ஏழாம் பத்து -ஐந்தாந்திருவாய்மொழி-‘கற்பார்’-பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியிலே, எம்பெருமானுடைய விஜயங்களை அனுபவித்தார்;
அவை தாம் ஆஸ்ரிதார்த்தமாகவே இருப்பன?
அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக,
இவர்கள் பாஹ்ய -புறம்பு உண்டான விஷயங்களிலே அந்ய பரர் -வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!
என்று ஆச்சரியப்படுகிறார்.
யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே,
யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்? அப்படி இருக்கிறவன் தான்
உத்பத்தியே -பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ?
ரக்ஷணத்துக்கு ஏகாந்தமான ஜென்மங்களில் வந்து பிறந்த படியையும்,
தன் ஸ்வரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிற படியையும்,
அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாக வுடைனாய் இருக்கிற படியையும்,
கிருபையின் காரியமான செயல்களையும் அனுசந்தித்து
அபவரகே ஹிரண்ய நிதிம் நிதாய உபரி சஞ்சரந்தோ யதா ந த்ரஷ்யத்தி –
முற்றத்திலே ஹிரண்ய நிதி -பொற் குவியல் புதைந்து கிடக்க, அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப்
புறங்கால் வீங்குவாரைப் போலே இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள்
புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
ஆழ்வான் ஒரு கால், இத் திருவாய் மொழி பத்துப் பாசுரங்களையும் ராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே,
பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ?
அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின்.
பேரெயில் சூழ் கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும்,
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
கீழ் ப்ரஸ்துதமான ராமாவதாரத்தினுடைய வ்ருத்தாந்தத்தை அநுசந்தித்து,
அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது?
மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் ராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால்,
மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
பட்டர் ராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று,
அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள்
பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன,
தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன,
அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே
தவிர்ந்தார் அத்தனை காண்,’ என்று அருளிச் செய்தார்.
நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே.
அபிஷிக்த -முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை.
முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?
காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோஷ்டியிலே போகை அன்றோ அரிது?
யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’- பாரதம், உத்யோகபர். 95.
மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ,
அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தர வேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும்,
பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத
கோஷ்டியிலே அன்றோ போய்ப் புக்கது?
ராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக் கிடந்தே அன்றோ,
அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப்
பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?-பெரியதிருமொழி, 2. 2 : 3.
—————————-
பிரியத்தையும் ஹிதத்தையும் அனுசந்தித்து ஒன்றைக் கற்பார்,
திரு வயோத்தியில் உண்டான எல்லாப் பொருள்களையும் நிர்ஹேதுகமாக -காரணம் ஒன்றும் இல்லாமலே
ஸ்வ சம்ச்லேஷ -தன் சேர்க்கையே- ஸூகமாகவும்
ஸ்வ விஸ்லேஷ-தன் பிரிவே- துக்கமாக வுமுடையராம்படி
செய்தருளின உபகார சீலனான சக்கரவர்த்தி திருமகனை அல்லது கற்பரோ?’ என்கிறார்.
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் லெறும் பாதி ஒன்று இன்றியே
நற் பால் அயோத்தியில் வாழும் சரா சரம் முற்றவும்
நற் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே–7-5-1-
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
இவ் விஷயத்தை ஒழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடல் அன்று,’என்று இருக்கிறார்.
ஸம்ஜ்ஞாயதே யேந தத் அஸ்த தோஷம் சுத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ஸம்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்’-ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84
அந்த ஞானம் தான் ஞானம் என்று சொல்லத் தக்கது;
ஆகையால், மேற்கூறிய ஞானத்திற்கு வேறானது அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ என்றன் அன்றோ?
பகவானை அடைவதற்கு உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ?
கற்பார் –
ப்ரியவாதீச பூதாநாம் ஸத்யவாதீச ராகவ:
பஹூ ஸ்ருதாநாம் வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாஹிதா;- அயோத். 2. 32.
எதிர் வரு மவர்களை எமையுடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக மலர் ஒளிரா,
எது வினை இடரிலை இளிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர் கொல்?’ எனவே’-கம்பராமாயணம், பால.
ஒருவன் ஒன்றைக் கற்பது ‘அப் போதைக்கு இனியது’ என்றாதல் ‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல் ஆயிற்று; ‘
ராமபிரான்’ என்கையாலே ‘
அவை இரண்டும் இவ்விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.
யாங்ஙனம்?’ எனின்,
ராமன்’
என்கிற இதனால், புறம்பு போகாமல் காற்கட்டும் படியான அழகைச் சொல்லுகிறது;
பிரான்’
என்கிற இதனால், அவ் வழகாலே சேதநரை அநந்யார்ஹமாக்கும் படியும்,
நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே, தன்னுடைய ரமணீயத்துவமும் -ஆனந்திக்கச் செய்கிற தன்மையும்
பிறர்க்கே யாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.
ப்ரிய வாதீச –
பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை;
செவிப்படில் இனியதாய் அன்றி இராது. ‘யார்க்கு?’ என்றால்,
பூதா நாம் –
சத்தை யுடையனவான எல்லாப் பொருள்களுக்கும்:
அசத்துக்கு வேறுபட்ட தன்மை மாத்திரமே வேண்டுவது.
நன்று; அப்போது பிரியமாய்ப் பயன் கொடுக்குமிடத்தில் வேறு ஒரு பலனைக் கொடுக்குமோ?’ என்னில்,
ஸத்ய வாதீச –
அருளிச் செய்யுமது தான் ஆத்மாக்களுக்கு ஹிதமாய் அன்றி இராது என்கிறது.
ஒரு வார்த்தையே இரண்டு ஆகா நின்றால் அல்லாதனவற்றிற்குச் சொல்ல வேண்டா அன்றோ?
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா;
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’- யுத். 131 : 97
ராமோ ராமோ ராம இதி’ என்னும்படி யன்றோ நாட்டை அகப் படுத்தி யிட்டு வைக்கும்படி?
அவன் ஸத்தை இவனுடைய ஸத்தைக்குக் காரணம்;
பின்பு உண்டானவை இவனுடைய போகத்துக்குக் கண்டவை.
ஆக, ‘பிரியமும் ஹிதமும் ஆகிய இரண்டையும் வேண்டியிருப்பார் அவனை ஒழியக் கற்பரோ?’ என்றபடி.
ராம: ஸத்புருஷோ லோகே ஸத்ய தர்ம பராயண:
ஸாக்ஷாத் ராமாத் விநிர்வ்ருத்த: தர்மஸ்சாபி ஸ்ரியாஸஹ’-அயோத். 2 : 29.
நேரான ஐஸ்வரியத்தோடு கூட நேரான தர்மமும் ஸ்ரீ ராமபிரானிடத்தினின்றும் உண்டாயிற்று’ என்றது,
அவ்யவதாநேந -நேரே சாதனம் சாத்தியம் ஆகிய இரண்டும் இந்த ராமனே என்கிறது அன்றோ?’ என்றபடி.
கற்பார் இராம பிரானை –
கற்பார் என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்;
இதர வியவச்சேதம் -மற்றையவற்றைக் கற்கலாகாது,’ என்று விலக்குதலேயாம்,
ராக ப்ராப்தமாகில் -ஆசையாலே செய்யப்படுவதாகில் -ஸ்வயமேவ -தானாகவே-ப்ரவர்த்தம் – செல்லும் அன்றோ’
ஆகையால், வேறு ஒன்றில் போகாமையே வேண்டுவது.
மற்றும்’
என்றதனால், தேவதாந்த்ர பஜனாதிகளை -வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை –
வ்யாவர்த்திக்கிறார் -வேறுபடுத்துகிறார் அல்லர்.
பஜனீய வஸ்துவில் -வணங்கக்கூடிய பொருளிலே கூறு இடுகிறார்.
தேவதாந்தரமாகில் -வேறு தெய்வங்களாகிற பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்?
ஆதலால், பரத்வத்தையும் மற்றை அவதாரங்களையும் கழிக்கிறார்.
மற்றும் கற்பரோ –
ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’- உத். 40 : 16.
என் எண்ணமானது வேறிடத்தில் போகிறது இல்லை’, என்றாற்போலே, ‘மற்றுங் கற்பரோ’ என்கிறார்.
ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன, ‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் ஸ்நேகம்’, என்கிறான்.
என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’ என்றும்,
உயிரின் பரமன்றிப் பெருகு மால் வேட்கையும்’ என்றும் சொல்லுமாறு போலே
ராஜந் த்வயி-
இதுதானும் என்னால் வந்தது அன்று.
ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.
நித்யம் ப்ரிதிஷ்டித; –
இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .
பக்திஸ்சநியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை ஸ்னேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும்படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.
வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,
பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
என்னுடை நல் நெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
சர்வ சத்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே,
அந்யத்ர ந கச்சதி’ என்கிறது. ‘அந்யத்ர’ என்கிறது, போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;
மற்று ஆரானும் உண்டு என்பார்’ என்னமாறு போலே, இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.
கற்பரோ –
சேதநர் அல்லரோ? உலகம் அடங்கலும் தம்முடைய படி என்று இருக்கிறார்;
இவ் வூரில் பிள்ளைகள் கண்ட சர்க்கரை ஒழிய உண்ணும்படி எங்ஙனே?’ என்பாரைப் போலே.
மற்றையவற்றை விட்டு ராம பிரானைக் கற்கைக்குக் காரணம் சொல்லுகிறார் மேல்:
புல் பா முதலா –
பா என்பது, பதார்த்த வாசகமாய் -பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல்.
பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்; என்றது, பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி.
இதனால், ‘புல் முதலாக ஸ்தாவரம் முடிவாக’ என்றபடி.
புல் எறும்பு – ஆதி
பிறிவிகளிற் கடையான எறும்பு தொடக்கமாக.
பிரமனை எண்ணினால் பின்பு முடிவில் நிற்கக் கடவது அன்றோ எறும்பு?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்;
ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு -விஷயீ காரத்துக்கு -முற்பட்டன இவை,’ என்கிறார்;
வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே.
ஸ்தாவரங்களில் தாழ்ந்தது புல்;
ஜங்கமங்களில் தண்ணியது எறும்பு;
இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞான பலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.
சைதன்யம் -ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று. பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது.
இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.
நிருபாதிக காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன் பக்கல் அப்ரதிஷேதமே விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது.
ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ண நீர் விழ விட்டு நிற்கக் கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடி நின்றன,
விஷயே தே மஹாராஜ ராமவ்யஸந கர்ஸிதா;
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா; ஸபுஷ்பாங்குர கோரகா;- அயோத். 59 : 4.
மரங்களும் எல்லாம் வாடி நின்றன’ என்கிறபடியே-
உபதப்த உதகாநத்ய; பல்பலாநி ஸராம்ஹிச
பரிஸூஷ்க பலாஸாதி வநாநி உபவநாநிச’-அயோத். 59 : 5.
உப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி.
உப தப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை.
பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை,
வநாநி உபவநாநிச’-‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே
ஒன்று இன்றியே –
எல்லாவற்றையும் என்கிறது அன்று; மேலே ‘முற்றவும்’ என்று சாகல்ய வசனம் -முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற
சொல் உண்டாகையாலே. இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது,
பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே’ என்றபடி.
பெறுகிற தன் சிறுமையையும் பேற்றின் கனத்தையும் பார்த்தால். தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் அன்றோ?
பரம பத்தியோடு அவனே உபாயமானதோடு வாசி இல்லை. பேற்றைப் பார்த்தால் இத் தலையில் ஒன்றும் சொல்ல ஒண்ணாமைக்கு.
இனி, அங்கீகாரத்துக்குக் காரணமாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்க.
யாது ஒன்றாலே பலம் உண்டாயிற்று, அது வன்றோ சாதனம்!
அதாவது, ‘திரு வயோத்யை யினின்றும் குடி வாங்க நினைவு இல்லை’ என்கிற இது வன்றோ?
நற்பால் அயோத்தியில் –
நல்ல இடத்தையுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.
பவித்ரம் பரமம் புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ கருடபுராணம், 11.
மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்ற சீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால் வளர்வி
மானத் துவண்டல மாமரங்கம் வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம் பதம் வாய்க்குமங்கே.-திருவரங்கத்தந்தாதி.
இதனால், ‘நில மிதியே ராம பத்தியை விளைக்கும்’ என்கை.
இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியது’ என்கிறபடியே அன்றோ?
கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?
ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’ அயோத். 7 : 1
இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே,
எங்கேனும் ஓரிடத்தே பிறந்த நாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.
யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி.
இந்த நிலத்தில் பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ?
தேசம் தானே எல்லா நன்மைகளையும் பிறப்பிக்கவற்றாய் இருக்கும் காணும்.
இவ் வூரிலவர்கள் மற்றையோரைப்போலே உண்டு உடுத்துத் தடித்து வார்த்தை சொல்லித் திரிந்து.
பெருமாளுக்கு வருவது ஒரு பிரயோஜனத்தோடு மாறுபட்டவாறே,
சத்துரு சரீரம் போலே இருக்க, சரீரங்களைப் பொகட்டுக் கொடு நிற்பார்கள்.
சத்துரு சரீரம் பொகட வேண்டுவது ஒன்றோ அன்றோ?
ராகவார்த்தே பராக்ராந்தா ந ப்ராணே குருதே தயாம்’- ஸ்ரீராமா. யுத்.
ராகவனுக்காகச் சூழ்ந்து கொண்டிருக்கிற சேனையானது பிராணனிடத்தில் அருள் வைப்பது இல்லை,’ என்கிறபடியே
பிராணன்கள் பழைமையாலே பல் காட்ட,
உடையவரும் நீங்களும் ஒரு தலையானால் உங்களைக் கைக் கொள்ளப் போமோ என்றார்களே அன்றோ?’ என்றபடி,
பழைமை பார்ப்பரோ, அவன் தானும் இவனைப் பற்ற ‘பிரணான்களை விட்டு’ என்னா நிற்க?
ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத;
ஹரி; ப்ரணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருகாத்மநா’. உத். 18 : 18.
அயோத்தியில் வாழும்-வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது,
அத் தேச வாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே;
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும்,
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.
என்றும், சொல்லுகிறபடியே, ‘அயோத்தியில் வாழும்’ என்கிறார்,
பிராப்ய தேசத்தில் வசிப்பது தான் வாழ்ச்சியாக இருக்குமன்றோ?
நித்யப் பிராப்யமான பொருள் அன்றோ இங்கு எப்பொழுதும் அண்மையில் எழுந்தருளி யிருக்கிறது?
நமக்கு அனுபவம் காதற்சித்கம் -ஒரு காலத்தில் உண்டாகிறது சரீரத்தின் சேர்க்கையால் அன்றோ?
தர்மியில் ஐக்கியத்தாலே அங்குத்தைக்கு ஒரு குறை இல்லை அன்றோ?
நற்பாலுக்கு உய்த்தனன் –
நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி செலுத்தினான். என்றது,
ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ -தன் சேர்க்கையாலே ஸூகத்தை யுடையவர்களாகவும்
தன் பிரிவாலே துக்கத்தை யுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி.
இவற்றினுடைய கர்மங்களின் தார தம்யத்தால் ஏற்றத் தாழ்வுகளால் வரில் அன்றோ அவற்றிற்குத் தக்க அளவுகளாய் இருப்பன?
அவனாலே வந்தன ஆகையாலே எல்லார்க்கும் ஒக்க நன்மை விளைந்தபடி.
அபராவர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகந் அநுந்தமாந்’-ஆரண். 68 : 80.
என்னால் நியமிக்கப்பட்டவராய் நீர் அந்த உத்தம உலகத்தை அடைவீர்,’ என்கிறபடியே,
இது, ஜடாயுவைப் பார்த்து ஸ்ரீராமபிரன் கூறியது.
இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேஷத்து ஏறச் சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க
வல்லவனுக்கு இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணி யுடைத்து அன்றோ?
நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் –
அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால்
அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக அவனுடைய ஸ்வாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே,
சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கையடைப்பான நாட்டுக்குள்ளே,
அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதம் செய்து,
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்.
ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?
மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சே வடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!’ சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை)
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தாளை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்த ரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தாளை ஏத்தாத நா வென்ன நாவே!
நாராயணா வென்னா நா வென்ன நாவே!’- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்