ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-1–

நான்காம் பத்து -பத்தாம் திருவாய் மொழி -ஒன்றும் தேவும் -பிரவேசம்

ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவதும் அறுப்பதுமாய் இருக்குமாறு போலே,
நித்ய விபூதியும் நித்ய ஸூரிகளும் பகவத் அனுபவமே பொழுது போக்காகச், சொல்லா நிற்க,
ம்சாரம் ஆகிற பாலை நிலத்தில் உள்ளார் சப்தாதி விஷயங்களில் ப்ரவணராய்
இவற்றினுடைய லாபாலாபங்களே பேறும் இழவுமாய்ப் பகவைத்த விமுகராய் – கிலேசப்படுகிற படியை அனுசந்தித்து
தேவர் உள்ளீராய் இருக்க, இவர்கள் இப்படி நோவுபட விட்டிருக்கை போருமோ?’
இவர்களையும் திருத்தி நல்வழி போக்கவேண்டும்.’ என்று அவன் திருவடிகளிலே சரணம் புக,

அவன் இவரை நோக்கி, ‘நம் குறை யன்று காணும்; இவர்கள் அசித்தாய் நாம் நினைத்தபடி
காரியம் கொள்ளுகிறோம் அல்லோமே?
சேதனரான பின்பு இவர்கள் பக்கலிலேயும் ருசி உண்டாக வேணும் காணும்
அபுநாவ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைப் பெறும் போது–

(ருசி முன்னாகப் போகாமையாலே வைதிக புத்திரர்கள் மீண்டார்களே யன்றோ? என்றபடி.
தாளாற் சகங் கொண்ட தாரரங் கா!பண்டு சாந்திபன் சொல்
கேளாக் கடல் புக்க சேயினை மீட்டதுங் கேதமுடன்
மாளாப் பதம் புக்க மைந்தாரை மீட்டதும் மாறலவே
மீளாப் பதம் புக்க மைந்தரை நீயன்று மீட்டதற்கே?’–திருவரங்கத்துமாலை.)

நாமும் உம்மைப் போன்று ஆவன எல்லாம் செய்து பார்த்தோம்;
முடியாமையாலே கண்ண நீரோடே காணும் கை வாங்கினோம்,’ என்ன,
இவர்களுக்கும் ருசி இல்லையே யானாலும் பேற்றுக்கு வேண்டுவது இச்சை மாத்திரமே யாயிற்று; ஆன பின்பு,
இந்த இச்சையையும் தேவரீரே பிறப்பித்துக் கொள்ளுமித்தனை அன்றோ?’ என்று
ஸ்ரீ கிருஷ்ணன், துரியோதனாதியர்களை அழியச்செய்து, வெற்றி கொண்டு நிற்கச் செய்தே,
துரியோதனாதியர்கள் பக்கல் உண்டான பக்ஷபாதத்தாலே உதங்கன் வந்து,
உனக்கு பிராப்தி ஒத்திருக்க, பாண்டவர்களிடத்தில் பக்ஷபதித்து துரியோதனாதியர்களை அழியச் செய்தாயே?’ என்ன,
அவர்களை ஆந்தனையும் பொருந்த விட்டுப் பார்த்தோம்;
சர்வ நியாந்தாவான நீ பின்பு அவர்களுக்கு இசைவைப் பிறப்பித்துப் பொருந்த விட்டுக் கொள்ளாது விட்டது என்?’ என்று
அவன் நிர்ப்பந்தித்தால் போலே, இவரும் நிர்ப்பந்திக்க,

சேதநரான பின்பு ருசி முன்பாகச் செய்ய வேண்டும் என்று இருந்தோம் இத்தனை காணும்;
அது கிடக்க, உமக்குக் குறை இல்லையே- உம்மைக் கொடு போய் வைக்கப் புகுகிற தேசத்தைப் பாரீர்,’ என்று
பரமபதத்தைக் காட்டிக் கொடுக்க-
(ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக், கண்ட சதிர்
கண்டொழிந்தேன்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி )
கண்டு கிருதார்த்தரானார் கீழில் திருவாய்மொழியிலே.

பின்னையும் தம் செல்லாமையாலே, சர்வேஸ்வரன் கைவிட்ட சம்சாரத்தையும் திருத்தப் பார்க்கிறார்.
(அருள் கொண்டாயிரம் இன்தமிழ் பாடினான், அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்றும், ‘
நின் கண் வேட்கை எழுவிப்பனே’ என்றும் சொல்லுகையாலே ‘தம் செல்லாமையாலே’ என்கிறார். ‘
ஈஸ்வரன் கைவிட்டிருக்க, இவர் திருத்தினால் திருந்துவர்களோ?’ என்னில்,
உபரிசரவசுவினுடைய உபதேச சுத்தியாலே பாதாளத்தையடைந்தவர்கள் திருந்தினால் போன்று,
மஹா பாகவதரான இவருடைய கடாக்ஷ விசேஷத்தாலும் உபதேச சுத்தியாலும் திருந்துவார்கள் -என்க.)

சம்சாரத்தை அடி அறுக்க வேணும் என்று பார்த்து சம்சார பீஜம் இதர தேவதைகள் பக்கல் பிராவண்யமும்
பகவத் பரத்வ ஞானம் இல்லாமையுமாய் இருந்தது -அதுக்கு உறுப்பாக பகவத் பரத்வ ஞானத்தை உபதேசிக்கிறார்

எம்பார், ‘சிலர் எல்லா வேத சாஸ்திரங்களும் கைவரப் பெற்று வைத்து,
பர தத்துவம் இன்னது’ என்று அறுதி யிடமாட்டாதே, ‘சேம்புக்குக் கூராச் சிற்றரிவாள் உண்டோ?
நமக்கு உபாஸ்யர் -வணங்கத் தகுந்தவர் -அல்லாதார் உளரோ?’ என்று கண்ட இடம் எங்கும் புக்குத்
தலை சாய்த்துத் தடுமாறி நிற்க,
எம்பெருமானார் தரிசனத்தில் -ஸ்த்ரீ பிராயரும் -எத்தனையேனும் கல்வி இல்லாத பெண்களும்
மற்றைத் தெய்வங்களை அடுப்பிடு கல்லைப் போன்று நினைத்திருக்கிறது,
இந்த ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழி உண்டாகையினாலே அன்றோ? என்று அருளிச் செய்வர்;
த்ருணீ க்ருத விரிஞ்சாதி — எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை அடைந்தவர்கள் பிரமன் முதலாயினாருடைய
குறைவற்ற செல்வத்தைத் துரும்புக்குச் சமமாக நினைப்பார்கள்,’ என்னக் கடவது அன்றோ?

கார்த்த வீரியார்ஜூனன் என்பான் ஒருவன் தான் ராஜ்ய பரிபாலனம் செய்கிற காலத்தில்
யாரேனும் ஒருவர் பாப சிந்தனை பண்ணினார் உளராகில் அவர்கள் முன்னே கையும் வில்லுமாய் நின்று
அவற்றைத் தவிர்த்துப் போந்தான் என்றால், இது பொருந்தக் கூடியதே,’ என்று இருப்பர்கள்;
ஒரு ஷூத்ர மனிதனுக்கு ‘இது கூடும்’ என்று இருக்கிறவர்கள்,
சர்வ சத்தியாய் சர்வாந்தர்யாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் இப்படிப் பரந்து நின்று நோக்கும்,’ என்றால்,
மக்கள், ‘இது பொருத்தம் அற்றது’ என்று இருப்பர்கள்.
ஜாதி, பொருள்கள் தோறும்-பரிஸமாப்ய வர்த்திக்கும் – நிறைந்து தங்கியிருக்கும்’ என்றால்,
அசித் பதார்த்தத்திற்கு இது கூடும்’ என்று இருப்பர்கள்;
பரம சேதநனாய் இருப்பான் ஒருவன் பரிஸமாப்ய வர்த்திக்கும் -பரந்து நிறைந்து தங்கியிருப்பான் என்றால்,
இது கூடாது’ என்று-சம்சயியா – ஐயப்படா நிற்பார்கள்.

முதல் திருவாய்மொழியிலே,-ஸ்வ – தம்முடைய அனுபவத்திற்கு உறுப்பாக,
அவன் காட்டிக்கொடுத்த பரத்வத்தை அநுசந்தித்து, அது தன்னை ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று
ஸ்ருதிச் சாயையாலே உபபாதித்தார் -விரித்து அருளிச்செய்தார்,
ஸ்வ அனுபவம் தான் பிறர்க்கு உறுப்பாய் இருக்கையாலே, சேதனராகில் இவ்வளவு அமையுமே அன்றோ?’ என்று பார்த்து.
பின்னர் இதிகாச புராணக் கூற்றுகளாலே-ப்ரக்ரியையாலே – பரத்வத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில்.
அதிலும் அவர்கள் திருந்தாமையாலே, ‘அவர்கள் தம்மையே உத்தேசித்தே பகவானுடைய பரத்வத்தை
உபபாதிப்போம் – விளக்கி விரித்துப் பேசுவோம்’ என்று பார்த்து, அதற்கு உறுப்பாக,
இதர -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையை அறுத்துக்கொண்டு,
பகவானுடைய பரத்வத்தை உபபாதிக்கிறார் -விளக்கி விரித்துப் பேசுகிறார் இத் திருவாய்மொழியில்.

அன்றிக்கே, முதல் திருவாய்மொழியிலே பரத்வத்திலே பரத்வத்தை அருளிச்செய்தார்;
அது சம்சாரிகளுக்கு எட்டாநிலமாய் இருந்தது.
அதற்காக, அவதாரத்திலே _
பரத்வத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில்.
அதுவும்-தத் பிராயமாய் – பரத்வத்திலே பரத்வத்தை ஒத்ததாய்ப் -பிற்பாடர்க்கு எட்டிற்று இல்லை.
இரண்டும் தேசத்தாலும் காலத்தாலும் -விப்ரக்ருஷ்டமாய் -கை கழிந்தன.
அக் குறைகள் ஒன்றும் இன்றிக்கே, பின்னானார் வணங்குஞ்சோதி’ என்கிறபடியே,
பிற்பாடர்க்கும் இழக்க வேண்டாத அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை அருளிச் செய்கிறார்
இத் திருவாய்மொழியில் என்னுதல்.

இனி, ‘இவர் திருத்தப் பார்த்த வழிதான் யாது?’ என்னில்,
எல்லாரும் ஓக்க -ஒரு சேர விரும்புவது ஸூகங்கள் உண்டாகவும், துக்கங்கள் இன்றிக்கே ஒழியவுமாய்-
அபேக்ஷிதமாய் இருக்கச் செய்தே, -அபேக்ஷித்த -விரும்பிய சமயத்தில்-அபிமதமான – விரும்பப்பட்ட ஸூகம் வரக் காணாமையாலும்,-
அநபிமதமான – விருப்பம் இல்லாத துக்கம் வரக் காண்கையாலும்
இவற்றை எல்லாம் நியமிக்கின்றவனாய் நின்று -அனுபவிப்பிக்கிறவன் -ஒருவன் உளன்,’ என்று கொள்ள வேண்டி இருந்தது. அது என்?
ஸூக துக்கங்களுக்குக் காரணமான புண்ணிய பாவங்கள் அனுபவிப்பிக்கின்றன என்று கொண்டாலோ?’ என்னில்,
அந்நல்வினை தீவினைகளினுடைய-ஸ்வரூபத்தை – தன்மையை ஆராய்ந்தவாறே,
அவை, அசேதனமாய் -அறிவு அற்றனவாய் இருப்பன சில கிரியா விசேஷங்கள் ஆகையாலே, அப்போதே நசிப்பனவாம்;
இனி ஒரு தாரு நிர்மாணத்தில் – மரத்தைச் செப்பன் இடுங்காலம் வந்தால், கர்த்தாவை ஒழிய வாய்ச்சி முதலானவைகட்கு
ஒரு வியாபாரம் – செயல் கூடாதது போன்று, அந்தக் கிரியைகளுக்கும் ஒரு சேதனனை ஒழியப் பலத்தைக் கொடுக்கும் ஆற்றல் –
பிரதான சக்தி -கூடாமையாலே ஒரு சேதனனைக் கொள்ள வேண்டி வரும்;
இனி, ‘அபூர்வம்’ என்று ஒன்றைக் கற்பித்து ‘அது அதிருஷ்ட ரூபேண நின்று பலத்தைக் கொடுக்கிறது’ என்பதனைக் காட்டிலும்,
ஒரு பரம சேதநன் நெஞ்சிலே பட்டு அவனுடைய நிக்ரஹ -தண்டனை உருவத்தாலும் -அனுக்ரஹ -திருவருள் உருவத்தாலும்
இவை பலிக்கின்றன,’ என்று கூறுதல் நன்றே அன்றோ?
இனி, ‘அந்தப் பரம சேதநன் ஆகிறான் யார்?
அவனுடைய ஸ்வரூப ஸ்வபாவங்கள் இருக்கும்படி எங்ஙனே?
அவனுடைய சேஷ்டிதங்கள் -செயல்கள் இருக்கும்படி எங்ஙனே?’ என்னில்,
அவற்றைப் பிரமாணம் கொண்டு அறியவேண்டும்.
அவற்றுள், பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்கள்-அதீந்திரியார்த்தத்தில் – இந்திரியத்தாலே காண முடியாத பொருளைக்
காண்பதற்குப் பயன்படாமையாலே அவை பிரமாணம் ஆகமாட்டா;
இனி, ‘ஆகமம் முதலானவைகள் பிரமாணம் ஆனாலோ?’ என்னில், புருஷனுடைய புத்தியால் வருகின்ற
விப்ரலம்பாதி -வஞ்சகம் முதலான தோஷங்கள் அவற்றிற்கு உள ஆகையாலே, அவையும் பிரமாணம் ஆகமாட்டா;
இனி, சதுர்த்தச வித்யா ஸ்தான -பதினான்கு வகைப்பட்ட வித்யைகளுள் முக்கியமானதாய்,
நித்யமாய், அபவ்ருஷேயம் -புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே-விப்ரலம்பாதி – வஞ்சகம் முதலான தோஷங்கள் இல்லாததாய்,
சாத்விக புராணங்களாலே -உப ப்ரும் ஹிதமான விரித்துரைக்கப்படுகின்ற வேதம் பிரமாணம் ஆக வேண்டும்.

(பிரத்யக்ஷம், அநுமானம், உபமானம், ஆகமம், அர்த்தாபத்தி, அபாவம், சம்பவம், ஐதிஹ்யம் எனப் பிரமாணங்கள் எட்டு வகைப்படும்.
அவற்றுள், மநுவினாலே அங்கீகரிக்கப்பட்ட பிரமாணங்கள் மூன்று; அவை, பிரத்தியக்ஷம், அநுமானம், ஆகமம் என்பனவாம்.
ஆகமம் முதலானவைகள்’ என்றது, பாசுபத சாங்கிய யோகங்களைக் குறித்தபடி.
விப்ரலம்பாதி -‘வஞ்சகம் முதலான தோஷங்கள்’ என்றது, பிரமம், பிரமாதம், அசக்தி -இவைகளை-
பதினான்கு வகைப்பட்ட வித்யைகள்’ என்றது, ருக்கு, யஜுர் , சாமம், அதர்வணம் என்னும் வேதங்களையும்;
சிக்ஷை, வியாகரணம், கல்ப சூத்திரம், நிருத்தம், ஜோதிஷம், சந்தோவிசிதி என்னும் ஆறு அங்கங்களையும்;
நியாயம், மீமாம்சை, புராணம், தர்ம சாஸ்ரம் என்னும் உபாங்கங்கள் நான்கனையுமாம்.
வேதார்த்தத்தை நிர்ணயம் செய்வதற்கு உப ப்ருஹ்மணங்கள் வேண்டுமோ?’ எனின், வேதார்த்தத்தை அறுதியிடுவதற்கு,
சர்வ சாகைகளிலும் சர்வ வேதாந்த வாக்கியங்களிலும் நிறைந்த அறிவு படைத்திருத்தல் வேண்டும்; அத்தகைய ஞானம் படைத்தவர்கள்
மஹரிஷிகளேயாவர்; ஆதலால், ‘
இதிஹாச புராணாப்யாம் வேதம் ஸம் உப பிரும்ஹயேத்’, ‘பிபேதி அல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி’ என்கிறபடியே,
மஹருஷிகள் வசனங்களாகிய உப ப்ருஹ்மணங்கள் வேண்டும்.
வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்மிருதி இதிகாச புராணங்களாலே’ என்பது,ஸ்ரீ வசன பூஷணம்))

சாத்விக புராணங்கள்’ என்று விசேஷித்துக் கூறுவதற்குக் கருத்து என்?’ என்னில்,
புராண கர்த்தாக்கள் எல்லாரும் பிரமன் பக்கலிலே சென்று இவ்விரண்டு காதைகளைக் கேட்டுப் போந்து
தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்; அந்தப் பிரமனும் –
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை ‘ஸ்ரீமந் நாராயணர் உலகங்களைப் படைப்பதற்கு
முன்னே பிரமனைப் படைத்தார்; அந்த நாராயணர் அந்தப் பிரமனுக்கு வேதங்களையும் உபதேசித்தார்,’ என்கிறபடியே,
சர்வேஸ்வரனாலே படைக்கப்பட்டவனாய் அவனாலே-லப்த ஞானனாய் – ஞானத்தை யடைந்தவனுமாய் இருக்கச் செய்தேயும்,
ப்ருஷ்ட புரோவாச பகவா நப்ஜ யோநி பிதா மஹ- முனி புங்கவர்களான தக்ஷர் முதலானவர்களாலே கேட்கப்பட்டவரும்
முக்காலங்களையும் உணர்ந்தவரும் தாமரை மலரில் உதித்தவருமான பிரமாவானவர்,
உள்ளவாறு சொல்லுகிறேன், என்று சொன்னார்,’ என்கிறபடியே, முனிவர்களைப் பார்த்து உபதேசிக்கிற விடத்திலே,
நான் குணத்ரய வசனாய் -முக் குணங்களுக்கும் வசப்பட்டவனாய் இருப்பேன்;
தமோ குணம் உத்ரிக்தமான -மேலிட்ட போதும் ரஜோ குணம்-உத்ரிக்தமான- மேலிட்டபோதும் சொன்னவற்றைப் பொகட்டு,
சத்வ குணம்-உத்ரிக்தமான மேலிட்ட சமயத்தில் சொன்னவற்றை ஸ்வீகரியுங்கோள்- எடுத்துக் கொள்ளுங்கோள்,’ என்றானே அன்றோ?

இனி, அக்னேஸ் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமசேஷூ ப்ரகீர்த்யதே-ராஜ சேஷு ச மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது
சாத்விகேஷ் வத கல்பேஷூ மாஹாத்ம்யம் அதிகம் ஹரே — ‘தாமச கல்பங்களிலே அக்நி சிவன் இவர்களுடைய மாஹாத்மியமானது
பரக்கச் சொல்லப்படுகிறது; ராஜச கல்பங்களிலே பிரமனுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுவதை அறிகிறார்கள்;
சாத்விக கல்பங்களிலே விஷ்ணுவினுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுகிறது’ என்னா நின்றதே அன்றோ?
ஆகையாலே, குண பேதங்களாலே புருஷ பேதங்களைக் கொண்டு அவ்வழியாலே புராண பேதம் கொள்ளலாய் இருந்தது.
ஆகையாலே, ‘சாத்விக புராணங்களாலே அறியப்படுகின்ற வேதம்’ என்று விசேஷித்துச் சொல்ல வேண்டியிருந்தது.
ஆதலால், சாத்விக புராணங்களாலே -உப ப்ரும்ஹதமான- விரிக்கப்படுகின்ற வேதமே பிரமாணமாகக் கொள்ள வேண்டி இருந்தது,’ என்க.

வேதம் புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே, முக் குணங்களால் வருகின்ற தோஷம் இல்லையே
அந்த வேதத்துக்கு மூன்று குணங்களால் வருகின்ற தோஷம் -குற்றம் இல்லையேயாகிலும்,-ச விபூதிகனான உபபாதித்திப் போந்தது ஆகையால்
த்ரை குண்ய விஷயா வேதா ‘ஸ்ரீ கீதை, 2 : 45. -‘மூன்று குணங்களையுமுடைய மக்களை விஷயமாக உடையன வேதங்கள்.’ என்கிறபடியே,
முக்குணங்களையும் உடையவர்களாய் இருக்கின்ற மக்களை விஷயமாகவுடையதாய் அவர்களுக்கு ஹிதம் -நலம் சொல்லப் போந்தது ஆகையாலே,
அவர்களுடைய குணங்கட்குத் தகுதியாக நலம் சொல்லுமது உண்டாய் இருக்கும்
வேதத்துக்கும்.இரு வகைப்பட்ட உலகங்களோடு அது அங்ஙனம் சொல்லிற்றேயாகிலும்,
யாவா நர்த்த உதபாநே சர்வ தஸ் சம்ப்லு தோதகே –தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத -எல்லா இடங்களிலும்
நிறைந்த தண்ணீரில் வேட்கையுடையவனுக்கு எவ்வளவு நீர் பிரயோஜனப்படுகிறதோ,
அறிந்த பிராமணனுக்கு எல்லா வேதங்களிலும் அவ்வளவே பிரயோஜனப்படுகின்றது,’ என்கிறபடியே,
ஆறு பெருகி ஓடாநின்றால், -தாபார்த்தனானவன் -நீர் வேட்கையால் வருந்தின ஒருவன் தன் விடாய் தீருகைக்கு வேண்டுவது
எடுத்துக் கொள்வானே அல்லது. ஆற்று நீரை அடங்கலும் வற்றுவிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையேயன்றோ அவனுக்கு?
அப்படியே, முமுக்ஷூவானவன் இந்த வேதத்தில் தனக்குக் கொள்ள வேண்டியதான அம்சத்தை யன்றோ க்ரஹிப்பது -அறிய வேண்டுவது?
(இந்த உதரத் தெரிப்பு, த்ரைகுண்ய விஷயமானவற்றுக்குப் பிரகாசகம். வத்சலையான மாதா, பிள்ளை பேழ்கணியாமல்
மண் தின்ன விட்டுப் பிரதி ஒளஷதம் இடுமா போலே, எவ்வுயிர்க்கும் தாய் இருக்கும் வண்ணமான இவனும், ருசிக்கு
ஈடாகப் பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே,’ என்னும் ஆசார்ய ஹிருதயம்- 13, 14. சூ)

இனி,அந்த வேதந்தான் ‘பூர்வபாகம்’ என்றும், ‘உத்தரபாகம்’ என்றும்–இரண்டு வழியிலே பிரிவுண்ணக் கடவதாய்
அந்த வேதத்தில் கர்ம காண்டம் எனப்படுகிற பூர்வபாகமானது, ஆராதன வேஷத்தை சொல்லியும்
ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனாதிகளையும் சொல்லியும் அவற்றிலே பரக்க நின்று உபபாதிக்கும்-
இனி உத்தர பாகமானது சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குணங்களைப் பரக்க நின்று உபபாதிக்கும்-

(ஆதௌ வேதா: பிரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை: நியாயை: ஸார்த்தம் த்வத் அர்ச்சாவிதிம்
உபரிபரிக்ஷீயதே பூர்வபாக: ஊர்த்வோபாக: த்வத் ஈகா குண விபவ பரிஜ்ஞாபநை: த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைச் ச ஸர்வை: அஹம் இதி பகவந்! ஸ்வேந ச வியாச கர்த்த–என்பது ஸ்ரீரங்க ராஜஸ்தவம்-
பகவானே! வேதங்களானவை முதலிலே (வேறொரு பிராமணத்தைவிரும்பாமல் தாமாகவே) பிரமாணமாகின்றன; மநு முதலான
ஸ்மிருதிகளானவை, இதிகாசங்களோடு கூடின புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்சைகளோடுங்கூடி
(அந்த வேதங்களுக்குப் பொருள் விவரணம் செய்தலாகிற) உபகாரத்தைச் செய்கின்றன; (அந்த வேதத்தில்)
கர்ம காண்டம் எனப்படுகிற பூர்வபாகமானது, தேவரீருடைய திருவாராதன முறைமையைச் சொல்லும் வகையில் முடிகின்றது;
பிரம காண்டம் எனப்படுகின்ற உபநிடத பாகமானது, தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள் ஆகிய இவற்றை
விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது;
எல்லா வேதங்களாலும் அறியக்கூடியவன் நானே,’ என்று தேவரீர் அருளிச் செய்ததும் உண்டேயன்றோ-)

இனி, உபாஸ்ய வஸ்து -வணங்குவதற்குரிய பரம்பொருள் யாது?’ என்றால்,-
ஜெகஜ் ஜென்மாதி -உலகத்தைப் படைத்தல் முதலிய முத்தொழில்கட்கும் -காரணமாய் இருக்கும் பொருள் எதுவோ,
அதுவே, வணங்கத் தக்க பொருள் என்று காரண வாக்கியங்கள் ஒருங்க விட்டு வைத்தன. ‘எங்ஙனே?’ என்னில்,
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி
யத்பிரயந்தி அபிஸம்விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் பிரஹ்ம’–தைத்திரீய. பிருகு. 1.-
(தத்விஜிஜ்ஞாஸஸ்வ’ என்ற தொடர்மொழியை ‘ததேவ விஜிஜ்ஞாஸஸ்வ’ என்று ஏவகாரத்தோடு கூட்டினால்,
அந்தப் பொருளையே தியானம் பண்ணுவாய்’ என்ற பொருள்)
எதனால் உண்டான பொருள்கள் பிழைத்திருக்கின்றனவோ, நாசத்தையடைந்து எதனிடத்தில் இலயப்படுகின்றனவோ,
அதனைத் தியானம் பண்ணுவாயாக; அதுதான் பரம்பொருள்,’ என்று கொண்டு,-
அல்லாத தத்துவங்களுக்கு – -மற்றைப் பொருள்கட்குத்–அ த்யேயதை- தியானம் பண்ணத் தகாததாகுகையை முன்னாக –
உலகத்திற்குக் காரணமாயுள்ள பொருளுக்குத் தியானம் பண்ணத் தகுந்ததாகுகையை விதித்துக் கொண்டு நின்றது;
காரணந்து த்யேயா -காரணப் பொருளே தியானம் செய்வதற்குரியது,’ என்னக் கடவதன்றோ?

ஸதேவ ஸோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்- சாந்தோக்யம்.
தியானம் செய்தற்குரிய அந்தப் பொருளை, சோமபானம் செய்வதற்குரிய ஸ்வேத கேதுவே! இந்த உலகமானது
படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று சொல்லக் கூடியதாய் இருந்தது,’ என்று ‘சத்’ என்ற சொல்லால் சொல்லி,
வேறு சாகைகளிலே நின்று,
ஆத்மா வா இதம் ஏக மேவ அக்ர ஆஸீத்’–ஐதரேயம்.
ஆத்ம சப்தத்தாலே சொல்லி, அந்த ஆத்ம சப்தமும் பலவிடங்களிலும் ஒட்டிக் கொள்ளலாயிருக்கையாலே,
பிரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர ஆஸீத்’-வாஜஸநேயம்.
அநேக பொருள்களைக் கூறுமாகையாலே’ என்றது, ‘பிரஹ்மம் என்ற சொல்,
வேதம் முதலிய பொருள்களைக் காட்டுமாகையாலே’
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா பிருதிவீ ந நக்ஷத்ராணி’ மஹோபநிஷத் .என்றபடி.
நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்று நாராயணன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாகச் சொல்லி நின்றது.

ஆனால் பின்னை ந சத் நச அசத் சிவ ஏவ கேவல:– ஸ்வேதாஸ்வதரம்.( ‘சத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின
சித்தினை. ‘அசத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின அசித்தினை. )
சம்பு : ஆகாச மத்யே த்யேய:– ஸ்வேதாஸ்வதரம்.-என்றும் ருத்ராதிகளுக்கு
காரணத்வமும் த்யேயதையும் விதியா நின்றதே – அவை செய்வது என் என்னில் –
உத்தேசியர்களாகச் சொல்லப்பட்டார்களே யாகிலும், சுத்தி குணத்தையுடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால்
அப்பெயர்களும் விசேஷ்யமான நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகிறவன் பக்கலிலே சென்று சேரும்.

( ‘நாராயணாத் பிரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே’, ‘த்ரயக்ஷ: சூல பாணி: புருஷோ ஜாயதே’ என்பனவற்றால் பிறப்பும்,
‘நபிரஹ்மாநே ஸாநோ’ என்றதனால் அழிவும், சிவனுக்குச் சொல்லுகையாலே ‘சிவ ஏவ கேவலம்’ என்ற காரணத்துவம் கூடாது.
‘சதபதத்திலே அஷ்டமூர்த்திப் பிராஹ்மணத்திலே, ‘பூதாநாம்பதி: ஸம்வத்ஸர உஷஸி’ என்பது முதலாகத் தொடங்கப்படும் வாக்கியங்களால்,
நான்முகனால் படைக்கப்படுதலும், பாவங்கள் நீக்கப்படுதலும், பெயர் வைக்கப்படுதலும் முதலாயின சிவனுக்குச் சொல்லப்படுதலால்,
தியானிக்கப்படுதலும் கூடாது,’ என்றபடி. ‘ஆயின், ‘பிரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா: தே ஸர்வே ஸம்பிரஸூயந்தே’ என்பதனால்,
விஷ்ணுவுக்கும் பிறப்புச் சொல்லப்படுகிறதே?’ எனின், அது, அநுவாத ரூபமாகையாலே, ‘அஜாயமாந:’ முதலிய விதி வாக்கியங்களுக்குத்
தகுதியாக, கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாயும் கர்ம பலன்களை அநுபவிக்காதவனாயும் தன் இச்சையாலே அவதரிக்கின்ற
சர்வேசுவரனுடைய அவதாரங்களைக் குறிக்கின்றது. ‘தஸ்யதீரா: என்பது முதலான சுலோகங்கள் இங்கே அநுசந்தேயங்கள்.
சிவன் முதலியோர்கட்கு இத்தகைய விதி வாக்கியங்கள் இல்லாமையாலே, பிறப்பு, கர்மங்காரணமாய் வந்தது என்றே கோடல் வேண்டும்,’ )

சம்பு சிவன் முதலிய பெயர்களை நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனுக்கு விசேஷணமாக்கிக் கூறியது போன்று,
நாராயணன் என்ற இந்தப் பெயரையும், சம்பு சிவன் முதலிய பெயர்களால் சொல்லப்படுகின்றவனுக்கு
விசேஷணமாக்கிக் கூறினாலோ?’ என்னில், சுத்தி குணத்தை உடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால்
அவற்றை இங்கே சேர்க்கலாம்; நாராயணன் என்னும் பெயர், காரண இடு குறிப் பெயராகையாலே,
வேறு பொருள்கட்குச் சேர்க்க ஒண்ணாது.

(ஆயின், சிவன், சம்பு முதலிய பெயர்களும் காரண இடுகுறிப்பெயர்களேயன்றோ?’ எனின்,
அவை, சாதாரண காரண இடுகுறிப் பெயர்கள்; இது, அசாதாரண காரண இடுகுறிப் பெயர்,’ என்க.
இதனை, ‘அத்யந்த யோகரூடி’ என்பர்.‘மோ, பங்கஜம்’ என்னும் பெயர்களைப் போன்று கொள்க.)

சிலர்க்கே உரியனவாய் அவர்கட்கே முடிவு செய்யப்பட்டனவாய் உள்ள பெயர்களை வேறு ஒருவர் பக்கலிலே
கொடுபோய்ச் சேர்க்கும்படி எங்ஙனே?’ என்னில்,
இந்திரன், பிராணன், ஆகாசம் என்னும் இப் பெயர்கள், அவ்வப் பொருள்கள் அளவில் முடிந்து நில்லாது,
அவற்றிற்கு உரிய நேர்ப் பொருள்களில் சென்று முடிந்து நிற்கின்றன அல்லவோ?’ ‘யாங்ஙனம்?’ எனின்,
இந்திரன் என்றால், இப் பெயர் உண்டாக்கப்பட்ட இந்த இந்திரனைக் காட்டுதலோடு அமையாது,
சர்வேஸ்வரன் பக்கலிலே சென்று முடிவு பெறுதலைப் போலவும்,
பிராணன் என்னும் பெயர், ஐவகைப்பட்ட பிராணன்களில் ஒன்றனைக் காட்டுதலோடு அமையாது,
பிராணனாய் இருக்கின்ற சர்வேஸ்வரன் பக்கலிலே சென்று முடிவுறுதலைப் போலவும்,
ஆகாசம் என்னும் பெயர், ஐம்பெரும்பூதங்களில் ஒன்றான ஆகாசத்தைக் காட்டுதலோடு அமையாது,
அவனளவும் காட்டுகிறாப்போலேயும்,
சம்பு சிவன் முதலிய பெயர்களும், சர்வேஸ்வரன் பக்கலிலே சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.
இனித்தான் பிரகாரவாசி சப்தங்கள் பிரகாரி பர்யந்தம் சென்று தத்தம் பொருளைச் சொல்லக் கூடியன ஆகையாலும்,
பிரகாரியான சர்வேஸ்வரன் பக்கல் சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.

இனி, ‘ததோயத் உத்தரதரம்’ என்று கொண்டு சொல்லுகிற இடத்தில் செய்வது என்?’ என்னில்,
கீழே சர்வேஸ்வரனைப் புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி,
அதற்கு மேலே ‘உத்தரதரம்’ என்னும் போது ‘புருஷோத்தமன் என்பதனைத் தெரிவித்ததாமத்தனை.
அங்ஙனம் கோடற்குக் காரணம் என்?’ என்னில், யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்பது ஸ்ருதி–
எந்தப் பரம்பொருளுக்கு ஒத்த தாயும் மிக்கதாயுமுள்ள பொருள் வேறு ஒன்றும் இல்லை,’ என்று கூறி வைத்து,
அதற்கு மேலே ஒன்று உண்டுகாண்’ என்னும் போது அறிவில்லாதவனாகச் சொன்னவனாமத்தனை;
முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை.
( ‘உஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்ற முன் வாக்கியத்தைப் ‘படிக்காத அறிவில்லாதவனுடைய வார்த்தை,’ என்றபடி.)
தஸ்மிந்யத் அந்த: தத்உபரஸிதவ்யம்-என்கிறது –இங்கு, ‘அந்த:’ என்பதற்கு, ‘உள்ளே
இருக்கிற வேறொரு தத்துவம்’ என்று பிற மதத்தினர் பொருள் கூறுவர்.
‘உள்ளே இருக்கின்ற கல்யாண குணங்கள்’ என்பது நமது சித்தாந்தம்.
சாந்தோக்ய உபநிஷதமும் இங்ஙனமே கூறாநிற்கும்; ‘தஹரோஸ்மிந் அந்த: ஆகாஸ: தஸ்மிந்’ -என்று சொல்வதால்
அவன் தன்னோபாதி குணங்களும் உபாஸ்யம் என்றது

இனித்தான் ஜகத் காரண வஸ்துவாய்க் கொண்டு உபாஸ்யமாவது என்றும் ஓக்க உண்டாக வேணும் இறே –
அதில் சம்ஹாரத்தில் -ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந பிரஹ்மா
நேஸாநோ நேமே த்யாவா பிருதிவீ ந நக்ஷத்ராணி’-என்று , மஹோபநிஷத்தும் .
ந சத் நச அசத் சிவ ஏவ கேவல:’என்றும் நாராயண சப்த வாச்யன் ஒருவனே உளனாகச் சொல்லி
பிரமனும் இல்லை, சிவனும் இல்லை’ என்று அவர்களை இல்லையாகச் சொல்லிற்றே அன்றோ
இனி, ‘மற்றைத் தேவர்களைக்காட்டிலும் அவர்களுக்கு ஓர் உத்கர்ஷம் -உயர்வு உளதோ?’ என்று ஐயப்படாமைக்கு –
நேமேயாவா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ ‘ஆகாயம் பூமி இல்லை; நக்ஷத்திரங்களும் இல்லை,’ என்று அவற்றோடு ஒக்க,
பிரமன் சிவன் என்னும் இவர்களையும்-சமாநாதிகரித்து ஒரு சேரச் சேர்த்துவிடுகிறது.
படைத்தலைக் கூறுமிடத்தும், ‘நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய். 7. 5 : 4.-என்று
ஒரு நீராக சமாநாதி கரித்துக் கிடக்கிறது

ஆக, இப்படிகளிலே மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையை அறுத்து,
(இலிங்கத் திட்ட புராணத் தீரும்,’ ‘விளம்பும் ஆறு சமயமும்’ என்றபாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி)
சர்வ ஸ்மாத் பரனாய்- எல்லாப் பொருள்களைக்காட்டிலும் உயர்ந்தவனாய் -நாயகன் அவனே’
சர்வ ஸ்ரஷ்டாவாய் -எல்லாப்பொருள்களையும் படைக்கின்றவனாய்க் -உலகோடு உயிர் படைத்தான்-
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -கல்யாணகுணங்கள் எல்லாவற்றையுமுடையவனாய் -‘வீடில் சீர்ப்புகழ்’
சர்வ ரக்ஷகனாய் -கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது?’
சர்வ அந்தர்யாமியாய் -எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய் -‘மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும்
நின்ற வண்ணம் நிற்க’
நாராயணன்-சப்த வாச்யனான – என்ற பெயரால்–‘நாராயணன் அருளே’- சொல்லப்படுகின்றவனான சர்வேஸ்வரன்
தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூடக்–இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே- கண்களுக்குப் புலனாகும்படி-விஷயமாம் படி –
திருநகரியிலே வந்து-ஸந்நிஹிதனானவன் – அண்மையிலே இருப்பவன் ஆனான்;
அவனை ஆஸ்ரயித்து – அடைந்து எல்லாரும் க்ருதார்த்தராய் – பயன் பெற்றவர்களாகப் போமின்,’
என்று அருளிச்செய்கிறார்.

(ஒன்றும் தேவும்’ என்ற இத்திருப்பதிகத்தில் திருமந்திரத்தின் பொருள் சொல்லப்படுகிறது,
முதல் இரண்டு திருப்பாசுரங்களாலே காரணத்துவத்தையும்,
மூன்றாந்திருப்பாசுரத்தாலே இரட்சகத்துவத்தையும்,
நான்காந்திருப்பாசுரத்தாலே சேஷித்துவ நிவர்த்தியையும்,
ஐந்தாம் பாசுரத்தாலே அந்நிய சேஷத்துவ நிவர்த்தியையும்,
ஆறாந்திருப்பாசுரத்தாலே நமஸ் சப்தார்த்தமான உபாயத்துவத்தையும்,
ஏழாந்திருப்பாசுரத்தில் ‘ஆடுபுட்கொடி யாதி மூர்த்தி’ என்கையாலே நாராயண பதத்திற்சொன்ன உபய விபூதி யோகத்தையும்,
எட்டாந்திருப்பாசுரத்தாலே நாராயண சப்தந்தன்னையும்,
ஒன்பதாந்திருப்பாசுரத்தாலே அவன் அடியார்க்கு அடிமைப்பட்டிருத்தலையும்,
பத்தாந்திருப்பாசுரத்தாலே கைங்கரியத்தையும் அருளிச்செய்திருத்தலால்,’ என்க.)

——————————-

ஏகோஹைவை நாராயண ஆஸீத் – நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்ற காரண வாக்கியப் பொருளை-
ப்ரக்ரியை அனுசந்தித்திக் கொண்டு, சர்வ ஸ்ரஷ்டாவான சர்வேஸ்வரன், மாத்ரு -தாய் சந்நிதி ஒழியக்
குழந்தை-பிரஜை – வளராதாப் போலே தன் சந்நிதி ஒழிய இவை ஜீவிக்க – வாழ மாட்டா என்று பார்த்துத்
திருநகரியிலே சர்வ ஸூலபனாய் – மிக எளியனாய் நிற்க,
வேறே ஆஸ்ரயணீய தத்வம் – அடையக்கூடிய பொருளும் ஒன்று உண்டு,’ என்று
தேடித் திரிகின்றீர்கோளே!’ என்று ஷேபிக்கிறார் -நிந்திக்கிறார்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று –
தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களும், மனிதர்கள் முதலான உயிர்களும்,
அண்டத்திற்குக் காரணமான மகத்து முதலான தத்துவங்களும் இவை ஒன்றும் இல்லாத அன்று’ என்னலுமாம்;
அங்ஙன் அன்றிக்கே, ‘காரியத்துக்குக் காரணத்திலே லயமாகச் சொல்லுகையாலே,
காரணபூதனான – காரணனாய் இருக்கிற தன் பக்கலிலே சென்று
ஒன்றுகின்ற தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று’ என்னவுமாம்.
சத் ஏவ -சத்து ஒன்றே இருந்தது’ என்னக் கடவது அன்றோ?

நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் –
பிரமனோடு கூடத் தேவ ஜாதியையும், அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும்
உயிர்களின் கூட்டத்தையும் படைத்தான்.
அல்லாதார் ஒருவனை ரஷிக்கும் இடத்தில் ஒரு கைம்முதல் கண்டு இது நமக்கு
ஒரு நாள் ஆகிலும் உதவும் என்று ஆயிற்று ரஷிப்பது –
வெறுமையே பச்சையாக ரஷிப்பான் சர்வேஸ்வரன் ஆயிற்று
(‘யத் தத் பத்மம் அபூத் அபூர்வம் தத்ர பிரஹ்மா வியஜாயத பிரஹ்மணஸ் சாபி ஸம்புத:
சிவ இதி அவதார்யதாம் சிவாத் ஸ்கந்த: சம்பபூவ ஏதத் சிருஷ்டி சதுஷ்டயம்’)

சர்வேஸ்வரன் சதுர்முகனை ஸ்ருஷ்ட்டித்தான் – நான்முகன் ஐம்முகனைப் படைத்தான்:
ஐம்முகன் அறுமுகனைப் படைத்தான்; ஆக இதுதான் பல முகமாயிற்றுக்காணும்.
நாட்டார் சிவனுக்கு உத்கர்ஷம் -உயர்வுகளைச் சொல்லி மயங்காநிற்கவும்,
இவர் அவன் பக்கல் ஒன்றும் காணாமையாலே, திருநாபிக் கமலத்தில் -அவ்யவதாநேந -நேரே பிறந்து
அதனாலே உண்டான ஏற்றத்தை யுடையவனாகையாலே, பிரமனை உபாதானம் பண்ணி – (முதலாக) எடுத்துச் சொல்லி,
ருத்ரனைத் தேவ சாமான்யத்திலே -கூட்டத்திலே சேர்த்துப் பேசுகிறார்.

சம்ஹாரத்தில் மகத்து முதலானவைகள் அளவும் சொன்னார்–
படைப்பில் பிரமன் தொடக்கமாகச் சொன்னார்; இதற்குக் கருத்து என்?’ என்னில்,
மகத்து முதலான தத்துவங்களிலே பரத்வ சங்கை பண்ணுவார் இலர்;
அறிவில்லாத மக்களாய்-பாமரராய் – இருப்பவர்கள் பிரமன் முதலாயினார் பக்கல் பரத்வ சங்கை பண்ணுவார்கள்;
அதற்காக அவ் விடமே பிடித்துக் கழிக்கிறார்.
நன்று; நித்யமான உயிர்களைப் ‘படைத்தான்’ என்றல் என்?’ எனின்,
போக மோக்ஷங்கள் விளைத்துக்கொள்ளுகைக்குக் கரண களேபரங்களைக் கொடுத்தலைத் தெரிவித்தபடி.

சதுர்தச புவன ஸ்ரஷ்டாவோடு -அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டிக்குக் கடவரான தச பிரஜா பதிகளோடு –
அவர்களுக்கு போக ஸ்தானமான லோகங்களோடு -அவர்களுக்கு குடி மக்களான மனுஷ்யாதிகளோடு வாசி அறப் படைத்தான்

குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூரதனுள் நின்ற –
இப்படிப் படைத்தவன் தான்-அஸந்நிஹிதனாய்- தூரத்தில் உள்ளவனாய் நிற்கை யன்றிக்கே,
மலைகளைக் கொடுவந்து சேர வைத்தால் போலே இருப்பனவாய், மணி மயமான மாடங்களினுடைய
உயர்ச்சியை யுடைத்தான திருநகரியிலே நின்ற-
ஆசயா யதிவா ராம புநஸ் சப்தா பயேதிதி– பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவரோ என்னும் ஆசையால்
பல நாள் குகனோடுகூட அங்கே நின்றிருந்தேன்,’ என்னுமாறு போலே,
நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு ந நமேயம் -‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ?
அன்றிக்கே, ‘நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்காதொழிவர்களோ!’ என்று கொண்டு
அவசர பிரதீஷனாய் -காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி.
அங்குச் சேஷியைப் பெறுகைக்குச் சேஷ பூதனானவன் நின்ற நிலை;
இங்கு சேஷ பூதரைப் பெறுகைக்கு சேஷி நின்ற நிலை.

ஆதிப்பிரான் நிற்க –
இப்படி உங்கள் பக்கல் ஆசையாலே திருநகரியிலே நித்யவாசம் செய்கிற இவனை விட்டு

மற்றைத் தெய்வம் நாடுதிரே –
தேடித் திரியுமது ஒழியப் பற்றத் தகுந்தவர்கள் -ஆஸ்ரயணீயர் -கிடையார்.
வாஸூதேவன் பரித்யஜ்ய யோந்யம் தேவம் உபாஸதே த்ருஷிதோ ஜாஹ்ன வீதீரே கூபம் கநதி துர்மதி –
எவன், வசுதேவன் புத்திரனான ஸ்ரீ கிருஷ்ணனை விட்டு வேறு தேவனை வணங்குகிறானோ,
அந்த மூடன், நீர் வேட்கையுடைய ஒருவன் புத்தியில்லாதவனாய்க் கங்கையின் கரையிலே
கிணறு தோண்டுகின்றான் என்பவனோடு ஒப்பன்,’ என்கிறபடியே,-
த்ருஷிதனானவன் – ‘நீர் வேட்கையுடைய ஒருவன், கங்கை பெருகி ஓடாநிற்க அதிலே அள்ளிக் குடித்துத்
தன் விடாய் தீரமாட்டாதே, அதன் கரையிலே குந்தாலி கொண்டு கிணறு தோண்டித்
தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாறு போலே,
ப்ராப்தனுமாய் -அடையத் தக்கவனுமாய் –ஆதிப்பிரான்-
ஸூலபனுமாய் -எளியனுமாய்–‘திருக்குருகூரதனுள்-
ஸ்வாராதனுமாய் -யாதுமில்லா அன்று உயிர் படைத்தான்-
ஸூசீலனுமான -நின்ற’-
இவனை விட்டு –
அப்ராப்தராய் -அடையத் தகாதவராய் துர்லபராய் -அரியராய்
துராராதராய் -அரிதில் ஆராதிக்கக் கூடியவராய்த்
துஸ்சீலராய் -தீ நெறியையுடையராய், சீலித்து -வருந்தி ஆராதித்தாலும் –
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்குமாறு போலே பலிப்பதும் ஒன்று இன்றிக்கே இருக்கிற
திருவில்லாத்தேவரைத் தேடி ஆஸ்ரயிக்க அடைவதற்குத் திரிகின்றீர்கோளே!’ என்று ஷேபிக்கிறார் -நிந்திக்கிறார்.

நாட்டினான் தெய்வம் எங்கும், நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்;
கேட்டிரே நம்பு மீர்காள்! கெருட வாகனனும் நிற்கச்
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின் றீரே,’– திருமாலை, 10.

கல்லா தவரிலங்கை கட்டழித்த காகுத்தன்
அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் ;- பொல்லாத
தேவரைத் தேவரல்லாரைத் திரு வில்லாத்
தேவரைத் தேறேன்மின் தேவு.’- நான்முகன் திருவந். 53.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: