ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-2-1-

இரண்டாம் பத்து -இரண்டாந்திருவாய்மொழி – ‘முந்நீர்’-பிரவேசம்

பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே -சீராமப்பிள்ளை,
‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்குமதாய் நோவுபடுகிறாரல்லர்;
அவதாரங்களில் ஆசைப்பட்டுப் பிற்பாடர் ஆனோம்’ என்று நோவுபடுகிறாரல்லர்;
உகந்தருளின நிலங்களிலே ஆசைப்பட்டார்;
அவற்றிலும் திருமலையிலே அனுபவிக்க இழிந்து –
பின்னர் மேன்மேலென அனுபவிக்குமதொழிய இவர் இழந்து நோவுபடுகைக்குக் காரணம் என்?’ என்று கேட்க,
‘பரத்துவம் வியூகம் விபவங்களோடு அர்ச்சாவதாரத்தோடு வேற்றுமையறத் தர்ம ஐக்கியத்தாலே
விஷயம் எங்கும் பூர்ணமாக இருக்கும்.
குறைந்து தோன்றுகிற இடம் -ப்ரதி பத்தாக்களுடைய பிரதிபத்தி தோஷத்தாலே –
நினைக்கின்ற மக்களுடைய நினைவின் தோஷத்தாலே யாயிருக்கும்.
கடலருகே சென்று நின்றால் தன் கண்களாலே முகக்கலாமளவு இறே காண்பது ;
அப்படியே, அழகருடைய ஸுந்தர்யாதிகளை அனுபவிக்கப்புக்க இடத்தில் விளாக்குலை கொண்டு அனுபவிக்கலாய் இருந்தது இல்லை –
பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்க –
ஆஸ்யம் பிஹிதமானால் – வியாதியினாலே வாய் மூடப்பட்டால் அதனைக் குடிக்க முடியாது —
துடிக்குமாறு போன்று, விஷயமும் சந்நிஹிதமாயும் விடாயும் மிக்கிருக்கச்செய்தே,
அபரிச்சின்ன விஷய மாகையாலே பரிச்சேதித்து அனுபவிக்கவொண்ணாதொழிய நோவுபடுகிறார்.
ஆயின், ‘பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேணும் என்று வேண்டுவான் என்?’ எனின்,
‘இவ்வாறு அனுபவிக்க வொண்ணா தொழிந்தது விஷயத்தினுடைய -தவ்ர் ஜன்யத்தாலே – வைலக்ஷண்யத்தாலே வந்தது’
என்று அறிய மாட்டாது, தம்முடைய கரண சங்கோச நிபந்தனமாக வந்தது என்று அநுசத்தித்து.
‘அவன் தான் முதலிலே இத்தைக் கழித்துத் தன்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக-
ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினான் -(முந்நீர் ஞாலம் படைத்த)
ஸ்ருஷ்டமான ஜகத்திலே தான் வந்து அவதரித்தான்; (‘எம் வாமன’ )
அதற்குமேல் அந்தர்யாமி ரூபேண நின்று-(‘எங்கணும் நிறைந்த எந்தாய்’ ) சத்தா திகளை நிர்வஹித்தான்;
அவன் இப்படி உபகார பரம்பரைகளைப் பண்ண ,
நான் அவற்றையெல்லாம் அசத்துக்குச் சமமாக்கிக்கொண்டேன்-(‘ஆக்கையின் வழி உழல்வேன்);
இனி, நான் அவனைக் கிட்டுகை என்று ஒன்று உண்டோ?’ என்று
நிர்மர்யாத வ்யஸன சாகர அந்தர் நிமக்நராய் ‘முடிந்தேனேயன்றோ?’ என்று இவர் சோகிக்க-(எங்கினித் தலைப்பெய்வன்?’),
‘நீர் கரண சங்கோசத்தாலே வந்தது என்று சோகிக்க வேண்டா;
கரண சங்கோசமில்லாதாரும் நம்மை அனுபவிக்குமிடத்தில் இப்படியே காணும் படுவது-(சிந்து பூ மகிழும்’)’ என்று
இவர் இழவினை பரிஹரிக்கக் கோலி ,
‘நீர் நினைத்த வகைகளெல்லாம் பரிமாறுகைக்கு ஈடாக வடக்கில் திருமலையில் நின்றோம்;
அங்கே கிட்டி அனுபவியும்,’ என்று தான் அங்கு நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் பண்ண, –
ஸமாஹிதராய்த் தலைக்கட்டுகிறார்-(‘நிலை பெற்று என் நெஞ்சம்’).

‘ஆயின், தெற்குத் திருமலையிலே நிற்கிற நிலையை அனுபவிக்க நினைத்துப் பெறாமல் நோவுபட்ட இவரை
வடக்குத் திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் செய்தபடி என்?’ என்னில்,
முலை வேண்டி அழுத குழந்தைக்கு முலையைக் கொடுத்துப் பரிஹரிக்கும் இத்தனையேயன்றோ?
(‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய அணங்கு’–பெரிய திருமடல்))
‘நன்று; இன்ன முலையைத் தரவேண்டும் என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்ற வேண்டாவோ?’ என்னில், வேண்டா;
இவர் தாம் வழி திகைத்து அலமருகையாலே
‘அதுவே வேணும்; அது அன்று இது,’ என்கிற தெளிவில்லை ஆயிற்று இவர்க்கு.
மற்றும், ‘ஒரு பொருள்தானே ஒருபோது தாரகமாய், மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணாநின்றோம்;
பசியில்லாத காலத்தில் பாதகமான சோறு தானே அது கழிந்தவாறே தாரகம் ஆகாநின்றதே?
‘இவர்க்கு இன்னது இன்ன போது தாரகமாம்: இன்னது இன்ன போது பாதகமாம்’ என்று தெரியாது;
குணங்களின் ஆவிஷ்காரத்தாலே தரிப்பித்துக்கொண்டு செல்லுகிற ஈஸ்வரனுக்கும்
தரித்த இவருக்கும் தெரியுமத்தனை இதுதான்.
ஆரியர்கள் இழந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிற நீர்மை அங்கு;
கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகம் கொடுத்த நீர்மை உண்டே இங்கு.

——————————–

ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி , உன்னை வழிபடுகைக்கு உறுப்பாகக்
கரண களேபரங்களைக் கொடுத்துவிட்டாய் நீ;
நான் அவற்றை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கெட்டுப்போனேன்;
இங்ஙனமிருக்கிற நான் உன்னை வந்து கிட்டுவதொரு நாள் சொல்ல வேண்டும்,’ என்கிறார்.

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே!
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்;
வெம்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?–3-2-1-

முந்நீர் –
ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷ ஜலம் -மழைநீர் என்னும் மூன்று நீரையுடையதாதலின் ‘முந்நீர்’ எனப்பட்டது.
இனி, அப ஏவ ச சர்ஜ்ஜாதவ் ‘இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே,
முற்பட ஜல ஸ்ருஷ்டியைப் பண்ணி – பின்பு இறே அண்ட ஸ்ருஷ்டி தான் பண்ணிற்று , –
முந்நீர் -முன்னே படைத்த நீர் என்னுதல்.

ஞாலம் படைத்த –
விசித்திரமாக ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணின -தயநீய தசையைக் கண்டு,
இவை கரண களேபரங்களைப் பெற்றுக் கரை மரம் சேர வேணும்’ என்று தயா பரதந்த்ரனாய் ஸ்ருஷ்டித்த படி –

எம் முகில் வண்ணனே –
அவன் சர்வ விஷயமாக உபகரிக்கச் செய்தே அவ்வுதவியைத் ‘மதர்த்தம் என்றிருக்கிறார் இவர் ( செய் நன்றியறியுமவராதலின். )
ஒருவன் சாதநாநுஷ்டானங்களைப் பண்ணி வர்ஷிப்பிக்க நாடு வாழ்ந்து போமா போல ,
அவன் எனக்காக ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ணினான் ; நாடு வாழ்ந்து போயிற்று என்று இருக்கிறார்.
சர்வ விஷயமாக உதவி செய்தபடியும், பிரதியுபகாரங்கொள்ள இராமையும் நோக்கி, ‘முகில் வண்ணனே’ என்கிறார்.
(வண்ணம் என்பது ஈண்டுத் தன்மையைக் குறித்தது; நிறம் அன்று.)

அந்நாள் –
கரண களேபர விதுரராய் , தமோ பூதமாய் -தயநீய தசையைப் ப்ராப்தமாகக் ,கிடந்த அந்நாள்.

நீ –
இத்தசையிலே ஏகாகீ ந ரமேத ‘பிரகிருதியில் லயப்பட்டிருந்த அக்காலத்தில் ஆத்ம வர்க்கமில்லாமையால்
அவன் தனியனாக மகிழ்ச்சியடைந்தானில்லை,’ என்கிறபடியே, இழவு உன்னதாக முகங்காட்டின நீ.

தந்த –
திருவடிகளிலே தலைசாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக உடம்பை உபகரித்த
இனி, ‘நீ தந்த’ என்பதற்குப் ‘பரம தயாளுவான நீதந்த;
அதாவது, ‘இவை ஆர்த்தியாது இருக்கச் செய்தே தனது தயையாலே தந்த இத்தனை,’ என்னுதல்.
துர்லபோ மானுஷம் தேஹ -என்றும் -மானுஷம் ப்ராப்ய -இத்யாதி –
‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்? கர்ம அனுகுணமாய் அன்றோ ஸ்ருஷ்ட்டி இருப்பது?’ என்னில்,
ஸ்ருஷ்டிப்பது கர்மங்களை கடாக்ஷித்து ஆகிலும் , யௌகபத்யம் அனுக்ரஹ காரியம்;
ஒவ்வொரு கால விசேஷங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை இறே
அசித் அவிசேஷிதான் பிரளய சீமனி சம்சரத கரண கலேபரைர்க் கடயிதும் தயமான மநா ( ‘வரதனே! பிரளய காலத்தில்
அசேதனத்திற்காட்டிலும் வாசி அற்றவர்களாய்த் துவள்கின்ற ஆத்மாக்களை இந்திரியங்களோடும் சரீரங்களோடும் சேர்ப்பதற்கு
விரும்பித் திருவுள்ளமிரங்கி உன்னுடைய சங்கல்பத்தின் வசப்பட்டு மூலப்பகுதியை ‘மஹாந்’ என்ன, அகங்காரமென்ன,
‘ஐம்பூதங்கள்’ என்ன, ‘இந்திரியங்கள்’ என்ன இவற்றினுடைய வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி செய்தாய்,’ )என்றார் பட்டர்.

ஆக்கையின் வழி உழல்வேன் –
நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்;
நான் -அதன் -சரீரத்தின்- வழியே போந்தேன்.
‘தெப்பத்தை நூக்கிச் சென்று பெருமாளை அனுபவிக்கலாயிருக்க,
‘சரீரம் பாங்கன்று’ என்று நீரின் வாக்கிலே போய்க் கடலிலே புகுவாரைப் போலே,
இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் அனர்த்தத்தை விளைத்துக் கொண்டேன்,’ என்கிறார் என்பர் எம்பார்.

வெந்நாள் –
சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தால் போலே
தோற்றா நின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார்.
இனி, பகவத் விஸ்லேஷத்தோடே இருக்கையாலே, நெருப்பை ஏறட்டினாற் போலே இருக்கிறதாதலின் ‘வெம்நாள்’ என்கிறார். என்னுதல்.

நோய்-
பிறவி. இனி, ‘பகவானைப் பிரிந்த பிரிவாலுளதாய நோய்’ என்னுதல்.
‘ஆயின், நோய் என்பது பிரிவாகிய நோயினைக் காட்டுமோ?’ எனின்,
ஸ்ரீபரதாழ்வானுடைய நோய் என்றால் சாதுர்த்திகமாயிராது இராம விரகத்தாலே யாயிருக்குமே?
அப்படியே இவர் நோயும் பிரசித்தங்காணும்.

வீய –
முடிய.

வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் –
ராக்ஷஸா நாம் ஷயம் க்ருத்வா ஸூதயித்வாச ராவணன் லங்காம் உன்மூலிதாம் க்ருத்வா கதா த்ரஷ்யதி மாம் பதி
(‘என் கணவர், இராக்கதர்களுக்கு அழிவினைச்செய்து, இராவணனையும் கொன்று, இலங்கையையும் வேரோடு அழித்து,
எப்பொழுது என்னைப் பார்ப்பார்?’ என்று பிராட்டி கூறியது போன்று) இவரும் மநோ ரதித்து
விஸ்லேஷ வ்யசனத்துக்கு அடியான அவித்யாதிகளை வாசனையோடே போக்கி எந்நாள் இனி வந்து கூடுவன்?’ என்கிறார்
‘பாய்ந்து’ என்பதில்
சினம் தோற்றுகிறது. ‘ஒரு சர்வ சத்தி செய்யுமதனை யான் செய்யவோ?’ என்கிறார். .
எந்நாள் –
எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை;
இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். –
பூர்ணே சதுர்தசே வர்ஷே -பதினான்கு வருடங்கள் நிறைந்திருக்க, பஞ்சமி திதியன்று’ என்னுமா போலே , ‘
யான் –
நீ தந்த கரணங்களை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உடலாக்கி அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்ட யான்.
உன்னை –
‘நான் விளைத்துக்கொண்ட அநர்த்தத்துக்குப் போக்கடி சொல்லாய்’ என்று வளைக்கலாம்படியாயிருக்கிற உன்னை.
இனி –
நீ தந்த கைம்முதலை அழித்துக்கொண்ட பின்பு.
இனி வந்து கூடுவனே –
‘இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.
எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்;
ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச்செய்வர்.
ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: