ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-3-7-

முதல் பாசுரத்தில் பிரார்த்தித்த கைங்கரியத்தைத் திருமலை தானே தரும்,’ என்கிறார்.
‘வீடு தரும்’ என்றால், ‘மோக்ஷத்தைத் தரும்’ என்பதன்றோ பொருளாம்?
கைங்கரியத்தைத் தரும் என்று பொருள் கூறல் பொருந்துமோ?’ எனின்,
பிராப்தி பலமாய் வருமது இறே கைங்கர்யம்-ஆகவே பொருந்தும்.

சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–3-3-7-

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு –
‘மா மலர் நீர் சுடர் தூபம் இவற்றைச் சுமந்துகொண்டு’ என்னவுமாம்.
அன்றி, ‘மா மலர் சுமந்து, நீர் சுடர் தீபம் கொண்டு’ என்னவுமாம்.
ஆக, ‘ஒரு கருமுகை மாலையே யாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சாத்தியருளக்கடவனே!
நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணியருளக்கடவனே!’ என்றிருக்கிற இவர்கள்-
ஆதார அதிசயத்தாலே – அன்பின் மிகுதியாலே கனத்துத் தோன்றுகிறதாதலின், ‘சுமந்து’ என்கிறார்.
இனி, அனுகூலன்- அன்புடையவன் இட்டதாகையாலே சர்வேஸ்வரன் தனக்குக் கனத்துத் தோன்றுமாதலின், ‘சுமந்து’ என்கிறார் என்னுதல்.
ஸ்ரீ புருஷோத்தமமுடையானுக்கு-ராஜ புத்ரன் -அரசகுமாரன் செண்பகப் பூக்கொண்டு அணிந்தபடியை நினைப்பது.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
ஸ்ரீ புருஷோத்தமமுடையான் செண்பகம் உகந்து அணிவர்; அரச குமாரர்கள் சிலர், செண்பகம் கொண்டு சாத்துவதற்குத் தேடி,
கடைகளிலே சென்று பார்க்க, முன்பே பூ எல்லாம் விற்றுப் போய் -ஒரு பூ இருக்கக் கண்டு,
அப்பூவுக்கு ஒருவர்க்கொருவர் செருக்காலே விலையை மிகமிக ஏற்ற,
அவர்களிலே ஒருவன் நினைக்க வொண்ணாதவாறு பொருளை மிகக் கொடுத்து அதனை வாங்கிக்கொண்டு வந்து சாத்தினான்;
அன்று இரவில் அவனுடைய கனாவில், ‘நீ இட்ட பூ எனக்குக் கனத்துச் சுமக்க முடிகிறதில்லை,’ என்று அருளிச் செய்ததைக் குறித்தபடி.

அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திருவேங்கடம் –
நித்ய ஸூரிகளும் சேநாபதியாழ்வானும் பொருந்தி இப்படி ஆராதனைக்கு வேண்டிய பொருள்களைக்கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங்கடம்.
இனி, ‘வானவர் வானவர் கோன்’ என்பதற்கு, ‘தேவர்களும் தேவர்கட்குத் தலைவனான பிரமனும்’ என்று பொருள் கூறலுமாம்.
இவர்கள் வேறு பலன்களை விரும்புகின்றவர்களாயினும், சேர்ந்த நிலத்தின் தன்மையாலே
அநந்யப் பிரயோஜனர்களாக மாறுகிறார்களாதலின், ‘அமர்ந்து’ என்கிறார்.
இப்படிச் சமாராதன உபகரணங்களைக் கொண்டு வணங்கி எழுவர்களாயிற்று.
‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்கிற தமது வாசனை அவர்களுக்கும் உண்டு என்று இருக்கிறாராதலின் ‘நமன்று எழும்’ என்கிறார்.

நங்கட்கு –
கைங்கரிய ருசியையுடைய நமக்கு.

சமன் கொள் வீடு தரும் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி ‘பிரஹ்மத்தையறிந்தவன் பிரஹ்மம்போல ஆகிறான்,’ என்றும்,
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி ‘பிரஹ்ம வித்தையால் குற்றம் அற்றவன் பூர்ண ஒப்புமையையடைகிறான்,’ என்றும்,
மம சாதர்ம்ய மாகத ‘இந்த ஞானத்தையுடையவர்கள் எனக்குச் சமமான உருவம் முதலியவற்றை அடைந்தவர்கள்,’ என்றும்,
‘தம்மையேயொக்க அருள் செய்வர்,’ என்றும் சொல்லுகிறபடியே,
அவன், ‘அவனோடு-சாம்யா பத்தி ரூபமான – ஒத்ததாகை யாகிற மோக்ஷத்தைத் தரும்’ என்னுதல்;
ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே ‘இவ்வாத்மாவானது சரீரத்தை விட்டுக் கிளம்பி ஒளியுருவமான பிரஹ்மத்தையடைந்து
தனது உருவத்தோடு கூடுகிறான்,’ என்கிறபடியே,
‘இவ்வாத்மாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான -அனுரூபமான -மோக்ஷத்தைத் தரும் என்னுதல்;
இனி, ‘திருமலைதானே தன்னோடு ஒத்த பேற்றைப் பண்ணித் தரும்,’ என்னுதல்; என்றது,
‘திருமலையாழ்வார்தாம் திருவேங்கடமுடையானைத் தம் திருமுடியிலே எழுந்தருளுவித்துக்கொண்டன்றோ இருப்பது?
அப்படியே ‘நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து’ என்று இவர் வேண்டிக்கொண்ட பேற்றைத்
திருமலையாழ்வார் தாமே தந்தருளுவர்,’ என்றபடியாம்.
(சமன் கொள் வீடு’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.
முதற்பொருளும், மூன்றாவது பொருளும் சாம்யாபத்தி ரூபமான மோக்ஷம் என்பது.
இரண்டாவது பொருள், ஸ்வரூபத்துக்குத் தகுதியான மோக்ஷம் )

தடங்குன்றம் –
திருவேங்கடமுடையானுக்குத் தன் விருப்பின்படி-ஸ்வைர சஞ்சாரம் பண்ணலாயிருக்கும்படி இடமுடைத்தாயிருக்கை.
‘ஸூபக: – வீறுடைத்தாயிருக்கை.
கிரிராஜ உபம: – திருமலையோடு ஒத்திருக்கை.
யஸ்மிந்வஸதி – அதற்கு ஹேது சொல்லுகிறது.
காகுஸ்த்த: – போகத்துக்கு ஏகாந்தமான இடம் தேடி அனுபவிக்கும் குடியிலே பிறந்தவர் விடாதே விரும்பி வசித்தார் என்பது யாதொன்று உண்டு?
குபேர இவ நந்தநே – துஷ்ட மிருகங்கள் மிகுதியாகவுள்ள தேசத்திலே செருக்கனான குபேரன்
போது போக்குகைக்காகத் தன் உத்தியானத்திலே உலாவுமாறு போன்று சஞ்சரித்தார்.’

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: