ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-5-5-

ஆபிமுக்யம் பண்ணின அநந்தரம் – விரும்பி அநுகூலரான பின்னர்,
கிரியாதாமிதி மாம் வத ( ‘இவ்விடத்தில் பர்ணசாலையைக் கட்டு என்று எனக்குக் கட்டளையிடல் வேண்டும்,’ )என்று
இளைய பெருமாள் பிரார்த்தித்தது போன்று, ஏவி அடிமை கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
அன்றி, இவர் அநுகூலரானபின்பும் அவன் முகங்காட்டாமல்-அல்பம் விளம்பிக்க – சிறிது நேரந் தாழ்க்க,
அது பற்றாமல், அருளாய்’ என்கிறார் எனலுமாம்.
‘அருளாய்’ என்றது கைங்கரியப் பிரார்த்தனை.-என்றும் புருஷார்த்த மாகைக்காக பிரார்த்திக்கின்றார் என்றபடி-

‘கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனி கூன், உண்டை கொண்டு அரங்க ஓட்டி உன்மகிழ்ந்த நாதன்’ (திருச்சந். 49.)

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணிவண்ணா! மதுசூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே–1-5-5-

மான் ஏய் நோக்கி-இத்யாதி
மடவாளை மார்பிற்கொண்டவனாயிருப்பதனால், அருளுவிப்பாரும் அருகே இருக்க ‘எனக்கு அருளாய் என்று வேண்டுவது என்?’
மான் ஏய் நோக்கி
மான் ஏய்ந்த நோக்கு-ஏய்கை -பொருந்துகை –
மடவாளை-
ஆத்தும குணங்களையுடைய பெரிய பிராட்டியாரை.
மானோடு ஒத்த கண்களையுடையளாய்.
இனி, காரியப்பாடு அறக் கண்ணாலே அவனை ஒருக்கால் நோக்கினால்,
ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே குளிரச் செய்கின்ற கண்கள் என்று கூறலுமாம்.
இனி, மடப்பமாவது துவட்சியாய்,
அவன் தான் கண்ணாலே இவளை நோக்கினால், 
‘தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ’ என்கிறபடியே,
வண்டாலே ஆத்தசாரமான -எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போன்று இருக்கின்ற மென்மையினையுடையவள் என்று கூறலுமாம்.

மார்பிற் கொண்டாய் மாதவா-
விஷ்ணு வக்ஷஸ்த்தல ஸ்த்தயா (‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார்’) என்கிறபடியே,
அவள், திருமார்பில் நித்தியவாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தையுடையவனே.
மாம்பழத்தோடு ஒரு வித சம்பந்தம் இல்லாதிருக்கவும் ஒரு வகை வண்டு ‘மாம்பழ உண்ணி’ என்ற பெயரை அடைவதுபோன்று,
‘ஸ்ரீ’யோடு சம்பந்தம் இல்லாதிருக்கவும் ‘ஸ்ரீமான்’ என்ற பெயரைத் தரித்திருக்கின்ற பிறரைப் போல அல்லன்
இறைவன் என்பார், ‘மார்பிற்கொண்டாய் மாதவா’ என்கிறார்.

கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா-
அவள் அருகில் இல்லாது ஒழியினும் உன்னைக் கிட்டினார்க்குத் தாழ்வு வருமோ என்கிறார் இதனால்.
வனவாசத்திற்குக் காரணமான -ஹேதுபூதையான- குப்ஜையைச் சொல்லிற்றாய்,
இளமையில் சுண்டுவில் கொண்டு திரிகிற காலத்தில் பெருமாள் லீலாரசம் அனுபவித்தார் என்பது ஒன்று உண்டு;
அதனை நோக்கிச் சொல்லுகிறார்.
அப்போது ‘கோவிந்தா’ என்றதற்குப் ‘பூமியைக் காப்பவன்’ என்பது பொருள்.
அவளுடைய மற்றை உறுப்புகட்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்தானாதலின், ‘கூனே சிதைய’ என்கிறார்.
அன்றி,தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே 
‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார் என்றலுமாம்
இனி, சாந்து கொடுத்த கூனி தன்னையே சொல்லிற்றாய், வருத்தம் அறச் சுண்டுவில் நிமிர்க்குமாறு போன்று
கூனை நிமிர்த்தவன் என்றலும் ஒன்று.
தெறிக்கை யாகிறது கிரியையாய் ‘தெறித்தாய்,- நிமிர்த்தாய்’ என்றபடி.
‘ஆயின், கிருஷ்ணனுக்கு வில் உண்டோ?’ என்னில், 
வேலிக்கோல் வெட்டி விளையாட்டு வில் ஏற்றித் திரியுமவன் அன்றோ கிருஷ்ணன்? 
‘தருமம் அறியாக் குறும்பனைத் தன்கைச் சார்ங்க மதுவேபோல்’ என்று வில் உண்டாகவே அருளிச்செய்து வைத்தாள் அன்றே ஸ்ரீ ஆண்டாள்?
கோவிந்தா-
திர்யக்குகள் -விலங்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ?

வான் ஆர் சோதி மணி வண்ணா-
குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத்விபூதியிலும் அடங்காதே விம்மும்படியான புகர் படைத்த வடிவையுடையவனே!
இதனால், பக்தானாம் ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார்.

மதுசூதா-
மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று என் விரோதியைப் போக்கினவனே!
இதனால், ‘அவ்வடிவை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியைப் போக்குவாயும் நீயன்றோ?’ என்கிறார்.

உன் தேனே மலரும் திருப்பாதம் –
‘இவை ஒன்றும் இல்லையாயினும் அடியில் உன் இனிமையைப் பார்த்தால்தான் விடப் போமோ?’ என்கிறார்.
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ (தேன் போலே இனிமையான திருவடிகள் )என்றபடி.
இனி, இவர் பெருநிலம் கடந்த நல்லடிப்போதையன்றோ ஆசைப்பட்டார்? இவர்ஆசைப்பட்டபடியே, 
‘திசைகள் எல்லாந் திருவடியால் தாயோன்’ என்று அத்திருவடிகளையே காட்டிச் சேரவிட்டான்;
‘உன் தேனே மலரும் திருப்பாதம்’ என்று அதனையே விரும்புகிறார் என்று கோடலுமாம்.
அங்ஙனம் கொள்ளுங்கால், தேனே மலரும் திருப்பாதம் என்பதற்கு, 
‘திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்த இறைவனுடைய திருவடிகளினின்று அமிர்தவெள்ளம் உண்டாகிறது’ என்கிறபடியே,
தேன் போன்று இனிய கங்கையானது தோன்றுகின்ற திருவடிகள் என்று பொருள் கொள்க.

அருளாய் சேருமாறு வினையேன் –
கலத்தில் இட்டசோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக்கொள்ள அகலுகைக்கு அடியான
பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருளவேண்டும்.
தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: