ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-6-1-

‘பரிவதில் ஈசனை’-பிரவேசம்
முதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை அனுபவித்தார்;
இரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை பஜியுங்கோள் வழிபடுமின்,’ என்றார்,
மூன்றாந்திருவாய்மொழியிலே, அப் பஜனத்துக்கு -அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும்,
நான்காந் திருவாய்மொழியிலே, அவனுடைய -அபராத சஹத்வத்தையும் பொறை யுடைமைக் குணத்தையும்,
ஐந்தாந்திருவாய் மொழியிலே, -அதற்கு உறுப்பாக -அவனுடைய சீல குணத்தையும் அருளிச்செய்தார்;
‘இவை எல்லாம் உண்டாயினும், -பரிமாற்றத்தில் அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே?’ என்ன,
‘அது வேண்டா; ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.

‘யாங்ஙனம்?’ எனின், 
ஷூத்ரரான – மிகச் சிறியோர்களான இம் மக்களாலே -ஷூத்ர உபகரணங்களை- மிகச் சிறிய பொருள்களைக் கொண்டு
சர்வேஸ்வரனான நம்மை அடைந்து தலைக் கட்டப் போகாமையாலே, கீழ் திருவாய்மொழியிலே, ‘தாழ்ந்தவன்’ என்று அகன்ற
இவரைப் பொருந்த விட்டுக் கொண்டோம்; ‘பெருந்த விட்டுக் கொண்டது தான் ஒரு பரிமாற்றத்துக்கு அன்றோ?
அதற்கு ஒரு பிரயோஜனம் கண்டோம் இல்லையே!’ என்று இருப்பான் ஒருவன் இறைவன்.
இனி, ‘சம்சாரியான இவனாலே நேர்கொடு நேர் ஆஸ்ரயித்து – அடைந்து தலைக்கட்ட ஒண்ணாதபடி, இறைவன் –
அவாப்த ஸமஸ்த காமனாய- ஒன்றிலும் விருப்பம் இல்லாதவனாய் இருக்கையாலும்,
இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாய் இருக்கையாலும்
இவ்விரண்டற்கும் காரணமாகத் திருமகள் கேள்வனாய் -ஸ்ரீயப்பதியாய் இருக்கையாலும்
இவன் அவ்விறைவனை ஆஸ்ரயித்து – அடைந்து ஆராதனை புரிதல் முடியாதே?’ எனின்,
அங்ஙனம் அன்று;
இவன் இடுவதற்கு மேற்படத் தனக்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி எல்லாம் கைப் புகுந்திருப்பான் ஒருவன் ஆகையாலும்,
இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனா யிருக்கையாலே இவன் பக்கல் பெற்றது கொண்டு
முகங்காட்டுகைக்கு அதுவே காரணமாய் இருக்கையாலும்,
திருமகள் கேள்வனாகையாலே ஸூசீலனாய் இருக்கையாலும்,
இப்படிகள் அனைத்தும் ஆஸ்ரயணீயத்துக்கு- அடைவதற்கு உறுப்புகளேயாகும் என்கிறார்.

ஆக, இவன், தன் ஸ்வரூப லாபத்திற்கு உறுப்பாக-கிஞ்சித்க்கரிக்கும் – தொண்டினைச் செய்வான்;
இதனை இறைவன் தன் பேறாக நினைத்திருப்பான் என்றபடி.
ஆதலால், மற்றைத் தெய்வங்களை அடைதல் போன்று, பகவானை அடைதல் -ஸமாச்ரயணம் -அருமைப் பட்டு இராது என்கிறார் என்றபடி.
மேலும், பகவானை அடைந்த அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்: பகவானை அடைதல்-கிலேச – துக்க ரூபமாய் இராது, –
போக ரூபமாய் -இன்ப மயமாய் இருக்கும்;
வருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது உபகரணமாக இருக்கும்;
பகவானைப் பற்றுதல் ஆகையாலே-ப்ரத்யவாய பிரசங்கம் – வணங்கும் முறைகளில் சிறிது பிறழினும் கேடு வருவதற்கு இடன் இல்லை;
திரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை;
இப்படி இருக்கையாலே இறைவனை ஆஸ்ரயணீயம் ஸூகரம் அடைதல் எளிது; ஆதலால்,-ஆஸ்ரயியுங்கோள் – ‘அடைமின்’ என்கிறார்.

உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய
முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;
மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம்.
த்வத் அங்கரி முத்திச்ச்ய – உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும்
இறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,
இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.
மேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,
இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், 
கேநசித் ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும்
என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், 
யதா ததா‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று
விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும், 
ஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம்
முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும், 
‘அஞ்சலி’என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற
அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும்,
அசுபானி  ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும், 
அசேஷத ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
சுபானி  ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
நஜாது ஹீயதே  ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்
அருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.

மற்றும்,முஷ்ணாதி  ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,
பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும், 
புஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி,
அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-

பத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,
தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.
இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;
அஸ்னாமி- இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்;
அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட
விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

அந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி ‘ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ணகும்பத்தைக்காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;
அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’
என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று.
நச்சேதி- இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே
அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும். 
ஏகாந்தகத புத்திபி ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால்
தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,
சிரஸா பிரதி க்ருஹ்ணாதி-தேவ தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம்.

இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ்
ஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,
அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,
ஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.
ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழில் அஞ்சு திருவாய் மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணங்களை அனுபாஷியா நின்று கொண்டு
இதில் ப்ரதிபாத்யம் ஸ்வ ஆராததை என்னுமத்தை சங்கா பரிஹார முகேன அருளிச் செய்கிறார் –
அயோக்கியன் என்று அகன்ற இவரைப் பொருந்த விட்டுக் கொண்ட ஸுசீல்ய குணத்தை அனுசந்தித்து
எல்லாரும் ஆஸ்ரயித்துப் பரிசர்யை பண்ணுகைக்கு இறே என்றபடி-
வள வேழு உலகின் முதலாய வானோர் இறையை -5-1-அவாப்த ஸமஸ்த காம்தவம் யுக்தம்
ஏத்தி வணங்கினால் -5-2-பரிபூர்ணத்வம்
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வன் -6-2-என்றதிலே அவாப்த ஸமஸ்த காமத்வமும் பூர்த்தியும் சொல்லுகிறது –
அதாவது நிரபேஷத்வமும்-அபேஷா ஸத்பாவே அபி பூர்ணன் -என்றபடி
திருமகளார் தனிக்கேள்வன் -6-9-என்றதை பற்ற ஸ்ரீ யபதியாய்-என்றது
புகை பூவே -என்றதை பற்ற அருமைப்பட்டு இராது என்றது –
கடிவார் தீய வினைகள் நொடியாருமளவைக் கண் -6-10-என்றும் -வல்வினை மாள்வித்து -6-8-என்பதையும் பற்ற
விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது –
உள் கலந்தார்க்கு ஓர் அமுது-6-5 –அமுதிலும் ஆற்ற இனியன் -6-6-என்றதை பற்ற போக ரூபமாய் இருக்கும்
பெற்றது உபகரணமாய் இருக்கும் என்றது புரிவதுவும் புகை பூவே என்றதை பற்ற -6-1-
முதல் இரண்டு பாட்டாலே த்ரவ்ய அதிகார நியமம் இல்லை என்றும்
மூன்றாம் பாட்டால் கால நியதி இல்லை என்றும் சொல்லுகிறது

———————————

எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்,’ என்கிறார்.

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஈசனை -பரமபதத்தில் இருக்கும் இருப்பை முந்துறச் சொல்லி அனந்தரம் –
புரிவதுவும் புகை பூவே -அவனுடைய ஸ்வாராததையைச் சொல்லுகையாலே
அவனுடைய பூர்த்தி என்று விவஷித்து பரிபூர்ணன் ஆகையால் என்கிறார்
புரிவதுவும் புகை பூவே -என்று த்ரவ்ய நியதி இல்லாமையைச் சொல்லுகிறது-

—————————-

பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்!
பிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-

பரிவது இல் –
துக்கம் இல்லாத.
‘நாம் இடுகிறவை அவன் ஏற்றுக்கொள்ளுவானோ, கொள்ளானோ!’ என்று இடுகிற இவன்
நெஞ்சிலே துக்கம் உண்டாம் அன்று;
அது இடப்படுகின்றவனுக்குத் துக்கமாம் ஆதலின், ‘பரிவது இல்’ என்கிறார்.
இனி, இதற்குப் ‘பக்ஷ பாதம் இல்லாத’ என்று பொருள் கூறலுமாம்;
அதாவது, ஒருவன்-குருவாக – அதிகமான பொருள்களைக் கொடுத்தால், அவன் பக்கல் அன்புடையனாய் இருப்பானாகில்,
அரிதல் அடையத்தக்கவன் என்று அடையப்படுகின்றவனுக்குக் குற்றமாம் அன்றோ?
அது இல்லை என்பார், ‘பரிவது இல்’ என்கிறார் என்றபடி.
இக் குற்றங்கள் இல்லாதபடி இருக்கையாலே ஹேயப்பிரத்ய நீகன் என்பதனைத் தெரிவித்தபடி.
ஹேயப்பிரத்ய நீகதை புக்க இடத்தே உப லக்ஷணத்தால் நற்குணங்களும் புகுமன்றோ?
ஆகவே, ஹேயப்பிரத்ய நீகதையும் கல்யாண குண யோகமும் அருளிச் செய்தாராயிற்று.
‘இங்ஙனம்,-தர தம விபாகம் பாராமல் – உயர்வு தாழ்வு பாராமைக்கு அடி என்?’ என்னில்,

ஈசனை –
‘வகுத்த ஸ்வாமி ஆகையாலே’ என்கிறார்.
புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும் போது நெடுநாள் பச்சை தேடி விருந்திட்டால்,
‘இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ!’ என்று நெஞ்சாறலோடே தலைக் கட்ட வேண்டி வரும்;
மகன் தமப்பனுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய் நெஞ்சாறல் பட வேண்டாத இருக்கலாம் அன்றே?
அப்படிப்பட்ட சம்பந்தத்தைப் பற்ற ‘ஈசன்’என்கிறார் என்றபடி.

பாடி –
சர்வேஸ்வரனைக் கிட்டினால் வாக்கு நியதியோடே நிற்கை யின்றி,
ஹர்ஷத்துக்கு -மகிழ்ச்சிக்குப் போக்கு விட்டுப் பாடி.

விரிவது மேவல் உறுவீர். 
ஏதத் சாம காயன் நமஸ்தே -‘மேற் சொல்லப் படுகின்ற சாம வேதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே,
பாடி விஸ்திருதர் ஆசையாகிற பேறு பெற வேண்டியிருப்பீர்!
‘பேறு கனத்து இருந்தது; நாங்கள் செய்ய வேண்டுவது என்?’ என்னில்,

பிரி வகை இன்றி –
பிரிகையாகிற வகை இன்றி; அதாவது, 
‘இமையோர் பலரும் முனிவரும், புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்,
உன் பெருமை மாசு உணாதோ?’ என்று அகல வகை இட்டுக் கொண்டு அகலாமல் என்றபடி.

நல் நீர் – -ஏலாதி ஸம்ஸ்காரமும் இன்றிக்கே -ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் கலப்பு இன்றி இருத்தல், ‘
கேவலம் தண்ணீரும் அமையும்,’ என்றவாறு.

தூய் –
விரும்பியவாறு தூவி. -யதா தாதாவாபி –

புரிவதுவும் –
இவன் இறைவனுக்கு அருட்கொடையாகக் கொடுக்குமதுவும்.

புகை பூவே –
அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும்.
இவ்விடத்தில், பட்டர் செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –
இங்ஙனம் அருளிச் செய்தவாறே,ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத் –
இறைவனுக்குக் கண்டங்கத்தரிப் பூவை அருச்சித்தல் கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,
அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்! 
‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று
இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத்
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே!
இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது இன்று என்பது விளங்குமே!

மற்றும், அப்ராக்ருத த்ரவ்யம் -பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்தான் வேண்டும் என்று இருந்தானாகில்,
‘புள்ளாய் ஓர் ஏனமாய்’ அவதரிப்பானோ! ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ?’ என்று அருளிச் செய்தார்.
பின்னர் ஸ்ரீ ‘நஞ்சீயர்’வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது 
‘ஸ்ரீ வராக நாயனார்க்கு முத்தக்காசை அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப் பட்டிருத்தலைக் கண்டதும்
‘இது என்ன மெய்ப்பாடு தான்!’ என்று போர வித்தராய் – மிகவும் ஈடுபட்டவரானார்.

உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே –
இப்படி அநுஸந்தியாதாருடைய ஹிருதயத்தை நினைத்திரோம் –
நாங்கள் பதின்மரும் என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களும் –

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பரிவதில் ஈசனை என்றத்தை பாடி விரிவது மேவலுறுவீர் -என்றத்துக்குச் சேர ப்ராப்ய பரமாகவும் –
நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே என்றத்துக்குச் சேர ப்ராபக பரமாகவும் யோஜிப்பது
ப்ராப்ய பாரமான பக்ஷத்தில் பருவத்தில் அகில சாம்சாரிக ஹேயபிரத்ய நீகதை – என்றும் ஈசனை -சேஷித்வமும்
ப்ராபகமான பக்ஷத்தில் ஈசனை -ஸ்வாமித்வம்
விரிவது -விஸ்த்ருதராகை / மேவல் -பெறுகை /ஆய் -அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு முத்தக்காசு -கோரைக்கிழங்கு –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: