ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-4-4-

‘அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ!’ என்றாள் கீழே –
‘இவள் அனுபவித்தாளோ பின்னை?’ எனில் ஆம்; அனுபவித்தாள்;
அவன் அரைக்கணம் தாழ்ந்து முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் அன்றே?
இவ்வளவிலே சில மகன்றில்கள்,-நாம் கிஞ்சித்கரிக்க நல்ல அளவு –
நாம் உதவி சிறிதாயினும் செய்வதற்கு நல்ல சமயம்’ என்று நினைந்து,
‘நாங்கள் இவ்விடத்திற்குச் செய்ய வேண்டுவது என்ன?’ என்று வந்து முகங் காட்டினவாகக் கொண்டு,
அவற்றைப் பார்த்து, ‘என் நிலையைக் கண்டும் இரங்காதே போனவருக்கு நான் எத்தைச் சொல்லுவது? என்று –
நிராசையாய் -ஆசையற்றவளாய், பின்னரும் -சாபலத்தாலே -ஆசைப் பெருக்காலே,
பலகால் சொல் மறுத்தார்க்குச் சொல்லுவாரைப் போன்று,
இத்தனையுஞ் சொல்லவல்லீர்களோ, மாட்டீர்களோ? என்கிறாள்

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-
என் நீர்மை கண்டு-என் ஸ்வபாவம் -மார்த்த்வம் – மென்மைதனைக் கண்டு அருள் செய்து,
நாம் பிரியுமது தகாது’ என்னாதே பொகட்டுப் போனவர்க்கு.
பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,
‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.
கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன,
‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’
‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற
தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச்செய்தார்.

என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ –
இந்நிலையிலும் ‘என்னுடையவன்’ என்னும்படி கலந்த போது முகங்கொடுத்தவன் ஆதலின்,
‘என் நீல முகில் வண்ணர்க்கு என்கிறாள்.
திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச் சொல்லுவது என்னும் நினைவாலே,
‘அவர்க்கு நான் சொல்லி விடுவது எத்தை?’ என்கிறாள்.
‘இங்ஙனம் சொல்லுவான் என்?’ என்னில் ‘கண்டு இரங்காதவரோ கேட்டு இரங்கப் போகின்றார்?’ என்னுமதனாலே.
‘ஆயின், கண்டானோ?’ என்னில்,
ஏன்? கண்டிலனோ? கலக்கிற சமயத்தில் கை நெகிழ்த்த இடமெல்லாம் வெளுத்தபடி கண்டிருப்பானே.
இனி, ‘என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணா’ என்பதற்கு,
‘இவ்வளவிலே என்னை வந்து அணைந்தவராய் என் நிலையைக் கண்டு இதற்கு ஒரு போக்கடி பாராமல்,
உங்கள் பக்கல் கேட்டு அறிய இருக்கிறவர்க்கு’ என்று உரைத்தலுமாம். அவனை அனுபவிக்குமதிலும், அவனைப் பிரிந்து நோவுபடுகின்ற தன் தன்மையைக் கட்டிக்கொண்டு கிடத்தல் அமைந்ததாக இருத்தலின், ‘என் நீர்மை’ என்கிறான்.
தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள்.
‘முதன்முதலில் வடிவைக் காட்டியே என்னைத் தமக்கே உரிமையாக்கினார்;
அவ்வடிவிற் புகர் இப்பொழுது அகவாயிலும் சிறிது உண்டாகப் பெற்றது இல்லையே’ என்பாள், ‘என் நீல வண்ணர்க்கு’ என்கிறாள்.
‘ஆயின், மனத்தில் தண்ணளி இல்லையோ?’ எனின், ‘யாமுடை ஆயன் தன் மனங் கல்லாலோ’ என்று இவள் தானே மேல் கூறுவள்.
‘என்ன பாசுரத்தை இட்டு எத்தை நான் உங்களுக்குச் சொல்லி விடுவேன்’ என்பாள், ‘என் சொல்லி யான் சொல்லுகேனோ?’ என்கிறாள்.
‘ஆயினும், நாங்கள் சென்று கூறின் வாராது இரான்;’ என்ன,
‘நான் சொல்லி விட இருக்கிறவர், நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்திருக்கிறார்?
‘திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப் போகின்றானோ?’
கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று ஆசை அற்றவளாய்,
பின்னையும் ஆசையின் மிகுதியினாலே,
அதவா கிம் ததா லாபை (‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’) என்று கூறிய ஆய்ப்பெண்கள்,
அப்யசவ் மாதரம் த்ரஷ்டும் சக்ருத்யப்யா கமிஷ்யதி (‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும்
இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ )என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்:
நல் நீர்மை-நல் உயிர்.
இனி-
ஆன அளவும் கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள்.

அவர்கண் தங்காது-
சேஷியான உம்முடைய பக்கலில் தங்கில் தங்கும் அத்தனை. அதாவது,
பிராட்டி, பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச்செய்தவாறே
‘நாமோ தாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன
‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் பாலி பாயக் கூடியதான ஸ்நேஹத்தை -அன்பை, பெருமாள்,
என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடைசெய்து போந்தார்;
அவர் இவ்வாற்றாமையாலே உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர,
விடாயர் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை;
அவரைக் கண்ட பிற்றை நாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று,
‘தலைவராகிய உம் பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி
ஒரு வாய்ச்சொல்-
ஒரு யுக்தி – சொல் சொல்ல அமையும்.-வாசா தர்மம் அவாப்னுஹி-

நன்னீலம் மகன்றில்காள் இத்யாதி –
அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீல மகன்றில்களாய் இருந்தீர்கள்;
செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி
நல்குதிரோ நல்கீரோ-
செய்வீர்களோ, மாட்டீர்களோ?
முதல் வார்த்தையிலேயே பதின்கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று,
ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: