பாண விஜய வ்ருத்தாந்தம் -திண் தோள்களைக் கோண்ட வெற்றிச் செயலை அருளிச் செய்கிறார்.
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-
கோழிக் கொடி கொண்டான் நேர் சரிந்தான் –
மயிலைக் கொடியிலே த்வஜமாக -யுடையனாய்த் தேவ சேனாதிபதியாய் இள மறியாய்த் தூசித் தலையிலே
நின்ற சுப்பிரமணியன் தோற்றரவிலே கெட்டான்.
பின்னும் நேர் சரிந்தான் எரியும் அனலோன் –
அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்னிகளும் பெரிய கிளர்த்தியோடே எரிந்து தோன்றின:
அவையும் எல்லாம் பின்னிட்டன.
பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி –
மகன் கொடி கட்டிக் கொண்டு சென்று இளிம்பு பட்டான்’ என்று தன் கொடியைப் பொகட்டு வந்து தோற்றின உடனேயே,
கண்ணைப் புதைத்துக் கெட்டு ஓடத் தொடங்கினான்.
அவன் மறைத்துக் கொண்டு போக, இவர், ‘முக்கண் மூர்த்தி கண்டீர்’ என்று கண்ணைக் காட்டிக் கொடுக்கிறார்.
எல்லாம் செய்தாலும் உடம்பில் அடையாளத்தை மறைக்கப் போகாதே அன்றோ?
வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள் அந்த அந்த ஆகுலம்’ என்கிறபடியே,
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாத வியாகுலம் அன்றோ அது?
அப்பன் –
நிருபாதிக ரக்ஷகன் -காரணம் இல்லாமலே பாதுகாப்பவன்.
நேர் சரி வாணன் –
பிரதானனான வாணன் தான் வந்து தோற்றினான்;
அவனும் பின்னிட்டு ஓடத் தொடங்கினான் என்னுதல்;
அன்றிக்கே, ‘நின்ற விடத்தே நின்று முதுகு காட்டினான்’ என்னுதல்.
திண் தோள் கொண்ட அன்று –
கையில் ஆயுதம் பொகட்டாரையும், மயிர் விரித்தாரையும் கொல்லக் கடவது அன்று.
தன்னோடு ஒக்க ஆறல் பீறலாய் இருப்பது ஒரு தேவதையைப் பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே
திண்ணியனாய் இருந்தானாயிற்று.
புருஷோத்தமனை-ஸமாச்ரயணம் -பற்றி இருப்பாரைப் போலே, கபாலி கந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான்.
சர்வேஸ்வரனைப் பற்றி .
நபிபேதி குதஸ்சந;’ தைத். உப. ஆநந்’.
எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்
இடராக வந்தென்னைப் புன் சிறு தெய்வங்கள் என் செயுமான்
இடாரக வன் பிணி மாநாக மென் செயும் யான் வெருவி
இடராக வன்னி புனல் இடி கோள் மற்று மென்செயும் வில்
இடராக வன் அரங் கன் திருத் தாள் என் இதயத்ததே.’-திருவரங்கத்தந்தாதி, 39.
திண்தோள் கொண்ட –
உஷை பித்ரு ஹீனை -தந்தை அற்றவள் ஆக ஒண்ணாது’ என்று கரத்தைக் கழித்துவிட்டான்.
கர பாதை அன்றோ இவனைக் கண்டார் கால்களில் எல்லாம் விழச் செய்தது’ என்று அவனுக்குள்ள கரத்தைக் கழித்து,
இறையிலி யாக்கிவிட்டான்.
ஸா ஜிஹ்வா யாஹரிம் ஸ்தௌதி தத்சித்தம் யத்ததர்பிதம்
தாவேவ ச கரௌ ஸ்லாக்யௌ யௌ தத் பூஜா கரௌ கரௌ’- ஸ்ரீவிஷ்ணு தர்மம்
எந்தக் கைகள் அந்தப் பகவானைப் பூஜிக்கின்றனவோ அவைதாம் கைகள்’ என்றும்
விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்’ , ஸ்ரீவிஷ்ணு தர்மம்.
சர்வேஸ்வரனை வணங்கும் பொருட்டு விசித்திரமான இந்தச் சரீரமானது படைக்கப்பட்டது’ என்றும்
விதித்துக் கிடக்கச் செய்தேயும்,
ஆயிரம் கைகளையும் கொண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்திலே காரியம் கொள்ளுகையாலே
அவற்றையே கழித்து விட்டான்.
அந்தத் தேவதை தானே வந்து, ‘வரம் தந்த நீயே அதனைக் கழிக்கவோ?
நீ இவனைக் கொல்லில் என் காலிலே குனிவார் இல்லை இனி’ என்று பல்லைக் காட்டுகையாலே விட்டான்.
க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்’ ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 33 : 4
என்று ‘தோள் வலி கண்ட பின்பு உன்னைச் சர்வேஸ்வரன் என்று அறிந்தேன்’
தேவரை உள்ளபடி அறியாதே அம்பை விட்டுக் கொண்டு நின்ற நிலையைக் கண்டு‘இதர ஸஜாதீயனோ!’ என்று இருந்தேன்;
கழுத்திலே கயிறு இட்ட பின்பு காண் நான் பூனை என்று அறிந்தேன்’ என்பாரைப் போலே.
இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
ஈஸ்வரனை ஒழிந்தார் அடங்கலும், தாங்கள் உளரான போது காப்பாற்றுகின்றவர்களாகச் செருக்குக் கொண்டு-
அபிமானித்து -. ஆபத்து வந்தவாறே இவர்களைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் தங்களைக் கொண்டு தப்புவர்கள்;
எல்லா நிலைகளிலும் தன்னை அழிய மாறியாயினும் ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணுவான் சர்வேஸ்வரன் ஆகையாலே,
ஆஸ்ரயணீயன் இவனே; அல்லாதார் ஆஸ்ரயணீயர் அல்லர்,’ என்னும் இடம் சொல்லியபடி.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply