ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-4-5-

‘முடிவார்க்கு வேண்டா அன்றே? ஆதலால், எங்களை விடீர்;
ஜீவிக்க நினையும் தமக்கு தாம் வேண்டாவோ?’ என்கிறாள்.
அதாவது,
‘தம்முடைய நாராயணன் என்னும் பெயர் ஒறுவாய்ப் போகாமல் நோக்கிக்கொள்ளச் சொல்,’ என்கிறாள்.

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண் டருளாயே–1-4-5-

நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-
உலகங்களைக் காப்பாற்றும்போது, கார்த்த்வயா புத்தி இன்றிக்கே -செய்து தீர வேண்டுமே என்ற எண்ணத்தோடு அன்றிப்
பேறு தன்னதாகக் காக்கின்றானாதலின், ‘நல்கி’ என்கிறாள்.
அதாவது, ‘எனக்குத் தன் பக்கல் உண்டான காதல், தனக்கு உலகத்திலே உண்டாய்க் காக்கின்றான்,’ என்றபடி.
அபேக்ஷிப்பார் இன்றிக்கே -விரும்புவார் இல்லாதிருக்கவும், தானே காக்கின்றானாதலின், ‘தான்’ என்கிறாள்.
காத்தளித்தல் என்பது-
விருப்பமில்லாதனவற்றை நீக்கி விரும்புகின்ற வற்றைக் கொடுத்தல்.
உலகம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தலின், ‘பொழிலேழும்’ என்கிறாள்.
அன்றி, இவ்வுலகம், கீழ் உலகம் என்னும் இவ்விரண்டனையும் ஒன்றாகக் கொண்டு
அதனோடு மேலே உள்ள ஆறு உலகங்களையும் சேர்த்து ஏழாகக் கோடலும் அமையும்.
ஆக, தன் சரீரத்தைப் பாதுகாத்துக் கோடல் அன்பினாலே ஆதலின்,
‘தான் நல்கிக்காத்து அளிக்கும் பொழிலேழும் நாரணன்’ என்கிறாள்.

வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ-
‘தம் மக்களைப் பாதுகாத்தல் ஆகாதோ?’ நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேண்டுமோ?’ என்றபடி.
‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம் படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள்.

இனி, ‘நல்கித் தான் காத்து அளிக்கும் பொழிலேழும்’ என்பதற்கு,
‘பெயர் வேறாகவும் உருவம் வேறாகவும் பிரிப்பதற்குத் தகுதி இன்றிக் கிடந்த அன்று,
யார் இருந்து விரும்ப, இதனை உண்டாக்கினான்?
நீறு பூத்த நெருப்புப் போன்று, தான் என்ற சொல்லுக்குள்ளேயாய், தன்னை இட்டுப் பேச வேண்டி இருந்த அன்று,
தன்மேலே, ஏறிட்டுக் கொண்டு நோக்கி அளிப்பவன்’ என்றும்,
‘வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ?’ என்பதற்கு,
‘இல்லாத அன்று உண்டாக்கினான்; உண்டாக்கியதற்குப் பலன் கருமத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ!’ என்று பொருள் கூறலுமாம்.

நாரணனைக் கண்டக்கால்-
உயிரக் கூட்டங்களினுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் தனக்கு அதீநமாய்,
இவை பிரகாரமாகத் தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தன் இழவாம்படி இருக்கையாலே
நாராயணன் என்று விருது ஊதிக்கொண்டு திரிகிறவரைக் கண்டால்,
இங்கு, ‘இப்பெயர் காரண இடுகுறியோ!’ என்றிருந்தோம்;
‘கள்ளிச்செடிக்கு மஹா விருக்ஷம் என்று பெயர் இருப்பதைப் போன்றது ஒன்றோ!’ என்று கேளுங்கள்
என்ற தொனிப்பொருளும் தோன்றும்.

மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே-
பெருகா நின்றுள்ள நீரை யுடைத்தான கொடித் தோட்டங்களிலே பேடையின் வாக்கு அடங்குவது தேடுகின்ற குருகே!
கயல் உகளா நிற்கவும் பேடையின் வாய்க்கு அடங்குவது தேடுகின்றது ஆதலின்,’ ‘இரை தேர்’ என்கிறாள்.
‘புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே’ என்றார் திருமங்கை மன்னனும்.
இதனால், அதன் செயல் தனக்கு என வாழாமையாய் இருந்தது என்கிறாள்.
கைப்பட்ட இரையினைத் தன்மிடற்றுக்குக் கீழே இழித்தாது; ஆதலின், ‘வண்குருகே’ என்கிறாள்.
வண்மை-கொடுத்தல்; அழகுமாம்.
‘நான் உண்ணாவிரதத்தோடு இங்கே தங்கியிருக்க, நினையாமல் இருக்கின்ற அவனைப் போல அல்லை நீ’ என்பது குறிப்பு.
‘காரிய காலத்தில் பூனையின் தன்மையினை அடைதல் வேண்டா;
தூது போகையில் பயின்று இருப்பாரைப் போன்று இருக்கின்றாய்’ என்பாள், ‘சிறுகுருகே’ என்கிறாள்.

மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்-
‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள்,‘மல்குநீர்க் கண்ணேன்’ என்கிறாள்.
‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின்,
இங்கும் சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும்.
இனி, தன்னைக் கண்ண நீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டி யிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் எனினும் அமையும்.
ஆயின், நிரூபிப்பதற்குக் கண்ண நீர் எப்பொழுதும் இருக்குமோ?’ எனின் கலவியில் ஆனந்தக் கண்ணீரும்,
பிரிவில் சோகக் கண்ணீரும் மாறி மாறி இருக்கும்.
‘மறுப்பரோ! என்னும் அச்சத்தால், நேரே உடம்பைத் தரவேண்டும் என்று சொல்லாளாகி, ‘வாசகங்கொண்டு’ என்கிறாள்.
மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது என்னும்
நினைவினள் ஆதலின், ‘ஓர் வாசகம்’ என்கிறாள்.
‘ஆயின், மறுக்கும் வார்த்தை இவளுக்கு உத்தேஸ்யம் ஆமோ?’ எனின்,
‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார்.
‘செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்
நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’ என்றார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார்.
‘கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே’ என்றார் இவ்வாழ்வார் நாயகியும்.
தான் ஜனக குல சுந்தரியாயிருந்தும், பறவைகளைப் பார்த்து, ‘அருளாய்’ என்கிறாள்;
அப் பறவைகளால் தனக்குக் கிடைப்பது பகவத் விஷயம் ஆகையாலே.
‘நம்பி யேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய,
பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத்
திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று அருளிச் செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: