ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-3–

சிசுபாலனையும் உட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட பரம -மேலான கிருபையை அறிந்தவர்கள்,
கேசி ஹந்தா -கேசியைக் கொன்ற கிருஷ்ணனுடைய -கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றனைக் கேட்பாரோ?’ என்கிறார்.

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

கேட்பார்கள் –
மேலே ‘கற்பரோ’ என்றது; அதாவது,
முதல் நடு இறுதி தன் நெஞ்சிலே ஊற்றிருக்குபடி வாசனை பண்ணுகை யாயிற்று;
இனி கேட்கையாவது, வாசனை பண்ணினான் -கற்றுக் கேட்டுத் தெளிந்திருப்பான் ஒருவன்
ஒரு அர்த்தத்தை -பொருளை -உபபாதித்தால் -விரித்துப் பேசினால், அதனைப் புத்தி பண்ணி நம்பியிருத்தல்.
நடுவிருந்த நான்கு நாள்களும் தன் நெஞ்சு தெளிவு பிறந்தது இல்லையே யாகிலும்
விழுக்காட்டில் இருவர்க்கும் பரம் ஒத்திருக்கக்கடவது.

கற்றில னாயினும் கேட்க; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.’-திருக்குறள்

கற்றிலன் ஆகிலும் கேட்க வேண்டுவது உண்டே அன்றோ?
கற்றுத் தெளியக் கண்ட பொருளைக் கேட்டு விஸ்வஸித்து -நம்பி யிருத்தல்.
கல்வியும் அதன் பலத்தின் உருவமான கைங்கரியமும் சேரப் பெற்றிலன் ஆகிலும்,
ஆசாரியன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்ட மாத்திரமாய் இருந்தாலும் தனக்கு ஓர் ஆபத்திலே உதவுகைக்கு ஒரு குறை இல்லை.
இனி, தன்னிழவு, பர ப்ரதிபாதன -பிறர்க்குச் சொல்லச் சத்தி இல்லாமையும், தன் நெஞ்சு தெளியாமையால் வருவதுவுமே அன்றோ உள்ளது?
கேட்பார்கள் –
செவியில் தொளை யுடையவர்கள்.
பகவத் குணங்களைக் கேட்கை அன்றோ செவிக்குப் பிரயோஜனம்?
கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே’ என்னா நின்றதே அன்றோ?

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானைத்
தோளா மணியைத் தொண்டர்க் கினியானைத்
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.’- பெரிய திருமொழி.

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.’-திருக்குறள்.

கேட்க்காதவர் செவி -எறும்பு வளையைப் போன்றதே அன்றோ?

தவப்பொழி மாரி காப்பத் தடவரைக் கவிகை அன்று
கவித்தவன் கோயில் செல்லாக் கால் மரத்தியன்ற காலே;
உவப்பினின் அமுத மூறி ஒழுகுமால் சரிதங் கேளாச்
செவித் தொளை நச்சு நாகம் செறிவதோர் தொளை மற் றாமல்.’-பாகவதம், சௌனகாதியர் அன்பினாலை உரைத்த அத்தியாயம்.

கேசவன் கீர்த்தி அல்லால் –
விரோதி நிரசன சீலன் -பகைவர்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது
வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டில் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று;
பொருளின் -சத்தயா -உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘
வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.
நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம் போன்று
கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப் பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே,
இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்‘பாஹூ நா’ என்றதற்கும்,
த்விதா பூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,
கேசி யானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றும் கேட்பரோ –
கீழில் கூறிய ராமனுடைய வ்ருத்தாந்தம் -சரிதையைத்தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்?
ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் கீழே –
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
இது தனக்கு அடி என்? என்னில்,
அந்த அவதாரத்தினை நினைத்த போது
தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்தபோது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் குணா ந்தரங்களில் -வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளை வையும் –
இங்குக் ‘கேட்பார்’ என்றார், கீழில் ‘கேட்பார்’ என்றது போன்று அன்று;
கீழ்மை வசவுகளையே கேட்பாரைக் குறித்தது இங்கு.
பகவானுடைய நிந்தைக்கு ஜீவனம் வைத்துக் கேட்கும் தண்ணியவர்களும் கூடப் பொறுக்க மாட்டாமை செவி புதைத்து,
இத்தனை அதிரச் சொன்னாய், இப்படிச் சொல்லப் பெறாய் காண்’ என்று சொல்லும் படியான வசவுகளையே வைதல்.
வசவுகளே வையும்’
அநுகூலராய் இருப்பார்க்கு உடலின் சேர்க்கையாலே தம்மை அறியாமலும் ஒரு தீச் செயல் விளையும் அன்றோ?
அப்படியே இவனுக்கும் தன்னை அறியாமலே ஒரு நல் வார்த்தையும் கலசுமோ?’ என்னில்,
அதுவும் இல்லை’ என்பார், ‘வசவுகளே வையும்’ என்கிறார்.
அதற்கு அடி சொல்லுகிறார் மேல்:

சேண் பால் பழம் பகைவன் –
மிகவும் ஜன்மப் பகைவன்’ என்றபடி;
இந்தப் பிறவியே அன்றிக்கே முற் பிறவிகளிலும் பகைவனாய்ப் போருகிறான் அன்றோ? என்றது,
இவன் ஒவ்வொரு பிறவியிலும் செய்த பகைச் செயல்களுக்கு ஓர் அளவு இல்லை அன்றோ?’ என்றபடி.
இப்படிப்பட்ட பிறவிகள் தாம் பல. அந்த அந்தப் பிறவிகளில் உண்டான காலத்தின் மிகுதியும்,
செய்த பகைச் செயலின் மிகுதியும், இவை எல்லா வற்றையும் நினைக்கிறது,
பகையினுடைய பழமையாலே. இதனால், ‘நினைவு இல்லாமலே சொல்லிலும் வாசனையாலே தப்பாது,’ என்கை.
அன்று ஈன்ற கன்று அப்போதே தாய் முலையிலே வாய் வைக்கும்:
அது அந்தப் பிறவியின் வாசனை கொண்டு அன்றே?
இவனுக்கும் இப் பிறவியிலே பகவானை நிந்தை செய்வதற்குக் காரணம் முற் பிறவிகளின் வாசனை அன்றோ?

பவ்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய் நாடிக் கோடலை;-தொல்லைப்
பழ வினையும் அன்ன தகைத்தரோ தற்செய்
கிழ வினை நாடிக் கொளற்கு.’- நாலடியார்.

திருவடி தாள் பால் அடைந்த-
எல்லாப் பொருளுக்கும் ஸ்வாமி கிருஷ்ணனுடைய பாத பர்ஸ்வத்தை -திருவடிகளின் பக்கத்தைக் கிட்டின.
சாயுஜ்ய வக்ஷண மோக்ஷமாகிறது தான் இன்னது என்கிறது. என்றது,
இடையீடு இன்றிக்கே கிட்டி நின்று நித்ய கைங்கரியம் செய்யப் பெறுதல் என்பதனைத் தெரிவித்தபடி.
பரமம் ஸாம்யம் உபைதி’ முண்டகோபநிடதம், 3. 1 : 3.பரம்பொருளை அறிந்தவன் பரம்பொருள் போன்று ஆகிறான்,’ என்றும்,
பிரஹ்மவேத ப்ரஹ்மைவபவதி’ முண்டகோபநிடதம், 3 : 2.மேலான ஒப்புமையைப் பெறுகின்றான்’-என்றும்
ப்ரஹ்மைவ’ என்றவிடத்தில் ஏவகாரம், ‘விஷ்ணுரேவ பூத்வா’ என்ற
இடத்தில் போன்று, ‘ஸாம்யம் உபைதி’ என்பது போன்ற வசனங்கட்குத் தகுதியாக,
‘இவ’ என்ற சொல்லின் பொருளைக் காட்டுகிறது.
தம்மையே ஒக்க அருள்செய்வர்’ பெரிய திருமொழி-என்றும்,
மம ஸாதர்ம்யமாகதா;’ ஸ்ரீ கீதை, 14:2.-5‘என்னுடைய ஒப்புமையை அடைந்தவர்’என்றும்,
ஸமாநோ ஜ்யோதிஷா’ போதாயன விருத்தி. பரமாத்துவோடு ஒத்தவன்’ என்றும் சொல்லுகிறவற்றால்,
வஸ்து ஐக்யம் சொல்லுகிற அன்று;
பேற்றில் வந்தால் அவனோடு இவனுக்கு எல்லா வகையாலும் ஒப்புமை உண்டு என்றது
ஜகத் வியாபார வர்ஜம்,’ ‘போகமாத்ர ஸாம்ய லிங்காச்ச’- பிரஹ்ம மீமாம்சை
உலகத்தைப் படைத்தல் முதலியன நீங்கலாக’ என்றும்,
அனுபவத்தில் பரமாத்துமாவோடு ஒப்புமை கூறுகிற காரணத்தாலும்’ என்றும் சொல்லுகையாலே.
சாயுஜ்யமாகிறது, ‘அவனோடு ஒன்றாம்’ என்கிறது அன்று; அவன் திருவடிகளிலே கைங்கரியம் செய்யும் என்கிறது;
ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ரபக்தா: தபஸ்விந:
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா;’-பரமஸம்.
யாவர் மிக்க பத்தியை யுடையவர்களாய் உபாசனை செய்கிறவர்களாய்ச் சமானமான உயர்ந்த ஜீவனத்தை அடைந்தார்களோ,
அவர்கள் விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய தொண்டர்கள் ஆகிறார்கள்,’ என்றும் சொல்லுகையாலே.

ஆதிப் பரனோடு ஒன் றாம் என்று சொல்லும் அவ் வல்ல வெல்லாம்
வாதில் வென்றான் எம் மிராமா நுசன் மெய்ம் மதிக்கடலே’- ராமாநுச நூற்றந்தாதி, 58.

தன்மை அறிவாரை அறிந்துமே –
கேட்பார்க்கு விஷயம் உண்டாக்குகிறார்,
இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து-அவர்கள் பக்கல் செவி தாழ்த்து –

வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ?
இவன், திருவடிகளைக் கிட்டிற்று என் கொண்டு?’ என்னில்,
திரு நாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும்,
கையும் திருவாழியுமான அழகை அந்திம தசையில் -மரண காலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ?
மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது,
அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகையன்றோ?

சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று
ஆழ்வார்களும் ருஷிகளும் எல்லாரும் சொல்லிக் கொண்டு போருவார்கள் அன்றோ?
இவன் பக்கலிலே பரம பத்தி அளவாக உண்டானாலும்,
அதற்கும் கரண ஸம்பத்தி -கரணங்களன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’
என்று அதுவும் கழியா நிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று.
ஆள வந்தார், ‘சிசு பாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச் செய்வர்; ‘அது என்?’ என்னில்,
இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே;
நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்’ என்று அருளிச் செய்வர்.

காகம் , திரு முன்பே எய்த்து விழுகையாலும்,
இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும்,
அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?
பலி புஜி சிசு பாலே தாத்ருக் ஆகஸ்கரே வா
குணலவ ஸஹ வாஸாத் த்வத் க்ஷமோ ஸங்குசந்தீ’-ஸ்ரீரங்கராஜஸ்தவம், 3 : 97.
காகாசுரனிடத்திலும் சிசு பாலனிடத்திலும் சிறிது குணமாயினும் இருந்ததனால்
குறைவுபட்ட தான் தேவரீருடைய பொறுமை’ என்கையாலே.‘
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை, அலை வலைமை
தவிர்த்த அழகன்’ பெரியாழ்வார் திருமொழி,4. 3 : 5. ‘
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்’ திருச்சந்த விருத்தம், 111.

இப் பாசுரத்தில் ஏற்றமாகிறது,
தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ,
தன் பக்கல் அபராதம் செய்த சிசு பாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.

வைதாரையும் முன் மலைந்தாரையும் மலர்த்தாளில் வைத்தாய்
மொய்தாரை யத்தனைத் தீங்கிழைத்தேனையும் மூ துலகில்
பெய்தாரை வானிற் புரப்பான் இடபப் பெருங்கிரியாய்!
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே.–அழகரந்தாதி.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: