இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பரமபதம் ஸூலபம் -எளிது,’ என்கிறார்.
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-
ஆள் செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் –
அடிமை செய்து சர்வேஸ்வரனைக் கிட்டினவர்.
முறையிலே சர்வேஸ்வரனைப் பற்றினவர் ஆயிற்று இவர். என்றது,
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் –வியக்கத்தக்க உடலின் சேர்க்கை ஈசுவரனுக்கு
அடிமை செய்யும்பொருட்டு’ என்கிறபடியே, அவன் கொடுத்த உபகரணங்களை -உறுப்புகளைக் கொண்டு-
அப்ராப்த – உலக விஷயங்களிலே போகாமல்,‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே,
வகுத்த விஷயத்துக்கே சேஷமாக்கி -உரியதாக்கிக்கொண்டு கிட்டினமையைத் தெரிவித்தபடி.
ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தால் போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
ஆட்செய்கையாவது, அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், காயிக- சரீரத்தால் செய்தல் என
அவ்வடிமைதான் மூன்று வகைப்படும்.
இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில்,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினை எம் பால் கடியும் நீதியாய்! நிற்சார்ந்து நின்று.’ பெரிய திருவந். 34’
என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமே யானால்.
(நெஞ்சு அழிந்தால் வாசிகமானதுதான் செய்யக்கூடுமோ?’ எனின், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்
சொல்லப்பட்ட காரணங்களையுடையவராகையாலே ‘மனம் முன்னே, வாக்குப் பின்னே’ என்னும் நியமம் இல்லை இவர்க்கு)
வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று;
அப்படியாமன்று இப்பாசுரம்; ‘முனியே நான்முகனே’ என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்;
இல்லையாகில், சர்வ ஸங்க்ரஹமான -எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலே யாகிலும் ஆக வேண்டும்;
இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.
ஆனால்,தேவதாந்த்ர பரத்வ நிரசன பூர்வகமாக –மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று
மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.
ஆனால், பரத்வ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலே யாதல்,
அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின்,
வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்;
அவற்றிலும் ஆகப் பெற்றதில்லை.
ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே,
திருக் குருகூரதனுள் பரன் திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று,
பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப் பெரியவன் என்று இவர் அருளிச் செய்யக் கேட்டு,
கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?
பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ?
சர்வேஸ்வரன் திரு அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத்
தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே,
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.
வண் குருகூர் நகரான் –
இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று.
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு;
இப்போது, பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு,
இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
(திரு குருகூர் பாசுரம் மட்டும் தான் மகிழ் மாலை–மொய்ம் மகிழான்
வகுளாபரணன் இவரே சொல்லி அருளி- தம்முடைய பெருமை அருளி / கலியன் -சீர்காழி)
மாறன் சடகோபன் –
பகவானை அடைவதற்குத் தடையாக -பகவத் பிராப்தி பிரதிபந்தகமான -உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர்.
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் –
தம்முடைய அபிநிவேச அதிசயத்தாலே -ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும்
இப் பத்தையும் வல்லார்.
சிலர் தாந்தராய் -ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது –
இரண்டும் இவர்கள் கையது.
மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது இவர்கள் கையது.
இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம்.
இப்பொருளில் ‘மற்றது’ என்பது அவ்யயமாய் -இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மா நகருக்கு அடைமொழியாக்கி, ‘
மற்றையதான – அதாவது, சம்சாரத்துக்கு -இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான
வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;
அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும்
இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.
ஒன்று மிலைத் தேவிவ் வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை—திருவாய்மொழி நூற்றந்தாதி–40–
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்