த்த கஸ்ய அத்யாத்ம வித்யாரத மாந ஸஸ்ய மோஷோ த்ருவோ
நித்ய மஹிம்ஸ கஸ்ய -சம தம நியதாத்மா சர்வ பூதா நுகம்பீ விஷய ஸூக விரக்தி ஞான திருப்த பிரசாந்த அநியத நியதான்நோ
நைவ ஹ்ருஷ்டோ நருஷ்ட ப்ரவஸித இவகே ஹே வர்த்த தேயஸ் ச முக்த –என்கிறபடியே அசஸ் சாஸ்த்ராபி ருசியையும்
லோக யாத்திரையும் கை விட்டு ஏகாந்த சீலராய் சிரஸ்சேத பட்டாபிஷேக பர்யந்தமான மஹா ஆபத் சம்பத்துக்கள் சம்பவித்தாலும்
ஸ்வாசார பிரஸ்யுதி வராதபடி த்ருட அத்யாவசாய யுக்தராய் இந்திரிய கிங்கரர் அன்றிக்கே விஷ்ணு கிங்கரராய்
ஆத்ம யாதாம்ய ஞான பரிஸீலந பரராய் பூத ஹிம்சையை விட்டு சம தமாத் யாத்ம குணங்களை உடையராய்
சர்வ பூத தயா பரராய் -அர்த்த காமன்களை அருவருத்து விட்டாராய் -ஞான பூர்த்தியை உடையராய் பாஹ்ய கரண சாந்தி உக்தராய்
நியதா ஹாரராய்-அத்யுத்ருத்தரும் அன்றியே அதி கோபிகளும் இன்றியே -பார்யா புத்ராதிகள் பக்கல் மமதா புத்தி க்ருத
ஆசா பாஸா ரஹிதராய் ஆச்சார்ய விசுவாசம் உடையவரானவர்கள்
அறியக் கற்று வல்லவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்டணவர்–என்கிறபடியே ஜீவன் முக்தர் என்கிறது
இவ்வாழ்வார்கள் தம் பரம கிருபையால் இத்திவ்ய பிரபந்தங்களை உய்பவர்க்கு உய்யும் வண்ணமாக அருளிச் செய்து
லோகத்தை வாழ்வித்து அருளித் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினார்கள் –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: