ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-8-

‘உடலை விட்டு உயிர் நீங்குவதற்கு ஒரு நாள் முன்னராயினும் இறைவனைப் பற்றும்படி-ஆஸ்ரயிக்கும் படி – கூறுகின்றீர்;
நீண்ட காலமாக நாங்கள் பண்ணி வைத்த பாவங்கள் விலக்காவோ? இனி, அவனைப் பற்றுவதற்குக் காலந்தான் உண்டோ?’ என்ன,
‘நீங்கள்-ஆஸ்ரயணத்திலே – பற்றுவதற்கு ஒருப்படவே பாவங்கள் அடங்கலும் அழிந்து விடும்;
திருமகள் கேள்வனைப் பற்றுவது ஆகையாலே காலங்கழிந்தது என்று இருக்கவும் வேண்டா;
நீங்கள், ‘தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி, நடக்கும்போது-(பெரிய திருமொழி. 1. 3 : 5.)
அக்காலோடே சாயவும் அமையும்,’ என்கிறார்.

நாளும் நின்று அடும் நம பழமை அம் கொடு வினை யுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகம் மலம் அறக் கழுவி
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலங் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–1-3-8-

நாளும் நின்று அடும்-
நாள்தோறும் இடைவிடாமல் நின்று வருத்துகின்ற;
பரமாணுவைச் சேர்ந்த பாரிமாண்டல்யம் முதலியவைகள் நித்தியமாக இருக்கவும் நித்திய பரதந்திரமாய் இருக்குமாறு போன்றும்,
இறைவனுடைய ஸ்வரூபத்தைப் போன்று அவன் குணங்களும் நித்தியமாக இருக்கவும்
அக்குணங்கள் நித்திய பரதந்திரமாக இருக்குமாறு போன்றும் நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு,
அசித் சம்சர்க்கமும்–உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால்,
அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார்.
நம.த்விஷந்த பாபக்ருத்யாம் ( ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும்,
பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ )என்கிறபடியே. பிறரராதாய் -அசல் பிளந்தேறிட வந்தன அல்ல;
நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை.
அதாவது, அபூத பூர்வம் மம பாவி கிம் வா -‘எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? –
சர்வம் சஹே எல்லாம் பொறுக்க வல்லேன்;
மே சகஜம் ஹி துக்கம் – தன் காய் பொறாத கொம்பு உண்டோ? என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம்.

பழமை-
அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை.
அம்-
கொடுமையை நினைந்து சொல்லுகிறார்.
கொடுவினை-
அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள். உடே்ன மாளும்-
பற்றின காலத்திலே அழியும். யதேஷீக தூல மக்னவ் ப்ரோதம் ப்ர தூயே தைவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –
(‘தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ,அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன; ஆச்சரியம்,’) என்றும்,
மேரு மந்த்ர மாத்ரோ அபி (பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேருமலை மந்தரமலை இவற்றின் அளவாக இருந்தாலும்,
கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன,’) என்றும் வருகின்ற பிரமாணங்களை அறிக.

ஓர் குறைவு இல்லை –
‘மேல் ஒரு விரோதங்கள் – குறையும் வாராது. இனி,-சர்வ அபிமதங்களும் – விரும்பியவை அனைத்தும் எய்தும்,’ எனலும் ஆம்
கௌந்தேய பிரதி ஜாநீஹி ந மே பக்த ப்ரணச்யதி ( ‘அருச்சுனா, இவ்வர்த்தத்தில் நம்மை நம்பிச் சூளுறவு செய்வாய்;
நம்மைப் பற்றினவர்களுக்குக் கேடு வாராதுகாண்; பகவானை அடைவதற்கும் வினை கிடக்கைக்கும்
அக்னி நா சின்ஜேத் ‘தீயால் நனைப்பது’ போன்று, என்ன சேர்த்தி உண்டு? அது பொருத்தம் அற்றது,’ )என்பது பகவான் திருவாக்கு.
துராசாரோ அபி ‘தீய ஒழுக்கமுடைமை,-
சர்வாசீ -அபோஜ்ய போஜ்யங்கள் – உண்ணத் தகாதனவற்றை உண்டல்,
க்ருதக்ன நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தல்,
நாஸ்திக புரா -வேதநெறியினை இல்லை என்றல் ஆகிய இவற்றைப் பல காலம் செய்து போந்தவனான ஒருவன்
சமாஸ்ரயே தித்யாதி (‘இவன் அனுகூலன் ஆவது எப்போதோ!’ )என்று காலம் பார்த்திருக்கும் இறைவனைச் சென்று பற்றுவானாயின்,
பற்றிய அவனை, பின்னர்க் குற்றம் அற்றவனாக நினைத்தல் வேண்டும்; ‘எதற்காக?’ என்னில்,
பிரபாவாத் பரமாத்மனே – இவனைக் குறைய நினைக்கையாவது, பகவானுடைய பெருமையைக் குறைய நினைக்கையேயாம்,’ என்றும்,
ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம் க்வசித் ( ‘வாசுதேவனுடைய அடியார்களுக்கு ஒரு பொழுதும் கேடுகள் இல்லை,’ )என்றும்
கூறும் பாரதத்தையும் இங்கு உணர்க.

ஆதலால், இனி, நீங்கள் செய்யவேண்டுவது ஒன்று உண்டு;
மனன் அகம் மலம் அறக் கழுவி –
சர்வேஸ்வரன், பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவில் கலந்து நின்றால், ‘இவனோ கடவான், மற்றையவர்களோ!’ என்று ஐயப்படுமது தவிர்ந்து,
‘சர்வேஸ்வரனே கடவான்’ என்கிற-அந்தக்கரணி சுத்தி – மனத்தின் தூய்மை உண்டாக வேண்டும்.
‘ஆயின், ஏனைய தேவர்களை இறையவர்களாக எண்ணுதல் கூடாதோ?’ எனின்,
‘திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்’ என்கையாலே, அவ்வாறு எண்ணல் பழுதாம்.

நாளும்-
அபர்வணி – பருவம் அல்லாத காலங்களில் கடல் நீண்டலாகாது என்னுமாறு போன்று ஒரு நியதியில்லை.
நம் திருவுடை அடிகள்தம்-
திருமகள் கேள்வனான ஸ்வாமியினுடைய– இதனால், நித்தியயோகத்தை அருளிச்செய்கிறார்.
‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று
நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி,
‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னாநின்றது கண்டீரே’ என்று அருளிச்செய்தார் பட்டர்.

நலம் கழல்-
அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக்கொள்ளுந் திருவடிகள்.
வணங்கி-
வணங்க.
‘வணங்க; நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினை உடனே மாளும், ஓர் குறைவு இல்லை,’ என முடிக்க.
‘ஆயினும், இறைவனைப் பற்றுதற்குக் காலம் தப்பி நின்றதே?’ என்ன,
மாளும் ஓரிடத்திலும்-
முடிகின்ற ஒரு கணத்திலும்.
வணக்கொடு மாள்வது வலம்-
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் ( ‘இரண்டு துண்டுகளாக வெட்டப்படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கேன்,’ )என்னாது
கிடக்கிற சீரைப்பாயைக் கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும்.
இறைவனையும் பற்றி வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராமல், முடிகிற சமயத்திலே அடையவே பின்னைப் பேற்றோடே தலைக்கட்டும்
ஆதலின்,‘மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலம்’ என்கிறார்.
இதனால், பிறந்தது முதலாக அடைந்தாலும் பலன் இல்லை, இறைவனுக்கு வேறுபட்ட தேவர்கள் பக்கல்;
இறைவன் விஷயத்தில் அடைவதிலே தொடங்கி உடனே முடிந்தாலும் பலன் தப்பாது என்கிறார்.
வலம்-
ஸ்ரேஷ்டம்- சிறப்பு; வரம் என்ற சொல்லின் திரிபு.
இனி, வலம்-வலிமையும் ஆம்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: