ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-6-

எங்குலக்க ஓதுவன்?’ என்றார்; ‘வேதங்கள் நம்மைப் பேசா நின்றனவே, உமக்குப் பேசத் தட்டு என்?’ என்ன,
‘அவையும் இவ்வளவன்றோ செய்தது?’ என்கிறார்.

ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் வுலகத்து எவ் வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகை யல்லால் பிறிது இல்லை;
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொலி யான் வாழ்த்துவனே!–3-1-6-

ஓதுவார் ஓத்து எல்லாம் –
ஓதுவார் என்கையாலே, அதிகாரிகளின் பாகுபாட்டினைச்-வைவித்யத்தைச் சொல்லுகிறது.
ஓத்தெல்லாம் என்கையாலே, இருக்கு முதலான நான்கு வேதங்களையும் குறிக்கிறார்.
ஆக, ஓதுவார்கள்-அத்யேத்ரு- பேதத்தாலே பல வகைப்பட்ட கிளைகளாய்ப் பிரிவுண்ட வேதங்களெல்லாம் என்றபடி.

எவ்வுலகத்து எவ்வெவையும் –
எல்லா உலகங்களிலுமுண்டான எல்லாம். ஸ்வர்க்க லோகத்திலும் பிரஹ்மலோகத்திலும்
அங்குள்ள புருஷர்களுடைய-ஞானாதிக்யங்களுக்குத் -ஞானத்தின் மேம்பாட்டிற்குத்- தக்கபடியே அவையும் பரந்திருக்குமேயன்றோ?
ஸ்ரீராமாயணம் என்றால் பிரஹ்மலோகத்தில் அநேகம் கிரந்தங்களாக இருக்கவும்,
இங்கே இருபத்து நாலாயிரமாய் இருக்கின்றது; ஆதலின், ‘எவ்வுலகத்து எவ்வெவையும்’ என்கிறார்.

சாதுவாய் –
சொற்களுக்குச் சாதுத்தன்மையாவது, -அர்த்தத்துக்கு போதகமாய் -பொருளைக் காட்டவற்றாய் இருக்கை.
அன்றி, ‘சாதுவான புகழ்’ என்று-குண விசேஷணம் – குணங்கட்கு அடைமொழியாக்குதலும் ஆம்.

சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிதில்லை –
உன்னுடைய கல்யாண குண விஷயமான இத்தனை போக்கிப் புறம்பு போயிற்றில்லை;
விஷயம் தன்னை -கல்யாண குணங்களை எங்குமொக்க விளாக்குலை கொண்டதுமில்லை.
(விளாக்குலை கொள்ளுதல் – எங்கும் ஒக்க நிறைதல். ‘விளாக்குலை கொண்டதுமில்லை, புறம்பு போயிற்றதுமில்லை,’ என்றபடி-
“தனக்குச் சத்தைசித்திப்பதே பலம்,’ என்றபடி.)
வர்ஷ பிந்தோர் இவாப்தவ் சம்பந்தாத் ஸ்வாத்ம லாப ஸ்ரீரங்கராஜ ஸ்தவம். 1 : 12.-என்னுமா போலே
‘கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தால்,
கடலை எங்கும் வியாபிக்க மாட்டாதே? அதைப்போன்று தன் சத்பாவத்துக்கும் அழிவில்லை,’ என்றபடி.

( ஆக, ‘சாதுவாய்’ என்றதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்தபடி.
ஒன்று, பொருளை இருந்தபடியே காட்டுதல்;
இரண்டு சாதுவான புகழ் என்று புகழுக்கு அடைமொழி;
மூன்று, சத்தை பெறுகைக்காக என்றபடி. சத்பாவம் – உண்மை.)

போது வாழ் புனந்துழாய் முடியினாய் –
பூவையுடைத்தாய், தன்னிலத்திலே நின்றாற்போன்று செவ்வி பெற்று வாழாநின்றுள்ள திருத்துழாயைத்
திரு அபிஷேகத்தில் உடையவனே! ’திருத்துழாய் பூ முடி சூடி வாழாநிற்கிறது’(ரசோக்தி.) என்றபடி.
இவ் வொப்பனை என்னால் பேசலாயிருந்ததோ!

பூவின்மேல் மாது வாழ் மார்பினாய் –
தாமரைப்பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வர்த்திக்கும் – வசிக்கின்ற மார்வையுடையவனே!
இவ் வொப்பனையை ஒப்பனையாக்கும் அவளுடைய சேர்த்திதான் என்னாலே பேசலாயிருந்ததோ!
‘பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்குமன்றாயிற்று,
இவளும் இம் மார்வை விட்டுப் பிறந்தகமான தாமரையை நினைப்பது’ என்பார்,
‘பூவின்மேல் மாதுவாழ் மார்பினாய்’ என்கிறார்.
‘பிராட்டி பிரிந்திருக்கிலன்றோ வைத்த வளையம் சருகாவது?’ என்றபடி.

என் சொல்லி யான் வாழ்த்துவன் –
‘வேதங்களுங்கூட ஏங்குவது இளைப்பதாகா நிற்க,
இவ் வொப்பனைக்கும் இச் சேர்த்திக்கும் என்னால் பாசுரமிட்டுச் சொல்லலாயிருந்ததோ!’ என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: