ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த -இயல் சாத்து வியாக்யானம்-

ஸ்ரீ நம் பெருமாள் இயல் அனுசந்தானத்துடன் திரு வீதி எழுந்து அருளின அநந்தரம்
நம்மாழ்வார் சந்நிதியில் இயல் சாத்து அனுசந்தானமாய் இருக்கும்
நன்றும் திருவுடையோம் -இத்யாதி தனியன்கள்
இயலாவது -ஆழ்வார் திவ்ய ஸூக்தி களான -திவ்ய பிரபந்தகங்கள் ஆகையால் விசேஷித்து
செவிக்கு இனிய செஞ்சொல்லான செந்தமிழ்களை இறே உகந்து திருச் செவி சாத்தி அருளுவது அவன் தானும்

தென்னா என்னும் என் அம்மான் –என்றும்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்றும் சொல்லுகிறபடியே
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இறே திரு உள்ளம் என்று சென்று இருப்பது

வித்யந்தேஹி பராசராதி முனிப் ப்ரோக்தா பிரபந்தா புரா பக்தா ஏவ ஹிதே ததாபி சாகலாம் த்யக்த்வாது ரெங்கேஸ்வர
பக்தாநேவ பரங்குசாதி புருஷாந்தத் தத் ப்ரபந்தாம்ஸ் சதாந் அத்யாத்ருத்ய சதோ பலா ளயதி யத் தஜ் ஞாபநம் தத் ப்ரியே —
என்று இறே இவற்றை நம் பெருமாள் ஆதரித்துப் போருவது

அது தான்
நமோ நாராயணா என்னும் சொல் மாலை யாகையாலே எல்லாம் திரு மந்த்ரார்த்தமாய் இருக்கும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா என்று நாம் அங்கையால் தொழுதும் -என்றும்
இரும் தமிழ் நன்மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும் இறே இவற்றின் வை லக்ஷண்யம்
நாராயணன் நாமங்களே
நாமங்கள் ஆயிரத்துள்
நாராயணா என்னும் நாமம் –என்று இறே பராங்குச பர கால திவ்ய ஸூக்திகளும்
நாராயணனோடே-நாலு இரண்டு எட்டு எழுத்து கற்றவர் இறே -நின் திரு எட்டு எழுத்தும் கற்று -என்று தாமே அருளிச் செய்தார்

ஏவம்வித வை லக்ஷண்யமான திவ்ய பிரபந்த அனுசந்தானத்துடனே
குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடி ஆடி விழாச் செய்து -என்றும்
கரும் தடமுகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பக்தர்கள் -என்றும்
குமிறும் ஓசை விழ ஒலி என்றும்
ஒலி கெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்டர் -என்றும் சொல்லுகிறபடி
திருக் குரவை கோக்குமா போலே திருக் கைகள் கோத்துக் கொண்டு
கோத்துக் குழைத்து குணாலம் ஆடித் திரிமினோ-என்கிறபடி
ஆடுவது பாடுவதாய் திரு வீதியில் இயல் அனுசந்தித்து
புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது என்று சொல்லுகிறபடியே
மீண்டும் உள்ளே எழுந்து அருளும் போது மங்களா சாசனம் பண்ணி -அவ்வளவிலே நில்லாதே
திவ்ய தேச மங்களா சாசனத்தோடே தலைக் காட்டும் படி சொல்லுகிறது -நன்றும் திருவுடையோம் -இத்யாதியாலே –

1-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்த தனியன் –

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி —

இதில் –
தர்சன ஸ்தாபகராய் -குரு பரம்பரைக்கு நடு நாயகமாய் இருக்கிற எம்பெருமானார்
சம்பந்தி சம்பந்திகளுடைய சம்பந்தமே சர்வ சம்பத் -என்று அத்தை
சர்வ ஆத்மாக்களுக்கும் ஸூ பிரசித்தமாகச் சொன்னோம் -என்கிறது
நன்றும் திருவுடையோம்-என்று
அதாவது

குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி –நன்றும் திருவுடையோம்
அத்தை -மாநிலத்தில் எவ்வுயிர்க்கும் ஒன்றும் குறையில்லை ஓதினோம் –
ஒன்றும் குறையில்லாத படி நிறைவாக ஓதினோம் -என்று அந்வயம்
பூர்ண உபதேசம் பண்ணினோம் என்றபடி –

குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுஜன் ஆகையாவது
யஸ் சப்த ஹாயநோபால-என்று ஏழு திரு நக்ஷத்ரத்திலே -ஏழு நாள் ஒருபடிப்பட கோவர்த்தன உத்தாரணம்
பண்ணின செயலில் வித்தாராயிற்று எம்பெருமானார் அவ்வடிகளை ஆஸ்ரயித்து இருப்பது
அது தான் மலையை எடுத்து மறுத்து ரஷித்த செயல் இறே
அத்தைப் பற்றி கோவர்த்தன தாசர் என்று திரு நாமமும் சாத்தி அருளினார் இறே
ஆழ்வானும் கோவர்த்தனோ கிரி வரோ யமுனா நதி சா -என்று இறே அருளிச் செய்தது

அன்றிக்கே
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபனான அந்த மாறன் அடி பணிந்து
உய்ந்தவராய் இ றே உடையவர் தாம் இருப்பது
குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை -என்றும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -என்றும்
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று ஆஸ்ரித பாரதந்தர்யத்திலே இறே
திரு மங்கை ஆழ்வாரும் ஊன்றி இருப்பது
அத்தைப் பற்ற குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமாநுசன் என்று
விசேஷித்து அங்கே மண்டி இருப்பர்

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி
குன்றம் எடுத்து மழை தடுத்து -என்று தத் விஷயத்திலே யாயிற்று இவர் ஆதரித்துப் போருவது
குன்றம் எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ
காத்த எம் கூத்தாவோ மலை ஏந்திக் கல் மாரி தன்னை -என்றார் இறே
ஆகையால் குன்றம் எடுத்தான் அடியாயிற்று ஆழ்வார்கள் இருப்பது
அவர்களை சேர்ந்து இறே எம்பெருமானார் தாம் இருப்பது

ஏவம் விதரானவரை
ராமாநுஜஸ்ய சரணம் சரணம் ப்ரபத்யே
ராமானுஜ பதச்சாயா-என்று இறே ராமானுஜன் தாள் பிடித்தார் படி இருப்பது
அவரைப் பிடித்தார் ஆகிறார் -பட்டர் –
எம்பாரும் ஆழ்வாரும் இறே அவருக்கு ஆச்சார்யர்கள்
பிடித்தாரைப் பற்றினார் ஆகிறார் -இவர்களுக்கு சேஷபூதரான பட்டரை ஆஸ்ரயித்த வேதாந்தி -நஞ்சீயர்
இவ்வளவும் அருளிச் செய்தது ஸ்ரீ மாதவ ஸமாச்ரயண மஹா தநரான நம்பிள்ளை தொடக்கமானவரைக் காட்டுகிறது

ஸ்ரீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத்து ஒருவன் இறே –
பிடித்தார் பிடித்தார் என்றார் இறே
பிடித்தாரைப் பற்றி நன்றும் திரு வுடையோமாவது
ராமாநுசன் என் தன மா நிதி -என்னும்படியான எம்பெருமானாருடைய சம்பந்தி பரம்பரையைப் பற்றி
நன்றும் திருவுடையோம்
விலக்ஷணமான ஐஸ்வர்யத்தை யுடையோம் -அதாவது
சென்று ஒன்றி நின்ற கைங்கர்ய ஸ்ரீயை யாதல்
சாஹி ஸ்ரீர் அம்ருதாஸதாம் -என்கிற பிராமண ஸ்ரீயை யாதல்
உறு பெரும் செல்வமும் –
அன்றிக்கே
பிரமாதாக்களான ஆச்சார்யர்கள் திருவடிகள் ஆகிற ஐஸ்வர்யமாகவுமாம்

ஆகையால் இதுவே பரமார்த்தம் என்னுமத்தை சங்கோசம் அற சர்வரும் அறியும்படி சொன்னோம் என்னுதல்
இப்படிச் சொல்லுகையாலே இவர்களுக்கு ஒரு குறைகளும் இல்லை என்னுதல்
இப்பால் குரு பரம்பரையின் கௌரவ்யதை எம்பெருமானார் அடியாய் இருக்கும்
அவருக்கு ஆழ்வார் அடியாய் இருக்கும்

நானிலத்து எவ்வுயிராவது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் -என்கிற நாலு வகைப்பட்ட நிலம் -என்கை
பாலை நாலிலும் நீர் மறுத்த காலம் உண்டாய் இருக்கும் -ஆகையால் நானிலம் -என்கிறது –
சர்வாதிகாரம் ஆகையால் நானிலத்து எவ்வுயிர்க்கும் -என்றது
திருமலை முதலான திவ்ய தேசங்களும் அந்நிலங்களிலே இறே இருப்பது
அவ்வவ சேதனர்க்கு எல்லாம் ஆச்சார்ய சம்பந்தம் அறிய வேணும் இறே
ஆகையால் இவர்களுக்கு ஆத்மஹித நிமித்தமாக ஒரு கரைச்சல் பட வேண்டா என்றபடி
இத்தால் இயற்பாக்களுக்கு எல்லாம் எம்பெருமானார் அடி என்னும் அர்த்தம் சொல்லிற்று –

நூற்றந்தாதி ப்ரதிபாத்யர் எம்பெருமானார் இறே –
அது தோன்ற திருவரங்கத்து அமுதனார் இறே -பெரிய பெருமாள் சந்நிதியில் சேர்த்தியிலே
இயற்பா விண்ணப்பம் செய்து போருவது
இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தார் -என்று இவரைச் சொல்லவுமாம் –
அத்தை இறே -இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால் -என்று தொடங்கி –
தன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே -என்கிறது –

————————–

இனி ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி என்னுமா போலே திவ்ய பிரபந்த வக்தாக்களான
ஆழ்வார்களோ பாதி அவர்கள் அவதரண ஸ்தலங்களும் மங்களா சாசனத்துக்கு விஷயம் என்கிறது
வாழி திருக் குருகூர் வாழி திரு மழிசை -என்று

2-ஸ்ரீ வகுளா பரண பட்டர் அருளிச் செய்த தனியன்

வாழி திருக் குருகூர் வாழி திரு மழிசை
வாழி திரு மல்லி வள நாடு -வாழி
சுழி பொறித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை
வழி பறித்த வாளன் வலி

முதலில் தாம்ரபரணீந்தீ -என்று பிரதமோபாத்தமாக நம்மாழ்வார் அவதரண ஸ்தலம் ஸூசிதம் ஆகையால்
இங்கும் ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராகவுடைய நம்மாழ்வார் அவதரண ஸ்தலத்தை முந்துறச் சொல்கிறது

வாழி திருக் குருகூர்
திருக் குருகூர் வாழுகையாவது
நல்லார் பலர் வாழ் குருகூர் -என்றும்
குழாங்கொள் தென் குருகூர் என்றும்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் என்றும்
ஆழ்வாரைத் திருவடி தொழுகிற ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மாறாது ஒழிய வேணும் என்றபடி

வாழி திரு மழிசை
அதாவது -திரு மழிசைப் பரன் வருமூரான திரு மழிசை வளம் பதி வாழ வேணும் என்கிறது
உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலித்து
என்றபடி மஹீ சார க்ஷேத்ரமுமாய் இருக்கும்
ஆகையால் அந்த ஸ்தலத்தில் பக்தி சாராருடைய சரணார விந்தங்களிலே ப்ரவணராய்
சேவித்துக் கொண்டு போருகிற ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே அந்த ஸ்தலம் வாழ வேணும் என்றபடி
வகுளா பூஷண பாஸ்கரரும்
ஞானமாகி நாயிறாகி-என்கிறபடி ஞானப் பிரபையை யுடைய பக்தி சாராரும்
தக்ஷிண உத்தர திக்கில் அதி பிரகாசராய் இறே இருப்பது –
இப்படி ஞான வர்த்தக தேசிக அபிமதமான தேசத்துக்கு அஞ்ஞராலே அநர்த்தம்
வாராது ஒழிய வேணும் என்று ஆசாசிக்கிறது
திரு மழிசைப் பிரானுடைய அவதார ஸ்தலத்தைச் சொன்ன போதே அவருக்கு உத்தேசியரான
முதல் ஆழ்வார்கள் மூவருடைய அவதார ஸ்தலங்களான
கச்சி மல்லை மா மயிலையும் அப்படியே வாழ வேணும் என்றபடி

வாழி திரு மல்லி வள நாடு –
பெரியாழ்வாருடையவும் -ஆழ்வார் திரு மகளாருடையவும் திரு அவதாரத்துக்குப் பாங்கான
ஸ்ரீ வில்லிபுத்தூரை அடுத்து அணித்தான நாடு என்கை –
மல்லி தன்னாடும் வில்லிபுத்தூரும் சேர்த்தியாய் இறே இருப்பது
அது தான் கோவிந்தன் குணம் பாடி என்றும் கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாடு இறே

வாழி சுழி பொறித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் வலி
நாநா வர்த்தங்களோடே கூடின ஜல ஸம்ருத்தியாலே அருகு நின்ற பதார்த்தங்களை உள்ளே
கிரசிக்குமதான திருப் பொன்னியாலே சூழப்பட்டு
புண்ணந்துழாமே பொரு நீர்த் திருவரங்கா அருளாய் -என்னும் படி
ஸ்வ சம்பந்தத்தால் ஜல ப்ரக்ருதிகளையும் ஜெயப்பிக்குமவராய்-
இப்படி ஜல ஸம்ருத்தியை யுடைய கோயிலே தமக்கு நிரூபகமாம் படியான அழகிய மணவாளப் பெருமாள்
வயலாலி மணவாளராய் திருவாலியிலே திரு மணம் புணர்ந்து திருவரசு அடியாக எழுந்து அருள
அவரை வழி பறித்து தன் பின்பு வாள் வலியால் மந்த்ரம் கொள் மங்கையர் கோன் -என்னும்படி
திரு மந்த்ரத்தை அர்த்த ஸஹிதமாக அறிந்தார் இறே –
ஆகையால் அவ்விடம் திரு மணம் கொல்லை யாயிற்று
அரங்கத்து உறையும் இன் துணைவனை இறே வழி பறித்தது -எல்லார்க்கும் வழி காட்டுமவர் இறே
வழி பறித்த வாளன் வலி வாழுகையாவது
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி என்னுமா போலே
இத்தால் தத்ரஸ்தரான ஆழ்வாரையும் திரு மணம் கொல்லையையும் நினைக்கிறது
தேசத்தை ஆசாசிக்கிற பிரகரணம் இறே
திருமந்த்ரார்த்தம் பெற்ற ஸ்தலம் இறே ஜென்ம ஸ்தலம் -தேசம் ஆவது

——————————–

கீழே -வாழி திருக் குருகூர் -என்றத்தை விஸ்தரேண நாட்டோடு கூட
எல்லா வற்றையும் வாழ்த்துகிறது -திரு நாடு வாழி-என்று

3-ஸ்ரீ பராங்குச தாசர் அருளிச் செய்த தனியன்

திரு நாடு வாழி திருப் பொருநல் வாழி
திரு நாட்டுத் தென் குருகூர் வாழி திரு நாட்டுச்
சிட்டத்தமர் வாழி சடகோபன்
இட்டத் தமிழ்ப் பா விசை

திரு நாடு வாழி
திரு வழுதி வள நாட்டுக்கு -திரு நாடு -என்று இறே திரு நாமம் —
திரு நாட்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று இறே அத்தேசிகருக்கு திரு நாமம் –
தெளி விசும்பு திரு நாட்டோடு ஒப்புக் சொல்லும் அத்தனை –
ஆகையால் இதுவும் மேலைத் திரு நாடு போலே வாழ வேணும் என்கிறது

திருப் பொருநல் வாழி
அந்நாட்டை நலம் பெறுத்துகிறவள் இறே
பொருநல் சங்கணித் துறைவன் -விரஜையும் சுத்த சத்வத்துக்கு அடியாய் இருக்கும் –
இதுவும் சுத்த ஸ்வபாவர் சேரும் துறையை யுடைத்தாய் இருக்கும்
முக்தாகரம் இறே -அவ்வாகாரத்துக்கு குலைதல் இன்றிக்கே சம்ருத்தமாகச் செல்ல வேணும் –

திரு நாட்டுத் தென் குருகூர் வாழி
இனி -வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் -என்றும்
திரு வழுதி வள நாடும் தென் குருகூர் என்றும் சொல்லுமா போலே திரு நாட்டுத் தென் குருகூர் வாழி -என்கிறது
வான் நாட்டில் கண்ணன் விண்ணூர் போலே -திரு நாட்டுத் தென் குருகூர் நகரமும் சம்ருத்தமாய்ச் செல்ல வேணும்

திரு நாட்டுச் சிட்டத்தமர் வாழி
திரு நாட்டில் வானாடு அமரும் தெய்வத்தினம் போலே இந்நாட்டில் சிஷ்டராய் இருக்கும் –
கேசவன் தமரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கிடந்தான் தமர்கள் கூட்டம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிர் வாய்க்க தமியேற்கு -என்றும் இறே ஆழ்வாரும் ஆதரித்துப் போவது
ஏவம் விதரானவர்களும் பொலிக பொலிக என்னும்படி ஸம்ருத்தி யோடே வாழ வேணும்

வாழி சடகோபன் இட்டத் தமிழ்ப் பா விசை
அதாவது சடகோபன் பன்னிய தமிழ் மாலை -என்னும்படி ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்டதாய்
சந்தோ ரூபமாய் -இசை மாலை -என்னும்படி கானத்தோடே கூடி மதுரமாய் இருப்பது ஓன்று என்கை
இசை என்று இசைக்கப் பட்டதாய் -சப்த சந்தர்ப்பத்தைச் சொன்ன படி யாக வுமாம் –
அன்றிக்கே சிட்டத்து அமரர்க்கு இட்ட தமிழ் மாலையாய் இருக்கும் என்றுமாம்
எம்பெருமானுக்கு இட்டத் தமிழ் பா என்றுமாம்
இட்டப் பாட்டுக் கேட்கப் போகிறோம் என்று இறே திருக் குறுங்குடி நம்பியும் அருளிச் செய்து போருவது
அங்கனம் அன்றிக்கே -இட்டத்தை இட்டுச் சொன்னத்தைச் சொல்லும் அந்தாதி என்றாகவுமாம்
ஆக எல்லா வற்றாலும் ஆழ்வார் அருளிச் செய்த தமிழ் அச் செவ்வி மாறாது ஒழிய வேணும் என்று சொல்லிற்று –

————————————–

கீழே வழி பறித்த வாளன் வலி-என்றத்தை விஸ்தரிக்கிறது –
பராங்குசர் தேச வைபவத்தை ஆஸாஸித்த அநந்தரம் பரகால தேச வைபவத்தை ஆஸாசிக்கிறது

4-ஸ்ரீ பரகால தாசர் அருளிச் செய்த தனியன் –

மங்கை நகர் வாழி வண் குறையலூர் வாழி
செங்கை யருள் மாரி சீர் வாழி பொங்கு புனல்
மண்ணித் துறை வாழி வாழி பரகாலன்
எண்ணில் தமிழ்ப்பா விசை

மங்கை நகர் வாழி
இதுவே நிரூபகமாம் படி -திரு மங்கை ஆழ்வார் என்று இறே திரு நாமம் –அது தான் குடிப்பேர் இறே
வாழி முடும்பை என்னும் மா நகரம் என்னுமா போலே
இப்போதும் மங்கை மடத்தையும் சிங்கப் பெருமாளையும் சேவிக்கலாய் இருக்கும் –
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி -என்றும்
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் -என்றும்
வயல் மங்கை நகராளன் -என்று தாமே அருளிச் செய்தார் இறே
ஆகையால் அந்த ஸம்ருத்தி மாறாது ஒழிய வேணும் என்கிறது

வண் குறையலூர் வாழி
அது தான் அவதரண ஸ்தலம் இறே
திரு வழுதி வள நாட்டுக்கு திருக் குருகூர் போலே திருவாலி திரு நாட்டுக்கு திருக் குறையலூர் ஆகும்
திரு வழுதி நாடு தாசர் -திருவாலி நாடு தாசர் -என்று இறே அத்தேச நாமத்தை தேசிகர் நடத்திப் போருவது –
அதுக்கு வண்மையாவது-அழகும் ஒவ்தார்யமும்
வண் குருகூர் என்னுமா போலே
ஏவம் வித வை லக்ஷண்ய ஸ்தலமும் உத்தேச்யம் ஆகையால் வாழ வேணும் என்கிறது –

செங்கை யருள் மாரி சீர் வாழி
செங்கை-
சிவந்து அழகியதாய் -உபகரிக்குமதாய் இருக்கும் கை –
உபயார்த்தத்தையும் வழங்குமதாய் இறே திருக் கை தான் இருப்பது
செங்கை யாளன் -என்னக் கடவது இறே
அன்றிக்கே
கண்ணனை வழிப் பரிக்கைக்கு கேடகமும் வாளும் யுடைய கை யாகவுமாம் –

அருள் மாரி
திரு மா மகளால் அருள் மாரி இறே
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் -என்னுமா போலே தம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணின
மழைக்கண் மடந்தையான பங்கயத்தாள் திருவருள் போலே இறே
தாமும் அருளாலே திரு மந்த்ரார்த்தை சேதனர்க்கு வர்ஷிப்பது –

நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
பாடுமின்
இருமின்
தொண்டீர் துஞ்சும் போது அழைமின் -என்று ஆயிற்று இவர் பரோபதேசம் இருப்பது –
அவருக்கு சீராவது -ஞான சக்தி வைராக்யாதி கல்யாண குணமாதல்
கைங்கர்ய ஸ்ரீ யாதல்
வாசிக காயிக ரூபமாய் இறே இவர் கைங்கர்யம் இருப்பது –
அரங்கன் கூற -மணி மண்டபவ ப்ரகனாந் விததே பரகால கவி -என்னக் கடவது இறே
கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் துன்னு மணி மண்டபங்கள் சாலைகள் -என்று தாமே
அருளிச் செய்த படியே தலைக் கட்டினவராயிற்று இவர் தான்
இந்த ஸ்ரீ நித்ய ஸ்ரீ யாய் நிலை நிற்க வேணும் என்கிறது -சீர் வாழி -என்று

பொங்கு புனல் மண்ணித் துறை வாழி
அதாவது -துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொக்கு திரை மண்ணி -என்கிறபடியே
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்
திருப் பொன்னி ஆற்றின் பிரிவாய் இறே மண்ணி ஆறு தான் இருப்பது
அது தான் திருக் குறையலூருக்குத் தெற்காய் இருக்கும்

பொங்கு புனலாவது
அது தான் சமுத்திர காமிநி யாகையாலே அதிலே நீர் தேங்கி இருக்கையாலும்
உத்தரகத்தை யுடைத்தாய் இருக்கும் என்னுதல்
மண்ணியல் நீர் தேங்கும் குறையலூர் என்று இறே அருளிச் செய்தது
தேங்கும் பொருநல் திரு நகரியைப் போலே யாயிற்று திரு மண்ணியும் திருக் குறையலூரும்
காவேரீ வர்த்ததாம் காலே -என்னுமா போலே -பொங்கு புனல் மண்ணித் துறை வாழி -என்கிறது

துறை –
என்று ஆற்றுத் துறையைச் சொல்கிறது
ஆழ்வார் திருவாலி திரு நகரியில் நின்றும் திரு நாங்கூருக்கு எழுந்து அருளும் போது இழியும் துறை யாகையாலே
ஒண் துறை என்னுமா போலே ஆதரயணீயமாய் இருக்கும் -இறே
திருச் சங்கணித் துறை போலே யாயிற்று இதுவும்

வாழி பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை
பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை -யாவது –
பிரமாணம் ச ப்ரமேயம் ச பிரமாதாரஸ்ச சாத்விகா -ஜயந்து ஷபிதாரிஷ்டம் ஸஹ ஸர்வத்ர ஸர்வதா –என்னுமா போலே
கொற்ற வேல் பரகாலன் -என்றும்
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிக்குமவராய் இறே இருப்பது –

பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை -யாவது –
எண்ணிலே-நினைவிலே யுண்டான தமிழ்ப் பா இசை -என்னுதல் –அதாவது
ஆழ்வார் திரு உள்ளம் பற்றி அருளின தமிழ்ப் பா இசை -என்றபடி
அன்றிக்கே
எண்ணிலாத் தமிழ்ப் பா இசை என்றுமாம்
யாங்கணும் அன்றிக்கே
அடிவரையாலே எண்ணப் பட்டது என்றுமாம்
இட்டத் தமிழ்ப் பா இசை -எண்ணில் தமிழ்ப் பா இசை -என்கிற இரண்டாலும்
அந்தாதியும் அடிவரையும் சொல்லிற்று என்பார்கள்

எண்ணுத் தமிழ்ப் பா இசை –
என்ற போது எல்லாராலும் எண்ணப் படுவதாக தமிழ்ப் பா இசை என்றாகவுமாம் –
தமிழ்ப் பா இசையாவது –
திராவிட ரூபமான சந்தசாலே ஸந்தர்ப்பமான பிரபந்தம் என்கை
பா வளரும் தமிழ் மாலை என்றும்
இன் தமிழ் இன்னிசை மாலை என்றும் சொல்லக் கடவது இறே
இசை -என்று காநம் ஆகவுமாம் –
மண்ணித் துறை
என்று திருக் காவேரியின் ஏக தேசத்தைச் சொன்னது திருக் காவேரிக்கும் உப லக்ஷணமாய்
அத்தீர வாசிகளான திருப் பாணாழ்வார் கோயிலிலே மண்டி இருப்பாராய்
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் என்று அதிலும் அத்யபி நிவிஷ்டராய் யாயிற்று குலசேகர பெருமாள் இருப்பது –
ஆகையால் அவர்கள் அவதரண ஸ்தலங்களும் ஸூசிதம் –

————————————

கீழே ப்ரஸ்துதமான பராங்குச பரகால பட்ட நாத யதிவராதிகளுடைய
திரு அவதார ஸ்தலங்கள் அதிசயமாக வாழ வேணும் என்கிறது

5-ஸ்ரீ பிள்ளை இராமானுச தாசர் அருளிச் செய்த தனியன்

வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை
வாழியரோ தென் குறையல் மா நகரம் -வாழியரோ
தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர்
முக்கோல் பிடித்த முனி

வாழியரோ தென் குருகை
தெற்குத் திக்கிலே உண்டான திரு நகரியானது வாழ வேணும்
ஆழ்வாருடையவும் பொலிந்து நின்ற பிரானுடையவும் ஸம்ருத்தியோடே நித்யமாய் வாழ வேண்டும்

வாழியரோ தென் புதுவை
தெற்குத் திக்கிலேயான ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸம்ருத்தி மாறாமல் ஒழிய வேணும்
வட பெரும் கோயிலுடையானும் ஆழ்வாரும் ஆண்டாளும் மன்னாரும் கூடி இருக்கிற ஸம்ருத்தி இறே

வாழியரோ தென் குறையல் மா நகரம் –
தென் குறையால் மா நகரமும் அப்படியே வாழ வேணும்
மா நகரம்
திரு மங்கை திரு வவதாரத்துக்கு தகுதியாய் இருக்கை –

வாழியரோ தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர்
தாரார் மலர்க் கமலம் தடம் சூழ்ந்த என்கிற படியே -பெரிய ஏரியால் சூழப் பட்ட ஸ்ரீ பெரும் பூதூர்
எம்பெருமானார் ஆகிய பேர் ஏரி
யதீந்த்ராக்ய பத்மா கரேந்த்ரம் -என்றும் அவரைச் சொல்லக் கடவது இறே -அதுவும் அப்படியேயாய் இருக்கை
சர்வ ஆத்மாக்களுக்கு சத்தா ஸம்ருத்தியை யுண்டாக்குமூர் இறே
பெரும் பூதூர் தாசர் என்று இறே பெரியோர்கள் பேரிட்டு அழைத்து ஆதரித்துப் போருவது
ஏவம் விதமான அத்தை அவதரண ஸ்தலமாக உடையவர்
உடையவர் திரு அவதாரத்தாலே யாயிற்று அவ்வூருக்கு உண்டான உயர்த்தி
ஓங்கு புகழுடையவூர்-என்னக் கடவது இறே

வாழியரோ முக்கோல் பிடித்த முனி
அறம் மூன்று கால் குன்றுங்கால் முக்கோல் பிடித்து உலகில் ஊன்றும் காலாக்குமூதாம் நகர் -என்கிறபடியே
அவைதிகரான ஏக தண்டிகளை நிரசிகைக்காக வைதிக உத்தமர் என்னுமது தோற்ற
த்ரிதண்ட தாரணம் பண்ணி இராமானுச முனி என்னும் திரு நாமத்தை யுடையவரானார் என்கை
த்ரிதண்ட ரூபத்ருத் விப்ரஸ் சாஷாத் நாராயண ஸ்ம்ருத -என்னக் கடவது இறே
அவர் தான் -ப்ரமேயந ஸஹ ஸ்ரீ மான் வர்த்ததாம் யதி சேகர -என்னும் படி வாழ வேணும்
வாழி எதிராசன் வாழி எதிராசன் -என்று இறே தத் விஷய மங்களா சாசனம் இருப்பது –

————————————————

இனி உடையவர்க்கு அநந்தரம் ஆழ்வானை அனுசந்திக்கிறது –
அவர் இறே பிரதிகூல கோஷ்டியிலே சென்று வென்றவர் –
அவர் தான் சிஷ்ய ஆச்சார்ய க்ரமத்துக்கு சீமா பூமியாய் -அருளிச் செயலை ஆதரித்திக் கொண்டு
போருமவராய் இறே இருப்பது –
அந்த ஏற்றம் எல்லாம் தோற்ற அவர் தனியனையும் ஆச்சார்யர்கள் கூட்டி அனுசந்தித்தார்கள்

6-ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தமன்றே

இதன் அர்த்தத்தை பெரிய ஜீயர் –
பிள்ளை லோகம் ஜீயர்
திருமலை நல்லான் சக்ரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் உரைகளில் அனுசந்திப்பது

————————————————-

இந் நாலாயிரத்துக்கு ப்ரவர்த்தகர் நம்பிள்ளை யாகையாலே அவர் திரு நாமத்தை அனுசந்திக்கிறது
இதில் ஆழ்வான் குமாரரான பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தவராய் இறே நஞ்சீயர் தாம் இருப்பது
அவர் திருவடிகளை ஆஸ்ரயித்தவர் இறே நம்பிள்ளை -அந்த சம்பந்தம் தோற்றச் சொல்லுகிறது இதில்

7-ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாளர் தாசர் அருளிச் செய்த தனியன்

நெஞ்சத்து இருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும்
தஞ்சத் தொருவன் சரணம் புயம் என் தலைக்கு அணிந்தே

நெஞ்சத்து இருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும் வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
ப்ரத்யக் விஷயமான பகவத் விஷயத்தை அனுசந்திக்கைக்கு பரிகரமான மனசிலே நிரந்தரமாக இருந்து
நிரந்தரமாக நெஞ்சத்து இருந்து என்ற படி
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே -என்னும்படி
நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமானை அனுசந்திக்கப் பிராப்தமாய் இருக்க
இந்திரியங்கள் குடியேறி மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் -என்னும்படி
ஸ்வ வசமாக மனசை இழுத்து விஷயங்களில் மூட்டி மேல் நரக அனுபவம் பண்ணும்படியாய் இறே ஆசை நடத்துவது
நிரந்தரமாக நிரயத்து உய்க்கும் என்று மேலோடு கூட்டவுமாம்
க்ருத்ரிமரான குறும்பர் செய்யுமத்தை யாயிற்று இந்திரியங்கள் நடத்திப் போருவது –
அப்படி இந்திரிய வர்க்கத்துக்கு இரை இடாமல் அந்தக் குறும்பை அறுத்தேன்
முழு வேர் அரிந்தனன் யான் என்னுமா போலே
அன்றிக்கே
வித்யா மதோ தந மதஸ் த்ருதீயோ அபிஜநோ மதஸ் -என்கிற முக் குறும்பு ஆகவுமாம்
இது எந்த ராஜ குலா மஹாத்ம்யத்தாலே என்னில் சொல்லுகிறது மேல்

மாய வாதியர் தாம் அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன்
அதாவது மாயா வாதிகள் மனம் கலங்கி அஞ்சும்படியாக அவதரித்த ஸ்ரீ மாதவன் என்னுதல்
க்ருத்ரிமவாதிகள் அஞ்சும்படி அவதரித்தவர் என்னுதல்
மாய வாதியர் தாம் அஞ்சப் பிறந்தவன்-என்கிறதை மாதவனோடு கூட்டுதல் –
அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத் தொருவனோடு கூட்டுதல்

ஸ்ரீ மாதவன் அடிக்கு அன்பு செய்கை யாவது
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்கிறபடியே
திருவடிகளில் நிரவதிக பிரேமத்தைப் பண்ணுமவர் என்கை –

தஞ்சத் தொருவன் ஆகையாவது
எல்லாருக்கும் தஞ்சமாய் இருப்பார் ஒருவர் என்கை –
ஆத்மாக்களுக்கு தஞ்சமான அருளிச் செயலின் அர்த்தத்தை உபகரித்து அருளினவர் இறே இவர் தான்
அந்தணன் ஒருவன் -5-8-8-என்கிற இடத்தில் வியாக்யானத்தில் இவர் வைபவத்தை
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார்

சரணம் புயம் என் தலைக்கு அணிந்தே -வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
பால் குடிக்க நோய் தீருமா போலே -பாத பங்கயம் தலைக்கு அணியாய் -என்று
பிரார்த்திக்க வேண்டாதே அணிய பெற்று வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
பீதாக வாடைப் பிரானார் பிரம குருவாகி –பாத இலச்சினை வைத்தான் பண்டு அன்று
பட்டினம் காப்பே -என்னக் கடவது இறே
ஸ்ரீ மாதவன் -நஞ்சீயர்
அடிக்கு அன்பு செய்யுமவர் -நம்பிள்ளை -ஸ்ரீ மாதவன் சிஷ்யர் இறே

——————————————

இனி மங்களா சாசன பரரான ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தங்களின் இயல் அனுசந்தானத்துடனே
திரு வீதியிலே எழுந்து அருளும் ஸ்ரீ வைஷ்ணவர்களை மங்களா சாசனம் பண்ணுவார்
ஸ்ரீ பாத பத்மங்கள் சிரசாவாஹ்யம் -என்கிறார்

8-ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த தனியன்

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
கல்பம் தோறும் கல்பம் தோறும் ஸ்ருஷ்டமான லோகத்தில் உள்ளார் உஜ்ஜீவிக்க
படைத்தான் கவி -என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமோ என்று
ஆச்சார்ய ஹிருதயத்திலே அருளிச் செய்தார் இறே
கல்பே கல்பே ஜாய மாநஸ் ஸ்வ மூர்த்யா-என்று திருவவதரிக்குமா போலே
திவ்ய பிரபந்த அவதரணமும் உண்டாய் இறே இருப்பது

உம்பர்களும் கேட்டு உய்ய –
மேலாத் தேவர்களும் -இத்திவ்ய பிரபந்தத்தைக் கேட்டு உஜ்ஜீவிக்க
ததுபர்யபி -என்று இறே இருப்பது –
அன்றிக்கே
கேட்டாரார் வானவர்கள் -என்று நித்ய ஸூரிகள் ஆகவுமாம்
கீழ் -உலகம் என்றது -உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே -என்ற ப்ரமேயத்தாலே இறே
இவர் மங்களா சாசனம் பண்ணுவது
வாய் அவனை அல்லது வாழ்த்தாது
வாழ்த்திய வாயராய் இறே அவர்கள் இருப்பது

அன்பினாலே வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன் மழிசையர் கோன் பட்டர் பிரான்
மங்கை வேந்தன் கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
மாறன் –
தேஷாமவ்த் ஸூக்யமா லஷ்ய ராமஸ் ஸ்வாத் மநி சங்கித க்ருதாஞ்சலி ருவா சேதம் ருஷிம் குலபதிம் தத
மற்ற எழுவரும்
பல்லாண்டு போற்றி காப்பு நம என்று இறே மங்களா சாசனம் பண்ணுவது
ஆண்டாளையும் அவர்க்கு அண்ணரான உடையவரையும் சொன்ன போதே மத்ய உபபதிதரான மதுர கவிகளும் ஸூசிதர்
ஆண்டாள் மதுர கவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் -என்று இறே ஜீயரும் அருளிச் செய்திற்று
அவரும் -முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பை -என்று ததீய மங்களா சாசனத்திலே தலைக் காட்டினார்

குல முனிவன் கூறிய நூல்
குல முனிவன் கூறிய நூல் -ஆவது -ப்ரபந்ந குல மூல பூதரான ராமானுஜ முனி விஷயமாகச் சொன்ன
நூற்றந்தாதி பிரபந்தம் என்கை
அவர் அருளிச் செய்ததாக ஒரு பிரபந்தம் இல்லை இறே
குல முனிவன் விஷயமாக கூறிய நூலை ஓதி என்ற படி
ஈன் கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை -என்று இறே இவர் விஷயத்தில்
மங்களா சாசனம் இருப்பது

ஓதி வீதி வாழி என வரும் திரளை
திரளுகையாவது-மங்களா சாசன விஷயமான திவ்ய பிரபந்தங்களை அப்படியே திரு வீதியிலே அனுசந்தித்து
எழுந்து அருளும் இன்பம் மிகு பெரும் குழுவைக் கண்டு
பொலிக பொலிக என்றும்
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி
வாழ்த்தும் என் நெஞ்சம் -என்றும் மங்களா சாசனம் பண்ணுகை –

வாழ்த்துவர் தம் மலரடி
இப்படி மங்களா சாசனம் பண்ணுமவர்கள் திருவடிகள்

என் சென்னிக்கு
அவர்கள் வாசி அறிந்து உகந்து இருக்கும் என் சென்னிக்கே

மலர்ந்த பூவே
செவ்விப் பூவே -இது நிச்சயம் –
அமரர் சென்னிப் பூ வானவன் திருவடிகள் அன்று
அவனை வாழ்த்துவார்களை வாழ்த்துமவர்கள் திருவடிகள் ஆயிற்று

தலைக்குச் சூடும் மலர்ந்த பூவாலே
எம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ -என்னக் கடவது இறே
இதில் ஆழ்வார்கள் எல்லாரையும் ஸஹ படிக்கையாலே
கீழே சில ஆழ்வார்கள் அவதரண ஸ்தலங்கள் அநுக்தமாய் இருந்ததே யாகிலும் அவையும் அனுசந்தேயம் –
மாறன் அவதரண ஸ்தலத்தோடே மதுர கவிகள் அவதரண ஸ்தலமும் அந்தர்பூதம்
சீராரும் வில்லி புத்தூர் -செல்வத் திருக் கோளூர் ஏரார் பெரும் பூதூர் -என்று இறே சேர்த்தி இருப்பது –

கூறிய நூல் ஓதி வீதி வாழி என வருகை யாவது –
இவற்றில் இயல் அனுசந்தானத்துடனே எழுந்து அருளுகை
திருச் சந்த விருத்தம் -பெரிய திருமொழி -திருக் குறும் தாண்டகம் –திரு நெடும் தாண்டகம் -இயற்பா – இவற்றின்
அனுசந்தானம் இன்ன திரு நாளிலே என்று வியவஸ்த்திதமாய் இருக்கும்
பெரியாழ்வார் திருமொழி -நாச்சியார் திருமொழி -பெருமாள் திரு மொழி தொடக்க மானவற்றுக்கும்
ராம உத்சவ கிருஷ்ண உத்ஸவாதிகளிலும்
நீ பிறந்த திரு நன்னாள் -என்று அவர்கள் அவதார திவசமான திரு நாள்களிலும்
இவற்றின் அனுசந்தானம் உண்டாய் இருக்கும் –
மற்றும் உண்டான திவ்ய பிரபந்தங்களும் விநியோகம் உள்ள இடத்தே கண்டு கொள்வது –

இத்தால் தத் விஷய அனுசந்தானத்திலும் -ததீய விஷய அனுசந்தானம் அவனுக்கும் மிகவும் உகப்பாய் இருக்கையாலும்
அவர்கள் தாம் அருளிச் செயலுக்கு பிரவர்த்தகராம் பெருமையை யுடையவராகையாலும்
மதிள் இட்டு வைத்தார்
ஒத்துச் சொல்லுவார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவார் இயல் விண்ணப்பம் செய்வார்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ வகுளா பரண பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை இராமானுச தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாளர் தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராங்குச தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: