ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-5-2-

‘நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;
தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப்பாசுரத்தில்;
‘யாங்ஙனம்?’ எனின், 
சண்டாளன் ‘ஒத்து -வேதம் போகாது’ என்றுதான் சொல்லப் பெறுவனோ?
அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்?
ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!
‘நான் தப்பச் செய்தேன்- என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று,
கீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக்கொண்டு அகலுகிறார்.

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் –
நினைந்து-
ப்ரஹ்மாதிகள் -சமாராதனத்துக்கு -, திருவாராதனத்திற்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான
உபகரணங்களைச் சமைத்துக் கொண்டாயிற்று இழிவது.
நாம் இவற்றைக்கொண்டு சென்றால் நம்மைக் குளிரக் கடாக்ஷிக்கக் கடவனே
மாமக்ரூரேதி வஷ்யதி ‘ஸ்ரீ கிருஷ்ணர் என்னைப் பார்த்துக் ‘குற்றம் அற்ற அக்குரூரனே’ என்று அழைத்துப் பேசுவார்,’ என்று,
கம்ஸன் ஏவலால் கிருஷ்ணனை அழைக்கச் சென்ற அக்குரூரன் நினைத்துச் சென்றது போன்று,
‘நம்மை வினவக்கடவனே’ என்று இங்ஙனே முந்துற நினைப்பார்கள்;

நைந்து
அநந்தரம் -பின்னர், தரித்திருக்க மாட்டாதே -சிதில அந்தக் கரணராவார்கள் -கட்டுக்குலைந்த மனமுடையவர்கள் ஆவார்கள்.

உள் கரைந்து உருகி –
நையுமது ஸ்தூலம் என்னும்படி உள்கரைவர்கள்;
பின்னர், ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாதபடி மங்குவார்கள். ‘இப்படிப் படுகின்றவர்கள்தாம் யார்?’ என்றால்,

இமையோர் பலரும் முனிவரும் –
ப்ரஹ்மாதிகளும் சனகாதிகளும் –
‘ஆயின், இச்செயல் முனிவர்களுக்குப் பொருந்தும்; செருக்கினைக்கொண்ட தேவர்களுக்குப் பொருந்துமோ?’ எனின்,
ராஜஸ தாமஸ குணங்களால் மேலிடப்பட்ட போது- செருக்குக் கனத்து இருக்குமாறு போன்றே,
சத்துவம் தலை எடுத்த போது பகவானுடைய குணங்களை அனுபவித்துக் கட்டுக்குலைந்து உருகுகிறபடியும் கனத்திருக்கும்.

புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் –
இப்படி அவர்கள் அன்பே மிக்கு இருப்பவர்கள் ஆகையாலே தொடுக்கும் போது தொடங்கி,
‘அவன் இதனைக் கண்டருளக் கடவனே, சாத்தியருளக் கடவனே,’ என்று அன்போடு தொடுத்த மாலை,
ஆராதனஞ்செய்யும் போது தன்மை நோக்குகையால் உண்டாகும் ஸ்ரமம் ஆறுகைக்கு அர்க்கியம் கொடுக்கைக்காக உண்டாக்கின தண்ணீர்,
பிறகு சாத்தியருளுவதாகச் சமைத்த சந்தனம் முதலியவைகள்,
தூபங்காட்டுவதற்கு உண்டாக்கின அகிற்புகை இவை தொடக்கமானவற்றைத் தரித்துக் கொண்டு வந்து,-
நிர்மமராய் – செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவார்கள்.
அவன் இவைகொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டுநன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று
‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும்,
பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக்கொண்டு நிற்கக் காணுமதனையே
பேறாக நினைத்திருப்பனாதலானும் 
‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் –
தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்.
‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, 
‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில்,
காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து 
‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று,
புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின்
தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும்,
வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும்,
இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;
அதனை அருளிச்செய்கிறார்.
இனி, நினைத்தல் –
கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு,
‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’என்று
பொருள் அருளிச் செய்வர் பிள்ளையமுதனார். 

முதலில் சிதையாமே –
அவற்றை உண்டாக்குமிடத்துத் தானான தன்மையில் குறை வாராதபடி இருப்பான்.
அதாவது – விசேடணங்களான சேதன அசேதனங்களினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விகாரங்கள்
விசேடியமான பரம்பொருள் உருவத்தில் இல்லை என்றபடி.
‘ஆயின், அப்படி உளதாமோ?’ எனின்,
மட்பிண்டமானது பானை, அகல் முதலிய பொருள்களாக மாறியவுடனே அம்மண் உருண்டையான உருவம் அழிந்துவிடும்;
இங்கு அது இல்லை.
‘நாட்டில் காரியங்களை உண்டாக்குகிற காரணத்தின் படி அன்று இவன் படி,’ என்கிறார்.

மனம் செய் ஞானத்து உன் பெருமை –
இப்படி இருக்கிற சங்கல்ப ரூப ஞானத்தையுடைய உன் பெருமை உண்டு.
உன் வேறுபட்ட தன்மை அது
‘ஆயின், உலகிற்குக்காரணம், சங்கல்ப ரூப ஞானமோ?’ எனின், அன்று;
‘ஸூஷ்ம சித்து அசித்துகளுடன் கூடின இறைவனே உலகிற்குக் காரணம்;
ஆயினும், இவ்விறைவன் காரணமாகும்போது சங்கல்பம் முன்னாக ஆதல் வேண்டும்.
‘ஆயின் சங்கல்பத்தையுடைய அவ்விறைவன் -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் காரணமாதல் வேண்டும்,
சங்கல்பம் காரணமாகாதே?’ எனின், பஹுஸ்யாம் ‘நான் பல வகைப் பொருள்களாக விரிகிறேன்,’ என்கிற
சங்கல்பத்தின் முக்கியத்துவத்தாலே 
‘மனஞ்செய் ஞானத்தைக்’ காரணமாக அருளிச் செய்கிறார்.

‘சின்னூல் பலபல வாயால் இழைத்துச் சிலம்பி பின்னும், அந்நூல் அருந்தி
விடுவது போல அரங்க ரண்டம், பன்னூறு கோடி படைத்தவை யாவும்
பழம்படியே, மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே’ என்றார் -பிள்ளைப்பெருமாளையங்கார்.
ஸ்வரூப விகார மில்லாமலிருந்துகொண்டே சிலவற்றை உண்டாக்குதலும்,
அங்ஙனம் உண்டாக்கினவற்றை உட்கொள்ளுதலும் அற்பச்சத்தியையுடைய சிலந்திப் பூச்சிக்கு இயல்பாகும் போது,
ஸ்வரூபத்திற்கு விகாரமில்லாமலிருந்து கொண்டே அண்டங்களைப் படைத்தலும் விழுங்குதலுமாகிய இயல்பு சர்வ சத்திகளான
இறைவனுக்குக் கூடுதல் அரிதன்று என்பதாம்.
‘ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வசத்திக்குக் கூடாதொழியாதிறே,’ என்ற தத்துவத்திரயமும் ஈண்டுக் கருதுதல் தகும்.

மாசு உணாதோ –
இவர்கள் வணங்கினால் மாசு உணாதோ?
‘தன் சங்கல்பத்தாலே எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகிறவனுக்கு,
அவனாலே படைக்கப்பட்ட நாம் தீண்டிய பொருள் அங்குத்தைக்குத் தக்கதாமோ? என்று தந் தாமுடைய தாழ்மையை நினைந்து,
அகலுகைக்கு அதிகாரமுள்ளது அவர்களுக்கே அன்றோ? அதற்கு நான் யார்?

மாயோனே – ப்ரஹ்மாதிகளையும் அற்பநிலையுள்ள மனிதர்கள் நிலையிலே ஆக்க வல்ல உன்னுடைய ஆச்சரியமான
வேறுபட்ட தன்மை இருந்தபடி என்! 

‘மாயோனே, நினைந்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலிற் சிதையாமே மனஞ்செய் ஞானத்து உன் பெருமை,
இமையோர் பலரும் முனிவரும் நினைந்து நைந்து உள்கரைந்து உருகிப் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு
ஏந்தி வணங்கினால் மாசூணாதோ?’ என்று அந்வயம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: