ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-1-

பிரவேசம்
அஞ்சிறைய மடநாராய்- பிரவேசம்
கீழ் மூன்று திருவாய்மொழிகளால், பரத்வத்தையும் -பஜனீயத்வத்தையும் -ஸுலபயத்தையும் -அனுபவித்து மகிழ்ந்தவராய்த்
தாமான தன்மையில் நின்று பேசினார்;
இத் திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய்,
ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது.
அயம பர ஆகாரக நியம (‘இது மற்றொரு காரகம்’ ) என்னுமாறு போன்று, மேல் போந்த நெறி வேறு;
இங்குச் செல்லும் நெறி வேறு.
முற்காலத்தில்-அல்பம் விவஷிதனாய்- சிற்றறிஞன் ஒருவன், வீதராகராய் –
‘பற்று அற்ற பரம ஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன;-தத்வ பரமாக – உண்மைப் பொருளை
உள்ளவாறு கூறுகின்றன,’ என்று
இத் திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத் திருவாய்மொழி வந்த அளவில்,
‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கை விட்டுப் போனானாம்;
ஸ்ரவணம்- மனனம்- நிதித்யாசித்வய சாஷாத்காரம் (‘இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன்,
பார்க்கத் தக்கவன்’ )என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.
கீழே ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்த பொருள்
அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
‘அனுபவிக்கிறார்’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.
‘ஆயின், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாகச் சொல்லுவதற்குக் காரணம் யாது?’ எனின்,
கீழே திரு உலகு அளந்தவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப் பட்டுக் கட்டிக் கொண்டார்;
அது ஒரு கால விசேடத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கு என்று தாமான தன்மை அழிந்து
ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியினால் சொல்லும் பாசுரம் போய், ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாய் விட்டது.

‘ஆயின், ஆர்த்தோ வா யதிவா த்ருப்த (‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி,
அவன் இரட்சிக்கத் தக்கவன்,’) என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப்
பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ஆமத்தில்-‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால்,
நிதானஞ்ஞரான நோயின் மூலத்தை அறியும் -பிஷக்கக்குள்- மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று,
மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்;
பெயர நிற்கவே, இவர் கலங்கினார்.
‘ஆயின், இறைவன் மருத்துவனோ?’ எனின், ‘மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்’ எனப்படுதலால் மருத்துவனேயாம்.
‘நன்று; ஞான தேசிகரான இவர் கலங்கலாமோ?’ எனின், ஞானத்தை மட்டும் உடையவராய் இருப்பின் கலங்கார்;
‘மயர்வற மதிநலம் அருளப்’ பெற்றவர் ஆகையாலே கலங்குகிறார்.
மற்றும், அவன் தானே கொடுத்த அறிவும்-விஸ்லேஷத்தில் – பிரிவில் அகிஞ்சித்கரமாம்படி அன்றோ அவனுடைய வைலக்ஷண்யம் இருப்பது?
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ( ‘அவர் வந்து என்னை மீட்டுச் செல்வராகில், செல்லும் அச் செயல் அவ் விராமனுக்குத் தக்கதாம்,’ ) என்று
கூறிய பிராட்டியே பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கிலளாகித் -வேண்யுத்க்ரத நாதிகளிலே- தன் சடையினைக் கொண்டு தூக்கிட்டு இறப்பதற்கு
நினைந்தமையும் ஈண்டு நினைத்தல் தகும்.

‘ஆயின், பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின்,
ஹம்ஸ காரண்ட வா கீர்ணம் வந்தே கோதாவரீம் நதீம் ( ‘அன்னங்களும் நீர்க்காகங்களும் நிறைந்திருக்கின்ற
கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்;) என்றும்
‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு செல்கிறான்,’ என்று நீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று பிராட்டியும்,
அசோக சோகாபநுத சோகோ பஹத சேதசம் (சோகத்தினை நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும்
எனக்குப் பிராட்டி இருக்கும் இடத்தினைத் தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ )என்று
பெருமாளும் கூறுதலால், தூது விடல் பண்டைய மரபேயாம்.

‘ஆயின், பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில்,
அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அன்வயத்தில் -கூடி இருக்கும் போது தரிக்கை,
விஸ்லேஷத்தில் -பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, -ததேக போகராகையாலும் -அவனுக்கே இன்பத்தை அளிக்கை,
அவன் நிர்வாஹகனாக- காப்பாற்றுகின்றவனாகத் தாம் நிர்வாஹ்யமாகையாலும்- காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை
ஆகிய இவ்வாறு குணங்களும் ஆழ்வார்க்கும் உள ஆதலின், பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை.

‘ஆயின், பிராட்டி தானாகப் பேசுவான் என்?’ என்னில், தாமரை திருவடிகளுக்குப் போலியாக இருக்க,
‘வையங்கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று,
இங்குப் பிராட்டியாகவே பேசப்படுகிறது; முற்றுவமை இருக்கிறபடி.
‘ஆயினும், இவர் ஆடவர் ஆகையாலே ஆண் தன்மை பின் நாடாதோ?’ எனின்,
இராஜ ருஷி பிரம ருஷி யான பின்னர்-ஷத்ரியத்வம் – அரசருடைய தன்மை பின் நாட்டிற்றில்லை அன்றே?
எதிர்த்தலையில் -பும்ஸத்வத்தை -ஆண் தன்மையை அழித்துப் பெண்ணுடை உடுத்தும்படியன்றோ
அவனுடைய புருஷோத்தமனாந்தன்மை இருப்பது? ஆதலால், பின் நாடாது என்றபடி –

‘நன்று; அந்தப்புரத்தில் வசிக்கும் இப்பெண்ணிற்குத் தூது விடுகைக்குப் பறவைகள் உளவோ?’ எனின்,
கூடும் இடம் குறிஞ்சி; அதற்குப் பூதம் ஆகாயம்.
பிரியும் இடம் பாலை; அதற்குப் பூதம் நெருப்பு.
ஊடும் இடம் மருதம்; அதற்குப் பூதம் வாயு.
இரங்கும் இடம் நெய்தல்; அதற்குப் பூதம் தண்ணீர்.
இவ் வகையில், பிரிந்தார் இரங்குவது நெய்தல் ஆகையாலே, பிராட்டி, தானும் தன் தோழிகளுமாக விளையாடும்
பூஞ்சோலைக்குப் புறப்பட்டுச் செல்ல, சென்றதும் தோழிமார் பூக் கொய்கையில் கருத்தூன்றினவர்களாய்த் தனித்தனியே பிரிய,
தலைவனும் தன் நேராயிரம் பிள்ளைகளும் தானுமாக வேட்டைக்குப் புறப்பட்டு வர,
ஏவுண்ட விலங்கு இவனை இப் பூஞ்சோலையில் தனியே கொண்டு வந்து மூட்டி மறைய,
முற்பிறவியிற் செய்த நல்வினைப் பயனால் இருவருக்கும் புணர்ச்சி உண்டாக,
பின்னர், கூட்டின தெய்வம் பிரிக்கப் பிரிந்து,
‘இனி, இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேண்டும்,’ என்னும் ஆற்றாமை பிறந்து,
தன் அருகிலுள்ள தோழிகள் ‘எம்மின் முன் அவனுக்கு மாய்வர்’ என்கிறபடியே தளர்ந்தவர்கள் ஆதலின்,
கால்நடை தருவார் இல்லாமையாலே, அப் பக்கத்தில் வசிக்கின்ற விலங்குகள் சிலவற்றைப் பார்த்து,
‘இவை வார்த்தை சொல்ல மாட்டா,’ என்னுமது அறியாதே, ‘இவற்றுக்குப் பக் ஷபாதம் உண்டாய் இருந்தது ஆகையாலே,
இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக,
இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்.
இவ்விடத்தில் ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும்,
ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் சாதி வீறு பெற்றபடி’ என்று பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.

‘பிரிந்தவன் மீண்டு வருவான் என்று நினைந்து தூது விடுதற்குக் காரணம் யாது?’ எனின்,
தன் மேன்மையாலே இத்தலையில் தன்மை பாராதே வந்து கலந்தான்;
கலந்த பின்னர் இவளிடத்துள்ள குற்றங்களைக் கண்டான்; கண்டு பிரிந்தான்;
பிரிந்த அளவிலே ‘இது அன்றோ இருந்தபடி’ என்று அநாதரித்தான்.
கண்ட தலைவி, ‘குற்றங்களைப் பார்த்தல் மட்டுமே அன்றிச் செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துக்கோடல் என்ற
குணவிசேடம் தம் ஒருவருக்கே அடையாளமாக இருப்பது ஒன்று உண்டு; அதனை அறிவிக்க வருவான்,’ என்று
அந்த அபராத ஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.

அநாதி காலம் இவ்வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் –
இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து,
இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும்.
அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.

————————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பக்தி கார்யமான யுக்தியை காமுக வாக்ய ரூபேண அருளிச் செய்தது -புருஷனை புருஷன் ஸ்நேஹிக்கும் அதிலும்
காம மஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே ஸ்த்ரீக்கு புருஷ விஷய ஸ்நேஹம் பள்ளமடையாகையாலே
தாத்ருசமான அதி மாத்ர ப்ராவண்ய ஸூசகம் ஆகையால் –
குட ஜிஹ்விகா ந்யாயத்தாலே -மருந்தை நாவுக்கு இனிய வெள்ளத்தில் வைத்துக் கொடுப்பது –
விஷய ப்ரவணரான சம்சாரிகள் பரிக்ரஹித்து உஜ்ஜீவிப்பார்கள் என்னுமத்தாலும் அருளிச் செய்வர்
மேலே விஸ்தார சங்கதி – திரு உலகு அளந்து அருளினவன் இத்யாதியால் –
ஸ்ரீ பிள்ளான் கீழே அயர்ப்பிலன் இத்யாதி மானஸ அனுபவத்துக்கும் ஸ்ரீ நஞ்சீயர் நிர்வாகத்துக்கும் சேர வியாக்யானம் –

மருத்துவனாய் நின்ற -ஆச்சார்யாதி ரூபேண சம்சார ரோக பிஷக்காய் நின்ற நீல மணி போலே கறுத்த நிறத்தை யுடையவன்
பாஹ்ய சம்ச்லேஷம் கிடையாமையாலே -ஸித்தமான ஸ்வ அனுபவம் அசத் கல்பமாய் தோன்றி கலக்கம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்று இருக்கிற இவரை அவ்வறிவு அகார்யகரமாம் படி கலங்கப் பண்ணும் வைலக்ஷண்யம் –
ஸ்வ யத்ன சாத்தியமான ஞான பக்திகளால் வந்த கலக்கமாகில் இறே அளவு பட்டு இருக்கும் –
விலக்ஷண விஷயத்தைப் பிரிந்து பொறுக்க மாட்டாமல் வேண் யுத்க்ரதநத்திலே ஒருப்படடாள்-
கோதாவரி நதிக்குப் பக்ஷிகளைக் கொண்டு தேசாந்தரத்தே யாகிலும் அறிவிப்பிக்கைக்கு சக்தி உண்டு
என்று இருக்கிறாள் கலக்கத்தாலே –

அநந்யார்ஹ சேஷத்வம் -அனன்யா ராகவேணாகம் /
யஸ் த்வயா ஸஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -என்றும் ந ச சீதா த்வயா ஹீநா -என்றும்
விஸ்லேஷத்தில் தரியாமையும் சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்-
நைஷா பஸ்யதி–தந்யா பஸ்யந்தி மே நாதம் -இத்யாதிட்டாலே தத் ஏக போகத்வமும்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா -என்கையாலே தத் ஏக நிர்வாஹயத்வமும் –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –தபஸஸ் ச அநுபாவ நாத்-என்கையாலே அநந்ய சரண்யத்வமும்-
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியாய் அப்ராக்ருதமான வடிவழகு பண்ணும் என்று சொல்ல வேண்டா இறே –

போக்கு எல்லாம் பாலை புணர்தல் நறும் குறிஞ்சி ஆக்கம் சேர் ஊடல் அணி மருதம் நோக்குங்கால்
இல்லிருக்கை முல்லை இரங்கல் நறு நெய்தல் சொல்லிருக்கும் ஐம்பால் தொகை
போக்கு -தனிப்போக்கு -புணர்ந்து உடன் போக்கு இரு வகை -கொடும் காற் சிலையா -திரு விருத்தம் -37-தனிப் போக்கு
நானிலம் வாய்க்க கொண்டு –திரு விருத்தம் -26-புணர்ந்து உடன் போக்கு
காடு சார்ந்த நிலம் முல்லை /நாடு சார்ந்த நிலம் மருதம் /மலைச்சார்வு -குறிஞ்சி நிலம் /
கடல் சார்வு நெய்தல் நிலம் -நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை -தெறு சம்ஹரிக்கிற

ப்ராஹ்மம் தைவம் ப்ராஜாபத்யம் ஆஸூரம் ஆர்ஷம் காந்தர்வம் ராக்ஷஸம் பைசாயம் -8-வகை விவாஹம்
உத்யானம் என்றது பின்னை யம் பொழில் சூழ் / திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு /
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவான் /

யாத்ருச்சிக சம்ஸ்லேஷத்துக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்கிறார் –
மேன்மையாலே ஸ்வாதந்தர்யத்தாலே இத்தலையில் தண்மை பாராமல் கலந்தான் –
தோஷ தர்சனத்தைப் பண்ணவே பிரிந்தான் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றதை பற்ற அபராத சஹத்வம் –

——————

தன் பக்கத்திலே தங்கி இருப்பது ஒரு நாரையைப் பார்த்து,
என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னாகக் காரியங்கொள்ள வேண்டும்’ என்று இருக்கும்
தம் வாசனையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி
‘நீ என் நிலையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்,’ என்கிறாள்

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மட நாராய் என்று பேடையை முன்னிடுகிறதுக்கு பாவம் –
இத்தால் பகவத் விஷயத்தில் போலே ஆச்சார்ய விஷயத்திலும் புருஷகாரம் வேணும் என்றபடி –
சேவல் -பும்பஷி / பேடை -ஸ்த்ரீ பஷி

—————–

அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ என்று எனக்கு அருளி
வெஞ் சிறைப் புள் உயர்த்தாற்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ–1-4-1-

அம் சிறைய-
குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாங்கிடக்க, மார்பிலே வாய் வைக்குமாறு போன்று,
பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண வைக்கிறாள்,
நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த மகிழ்ச்சி வடிவிலே தொடை கொள்ளலாம்படி
இருக்கின்றதாதலின், ‘அம் சிறை’ என்கிறாள்.
ஆசாரியனுடைய ஞானத்தை -அநுமித்து -உத்தேசித்துச் சிஷ்யன-உபசத்தி – வணங்குவது போன்று,
இவளும் சிறகிலே கண் வைக்கிறாள்.

மடம்-
ஏவிக் காரியங் கொள்ளலாம்படி பணிவு தோன்ற இருந்தது.
இனி, சம்ச்லேஷத்தாலே -‘புணர்ச்சியாலே துவண்டு தூது போகைக்கு யோக்கியமாம்படி இருக்கை,’ எனலுமாம்.
இனி, ‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் மகளிர்க்குள்ள நான்கு குணங்களுள் ஒன்றான மடப்பத்தையே கூறுகிறாள்
என்று கொண்டு, பிரிவில் துன்பத்தை அறியும் தன் இனமான பேடையைப் பார்த்துச் சொல்லுகிறாள்,’ என்றலும் ஒன்று.

நாராய்-
‘அம்மே!’ என்னுமாறு போன்று இவளும் ‘நாராய்’ என்கிறாள்.

அளியத்தாய்-
அவன் பொகட்டுப் போன சமயத்திலே ஆற்றாமை அறிவிக்கலாம்படி வந்து முகங்காட்டின உன் அருளின் தன்மை இருந்தபடி என்!
அளி-அருள்; கிருபை -‘அருள் பண்ணத் தக்காய்’ என்றபடி.
‘இச் சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின்,
பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், பம்பா தீரே ஹனுமதா சங்கதா (‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ )என்பதாம்.
அச் சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது என்றபடி.

நீயும்-
ச ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன சீதனம் உவாச (‘இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும்
இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’) என்கிறபடியே,
என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் காரியங்கொள்வது.

நின் அம் சிறைய சேவலுமாய்-
அது இட்ட வழக்கான நீயும் நீ இட்ட வழக்கான சேவலுமாகி. ‘திருமகள் கேள்வன்’ என்பது போன்று,
சேவலிடத்துத் தான் அன்பு செலுத்துவதற்குக் காரணம் பேடையே என்பாள், ‘நின் சேவல்’ என்கிறாள்.
பெண்ணை அணைந்து பெற்ற அழகு வடிவிலே தோன்றுகின்றதாதலின், அதனை‘அஞ்சிறை’ என்கிறாள்,

ஆஆ என்று-
‘ஐயோ ஐயோ!’ என்று,
இரண்டும் சேர்ந்திருப்பது தன் துன்பம் நீக்குகைக்கு என்று இருக்கிறாள் ஆதலின், ‘நீயும் நின் சேவலும்’ என்கிறாள்.
எனக்கு- ஏஹீ பஸ்யா சரீராணி (‘முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட தங்களுடைய சரீரங்களை
ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ )போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்.
இனி, ‘அவனோடே கலந்து பிரிந்து, ‘கண்ணாலே காணப்பெறுவது என்று காண்’ என்னும் –
அபேஷையோடே- விருப்பத்தோடே இருக்கிற எனக்கு,’ என்று பொருள் கூறலுமாம்.

அருளி –
இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி.
அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி?
இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம்.
‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க
பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது,
விக்ராந்தஸ்தம் சமாத்தஸ்த்வம் ப்ராஞ்ஞஸ்த்வம் வானர உத்தம (“வானர உத்தமனே, நீ மிக்க பலமுடையவன்;
நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” )என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது.
கேட்ட நாரை, ‘எங்களை இங்ஙனம் கொண்டாகிறது என்? உன் நிலையைக் கண்டு பொகட்டுப் போனவன்
எங்கள் வார்த்தையைக் கேட்கப் போகின்றானோ?
மேலும், நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி (“பிரகிருதி சம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம சாம்யத்தையடைகிறான்” )என்கிறபடியே,
பரமபதத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்?
நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம்
என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல் வார்த்தை சொல்லுகிறாள்:

வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு –
அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும்
அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான்.
விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று
ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.

புள் உயர்த்தான்-
புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;
அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்.

என் விடு தூதாய் –
அவன் ஆள் வரவிட இருக்கக்கடவ எனக்குத் தூதாகி.
இனி, ‘பெருமிடுக்கரான பாண்டவர்களுக்குக் கிருஷ்ணன் தூது சென்றது போன்றது அன்று,
அபலையாய்-அத்யார்த்தையான – மிக்க துன்பத்தையுடையளாய் இருக்கிற எனக்குத் தூதாகச் செல்லுதல்’ என்பாள்
‘என் தூதாய்’ என்கிறாள் எனினும் அமையும்.
க்ரியதாம்- ‘இதனைச் செய் என்று நியமிக்கவேண்டும்’ -என்று இளைய பெருமாள் கூறியது போன்று,
‘நான் ஏவ அன்றே, நீங்கள் போகின்றீர்கள்?’ என்பாள் ‘விடு தூதாய்’ என்றாள்.

சென்றக்கால்
பரார்த்தமாக -‘பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே உங்களுக்கு அன்றோ
பலன் சித்திக்கப் புகுகிறது? என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள்.
இனி, ‘பிறர்க்காகத் தூது போதலால் உங்கள் போக்கு அடிக் கழஞ்சு பெறாதோ?’ என்பாள், அங்ஙனம் கூறுகிறாள் எனலுமாம்.

வன் சிறையில்-
காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால்,
ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங் கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல்.
‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின்,
அரசகுமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாதபோது அவர்கள் வருந்துவார்கள் :
அது போன்று, இவை கட்கும் முகங் கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்;
அதனையே ஈண்டுச் சிறை என்றாள்.
அவன் வைக்கில், வ்யாஸனேஷூ மனுஷ்யானாம் ‘மனிதர்களுக்குத் துன்பம் வந்த போது அவர்கள் அடையும் துன்பத்தைக் காட்டிலும்
இரண்டு மடங்கு அதிகத் துன்பத்தைத் தான் அடைகின்றவன், சிறையில் வைப்பானோ? வையான்’ என்பாள் ‘வைக்கில்’என்கிறாள்.
தலை மேற் கொள்ளுவான் என்பது குறிப்பு.

வைப்பு உண்டால் என் செயுமோ-
‘கிடைக்குமாகில் அது பொல்லாதோ? சிறை இருத்தல் துன்பத்தைத் தருவது ஒன்று அன்றோ?’ எனின்,
பிறருக்காகச் சிறை இருக்கை கிடைப்பது ஒன்றோ?
‘ஆயின், அவ்வாறு இருத்தல் தனக்கு உத்தேஸ்யமாமோ?’ எனின்,
இராவணன் தெய்வப் பெண்களைச் சிறையிட்டு வைக்க,
தான் அவர்கள் காலில் விலங்கைத் தன் காலிலே கோத்துச் சிறை மீட்டவள் அன்றோ?

‘என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில்’ என்பதற்கு,
நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகின்றீர்களோ?
சிறை கட்டுதல், சிங்க விளக்கெரித்தல் செய்யில் செய்வது என்?’ என்று கூசுகைக்கு;
எனக்காகத் தூது போனாரை பரிஷ் வங்கோ ஹனுமதா (‘அனுமானுக்கு என்னாற்செய்யப்படும் இவ்வாலிங்கனமானது’)
என்னுமாறு போன்று, மார்பிலே அணைக்கும் காணுங்கோள்.
நான் அணைய ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப் போகின்றது?’

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆச்சார்யஸ்ய ஞானவத் தாம் அநுமாய தத் உபசத்தி க்ரியதே -ஸ்ரீ பாஷ்ய வசனம்
சிறகு -ஞான கர்மங்கள் / மட -தாயாதி குணங்கள் /நாராய் ஸூத்த ஸ்வ பாவம் /
அது மத்ஸ்யாதிகளை த்யானம் பண்ணிக்க கொண்டு இருக்குமா போலே ஆச்சார்யனுடைய பகவத் த்யான பரதை –
அலை கடல் நீர் குழம்ப அகடாடவோடி அகல் வான் உறிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு
வரு மீனை மறவாமையும் தோற்றுகிறது
மடம் -மூன்று பொருள் -பவ்யத்தை -துவட்சி-ஸ்த்ரீத்வம்
நாராய் -அம்மே -அநிதர சாதாரணமான பரிவும் பிரிய பரத்வமும் உள்ள தாய்-இடம் உள்ள
சங்க விஸ்வாசங்கள் உச்சாரணத்திலே தோற்றும்
பொகட்டுப் போன சமயத்தில் வந்து முகம் காட்டினத்துக்கு த்ருஷ்டாந்தம்

வழி பறிப்பார் -பிராட்டியுடைய கண்ணுக்கும் முகத்துக்கும் போலியான தாமரைப் பூவும் செங்கழு நீரும் –
அம் -என்றதுக்கு தாத்பர்யம் பெண் அணைந்த இத்யாதி
அது இட்ட வழக்கான -மட என்றதின் தாத்பர்யம் இட்ட வழக்கான -நின் என்றதின் தாத்பர்யம்
மிதுனமாய் -சமபி வ்யாஹார லப்யம்
ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க நிராசிகீர்ஷா தயா -இறப்புக்குச் செய்யில் ஆன்ரு சம்சயம் சித்திக்கும் இறே-
அளியத்தாய் எனக்கு -கூட்டித் தாத்பர்யம்
தயை பண்ணுகைக்கு குறை அறுகை மிதுனம் அன்றோ -மிதுனத்வேன அவஸ்தாநம்
விக்ரமம் -பராபிபாவன சாமர்த்தியம் / சாமர்த்தியம் –கார்ய கரண சக்தி
ப்ராஞ்ஞதை-இக் குணங்களை யுடையவனுக்குப் பிரிந்து நோவு படுகிற அபலையை உபேக்ஷிக்கை கொத்தை என்கிற ஞானம்

வெஞ்சிறை -புல்லை த்வஜமாக -அடையாளம் -வெம் -நிரசன உபயுக்த க்ரூர்யமும் சொல்லுகையாலே –
வெம் சிறகுக்கும் புள்ளுக்கும் விசேஷணம் -விரோதியைப் போக்குகைக்கும் ஆளுண்டு
என் வீடு-அபிமதையான தான் -அபலையான தான் -இரண்டு அர்த்தம்
சென்றக்கால் –இரண்டு அர்த்தம் -பரார்த்தமாகவும் -எனக்கு முன்னே என்றும்
சிறை கட்டுதல் -ப்ரஹ்மாஸ்திரத்தாலே கட்டுதல்
சிங்க விளக்கு எரிக்கை -வாலிலே சீலையைக் கட்டி எரிக்கை -ஸிம்ஹ ஆகாரமான ப்ரதிமையிலே விளக்கு எரிக்கை –
லோகத்தில் சிங்க விளக்காவது பத்து விரலிலும் சீரையைச் சுற்றி எண்ணெயை விட்டுக் கொளுத்துகை-
தலையிலே சாணியை வைத்து விளக்கு யேற்றுகை -சரீரம் எங்கும் பந்தம் கட்டி தஹிக்கை-
எல்லாவற்றாலும் அவமதி பண்ணுவது தாத்பர்யம்
பரிசிலாவது -சந்தோஷ அதிசயத்தால் கொடுக்கும் உசிதம்
ஸூந்தரீ ரகு நாதஸ்ய ஸூரஸ்த்ரீ துக்க சாந்தயே தசா நநஸ்யா பவநே தச மாசாநுவாச ஹா -என்பதால்
பரார்த்தமாக சிறை இருக்கை நல்லது -தன் ஸ்வ பாவத்தைக் கொண்டு அருளிச் செய்கிறாள்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: