ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-3-1-

மூன்றாம் பத்து -மூன்றாந்திருவாய்மொழி – ‘ஒழிவில் காலம்’-பிரவேசம்

‘நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்று அவனைக் கிட்டித் தம்முடைய சொரூபம் பெற்றவாறே,
சொரூபத்திற்குத் தகுதியான அடிமை பெறவேணும் என்று பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
பிரகிருதி சம்பந்தத்தால் வந்த கரண சங்கோசத்தை அநுசந்தித்து நினைத்த வகைகளெல்லாம் பரிமாறப் பெறாமையாலே நொந்து,
‘அவன் முதலிலே இதனைத் தவிர்த்துத் தன்னை யனுபவித்தற்கு உறுப்பாகப் பல உபாயங்களைப் பார்த்து வைத்தான்;
அவற்றிற்குத் தப்பினேன்; அவதாரங்களுக்குத் தப்பினேன்; உயிருக்குள் உயிராயிருக்கும் தன்மைக்குத் தப்பினேன்;
இப்படி அவன் பார்த்து வைத்த வழிகள் அடைய தப்பின யான், இனிக் கிட்டி அனுபவித்தல் என்று ஒரு பொருள் உண்டோ?
இழந்தேனேயன்றோ!’ என்று ஆசையற்றவராய் முடியப் புக,
‘வாரீர் ஆழ்வீர்! நாம் உமக்காக அன்றோ திருமலையில் வந்து நிற்கிறது?
உம்மை இவ்வுடம்போடே அனுபவிக்கைக்காக இங்கே வந்து நின்றோமே!
நீர் அங்குச் சென்று காணக்கூடிய காட்சியை நாம் இங்கே வந்து காட்டினோமே!
இனித் தான் , உம்முடைய இவ்வுடம்பு நம்முடைய அனுபவத்துக்கு விரோதியுமன்றுகாணும்;
நீர் தாம் கரண சங்கோச அனுசந்தானத்தாலே நோவு படுகிறீராகில், முதலிலே இது இல்லாதாரும்
நம்மை யனுபவிக்கும்போது படும் பாடு இது காணும்;
அவர்களும் வந்து அனுபவிக்கிற இடங்காணும் இத்திருமலை;
ஆன பின்னர், நீரும் இவ்வுடம்போடே நினைத்த அடிமைகளெல்லாம் செய்யும்,’ என்று தான்
திருமலையிலே வந்து நிற்கிற நிலையைக்காட்டிச் சமாதானம் பண்ண, ஸமாஹிதராய் -சமாதானத்தையடைந்தவராய்,
அடிமை செய்யப் பாரிக்கிறார்.

‘யாங்ஙனம்?’ எனில், தர்மி ஒன்றே ஆகையாலே, விஷயம் எங்கும் ஒக்கப் பூர்ணமான பின்பு,
ஒரு தேச விசேஷத்திலே சென்றால் செய்யக்கூடிய அடிமைகளெல்லாம்
இந்நிலத்திலே செய்யலாம்படிக்குத் தகுதியாகக் குறையற்றிருந்ததாகில்,
நமக்கும் இவ்வுடம்பு விரோதியாதலின்றி அடிமை செய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில்,
இனித்தான் அங்குப் போனாலும் –சோஸ்னுதே சர்வான் காமான் அவன் கல்யாண குணங்களனைத்தையும்
முற்றறிவினனான அவனோடு அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது?
அந்தச் சௌலப்யம் முதலிய நற்குணங்கள்தாம்-ஸ்பஷ்டமாக விளங்கிக் காணப்படுவதும் இங்கேயாகில்,
இனி அங்குள்ளாரும் வந்து அடிமை செய்வதும் இங்கேயாகில், நாமும் அங்கே சென்று புக்கு அடிமை செய்வோம்,’ என்று கொண்டு,
பசியுமிருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று,
இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார்.
‘பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின்,
இவ்விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது;
அஹம் சர்வம் கரிஷ்யாமி -‘நான் எல்லாக்காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி?
போஜன பரனாய் இருக்குமவன் -உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன்,
ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மநோ ரதம்.

——————————————

திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சர்வ தேச -சர்வ கால -சர்வ அவஸ்தைகளிலும்-
ஸர்வவித எல்லா அடிமைகளையும் செய்ய வேண்டும்,’ என்கிறார்.

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-

ஒழிவு இல் காலம் எல்லாம் –
முடிவில்லாத காலமெல்லாம்.-அநந்தமான காலம் எல்லாம் -என்றபடி .
இது, இனி வருகின்ற காலத்தைக் குறிக்கின்றது-
இதற்கு, ‘இதுகாறும் கழிந்த காலத்தையுங்கூட்டி அடிமை செய்யப் பாரிக்கிறார்’ என்று-அதிபிரசங்கம்- மிகைபடக் கூறுவாருமுளர்.
அங்ஙனேயாயின், ‘கழிந்த காலத்தை மீட்கை’ என்று ஒரு பொருள் இல்லையேயன்றோ?
நோ பஜனம் ஸ்மரந் ‘ஜனங்களின் நடுவிலிருந்தும் இச்சரீரத்தை நினையாமலே நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கிறான்,’ என்கிறபடியே,
கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையே யன்றோ உள்ளது?
ந மே துக்கம் -இத்யாதி -‘இது ஒன்றே எனக்குத் துக்கத்தைத் தருகிறது; அது யாதெனில்,
‘பிராட்டியினுடைய வயதானது வீணே கழிகின்றதே! போன காலத்தை மீட்க முடியாதே!’ என்று வருந்தினார் பெருமாள்;
ஆகையாலே, ‘இனி மேலுள்ள காலம் எல்லாம்’ என்பதே பொருள்.

உடனாய் –
காலமெல்லாம் வேண்டினதைப் போன்று, தேச-அனுபந்தமும் – சம்பந்தமும் அபேக்ஷிதமாயிருக்கிறது காணும் இவர்க்கு.
இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வன வாசத்திலும் அடிமை செய்தால் போலே.

மன்னி –
சர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும்,
படிக்கம் குத்துவிளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளை – அடிமைகளைச் செய்ய வேண்டும்.
இதனால்,-சர்வ அவஸ்தைகளையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது.
ரமமாணா வநே த்ரயே -‘பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் ஆகிய மூவரும், அழகிய பர்ணசாலையைக் கட்டிக்கொண்டு
காட்டில் மகிழ்ந்தவர்களாயிருந்தார்கள்,’ என்று இருவர்க்கு உண்டான அனுபவத்திலே மூவரைச் சொல்லுகிறார்;
அவ்விருவர்க்கும் பரஸ்பரம் சம்ச்லேஷத்தால் கலவியால் பிறக்கும் ரசம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே.
ஆக, ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்றது,
சர்வ காலத்தையும் சர்வ தேசத்தையும் சர்வ அவஸ்தைகளையும் நினைக்கிறது.
ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப்புக்கால்,
‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போது எல்லாம் பாடி,
மேல் போக மாட்டாமல், அவ்வளவிலே தலைக்கட்டிப் போவாராம்.

வழுவிலா அடிமை செய்யவேண்டும் –
அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.
எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,
‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;
ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.
ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.

ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி ‘ராஜந்’ என்ன,
அப்போது ஸ்வாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று விலலாப ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ?
இதனால், பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் ஸ்வாதந்திரியம் அநர்த்தம் என்று தோற்றும்.
மேலும், ஏபிஸ்ச ஸசிவைஸ் ஸார்த்தம் – சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார்
இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான்.
‘இவன் தம்பி’ என்று ஸ்வாதந்தரியம் மேற்கொண்டு, கண்ணழிக்கலாவது எனக்கு அன்றோ?
இவர்கள் சொன்னவற்றைச் செய்ய வேண்டுமே! இவர்கள் தாங்களே காரியத்தை விசாரித்து அறுதியிட்டு,
‘நீர் இப்படிச் செய்யும்’ என்று இவர்கள் ஏவினால் அப்படிச் செய்ய வேண்டி வருமன்றோ அவர்க்கு?
அவருடைய வ்யதிரேகத்திலே – பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில்,
தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில், ‘
நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல்
கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே.
போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.
‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ?
‘மயா-என்னாமல்’ – அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ?
‘ப்ராது: – பின் பிறந்தவன்’ – பஸ்மதாஸ் குருதான் சிகீ ‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி
எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி
தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி,
‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? அசேஷ ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது?
‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியில்லாதவனாயிருந்தேனோ?
ஆன பின்னர், நான் விரும்பியகாரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’
வழுவிலா அடிமை செய்யவேண்டும் –
ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது-இவருக்கு-

செய்ய –
’இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?
(‘தொழுது எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமிஃதே’ என்பன
போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.)
இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பர்யந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.
கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.
ஷூத்ர விஷய -‘சிற்றின்பம் நுகரவேணும்’ என்று புக்கால், இரண்டு தலைக்கும் ஒத்த ரசமான போகத்திற்கு
ஒரு தலையிலே பொருளை நியமித்து, போகத்திற்குரிய காலம் வருமளவும் லீலையாலே போது போக்கி,
போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவார்கள்;
இனி, ‘ஸூவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால்,
ஸ்வர்க்கே அபி பாத பீதஸ் யக்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருத்தி -‘ஸூவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக்
கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே,
அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்;
இனி, ஸூவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே
‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள்;
இப்படிச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவாய் அகங்கார மமகாரங்கள் அடியாக வரும் இவ்வனுபவங்கள் போலன்றி,
சொரூபத்தோடு சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும் நித்தியனாய், காலமும் நித்தியமாய், தேசமும் நித்தியமாய்,
ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷமாய்,
சிற்றின்ப விஷய அனுபவம் போன்று துக்கம் மிஸ்ரமாய் -கலந்ததாயிருத்தல் அன்றி,
நிரதிசய ஸூக ரூபமாய் இருப்பதொன்றன்றோ இது?

நாம் –
தம் திருவுள்ளத்தையும் கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்;
அன்றி, கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல்.
அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:
இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்?
அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று,
தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?

தெழி குரல் அருவி –
கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. திருஅருவியின் ஒலியும் கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு,
அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி,
இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது.
‘சிலைக்கை வேடர் தெழிப்பு அறாத’ என்று திருவேங்கட யாத்திரை போகிறவர்களைப் பறிக்கிற வேடருடைய
ஆரவாரமும் உத்தேஸ்யமாயிருக்கிறதன்றோ அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே?
ஆக, அங்குத்தைத் திருவேடர் பறிக்கிற ஆரவாரமுங் கூட உத்தேஸ்யமாயிருக்கும்போது இவர்க்கு
இந்தத் திருஅருவியின் ஒலியுங்கூட உத்தேஸ்யமாகச் சொல்லவேணுமோ?

(‘ஒளி துறந்தன முகம் உயிர் துறந்தெனத் துளிதுறந்தன முகில் தொகையும் தூயநீர்த்
தளி துறந்தன பரிதான யானையும் களி துறந்தன மலர்க் கள்ளுண் வண்டினே.

‘நீட்டில களிறு கைந்நீரின் வாய் புதல் பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரைபுனிற் றீன்ற கன்றையும் ஊட்டில கறவைகன் றுருகிச் சோர்ந்தவே.’ (கம். அயோத். 205. 212))

திருவேங்கடத்து எழில் கொள் சோதி –
‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது,’ என்று அவன் வந்து வசிக்கிற தேசம்.
‘பாங்கான நிலம் ஆயினவாறு என்?’ எனின், இச்சரீர சம்பந்தமற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே
போனால் இவன் செய்யக்கூடிய அடிமையை இந்நிலத்தில் இவன் செய்யலாம்படி அவன் வந்து வசிக்கின்ற தேசமாகையாலே என்க.

எழில் கொள் சோதி
அசன்னிஹிதனே -தூரத்திலுள்ளவனே-யாகிலும், மேல் விழ வேண்டும்படி வடிவழகு இருத்தலின், ‘எழில் கொள் சோதி’ என்கிறார்.

வேங்கடத்து எழில் கொள் சோதி
வானார் சோதியையும்
நீலாழிச் சோதியையும்
வ்யாவர்த்தித்து -வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ என்கிறார்.
வானார் சோதி, பகல் விளக்குப்பட்டிருக்கும்:
நீலாழிச் சோதி கடல்கொண்டு கிடக்கும்;
வேங்கடத்து எழில்கொள் சோதி, குன்றத்து இட்ட விளக்காயிருக்கும்;
‘வேங்கடமேய விளக்கே’யன்றோ? அந்நிலத்தின் தன்மையாலே அழகு நிறம் பெற்றபடி.

(‘திருவேங்கடத்து’ என்றதனால் சௌலப்யமும், ‘எழில்கொள் சோதி’
என்றதனால் வடிவழகும், ‘எந்தை’ என்றதனால் ஸ்வாமித்துவமும் போதருதல் காண்க.)

எந்தை –
விரூபனே -அழகில்லாதவனே-யாயினும் விடவொண்ணாதபடியிருக்கும் –
பிராப்தி -சம்பந்தத்தைத் தெரிவிக்கிறார்.
இனி, ‘சௌலப்யத்தாலும் அழகாலும் தம்மைத் தோற்பித்த படியைத் தெரிவிக்கிறார்’ எனலுமாம்.

தந்தை தந்தைக்கு –
பரம சேஷி –
எல்லார்க்கும் முதல்வன் என்றபடி.

இப்பாசுரத்தால், ப்ராப்ய பிரதானமான -கைங்கரியப் பிரதானமான திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்கிறார்:
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,
சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;
‘நாம்’ என்னுமிதனால், -பிரணவ ப்ரதிபாத்யமான -பிரணவத்தாற்சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது;
‘இது,சப்த – சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை.
‘தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்;
சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள்.
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.

(‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம்.
ஆக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின் பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன;
இங்குச் சொல்லப்படாத ‘நம’ பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.)

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: