ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-2–

ஆஸ்ரயிக்கிற- அடைகின்ற உங்களோடு, ஆஸ்ரயணீயரான- அடையப்படுகின்ற அந்தத் தேவர்களோடு வாசி அற
எல்லாரையும் உண்டாக்கினவன் நின்றருளுகையாலே
ப்ராப்யமான -அடையத்தக்கதான திருநகரியை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள்,’ என்கிறார்.

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2-

நீர் நாடி வணங்கும் தெய்வமும் –
இயல்பாகவே அமைந்தது ஓர் உயர்வு இல்லாமையாலே அவை தாம் இறாயா நிற்கச்செய்தே.
வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும் நீங்கள் பொரி புறந்தடவி வருந்திச் சேமம் சாத்தி வைத்து-
ஆஸ்ரயிக்கிற – அடைகின்ற தேவர்களையும்.

நாடி –
கள்ளரைத் தேடிப் பிடிக்குமாறு போலே தேடிப் பிடிக்க வேண்டி இருப்பவர்களாதலின், ‘நாடி’ என்கிறார்.
ஆடு திருடின கள்ளர்களே அன்றோ இவர்கள்தாம்?
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கே ஆடு கட்டினவர்கள் ஆகையாலே, தேடிப் பிடிக்க வேண்டுமே?
கள்ளர் அச்சம் காடு கொள்ளாது,’ என்று தன்னை அடைய ஆஸ்ரயிக்க -வருகிறவர்களையும்
தன்னைக் கட்ட வந்தார்களாகக் கொண்டு போகிறபடி

நீர் –
ராஜஸராயும் தாமஸராயும் உள்ள நீர்.
அன்றிக்கே, ‘நீர்’ என்று, அவர்களோடு தமக்கு ஒட்டு அறச் சொல்லுகிறார் என்னலுமாம்.
ஆக, ‘நீர் நாடி வணங்கும்’ என்றதனால்,
உங்கள் நினைவு ஒழிய அவர்கள் பக்கல் ஓர் உயிர் இல்லை’ என்பதனைத் தெரிவித்தபடி.

நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் –
நீங்கள் ஆஸ்ரயிக்கிற -வணங்குகின்ற ராஜசராயும் தாமசராயும் உள்ள தேவர்களையும்
உங்களையும்.

முன் படைத்தான் –
படைக்கிற இடத்தில் முற்பட அவர்களைப் படைத்துப் பின்னர் உங்களைப் படைத்தான்.
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் -உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்’ என்கிறபடியே,
பிரமனைப் படைத்துப் பின்பே அன்றோ இவ்வருகு உள்ளாரைப் படைத்தது?
அவன் படைத்திலனாகில், நீங்கள் மற்றைத் தேவர்களை ஆஸ்ரயிக்கும்படி -அடையும்படி எங்ஙனே?’ என்பார், ‘படைத்தான்’ என்கிறார்.
அவன் படைத்திலனாகில் எங்ஙனே உண்ண இருப்பீர்கோள்?’ என்றபடி.
உங்களுக்கு ஆஸ்ரயணீயத்வம் உண்டாகும் அன்றே அன்றோ, அவர்களும் ஆஸ்ரயணீயர் ஆவது என்பார்,
உம்மையும் படைத்தான்’ என்கிறார்.

வீடு இல் சீர் –
1-இயல்பாகவே அமைந்துள்ளதான செல்வத்தையுடையவன். என்றது,
நீங்கள் தேடி ஆஸ்ரயிக்கிற -அடைகின்ற தேவர்களுடைய ஐஸ்வரியம் போலே ஒருவனுடைய புத்திக்கு-
அதீனமாய் – வசப்பட்டதாய், அவன் நினைத்திலனாகில் இல்லையாய்,
அது தனக்கு அடி கர்மமாய், அந்தக் கர்மம் ஷயம் பிறந்தவாறே -குறைந்தவாறே -நசிக்கை – அழியக் கூடியது அன்று-
ஸ்வ ஸித்தமான சம்பத்தை யுடையவன் -ஆதலின், ‘வீடு இல் சீர்’ என்கிறது.
வீடு – அழிவு. சீர் – செல்வம்.
2-அன்றிக்கே, நீங்கள் அடைகின்ற தேவர்களுடைய செல்வம் போலே அவதியுடன் கூடியிருப்பது அன்று. என்றது,
கர்மம் அடியாய் அதிலே ஒன்று குறையக் குறைதல்,
பலத்தைக் கொடுக்கின்றவனுடைய திருவருள் குறையக் குறைதல் இல்லாதது.’ என்றபடி.
பலமத-‘எல்லாப் பலன்களும் அந்தப் பரம்பொருளிடத்திலிருந்துதான் பெறப்படுகின்றன,’ என்றதே அன்றோ?
3-அன்றிக்கே, ‘வீடு இல் சீர்’ என்பதற்கு,
அழிவில்லாத கல்யாண குணங்களையுடையவன்’ என்னுதல்.
தஸ்மிந் யதன் தஸ்தாதுபாசி த்வயம் –அவனிடத்தில் எந்தக் குணம் உள்ளதோ, அதுவும் தியானிக்கத் தக்கதே,’ என்கிறபடியே,
அவனைப் போன்றே அவன் குணங்களும் உபாசிக்கத் தக்கவை என்னுமிடம் சொல்லுகிறது.

புகழ் –
எல்லாரையும் பாதுகாத்து, அவ்வாறு பாதுகாத்தலால் வந்த புகழையுடையவன்.
பாதுகாப்பதால் வந்த புகழையுடையவன் அன்றோ அடையத் தக்கவன் ஆவான்?
யச சஸ்சைக பாஜநம்– கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்,’ என்னக் கடவதன்றோ?

ஆதிப்பிரான் –
பாதுகாத்துப் புகழைப் படையாமல் பழி படைத்தாலும் விட ஒண்ணாத –
ப்ராப்தியை -சம்பந்தத்தை ‘ஆதி’ என்கிற பதத்தால் சொல்லுகிறது.
பிரான்
கேவலம் சம்பந்தமே அன்று, உபகாரகன்’ என்பதனைச் சொல்லுகிறது ‘பிரான்’ என்ற சொல்.
உபகாரகனுமாய்–ப்ராப்தனுமாய் -யஸஸ்வியுமாய் -ஐஸ்வர்யம் சம்பந்தத்தையுடையனுமாய், கீர்த்தியாளனுமாய்.
ஐஸ்வர்யம் என்ன, -நித்ய ஸித்தமான -அழியாத கல்யாண குணங்கள் என்ன, இவற்றையுடையவனை ஒழிய,
இவை இல்லாதாரை அடையத் தகுதி இல்லை. காரண வஸ்துவே அன்றோ உபாசிக்கத் தக்கது?
காரணந்து த்யேய — காரண வஸ்துவே தியானிக்கத் தகுந்தது’ என்னாநின்றதே அன்றோ?

அவன் மேவி உறை கோயில் –
அவன் பரமபதத்திலே உள் வெதுப்போடே காணும் இருப்பது.
சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துக்கத்தை நினைந்து, ‘இவை என் படுகின்றனவோ?’ என்கிற
திருவுள்ளத்தில் வெறுப்போடே ஆயிற்று அங்கு இருப்பது.
நோ பஜனம் ஸ்மரன் -முத்தன் ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே
நாலு பக்கமும் சஞ்சரிக்கின்றான்,’ என்கிறபடியே,
இங்குத்தைத் துக்கத்தை நினையாது ஒழிய வேண்டுவது,
பண்டு துக்கத்தை யுடையவனாய் இருந்து இவ்வுலகத்தினின்றும் போனவனுக்கே அன்றோ?’
இங்குத்தைத் துக்கத்தை நினைக்குமாகில், அனுபவிக்கின்ற சுகத்துக்குக் கண்ணழிவு ஆகாதோ?’
என்னும் கண்ணழிவு இல்லையே அவனுக்கு?
பரமபதத்திலும் சம்சாரிகள் படுகிற துக்கத்தை நினைத்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று
எழுந்தருளியிருப்பது,’ என்று பட்டர் அருளிச்செய்ய,
ஆச்சானும், பிள்ளையாழ்வானும் இத்தைக் கேட்டுப் பரம பதத்திலே ஆனந்தத்தால் நிறைந்தவனாய் இருக்கிற இருப்பிலே
திருவுள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை உசிதமோ என்கிறார்கள்,’ என்று வந்து விண்ணப்பம் செய்ய,
வியசனேஷு மனுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கித -‘மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில்
தானும் மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது, ‘குணப் பிரகரணத்திலேயோ, துக்கப் பிரகரணத்திலேயோ?’
என்று கேட்கமாட்டிற்றிலீரோ? இது குணமாகில், ‘குணம்’ என்று பேர் பெற்றவற்றில்
அங்கு இல்லாதது ஒன்று உண்டோ?’ என்று அருளிச்செய்தார்.
ஸமஸ்த கல்யாண குணத் மகோசவ் — எல்லாக் கல்யாண குணங்களையும் இயல்பாகவேயுடையவன்–என்னக் கடவதன்றோ?
தன் இச்சை ஒழியக் கர்மம் காரணமாக வருபவை இல்லை என்னுமத்தனை போக்கி,
அனுக்ரஹ -திருவருளின் காரியமாய் வருமவை இல்லை எனில், முதலிலே சேதனன் அன்றிக்கே ஒழியும்.
ச ஏகாகீ ந ரமேத -அந்தப் பரம்பொருள் உயிர்க்கூட்டம் எல்லாம் பிரகிருதியில் லயப் பட்டிருக்கும் காலத்தில்
தான் தனியாய் இருந்துகொண்டு துக்கத்தை அடைந்தான்,’ என்றது, நித்ய விபூதியும் குணங்களும் உண்டாயிருக்கச்செய்தே அன்றோ?

ஆதிப்பிரான் அவன் மேவி உறைகோயில் –
பரமபதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே, அவ்விடத்தை விட்டு,
நல்ல படுக்கையையும் போகத்துக்கு ஏகாந்தமானவற்றையும் காற்கடைக்கொண்டு,
குழந்தையினுடைய தொட்டில் காற்கடையிலே கிடக்கும் தாயைப் போலே,
காப்பாற்றுவாரை விரும்புமவர்களான இம் மக்கள் இருக்கிற இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடம் ஆயிற்று.

மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் –
மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து-தர்ச நீயமாக – காட்சிக்கு இனியதாய் இருக்கும் திருக்குருகூர்.
உங்களுக்குதான் நல்ல தேசம் தேட்டமே;
முக்த ப்ராப்ய தேசம் -‘முத்தனாகிற பேற்றினைக் கொடுக்கும் தேசம், என்று தோற்றுகிறதில்லையோ?’ என்றபடி.

அதனைப் பாடி ஆடி –
பிரீதியினாலே -பிரேரிதராய் -தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாடி,
உடம்பு இருந்த இடத்தில் இராமல் ஆடி,
கிரமமின்றியே கூப்பிட்டுக் கொண்டு.
இதனால், ‘அதனுள் நின்ற ஆதிப்பிரான்’ என்ற இடம் மிகை என்கிறார். என்றது,
விஷ்ணோர் ஆராயதநே வசேத் ‘பகவான் எழுந்தருளியிருக்கும் ஊரில் வசிக்கக்கடவன்,
தேசோயம் சர்வ காம துக் ‘இந்தத் தேசமானது, புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது;
விரும்பியனவற்றை எல்லாம் கொடுக்கக் கூடியது. என்கிறபடியே, இதுதானே பேறு,’ என்றபடி.
அந்தத் தேசம் என்றால் தம் திருவுள்ளம் இருக்குமாறு போலே இருக்கும் என்று இருக்கிறார் காணும் எல்லார்க்கும்.

பல் உலகீர் –
ஒருவன் சமித் பாணியாய் சமித்தைக் கையிலே உடையவனாய்-தாந்தனாய் -ஐம்பொறிகளையும் அடக்கியவனாய் வர,
அவனுக்கு நலத்தை உபதேசம் செய்கிறார் அல்லர்;
இவை என்ன உலகியற்கை!’ என்று, உலகம் கிலேசப் படுகிறபடியைக் கண்டு எல்லார்க்கும் சொல்லுகிறாரே அன்றோ?
ஆதலால், ‘உலகீர்’ எனப் பொதுவில் அழைக்கிறார்.

பரந்தே –
பெரிய திருநாளுக்கு எல்லாத் திக்குகளினின்றும் வந்து ஏறுமாறு போன்று,
பல திக்குகளினின்றும் பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள்.

‘விரும்பினவை எய்தும்; வினை யனைத்தும் தீரும்;
அரும் பரம வீடும் அடைவீர் பெரும் பொறி கொள்
கள்ளம் பூதங்குடி கொன் காயமுடை யீரடிகள்
புள்ளம் பூதங்குடியிற் போம்.– திவ்விய கவி-

வளந்தழைக்க உண்டால் என்? வாசம் மணந்தால் என்?
தெளிந்த கலை கற்றால் என்? சீசீ! – குளிர்ந்தபொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர் என்னாத வாய்.’

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: