ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வைபவம்-

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வைபவம்

பர கால ஹரிம் வந்தே ஹரி பாத குஹா சயம் -உன்னத பிரதிகூலே ப கும்ப சம்பேத விப்ரமம்
நாத பிரசப சந்த்ரஸ்த சைவ சாக்யாதி துர் த்வீபம்-பர காலம் ரு கேந்த்ரத்வாம் ப்ரபத்யே அச்யுத வந்திநம்

ஸூதா பாநாப்தாநாம் கலியுக பவாநாம பகமே
நளே வர்ஷே மாசே சரதி சரமே தைவத குரோ
திநேதாரேவஹ் நேஸ் சிசிரா கிரனே பூர்ணி மஜுஷி
ஷிதாவர விர்ப்பூத கலிரி புரமேயாத்ம மஹிமா

திருமங்கை ஆழ்வார் திருவாலி திருநகரியிலே திருக் குறையலூரிலே -நள வருஷம் கார்த்திகை மாசம் கிருத்திகா நக்ஷத்ரத்திலே
ஸ்ரீ கார்முக -ஸ்ரீ சார்ங்கம் -அம்சராய் அவதரித்து அருளினார் -மிலேச்ச வம்சத்தில் அவதரிக்கையாலே
இவருக்கு -நீலன் -நீல நிறத்தர்-என்று திரு நாமம் சாத்தினார்கள்
சம ஜாயத தத்ர சாபர ப்ரமுக கஸ்சந நீல நாமக புருஷோத்தம கார்முகாம் சஜஸ் ஸ்புரிதே கார்த்திக க்ருத்தி கோடுநி -என்று
திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

தெரியேன் பாலகனாய் -என்கிறபடியே பால்ய அவஸ்தா அநந்தரம் ப்ராப்த யவ்வனராய் –
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்து -தெரிவைமார் உருவமே மருவி மிகவும் விஷய ப்ரவணராய் –
ஸ்வ கர த்ருத சஸ்த்ர பிரகாண்டராய் சோழ பூபதியை சேவித்து யுத்தே ப்ராக்ராந்தராய்-பிரவீரராய்
தமக்கு ஸஹாய பூதராக -நீர் மேல் நடப்பான் -நிழல் ஒதுங்குவான் -தாளூதுவான் -தோலா வழக்கன் -என்ற
நாலு மந்திரிகளும் -ஆடல் மா -என்கிற குதிரை நம்பிரானும் -அமரில் கட மா களி யானை -என்கிற யானை நம்பிரானுமாக –
இப்படி இருக்கிற இவரை -அவனும் ஒரு தேசாதிபதியுமாய் -சேநா நாயகனும் ஆக்கி வைத்துப் போருகிற காலத்திலே

திருவாலி நாட்டிலே நன்றாய் இருபத்தொரு தடத்தவிழ் தாமரைப் பொய்கையில் –
சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் -என்கிறபடியே -சில அப்சரஸ்ஸூக்கள் வந்து நாளும் ஜல க்ரீடை பண்ணிப் போக
அவர்களிலே திரு மா மகள் என்பாள் ஒரு அப்சரஸ்ஸூ குமுத மலர் கொய்யப் பிற்படுகையாலே அவர்களும் இவளை விட்டுப் போக
இவளும் மானுஷமான சரீரத்தைப் பரிக்ரஹித்து தனித்து நிற்க
அவ்வளவில் திரு நாங்கூரில் எம்பெருமானை சேவித்து இருப்பான் ஒரு பிஷக்வரனான பாகவத உத்தமன் அனுஷ்டான அர்த்தமாக
வந்த அளவிலே இப் பெண் பிள்ளையைக் கண்டு நீ யார் தனித்து இருப்பான் என் -என்று கேட்க –
அவளும் கூட வந்த பெண் பிள்ளைகள் என்னை விட்டுப் போனார்கள்
ஸ்ரீ மன் நாராயண அம்சஜரான கபிலாச்சாருடைய கோப உக்தியாலே மானுஷ வேஷத்தைத் தரித்து பாலகையாய்
ஸ்வர்க்கத்துப் போக சக்தி இல்லாமல் இருக்கிறேன் என்ன

அந்த வ்ருத்தாந்தத்தைச் சொல் -என்று வைத்தியர் கேட்க -ஸ்வாமி அடியேன் ஸூ மங்களை-என்கிற நாமம் உடையளாய் –
ஸ்வ சகிகளான அப்சரஸ்ஸூக்களோடே கூட அவர்களுக்கு எல்லாம் நாயகியாய்த் திவ்ய ரூபத்தோடே சஞ்சரிக்கும் போது
ஒரு நாள் ஹிமவத் கிரியில் உள்ள வைபவங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு வரும் அளவில் ஒரு சித்தாஸ்ரமத்தில்
கபிலாச்சார்யார் மஹர்ஷிகளுக்கு பகவத் வைபவம் சொல்ல –
நான் அதில் ஒரு குரூபியான சித்த புருஷனைக் கண்டு பரிஹாஸம் பண்ண கபிலர்
நீ மனுஷ்யையாய் நீசனுக்கு பார்யையாகக் கடவாய் -என்று சபிக்க -நான் அதி சோகத்தோடு பிரார்த்திக்க –
அவரும் பிரசன்னராய் -பெண்ணே ஜகத் ரக்ஷண அர்த்தமாக என்னுடைய சாரங்க அம்சஜராய்ப் பரகாலன் அவதரித்து
ராஜ்ய அதிபதியாய் இருக்கிறார் -அவருக்குப் பத்னியாய் அவரை பாகவத உத்தமராகப் பண்ணினால் உன் குறைவு
அற்றுப் போகும் என்று சொல்ல -இப்படி வந்தேன் -என்று தான் வந்த க்ரமத்தை அவருக்குச் சொல்ல –
அவரும் புத்ர ஹீனர் ஆகையால் -மிகவும் உகந்து நம்மூரே வா -என்று அழைத்துக் கொண்டு போய்
ஸ்வ பத்னி கையிலே குமாரி வந்த வரத்தைச் கொல்லிப் போஷிக்கும் படி காட்டிக் கொடுக்க
அவளும் வந்த்யை யாகையாலே அதி சந்தோஷத்துடன் அங்கீ கரித்து
இவள் குமுத மலர் கொண்டு நின்றதுவே நிரூபகமாக குமுத வல்லியார் -என்ற திரு நாமம் சாத்தி
தம்பதிகள் இருவரும் தங்களுக்குப் புத்ரியாக வளர்த்துக் கொண்டு போருகிற காலத்தில் –

சிலர் போய் இவருக்கு இப் பெண் பிள்ளையினுடைய ரூப லாவண்யாதிகளை மிகவும் ஸ்லாகித்துச் சொல்ல
இவரும் அத்தைக் கேட்டு நின்றவா நில்லா நெஞ்சினராய் -அவர் தரும் கலவையே கருதி ஓடித் திரு நாங்கூரிலே சென்று
மருத்துவனான பாகவதன் அகத்தில் புகுந்து அவனுடனே சம்பாஷணம் பண்ணிக் கொண்டு இருக்கச் செய்தே –
இப் பெண் பிள்ளை புறப்படக் கண்டு விஸ்மயப் பட்டுப் பாகவத பிஷக் வரரைக் குறித்து
ஸூர ஸூதோபமையான ஸூதை அநபத்யரான உமக்கு எங்கனே உண்டாய்த்து என்று கேட்க –
அவரும் இவருடனே அப் பெண்ணின் வரத்தைச் சொல்லி -இப் பெண்ணினால் அநபத்யதா சோகம் தீர்ந்தேன் –
விவாஹ உசித வாயஸ்கையாய் அஞ்ஞாத குல கோத்ரையான இவளை யாருக்கு வாழ்க்கைப் படுத்துவேன் என்று
வியாகுல அந்தக்கரணன் ஆகா நின்றேன் -என்ன
இவரும் இப் பெண்ணை நமக்குப் பத்நியாகத் தர வேணும் என்று வஸ்திர பூஷணாதி த்ரவ்யங்களை சங்கோசம் அறக் கொடுத்து
மிகவும் அநு வர்த்தித்து விரும்பிக் கேட்க தம்பதிகளும் அப் பெண் பிள்ளையை இவருக்கு கொடுப்பதாக உத்யோகிக்க –

அப் பெண் பிள்ளையும்
தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம -என்று சொல்லப்பட்ட திரு இலச்சினை திரு நாமம் பின்னாகப்
பஞ்ச சம்ஸ்காரம் உள்ளவர்க்கு ஒழிய மற்று ஒருவருக்கு பேசல் ஓட்டேன் -என்று தன் நெஞ்சில் அத்யவசாயத்தைச் சொல்ல
இவரும் அவ் வசனத்தைக் கேட்டு -ஸூபஸ்ய சீக்ரம் -என்கிறபடியே அதி த்வரையோடே திரு நறையூரில் சென்று –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்கிறபடியே நம்பி திரு முன்பே வந்து
திரு நறையூர் நம்பி திருவடிகளிலே தாளும் தடக் கையும் கூப்பி தண்டன் சமர்ப்பித்து -தேவரீர் அடியேனை இரங்கி அருளி
கிருபை பண்ண வேணும் என்று ஒரு காரணத்தினாலே தேவரீர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணும் என்று வந்தேன் என்ன –
நம்பியும் இவருக்கு
அக்னி தப்தேந சக்ரேண பாஹு மூலேது லாஞ்சித -என்றும்
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று -என்றும்
சொல்லுகிறபடியே திரு இலச்சினையும் தரித்து
சர்வைஸ் ஸ்வேதம் ருதாதார்யம் ஊர்த்வ புண்ட்ரம் யதா விதி ருஜுநி சாந்தராளாநி ஹ்யங்கே ஷூ த்வாதச அபி என்றும்
திரு இலச்சினையையும் கேசவாதி ச ஊர்த்வ புண்ட்ரங்களையும் ப்ரசாதித்து அருளி திரு மங்கை ஆழ்வார் என்ற திரு நாமமும்
ப்ரசாதித்து விடை கொடுத்து அனுப்ப இவரும் எழுந்து அருளி நின்ற அளவிலே

குமுத வல்லியாரும் ஆழ்வாரைப் பார்த்து -மஹா சந்தோஷமாய்த்து -இன்னம் ஒரு விரதம் எனக்கு உண்டு என்று
ஒரு சம்வத்சரம் நித்தியமாக ஆயிரத்து எட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தமும்
தளிகைப் பிரசாதமும் ஸ்வீ கரித்து நிறைவேறினால் ஒழிய உன்னை நான் பர்த்தாவாக அங்கீ கரிப்பது இல்லை
என்று ஒரு நியமம் பண்ண அவரும் அதுக்கு இசைந்து ப்ராவண்ய அதிசயத்தாலே ப்ரதிஜ்ஜை பண்ணிக் கொடுக்க
அதின் பின்பு குமுத வல்லியாரை நீல நிறத்தற்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர்
கண்ணாலம் செய்து உதக பூர்வகமாக சமர்ப்பித்தார்கள்-

அநந்தரம் ஆழ்வாரும் -ஆராதாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் -தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீய ஆராதனம் ந்ரூப-
என்கிறபடியே அதி ப்ரீதியுடனே -திருமால் அடியார்களைப் பூசிக்க ஒருப்பட்டு அதுக்கு தம்முடைய சர்வ ஸ்வத்தையும் இட்டுத்
ததீய ஆராதனம் செய்து கொண்டு போருகிற காலத்தில் –
பரகாலன் பகுதி த்ரவ்யத்தை எல்லாம் ஸ்வயம் பண்ணி பிரதி தினம் ததீயாராதனம் பண்ணுகிறான் என்று சிலர் போய்
சோழ ராஜாவுக்குச் சொல்ல அவனும் கேட்டுக் குபிதனாய் பகுதிக்கு இவர் பக்கல் தரவு வரக் காட்ட இவரும்
அந்தத் தரவுக்கு வந்த ராஜ மனுஷ்யருக்கு
தத்யாமேவ நிசா முகேதி நமுகே மத்யாஹ் ந சாயாஹ்நயோ -பஸ்ஸாதா வ்ரஜகம் யதாமவ சரோ நை வாஸ்தி –என்னுமா போலே
சில பர்யாயங்களைச் சொல்ல கேட்டுச் சலித்து ராஜ மனுஷ்யர் பகுதி த்ரவ்யம் தர வேணும் என்று நிர்பந்தித்துக் கேட்க
இவரும் குபிதராய் அவர்களைத் தள்ளி விட அவர்களும் போய் இவ் விஷயத்தை சோழ ராஜாவுக்கு அறிவிக்க அவனும் குபிதனாய
இவர் ஆஜ்ஞா பங்கம் பண்ணினத்துக்கு மிகவும் சீறித் தன் சேனாதிபதியை அழைத்து பர காலனை இங்கே பிடித்துக் கொண்டு வா என்று
ஆஜ்ஞாபிக்க அவனும் ரத கஜ துரக பதாதி களோடு சென்று இவரை வளைத்துப் பிடித்துத் தேட இவரும்
துரகா ரூடராய் ஸ்வ பல சகிதராய் ஆலித்துக் கொண்டு அவன் படை மேலே விழுந்து ரத கஜ துரக பதாதி களைக் கண்டித்து
பராஜிதனாக்கி ஒட்டி விட

சேனாதிபதியும் காந்தி சீகனாய் ஓடி வந்து பராஜயத்தை சோழனுக்கு அறிவிக்க சோழ பூபன் கேட்டு
கோபாத் சம்ரக்த லோசனாய் அப்போதே தன் சதுரங்க பலத்தோடு புறப்பட்டு வர –
அவனுடைய சேனா சமுத்திரம் இவரை வளைய இவரும் பூர்வம் போல த்ருட கர வாள பயங்கர ஹஸ்தராய்
ஆலித்துக் கொண்டு வந்து அவன் சேனா சமுத்திரத்தை மந்த ராத்திரி போல் மதிக்க சர்வரும் பராஜிதராய் ஓடி வந்து
ராஜா மேல் விழ ராஜாவும் அதி ரௌரத்துடனே ஓடுகிற பலத்தை நிறுத்தி ஜகத் ஏக துர்த்தரானான பெருமையோடு இவரை
சேநா சமுத்திர மத்யஸ்தராம் படி வளைய இவரும் அதி வீரராய் ஸ்வ கர த்ருத சஸ்த்ர பலத்தால் சேனையை மதியாமல்
சம்ஹரிக்குமது கண்டு அதி ஸந்துஷ்டனாய் இவரை நீர் ஒன்றுக்கும் பயப்பட வேண்டா –
உம்முடைய தைர்ய ஸுர்ய பராக்ரமங்களைக் கண்டு மிகவும் சந்தோஷித்தோம் -நீர் செய்த அபகாரங்களை எல்லாம் மறந்தோம் –
அஞ்சாதே நம்மை நம்பி வருவது என்று தன் குரு தைவங்களைத் தொட்டு சபதம் பண்ணிக் கொடுக்க இவரும் நம்பி
அவன் அண்டையிலே சென்ற அளவிலே இவருடைய பராக்கிரமத்தை மிகவும் சிலாகித்து –
நீர் செய்த த்ரோஹம் எல்லாம் பொறுத்தோம் நம் பகுதி த்ரவ்யங்களை மாத்திரம் தந்து விடும் என்று
இவரைத் தன் மந்திரி வசமாக்கி ஊரே மீண்டான்

அந்த ச சிவனும் படை வீட்டிலே சென்று இவரைப் பிடித்துக் கொண்டு வந்து -ஒரு தேவாலயத்தில் சிறை வைக்க –
திரு நறையூர் நம்பி திருக் கோயிலிலே என்றும் -பாட பேதம் –
இவரும் அந்த கோயிலிலே மூன்று நாள் அமுது செய்யாமல் உபவசித்து இருக்க –
நம்பியுடனே நாச்சியாரும் நம்முடைய புத்ரன் உபவாசம் இருக்கலாமோ -என்ன பெருமாளும் நாச்சியார் வார்த்தைக்கு இசைய
திரு உற்ற பிரசாதமும் குழம்புப்பாலும் நாச்சியார் கொண்டு போய் ப்ரசாதிக்க இப்படி பல நாளும் ஆனபின்பு
ஆழ்வாரும் முசித்து -பெரிய பெருமாளையும் திருவேங்கடமுடையானையும் பேர் அருளாளரையும் பிரபத்தி பண்ணிக் கொண்டு
காவலுடன் கிடப்போம் என்று வியாகுல அந்தக்கரணராய் நிற்க இப்படி ஆர்த்தராய் இருக்கிற இவர் ஸ்வப்னத்திலே
பேர் அருளாளர் எழுந்து அருளி உமக்குப் பகுதிக்கு வேண்டிய த்ரவ்யம் தருகிறோம்
ஸ்ரீ காஞ்சீபுரத்து ஏற வாரும் என்று அருளிச் செய்ய

இவரும் நிச்சிதார்த்தராய் இருக்க பொழுது விடிந்த அளவிலே கர தனம் தர வேணும் என்று வந்த அமாத்யனுடனே
ஸ்ரீ காஞ்சீ புரத்தே ஆபத்தனமாகச் சில தனம் சேமித்துக் கிடக்கிறது -அங்கே வந்தால் உங்கள் தனம் தருகிறோம் என்ன –
அவனும் ராஜாவுக்கு அறிவிக்க -அவன் அத்தையும் பார்ப்போம் ஜாக ரூகராய்க் காவலிட்டுக் கொண்டு போங்கோள் என்று
ஆஞ்ஞாபிக்க -இவரும் காவலுடன் ஸ்ரீ காஞ்சீ நகரி ஏறச் சென்று நிஷேப தனம் சோதித்துக் காணாமையாலே
முசித்துக் கிடக்க -அவ்வளவில் கருணாகரராய் அர்த்திதார்த்த பரிதான தீஷிதரான ஸ்ரீ வரதராஜரும் அஞ்சாதே கொள்ளும்
என்று வேகவதீ தீரத்தில் தனம் இருக்கிற இடத்தை அடையாளத்துடன் ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய –
இவரும் அங்கே தனம் கண்டு எடுத்து ந்ருப தனம் கொடுத்து சேஷித்த தனத்தை ததீயாராதன அர்த்தமாக வைத்துக் கொள்ள –
மீளவும் ராஜ மனுஷ்யர் சில தான்யாதிகள் தர வேணும் என்று நிர்பந்திக்க -இவரும் முசித்துக் கண் வளர்ந்து அருள
முன்பு போலே ஸ்ரீ வரதராஜரும் -வேகவதி மணலைத் திரட்டி அளவும் -என்ன இவரும் அப்படியே மணலைக் கூட்டி அளக்க
அவர்கள் கண்ணுக்கு அநர்க ஸ்லாக்ய நெல்லாய் இருந்தபடியால் அவர்களும் அளந்து கொண்டு போக –
அமாத்யனும் அந்தத் தனத்தை ந்ருபதி முன்னே வைத்து ஸ்ரீ வராத ராஜர் பிரசன்னராய் த்ரவ்யம் தந்தபடி சொல்ல –
கேட்டு விஸ்மிதனாய் -இவர் சாமான்யர் அன்று மஹா பாகவதர் -இது திரௌபதிக்கு புடவை சுரந்தால் போலே இருந்தது –
இந்த தனத்தை நம் கோசத்தில் வைக்க ஒண்ணாது என்று பார்த்து ஆழ்வாரை அழைத்து அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு
பஹு முகமாக பஹு மானம் பண்ணிப் போக விட இவரை உபவசிப்பித்த தோஷம் போம்படி
அந்த த்ரவ்யத்தை தேவ ப்ராஹ்மண சந்தர்ப்பணம் பண்ணித் தோஷம் தீர்த்துக் கொண்டான்

பின்பு இவரும் சேஷித்த த்ரவ்யம் கொண்டு ததீயாராதனம் நடத்தித் தனம் எல்லாம் தீர்ந்து கையில் ஒன்றும் இல்லாமையால்
வழி பறித்தாகிலும் தன ஆர்ஜனம் பண்ணித் ததீயாராதனம் அவிச்சின்னமாக நடத்த வேணும் என்று வழி பறித்துத்
தனம் கொண்டு வந்து ததீயாராதனம் பக்தி புரஸ்சரமாக நடத்திக் கொண்டு போரா நிற்க
பின்னையும் ததீயாராதன நிமித்தமாக தன ஆர்ஜனம் பண்ண வேணும் என்று
நீர் மேல் நடப்பான் நிழல் ஒதுங்குவான் தாளூதுவான் தோலா வழக்கன் என்ற இந்த நான்கு மந்திரிகளையும்
ராத்திரி காலத்தில் சில வழியில் திரட்டிக் கொண்டு வாருங்கோள் என்று ஆஞ்ஞாபித்து
இப்படி ததீயாராதனம் பண்ணிக் கொண்டு போரா நிற்க
சர்வேஸ்வரனும் -வழி பறித்ததும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்காகவே ஆகையால் இவர் சரம புருஷார்த்தத்திலே நிஷ்ணாதர்
என்று கொண்டு அந்த ஸூஹ்ருதமே பற்றாசாக இவரை விசேஷ கடாக்ஷம் பண்ணி அங்கீ கரிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி இவர் வழி பறிக்கைக்கு உசிதமான பரிகரத்தையும் கூட்டிக் கொண்டு
திரு மணம் கொல்லையில் திருவரசின் மேலே கொடி வைத்துப் பதுங்கி இருக்கிற வழியிலே

சாஷான் நாராயணா தேவ க்ருத்வா மர்த்யமயீந் தநும் மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாச் ஸாஸ்த்ர பாணிநா -என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் சொல்லுகிறபடியே
வயலாலி மணவாளன் திரு மணம் புணர்ந்து வருகிற மணவாளக் கோலமும் தாமுமாய் ப்ராஹ்மண வேஷத்தைப் பரிக்ரஹித்துப்
பத்னீ ஸஹிதனாய் சர்வ ஆபரண பூஷிதனாய் பஹு த்ரவ்யம் கொண்டு அநேகம் திரளோடு வந்து தோற்ற
இத்திரளைக் கண்டு ஆலித்துக் கொண்டு சா யுதராய் ச பரிகரராய் பெரிய ஆராவாரம் பண்ணிக் கொண்டு
அவர்களை வளைத்து சூழ்ந்து வஸ்திர ஆபரணங்களையும் அபஹரித்துக் கொண்டு அறுகாழியையும் திரு முத்தாலே கடித்து
வாங்க எம்பெருமானும் இத்தைக் கண்டு -நம் கலியனோ -என்று அருளிச் செய்தார் –

பின்பு அவை அத்தனையும் சுமை சுமையாகக் கட்டி எடுக்கப் பார்க்க -அவை பேர்க்கவும் பேராத படியால்
மணவாளனான ப்ராஹ்மணனைப் பார்த்து -நீ மந்த்ர வாதம் பண்ணினாய் -என்று நெருக்க –
எம்பெருமானும் -அம்மந்திரத்தை உமக்குச் சொல்கிறோம் வாரும் என்று கழுத்தை அணைக்க
இவரும் ஓமறைந்து ஹடாத் கரித்து வாள் வலியால் கேட்க
நீ என் செவியின் வழி புகுந்து -என்கிறபடியே செவிக்கு இனிய செஞ்சொல்லாய்
ருசோய ஜூம்ஷி சாமாநி ததைவா தர்வாணா நிச சர்வம் அஷ்டாக்ஷராந்தஸ் ஸ்தம் யச்சாந் யதபி வாங்மயம் -என்றும்
சர்வ வேதாந்த சாரார்த்தஸ் சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாக்ஷர அந்ரூணாம் அபுநர் பவ காங்ஷீணாம்-என்றும்
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்–கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோ
அயம் சாதயிஷ்யதி-என்றும் சொல்லுகிறபடியே -சகல வேத ஸங்க்ரஹமாய் அனந்த கிலேச பாஜனமான
சம்சார ஆர்ணவத்தின் நின்றும் கரையேற்ற வற்றாய்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய கைவல்ய அபுநரா வ்ருத்தி லக்ஷண பரம புருஷார்த்தம் முதலான அகிலார்த்த பிரதமாய்
ஓமித் யக்ரே வ்யாஹரேத் நம இதி பஸ்சாத் நாராயணாயேத் யுபரிஷ்டாத்
ஓம் இத் ஏக அக்ஷரம் நமே இதி த்வே அக்ஷரே நாராயணாயேதி பஞ்ச அக்ஷராணி -என்கிறபடியே
அவன் பெயர் எட்டு எழுத்தும் -என்று எட்டுத் திரு அக்ஷரமாய் -உபநிஷத் படி பத த்ரயாத்மகமாய்
அவற்றால் ஸ்வரூப உபாய புருஷார்த்த ப்ரகாசகமுமாய் -மற்றை வியாபக மந்த்ர த்வயம் போல் அன்றிக்கே
இதிலே நார சப்தம் உண்டாகையாலே சப்த பூர்த்தியும் உடைத்தாய்
பேராளன் பேர் ஓதும் பெரியோர் என்கிறபடியே சிஷ்ட பரிக்ரஹ யுக்தமாய்
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யானாம் குஹ்யம் உத்தமம் பவித்ரஞ்ச பவித்ராமாம் மூல மந்த்ரஸ் சனாதன -என்கிறபடியே
உத்க்ருஷ்ட தமமாகச் சொல்லப்படுகிற மூல மந்திரமான பெரிய திரு மந்த்ரத்தை
நர நாராயணனாய்த் தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட இழவு தீர
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே
பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் என்று தம் வாயாரச் சொல்லும்படி
ஆழ்வாருடைய வலத் திருச் செவியில் உபதேசித்து அருள அநந்தரம்

லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேசா தேவ்யா காருண்ய ரூபயா–என்கிறபடியே கிருபையே தான் ஒரு வடிவு கொண்டாப் போலே
காருண்ய ரூபையான ஸ்ரீ ஸஹாயனாய்க் கொண்டு
காய்ச்சினப் பறவை யூர்நது பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல் -என்றும்
ஸூபர்ண ப்ருஷ்டே ப்ரபபவ் ஸ்யாம பீதாம்பரோ ஹரி காஞ்ச நஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ச தடித்தோய தோயதா -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான பெரிய திருவடி மேல் கொண்டு வந்து நீல மேக நிபமாய் கனக கிரி மீதில் கார் முகில் படிந்து உலாவுமா போலே
விளங்குகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை இவ் வாழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளி சாஷாத் கரிப்பித்து அருள

இவ்வாழ்வாரும் தமக்கு நிர்ஹேதுக லப்தமான திருமந்த்ரத்தையும்
அதுக்கு உள்ளீடான ஸ்ரீ மன் நாராயணனுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களையும் எல்லாம்
திரு மா மகளால் அருள் மாரி -என்னும்படி பெரிய பிராட்டியார் அருளால் உண்டான தக்க ஞானங்களால் கண்டு அனுபவித்து –
அனுபவ ஜெனித ப்ரீதி உள் அடங்காமல் வாக் பிரவாஹ ரூபேண பெரு வெள்ளமிட்டு
பெரிய திருமொழி -திருக் குறும் தாண்டகம் -திரு நெடும் தாண்டகம் -திரு எழு கூற்று இருக்கை -சிறிய திரு மடல் –
பெரிய திரு மடல் -என்கிற இவ்வாறு திவ்ய பிரபந்தங்களையும் ஸ்ரீ சடகோப வாக் மயமான
த்ராமிட வேத சதுஷ்ட்யத்துக்கு ஷட் அங்கமாக
ஆசு மதுரம் சித்ரம் விஸ்தரம் என்கிற சதுர்வித கவிகளாலே அருளிச் செய்து -லோகத்தில் நாலு கவிப் பெருமாள் -என்று
ப்ரஸித்தமாம்படி உபகரித்து அருளினார்

முன்பு பெருமாளும் பர காலனைப் பார்த்து கலியனே நீர் உம்முடைய பரிவரத்துடனே திவ்ய தேசங்களுக்கு எல்லாம் போய்
மங்களா சாசனம் பண்ணும் என்று ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகளுடனே கருட வாகன ரூடனாகத் தோன்றி அந்தரத்தானனாய்ப் போக –
பின்பு திருமங்கை ஆழ்வாரும் பத்னீ ஸஹிதராய் மந்திரிகளோடே புறப்பட்டு
(பிநாகிநீ கிருஷ்ணா கோதாவரி நதிகளில் தீர்த்தமாடி ஸ்ரீ பத்ராச்சலத்தையும் சிம்ஹாசலத்தையும் ஸ்ரீ கூர்ம நாதனையும்
ஸ்ரீ புருஷோத்தமனையும் சேவித்து கயையிலே தீர்த்தமாடி ஸ்ரீ விஷ்ணு பாதத்தையும் தொழுது கோவர்த்தனம் கோகுலம்
பிருந்தாவனம் மதுரை த்வாராவதீ திரு அயோத்தியை பத்ரிகாஸ்ரமம் சாளக்கிராமம் நைமிசாரண்யம் முதலிய திவ்ய தேசங்களை
மங்களா சாசனம் செய்து காஞ்சீ புரத்துக்கு ஏகி ஹஸ்தி கிரீஸ்வரனையும் மங்களா சாசனம் செய்து திருமலைக்கு எழுந்து அருளி
சஹஸ்ர ஆபரணங்களோடு வர்த்திக்கிற சேஷாசலத்தைச் சேவித்து ஸ்ரீ நிவாஸன் அனுமதி கொண்டு புறப்பட்டு இப்படி —
இவை குண்டலித கிரந்தம் -சில பிரதிகளில் உள்ளவை )

இப்படி திருமொழி அருளிச் செய்து கொண்டு திவ்ய தேசங்கள் தோறும் சேவித்துக் கொண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
சோழ மண்டலத்தில் எழுந்து அருளின அளவிலே
நாலு கவிப் பெருமாள் வந்தார் -நம் கலியர் வந்தார் -ஆலி நாடர் வந்தார் -அருள் மாரி வந்தார் -கொங்கு மலர்க் குழலியர் வேள் வந்தார் –
மங்கை வேந்தர் வந்தார் -பர காலர் வந்தார் -பர வாதி மத்த கஜ கண்டீர் அவர் வந்தார் -என்று விருதூதிச் செல்லா நிற்க
அங்கே சம்பந்தன் சிஷ்யர்கள் வந்து ஆழ்வாரை -எங்கள் சம்பந்தப் பெருமாள் இருக்கிற இடத்தில் நீர் நாலு கவிப் பெருமாள் என்று
விருதூதிச் செல்லத் தகாது -என்று தடுக்க -ஆழ்வாரும் உங்கள் சம்பந்தப் பெருமாளுடன் தர்க்கிக்க கடவோம் என்று அருளிச் செய்ய –
ஆகில் நம்மூரே வாரும் என்று அழைத்துக் கொண்டு போய் இவ்விசேஷத்தைச் சம்பந்தனுக்கு அறிவிக்க
அவனும் இவருடனே தர்க்கிக்க கடவோம் என்று வர ஊரடைய சைவராய் அவ்வூரில் ஒரு திரு முற்றமும் இன்றியே –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் இன்றியே வீர பாஷண்ட பூயிஷ்டமாய் இருக்கக் கண்ட இவ்வாழ்வாருக்கு பகவத் விக்ரஹம் இன்றியே
வாக்குக் கிளம்பாது இருக்க -இதுக்கு என் செய்யக் கடவோம் என்று சிந்தித்து இருக்கச் செய்தே
ஸ்ரீ வைஷ்ணவியாய் இருப்பாள் ஒரு அம்மையாரைக் கண்டு இப்படி இருக்கிறது ஆகையால் உன் திருவாராதனமான எம்பெருமானை
எனக்கு ஒரு க்ஷணம் தர வேணும் என்று கேட்க அவரும் ஆழ்வாருக்கு தன் திருவாராதனமான வெண்ணெய் உண்ட தாடாளனை
எழுந்து அருளுவித்துக் கொடுக்க ஆழ்வாரும் அவரைக் கொண்டு சம்பந்தன் இருந்த இடத்தே ஏறச் சென்று இருக்க –
அவனும் இவரைக் குறித்து ஒரு கவி சொல்ல -இவரும் அத்தைக் கேட்டு அந்தக் கவியை தூஷிக்க –
ஆகில் நீர் ஒரு கவி -ஒரு குறள்- சொல்லும் என்ன ஆழ்வாரும் ஒரு குறளாய் இரு நிலம் என்கிற திரு மொழியை அருளிச் செய்து
தன் பெருமை எல்லாம் தோற்ற -ஆலி நாடன் அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம் கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்ற வேல் பர காலன் கலியன் சொன்ன சங்க முகத் தமிழ் மாலை -என்ன அவனும் இத்தைக் கேட்டு
ப்ரத்யுத்தரம் சொல்லிக் கவி சொல்ல ஷமன் இன்றியே இப்படியும் ஒருவர் உண்டோ என்று ஆச்சர்யப்பட்டு –
நாலு கவிப்பெருமாள் என்னும் விருது உமக்குச் செல்லும் -விருதூதிக் கொண்டு சொல்லீர் என்று கும்பிட்டுப் போனான்

அநந்தரம் -விமானம் பிரணவா காரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம் -ஸ்ரீ ரெங்க ஸாயீ பகவான் ப்ரணவார்த்த பிரதாசக -என்கிறபடியே
மன்னனுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்தவராய் பிராணாவாகர விமான மத்யஸ்தரான
பெரிய பெருமாளுக்கும் திருவரங்கச் செல்வனாரான அழகிய மணவாளர்க்கும் விமான மண்டப கோபுர பிரசாத பிரகாராதி ரூபமான
கைங்கர்யங்கள் செய்து அருள வேணும் என்று திரு உள்ளமாய் அதுக்குத் தம்முடைய பரிஜனங்களை அழைத்து
நம்பெருமாளுக்குத் திரு மதிள் முதலான கைங்கர்யம் பண்ணுகைக்குத் தன ஆர்ஜனம் செய்யும் விரகு என் என்று கேட்டு அருள
அவர்களும் நாகப் பட்டணத்தில் புலை அறமாய் இருபத்தொரு புத்த பிரதிமை ஹிரண்ய ஸ்வரூபமாய் இருக்கும் –
அத்தைக் கொண்டு வந்து சின்ன பின்னமாக்கி இருப்பதே கருமம் கண்டாய் என்று விண்ணப்பம் செய்ய
ஆழ்வாரும் சம்மதித்து நாகப் பட்டணத்தில் போய் பரம பாகவதையான ஓர் அம்மையார் க்ருஹமே எழுந்து அருளி

இங்கு நடக்கும் தேவ ரஹஸ்யம் ஏது என்ன -அவளும் எங்கள் மாமியார் கோயில் விமானத்துக்கு உள்ளே ஹிரண்ய மயமான
புத்த விக்ரஹம் உண்டு -இந்த விக்ரஹமும் விமானமும் உண்டாக்கின கம்மாளன் த்வீபாந்தரத்திலே இருக்கிறான் என்று சொல்வர் என்ன
ஆழ்வாரும் ஸூபஸ்ய சீக்ரம் என்று பரிஜனங்களையும் கூட்டிக் கொண்டு அதி தவரையோடு த்வீபாந்த்ரத்திலே எழுந்து அருளித்
தெருவிலே நின்று -விஸ்வகர்மாவுக்கு சமனான கம்மாளனுடைய கிருஹம் ஏது என்று கேட்க அவர்களும்
மாட கூட பிரசாதமான க்ருஹம் அது என்ன -இவர்களும் அந்த க்ருஹத்தின் இடை கழியிலே எழுந்து அருளி
ஒருவருக்கு ஒருவர் சம்பாஷணம் பண்ணிக் கொண்டு இருக்க -அவ்வளவில் அந்தக் கம்மாளனும் வெளியிலே இருந்து வந்து
ஸ்நானம் பண்ணி பிரசாதப்பட்டு பாக்கும் வெற்றிலையும் பிரசாதப்பட்டு இருக்கிற வேளையில் இவ் வாழ்வார் தம்முடைய
பரிஜனங்களைக் குறித்துத் துக்கத்தோடு நாக பட்டணம் கிலமாய்க் கோயிலையும் விமானத்தையும் உடைத்து
விக்ரஹத்தையும் எடுத்துக் கொண்டு அநேகம் துருஷ்கர் கொண்டு போனார்கள் –
இத்தைக் கண்டும் நாம் சரீரத்தை விட மாட்டாமல் போனோம் -என்ன அந்தக் கம்மாளனும் கேட்டு நடுங்கி இவர்கள் முன்னே வந்து நிற்க
இவர்களும் விக்ரஹம் கொண்டு போனத்தை ச விஸ்தரமாகச் சொல்லி

அவனும் முசித்து எப்படிப்பட்ட த்ரோஹியான கம்மாளனோ விமான மகுட ஸூத்ரத்தைக் காட்டிக் கொடுத்தான் –
நான் மஹா விசித்திரமாக கூட சிகரத்தில் இருந்து ஒருவருக்கும் தெரியாதே கோமுகை விழுகிற ஜல தாரையின் கீழே
கல்லுக்கு உள்ளே இரு இரும்பு ஆணியில் சங்கிலி ஸூத்ரம் பண்ணினேன் -இதை எப்படி அறிந்து கொண்டு போனார்களோ
என்று விழுந்து அழத் தொடங்கினான் -இவ் வாழ்வாரும் பரிஜனங்களைக் குறித்து -ஸூத்ரம் வெளியாச்சுது -என்று
அங்கு நின்றும் புறப்பட்டு சமுத்திரக் கரையிலே வந்து தர்மவானான ஒரு வர்த்தகன் பாக்குக் கப்பல் கொண்டு வருமவனைக் கண்டு
ஆசீர்வாதம் பண்ணி நாங்கள் உபவாசமாய் இருக்கிறோம் -எங்களையும் கப்பலில் கொண்டு போம் என்ன –
அவனும் சம்மதித்து வாருங்கோள் என்று கப்பலில் ஏற்றுக் கொண்டு போகிற அளவிலே ஆழ்வாரும் ஒரு கொட்டைப் பாக்கைச் சீவிப்
பாதிப் பாக்கை அவனுக்குக் காட்டிப் பொகட்டு -எனக்குப் பாக்கு அவசியம் என் கப்பலில் பாதிப்பாக்கு உமது -என்று சிறு முறி தாரும் என்ன
அவனும் சம்மதித்துத் தன் கை சீட்டு கொடுக்க இவரும் சீட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு
கப்பல் துறை சேர்ந்த உடன் அவனைக் குறித்து பாதிச் சரக்கு எண்ணித் தா என்ன வர்த்தகமும் திடுக்கிட்டுக் கப்பலில்
துழாவிப் பொகட்ட பாக்கை எடுத்து இதோ காணும் உமது என்ன இவரும் அத்தைக் கண்டு அரைப் பாக்கோ நாம் கொடுத்தது –
உன் சிறு முறியைக் கொண்டு உன் வர்த்தக கரண்டையிலே வழக்குக்குப் போவோம் என்ன அவனும் சம்மதிக்க
இவரும் வர்த்தகர்கள் அநேகம் பேரைக் கூட்டிக் கொண்டு கப்பலில் பாதிச் சரக்கான பாக்கு என்னது என்று இவன் கைச் சீட்டுக்
கொடுத்தான் இப்பொழுது அரைப் பாக்கு கொடுக்கிறான் என்ன
அவர்களும் துர்வழக்கு உண்டோ என்று பாதிப் பாக்குகளையும் எண்ணிக் கொடுக்கச் சொல்லி விட்டார்கள்
வர்க்கனும் இதுவும் ஒரு கடனோ என்று பாக்குக்கு உண்டான கிரய த்ரவ்யங்கள் கொடுத்து அனுப்பி விட்டான்

இவர்களும் அந்தக் கோயிலிலே வந்து ஒரு மூலையிலே பதுங்கி இருந்து மத்திய ராத்திரியிலே அந்த கோமுகையின் கீழே
இரும்பு ஆணிச் சங்கிலியைப் பிடுங்கி விமானம் எறி ஸீகரமான மகுடத்தை இடம் புரி வலம் புரி திருப்பிச் ஸீகரத்தைத் திறந்து
கோடி ஸூர்யர் உதயமானால் போல் இருக்கும் ஸ்வர்ண விக்ரஹத்தைக் கண்டு –
ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ தேயத்தேய் பித்தளை நல்
செம்புகளால் ஆகாதோ மாயப் பொன் வேணுமோ மதித்து என்னைப் பண்ணுகைக்கே -என்று தத் பிம்பம் ஊளை இடும்படி
தம்முடைய மைத்துனரை இறங்க விட்டு அபஹரித்து-அவர் விக்ரஹம் எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டு வந்து
பங்கப்படுத்திக் கொண்டு போனார்கள்

பின்பு ஆழ்வாரும் மந்திரிகளும் பொழுது விடிவு காலத்திலே ஒரு அக்ரஹாரத்தினுடைய செய் உழுது சேறாய் இருக்க
அந்தச் சேற்றுக்கு உள்ளே விக்ரஹத்தைப் புதைத்து அருகே இருந்த உறங்கா புளியின் கீழே வைத்தார்கள் –
செய்யுடையவனும் நாற்றுச் சுமை கொண்டு உழ வரக் கண்டு இவரும் எங்கள் பாட்டன் தேடின செய் என்ன –
அவனும் திடுக்கிட -ஒருவருக்கு ஒருவர் விவாதமாய் -நாளை உதயத்துக்குப் பத்ரம் கொண்டு வருகிறேன் –
இல்லாவிடில் நீ உழுது கொண்டு போ என்ன அவனும் சம்மதித்து மீண்டு போனான் –
அங்கே நாக பட்டணத்தில் விபரீதங்கள் உண்டாய் தலையாரிகளும் மணியக்காரரும் கூடி விமானம் எறிச் சோதித்து
உத்தமர் கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற ஆழ்வார் திருவடிகளின் கீழே கொண்டு விட –
இவரும் நாம் விக்ரஹம் அறியோம் என்ன -அவர்களும் பிரமாணம் பண்ணும் என்ன ஆழ்வாரும்
ஆகில் மேலை வர்ஷத்தில் பங்குனி மாசத்தில் ரோஹிணீ நக்ஷத்திரத்தில் உங்கள் விக்ரஹம் சிறு விரலுக்கு குறையாமல்
ஒப்பிக்கக் கடவோம் என்ன அவர்களும் கை எழுத்துச் சீட்டு வாங்கிக் கொண்டு போனார்கள் –

அநந்தரம் ஆழ்வார் சங்கை இல்லாமல் விக்ரஹத்தை திரு மதிள் கைங்கர்யத்துக்கு அர்ஹமாம் படி
சுட்டுரைத்த நன் பொன் ஆக்கிக் கொண்டு கல் படிக்கு ஏற்க ஒரு துலைப்படுத்தி விற்றுத் தத் த்ரவ்யத்தை இட்டுத்
திரு மதிள் முதல் சிகர பர்யந்தமாகப் பண்ண வேணும் என்று உபக்ரமித்துத் திரு மதிள் கட்டுவிக்கிற செவ்வையிலே
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பெரிய பெருமாளுக்கு திருமாலை சேர்க்கிற இடம் நேர்பட அவ்விடத்தைத் தப்பி
ஒதுங்கத் திரு மதிள் கட்டுவித்து அருள
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பார்த்து அருளித் திரு உள்ளம் உகந்து அருளி தாம் திருமாலை கொய்கிற ஆயுதத்துக்கு
அருள் மாரி என்று இவருடைய திரு நாமம் சாத்தி ப்ரீதராய் அருளினார்
திருமங்கை ஆழ்வாரும் திரு மதிள் திரு மண்டபம் முதலான கைங்கர்யங்களையும் பண்ணுவித்து க்ருதார்த்தராய் அருளினார்

அநந்தரம் அந்த வர்ஷ மாத தவணைக்கு அவர்களும் வர இவரும் அவர்களைச் சீட்டு வாசிக்கச் சொல்லிச் சிறு விரலைக் கொடுத்தார் –
அவர்களும் எங்கள் விக்ரஹம் முழுதும் தர வேணும் என்ன இவரும் வழக்கிலே போய் அனைவரையும் பார்த்து சிறு விரலுக்குக்
குறையாமல் ஒப்பிக்கக் கட வேன்-என்ற இவர்கள் கையில் சீட்டுப்படி சிறு விரலைக் கொடுத்தேன் என்ன-
அவர்களும் அப்படியே வாங்கிக் கொண்டு போங்கள்-என்ன இவர்களும் ஒரு தோலா வழக்கோ என்று
சிறு விறல் வேண்டா என்று தெளிந்து போனார்கள் –

பின்னையும் கோயில் கட்டின நிமந்தக்கார கம்மாளர்கட்க்குச் சிறிது த்ரவ்யம் கொடுக்க வேண்டி அவர்கள் எல்லாரையும்
ஒரு தீவிலே த்ரவ்யம் இருக்கிறது -என்று ஓடம் ஏற்றிக் கொண்டு போய் நட்டாற்றில் ஓடக்காரனுக்கு சம்ஜ்ஜை பண்ண
அவனும் வேறே தெப்பம் கொண்டு வந்து இவரை எடுத்து தெப்பத்தில் வைத்துக் கொண்டு தானும் எறி ஓடத்தை கவிழ்த்து
அவனும் இவரும் கோயிலிலே வந்து சேர்ந்தார்கள் -அந்த நிமந்தக்காரக் கம்மாளாருடைய பேரன்மார் கண்டு
எங்கள் பெரியோர்கள் எங்கே என்று கேட்க
ஆழ்வாரும் ஒரு தீவிலே நிஷேப தனம் காட்டி விட்டோம் -அந்த தனங்களை எல்லாம் சுமை சுமையாகக் கட்டுகிறார்கள் என்ன –
இவர்களும் எங்கள் தகப்பன் பாட்டன் முதலான இத்தனை போரையும் ஆற்றுக்கு உள்ளே தள்ளிக் கொன்று போட்டீரே –
அவர்களுக்கு அந்தப்படி சரீரமாகத் தந்தால் ஒழியப் போகல் ஒட்டோம் என்ன -என்று ஆழ்வாரை மறிக்க
ஆழ்வாரும் முசித்துக் கிடக்க ஆழ்வார் ஸ்வப்னத்திலே ஸ்ரீ ரெங்க நாதன் எழுந்து அருளி நீர் முசிப்பான் என் என்று
அவர் அவர்களை அழைத்துக் காவேரீ ஸ்நாநம் பண்ணச் சொல்லித் திரு நாமமும் தரிப்பித்து நம்முடைய அழகிய மணவாளன்
திரு மண்டபத்திலே நின்று அவர் அவர்கள் பேரைச் சொல்லி அழைக்கச் சொல்ல அவர்களும் அப்படியே அழைத்தார்கள் –
அவர் அவர்களுடைய பித்ரு தேவதைகள் அடையப் பெருமாள் பின்னே இருந்து அவர் அவர்களுக்கு என்று ஆழ்வாருடைய
நிர்ஹேதுக பரம கிருபை உண்டான படியால் பெரிய பெருமாள் திருவடிகளை அடைந்தோம் –
நீங்களும் ஆழ்வார் திருவடிகளிலே அபசாரப் படாதே சில காலம் சம்சாரத்திலே இருந்து
ஆழ்வாரை முன்னிட்டுக் கொண்டு உஜ்ஜீவியுங்கோள்-என்று அனுப்பித் தாங்களும் மீண்டு போனார்கள் –

அநந்தரம் பெரிய பெருமாளும் ஆழ்வாரைக் குறித்து -உம் அபீஷ்டத்தைச் சொல்லும் காண்-என்ன –
ஆழ்வாரும் தேவரீர் தசாவதாரங்களை சேவிக்க வேணும் என்ன
ஆகில் இனி நீர் அர்ச்சா ரூபமான என் தசாவதார ஸ்வரூபங்களை சேவித்துக் கொண்டு இரும் என்ன –
அப்போதே ஆழ்வார் அர்ச்சாரூபமாய் எழுந்து அருள பண்ணினார்
அநந்தரம் பெரிய பெருமாள் பர காலன் மைத்துனரைப் பார்த்து உமக்கு ஆச்சார்யரான இவ்வாழ்வாரை விக்ரஹமாக
எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போய்த் திரு அவதார ஸ்தலமான திருக் குறையலூரில்
கோபுர பிரகார மண்டபாதிகளை நிரமித்து அதிலே பர காலனை நிறுத்தி மஹா உத்ஸவாதிகளைச்
செய்து கொண்டு ஸூகமே இரும் என்ன
அவரும் ஆழ்வாரைப் போலே அர்ச்சா ரூபமாய் இருப்பதொரு விக்ரஹத்தை குமுதவல்லி யாருடனே எழுந்து அருளப் பண்ணி
மந்திரிகளும் நம்பெருமாள் பரிவாரமும் கூட வர ஆழ்வார் திரு அவதார ஸ்தலத்துக்குப் போய்
அங்கே கோயில் பிரகார மண்டபாதிகளைக் கட்டுவித்து அதிலே ஆழ்வாரை எழுந்து அருளப் பண்ணி
மஹா உத்ஸவாதிகளை நடப்பித்துக் கொண்டு வந்தார் –

ஆழ்வாரும் அர்ச்சா ரூபமாய் இருந்தாலும் குமுதவல்லியார் முதலானவர்களோடே கலந்து பரிமாறிக் கொண்டு
ஸமஸ்த ஆத்ம கோடிகளையும் ரஷித்துக் கொண்டு
பெரிய பெருமாள் திருவடிகளையே உபாய உபேயமாக சேவித்துக் கொண்டு வாழ்ந்து அருளினார் –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: