ஸ்ரீ ரெங்கம் -மட்டை அடி என்னும் -ஸ்ரீ ப்ரணய கலக-உத்சவம் –

ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ ப்ரணய கலக உத்சவம் –
பங்குனி மாத சுக்ல பக்ஷம் ஆதி ப்ரஹ்ம உஸ்தவத்தில் பங்குனி உத்தரம் -ப்ரணய கலகம் –
பெருமாளுக்காக அரையரைக் கொண்டும் -நாச்சியாருக்காக பண்டாரிகளைக் கொண்டும் வாதிப்பார்கள் –

திரு பங்குனி உத்தர நக்ஷத்ரம் -ஸூர்ய உதய காலத்தில் நம் பெருமாள் திருப் பல்லக்கில் ஏறி அருளி
முன்னும் பின்னும் ஸ்ரீ வைஸ்ணவ உத்தமர்கள் ஸ்தோத்ரம் பண்ண
திரு வெண் சாமரம் திரு முத்துக் கொடை முதலிய உபசாரத்தோடும்
ஒவ்வொரு திரு மாளிகையிலும் திருக் காவனம் பரிமாறி -வாழை மரம் பாக்கு கொலை முத்து பவளம் இவற்றால்
அலங்கரித்து ரமணீயமாய் இருக்கிற உள் திரு வீதி சித்திர திரு வீதிகளை வளம் வந்து
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருச் சந்நிதிக்கு அதீதமான ப்ரேமையுடன் எழுந்து அருளும் போது
பெருமாள் உறையூர் நாச்சியார் இடம் போய் வந்தார் என்ற கோபத்தால் பெரிய பிராட்டியார்
திருக் காப்புச் சேர்த்துக் கொண்டு பூப் பந்துக்களாலும் -வாழைப் பழம் பலாச் சுளை முதலவைகளாலும் எறிவித்து
வாசலிலே நிறுத்தி வைக்கும் இருவருக்கும் போது நடக்கிற சம்வாதம் –

ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம் –
நாம் உத்சவ அர்த்தமாக புறப்பட்டு அருளி திரு வீதிகள் எல்லாம் வலம் வந்து
தேவர்கள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க ஸ்ரீ வைஷ்ண உத்தமர்கள் முன்னும் பின்னும் ஸ்தோத்ரம் பண்ண
இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்கள் இடத்திலே வந்தால் தாங்கள் எப்போதும் எதிரே விடை கொண்டு
திருக் கை கொடுத்து உள்ளே எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய சிம்ஹாசனத்திலே
ஏறி எழுந்து அருள பண்ணி திருவடி விளக்கி – திரு ஒத்துவாடை சாத்தி -திரு ஆலவட்டம் பரிமாறி –
மங்கள ஆலத்தி கண்டு அருள பண்ணி சுருள் அமுது திருத்தி சமர்ப்பித்து இப்படி அநேக உபசாரங்கள் எல்லாம் நடக்குமே
இன்றைக்கு நாமே எழுந்து அருளின இடத்திலே திருக் காப்புச் சேர்த்துக் கொண்டு திரு முக மண்டலத்தைத் திருப்பிக் கொண்டு
திருச் சேவடிமார்கள் கைகளால் பந்துக்களாலும் பலன்களாலும் விட்டு எறிவித்து இப்படி ஒரு நாளும் பண்ணாத அவமானங்களை
எல்லாம் இன்றைக்கு பண்ண வந்த கார்யம் ஏது என்று கேட்டு வரச் சொல்லி
ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
தாம் எப்போதும் போலே எழுந்து அருளினதே மெய்யானால் திருக் கண்கள் எல்லாம் சிவந்து இருப்பான் என்
திருக் குழல் கற்றைகள் எல்லாம் கலைந்து இருப்பான் என்
திருக் கஸ்தூரி திரு மன் காப்பு கரைந்து இருப்பான் என்
திரு அதரம் வெளுத்து இருப்பான் என்
திருக் கழுத்து எல்லாம் நகச் சிஹ்னங்களாக இருப்பான் என்
திரு மேனி எல்லாம் குங்குமப் பொடிகளாக இருப்பான் என்
திருப் பரி வட்டங்கள் எல்லாம் மஞ்சள் வர்ணமாய் இருப்பான் என்
திருவடிகள் எல்லாம் செம்பஞ்சுக் குழம்பாய் இருப்பான் என்
இப்படிப்பட்ட அடையாளங்களை பார்த்து நாச்சியாருக்கு திரு உள்ளம் மிகவும் கலங்கி இருக்கிறது
ஆனபடியினாலே உள்ளே இருக்கிறவர்களை வெளியே விட வேண்டாம் என்றும்
வெளியிலே இருக்கிறவர்களை உள்ளே விட வேண்டாம் என்றும்
இப்படி கட்டுப்பாடு பண்ணிக் கொண்டு இருக்கிற சமயத்திலே உள்ளே விண்ணப்பம் செய்ய சமயம் இல்லை
ஆனபடியினாலே நேற்றைக்கு எழுந்து அருளின இடத்திலே தானே இன்றைக்கும் எழுந்து அருளச் சொல்லி
நாச்சியார் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்
திருக் கண் சிவந்து இருப்பான் என் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான படியால்
கவரி முடித்து கல் கச்சை கட்டி வல்லபம் ஏந்தி குதிரை நம்பிரான் மேலே ராத்திரி முழுவதும் நித்திரை இன்றி
ஜகத் ரக்ஷண அர்த்தமாக ஜாக ரூகனாய் இருந்த படியினால் திருக் கண் சிவந்து போச்சுது
திருக் குழல் கற்றைகள் எல்லாம் கலைந்து இருப்பான் என் என்றால் காற்று அடித்து கலைந்து போச்சுது
கஸ்தூரி திரு மண் காப்பு கரைந்து இருப்பான் என் என்றால் அதுகடோரமான ஸூர்ய கிரணத்தால் கரைந்து போச்சுது
திரு அதரம் வெளுத்து இருப்பான் என் என்றால் அசுரர் நிரசன அர்த்தமாய் தேவதைகளுக்காக சங்கத்வானாம் பண்ணின படியால் வெளுத்துப் போச்சு
திருக் கழுத்து எல்லாம் நகச் சின்னமாய் இருப்பான் என் என்றால் அதி பிரயாசமான காடுகளில் போகிற போது பூ முள்ளு கிழித்தது
திருமேனி எல்லாம் குங்குமப் பொடிகளாய் இருப்பான் என் என்றால் தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷித்த படியால் புஷ்ப ரேணு படிந்தது
திருப் பரிவட்டங்கள் எல்லாம் மஞ்சள் வர்ணமாய் இருப்பான் என் என்னில் சந்த்யா ராகம் போலே இருக்கிற
திவ்ய பீதாம்பரமான படியால் உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாய்த் தோன்றுகிறது
திருவடிகள் எல்லாம் செம்பஞ்சக் குழம்பாய் இருப்பான் என் என்றால் குதிரை நம்பிரான் மேல் ஏறி அங்கை மேல்
திருவடிகளை வைத்துக் கொண்டு போனபடியாலே திருவடிகள் சிவந்து போயின
இப்படிப்பட்ட அடையாளம் ஒழிய வேறே இல்லை -ஆனால் போது கழித்து வருவான் என் என்றால்
வேட்டையாடி வேர்த்து விடாய்த்து வருகிற சமயத்திலே திருமங்கை ஆழ்வான் என்பான் ஒருவன் வந்து
சர்வ ஸ்வ அபஹாரத்தையும் பண்ணிக் கொண்டு போனான்
அவனை சில நல் வார்த்தைகளைச் சொல்லி திரு ஆபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு போய்
கரு வூலத்தில் எண்ணிப் பார்க்கும் இடத்து கணையாழி மோதிரம் காணாமல் போச்சுது –
அதற்காக விடிய பத்து நாழிகைக்கு புறப்பட்டு அருளி திரு வீதிகள் எல்லாம் வலம் வந்து கணையாழி மோதிரத்தைக் கண்டு
எடுத்துக் கொண்டு மீள வாரா நிற்கச் செய்தே அப்பொழுது தேவர்கள் பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு சேவிக்க வந்தார்கள்
நாம் நம்முடைய பெண்டுகள் அன்னியிலே சூடுகிறது இல்லை என்று தமக்கு முன்னமே வரக்காட்டி நாமும் பின்னே எழுந்து அருளினோம்
ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி
ஸ்ரீ நம்பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால் விடிய பத்து நாழிகைக்குப் புறப்பட்டு அருளி உறையூரில் போய்
மின்னிடை மடவார் சேரி எல்லாம் புகுந்து யதா மநோ ரதம் அனுபவித்து அவ்வனுபவத்திலே உண்டாய் இருக்கிற
அடையாளங்கள் எல்லாம் திருமேனியில் தோற்றா நிற்கச் செய்தேயும்
அவ்வடையாளங்களையும் அந்யவதாவாகக் கொண்டு நாங்கள் ஏழைகளான படியால் இப்படிப்பட்ட இருக்கிற வஞ்சந யுக்திகளை
எல்லாம் நேற்றைக்கு எழுந்து அருளின இடத்திலே தானே சொல்லிக் கொண்டு இன்றைக்கும் அங்கே தான் எழுந்து அருளச் சொல்லி
ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ நம்பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்
நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை -காதாலே கேட்டதும் இல்லை
துஷ்டர்களாய் இருக்கிறவர்களும் மனதுக்கு சரிப்போன படி சொன்னால் நீரும் அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு
நம்மையும் ஒரு நாளும் பண்ணாத அவமானங்களை எல்லாம் பண்ணலாமா
நீங்கள் ஸ்த்ரீகளான படியால் முன்பின் விசாரியாமல் பண்ணினீர்களாம் என்கிற அவமானம் உங்களுக்கே ஒழிய நமக்குத் தேவை இல்லை
ஆனபடியால் நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி
ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
முந்தா நாள் அழகிய மணவாளப் பெருமாள் வேட்டையாடி வேர்த்து விடாய்த்து எழுந்து அருளினார் என்று
அடியோங்கள் அதி ப்ரீதியுடனே எதிரே விடை கொண்டு திருக் கை கொடுத்து உள்ளே
எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய சிம்ஹாசனத்திலே ஏறி அருள பண்ணி திருவடி விளக்கி
திரு ஒத்து வாடை சாத்தி திரு ஆலவட்டம் பரிமாறினோம்
அப்போது அதிக சிரமத்தோடு எழுந்து அருளி இருந்தார் –
ஆனால் இளைப்போ என்று வெந்நீர் திரு மஞ்சனம் சேர்த்து சமர்ப்பித்தோம்
அதை நீராடினது பாதியும் நீராடாதது பாதியுமாகவே எழுந்து அருளி இருந்தார்
ஆனால் இளைப்போ என்று திருவறைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து சமர்ப்பித்தோம்
அதையும் எப்போதும் போலே சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒரு விதமாக சாத்தி அருளினார்
ஆனால் இளைப்போ என்று கஸ்தூரித் திரு மண் காப்பு சேர்த்து சமர்ப்பித்தோம்
அதையும் எப்போதும் போல் சாத்திக் கொள்ளாமல் திரு வேங்கடமுடையான் திரு மண் காப்பு போலே
கோணாமாணாவாய்ச் சாத்தி அருளினார்
ஆனால் இளைப்போ என்று தங்க பள்ளயத்தில் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
வர்க்க வகைகள் முதலானதுகளைச் சேர்த்து சமர்ப்பித்தோம்
அதையும் அமுது செய்தது பாதியும் செய்யாதது பாதியும் எழுந்து அருளி இருந்தார்
ஆனால் இளைப்போ என்று சுருள் அமுது சேர்த்து சமர்ப்பித்தோம் –
அதையும் அமுது செய்யாதபடி தானே எழுந்து அருளி இருந்தார்
ஆனால் இளைப்போ என்றுதிரு அநந்த ஆழ்வானைத் திருப் படுக்கையாக விரித்து அதன் மேல்
திருக் கண் வளரப் பண்ணி அடியோங்கள் திருவடிகளைப் படித்து இருந்தோம்
தாம் வஞ்சகரான படியால் எங்களுக்கு ஒரு மாயா நித்திரையை உண்டாக்கி எங்கள் கருகூலம் திறந்து
எங்கள் ஸ்த்ரீ தனங்களான -அம்மானை -பந்து கழஞ்சு -பீதாம்பரங்களையும் கைக் கொண்டு இன்ன இடத்துக்கு
எழுந்து அருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்து அருளினார்
அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள் அச்சமுடன் திடுக்கிட்டு எழுந்து இருந்து திருப் படுக்கையை பார்க்கும் இடத்தில்
பெருமாளைக் காணாமையாலே கை நெரித்து வாய் அடித்து அணுக விடும் வாசல் காப்பாளரை அழைத்து
கேட்கும் அளவிலே அவர்கள் வந்து – அம்மானை -பந்து கழஞ்சு -பீதாம்பரமான ஸ்த்ரீ தனத்தையும் கைக் கொண்டு
இன்ன இடத்துக்கு எழுந்து அருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்து அருளினார் என்று சொல்ல வந்தார்கள்
அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க பரிஜனங்களாய் இருக்கிற திருச் சேவடிமார்களை அழைப்புவித்தோம்
அவர்கள் வந்து அடி பிடித்து அடி மிதித்துக் கொண்டு போன இடத்திலே உறையூரில் கொண்டு போய் விட்டது
அங்கே மச்சினி என்று ஒருத்தி முறைமை சொல்லி மற்று ஒருத்தியை மடியைப் பிடித்ததும் –
கச்சணி பொன் முலை கண்ணால் அழைத்ததும் -கனிவாய்க் கொடுத்ததும் -கையிலே நகக் குறி மெய்யாக ஆனதும் –
கார் மேனி எங்கும் பசு மஞ்சள் பூத்ததுமாய்க் கரும்புத் தோட்டத்தில் யானை சஞ்சரிக்குமா போலே
தேவரீர் சஞ்சரிக்கிறார் என்று நாங்கள் உசிதமாகப் போக விட்ட தூதியோடி வந்து அங்க அடையாளம் உள்ளபடி வந்து சொன்னாள்
உம்மாலே எமது மனது உலை மெழுகாய் இருக்கிறது -ஒன்றும் சொல்லாதே போம் போம் என்று
ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்
ஒருவருக்கு ஒருவர் சம்சயப்பட்டால் அந்த சம்சயம் தீராமல் போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்
அந்தப்படி பிரமாணம் பண்ணித் தருகிறோம்
நாம் தேவாதி தேவனான படியால் தேவதைகளைத் தாண்டித் தருகிறோம் -சமுத்ரத்திலே மூழ்குகிறோம் –
அக்னி பிரவேசம் பண்ணுகிறோம் -பாம்புக்கு குடத்தில் கை இடுகிறோம் -மழு ஏந்துகிறோம் –
நெய்க்குடத்திலே கை இடுகிறோம் -இப்படிப்பட்ட பிரமாணங்களை யானாலும் வாங்கிக் கொண்டு
நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கி சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி
ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
ஒருவருக்கு ஒருவர் சம்சயப்பட்டால் அந்த சம்சயம் ஒரு பிரகாரத்தாலும் தீராமல் போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்
லோகத்தில் ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணனுக்கும் வாக்குவாதம் வந்தால் ப்ராஹ்மணன் ப்ராஹ்மனைத் தாண்டிக் கொடுப்பான்
தாம் தேவாதி தேவனான படியால் தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்தீரே
அந்தத் தேவதைகள் தம்முடைய திருவடிகளை எப்போ காணப் போகிறோம் என்று சதா பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறவர்களை
வலுவிலே தாண்டித் தருகிறோம் என்றால் வேண்டாம் என்பார்களா
சமுத்ரத்திலே மூழ்கிறோம் என்று சொல்ல வந்தீரே -பிரளய காலத்திலே சகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து
ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த தமக்கு சமுத்ரத்திலே முழுகுகிறது அருமையா
அக்னிப் பிரவேசம் பண்ணுகிறோம் என்று சொல்ல வந்தீரே -ப்ரஹ்மாவுக்காக உத்தர வீதியிலே ஆவிர்பவித்த தமக்கு
அக்னியில் மூழ்கிறோம் என்றால் அக்னி சுடுமா
பாம்புக் குடத்தில் கை இட்டுத் தருகிறோம் என்று சொல்ல வந்தீரே -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம் என்று
சதா சர்வ காலமும் திரு அநந்த ஆழ்வான் மேல் திருக் கண் வளர்ந்து இருக்கிற தமக்குப்
பாம்புக் குடத்தில் கை விட்டால் பாம்பு கடிக்குமோ
மழு ஏந்துகிறோம் என்று சொல்ல வந்தீரே -கோடி ஸூர்ய பிரகாசகமான திருவாழி ஆழ்வானை சதா திருக் கையிலே
தரித்துக் கொண்டு இருக்கிற தமக்கு அப்ரயோஜகமான இரும்பு மழு ஏந்துகிறது அருமையோ
நெய்க்குடத்திலே கை இடுகிறோம் என்று சொல்ல வந்தீரே -கிருஷ்ண அவதாரத்தில் பஞ்ச லக்ஷம் குடியில் உள்ள
நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்திலே கை இடுவது அருமையா
இப்படிப்பட்ட இருக்கிற பரிஹாஸ பிரமாணங்களை எல்லாம் தமக்கு சரிப்போன இடத்திலே தானே பண்ணிக் கொண்டு
இன்றைக்கும் அங்கே தானே எழுந்து அருளச் சொல்லி
ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ நம்பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்
நாம் உத்சவ அர்த்தமாகப் புறப்பட்டு அருளி திரு வீதிகள் எல்லாம் உலா வந்து தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ண இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்கள் இடத்தில் வந்தால்
தாங்கள் எப்போதும் போல் ஆதரியாமல் படிக்கு அபராதங்களைப் பண்ணினோம் என்கிறீர்கள்
நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை காதாலே கேட்டதும் இல்லை என்று சொன்னோம்
அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்
ஆனால் பிரமாணம் பண்ணித்தருகிறோம் என்று சொன்னோம் அத்தை பரிஹாஸ பிரமாணம் என்று சொன்னீர்கள்
இப்படி நாம் எத்தனை சொன்ன போதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு சற்றும் திரு உள்ளத்தில் இரக்கம் வாராமல்
கோபத்தால் திரு உள்ளம் கலங்கி திரு முக மண்டலம் கறுத்துத் திருக் கண்கள் சிவந்து இப்படி எழுந்து அருளி இருந்தால்
நமக்கு என்ன கதி இருக்கிறது
அழகிய மணவாள பெருமாள் ஸ்ரீ ரெங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே தள்ளுப பட்டுக் கொண்டு இருக்கிறார் என்கிற அவமானம்
உங்களுக்கே ஒழிய நமக்குத் தேவை இல்லை
ஆனபடியால் நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி
ஸ்ரீ நம்பெருமாள் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
தாம் வருஷா வருஷம் அடமா எழுந்து அருளி தமக்குச் சரிப்போன படி நடந்துப் போட்டு பின்னும்
இங்கே வந்து நாம் என்றும் அறியோம் என்றும் பிரமாணம் பண்ணித் தருகிறோம் என்றும் பரிஹாஸங்களைப் பண்ணி
இப்படிப் பட்டு இருக்கிற அக்ருத்யங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறீர்
நாமானால் பொறுக்கிறது இல்லை –
நம்முடைய அய்யா நம்மாழ்வார் வந்து மங்களமாகச் சொன்ன வாய் மொழியினாலே பொறுத்தோம் –
உள்ளே எழுந்து அருளச் சொல்லி
ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்

பிரணய கலகம் முடிந்து உடனே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடன்
ஒரே சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி சகல மனுஷ நயன விஷயமாகி சேர்த்தி சேவை சாதித்து அருளுகின்றார் –

——————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: