ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–திரு மழிசை ஆழ்வார்கள் வைபவம் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————–

திரு மழிசைப் பிரான் வைபவம் –
சக்தி பஞ்சமய விக்ரஹதாத்மநே – சக்தி காரஜத சித்த ஹாரிணே (சக்தி ஹார ஜித்தா சித்த ஹாரிணே -பாட பேதம் )
முக்தி தாயக முராரி பாதயோர் பக்தி சார முநயே நமோ நம —
சித்தார்த்திந் யுஷ்ண ரஸ்மவ் மகர மதிகதேத்வா பரே ஜ்ஞான தாராஷோதே சம்வத்சரவ் கேகதவதிசதிநே
சப்த விம்சேம காக்யே நக்ஷத்ரே பாநு வாரே முனி வரத நயோ பக்தி சாரோ முனீந்திர
ஸ்ரீ மான் பிரபாவதாரம் ஜகதுப க்ருதயே பர்வனோ அன்யேத்யு ரத்ர
ஆழ்வார் திரு மழிசைப் பிரான் ஆகிறார்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து அருளின ஸ்ரீ கிருஷ்ணனைப் போலே யாய்த்து
திரு வவதரித்து அருளின படியும் வளர்ந்து அருளின படியும் –
எங்கனே என்னில்
ததோ அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பாநு நா -தேவகி பூர்வ ஸந்த்யாம் ஆவிர்ப் பூதம் மஹாத்மநா –என்கிறபடியே
யது குலத்திலே பிறந்து
அநார்த்ர மார்தரம் விரசம் ரசாட்யம பல்லவம் பல்லவிதந்ததா ஆஸீத் பாவோ பஹுஷீரதுகாப பூவர் நாராயணே
நந்த குலம் ப்ரவிஷ்டே-என்கிறபடியே
நந்தன் குல மதலையாய் கோப குலத்திலே வளர்ந்து அருளினால் போலேயே
இவ்வாழ்வாருடைய திரு அவதாரமும் ஒரு பிறவியிலே இரு பிறவியாய் இறே இருப்பது –
அது எங்கனே என்னில்

அத்ரி ப்ருகு வசிஷ்ட பார்க்கவ ஆங்கீரஸாதிகளான மஹரிஷிகள் எல்லாம் ப்ரஹ்மாவின் பக்கலிலே சென்று
பூ லோகத்தில் உத்க்ருஷ்ட தமமான ஷேத்ரத்திலே எங்களுக்கு நித்ய வாசம் பண்ண வேணும் –
அத்தை நிச்சயித்துச் சொல்ல வேணும் என்று கேட்க -ப்ரஹ்மாவும்
உலகும் மழிசையும் உள் உணர்ந்து விஸ்வகர்மாவைக் கொண்டு பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணையாய்
ச சைலாம்புதிகாநநையான பூமி எல்லாம் ஒரு தட்டும் விதேஹ பவந க்ஷேத்ரமான திரு மழிசை ஒன்றும் ஒரு தட்டுமாகத்
துலையிலே வைத்து நிறுக்க
தாத்ரா துலிதாச லகுர் மஹீ -என்கிறபடியே பூமியை வைத்த பக்கம் நொய்தாக மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம்
கனத்து இருக்கக் கண்டு -அதுக்கு மஹீ சார க்ஷேத்ரம் என்று பேர் இட்டு நிரூபிக்கையாலே
அந்த ரிஷிகளும் அவ்விடத்தை விடாதே நித்ய வாசம் பண்ணிக் கொண்டு இரா நிற்க

அவர்களில் பார்க்கவ மஹர்ஷியானவர் -பஸ்சிமே யோஜ நார்த்தேச விதேஹா திஷ்டி தம் வனம் -பார்க்கவோ தீர்க்க சத்ரேண
வாஸூ தேவம் சநாதநம் அபி பூஜ்யயாதா ந்யாய மிதி நித்யம கல்பயத் -என்று ப்ரஹ்மாண்ட புராணத்திலே சொல்லுகிறபடியே
தீர்க்க சத்ரம் என்கிற யாகத்தாலே சர்வ அந்தர்யாமியான ஸ்ரீமன் நாராயணனனை ச க்ரமமாக யஜீத்துக் கொண்டு போருகிற காலத்திலே
பார்க்கருடைய பத்னி கர்ப்பிணியாய்-பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்கிறபடியே
பன்னிரண்டு மாசத்துக்கு பின்பு தை மாசத்தில் திரு மக நஷத்த்ரத்தில் பிண்டாக்ருதியாக பிரசவிக்க
ஸூ தர்சன அம்சநேந திரு மழிசைப் பிரான் அவதரித்தார்
சா கர்ப்பமா தத்தமு நே ஸ் ச பத்நீ ஸூதர்சநாம் சேகததா அநு விஷ்டம் பபாத கர்ப்போபு விதைஷ்யமாஸே
மகாபிதேந மஹநீயா தாரே -என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

அநந்தரம் உல்ப சம்வேஷ்டிதமாய் ஒன்றும் ரூபீ கரையாமல் அவதரிக்கையாலே பார்க்கவரும் தத் பத்னியும் அநாதரித்து
ஒரு பிரப்பந்தூற்று கீழே வைத்துப் போக
அந்த உல்பா வ்ருத பிண்டாக்ருதியானது அகில ஜெகன் மாதாவான பெரிய பிராட்டியார் அனுக்ரஹத்தாலே
பூமிப்பிராட்டி ஸூ ரஷிதமாக வைத்துக் கொண்டு இருக்கச் செய்தே –
சிக்கென்று சென்னிக்கால் சீரிடைப்பின் கண்ணுயிராய் ஓக்க உருப்பாய்ந்து அறிவால் உள் நிறைந்து -என்கிறபடியே
சர்வ அவயவங்களும் பரிபூரணமாய் அதிலே ஜீவன் ஸ்புரித்துத் தோற்றி-பேதைக்குழவி என்கிறபடியே
அத்யந்தம் சிசுவாய் பசும் குழந்தையான ஆழ்வார் பசி தாஹங்களாலே ஈடுபட்டு ஸ்தந்யார்த்தியாய் விஜனமான வனத்திலே
ஒரு பிரப்பந்தூற்றிலே ரோதனம் பண்ண
அவ்வளவில் மஹீ சார ஷேத்ராபதியான பெருமாள் அங்கே எழுந்து அருளி கருணா அமிர்தவ் நிஷ்கந்தியான
கடாக்ஷ பாதங்களால் இவர் பசி தாக்கம் தீர்க்கும்படி குளிரக் கடாக்ஷித்து
ஆராவமுதமான ஸ்வ விக்ரஹத்தைக் காட்டி ஆஸ்வாசிப்பித்து மறைய
இவரும் தத் விக்ரஹ அஸஹிஷ்ணுவாய் மீளவும் அழத் தொடங்கினார்

அங்கே திருவாளன் என்கிற ஒருத்தன் பிரம்பு அறுக்கப் போன இடத்தில் இவருடைய ஆர்த்த நாதம் கேட்டுக் கூட
வந்தவர்களுடன் சோதித்து இவரைக் கண்ட ஹர்ஷ பிரகர்ஷத்துடனே எடுத்துக் கொண்டு வந்து தன்னுடைய
பத்தினியான பங்கயச் செல்வியார் கையிலே கொடுக்க அவளும் வந்த்யையாலே மிகவும் ப்ரீதையாய்-
உத்தானம் செய்து -என்கிறபடியே எடுத்துக் கொண்டு புத்ர பிரதிபத்தியைப் பண்ணி –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -என்று விகல்பிக்கலாம் படி ஆதரத்துடன்
ஸ்நேஹ பூர்வகமாக வளர்க்க வளர்ந்து அருளுகிற காலத்திலே -வனமுலைகள் சோர்ந்து பாய -என்கிறபடியே
முலைப்பால் சுரக்க -இவளும் நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –
என்னும்படியே முலை கொடுக்கத் தேட –
இவரும் ஸ்தந்யாதி போஜ்யங்களிலே நிராசராய் பகவத் குண ஏக தாரகராய்
வாக் வ்யாவஹார ரோதநாதிகள் ஒன்றும் இன்றியே மாலா மூத்ர ரஹிதராய்ப் பரிபூர்ணமாக
சர்வ அவயவங்களும் வர்த்திக்க எழுந்து அருளி இருக்க
இந்த ஆச்சர்யத்தை அபுத்ரவானுமாய் திரு மழிசையிலே வாசம் பண்ணும் சதுர்த்த வர்ணத்தில் ஜாதனுமாய்
மஹா ப்ராஞ்ஞனுமான ஒரு வ்ருத்தன் கேட்டு பங்காகப் பால் அமுது காய்ச்சிக் கொண்டு
ஸ்வ பார்யா ஸஹிதனாய் இவர் இருக்கிற இடத்திலே விடியற்காலத்திலே வந்து பஞ்ச சக்தி மயமான சிசுவினுடைய
அப்ராக்ருத திவ்ய தேஜஸ்ஸைக் கண்டு அத்யாச்சர்யப்பட்டு தான் கொண்டு வந்த பால் அமுதை சமர்ப்பித்து பிரார்த்தித்து
அமுது செய்யப் பண்ண வேணும் என்று இத்தைக் கொண்டு வந்தேன் அமுது செய்து அருள வேணும் என்று
பஹுசம் வேண்டிக் கொள்ள ஆழ்வாரும் அவன் இடத்தில்

க்ருபா அதிசயத்தாலே அவன் கொண்டு வந்த பால் அமுதை அமுது செய்து போக விட
அவர்களும் அப்படியே பல நாளும் போர ப்ரீதியுடன் பால் அமுதை செய்வியா நிற்க
ஒரு நாள் ஆழ்வார் வ்ருத்த தம்பதிகளுடைய மநோ பாவம் அறிந்து அற்றைக்கு அவர்கள் கொண்டு வந்த
பால் அமுதை அமுது செய்து சேஷித்த பாலை நீங்கள் ஸ்வீ கரியுங்கோள் உங்களுக்கு நல்ல புத்ரன் உண்டாவான் என்று பிரசாதிக்க
அவர்களும் அப்படியே ஸ்வீ கரித்து யவ்வன அவஸ்தையை அடைந்து தத் பத்னியும் கர்ப்பவதியாய்
ஒன்பது மாசம் சென்று பத்தாம் மாசம் நிறைந்தவராய் -கேசவன் தமராய் -நாக் கொண்டு மானிடம் பாடாத மஹா ப்ராஞ்ஞரான
ஒரு குமாரனை பிரசவிக்க ஸ்ரீ விதுரரைப் போலே விளங்குகிற அந்தப் புத்ரனைக் கண்டு பத்து நாளும் கடந்த இரண்டா நாள்
அவருக்கு கணி கண்ணன் என்று திரு நாமம் சாத்தி அகில வித்யைகளையும் அதிகரிப்பித்தார்கள்

பின்பு பகவத் தயா ஸூதா ஸ்வாதந திருப்த சேதனராய் -விடப்பட்ட அன்ன பான பய அபிலாஷையை உடையராய்
பைத்ருக வேஸ்மத்திலே வளர்ந்து அருளுகிற ஆழ்வாரும் ருஷி புத்திரர் ஆகையால் ஏழு திரு நஷத்தரத்துக்கு பின்பு –
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி அளப்பில் ஐம்புலனை அடக்கி என்கிறபடி –
யம நியமாதியான அஷ்டாங்க யோக அப்யாஸத்திலே திரு உள்ளமாய் -அதுக்கு ஜகத் காரண வஸ்துவை
தியானத்துக்கு விஷயமாகச் சொல்லுகையாலே அந்த வஸ்துவை அறிய என்றால்
பிணங்கும் சமயம் பல பல ஆகையால் அவை அவை தோறும் புக்கு ஆராய்வோம் என்று –
சாக்கிய உலுக்கிய அக்ஷபாத ஷபண கபில பதஞ்சலிகள் ஆகிற பாஹ்ய சமயங்களை –
சைவ மாயாவாத நியாய வைசேஷிக பாட்ட ப்ரபாகாதிகள் ஆகிற குத்ருஷ்ட்டி சமயங்களையும் புக்கு
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து ஆராய்ந்து பார்த்த இடத்தில் -இறை நிலை உணர்வு அரிது -என்கிறபடியே
அவற்றிலே ஒரு பசை இல்லாமையால் அங்கு நசை அற்று
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் -என்று கொண்டு
ஈனமான இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைந்து
கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தான் என்று இதர சித்தங்களை நஸ்வரம் என்று கை விட்டு
இப்படி ஏழு நூறு திரு நக்ஷத்ரம் சென்றவாறே

ஸ்ரீ வைஷ்ணவராய் -பரம வைதிக சித்தாந்த நிஷ்டராய் -இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் -என்று
அறுதியிட்டுக் கொண்டு வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை அறிந்து தத் ப்ரவணராக –
சர்வேஸ்வரனும் அதுவே பற்றாசாக இவருக்கு மயர்வற மதி நலம் அருளித் தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தையும்
தத் ஆஸ்ரயமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களையும் உபயத்தையும் பிரகாசிக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
தத் ஆதாரமான க்ரீடாடிதி நூபுராந்தமான திவ்ய பூஷண வர்க்கத்தையும் அவற்றோடு விகல்பிக்கலாம்படியான
சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்களையும்
இது அடங்க காட்டில் எரிந்த நிலாவாகாமல் அனுபவிக்கிற ஸ்ரீ லஷ்மீ ப்ரப்ருதி மஹீஷீ வர்க்கத்தையும்
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்றும்
அடிமை செய்வார் திரு மாலுக்கு என்றும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் என்றும்
ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் -என்றும் சொல்லுகிறபடியே அச்சேர்த்தியிலே அடிமை செய்கையே தங்களுக்கு
தாரகாதிகளாக யுடையரான திவ்ய பரிஜன வர்க்கத்தையும்
அந்த போகத்துக்கு வர்த்தகமாக-நலம் அந்தமில்லதோர் நாடாய்ப் போக விபூதியான பரம பாதத்தையும் சாஷாத்கரிப்பித்து
பின்னையும் பிரகிருதி புருஷ காலாத்மகமான லீலா விபூதியினுடைய ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்களை
சத்வாரகமாகவும் அத்வாரகமாகவும் நின்று இன்புறும் இவ்விளையாட்டுடையான் என்கிறபடி
தனக்கு லீலையாக உடையனாக இருக்கிற படுதியையும் காட்டிக் கொடுக்க

இப்படி உபய விபூதி நாதனான தான்
யந் நாபி பத்மா தபவந் மஹாத்மா ப்ரஜாபதிர் விஸ்வ ஸ்ருக் -என்கிறபடியே
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படைக்கும்படி முதலிலே தனக்கு ஜ்யேஷ்ட புத்ரனாய் ப்ரஹ்மாவை தன் நாபீ கமலத்திலே
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் என்னும்படி முந்துற உத்பன்னன் ஆக்கின படியையும்
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா ஷ்ரேஷ்டாயா என்கிறபடியே அந்த ப்ரஹ்மாவுக்கு ஜ்யேஷ்ட புத்திரனான ருத்ரன்
உத்பன்னனான படியையும் பிரகாசிப்பித்து அருள இவரும்
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் என்று
தன் வாக்காலே சொல்லும்படி இவற்றை எல்லாம் இவர் சம்சயம் விபர்யயம் அற அறிந்து
சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் பாக்கியத்தால்
செங்கண் கரியானைச் சேர்ந்தோம் யாம் தீதிலமே எங்கட்க்கு அரியது ஓன்று இல் -என்று அனுசந்தித்து அருளி
இதர சித்தாந்த நிவ்ருத்தி பூர்வகமாக திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓர்ந்து

ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்யச புந புந இதமேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயா நாராயணஸ் சதா -என்றும்
யோகேஸ்வரம் ஜெகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் ஸ்ரீ யபதிம் பத்ம நாதம் விசாலாக்ஷம் சிந்தயாமி ஜகத்பதிம் -என்றும் சொல்லுகிறபடியே
ஜகத் காரண பூதனாய் சர்வ அந்தர்யாமியாய்ப் புண்டரீகாக்ஷனாய் ஜெகந்நாதனான ஸ்ரீ யபதியைத் தியானம் பண்ணிக் கொண்டு
க்ருதரார்த்தராய்-( திரு மழிசையிலே ) திரு வல்லிக்கேணியில் கஜேந்திர சரஸ்ஸின் கரையில்
ஏழு நூறு சம்வத்சரம் பகவத் அனுபவம் பண்ணிக் கொண்டு யோகத்தில் எழுந்து அருளி இருக்கிற நாளையில்

ஒரு நாள் இவர் நிரந்தர பகவத் அனுபவத்துடன் கந்தா சீவனம் செய்யா நிற்க அவ்வளவில் ருத்ரனும்
அத்ரிகன்யா ஸஹிதனாய் ருஷபா ரூடனாய் திரிசூல பாணியாய் வ்யோம மார்க்கத்தில் செல்லா நிற்க
ஆழ்வாரும் அவர்களைக் கண்டு அவன் நிழல் தன் மேல் படாமல் ஒதுங்க இதைத் தம்பதிகள் இருவரும் கண்டு நிற்க
அவ்வளவில் ருத்ரனைக் குறித்து பார்வதி இவராவரோ என்று அறிந்து போவோம் என்ன ருத்ரனும் தத் பத்னியுடனே
இவர் மஹாநுபாவர் நம்மைக் கணிசியார் என்ன ஆகிலும் அவரைக் கண்டு போவோம் என்ன
அவனும் சம்மதித்து இவர் அண்டையில் வந்து நிற்க இவரும் அவனைக் கண் எடுத்துக் பாராமல் உதாஸீனித்து இருக்க

அவனும் நாம் வந்து நிற்க நீர் அலஷ்யம் பண்ணலாமா என்ன –
இவரும் உன்னைக் கொண்டு என்ன பிரயோஜனம் உண்டு எனக்கு -என்ன
அவனும் நாம் உனக்கு ஓன்று தரக் கடவதாக வந்தோம் என்ன
இவரும் நமக்கு ஒன்றும் வேண்டாம் என்ன –
அவனும் நம் வரவு வ்யர்த்தம் ஆகாமல் உம் அபீஷ்டத்தைக் கேட்டுக் கொள்வீர் என்ன
ஆழ்வாரும் புன்முறுவல் செய்து ஆகில் மோக்ஷம் தர வல்லையாகில் தா என்ன
அது என்னால் தரக் கடவது அன்று ஸ்ரீ மன் நாராயணனாலே என்ன
ஆனால் இன்று சாவாரை நாளை சாகும்படி பண்ண வில்லையோ என்ன
அதுவும் கர்ம அனுகுணம் அன்றோ என்ன
ஆனால் இவ் ஊசியின் பின்னே நூல் வரும் படி வர பிரதானம் பண்ணாய் என்று அபஹசித்துச் சொல்ல
அவனும் இவ்வார்த்தையைக் கேட்டு மிகவும் குபிதனாய் இவரை அநங்கனைப் போலே ஆக்கக் கடவேன் என்று
பொறியும் புகையும் கிளம்புகிற தன் நெற்றிக் கண்ணைத் திறந்து விட அக்கண்ணில் நின்றும்
ஜ்வாலா ஜாஜ்வல்யமானமாய் சம்வர்த்த அக்னி போலே சுட்டுக் கொண்டு எரிகிற ஜ்வலந ப்ரரோகத்தைக் கண்டு
ஆழ்வாரும் தமது வலது திருவடியின் பெரு விரலில் ஒரு கண்ணைத் திறந்து விட அக்கண்ணின் நின்றும்
அக்னி பிரளய ஹூதவஹ கோடி கல்பமாய் ஜ்வலித்துக் கொண்டு கிளம்ப கோடி வைச்வாநர ப்ரக்யமாய்
அத்யக்நி கோடி நிப தீர்க்க ஜ்வாலா ஜாஜ்வல்யமான அக்னியில் சம்புவின் லோசனை அக்னி த்யோத பிராயமாய் அடங்க

பின்னும் அந்த மஹத் அக்னியானது உலகங்களை ஆக்ரமித்து ம்ருத்யுஞ்ஜயனைச் சுற்றிக் கொள்ள
சம்புவும் அந்த அங்குஷ்ட லோசன அக்னி ஜ்வாலையைப் பொறுக்க மாட்டாமல் கேவலம் பரிதபித்து
அந்யதா சரணம நாஸ்தி த்வமேவ சரணம் மாமா தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ ஜனார்த்தன என்று முறையிட
அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் -41000-ரிஷிகளும் சதுர்முக ப்ரஹ்மாவும் ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று
பிரபத்தி பண்ணி முறையிட எம்பெருமானும் புஷ்கலா வர்த்தகம் என்னும் பிரளய மேகங்களை அக்னி சமிக்கும்படி
ஆஞ்ஞாபிக்க மேகங்கள் தண்டனை சமர்ப்பித்து ஸ்வாமி ஸூ தர்சன அம்சஜரான பார்க்கவ மகரிஷி பாத அங்குஷ்ட
நேத்ர அக்னியை சமீபிக்கவும் பார்க்கவும் எங்களுக்கு சக்தியும் உண்டோ என்ன
ஸ்வாமியும் என்னுடைய கிருபையாலே உங்களுக்கு பலமுண்டாம் என்ன
அம்மேகங்களும் மின்னி முழங்கி விழித்து அகில தாபங்களும் அடங்கும்படி ஆகாச அவகாசம் அடைய நிறைந்து
அபி வர்ஷிக்க அவ் வர்க்ஷத்தாலே எரிகிற அக்னியும் அணைந்து பெரு வெள்ளம் கோக்க-ஆழ்வாரும்
கிரயோ வர்ஷ தாரா அபிர் ஹன்யமாநாந விவ்யது -என்கிறபடியே அத்ரி ராஜனைப் போலே
வர்ஷ தாரைக்கு இறாயாமல் பகவத் அனுபவ தத் பரராய் இருக்கிறபடியைக் கண்டு அவனும் விஸ்மயப்பட்டு
இவருக்கு பக்தி சாரார் என்ற திரு நாமத்தையும் சாத்தி இவர் வைபவத்தைக் கொண்டாடி சிரஸ் கம்பனம் பண்ணி
அம்பரீஷனாலே துர்வாசர் அவமானப் பட்டான் இறே
ஆகையால் பாகவதர்கள் ஸூ துர்ஐயர் என்று ஸ்வ பத்னிக்கு உரைத்துக் கொண்டு யதா ஸ்தானமே போந்தான்

பின்னையும் ஆழ்வார் பூர்வம் போலே யோகத்தில் எழுந்து அருளி இருக்க யாத்ருச்சிகமாக
வயாக்ரா ரூடனாய் சுக்திஹாரன் என்பான் ஒரு கேஸரந் ஆகாச மார்க்கத்தில் செல்லா நிற்க
ஆழ்வாருடைய யோக பிரபாவத்தாலே இவர் மேலே போக ஷமர் அன்றிக்கே வ்யாக்ரமும் திமிர்த்து நிற்க
அவனும் இது ஏதோ என்று பார்த்துக் கொண்டு வரும் அளவில் கீழே மவ்வ்நியாய் யோகத்தில் எழுந்து அருளி இருக்கிற
ஆழ்வாரைக் கண்டு விஸ்மயப்பட்டுத் தத் க்ஷணத்தில் ஆகாசத்தினின்றும் பூமியில் வந்து
வ்யாக்ர வாஹனத்தின் நின்றும் இறங்கி இவர் அண்டையிலே வந்து -பார்க்கவ முனீந்திரரே இக்கந்த ஆவரணத்தைப்
பொகட்டு நான் தருகிற திவ்ய பட நிர்மிதமான இந்தக் கவசத்தைத் திரியும் என்று ஒரு கவசத்தைக் கொடுக்க
இவரும் அத்தை நிஷேதித்து ஸ்வ சங்கல்பத்தாலே மணி ஸ்வரூபமாய் த்யு மணி ப்ரபோ பமமான கவசத்தை அவனுக்குக் காட்ட
அவனும் லஜ்ஜாவிஷ்டனாய் தன் கழுத்திலே ஹாரத்தை வாங்கி -இத்தை அக்ஷமாலையாகத் தரியும் என்று கொடுக்கத் தேட
இவரும் தம் கழுத்தில் துளஸீ பத்மாஷ மாலையை வாங்கி இத்தைப் பாராய் என்ன
அது நவரத்ன ஹாரமாய் விளங்கக் கண்டு அவனும் இவர் மஹாநுபாவர் மஹா பரிபூர்ணர் என்று தண்டன் இட்டு
இவர் வைபவத்தைக் கொண்டாடி யதா ஸ்தானமே போந்தான்

பின்னையும் அங்கே இவர் யோக நிஷ்டராய் எழுந்து அருளி நிற்கச் செய்தே கொங்கண சித்தன் என்கிற பெயரை உடையனாய்
ரஸவாதியாய் இருப்பான் ஒருவன் வந்து இவ் வாழ்வாருடைய வைபவத்தைக் கண்டு இவருக்குக் காணி கோடியைப் பேதிப்பதான
ரஸா குளிகையை சமர்ப்பிக்க -இவரும் அத்தை அநா தரித்து -நமக்கு வேண்டாம் என்று அவனுக்குத் தம்முடைய பொன்னொத்த மேனியின்
புழுதியோடே தம் காதில் குறும்பியை உருட்டு இந்தக் காணி குளிகை கோடா கோடியைப் பேதிக்கும் என்று கொடுத்து அருள –
அவனும் அப்படியே பரீஷிக்க -அது சொன்னபடிக்கு ஒத்து இருக்கையாலே அதி ப்ரீதியுடன் ஆழ்வாரைத் தெண்டன் இட்டு
தன்யோஹம் என்று க்ருதார்த்தனாய்ப் போந்தான் –

அநந்தரம் திரு மழிசைப் பிரானும் ஒரு குஹாந்தரவிஷ்டராய் நிப்ருதாஷ விருத்தியை யுடையராய் யோகத்தில் எழுந்து அருளி இருக்க
பொய்கை பூதம் பேயாழ்வார் ஆகிய முதல் ஆழ்வார்கள் மூவரும் எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டராய்
சஞ்சரித்து வருகிறவர்கள் ஸூ தூரத்திலே அப்ராக்ருத திவ்ய தேஜஸ் ஸைக் கண்டு அத்யாச்சர்யத்தைப் பட்டு
இத்தை ஆராயக் கடவோம் என்று எங்கும் திரிந்து சோதித்து வைத்து குஹநாதரவிஷ்டரான பக்தி சாரரரை –
இம்மஹானுபாவர் யாரோ என்று திவ்யமான நெஞ்சு என்னும் உட்கண்ணால் கண்டு பார்க்கவ முநீந்தரரே ஸூகமே இருக்கிறீரோ என்று
குசலப் ப்ரச்னம் பண்ண அவரும்
பத்ம மாதவீ குஸூமகைர வோத்பவ முனிகள் நன்றாய் இருக்கிறீர்களோ என்று வினவி அருள
அந்யோந்வ வந்தன பரராய் ஆஹ்லாத சீதா நேத்ராம்புகள் பனிப்பப் புளகீக்ருத காத்ரராய் ஒருவரை ஒருவர் ஆலிங்கித்துக் கொண்டு
மிகவும் ப்ரீதியுடனே எல்லாரும் சதா பர குணா ஆவிஷ்டராய் யோகத்தில் எழுந்து அருளி இருந்தார்

இவர்கள் ஒருவர்க்கு ஒருவர் பாலும் பாலும் சேர்ந்தால் போலவும் தேனும் தேனும் கூடினால் போலவும்
பகவச் சரணாரவிந்த த்யான அம்ருத ஸ்வாதனம் தேனூறி எப்பொழுதும் தித்தித்து ஐக ரஸ்யத்தாலே எல்லாருக்கும்
ப்ரணய ரசம் உந்மஸ்தகமாம்படி பகவத் அனுபவ ரசம் பண்ணி இருந்தார்கள்
பின்பு எல்லாரும் உகந்த திரு உள்ளத்தை யுடையராய் மயிலை நகரி ஏற எழுந்து அருளி அங்கே
பேயாழ்வார் திரு அவதரித்து அருளின கைரவ தீர்த்தத்தையும் ப்ரீதியுடன் ஆலோகித்துக் கொண்டு தத்தீரத்திலே சிலகாலம்
யோகத்தில் எழுந்து அருளின பின்பு ஓடித் திரியும் யோகிகள் என்னும்படியே பூர்வம் போலவே
பார்க்கவ முனீந்திரரை அனுவர்த்தித்து அனுமதி போன்று பூசஞ் சரணார்த்தமாக முதல் ஆழ்வார்கள் மூவரும் எழுந்து அருளினார்கள்

அநந்தரம் பார்க்கவ முனீந்திரரும் தம்முடைய திரு அவதார ஸ்தலமான திரு மழிசையிலே எழுந்து அருளி சாத்துகைக்குத்
திரு மண் வேண்டிக் கல்லி சோதித்த இடத்தில் திரு மண் அகப்படாமல் முசித்துக் கிடக்க அப்போது
திரு வேங்கடத்து எந்தை இவர் ஸ்வப்னத்திலே எழுந்து அருளித் திரு மண் இருக்கும் இடம் அடையாளமாகக் காட்டி அருள
அங்கே திரு மண் கண்டு எடுத்து பன்னிரண்டு திரு நாமம் சாத்தி அருளிப் பெரிய ப்ரீதியுடனே
சிந்தை மற்று ஒன்றின் திறத்தல்லாத் தன்மை என்கிறபடியே ஷூத்ர புருஷார்த்தங்களிலே நசை அற்றுப் பகவத் அனுபவம்
பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இவரும் பொய்கைப் பிரான் அவதரித்து அருளின
பொய்கைப் பிரதேசத்திலே சிலகாலம் சேவித்து இருக்க திரு உள்ளமாய்

யத்து சத்யவ்ரதம் நாம க்ஷேத்ரம் பாப விநாசனம் புண்ய க்ஷேத்ரேஷு சர்வேஷு தஸ்யை வஸ்ரைஷ்ட்யமீரிதம் -என்று
சொல்லுகிறபடியே புண்ய க்ஷேத்ரங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரேஷ்டமுமாய் பாப ஹரமுமாய் சத்யவ்ரத க்ஷேத்ரம் என்று பேரை
உடையதுமான திருக் கச்சி வெஃகாவில் எழுந்து அருளி
சயாநஸ் சேஷ பர்யங்கே குந்தேந்து தவள ப்ரபே பணா ரத்ன சஹஸ்ராம் ஸூ நவாஸ் தரண விஸ்த்ருதே-
நீல ஜீமூத ஸங்காச பத்ம பத்ர நிபேஷண ஸேவ்ய மாநோ விசாலாஷ்யா ஸ்ரீ யாக கமல ஹஸ்தாய தரண்யா
சஸூ தந் வங்க்யா தாதா விஸ்வஸ்ய விஸ்ய புக் -என்றும்
தேவி மாராவார் திரு மகள் பூமி -என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரீ பூமி நீளை களாலே ஸேவ்யமானானாயக் கொண்டு
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா -என்கிறபடியே பெரிய திருவனந்த ஆழ்வானான திரு அணையில்
திரு வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை சேவித்து பொய்கையாழ்வார் அவதரித்து அருளின அந்தத் திரு பொய்கைக் கரையிலே
அவரை த்யானம் பண்ணிக் கொண்டு யோகத்தில் ஏழு நூறு சம்வத்சரம் எழுந்து அருளி இருக்கிற காலத்திலே

இவர் திருவடிகளிலே கணி கண்ணர் வந்து ஆஸ்ரயித்துப் பகவத் ப்ரவணராய் இருக்க அவ்வளவில் அங்குள்ள ஒரு ஸ்தவிரையானவள்
வந்து ஆழ்வாரை சேவித்து அவர் திருவடிகளிலே பக்தி உக்தையாய் அவர் எழுந்து அருளி இருக்கிற இடத்தை
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாம்-என்கிறபடியே சம்மார்ஜன கோமயாநு லேப நரங்கவல்யாத் அலங்காரங்களாலே
அநு தினம் சுச்ருஷிக்க யோகத்தில் எழுந்து அருளி இருக்கிற இவ்வாழ்வார் ஒரு நாள் திருக் கண்களை விழித்துப் பார்த்து
இவள் செய்கிற கிங்கர விருத்திக்கு மிகவும் உகந்த திரு உள்ளத்தராய் அந்த வ்ருத்தையைப் பார்த்து –
உன் அபீஷ்டத்தை சொல்லிக் காணாய் -உனக்கு ஒரு வர பிரதானம் பண்ணுகிறோம் என்று அருளிச் செய்ய அவளும் அப்படியே
ஆழ்வாரைக் குறித்து -அடியேன் இடத்தில் கிருபா அதிசயம் உண்டாகில் அடியேனுக்கு இந்த வார்த்தகம் போம்படி கடாக்ஷித்து அருள வேணும் என்ன
ஆழ்வாரும் அப்படியே ஆகக் கடவது -என்று அவளைக் குளிரக் கடாக்ஷித்து அருள அவளும் இவர் கடாக்ஷத்தாலே
ப்ராப்த யவ்வனையாய்த் தேவ ஸ்த்ரீயைப் போலே அதி ஸூந்தரையாக
அவ்வளவில் தத் ராஜ்ய அதிபதியான பல்லவராயனும் இவளைக் கண்டு மன்மத பாண பாதிதனாய்த் தனக்குப் பத்நியாக வேணும்
என்று பிரார்த்திக்க அவளும் அனுகூலித்து அவனுடனே அதி மானுஷ போகங்களை அனுபவியா நிற்க

ஒரு நாள் பல்லவ ராயன் தனக்கு ஒரு நாளைக்கு ஒரு நாள் சரீரம் ஜரித்து வரக் கொண்டு அவளைக் குறித்து
உனக்கு அதி மானுஷமான இந்த யவ்வனம் எங்கனே உண்டாயிற்று என்று கேட்க -அவளும் அவனைக் குறித்து
ஆழ்வார் கடாக்ஷத்தாலே தனக்கு உண்டான படியைச் சொல்லு நீயும் உன்னகத்திலே அநு தினம் உபாதானம் பண்ண வருகிற
கணிகண்ணரை அனுவர்த்தித்து அவர் புருஷகாரமாகத் தத் தேசிகரான பக்தி சாராரை அனுவர்த்தித்தாயாகில் உனக்கும்
இப்படிப்பட்ட யவ்வனம் உண்டாம் என்று சொல்ல அப்போது ராஜாவும் கணிகண்ணரை அழைத்து உம்முடைய ஆச்சார்யரை
நாம் சேவிக்க வேணும் -அவரை நம் பாக்கள் அழைத்துக் கொண்டு வர வேணும் என்று சொல்ல கணிகண்ணரும் –
நம் ஆச்சார்யரும் ஒருவர் அகத்துக்கும் எழுந்து அருளார் -ஒரு ராஜாவையும் கணிசித்துப் பாரார் என்ன
பின்னையும் ராஜாவான பல்லவராயன் தன்னைக் கவி பாட வேணும் என்று கணிகண்ணரை அபேக்ஷிக்க
வைகுந்தச் செல்வனார் சேவடியைப் பாடுகை ஒழிய
நாக் கொண்டு பாடேன் -என்றும்
வாய்க் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் என்றும்
இப்படி தம்முடைய அத்யாவஸ்ய ஹேதுவான சிஷ்டாசார வசனங்களைச் சொல்லி
பகவத் பாகவத விஷயம் ஒழிய நான் நர ஸ்துதி பண்ணுவது இல்லை -என்ன
ஆகிலும் நீர் நம்மைப் பாட வேணும் என்று அவன் இவரை நிர்பந்திக்க கணிகண்ணரும்

ஆடவர்கள் எங்கன் அகல்வார்-(எவ்வாறு அகன்று ஒழிவார் )- அருள் சுரந்து பாடகமும் ஊரகமும் பாம்பணையும் –
(பஞ்சரமும் -)நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ மன்றார் பொழில்-(மதிள் )- கச்சி மாண்பு என்று சொல்ல
அவனும் நம்மைப் பாடு என்றால் இங்கனம் சொல்லலாமோ என்று மிகவும் குபிதனாய்க் கொண்டு
ஆகில் நம்முடைய ராஜ்யத்தின் நின்று போம் என்ன -ஆஜகாம முஹுர்த்தேன -என்கிறபடியே சடக்கென
ஸ்வா சார்யரான பக்தி சார முனிகள் திரு முன்பே வந்து தண்டன் சமர்ப்பித்து அச்செய்தியை விண்ணப்பம் செய்து
அடியேன் இவ்விடத்தில் நீண்டும் விடை கொள்கிறேன் என்ன
ஆழ்வாரும் நீர் போகீறீராகில் நாம் இங்கு இருக்கப் போகிறோமோ –
நாம் புறப்பட்டாள் எம்பெருமான் இங்கே கண் வளரப் போகிறானோ -அவன் எழுந்து அருளும் போது
தத் பரிகர பூதரான ப்ரஹ்மாதிகள் இங்கு இருக்கப் போகிறார்களோ என்று அருளிச் செய்து
வெஃகாவில் உன்னிய யோகத்து உறக்கமானவனையும் எழுப்பிக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி
திரு வெக்கா நாயனார் திரு முன்பே எழுந்து அருளி அவரைப் பார்த்து
கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் -என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய
அவர் சொன்ன வண்ணம் செய்து இவருடைய பின்னே எழுத்து அருள

சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர என்கிறபடியே அத்தேசத்தில் ஆலயங்களில் தேவதைகளும்
பின் தொடர எழுந்து அருளுகையாலே
அபி வ்ருஷா பரிம்லாநா ச புஷ் பாங்குர கோரகா-உபதப்தோத காநத்யா பல்வலா நிசராம்ஸிச -என்று சொல்லுகிறபடியே
திரு அயோத்தியை ராம விஸ்லேஷத்தாலே பொலிவு அழிந்தால் போலே திரு காஞ்சீ நகரத்திலே
தரு குல்மாலாதிகளும் நதீ தடாகங்களும் மிகவும் வாடி அழகு அழிந்து தத் ராஜ்யத்தில் கோயில்களில் எம்பெருமான்களிலும்
இல்லாத ஆலயங்களிலே தேவதைகள் ஒருவரும் இன்றியே அந்தகாரம் கவிந்து உதய அஸ்தமனம் தெரியாதே
நீள் இரவாய் நீண்டதால் -என்கிறபடியே கந திமிர பூயிஷ்டமான படியை ராஜாவும் மந்திரிகளும் கண்டு போர கிலேசித்து
இவர்களை பின் தொடர்ந்து ஓரிரவிருக்கை -ஓரிக்கை -என்கிற ஊரில் இவர்களைக் கண்டு
கப்படத்தைக் கட்டிக் காலிலே விழுந்து கணிகண்ணரை வேண்டிக் கொள்ள
கணிகண்ணரும் மீண்டு எழுந்து அருளும் படி ஆழ்வாரை வேண்டிக் கொள்ள –
ஆழ்வாரும் மீண்டு எழுந்து அருள திரு உள்ளமாய் ஆஸ்ரித பரதந்த்ரரான சொன்ன வண்ணம் செய்த பெருமாளை பார்த்து

கணி கண்ணன் போக்கு ஒழிந்தான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேணும் துணிவுடைய செந்நாப் புலவனும்
போக்கு ஒழிந்தேன் நீயும் உன் தன் பைந்நாகப் பாய் படுத்துக் கொள் -என்று விண்ணப்பம் செய்ய
எம்பெருமானும் மீண்டு எழுந்து அருளி ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்தது எல்லாருக்கும் பிரத்யக்ஷமாக வேணும் என்று
இடத் திருக்கைக் கீழ்ப்பட கண் வளர்ந்து அருளினார்
இப்படி விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை என்கிறபடியே சேர்ந்து நாகத்தணையைப் படுக்கையாகப் படுத்திக் கொண்டு
கண் வளர்ந்து அருளின இந்த ஸுலபயத்தை அனுசந்தித்து இ றே வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று ப்ரீதராய் அருளினார்
அந்த நகரி தானும் நிறைந்த சீர் நீள் கச்சி என்னும்படி பொலிவை உடைத்தாய் இருக்கையாலே அவ்விடத்திலே
வெள்ளத்து இரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு யோகத்தில் பின்னையும் சிலகாலம்
எழுந்து அருளி இருந்து

அநந்தரம் கும்பகோண யாத்ரை அபேக்ஷையை உடையராய் யோ நர கும்ப கோணே அஸ்மின் க்ஷணார்த்தம் அபிதிஷ்டதி
கரஸ் தந்தஸ்ய வைகுண்டங்கி முதாந்யா விபூதய-என்கிறபடியே
வைகுந்த மா நகர் மற்றது கையதுவாகத் தக்க பிரபாவாதிசயத்தை யுடைத்தான திருக்குடந்தையிலே நித்ய வாசம் பண்ணி
ஆராவமுத ஆழ்வாருடைய ஏரார் கோலத்தை யோகத்தில் கொண்டு எழுந்து அருளி இருக்கத் திரு உள்ளமாய் –
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் யுன்னைக் காண்பான் நான் அலப்பாய்-என்கிறபடியே
அதி த்வரையோடே எழுந்து அருளா நிற்கச் செய்தே பெரும் புலியூர் என்கிற கிராமத்திலே சென்று
ஒரு திண்ணையிலே அவசரித்து எழுந்து அருளி இருக்க அத்திண்ணையிலே இருந்து அத்யயனம் பண்ணுகிற
ப்ராஹ்மணர்கள் இவரைக் கண்டு விப்ரதி பத்தி பண்ணி வேத அத்யயனத்தைத் தவிர்ந்து இருக்க பின்னை
அவர்களுக்கு விட்டதறுவாய் தோன்றாமல் தடுமாற ஆழ்வாரும் அத்தைக் கண்டு கறுப்பு நெல்லை உகிராலே இடந்து
சமஜ்ஜையாலே அந்த வாக்கியத்தை ஸூ சிப்பித்து அருள பின்பு அவர்களுக்கு
கிருஷ்ணா நாம் வரீஹீனாம் நக நிரப்பின்னம் –என்கிற வாக்கியம் தோற்ற
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா -இத்யாதிப்படியே
அவர்கள் தெளிந்து தண்டன் சமர்ப்பித்து க்ருதார்த்தரானார்கள்

பின்னையும் அந்த க்ராமார்ச்சனையான எம்பெருமானும் இவ்வாழ்வார் உபாதான
அர்த்தமாக சஞ்சரித்து அருளுகிற திரு வீதிகள் தோறும் அபிமுகமாய்த் திரும்பி அருள இந்த ஆச்சர்யத்தை நம்பியார் கண்டு
சில ப்ராஹ்மணருக்குக் காட்ட அவர்கள் அந்த கிராமத்தில் யாகம் பண்ணுகிற பெரும் புலியூர் அடிகளுடைய யாக சாலையிலே சென்று
கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் என்று இவருடைய பிரபாவத்தைச் சொல்ல தீக்ஷிதரும் கேட்டு
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கசிந்திடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே என்று கொண்டு
அஷனோபலந் த்வாத்ருச தர்சனம் -என்று சொல்லுகிறபடியே அதி ஹர்ஷத்தடுனே யாகசாலையில் நின்றும் புறப்பட்டு
ஆழ்வார் எழுந்து அருளி இருக்கும் இடத்து ஏற வந்து இவருடைய சக்தி பஞ்சமயமான விக்ரஹத்தைக் கண்டு சேவித்து –
போதுமின் எமதிடம் புகுதுக -என்கிறபடியே நம்முடைய யாக சாலைக்கு எழுந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து
எழுந்து அருளுவித்துக் கொண்டு போய் இவ்வாழ்வாருக்கு அக்ர பூஜை பண்ண

அத்தைக் கண்டு அங்குள்ள அத்வர்யு தொடக்கமான சடங்கிகள் அடைய இவரைக் கொண்டு புகுந்து
யாகத்தை உபஹதி யாக்கிற்றே என்று
தர்மபுத்ரன் ராஜ ஸூய யாகத்தில் கிருஷ்ணனுக்கு அக்ர பூஜை பண்ணின போது சிசுபாலன் பஹு முகமாகப்
புருஷ யுக்திகளைப் பண்ணினாப் போலே இவர்களும் ஆழ்வாரை பொறுப்பரியனகள் பேசி அதி க்ஷேபிக்க
தீக்ஷிதரும் வியாகுல அந்தக்கரணராய் ஆழ்வாரைப் பார்த்து இவர்கள் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் என்று விண்ணப்பம் செய்ய
ஆழ்வாரும் இனி நம்மை வெளியிடாது இருக்க ஒண்ணாது என்று பார்த்து
அஷ்டாங்க யோக சித்தா நாம் ஹ்ருத்யாக நிரதாத்ம நாம் யோகிநாமதிகாரஸ்ஸ்யா தேகஸ்மிந் ஹ்ருதயே சயே-என்கிறபடியே
தனக்கு அந்தர்யாமியாய் -அற்புதனான அனந்த சயனனைக் குறித்து
அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவது என் கொலோ இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள்கையனே சடங்கார் வாய் அடக்கிட உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே–
என்று விண்ணப்பம் செய்து அருள

ஒண் சங்கதை வாள் ஆழியானும் –
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஓக்க அருள் செய்வர் -என்கிறபடியே
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தனுமாய்ப் பெரிய திரு வனந்த ஆழ்வான் மேல்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் மெல்லடி பிடிக்கும் படி கண் வளர்ந்து அருளும் படியை அனைவரும் கண்டு
அனுபவிக்கும் படி ஆழ்வாருடைய திருமேனியில் ப்ரத்யக்ஷமாக்கி இவருக்கு ஸாரூப்ய பிரதானம் பண்ணி அருள
இவரும் ஸாரூப்யத்தைப் பெற்று எல்லாரும் காணலாம் படி எழுந்து அருளி இருக்க
முன்பு கர்ஹித்த சடங்கிகள் அடைய ஆழ்வாருடைய ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிற எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
இவர் உரஸ்ஸிலே ப்ரத்யக்ஷமாக சேவித்துத் திருவடிகளிலே சாதாரமாக சாஷ்டாங்க ப்ரமாணத்தைப் பண்ணி ஷமை கொண்டு
ஆழ்வாரை ப்ரஹ்ம ரதம் பண்ணி உபலாளித்து ஷமாமிக்கு லஷ்யம் ஆகாமல் திருமால் அடியார்களைப் பூசிக்க
நோற்று க்ருதார்த்தரானார்கள் –
தத் அநந்தரம் இவரும் அவர்களுக்கு பஹு பிரகாரமாக ஞான பிரதானம் பண்ணி
பஹு வித கிருபை செய்து அருளி வாழ்வித்து செழு மா மணிகள் சேரும் திருக் குடந்தையை நோக்கி எழுந்து அருளினார்

அநந்தரம் நிஜ ஸம்புட ஸதங்களைத் திருக் காவேரீ பய ப்ரவாஹத்திலே ப்ரஷேபிக்க –
நிரவ க்ரஹ ப்ரவாஹத்தாலே நிஜ ஸம்புட ஸதங்கள் நீயமானங்களாய் உள்ள அளவிலே
நான்முகன் திருவந்தாதியும் திருச் சந்த விருத்தமும் என்கிற திவ்ய பிரபந்தங்கள் எதிர்த்து வந்து
ஆழ்வார் திருவடிகள் அண்டையிலே இருக்க
அவற்றை எடுத்துக் கொண்டு ஆராவமுதாழ்வாருடைய ஏரார் கோலத்தையும் கண்டு
அவ்வனுப ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்று
விண்ணப்பம் செய்ய ஆராவமுதாழ்வாரும் அப்படியே உத்யோகிக்க
அந்த ஸுலப்ய குணத்துக்குத் தோற்று வாழி கேசனே என்று மங்களா சாசனம் பண்ண
எம்பெருமானும் அப்படியே உத்தான சாயியாய் அருள
அப்படியான விக்ரஹத்தை த்யானம் பண்ணிக்க கொண்டு யோகத்தில் -2300-சம்வத்சரம் எழுந்து அருளி இருந்தார் –
இப்படி திரு மேனியுடன் அன்ன ஆஹார வர்ஜிதராய் ஷீர ஆஹார தாரகராய் -4700-சம்வத்சரம் பகவத் அனுபவம்
பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்து
ஆழ் பொருளைச் சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து -என்று நான்முகன் திருவந்தாதி -திருச் சந்த விருத்தம் -என்கிற
திவ்ய பிரபந்தங்களைப் பரம சாத்விகராய் நாராயண ஏக பரரான முமுஷுக்களுக்குத்
தம்முடைய பரம கிருபையாலே உபகரித்து அருளி லோகத்தை வாழ்வித்து அருளினார்

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: