ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-5–

லிங்கபுராணம் தொடக்கமான குத்ருஷ்டி ஸ்மிருதிகளையும், வேதத்திற்குப் புறம்பான ஸ்மிருதிகளையும்
பிரமாணமாகக் கொண்டு வந்தவர்களை நிஷேதிக்கிறார் -விலக்குகிறார்.

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

இலிங்கத்திட்ட புராணத்தீரும் –
இலிங்க விஷயமாக இடப்பட்ட புராணத்தையுடைய நீங்களும்.
சாத்விக புராணங்களைக் காட்டிலும் ராஜஸமாயும் தாமஸமாயும் உள்ள புராணங்களுக்கு வேற்றுமை இதுவாயிற்று.
அவற்றை நிச்சயம் பண்ணுதல்-நிஷ்கர்ஷம் – அந்த அந்தப் புராணங்களினுடைய தொடக்கத்திலே காணலாய் இருக்கும்;
(யந்மயஞ்ச ஜகத் பிரஹ்மன் யதஸ்சை தச் சராசரம் லீநம் ஆஸீத்
யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச’ – ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 1 : 6.)
யந் மயஞ்ச ஜகத் ப்ரஹ்மன் -ஓ பிராமணோத்தமரே! இந்த உலகமானது எதனை ஆத்மாவாகவுடையது?
இந்தச் சராசரங்கள் எங்கிருந்து உண்டாயின? எப்படி எங்கே லயத்தை அடைந்தன?
எங்கு லயத்தை அடையப் போகின்றன?’ என்று பொதுவிலே வினவ,
(விஷ்ணோ: ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம்
ஸ்திதிஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகத்சஸ:-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 1 : 32.)
விஷ்ணோஸ் சஹாஸாத் உத்திபூதம் -உலகமெல்லாம் விஷ்ணுவின் சமீபத்தினின்றும் உண்டாயின.
அந்த விஷ்ணுவினிடத்திலேயே லயப்படுகின்றன. அந்த விஷ்ணுவே இந்த உலகங்கட்கெல்லாம் வாழ்வையும் சாவையும் கொடுப்பவர்,
அந்த விஷ்ணுவே அந்தர்யாமியாகவும் உலகமே உருவமாயும் காணப்படுகின்றார்,’ என்று கொண்டு
கோல் விழுக்காட்டாலே விடையாக இருத்தல் அன்றிக்கே.
ஒரு பொருளைக் குறித்துச் சொல்லி, ‘அதற்கு உயர்வினைப் பண்ணித் தரவேண்டும்,’ என்று கேட்டவனும்
தமோ குணத்தால் மறைக்கப்பட்டவனாகிக் கேட்க, சொன்னவனும் தமோ குணத்தால் மறைக்கப்பட்டவனாய்ச் சொல்ல,
ஓர் லிங்க விஷயமாக இடப்பட்ட புராணமாகும் அது.
(தஸ்மாத் பவந்தம் பிருச்சாம : சூதபௌராணி காத்யது புராண சம்ஹிதாம் புண்யாம் லிங்க மகாத்மிய சம்யுதாம்’
என்ற சுலோகம் இங்கு அநுசந்தேயம். ‘இலிங்க மகாத்மியத்தோடு கூடிய ஒரு
புராண சம்ஹிதையை இப்பொழுது செய்து தரும்படி, சூதபௌராணிகர்களாகிய நாங்கள் உங்களைக் கேட்கிறோம்,)
இளி கண்ணனைப் புண்டரீகாக்ஷனாகக் கவிபாடித் தரவேண்டும்’ என்றும்,
எருமையை யானையாகக் கவிபாடித் தரவேண்டும்’ என்றும் சொல்ல, அப்படியே,
கவி பாடுவாரைப் போலே இருப்பது ஒன்றே அன்றோ,
அவர்களுக்கு இல்லாத உயர்வுகளை இட்டுச் சொல்லுமது?’
தான் சொல்லப் புக்க பொருளுக்கு உயர்வினைச் சாதிக்க மாட்டாமல்,
மற்றுள்ளவற்றினுடைய உயர்வினைக் கழிக்க மாட்டாதே இருப்பது ஒன்றாயிற்று அது.

சமணரும் –
ஆர்ஹதரும் -சைனர்களும்.

சாக்கியரும் –
பௌத்தர்களும்.

மற்றும் வலிந்து வாது செய்வீர்களும் –
உத்க்ருஷ்டதமமான -மிக உயர்ந்ததான பிரமாணத்தை அங்கீகரித்துக்கொண்டு நின்று
பிரமாணங்களுக்கு அநுகூலமான தர்க்கங்களை ஒழியக் கேவல தர்க்கங்களைக் கொண்டு
அர்த்தத்தைச் சாதிக்கப் பார்க்கும் புறச் சமயத்தாரில் எஞ்சியவர்களும்.
யா வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய -எவை, வேதத்திற்குப் புறம்பான ஸ்ம்ருதிகள்? யாவை சில, குத்ருஷ்டி ஸ்ம்ருதிகள்?
அவை யாவும் மறுமை இம்மைகட்குப் பயனற்றவை; அவை தமோ குணமுடையவைகள்,’ என்கிறபடியே,
தமோ குணமுடையராய் இருக்கை எல்லார்க்கும் ஒத்ததே அன்றோ?
ஆகையாலே, பாஹ்ய -புறச்சமயத்தாரையும் குத்ருஷ்டிகளையும் ஒரு சேரச் சொல்லுகிறார்.

நும் தெய்வமும் ஆகி நின்றான் –
உங்களோடு நீங்கள் ஆஸ்ரயிக்கிற -பற்றுகின்ற தேவர்களோடு வேற்றுமை அற ஆத்மாவாய் நின்றான். என்றது,
நீங்கள் அவ்வத் தெய்வங்கட்கு உயர்வுகளைச் சொல்லும் போது பகவானுடைய பரத்வத்தை அங்கீகரித்துக்கொண்டு
நின்று சொல்ல வேண்டும். ‘அதற்கு அடி என்?’ என்னில்,
அவ்வத் தெய்வங்களினுடைய சொரூபம் ஸ்திதி -நிலைபெறுதல் முதலானவைகள்
அவன் அதீனமாய் இருக்கையாலே,’ என்பதனைத் தெரிவித்தபடி.

இனித்தான் மதங்கள்தோறும், சர்வஞ்ஞன் -முற்றறிவினன், ‘ஈஸ்வரன்’ என்றாற்போலே
ஒவ்வொரு தெய்வமும் கொள்ளக் கூடியதாய் இருக்குமே அன்றோ?
அவ்வத் தெய்வங்களுடைய சொரூபம், நிலைபேறு முதலானவைகள் அவன் அதீனம்,’ என்ற இது,
ஸூவ பஷத்தாலே சொல்லுகிறதோ, பர பஷத்தாலே சொல்லுகிறதோ?’ என்னில்,
இரண்டும் ஒழியப் பிரமாணங்களின் போக்கினாலே சொல்லுகிறது. ‘எங்ஙனே?’ என்னில்,
ஒரு தேவன் பக்கலிலே-அதி மானுஷமாய் – மக்கள் செயலுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதொரு செயலைக் கண்டு,
இதற்கு அடி என்?’ என்ன,
சோந்த்ராதந்திரம் ப்ராவிஸத் ‘அளவிடற்கு அரிய ஒளியையுடையவனும் பூஜிக்கத் தக்கவனுமான சிவனுக்கு
விஷ்ணு அந்தராத்மாவாய் இருக்கின்றார்.’ என்கிறபடியே,
சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நிற்கையாலே என்றதே அன்றோ?
சர்வேஸ்வரன் தன் சர்வாத்ம பாவத்தைச் சொல்லுமாறு போன்று, சிவன், அதர்வ சிரஸ்ஸிலே நின்று,
தன்படிகளைச் சொல்லி, ‘அவன் தானே இங்ஙனம் சொல்லுகைக்கு அடி என்?’ என்று ஐயங்கொண்டு,
ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’ என்கிறபடியே, ‘பரமாத்ம பிரவேசத்தாலே சொன்னேன்,’ என்றானே.
மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 19 : 95. -‘என்னிடத்திலிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன;
அநாதியான என்னிடத்தில் எல்லாம் லயம் அடைகின்றன. யானே எல்லாப் பொருள்களுமாய் இருக்கிறேன்;
யானே அழிவில்லாதவனும் முடிவில்லாதவனும் ஆகிறேன்; பரமாத்மாவை ஆத்மாவாகப் பெற்றுள்ளேன்,’
என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கல் பரத்வம் உண்டாமன்று ஆயிற்று, இவர்கள் பக்கல் பரத்வம் உள்ளது.
(‘கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்’ என்ற திருவாய்மொழி இங்கு அநுசந்தேயம்)

(அஹம் ஏக: பிரதமம் ஆஸம் வர்த்தாமிச பவிஷ்யாமிச நாந்ய: கச்சின் மத்தோ வியதிரிக்த இதி’ (அதர்வசிகை) என்ற
வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.
ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்,’ இது, அதர்வசிகை.
ஸ :- அந்தச் சிவபிரான், அந்தராத் – தேக இந்திரியங்களைக் காட்டிலும்உள்ளே இருக்கிற ஜீவாத்துமாவாகிற தன்னினின்றும்.
அந்தரம் –பரமாத்துமாவை, பிராவிசத் – அடைந்தார். என்றது,
சிவபிரான் பரமாத்தும பாவத்தை அடைந்தார்’ என்பது கருத்து.
அன்றிக்கே, ஸ :- அந்தப் பரமாத்துமா, அந்தராத் – தேக இந்திரியங்களைக்காட்டிலும் உள்ளே
இருக்கின்ற ஜீவாத்துமாவின்,
அந்தரம் – உள்ளே, பிராவிசத் – பிரவேசித்தார்,’ என்னலுமாம். என்றது ‘பரமாத்துமா சிவபிரான் உள்ளே
பிரவேசித்தார்; ஆதலால், பரமாத்தும பாவத்தைச் சிவன் அடைந்தார்,’ என்பது கருத்து.
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர:’ கர்ணபர்வம்.

பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித் தொல்புகழ் தந்தாரும் தாம்.பரிபாடல்.)

மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூரதனுள் –
செந்நெல் பயிர்கள் கதிர்களின் கனத்தாலே அவ்வருகுக்கு இவ்வருகு அசைகிற போது சாமரை வீசினால் போலே
ஆயிற்று இருப்பது. என்றது, ‘இப்படி எல்லாப் பொருள்கட்கும் அந்தராத் மாவாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
அஸந்நிஹிதன் -‘தூரத்தில் உள்ளான்’ என்ற கண்ணழிவும் இல்லாதபடி திருநகரியிலே வந்து
அண்மையில் இருப்பவன் ஆனான்;
சர்வ சமாஸ்ரயணீயன்- எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாய் இருக்கிற அவன் இங்கே வந்து நிற்கையாலே, –
சேதன -அறிவுடைப் பொருள் -அசேதன -அறிவில்லாப் பொருள் என்ற விபாகம் -வேறுபாடு இல்லாமல்,
ஸ்ருஷ்டஸ் த்வம் வன வாஸாயா ‘நீ வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று சொல்லப்பட்ட
இளைய பெருமாளைப் போன்று அநுகூலமான வ்ருத்திகளை -தொழில்களைச் செய்கிறபடியைத் தெரிவித்தவாறு.

பொலிந்து நின்ற பிரான் கண்டீர் –
பரமபதத்தை விட்டு இம்மக்கள் நடுவே வந்து புகுந்த இடத்து அவர்கள் படுகின்ற கிலேசத்தைத்
தானும் ஒக்கப்படுகை அன்றிக்கே,
இவ்வருகே போதரப் போதரச் சொரூப ரூப குண விபூதிகள் மேன்மேலென விஞ்சி வாரா நின்றன ஆயின.
அன்றிக்கே, ‘சொன்னார் சொன்னவற்றுக்கும் எல்லாம் அவ்வருகாயிருக்கும்,’ என்னுதல்.

ஒன்றும் பொய் இல்லை –
மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே,
பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை.
அவ்வத் தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலே மெய் ஒன்றும் இல்லை;
பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை.

போற்றுமினே –
நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது,
எனக்கு உங்கள் பக்கல் உண்டான ‘அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே,
மிக்க அருளாலே அன்றோ? அனுக்ரஹ அதிசயம் -அவ்வருளின் காரியம் பிறக்க வேண்டுமே.
கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறி யிராமல், சடக்கென
அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிக்க -அடைவதற்குப் பாருங்கோள்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: