ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-7–

அது செய்கிறோம்; ‘மற்றைத் தேவர்கட்கும் உயர்வுகள் சில உண்டு,’ என்று நெடுநாள்
அவர்கட்குப் பச்சை இட்டுப் போந்தோம்; அப் பச்சையின் பயன் அற்றுப் போகாமல் இன்னம் சிலநாள்
அவை பலிக்கும்படி கண்டு பின்பு பகவானை அடைகிறோம்,’ என்ன,
அவையும் எல்லாம் செய்து கண்டீர்கோள் அன்றோ?’ இனி அமையும் காணுங்கோள்,’ என்கிறார்.

ஓடி ஓடிப் பலபிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே–4-10-7-

ஓடிஓடி –
கதா கதாம் காம காமா லபந்தே-ஸ்ரீ கீதை, 9 : 21. -ஸ்வர்க்கம் முதலான உலகங்களில் விருப்பம் உள்ளவர்கள்,
போவதையும் வருவதையும் அடைகிறார்கள்,’ என்கிறபடியே,
போவது, பிறவிகளோடே வருவதாய்த் திரிந்தது இத்தனை அன்றோ?

பல பிறப்பும் பிறந்து –
ஆத்மா என்றும் உள்ளவன்; அசித்தும் அப்படியே; அசித்னுடைய சேர்க்கையும்-சம்சர்க்கமும் – என்றும் உள்ளதாய்,
கர்மப் பிரவாஹத்தாலே பரம்பரையாய் வருகிற பிறவிகளும் உருவப் போருகிறது;
நீங்கள் முன்னும் பின்னும் அறியாமலே அன்றோ ‘இது ஒரு பிறவியே உண்டாயிற்று,’ என்று இருக்கிறது?

மற்றும் ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து –
வேறு ஒரு தெய்வத்தை அடைந்து பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்ச் சொல்லி,
அவ்வளவில் முடிவு பெறாமல் வேறுபட்டவராய், மாம் நமஸ்குரு -‘என்னை நமஸ்காரம் செய்’ என்கிறபடியே,
பகவத் விஷயத்தில் உட்புகுமளவும் உட்புகுந்து. என்றது,
இப்படி அநாதியாகத் தொடர்ந்து போதருகிற பிறவிகளிலே ஒரு பிறவி ஒழியாமல் மற்றைத் தேவர்களை
அடைக்கலமாக அடைந்து போந்தீர்கள்; அது செய்கிறவிடத்தில் முக்கரணங்களாலும் செய்தீர்கள்;
ஆதலால், பற்றுகிற தன்மையில் குறையால் பலியாது இருந்தது அன்று; அதில் குறை இல்லை,’ என்றபடி.

பல்படிகால் –
ஒருவகையாகப் பற்றி-ஆஸ்ரயித்து – விட்டீர்களோ?
தர்ப்பண ஜப ஹோம பிராஹ்மண போஜனாதிகளைக் குறித்தபடி.
பல வகைகளால் -பிரகாரங்களால் -பற்றினீர்கள்.

வழி ஏறிக் கண்டீர் –
அவ்வத் தேவர்களைப் பற்றும்படி சொன்ன சாஸ்திர மரியாதை தப்பாமல் பற்றி
அதன் பலமும் கண்டீர்கோள் அன்றோ? ‘நன்று;
பல் படி கால் வழி ஏறிக் கண்டீர்’
என்கைக்கு, ‘இவர்கள் ஒரு பிறவியிலும் பகவானிடத்தில் அடைக்கலம் -ஸமாச்ரயணம் -புகுந்திலர்கள்’ என்று
இவர் அறிந்தபடி எங்ஙனே?’ என்னில், இப்போது தாம் இந்தப் பொருளை உபதேசிக்க வேண்டும்படி
இவர்கள் இருக்கக் காண்கையாலே, ‘இதற்கு முன்னர் இவர்கள் பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திலர்கள்,’
என்று அறியத் தட்டு இல்லையே அன்றோ?

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் தனம் இச்சேத் உதாஸநாத்
ஈஸ்வராத் ஞானம் அந்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத்’–என்பது பிரம்மாண்ட புராணம்.
சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தை விரும்பக்கடவன்;
அக்னியிடமிருந்து செல்வத்தை விரும்பக்கடவன்; சிவனிடமிருந்து ஞானத்தை விரும்பக்கடவன்’ என்கிறபடியே,
பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திருப்பார்களேயானால் முத்தர்கள் ஆவார்கள்-
மற்றைத் தேவர்களைப் பற்றிய காரணத்தினாலேயே இவ்வளவும் வர இறந்தும் பிறந்தும் போந்தார்கள்;
பிரஹ்மாணம் ஸிதிகண்டம் ச யாச்ச அந்யா: தேவதா: ஸ்மிருதா:
பிரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்’–என்பது, பாரதம், மோக்ஷ தர்மம், 169 : 35.
பிரமனையும் சிவனையும் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கும் தேவர்களையும்
மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் சேவிக்கமாட்டார்கள்; ‘என்னை?’ எனின்,
அந்தத் தேவர்களிடமிருந்து கிடைக்கும் பலம் மிகச் சிறியது,’ என்கிறபடியே
மோக்ஷபலம் சித்திக்க வேணும்’ என்று இருக்கிறவர்கள், புன் சிறு தெய்வங்களைப் பின் செல்லார்களே அன்றோ?
அதற்குக் காரணம், அவர்களால் கொடுக்கப்படுமவை அழியக்கூடிய பலன்களாகையாலே.
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா- முருகன் சிவன் இந்திரன் முதலான தேவர்கள் ஆராதிக்கும் விஷயத்தில்
விலக்கப்பட்டிருக்கிறார்கள்,’ என்றதே அன்றோ சாஸ்திரமும்?
ப்ரதிஷித்தாஸ்து பூஜநே-என்றது இறே -த்வயாபி பிராப்தம் இத்யாதி –

(அங்காக்கைக்கே மங்கைக் கீந்தான் அரங்கன் அவனிக்குவாய்
அங்காக்கைக்கே பசித்தானிற்கவே முத்தியாக்கித் துய
ரங்காக்கைக்கே சிலர் வேறே தொழுவர் அருந்திரவி
யங்காக்கைக்கே தனத் தாள் தருமோ திரு அன்றியிலே?

சித்திக்கு வித்ததுவோ இதுவோ என்று தேடிப் பொய்ந்நூல்
கத்திக் குவித்த பல் புத்தகத்தீர்!கட்டுரைக்க வம்மின்;
அத்திக்கு வித்தனையும் உண்ட வேங்கடத் தச்சுதனே
முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே.’ என்ற திவ்விய கவியின் திருவாக்குகள்)

ஒருவன் பகவானைத் தியானம் செய்துகொண்டிருக்கச்செய்தே, ‘இவன் சமாதியிலே நின்ற நிலையை அறியவேண்டும்’ என்று
பார்த்துச் சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தை பரிக்ரஹம் பண்ணி – மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று,
உனக்கு வேண்டுவது என்?’ என்ன,
ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்;
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்’ என்னுமிடம் அறியானே,
கொண்டு வந்த வேடம் இதுவாகையாலே?’ வந்தவனைப் பார்த்து,
நீ யாவன் ஒருவனை அடைந்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப்பட்டவனைக் காண் நான் பற்றுகிறது;
இப்படி வழியிலே போவார்க்கு எல்லாம் பச்சை யிட்டுத் திரியுமவன் அல்லேன் காண்;
இப்போது முகம் காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானே அன்றோ?

பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்து ஞானாதிகராய் இருப்பார் ஒருவர், இருந்து தம்முடைய வஸ்திரத்தைப் புரையா நின்றாராய்,
அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகா நிற்க, இவர் அநாதரித்திருந்தாராய்,
தேவியானவள், ‘நீர் எல்லார்க்கும் பெரியராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக்
காலை நீட்டிக் கொண்டிருந்தானே!’ என்ன,
தேவனும், ‘அவன் பகவத் பத்தன் போலே காண்,’ என்ன,
தேவியும், ‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன,
இருவரும் இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும்
வரங்களும் வேண்டிக்கொள்ளக் கடவர்களாய் இருப்பார்கள்;
நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல், சில உபசாரங்களைச் செய்தல்,
சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே?’ என்ன,
அழகிது! அவை யெல்லாம் செய்யக்கடவன், மோக்ஷம் தரலாமோ?’ என்ன
அது நம்மாலே செய்யலாமதன்று; பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெற வேண்டும்,’ என்ன,
ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன,
அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது? நம்மால் செய்யப் போகாது,’ என்ன,
ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி திருவருள் புரிந்து நடக்குமித்தனை,’ என்ன,
தேவனும் கோபத்தாலே நெற்றியில் கண்ணைக் காட்ட,
இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார்,’ என்ற சரிதம் இங்கு நினைக்கத் தகும்.

கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள் –
உங்களால் அடையப்படுகின்ற தேவர்கள் இவ்வளவும் உங்களைக் கும்பீடு கொண்டு, இத்தனை போது சென்று
அங்கே ஆஸ்ரயியா- வணங்கா நிற்பர்கள்; அவர்கள் செய்கின்ற வற்றைக் கண்டாகிலும் நீங்களும் அவனை வணங்கப் பாருங்கோள்-
தலை யறுப்பாரும் தலை யறுப்புண்பாருமாய், கிராமணிகளைப் போலே ஒருவரை ஒருவர் வேரோடே அலம்பிப்
பொகட வேண்டும் படியான விரோதம் செல்லா நிற்கச் செய்தேயும்,
ஆபத்து எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தா நிற்பர்கள்,
ஒருவர்க்கு ஒருவர் விரோதமும் கிடக்கச் செய்தே, ‘ஊராகக் கூடி வந்தது’ என்பார்களே அன்றோ?

ஆடு புட்கொடி மூர்த்தி –
வெற்றிப் புள்ளைக் கொடியாக வுடையவன்;
அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேஸ்வரன் செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று;
திருவடி திருத் தோளிலே சலியாமல் இருக்கு மத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடு புள்’ என்கிறார்.
ஆடு புள் -வெற்றிப் புள்; ஆடு – வெற்றி. புள் – பறவை. -கொற்றப் புள் ஓன்று ஏறி-கலியன்-
அன்றிக்கே, ‘சர்வேஸ்வரன் வாஹனம் என்கிற மகிழ்ச்சியின் மிகுதியாலே மதித்து ஆடா நின்ற புள்’ என்றுமாம்.
கருடக் கொடியன், கருட வாஹநன்’ என்று சொல்லப் படுமவனாயிற்று மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவன் ஆவான்.

ஆதி மூர்த்திக்கு –
காரணந்து த்யேய– காரணப் பொருளாக உள்ளவனே தியானிப்பதற்கு உரியன்,’ என்கிறபடியே,
உலக காரண வஸ்துவே யன்றோ உபாசிக்கத் தக்கதாவது?
ஆக, மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவனுமாய்-மோக்ஷ ப்ரதனுமாய் –
சர்வ நியாந்தாவுமாய் -எல்லாரையும் நியமிக்கின்றவனுமான சர்வேஸ்வரனுக்கு’ என்றபடி.

அடிமை புகுவதுவே –
அடிமை புகுவதுவே செய்யத் தக்க காரியம்.
உங்களுக்குச் செய்ய வேண்டுவது ஒன்று இல்லை;
அவன் உடைமையை அவனுக்காக இசைய அமையும்’ என்பார், ‘புகுவதுவே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்.
அவன் இதனை ‘என்னுடைமை’ என்றிருக்க,
நீங்களும் ‘என்னுடைமை’ என்றிராமல், ‘அவனது’ என்று இசைய அமையும்,’ என்றபடி.
அடிமை புகுவது’ என்ற இடம், விதியாய், ‘கண்டீர்’ என்கிற இடம், அதுவும் செய்து பார்த்தீர்கோள் அன்றோ?
இனி, அவன் திருவடிகளில் அடிமை புகப் பாருங்கோள்,’ என்கிறார்.

யயாதி சரிதத்தைப் பட்டர் வாசித்துப் போந்திருக்கச் செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும்,
வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாய் வெளிப் போந்த பிரபந்தங்களில்
இது எந்தப் பொருளை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க,
புன் சிறு தெய்வங்களை அடைந்து ஒரு பயனைப் பெற்றாலும், பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால்,
அதனை அவர்கள் பொறுக்க மாட்டார்கள்’ என்றும்,
சர்வேஸ்வரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்’ என்றும் சொல்லி,
ஆன பின்பு, மற்றைத் தேவர்கள் ஆஸ்ரயணீயர்- வணங்கத் தக்கவர் அல்லர்; அவன் ஒருவனுமே
ஆஸ்ரயணீயன் – வணங்கத் தக்கவன் என்னும் பொருளைச் சொல்லுகிறது,’ என்று அருளிச் செய்தார்.

இமவ்ஸ்ம -முனி புங்கவரே! இதற்கு முன் ஏவிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தவர்களாய்
வந்து உம்மைச் சார்ந்திருக்கிறோம்,’ என்கிறபடியே, தாழ நிற்க வல்லான் இவனேயன்றோ?

யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே,
கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்க நிதி பத்ம நிதி தொடக்கமானவற்றைக் கொடு வந்து கொடுத்துச் செய்யாதன இல்லை;
பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியே யாய் இருந்தது;
நாம் பகவானை வணங்குகிற வணக்கத்துக்கும் பலம் அங்ஙனே ஆகிறதோ?’ என்று அஞ்சி யிருந்தோம்,’ என்ன,
அங்ஙன் ஆகாது; அஞ்ச வேண்டா;
அவர்கள் ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக் கொண்டு விரும்புகையாலே
அவர்களுக்குத் தேகம் எல்லையாய் விட்டது;
நாம் சொரூப ஞானத்தாலே, என்றும் உள்ள ஆத்மாவுக்கு வகுத்த பேறு பெற வேண்டும் என்று பற்றுகையாலே
பேறும்-யாவதாத்ம பாவியாய் -உயிர் உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச் செய்தார்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: