ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ குலசேகர பெருமாள் / ஸ்ரீ பெரியாழ்வார்/ ஸ்ரீ ஆண்டாள்/ வைபவங்கள் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

———————————-

இங்கே அவதார க்ரமம் பார்க்கில் நம்மாழ்வார் திரு அவதார வைபவம் சொல்லலாய் இருக்க
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திரு அவதார வைபவம் சொல்லுகிறது
அவயவ நிரூபணம் பண்ணியே அவயவியை நிரூபிக்க வேண்டுகையாலே

குஹ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ராதி நேதிநே
தமஹம் சிரஸா வந்தே ராஜா நங்குல சேகரம் –
கல்யப்தே ஸூக சங்க்யயா வ்யபகதேமா சே சமா காபிதே
வர்ஷே சாபிபராபவே ஸூர குரோர் வாரேச பக்ஷே ஸூசவ்
த்வாதஸ் யாக்யதிதவ் புநர் வஸூதிநே ப்ரீத் யாக்ய யோ அன்வித
த்ராதுந்ந குலசேகர ஷிதிபதிஸ் ஸ்ரீ கௌஸ்துப ஆத்மபாவத் –

ஸ்ரீ குலசேகர பெருமாள் கொல்லி நகர் என்கிற திருப் படை வீட்டிலே சேரன் குலசேகரராய்க் கொண்டு
ஷத்ரிய வர்ணத்தில் மாசி மாசத்தில் புனர் பூச திரு நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கௌஸ்துப அம்சராய் திரு அவதரித்து அருளினார்

தஸ்யாம் பூச் சேர குல ப்ரதீபஸ் ஸ்ரீ கௌஸ்துபாத்மா குலசேகராக்ய
மஹீ பதிர்மாக புநர்வஸூத்யத்திநே ஹரே பூர்ண கடாக்ஷ லஷ்ய -என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

மாற்றலரை வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன் சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணி -என்று
சொல்லப்படுகிற இவர் -ரத கஜ துரகபதாதி என்கிற சதுரங்க பலத்தை உடையராய்
பிரதிபக்ஷங்களை எல்லாம் காந்திசீகராம்பாடி காடேற ஓட்டி
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்றும்
கூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன் குடைக் குலசேகரன் -என்றும் சொல்லுகிறபடியே
தம்முடைய செங்கோல் செங்கோலாகப் படை வீடுகளில் இருந்து சிறியதை பெரியது நலியாத படியும்
துர்ப்பலரைப் பலவான்கள் பாதியாத படியும்
கோ சஹஸ்ர பிரதா தாரம்-என்கிற பெருமாளை போலே ஸ்ரீ குலசேகர பெருமாளும்
அத்யுதாரராய் ச விநயராய் ராஜ்யம் பண்ணிக்க கொண்டு போரா நிற்க

தம்மை ஸ்வ தந்தரராகவும் நியாந்தாகவும் அபிமானித்துக் கொண்டு இருக்கிற இவரை
உபய விபூதி நிர்வாஹகனாய் சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் தன் நிர்ஹேதுக பரம கிருபையாலே
ராஜஸ தாமச ரஹிதராய் சத்வ குண பிரசுரராராம் படி கடாக்ஷித்து இவருக்கு மயர்வற மதி நலம் அருளித் தம்முடைய
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் விசத தமமாகக் காட்டிக் கொடுக்க அவற்றை எல்லாம்
பகவத் பக்தி ரூபா பன்ன ஞானத்தை உடையராய்க் கொண்டு இவ்வாழ்வார் கண்ட அநந்தரம்
சம்சாரிகளான இத்தேசியர் தேஹாத்ம அபிமானத்தைப் பண்ணி
அக்ருத்ய கரணாதாவப் யத் யந்தோத் பட வ்ருத்திக அர்த்த காமாபி பூதோய முந் மத்த இவ வர்த்ததே -என்கிறபடியே
தேஹ வஸ்யராய் தேஹ போகத்தை அனுபவித்து பகவத் விமுகராய் தேஹாத்ம அபிமானிகளாய் சப்தாதி விஷய ப்ரவணரான
இஸ் சம்சாரிகள் நடுவே தாம் இருக்கிற இருப்பு உயிர்க் கழுவிலே இருந்தால் போலேயும்
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு என்கிறபடியே
யானைக் கழுத்தில் தாம் இருந்து ராஜ்யம் பண்ணி ஸூக ரூபமாக ராஜ போகத்தைப் புஜிக்கிற ராஜத்வமும்
அல்லெனத் தோற்றி எரி தீயில் சுடும் -என்கிறபடியே அக்னி கல்பமாயும் இருக்கையாலே மிகவும் அஸஹ்யமாய்
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநிச -என்றும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணங்கத-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சகல போகங்களையும் ச வாசனமாக த்யஜித்து சர்வ லோக சரண்யரான பெருமாளை ஆஸ்ரயித்தால் போலே
இவரும் இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் என்று பிரதிகூலங்களான பிராகிருத போகங்களில் நசை அற்று

திருவரங்கத்தில் அரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு
உகக்கும் காதலை உடையராய்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கத்தில் தாமும் அற்ற பற்றறாய் அவ்விடத்திலே நித்ய வாசம் பண்ணி
விண்ணுளாரிலும் சீரியராய்
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் -என்கிற இதுவே நிரூபகமாக உடையராய்
சாது கோட்டியரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய இன்பமிகு பெரும் குழுவு கண்டு அனுபவிப்பது எப்போதோ என்று
ஸ்ரீ ரெங்க யாத்ரா ஸ்ரீ ரெங்கயியாஸா சைவ நாரத உத்தாரயதி சம்சாரம் நித்ய வாஸஸ்து கிம்புந -என்கிறபடியே
ஸ்ரீ ரெங்க யாத்ரையையும் ஸ்ரீ ரெங்கயியாசையும் விடியா வெந்நகரைப் போக்கி வைகுந்தம் தரவற்றாய் இருக்க
அங்கே நித்ய வாசம் பண்ணில் சொல்ல வேண்டா இறே -என்கிற அர்த்தத்தை அறிந்தவர் ஆகையால்
ஸ்ரீ ரெங்க யாத்திரையில் நித்ய பத்த ஸ்ரத்தராய்

த்ரை லோக்ய விஸ்ருதா புண்யா ஸ்வாமி புஷ்கரிணீ அதீவை -கங்காத் யைஸ் சகலைஸ் தீரத்தை சாஸமாவிம லோதகா –
தத்ர தேவர்ஷி கந்தர்வாஸ் சித்தாஸ்ச பரமாஷய வசந்தி நியதா ஹாரா வேங்கடாஹ்வய பூதரே -என்று
கங்காதி சகல தீர்த்தங்களிலும் உத்க்ருஷ்ட தமமாகச் சொல்லப்பட்ட ஸ்வாமி புஷ்கரணியை யுடைத்தாய் –
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்று சொல்லுகிறபடியே பரம ரிஷிகள் தொடக்கமான மஹாத்மாக்களால்
நித்ய வாசம் பண்ணப் படுகிற திரு வேங்கட மா மலையிலே இவரும்
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களைப் பரிக்ரஹித்து நித்ய வாசம் பண்ண ஆசைப்பட்டும்

இப்படி மற்றும் உண்டான திவ்ய தேசங்கள் எங்கும் சென்று அங்குள்ள எம்பெருமான்களையும் சேவித்து
அங்கே நித்ய வாசம் பண்ண வேணும் என்னும் ஆசையையும் வுடையராயும்
அஷ்டாதச புராண உப புராண இதிஹாசா திகளை நிரீக்ஷித்துத் தத் சார பூதமான முகுந்த மாலையை
அருளிச் செய்து கால ஷேப அர்த்தமாக
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே வேத பிராசேதே சாதாஸீத் சாஷாத் ராமாயணாத்மநா -என்கிறபடியே
வேத வேத்யனான பரம புருஷன் தசரதாத் மஜனாய் வந்து அவதரித்து அருளினால் போலே
அந்த வேதங்கள் தாமும் ஸ்ரீ வாலமீகி பகவான் முகேன இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணமாய்க் கொண்டு
பிரகாசித்ததாகையாலே அதுவே தமக்கு செவிக்கு இனிய செஞ்சொல்லாக -இன்னமுதம் மதியோம் என்கிறபடியே
ஸ்ரவித்துக் கொண்டு போரா நிற்க

சதுர்த்தச சஹஸ்ராணி ரக்ஷஸாம் பீமா கர்மணாம் ஏகஸ் சராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யஸி -என்கிற
ஸ்லோகார்த்தத்தை கேட்டு அருளுகிற தறுவாயிலே
பெருமாளும் இளைய பெருமாளைப் பிராட்டிக்குத் திரு மேனிக்கு காவலாக வைத்து
கர த்ரி சிரோ தூஷணாதி களாகிற-14000-துஷ்ட ராக்ஷஸருடனே தர்மாத்மாவான பெருமாள்
ஒருவரே யுத்த உன்முகரானார்
எங்கு இளைகிறாரோ என்று ருஷி வயிறு பிடிக்கிறான் என்று கேட்க்கையாலே இவ்வாழ்வாரும் ப்ரேம பரவசராய்க் கொண்டு
அவத்தங்கள் விளையும் என்னும் அதி சங்கையாலே-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை -என்றும்
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒரு பாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -என்றும் சொல்லுகிறபடியே
சதுரங்க பலத்தோடு பெருமாளுக்குப் படைத்துணையாகப் புறப்பட்டு எழுந்து அருளா நிற்க
இவருடைய அதி ப்ரவ்ருத்தமான இந்த யாத்ரையைக் கண்டு இத்தைத் தவிர்க்கைக்காக மந்திரிகள்
உபாயேந சிலரை எதிரே வரவிட்டு அந்த -14000-ராக்ஷஸர்களையும் பெருமாள் ஒருவரே நிரசித்து
மீண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹரிஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பார்த்தாராம் பரிஷஸ் வஜே-என்கிறபடியே
பிராட்டி பெருமாள் திருமேனியில் வ்ரணங்கள் எல்லாம் மாறும்படி திரு முலைத் தடங்களாலே வேது கொண்டு அணைத்து
ஆஸ்வசிப்பித்த சோக நிவர்த்தகமான இந்த ஸ்லோகத்தைச் சொல்லுகையாலே
இவரும் அத்தைக்கு கேட்டு ஸந்துஷ்டராய் மீண்டு எழுந்து அருளின அளவிலே

மந்திரிகள் நம்முடைய ராஜாவான இவர்க்கு ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசத்தாலே இத்தனை கலக்கங்களும் தேற்றங்களும் வந்தன
என்று அவர்களுடைய ஸஹ வாசத்தைத் தவிர்ப்பிக்க வேணும் என்று இவருடைய க்ருஹ அர்ச்சனா எம்பெருமானுடைய
திரு ஆபரணப் பெட்டியிலே நவ ரத்ன சோபிதமாய் இருபத்தொரு ஹாரத்தை எடுப்பித்து மறைய வைத்து
இவருக்கு அந்தரங்கராய உத்தேஸ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எடுத்தார்கள் என்று ஆரோபிக்க –
அதுக்கு அவரும் பரண் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்காக தாம் பாம்புக் குடத்தில் கை விட்டு அருளி ஜெயிக்க
இத்தைக் கண்ட மந்திரிகள் தங்கள் செய்த அக்ருத்யத்தை விண்ணப்பம் செய்து
அந்த ஹாரத்தை அவர் திரு முன்பே வைத்துத் தண்டம் சமர்ப்பித்தார்கள்

பின்பு ஆழ்வாருக்கு இவர்கள் நடுவே ராஜ்யம் பண்ணி இருக்கும் இருப்பு –
ந சவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச வைசசம் -வரம் ஹுதாவஹஜ் வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதி-என்கிறபடியே
பகவத் வைபவம் சொல்லப் பொறாதர் நடுவில் இருக்கும் இருப்பைக் காட்டில் அக்னி ஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதி
பகவத் பரர்க்கு உத்க்ருஷ்ட தமம் ஆகையால் இவர்க்கு அக்னி ஜ்வாலையிலே அகப்பட்டால் போலே
அதி துஸ் சஹமாய் இருக்கையாலே தம் குமாரர்க்கு யுவராஜ அபிஷேகம் பண்ணி ராஜ்ய பாரத்தை அவர் இடத்திலே வைத்து
ஆனாத செல்வத்து அரம்பையர் கழல் சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் -என்று கொண்டு
ஐஹிக ஆமுஷ்மிக திவ்ய மானுஷ போகங்களில் நசை அற்று தமக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசத்துடன்
நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கத்தை நோக்கி எழுந்து அருளி தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே –
உறங்குவான் போல் யோகு செய்கிற -அணி யரங்கத்து அம்மானை நித்ய தரித்ரன் நிதியைக் கண்டால் போலே
கண்ணாரக் கண்டு வாயார வாழ்த்தி அனுபவித்து அவ்வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே
பகவத் பாகவத வைபவத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி -பெருமாள் திரு மொழி -என்கிற திவ்ய பிரபந்தத்தை
அருளிச் செய்து ஸஜ்ஜனங்களுக்கு உபகரித்து அருளி லோகத்தை வாழ்வித்து அருளினார் –

——————————————

ஸ்ரீ பெரியாழ்வார் வைபவம் –

தாதாத்விக பிரதி பலத்-பிரதி பயத் – பகவத் பரத்வம் விஸ்தீர்ய பாண்ட்ய கத கேந்திர ஜயீ கஜேந —
கச்சந் பிரியாதுபகதேக கருடேந நாதே ப்ரேம்ணா அசிஷம் ரசயதிஸ் மநமோ அஸ்து தஸ்மை

தத்வாப்தா பகமேகலவ் யுபவரே சம்வத்சரே க்ரோதனே
சண்டாம் சவ் மிது நங்கதே அஹ்னி நவமே பக்ஷே வளர் ஷேஅபி ச
ஸ்வாத்யாம் பாஸ்கர வாஸரே ஸூ பதி தா வேகா தசீ நாம நி
ஸ்ரீ மான் ஆவீரபூத சிந்த்ய மஹிமா ஸ்ரீ விஷ்ணு சித்தோ அநக

பெரியாழ்வார் -வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி புத்தூர்-என்கிறபடியே -செய்த வேள்வியரான
வையத்தேவர் நித்ய வாசம் பண்ணி வாழா நிற்கிற ஸ்ரீ வில்லி புத்தூரில் ப்ராஹ்மண உத்தமரான
வேயர் தம் குலத்திலே ஆனி மாசத்தில் திருச் சுவாதியிலே கருத்ம அம்சராய் திரு அவதரித்து
விஷ்ணு சித்தர் என்கிற திரு நாமத்தை உடையராய் இருப்பர் –
ஜ்யேஷ்டே தமாஸே பவமாநதாரே ஸ்ரேஷ்டோ குணே நாஜநி பட்ட நாத தத் ரத்ர யீரூப கருத்ம தாத்மா
கடாக்ஷ லஷ்யங் கமலா பதேர்ய-என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

பின்பு வட பெரும் கோயில் உடையானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே –
ப்ரஹ்லாதோ ஜென்ம வைஷ்ணவ -என்னும்படி சஹஜ தாஸ்யத்தை உடையராய் இருக்குமவர் –
நா கிஞ்சித் குர்வதஸ் சேஷத்வம் -என்கிறபடியே சேஷத்வ முறையை உணர்ந்து பகவத் விஷயத்தில் கிஞ்சித் கரித்து
ஸ்வரூபம் நிறம் பெற வேணும் என்று பார்த்து அது செய்யும் இடத்து –
தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே-என்கிறபடியே அவன் உகந்த அடிமை செய்கையே
நமக்கு கர்தவ்யம் என்று அனுசந்தித்து அது அறிகைக்காக அவதாரங்களை ஆராய்ந்து பார்த்த இடத்தில்

சர்வேஸ்வரன் -மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -என்றும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஆஹ்யதோ மதுராம் புரீம் -என்றும்
புண்யா த்வாரவதீ யத்ர தத்ராஸ்தே மது ஸூதந -சாஷாத் தேவ புராணோ அசவ் சஹி தர்மஸ் சநாதந -என்றும் சொல்லுகிறபடியே
சாது பரித்ராணாதி த்ரயத்துக்காக -திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெறப் பிறந்து –
மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்க வளர்ந்து அருளுகிற -உருவு கரிய ஒளி மணி வண்ணனா ஸ்ரீ கிருஷ்ணன்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்தவன் ஆகையால் அந்த வாசனை பின்னாட்டி கம்சனுக்குப் பணி செய்து போந்த
ஸ்ரீ மாலா காரர் திரு மாளிகையில் எழுந்து அருளி பூ இரக்க
பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாதாதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி -என்று உகந்து சூட்டினை படியைக் கண்டு
இவ்விஷயத்துக்குப் பூ இடுகையே உகப்பு என்று அறுதியிட்டு
வட தள புட சாயியாகிய வட பெரும் கோயிலுடையானுக்கு
நாள் கமழ் பூம் பொழிலாகத் திரு நந்தவனம் செய்து திருமாலை கட்டிச் சாத்திப் போருகிற காலத்திலே

பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலத்திலே ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜா தார்மிகன் ஆகையால்
சிறியதைப் பெரியது நலியாதபடி திருக் கூடல் என்கிற தென் மதுரையிலே இருந்து ராஜ்யம் பண்ணிக் கொண்டு
போருகிற காலத்திலே அந்த ராஜா ஒரு நாள் ராத்திரியிலே நகர சோதன அர்த்தமாக வருகிற அளவிலே
ஒரு ப்ராஹ்மணன் அங்கே ஒரு திண்ணையிலே கிடக்கக் கண்டு ராஜா அவனை எழுப்பி நீ யார் என்று கேட்க –
அவனும் நான் ஒரு ப்ராஹ்மணன் -கங்கையாடி வருகிறேன் -என்ன –
ஆனால் உனக்குப் போமது உண்டாகில் ஒரு ஸ்லோகம் சொல்லிக் காணாய் என்ன -அந்தப் ப்ராஹ்மணனும்
வருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாஸான் நிஸார்த்தம் அர்த்தம் திவசம் யதேத-வார்த்தக்ய ஹேதோர் வயசா நவேந
பரத்ரஹேதோர் இஹ ஜென்ம நாச-என்கிற ஸ்லோகத்தைச் சொல்ல
ராஜாவும் இத்தைக் கேட்டு வ்யுத் பன்னனாகையாலே -த்ருஷ்டத்தில் நமக்கு ஒரு குறைவும் இல்லை –
இனி அத்ருஷ்ட யத்னம் பண்ணும்படி எங்கனே என்று வியாகுல அந்தக்கரணனாய் தன்னுடைய புரோகிதரான
செல்வ நம்பியைப் பார்த்து புருஷார்த்த நிர்ணய பூர்வகமாக அத்ருஷ்ட சித்திக்கு விரகு என் என்று கேட்க அவரும்
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -என்கையாலே வித்வான்களைத் திரட்டி வேதாந்த ஸித்தமான பர தத்வ நிர்ணயம்
பண்ணுவித்து அவ்வழியாலே பெற வேணும் என்று அருளிச் செய்ய
ராஜாவும் அப்படியே ஆகிறது என்று பஹு த்ரவ்யத்தை கிழிச் சீரையிலே வித்யா ஸூல்கமாக ஒரு தோரணத்திலே
கட்டுவித்து வித்வான்களை ஆஹ்வானம் பண்ணச் சொல்லுகிற அளவிலே

வட பெரும் கோயிலுடையான்
சம்சாரிகள் பூண்ட வத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந் நூல் அன்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாமே இவ்வாழ்வாரைக் கொண்டு லோகத்தில் வேதாந்த ஸித்தமான பர தத்துவத்தை
பிரகாசிப்பைக்காக-மெய்யடியாரான இவ்வாழ்வாருடைய ஸ்வப்னத்திலே எழுந்து அருளி
நீர் போய் கிழியை அறுத்துக் கொண்டு வாரும் – என்று அருளிச் செய்ய –
அது வித்யா ஸூல்கமாக நிர்மித்தது ஓன்று அன்றோ
நலங்களாய நற் கலைகள் நாவினும் நவின்றிலாத நான் என் கையில் கொட்டுத் தழும்பைக் காட்டிக்
கிழியை அறுக்கலாமோ-என்ன
அது உமக்குப் பரமோ
நாம் அன்றோ வேதார்த்த ப்ரதிபாதனத்துக்குக் கடவோம் என்று ஆழ்வாரை நிர்ப்பந்தித்து அருள –
ஆழ்வாரும்

ப்ரஹ்ம முஹுர்த்தே சோத்தாய-என்கிறபடியே -சிற்றம் சிறு காலை எழுந்து இருந்து இது ஒரு ஸ்வப்னம் இருந்தபடி என்
என்று விஸ்மிதராய் விஸ்வசித்து பாண்டியனுடைய வித்வத் கோஷ்ட்டி ஏற எழுந்து அருளின அளவில்
செல்வ நம்பியும் ராஜாவும் த்விஜ குல திலகரான இவ்வாழ்வாரைக் கண்டு அவ்வளவில்
அப்யுத்தாந பிரணாம பூர்வகமாக மிகவும் ஆதரிக்க இத்தைக் கண்ட வித்வான்கள்
இவருக்கு வித்யா அப்யாஸம் சிறிதும் இல்லை என்னும் புத்தியால் ராஜாவை அதி க்ஷேபிக்க அவ்வளவில்
அபிமான துங்கனான செல்வ நம்பியும் ஆழ்வாரைத் தெண்டனிட்டு வேதாந்த ப்ரதிபாத்யமான பர தத்துவத்தை
நிச்சயித்து அருளிச் செய்ய வேணும் என்று விஞ்ஞாபித்த அளவிலே

ஹஸிதம் பாஷிதஞ்சைவ கதிர் யாயச்ச சேஷ்டிதம் தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸமப்ரபஸ்யதி-என்கிறபடியே
ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரஹ்மாவின் பிரசாதத்தாலே சகலார்த்தங்களையும் சாஷாத் கரித்தால் போலேயும்
சங்க ப்ராந்தேன கோவிந்தஸ் தம்பஸ்பர் சக்ரு தாஞ்சலிம் -உத்தான பாத தனயம் முனி வர்யம் ஜகத் பதி
தத பிரசன்ன வதனஸ் தத் ஷணான் ந்ருப நந்தன துஷ்டாவ ப்ரணதோ பூத்வா பூத தாதாரம் அச்யுதம் -என்கிறபடியே
ராஜ குமாரனான தருவான் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஸ்பர்சத்தாலே சர்வஞ்ஞன் ஆனால் போலேயும்
இவ்வாழ்வார் நிர்ஹேதுக பகவத் ப்ரஸாதத்தாலே சகல வேத சாரார்த்தங்களையும்
தத் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்களையும் சாஷாத் கரித்து
ஸமஸ்த சப்த மூலத்வாத் அகாரஸ்ய ஸ்வபாவத -என்று சர்வ சப்த மூலமாய் இருந்துள்ள அகாரத்தை –
அக்ஷராணாம் அகாரோ அஸ்மி -என்று கீதா உபநிஷதச்சார்யன் தானே அருளிச் செய்கையாலே
அகாரோ விஷ்ணு வாசக -என்கிறபடியே அகார வாச்யனான ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று கொண்டு
பரத்வ சிஹ்னங்களான ஜெகஜ் ஜென்ம ஸ்திதி லய வாசகங்களான

யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்ய அபி சம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி-
இத்யாதி வாக்யங்களை
ஜகத் காரணத்வ -முமுஷு உபாஸ்யத்வ -மோக்ஷ பிரதத்வ -ப்ரதிபாதங்களான -நாராயண அனுவாத ஸ்ருதிகளாலும்
விஷ்ணோஸ் சகாஸா துத்பூதம் ஜகத் தத்ரைவ வச ஸ்திதம் –ஸ்திதி சம்யம கர்த்தா அசவ் ஜகதோ அஸ்யா ஜகச் சஸ-என்றும்
நாராயணாத் பாரோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி -ஏதத் ரஹஸ்யம் வேதா நாம் புராணா நாஞ்ச சம்மதம் -என்றும்
சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே -வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம் -என்றும்
இத்யாதிகளான ஸ்ம்ருதி இதிஹாச புராணாதி வசன சஹஸ்ரங்களாலும் பஹு முகமாக ப்ரசாதித்து அருளிச் செய்கையாலே
வித்யா ஸூல்கமாகத் தோரணத்தில் கிழியாகக் கட்டி வைத்த தனம் இவர் முன்னே தானே தாழ வளைய
ஆழ்வாரும் அதி ப்ரீதியுடன் விரைந்து கிழி யறுத்தான் -என்கிறபடியே அக் கிழியை அறுத்து அருளினார்

இத்தைக் கண்டு அதி ஷேபித்த வித்வான்களோடு -அனுவர்த்தித்த ராஜாவோடு -வாசி அற -சர்வரும்
விஸ்மிதராய்க் கொண்டு ஆழ்வார் திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்து
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனன் என்று மிகவும் ப்ரீதீயோடு
அவரை யானைக் கழுத்தின் மேலே ஏறி அருளப் பண்ணி அந்த வித்வான்கள் சத்ர சாமர தால வ்ருந்தாதிகள் தரித்து சேவிக்க
வேதப்பயன் கொள்ள வல்லனான மெய்ந்நாவன் வந்தான் -என்று விருதூதித் திருச் சின்னம் பணிமாற
ஈண்டிய சங்கம் எடுத்தூத ராஜா இவருக்குப் பட்டர் பிரான் என்று திரு நாமம் சாத்தி
தானும் ச பரிகரனாய் சேவித்துக் கொண்டு நகரி வலம் வருகிற மஹோத்சவத்தைக் காண்கைக்காக
புத்ரர்களை ப்ரஹ்ம ரதம் பண்ணும் சமயத்தில் மாதா பிதாக்கள் கான ஆதரித்து வருமா போலே
சர்வேஸ்வரனும் தனக்கு நிரூபக பூதையான பிராட்டி ஸஹிதனாய்க் கொண்டு

மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்ற வடிவுடனே பெரிய திருவடி மேல் கொண்டு –
திருச் சக்கரம் சங்கினொடும் -என்கிறபடியே திவ்ய ஆயுத தரனாய் –
கிளர்ந்த பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே -என்கிறபடியே –
ஆகாசத்தில் ஸ்வ பரிகர பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஸேவ்யமானனாய்த் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய்க் கொண்டு
நெருங்கி நிற்கிற இத்திரளோடே ஸந்நிஹிதனாக-இத்தை சாஷாத் கரித்து அருளின ஆழ்வார்
பகவத் பிரசாதத்தாலே நிரவதிக பக்தியைப் பெற்றவராகையாலே ஸ்வ ஸம்ருத்தியைக் கண்டு இறுமாறாதே
அவனுடைய ஸர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வ -சர்வ ரக்ஷகத்வாதிகளை அனுசந்திப்பதற்கு முன்பே முகப்பில்
நீலமுண்ட மின்னன்ன மேனியில் உண்டான ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வனாதிகளைக் கண்டு
அப்ராக்ருத ஸூரைர் வந்த்ய மயுதார்க்க ஸமப்ரபம் -என்றும்
ஸ்வயைவ பிரபயா ராஜன் துஷ்ப்ரேஷன் தேவதாநவை -என்றும்
சுழி பட்டோடும் சுடர்ச் சோதி -என்றும் சொல்லப்பட்டு இருப்பதாய்க்

காலக் க்ருத பரிணாமம் இன்றிக்கே சதைக ரூபமாய் நித்ய ஸித்தமாய் பஞ்ச உபநிஷன் மயமான பரமபதத்தில் –
சதா பஸ்யந்தி ஸூரயா -என்கிறபடியே நித்ய ஸூரி களாலே சதா தர்சனம் பண்ணப் படுகிற வஸ்து
கால க்ருத பரிணாமமாய் க்ஷண ஷரண ஸ்வ பாவமாய்ப் பரமாத்மா ஸ்தானமான பரம பதத்தைப் பற்ற நரக உபமமாய் –
அரக்கர் அசுரர்க்கு ஆவாஸ பூமியாய்த் துர்விதக்தர் துரபிஸந்தி பண்ணும் ஸ்தலமாய் கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற
இருள் தரும் மா ஞாலமான இத்தேசத்திலே வந்து சஷுர் விஷயமாவதே -இவ்விஷயத்துக்கு என்ன தீங்கு வருகிறதோ என்னும்
அதி சங்கையாலே யானைக் கழுத்திலே கிடக்கிற மணிகளைத் தாளமாகக் கொண்டு –
இந்த ஸுந்தர் யாதிகளுக்கு ஒரு தீங்கும் வாராதே நித்யமாய்ச் செல்ல வேணும் என்று தம் ஸ்வரூபத்தை மறந்து
ப்ரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணி அருளி
இவ் விஷயத்துக்கு தாம் ஒருவரும் மங்களா சாசனம் பண்ணுகை போதாது என்று தமக்குத் தோள் தீண்டிகளான
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளையும் மங்களா சாசன யோக்யராம் படி திருத்திச் சேர்த்துக் கொண்டு
பல் வகையாலும் திருப் பல்லாண்டு பாடி அருளினார்

அநந்தரம் அந்த ராஜாவையும் விசேஷ கடாக்ஷம் செய்து அருளி அவனாலே ஸத் க்ருதரராய்
வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் மீண்டும் ஸ்ரீ வில்லி புத்தூர் எழுந்து அருளி
அக் கிழியில் தனத்தை -யஸ்யைதே தஸ்ய தத் தனம் -என்கிறபடியே
வட பெரும் கோயிலுடையான் திரு முன்பே வைத்து தேவரீராலே யுண்டான தனம் தேவரீருக்கே -என்று தண்டன் சமர்ப்பித்து –
ப்ராசங்கிகம் பரிசமாப்ய பிரகிருதம் அநு சரதி -என்கிற நியாயத்தாலே தாம் முதலில் உபக்ரமித்து அருளின –
கானார் நறும் துழாய்க் கை செய்த கண்ணியும் -செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சியுமான திருமாலை கட்டி
வட பெரும் கோயிலுடையானுக்கு நித்தியமாகச் சாத்தி சேவித்துக் கொண்டு இருக்கிற இவ்வாழ்வார்
தாம் அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீ மாலாகாரர் திரு மாளிகையில் எழுந்து அருளிப் பூ இரக்க
அவர் உகந்து சாத்தினார் என்று இ றே முந்துறத் திரு நந்தவனம் செய்து திருமாலை சமர்ப்பிக்கத் தொடங்கிற்று –
ஸ்ரீ மாலாகாரர் திருமாலை சாத்தின அநந்தரம் மல்லரோடு பொருது வெற்றி கொண்ட தோளுக்குப் பல்லாண்டு பாடுகையாலே
ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்திலே ப்ரவணராய் –
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்தது முதலாக
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்-என்கிற அதி மானுஷ சேஷ்டிதமான ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை இவரும்
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி அநு கரித்து அவனுடைய ஸுசீல்ய ஸுலப்யாதி குணங்களில் ஆழங்கால் பட்டுக்
குமிழி நீர் உண்ணாமல் நன்றாக அனுபவித்து –
அவ்வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே -பெரியாழ்வார் திருமொழி -என்கிற திவ்ய பிரபந்தத்தையும் அருளிச் செய்து
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் நின்ற சிந்தையராய்க் கொண்டு
சாயை போலப் பாட வல்ல சஜ் ஜனங்களுக்கு உபகரித்து அருளி லோகத்தை வாழ்வித்து அருளினார்

———————————————————-

ஸ்ரீ ஆண்டாள் வைபவம்-

தேவஸ்ய மஹிஷீம் திவ்யா மாதவ் கோதாம் உபாஸ்மஹே
யந் மவ்லி மாலிகாம் பிரீத்யா ஸ்வீ கரோதி ஸ்வயம் பிரபு

ஸூசி மாசி பாண்ட்ய புவி பூர்வ பல்குநீ கநபே நவீ துளஸீ வநாந் தராத்
உதிதா முதாரா குண ரங்க நாயக்க ப்ரிய வல்லபம் வஸூ மதீம் உபாஸ்மஹே

சித்தாநாம் சரதாம் கலா வபபமேவர்ஷே நளாக் யேரவவ்
யாதே கர்க்கடகம் விதாவு பசிதே ஷஷ்டே அஹநி ஸ்ரீ மதி
நக்ஷத்ரே யமதைவ தேஷிதி புவோவாரே சதுர்த்யாந்திதவ்
கோதா ப்ராதுர பூத சிந்த்ய மஹிமா ஸ்ரீ விஷ்ணு சித்தாத்மஜா

அன்ன வயல் புதுவை ஆண்டாள் உடைய திருவவதார க்ரமம் இருக்கும்படி எங்கனே என்னில்,
அதமே க்ருஷத க்ஷேத்ரம் லங்கலா துத்தி தாமயா–க்ஷேத்ரம் சோதயதா லப்த்தா நாம் நாஸீ தேதி விஸ்ருதா –
பூதலா துத்தி தாஸாது வ்யவர்த்தத மமாத்மஜா-என்கிறபடியே
ஸ்ரீ ஜனக ராஜன் யாக சாலைக்கு ஸ்தலம் உழுது பண்ணா நிற்க அந்தப் படைச் சாலிலே பிராட்டி ப்ராதுர்பவித்து அருள —
தா லாங்கல பத்ததி -என்கிறது தானே நிரூபகமாக சீதை என்று திரு நாமம் சாத்தி உகைப்போடே ஸ்ரீ ஜனக ராஜன்
புத்ரியாக வளர்த்துக் கொண்டாப் போலே
மெய்யடியாரான விஷ்ணு சித்தர் தம் திரு நந்தவனத்தில் திருத் துழாய்க்கு கொத்தா நிற்க அத் திருத் துழாய் மண்ணின் கீழே
திருவாடிப் பூரத்திலே -பார் வண்ண மடமங்கை -என்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி ஆவிர்ப்பவித்து அருள அநந்தரம் –
வில்லி புதுவை நகர் நம்பி விஷ்ணு சித்தர் கண்டு விஸ்மிதராய்
மின்னனைய நுண் இடையாளான இக்கன்னிகையை எடுத்து ப்ரீதியோடே -சுருப்பார் குழல் கோதை -என்று திரு நாமம் சாத்தி
திருமகள் போலே வளர்த்து அருளினார்
ச விஷ்ணு சித்தஸ் துளஸீ வநா வநிம் க நித்ர வக்த்ரேண நிகாத யந் கலவ் –ஸூபே முஹுர்த்தே ஸூசி மாசி பல்குநீ பிரதீ ததாரே
துளஸீ வநாந்த்ரே புவோ பவத் காசந பால கந்யகா (சதாம் ததா ப்ரேஷ்ய) பூம் அம்சகாம் வீஷ்ய விசிஷ்மியேமுதா –
என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

இங்கனம் போருகிற காலத்திலே -விட்டு சித்தர் தங்கள் தேவரான வட பெரும் கோயிலுடையானுக்குச் சாத்தக் கட்டி வைத்த
திருமலையை ஆழ்வார் இல்லாத அவசரத்தில் இப்பெண் இல்லை தானே சூட்டிக் கொண்டு –
அவனுக்கு நேர் ஒவ்வாது இருக்குகிறேனோ -ஒத்து இருக்கிறேனோ என்று –
காறை பூண்டு கூறை உடுத்துக் கை வளை குலுக்கிக் கோவைச் செவ்வாய் திருத்தி அவ்வொப்பனை அழகைக் கண்ணாடியில் கண்டு
இப்படி பல நாளும் பந்து பந்தாகச் சுருட்டி வைக்க இத்தை ஆழ்வார் ஒரு நாள் கண்டு அருளி
பெண்ணே எப்போதும் இப்படியே செய்கிறாய் என்று மிகவும் கோபித்து அந்தத் திரு மாலையை அற்றைக்கு
வட பெரும் கோயிலுடையானுக்குச் சாத்தாமல் இருக்க அன்று ராத்திரியிலே ஆழ்வார் ஸ்வப்னத்திலே எம்பெருமான் எழுந்து
அருளி இற்றைக்கு நமக்கு மாலை கொண்டு வராது இருப்பது என் யென்ன –
தம் புத்ரி கோதை குழலிலே முடித்த க்ருத்யத்தை விண்ணப்பம் செய்ய எம்பெருமானும் அப்போது காணும் வாசனையாய் பிரியமாய்
இருப்பது என்று அருளிச் செய்ய ஆழ்வாரும் அன்று முதல் இவ் வாண்டாளை –
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-என்று விசேஷ பிரதிபத்தி பண்ணிப் போருவர் –
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் தொண்டரான ஆழ்வார் திருமகளார் தாம் சூடிக் கொடுத்ததுவே
நிரூபகமாகச் சூடிக் கொடுத்த நாச்சியராய் இருப்பர்

திருத் துழாய் பரிமளத்தோடே கூடியே முளைக்குமா போலே இந் நாச்சியாரும்
ஆ ஜென்ம பால்ய யவ்வன அவஸ்தைகள் தோறும் வளருகிற பரபக்தி பரஞான பரம பக்தி களை உடையவள் ஆகையால்
பகவத் விஷய ப்ராவண்யம் அல்லாத ஆழ்வார்களைக் காட்டிலும் இவளுக்கு அதிசயித்து இருக்கும் –
புருஷனை புருஷன் காமிக்குமதுவும் ஸ்திரீயை ஸ்திரி காமிக்குமதுவும் மேட்டு மடையாய் இருக்கும்
புருஷன் ஸ்த்ரீகைக் காமிக்குமதுவும் ஸ்த்ரீ புருஷனைக் காமிக்குமதுவும் பள்ளமடையாகயிலே
இது சேர்ந்து இருக்கும் இறே ஆகையால் அதிசயித்து இருக்கும்

அந்த ப்ராவண்யம் அடியாக -அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா -என்னும் நிலையை உடையாளாய்
துஷ்ட காளிய திஷ்டாத்ர கிருஷ்ணோ அஹமிதி சாபரா -என்று ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தை ஸஹிக்க மாட்டாத
கோப கன்னிகைகள் ஸ்ரீ கிருஷ்ணனை அநுகரித்துத் தரித்தால் போலே இவளும் மார்கழி நீராடி நோன்பு நோற்றுக்
காம பஜ நாதிகளைப் பண்ணித் தரிப்போம் என்று பார்த்து -சங்கத் தமிழ் மாலையாக –
திருப் பாவை –நாச்சியார் திருமொழி -என்கிற திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்து
ஜகத்துக்கு உபகரித்து அருளி வாழும் காலத்தில்

பதி சம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா –சிந்தார்ணவ பத பாரம் நாச சாதாப் லவோ யதா -என்கிறபடியே
ஸ்ரீ ஜனக ராஜன் பிராட்டி பருவம் கண்டு சிந்தார்ணவ கதனானாப் போலே இவ்வாழ்வாரும்
இந் நாச்சியாருடைய விவாஹ யோக்யமான பருவத்தைக் கண்டு வியாகுல அந்தக்கரணராக –
இவ் வாண்டாளும்-மானிடர்வர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்-என்ன ஆழ்வாரும் -பின்னை எங்கனே -என்ன –
இவரும் -மற்று ஒருவருக்கு என்னைப் பேசல் ஓட்டேன் மால் இருஞ்சோலை மாயற்கு அல்லால் -என்கிறபடியே
அவன் முகத்து அன்றி விழியேன்-என்ன -ஆழ்வாரும் -ஆகில் நூற்று எட்டுத் திருப்பதி எம்பெருமான்களில்
யாருக்கு வாழ்க்கைப் படுகிறாய் என்ன -ஆண்டாளும் ஆழ்வாரைக் குறித்து –
அவ்வவருடைய குண அபதானங்களைக் கீர்த்தித்து அருள வேணும் என்ன
ஆழ்வாரும் வட பெரும் கோயிலுடையான் வைபவம் அடியாக பாண்டி மண்டலத்தில் எம்பெருமான்கள் வைபவமும் –
மலை நாட்டுத் திருப்பதியில் எம்பெருமான்கள் வைபவமும் –
வடதிசைத் திருப்பதியில் எம்பெருமான்கள் வைபவமும் –
வட திருவேங்கடவன் வைபவமும் தொடங்கி
தொண்டை மண்டலத்தில் எம்பெருமான்கள் வைபவமும் –
அழகிய மணவாளன் முதலான சோழ மண்டலத்தில் எம்பெருமான்கள் வைபவமும்
அழகர் வைபவமும் அருளிச் செய்ய ஆண்டாளும் அது கேட்டு ஆனந்த அஸ்ருக்கள் துளிக்கப் புளகீக்ருத காத்ரையாய்

என் அரங்கத்தின் இன்னமுதருடைய குழல் அழகு வாய் அழகு கண் அழகுகளைக் கேட்டு அதி வ்யாமுக்தையாய் மோஹித்து-
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்று வளையும் சோரும்-என்கிறபடியே
மனம் உருகி மலர்க் கண்கள் பனிப்ப அழகிய மணவாளரைக் காமித்து -மந்திரக் கோடி உடுத்து மண மாலை சூட்டி –
மைத்துனன் நம்பி மது சூதன் வந்து கைத்தலம் பற்றி -மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத முத்துடைத் தாம நிரை
தாழ்ந்த பந்தல் கீழ் -பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்யக் கனாக் கண்டு -திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி உளாரானே —
அணி அரங்கத்து அம்மானுக்கே அற்றுத் தீர்ந்த காதலை உடையவளாக -அவ்வளவில் ஆழ்வாரும் –
கோதைக்குத் தக்க வரன் கோயில் பிள்ளை -என்று கருதி இது கூடும்படி எங்கனே -என்று வியாகுல அந்தக்கரணராய் கண் வளர்ந்து அருள –
திருவரங்கச் செல்வனார் ஆழ்வார் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி -உம் புத்ரி கோதையைக் கொண்டு –
அணி அரங்கன் திரு முற்றத்தே ஏற வாரீர் -அவளுக்குத் தகுதியாக நாமே பாணி கிரஹணம் பண்ணுகிறோம் -என்று அருளிச் செய்ய
ஆழ்வாரும் உகந்து நிர்ப்பரராய் இருக்கிற அளவிலே

நம் சத்ர சாமர தால வ்ருந்தாதி சகல பரிஜன பரிச்சதங்களோடே ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏறப் போய்
ஆண்டாளை அழைத்துக் கொண்டு வாருங்கோள்-என்று திருப் பவளச் செவ்வாய் திறந்து அருளிச் செய்து விட
அனைத்துப் பரிகரத்தாரும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏறச் சென்று ஆழ்வாரைக் கண்டு நம்பெருமாள் அருள் பாடிட்டு
அருளின படியை விண்ணப்பம் செய்ய ஆழ்வாரும் ப்ரீதராய் ஆச்சர்யப் பட்டு வட பெரும் கோயிலுடையானுக்கு விண்ணப்பம் செய்து
அவருடைய அனுமதி கொண்டு ஆண்டாளை மணிப் பல்லக்கில் எழுந்து அருளுவித்துக் கொண்டு
அழகிய மணவாளர் அல்லது அறியாத பாதிவ்ரதமுடைய ஆண்டாளைப் பிறர் கண் படாமல் தட்டுப் பாயிட்டு மூடிக் கொண்டு
அகில வாத்யத்துடனே அனைவரும் சேவிக்க எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு திருவரங்கம் திருப்பதி ஏறச் சென்று –
ஆண்டாள் வந்தாள்-
சூடிக் கொடுத்தாள் வந்தாள் –
சுரும்பார் குழல் கோதை வந்தாள்
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்
தென்னரங்கம் தொழும் தேசியள் வந்தாள்
என்று பல சின்னங்கள் பணிமாற வந்து அழகிய மணவாளன் திரு மண்டபத்தே சென்று தட்டுப்பாயை வாங்க

சூடிக் கொடுத்த நாச்சியாரும் அகிலரும் காணும்படி உதறியுடுத்த பட்டுச் சேலையும் சுற்றிய செங்கழு நீர் மாலையும் –
திரு நுதல் கஸ்தூரித் திரு நாமமும் -காது அளவும் ஓடிக் கயல் போல் மிளிரும் கடைக் கண் விழியும் –
கொடியேர் இடையும் கோக நகத்த கொங்கை குலுங்கச் சிலம்பு ஆர்க்கச் சீரார் வளை ஒலிப்ப –
அன்ன மென்னடை கொண்டு அழகிய மணவாளன் திரு முன்பே சென்று உள்ளே புகுந்து கண்களாரக் கண்டு –
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்றும் பேறு பெற்று -நாக பர்யங்கத்தை மிதித்து ஏறித்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கரைச் சேர்ந்து திருவரங்கன் திருவடி வருடும்படி அந்தர்பவித்து அருள

இத்தைக் கண்ட ஆழ்வார் சிஷ்யரான வல்லப தேவன் உள்ளிட்டார் அகிலரும் விஸ்மயப்பட –
திருவரங்கச் செல்வனார் ஆழ்வாருக்கு அருள்பாடிட்டு அருளி –
ஷீர சமுத்திர ராஜனைப் போலே நீரும் நமக்கு ஸூவ ஸூரராய் விட்டீர் -என்று மிகவும் உகந்து அருளி
இவருக்குத் தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டத்துடன் ஸ்ரீ சடகோபனும் பிரசாதித்து –
வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி பூண்டு கொண்டு வாழும் என்று விடை கொடுத்து அருள
ஆழ்வாரும் ப்ரீதி விஷாதத்துடனே ஸ்ரீ வில்லி புத்தூர் ஏறச் சென்று பூர்வம் போலே
ஸ்ரீ வட பெரும் கோயிலுடையான் கைங்கர்ய நிரதராய் வாழ்ந்து அருளினார் –

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: