ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-5-1-

முதல் திருவாய்மொழியில் ‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால், அந்த ஆச்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்; மூன்றாந்திருவாய்மொழியால், பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாக்கை யாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால் ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக்கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

‘ஆயின், காதல் விஞ்சிக் கலங்கி மேல் திருவாய்மொழியில் தூது விட்டவர், இங்கு அகலுவான் என்?’ என்னில்,
கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்;
இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞானகாரியம்.
‘ஆயின், இவ்விரண்டும் இவர்க்கு உண்டோ?’ எனின்,
இவர்க்கு இறைவன் திருவருள் புரிந்தது -பக்தி ரூபா பன்ன ஞானம் – பத்தியின் நிலையினை அடைந்த ஞானத்தை ஆதலின்,
இரண்டும் உண்டு; ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பது இவருடைய திருவாக்கு.

‘இத்திருவாய்மொழியில் இறைவனுடைய சீலத்தை அருளிச் செய்தவாறு யாங்ஙனம்?’ எனின்,
கீழ் திருவாய்மொழியில் தூது விடுகின்ற வியாஜத்தால் தம்முடைய ஆற்றாமையை அறிவித்த பின்னர்,
‘இவரை இங்ஙனம் நோவுபட விட்டோமே!’ என்று பிற்பாட்டுக்கு நொந்து யானைக்கு உதவ வந்து தோன்றியது போன்று,
அரைகுலையத் தலைகுலைய வந்து தோன்றினான்;
அவனுடைய-வை லக்ஷண்யத்தையும் – வேறுபட்ட சிறப்பினையும் தம்முடைய -ஸ்வரூபத்தையும் -தன்மையினையும்  கண்டார்;
‘தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்தியசூரிகளுக்கு-அனுபாவ்யமான வஸ்து –
நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை- நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார்.
‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே.
‘ஆயின், அகலுவான் என்?’ என்னில்,-
சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே? 

பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன,
இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, 
யதி ப்ரீதிர் மஹா ராஜா யத் அனுக்ராஹ்யதா மயி ஜஹி மாம் நிர்விசங்கஸ்த்வம் ப்ரதிஞ்ஞா அநுபாலய ( ‘அரசர்க்கு அரசரே,
உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில்,
யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ ) என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்?

த்யஜேயம் ராகவம் வம்சே பர்த்துர் மா பரிஹாஸ்யதி ( இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல்
இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக்கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ )என்று விடை கொண்டாள் அன்றே பிராட்டி?

அப்படியே, இவரும்-ஊருணியிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும், அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும்.
நித்திய சூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப்புக்கார்.
அதனைக் கண்ட இறைவன், ‘இவரை இழந்தோமே’ என்று நினைந்து, ‘ஆழ்வீர், அகலப் பார்த்திரோ?’ என்ன,
‘அடியேன் அகலப்பார்த்தேன்,’ என்ன,
‘நீர், எனக்குத் அவத்யம் -தாழ்வு வரும் அன்றே அகலப்பார்த்தீர்?
நீர் அகலவே, ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே யுடைய பெரியவர்களாலேயே அடையத் தக்கவன் நான் என்று நினைத்து
என்னை ஒருவரும் சாரார்-இவ்விஷயம் அதிக்ருதாதிகாரம் ஆகாதே –
இப்படித் தண்ணியராக நினைந்திருக்கிற நீர் ஒருவரும் என்னைக் கிட்டவே, நான், ‘இன்னார் இனியார் என்னும் வேறுபாடு இன்றி
எல்லாரும் வந்து சேரத்தக்கவன்; என்று தோற்றும்;-சர்வாதிகாரம் ஆகும்
ஆன பின்னர், நீர் அகலுமதுவே எனக்குத் தாழ்வு-அவத்யம் -.
மற்றும், ‘எனக்கு ஆகாதார் இலர் என்னுமிடம் பண்டே அடிபட்டுக்காணுங் கிடப்பது,
நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட, ‘ஆகில் கிட்டுவோம்’ என்று நினைந்தார்;
உடனே,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று
‘பின்னையும் அகலப்புக,
‘உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,
பந்து வதம் -‘உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, 
கரிஷ்யே வசனம் தவ -‘கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று;
ஐயவுணர்வும் நீங்கினவன் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று
சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து
சேர்த்து- தலைக்கட்டினான்,’ என்கிறார்.-
ஆதலின், சீல குணத்தை அருளிச்செய்தவாறு காணல் தகும்.

——————————

‘நித்திய சூரிகட்கு -அனுபாவ்ய னானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை, 
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.

வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

வளம் ஏழ் உலகின் முதலாய வானோர் இறையை அருவினையேன் களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்-‘
வளவிதானஏழுலகு’ என்று லீலாவிபூதியைச் சொல்லிற்றாய்,
‘வானோர் இறை’ என்கையாலே நித்தியவிபூதியைச் சொல்லிற்றாய்,
‘இப்படி-உபய விபூதி – இரண்டு உலகங்கட்கும் நாதனாய் இருக்கின்றவனையன்றோ நான் அழிக்கப் பார்த்தேன்!’ என்கிறார்.
வளம் ஏழ் உலகின் முதலாய வானோர் இறையை-
வளவியனாய், ஏழ் உலகுக்கும் முதலாய், வானோர் இறையாய் இருக்குமவனை என்று அவன் தனக்கே விசேஷணம் ஆக்கவுமாம் –
இனி, ‘வளம் ஏழ் உலகின் முதலாய்’ என்பதனை, ‘வளவியராய், ஏழுலகுக்கும் முதலாய் இருக்கிற வானோர்’ என்று,
வானோருக்கு அடைமொழி ஆக்குதலும் ஒன்று.
வானோர் வளவியராகையாவது, பகவானுடைய அனுபவத்தில் ஆற்றலுடையராய் இருத்தல்.
‘ஏழ் உலகுக்கும் முதலாய வானோர், எனின், நித்தியசூரிகள் உலகிற்குக் காரணர் ஆகவேண்டுமே? அங்ஙனம் ஆவரோ?’ எனின்,
அஸ்திர பூஷண அத்தியாயத்தில் -இறைவன், ஸ்ரீகௌஸ்துபத்தால் -ஜீவ சமஷ்டியை -உயிர்களின் கூட்டத்தை தரிக்கின்றான் என்றும்,
ஸ்ரீவத்ஸத்தால் மூலப் பிரகிருதியினையும்-ப்ராக்ருதங்களையும் – அதனின்றும் உண்டான ஏனைய பொருள்களையும் தரிக்கின்றான் என்றும்
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அஸ்திரபூஷண அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதனால், அவர்களும் உலகிற்குக் காரணர் ஆவார்கள் என்க-
புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண் டாகத் தெருள்மருள்வாள் உறையாக
ஆங்காரங்கள் சார்ங்கஞ்சங்காக மனத் திகிரியாக இருடிகங்களீரைந்துஞ் சரங்களாக இரு பூத மாலை வன மாலையாக
கருடனுருவா மறையின் பொருளாங் கண்ணன் கரிகிரி மேனின்றனைத்துங் காக்கின்றானே–ஸ்ரீதேசிகப் பிரபந்தம் – அதிகார சங். 41

வானோர் இறையை’ 
நித்தியசூரிகள் தேசிகர் ஆகையாலே துறை அறிந்தே இழிவர்கள் ஆதலின், வானோர் இறையை’ -என்கிறார். 
ஸ்வாமி  என்றே ஆயிற்று அவர்களுக்கு பிரதிபத்தி -நினைவு.

அருவினையேன்-
‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து, 
‘அருவினையேன்’ என்கிறார்.
தார்மிகனாய் இருப்பான் ஒருவன், ராக்ஷஸ தாமஸூக்களாலே அபிபூதனாய் – குணங்கள் மேலிடப்பட்டவனாய்-
க்ரஹத்தில் அக்னி ப்ரஷேபத்தைப் பண்ணி – வீட்டில் தீயினை வைத்து, சத்துவம் தலையெடுத்தவாறே-
அநுதபிக்குமா போலே – வருந்துமாறு போன்று -அநு தபிக்கிறார் -வருந்துகிறார்.
இப்போது ‘அருவினை’ என்கிறது-‘கள்வா’ என்கைக்கு அடியான பிரமத்தை –
‘ஆயின், அன்பினை ‘அருவினை’ என்னலாமோ?’ எனின்,
‘பாபம் என்பது, அநிஷ்டாவஹம் -தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே,
இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின்
அன்பினை ‘அருவினை’ என்கிறார்.

களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்-
‘களவு எல்லாரும் அறியும்படி வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த வஞ்சகனே!’ என்பன்.
எழுதல்-எல்லாரும் அறியும்படி வெளிப்படல்.
இனி, ‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-அபி நிவிஷ்டனாய்- ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம்.
இத்தால், ‘பரிவுடைய யசோதைப்பிராட்டி சொல்லும் பாசுரத்தை அன்றோ சொன்னேன்?’ என்கிறார்.

பின்னையும்-
அதற்குமேல்.

தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய் இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் –
‘பரிவுடைய யசோதைப்பிராட்டிக்கு மறைத்தவற்றையும் வெளியிடும்படி அபிமதையான -அன்பிற்கு உரியவளான
நப்பின்னைப் பிராட்டி பாசுரத்தையுஞ்சொன்னேன்,’ என்கிறார்.
தளவு ஏழ் முறுவல்-
கவயத்தை – காட்டுப் பசுவினைக் கண்டவாறே-க்ருஹத்தில் – வீட்டிலுள்ள பசு-ஸ்ம்ருதி – நினைவிற்கு வருதல் போன்று,
நப்பின்னைப் பிராட்டியினுடைய-தந்த பங்க்தியை – பற்களின் வரிசையைக் கண்டவாறே
முல்லை அரும்பு-ஸ்ம்ருதி விஷயமாகை – நினைவிற்கு வருதலின்,‘தளவேழ் முறுவல்’ என்கிறார்.
இனி, ‘தளவு எழும்படியான முறுவல்’ என்னவும் ஆம். அதாவது, எழுகை-போகையாய், தோற்றுப் போகும்படியான முறுவல். 
‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை’ என்றார் பிறரும்.

பின்னைக்காய்-
நப்பின்னைப் பிராட்டியினுடைய புன்சிரிப்பிலே தோற்று அவள் விருப்பின்படி செய்து கோடற்குத் தன்னை அவளுக்கு –
இஷ்ட விநியோக அர்ஹம் -உரிமையாக்கினான்.

வல் ஆன் ஆயர் தலைவனாய்
கிருஷ்ண ஆஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதச்ச பாண்டவ -( ‘பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடிகளையே
பற்றுக்கோடாக அடைந்தவர்கள்; அவனையே வலிமையாக உடையவர்கள்; அவனையே தலைவனாக உடையவர்கள்,’ )என்பது போன்று,
கிருஷ்ணனைத் துணையாகக்கொண்டு நாட்டினை அழித்துத் திரியும் மிடுக்கைப்பற்ற ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்.
இனி, ‘ஆன் ஆயர் வலிய தலைவனாய்’ என்று, வன்மையைத்
தலைவனுக்கு-அடைமொழியாக்கலும் ஆம்.
அவ்வன்மையாவது, தலையிருக்க உடம்பு குளித்தும், உடம்பு இருக்கத் தலை குளித்தும் அன்றே அவர்கள் திரிவார்கள்?
எல்லாரும் கார்த்திகை புதியதற்குக் குளித்தார்களாகில் இவன் அதுவும் செய்யாதே இடைத்தனத்தில் ஊன்றி இருத்தல்.
‘இவன் இவ்வாறு இருத்தற்குப் பயன் யாது?’ எனின், இப்படி இருக்கில் அல்லது அவ்வாயர்கள் பெண் கொடார்கள் அன்றே?
ஆதலால், பெண் கோடலே பயன். 
குலேந சத்ருசீ (‘வாரீர் அழகரே, உம்முடைய கிருஷ்ணாவதாரத்தில் இரண்டு தாய்மாரையும் இரண்டு தமப்பன்மாரையும் இரண்டு குலத்தையும்
ஒரு கணத்தில் ஏற்றுக் கொண்ட உமக்குப் பலன், குலத்தோடு ஒத்திருக்கிற நப்பின்னைப் பிராட்டியும் உருக்குமிணிப் பிராட்டியும்’) என்றார் கூரத்தாழ்வானும்.
இத்தால் – ‘ஆயர்குலத்தினன் ஆகையாலே நப்பின்னைப் பிராட்டியை ஏற்றாய்; அரசகுலத்தினன் ஆகையாலே உருக்குமிணிப்பிராட்டியை ஏற்றாய்’ என்றபடி
இனி,துல்ய சீல வயோ வ்ருத்தாம்-  ‘தக்க வயதினையும் ஒழுக்கத்தினையும் குலத்தினையும் உடைய பிராட்டிக்குத் தக்கவர் அந்த ஸ்ரீராமபிரான்;
கறுத்த கண்களையுடைய பிராட்டியும் அந்த ஸ்ரீராமனுக்குத்தக்கவள்,’ என்கிறபடியே,
ஈண்டும், கிருஷ்ணனும் நப்பின்னைப்பிராட்டியும் ஒத்தவர்களாய் இருந்தும்,
எருதுகளை முன்னிட்டு அவற்றைத் தழுவச் செய்தனர் ஆதலின், ‘வல் ஆன் ஆயர்’-வல் நெஞ்சர் – என்கிறார்’

இளஏறு ஏழும் தழுவிய –
ம்ருத்யு சமமாய் -யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக ஒருக்காலே தழுவினான்.
பின்னர் அவளை அடைதலால், அவள் முலையிலே அணைந்தது போன்று இருக்கையாலே  ‘தழுவிய’  என்கிறார்.
எந்தாய் என்பன் –
ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன்.
யுக்தி மாத்ரமேயோ சொன்ன அளவேயோ!
நினைந்து
நெஞ்சாலும் தூஷித்தேன் – நிந்தித்தேன்.
அவ்வளவேயோ
நைந்தே –
பிறர் அறியும்படி சிதிலனாய்-காயிகத்தாலும் உடலாலும்-தூஷித்தேன் – நிந்தித்தேன்.

இனி, இத்திருப்பாசுரத்திற்கு 
‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்;
‘எத்திறம்’ என்றேன்;
பிராட்டிமார் நிலையை ப்ராப்தனாய் – அடைந்து தூது விட்டேன்’ என்று,
அவற்றுக்கு அநு தபிக்கிறார் வருந்துகிறார் என்று பொருள் கூறலும் .
‘அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றேன்’ என்றது, வளவேழ் உலகின் முதலாய வானோ ரிறையை’ என்றதனை நோக்கி.
‘எத்திறம் என்றேன்’ என்றது, ‘களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா’ என்றதனை நோக்கி.
‘பிராட்டியார் நிலையையடைந்து தூதுவிட்டேன்’ என்றது, ‘இளவேறேழுந் தழுவிய எந்தாய்’ என்றதனை நோக்கி.
‘வருந்துகிறார்’ என்றது, ‘நைவன்’ என்றதனை நோக்கி.

நினைந்து நைந்து
வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையைக்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன்
பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன்
அரு வினையேன்-என்று அந்வயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: