ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-2-11-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யசித்தாருக்கு சரீர சம்பந்தம் அறுத்துக் கொடுக்கும் என்கிறார்
தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட,
‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்;
அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது.

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-

எல்லா உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை –
‘இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;
இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது;
அங்கு ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி.
இனி, ஏக அங்கம் விகலமானாலும் -‘உறுப்புகளில் ஒன்று குறையினும் -அங்க வை கல்யம் -உறுப்புக்குறைவு உண்டு அன்றோ?
அப்படியின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’-என்னுதல்.

குயில் கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் –
பிரகாரியானவன் தரித்து,
பிரகாரரான இவரும் தரித்து,
இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,
அங்கு உண்டான சோலைகளும் தரித்து,
அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு
அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,’ என்பதாம்.
அகால பலிநோ வ்ருஷ -‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களையுடையனவாயும்,
தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படியாயிற்று என்றபடி.

செயிர் இல் சொல் இசை மாலை –
குற்றமற்ற இயலையும் இசையையுமுடைத்தான மாலை;
ஈண்டுக் குற்றமாவது, சரீர சம்பந்தத்தோடே பொருத்தம் உண்டாயிருக்கச் சொல்லுதல்;
அது இல்லாத மாலை எனவே, பகவல்லாபம் ஒழியச் செல்லும்படியாயிருத்தல் செய்யச் சொன்ன மாலையன்று என்பதனைத் தெரிவித்தபடி.
‘எங்கு இனித்தலைப்பெய்வனே’ என்ற உக்திக்கு -வார்த்தைக்கு நினைவு தப்பியிருக்குமாகில், அது குற்றமேயன்றோ?
‘இப்பத்தும் செய்வது என்?’ என்னில்

உயிரின் மேல் ஊனிடை ஆக்கை ஒழிவிக்கும் –
ராஜபுத்ரனையும் -அரசகுமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற்போன்று, நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும்
தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.
இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;
‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்றபோதே ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.
‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின்,
பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச்செய்கிறார்.
ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?
இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

முதற்பாட்டில், ‘நீ தந்த கரணங்களைக் கொண்டு அனர்த்தத்தை விளைத்துக்கொண்ட நான் உன்னை வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ? என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘இப்படிச் சூழ்த்துக் கொண்ட பாவங்களைப் போக்கி, தேவரீரை நான் எப்போது வந்து கிட்டுவேன்?’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘இதற்கு முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரண களேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட
பாவங்கள் ‘நான் போக்கி வர’ என்றால் அது செய்யப்போகாது; இனி, நான் அறியாததாய் நீ அறிந்திருப்பதோர் உபாயத்தை அருளிச்செய்ய வேணும்’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘உன்னையொழிந்த வ்யதிரிக்தங்களிலே – வேறுபட்ட பொருள்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து,
உன் திருவடிகளிலே வாழ்ச்சியே யாம்படி செய்யவேணும்,’ என்கிறார்;
ஐந்தாம் பாட்டில், ‘அப்படிச் செய்யப் பார்த்திலையாகில், உன்போக்யதையை – இனிமையை எனக்கு எதற்காக அறிவித்தாய்? என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இல்லாத அன்று உண்டாக்கின அருமையுண்டோ, உண்டாக்கின இதற்கு ஒரு குண தானம் பண்ண ?’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘நம் படியறியாதே நாம் அவனை வெறுக்கிறது என்?’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘தீரக் கழியச் சாதன அனுஷ்டானம் பண்ணினேனோ , நான் இங்ஙனம் கூப்பிடுகைக்கு?’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘அந்த திரைவிக்ரம அபயதானத்துக்கும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்;
பத்தாம் பாட்டில், அவ்வளவிலே வந்து அவன் முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்;
நிகமத்தில் , பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

முன்னம் அழகர் எழில் மூழ்குங் குருகையர் கோன்
இன்ன அளவு என்ன எனக்கரிதாய்த்து – என்னக்
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து–திருவாய்மொழி நூற்றந்தாதி–21-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: