ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-4-2-

சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும்
நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமையின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள்! நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?–1-4-2-

என் பெருமான்-
என் -பிரிந்த சமயத்திலும் ‘என்னுடையவன்’ என்று கூறலாம்படி காணும் கலக்கிற சமயத்தில் அவன் இவள் இட்ட வழக்காய் இருந்தபடி.
அன்றி, பிரிகிற காலத்தில் தான்வருமளவும் இவள் தரிக்கைக்காக
‘இது எங்கே இருக்கில் என், எங்கே போகில் என்? உன்-சரக்கு அன்றோ பொருள் அன்றோ?’ என்று கூறிப் பிரிவானாதலின்,
அதனை நோக்கி, ‘என்பெருமான்’ என்கிறாள் ஆகவுமாம்.

என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு –
‘பிரிவில் திருக்கண்கள் சிவந்திருக்குமோ?’ என்னில், ஸ்வாபாவிகமான ஐஸ்வர்யத்தாலும் சிவந்திருக்கும்;
ஸ்வகீய வஸ்துக்கள் – தனக்குரிய பொருள்கள் பக்கலுள்ள-வாத்சல்யத்தாலும் – அன்பினாலும் சிவந்திருக்கும்;
மதுபான மத்தரைப் போலே -கட் குடியர்களைப் போன்று இவளோடு கலந்த கலவியாலும் சிவந்திருக்கும்;
அன்றி, பிரிவாலே அரையாறுபட்டுச் சிவந்திருக்கும்.
‘ஆயின், இவற்றை எல்லாம் பிரிந்திருக்கும் இவள் கண்டாளோ?’ எனின், இவற்றை எல்லாம் இவள் அனுபவித்தவள் அன்றோ?
எங்கே அனுபவித்தாள்?’ எனின்,
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வரியம், மூன்றாந் திருவாய்மொழியிலே வாத்ஸல்யம், இத்திருவாய்மொழியில் கலவியும் பிரிவும்.
பெருமானார்க்கு-
பிரிகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமையாக்கிப்போன-அநந்யார்ஹையாக்கி-படி.
(இங்கே இச்சொல்லுக்குத் தலைவன் என்பது பொருள்.)
அன்றி, தலைவன் தனக்கு இயற்கையில் அமைந்த ஐஸ்வரியத்தோடு இவள் இடத்துள்ள குணங்களாகிய செல்வத்தையும்
உடன்கொண்டு சென்றவனாதலின், இரட்டித்த செல்வத்தினையுடையவன் என்பாள், ‘பெருமான்’ என்கிறாள் எனலும் அமையும்.
(இங்கே ‘பெருமான்’ என்பதற்குச் ‘செல்வத்தாலே பெரியவன்’ என்பது பொருள்; அதாவது, இரட்டித்த செல்வத்தையுடையவன் என்பதாம்.)

என் தூதாய் –
அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாய் இருக்கின்ற எனக்குத் தூதாய்.
அதாவது, ‘கடலேறி வடிந்தாற் போலே காணும் கிடக்கிறேன்,’ என்றபடி,
உரைத்தக்கால் என் செய்யும்-
உரைத்தால் என்ன தீமை உண்டாம்?
‘அவனைக்கொடுவந்து சேர்க்கச் சொல்லுகிறேனோ? ஒரு வார்த்தையைக் கூறின் என் செய்யும்?’ என்பாள்,
‘உரைத்தக்கால் என் செய்யும்?’ என்கிறாள். இத்தொடரில், சென்று கூறின்,
அதற்குக் கைம்மாறாக அவன் உபய விபூதிகளையுந் தரினும் தருவான் என்ற குறிப்புப் பொருளும் தோன்றும்.

இனம் குயில்காள் –
என்னைப் போன்று தனித்திருக்கின்றீர்கள் அன்றே?
நீர் அலிரே –
நீர்மைக்கு நீங்கள் அன்றோ? (இங்கு நீர் என்பது, நீர்மை என்ற சொல்லின் விகாரம்; நீர்மை-தன்மை)
அன்றி, இதற்கு, ‘யானும் தலைவனும் சேர்ந்திருக்கும் போது கேட்டவற்றிற்கு எல்லாம் விடை பகர்ந்து வந்த நீங்கள்,
அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனீர்களோ?’ என்று கூறலுமாம். (இங்கு ‘நீர்’ என்பது, முன்னிலைப் பெயர்.)
முன் –
நான் பாபம் பண்ணிப் போந்த காலம் ஓர் எல்லையுடன் கூடியதோ?-சாவதியோ – ‘அன்று’ என்றபடி.
இதனால், சென்ற காலம் அனைத்தையும் குறிக்கிறாள்.
செய்த –
சங்கற்பித்துவிட்ட அளவேயோ? அன்று; சரீரத்தால் செய்தது என்றபடி.
முழுவினையால்-
அவற்றுள் ஏதேனும் அகஞ்சுரிப்பட்டது உண்டோ? ‘இன்று’ என்றபடி,
அதாவது, ‘காலம் ஒரு வரையறைக்குட்பட்டிருந்து, அக்காலங்களில் நான் செய்து போந்த பாவங்களும்
ஒரு வரையறைக்குட்பட்டிருப்பின் அன்றோ என்னால் போக்கிக்கொள்ள முடியும்?’ என்பதாம்.
‘ஆயின், அத்தகைய தீவினைகளையுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின்,
இறைவனால் அத்தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது?
இங்கே ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்- தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை
அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய, ஒன்று இரண்டு முழுக்கால் போகாது காண் நான் பண்ணின பாபம்,’ என்று
திருக்கோட்டியூரிலே தெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையிற் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது.

திருவடிக்கீழ் குற்றேவல் –
திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு,
‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது ‘திருவடிக்கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின்,
அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்;
திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை.

முன் செய்ய முயலாதேன்-
முற்பிறவிகளிலே நோலாத நான்.
இனி இதற்கு,’‘இந்தக் காரியத்தைச் செய் என்று என்னை நியமிக்க வேண்டும்,’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று,
க்ரியதாம் இதி மாம் வத (‘இன்னதைச் செய்’ ) என்று ஏவத் திருமுன்பே அடிமை செய்ய முயலாத நான் என்று பொருள் கூறலுமாம்.
முன் செய்ய முயலாதேன் இனம் அகல்வதுவோ விதி-
திருவடிகளிலே அடிமை செய்கைக்குத் தக்கது ஒரு சாதனத்தை என தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ?
இனம்-‘இன்னம்’ என்பதன் விகாரம்./ விதி-நியாயம்.
‘எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று
பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.

இனி, ‘அகல்வதுவோ விதியினமே? என்பதனை,
‘விதியினம் அகல்வதுவோ?’ என்று மாறிக் கூட்டி, முதல் இல்லாதார் அன்றோ பலிசை இழப்பார்!
அவன் தானே முதலாக இருக்கும் கோஷ்டி -கூட்டமன்றோ இவர்கள் கூட்டம்?’ என்று பொருள் கூறலுமாம்;
விதியினம்
புண்ணியத்தையுடையோம்.
‘களைகண்மற்றுஇலேன்’ என்றும்,
‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்றும்,
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கு மற்றவை’ என்றும்,
‘நெறிவாசல் தானேயாய்நின்றானை’ என்றும்,
‘விழிக்குங் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால்’ என்றும்,
‘வாழுஞ் சோம்பர்’ என்றும்
இப்படிகளிலே அன்றோ இவர்கள் கோஷ்டியில் வார்த்தைகளும் இருக்கும்படி?

இனி ‘விதியினம்’ என்பதனை ‘விதியினன்’ என்றதன் திரிபாகக் கொண்டு,
அதற்கு, ‘பாபத்தையுடையேனான நான்’ என்று பொருள் கூறி,
நான் அகல்வதுவோ – ‘பாவத்தையுடைய நான் அகன்றே போமதுவோ?’ என்று கூறலும் ஒன்று. விதி – பாபம். ‘
ஆயின், மூன்றாமடியில் ‘முழுவினையேன்’ என்றவள் ஈண்டும் ‘பாவியேன்’ என்று கூறல், கூறியது கூறலாகாதோ?’ எனின் ஆகாது;
‘தீயவினைகளைச் செய்த தீவினையேன்’ என்கிறாள்.
‘பாவமே செய்து பாவியானேன் என்றார் மங்கை மன்னனும்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: