ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-1..

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக்குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப்பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபா பந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான
கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார் .

ஆறு கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறி உண்டு போய்க் கடலிலே புகும்;
நீர் வஞ்சிக்கொடி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்;
அவை போலே பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை;
அவன் திருவடிகளிலே தலை சாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே,’ என்கிறார்
அஹம் அஸ்யாவரோ பிராதா குணைர் தாஸ்யம் உபாகதா -என்னுமா போலே
இளைய பெருமாளை ‘நீர் இவருக்கு என் ஆவீர்?’ என்ன, ‘பெருமாளும் ஒரு படி
நினைத்திருப்பர்; நானும் ஒருபடி நினைத்திருப்பன்,’ என்றார்.
‘அவர் நினைத்திருக்கிறபடி என்? நீர் நினைத்திருக்கும்படி என்?’ என்ன,
‘அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர்’ நான் அவர் குணங்களுக்குத்தோற்று அடியேனாய் இருப்பன் என்று இருப்பன்,’ என்றார்.
அப்படியே இவரும் ‘உயர்வற உயர்நலம் உடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுப் பாராய் நெஞ்சே என்கிறார்.

ஆயின், இவர் தாம் முற்படக் குணங்களில் இழிந்து பேசுதற்குக் காரணம் யாது?’ எனில்,
தாம் அகப்பட்ட துறை அக்குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-1-1-1-

உயர்வு இத்யாதி –
பகவத் ஆனந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள் மனிதர்களுடைய ஆனந்தம் தொடங்கிப் ப்ரஹ்மானந்தத்து அளவும் சென்று
பின்னையும் அவ்வருகே உத்பிரேக்ஷித்துக்கொண்டு சென்று பின்னையும் பரிச்சேதிக்க மாட்டாதே
யதோ வாஸே நிவர்த்தந்தே ’ என்று மீண்டனந் இறே –
இது ஆனந்தகுணம் ஒன்றிலும் இறே – குணங்கள் எல்லாம் இப்படியே இ றே இருப்பது –
இக்குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய்ப் பேசுகிறார் இறே இவர்.

உயர்வு-
வருத்தம் –
எல்லோருக்கும் உயர்வு உண்டாகும் போது வருத்தமுண்டு; அப்படி வருந்த வேண்டுமோ?’ என்றால்,
‘உயர்வற உயராநிற்கும்’ – இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் ‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்த சந்தை –
பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை உயர்வு என்கிறது

அற – இன்றியிலே ஒழிய; ஈண்டு
இத்தால் அத்யந்த பாவத்தைச் சொல்லுகிறது அன்று-
பின்னை என் சொல்லுகிறது என்னில் தன்னுடைய உச்சராயத்தையும் இவற்றைப்பார்த்தால்
ஆதித்யன் சந்நிதியில் நஷத்ராத்யாதிகளைப் போலேயும்
மஹா மேரு மலையின் சிகரத்தில் நின்றவனுக்குக் கீழுள்ள-சர்ஷபாதிகள் – கடுகு முதலியவை இருக்குமா போலவும்,
உண்டாய் இருக்கச்செய்தே இல்லை என்னலாம்படி பண்ணினால் தனக்கு ஓர் எல்லை யுண்டாய் இருக்குமோ என்னில் –

உயர்
காலதத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு
வாங் மனஸ் ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி உயரா நிற்கும்
ஆனால் சர்வே ஷயந்தா நிசயா பாத நாந்தாஸ் சமுச்ச்ரயா சம்யோகா விப்ர யோகாந்தா மரணாந்த தஞ்சஜீவிதம்
(செல்வம், அழிதலை முடிவாகவுடையன; உயர்வு, இறங்குதலை முடிவாகவுடையன; சேர்க்கை, பிரிதலை முடிவாகவுடையன;
வாழ்தல், சாதலை முடிவாகவுடையன,)
என்கிறபடியே,இருந்ததோ என்னில் அன்று; -இயத்தா ராஹித்யத்தைச் சொன்னபடி –
(‘உயர்’ என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாமையைக் கூறியபடி.)
இப்படி கரை கட்டாக் காவிரி போல்-(குணங்கள் ) பரந்து இருந்தால் இப்பரப்பு எல்லாம்
பிரயோஜனமாய் இராதே காடு பட்டுக்கிடக்குமோ?’ என்னில்,

நலம் –
கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நன்செய் நிலம் போலெ எங்கும் ஓக்க உபாதேயமாய் இருக்கும்
இங்கு ‘நலம்’ என்றது,
ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது என்னுதல்
குண சமூகத்தைச் சொல்லுகிறது என்னுதல்
ஆனந்தாவஹமான (ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான )விபூதிகளைச் சொல்லுகிறது என்னுதல்-

உடையவன் –
இக்குணங் கள் தன்னை அஸ்தி என்று விடும் அளவு அன்றிக்கே இவற்றை இட்டு நிரூபிக்கவேண்டும்படியாக இருப்பவன்.
அதாவது ஆகந்துகமாக இன்ரிக்கே ஸ்வரூப அநுபந்தியாய் இருக்கும்
(இதனால், இக்குணங்கள் இடையில் தோன்றியவையல்ல; இறைவன் தன்மையோடு சேர்ந்தவைகளாய் இருப்பன என்பதனைத் தெரிவித்தபடி )
ஆழ்வான், பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க்குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார்
‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான்.
இத்தால் ஸமஸ்த கல்யாண குணாதி மாகோ அசவ் (அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்’) என்றபடி –
வர்ஷாயுதை -இத்யாதி
‘எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து
பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;’
தாது நாம் இவ சைலேந்த்ரோ குணநாம் ஆகாரோ மஹான்
(‘மகாத்துமாவாகிய ஸ்ரீ ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று,
எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கின்றான்’);
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே
(அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள் இருக்கின்றன,’) என்றும் வருவனவற்றை இங்கு உணர்தல்தகும்.
ஸ்வாபாவிக அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண
(‘இயற்கையில் அமைந்தனவாய், எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள
கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’ )என்று இதுக்கு ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை –

யவன் அவன் –‘
இப்படி, குணங்கள் கரை புரண்டு இருந்தால் இக்குணங்களாலே தனக்கு நிறமாகும்படி இருக்குமோ
திவ்யாத்மா ஸ்வரூபம் ( இருக்கின்றானோ இறைவன்?’) என்னில், அங்ஙன் இராது –
அஸ் ஸ்வரூபத்தைப் பற்றி குணங்களும் நிறம் பெறவேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது
‘யவன்’ என்ற சொல்லால்.
யதா சைந்தவ கன என்ற பிராமண சித்தியைப் பற்ற யவன் என்கிறார் (உப்புக்கட்டி உள்ளும் புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று,)
இத்தால் குண நிரபேஷமான ஸ்வரூப பிரசித்தியைச் சொல்லுதல்
குண விசிஷ்டமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுதல் –

இதற்கு அவ்வருகே ஒரு உபகாரத்தை சொல்ல அப்பால் ஓர் உபகாரத்தைச் சொல்ல நினைந்து கீழ் நின்ற நிலையை
அமைத்து மேலே தோள்படி கொள்ளுகிறார். அவ்வுபகாரம் தான் எது என்னில்,
மயர்வு அற –
ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.
ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)
விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம்
(தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,)
என்று நம்பிள்ளை அருளிச் செய்வார் –
தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.

மதி நலம் –
ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன்பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –
‘முளைக்கும்போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை
(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று பட்டர் அருளிச் செய்யும் படி –
கர்மா ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்
அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது .
ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க,
ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். என் போலே என்னில் ,
‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –
நிர்ஹேதுகமாக ( ஒரு விதக்காரணமும் பற்றாமல் )அருளிக்கொண்டு நிற்கக் கண்ட இத்தனை,
எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது
பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே
அருளினன்-
இத்தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போலே தானாகவே
அருளிக் கொண்டு நிற்க்க கண்ட இத்தனை – என்றுமாம்
தாது பிரசாதான் மஹிமானம் ஈசன்
(மிக்க பெருமையோடு கூடியவனும் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனுமானபரம்பொருள் )
(தனது நிர்ஹேதுக கிருபையால் எப்பொழுது எவனைப் பார்க்கின்றானோ, அப்பொழுது அவன் சோகம் நீங்கினவன் ஆகின்றான்,’ என்று உபநிடதம் புகலும். )
ஆயின், இத்தலையில் நினைவு இன்றியே இருக்கவும், வந்து அருளினன் -தன் அருள் கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில்,

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி –
தான் அருளாத அன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடகவுடையவன்.
அயர்வாவது -விஸ்ம்ருதி –மறதி. -அஃது இன்றிக்கே இருப்பவர்கள், அயர்வறும் அமரர்கள்.
அவர்கள், நித்தியர்கள்–பிராக பாவத்தைப் பற்றிச் சொல்கிறது ப்ரத்வம்ஸா பாவம் உண்டு இ றே முக்தருக்கு
(மறதி இருந்து பின் நீங்கினவர்கள், முத்தர்கள். அவரின் வேறுபட்டவர்கள் இவர்கள்.)
அமரர்கள்
பகவத் அனுபவ விச்சேதத்தில் தங்கள் உளர் அன்றிக்கே இருக்குமவர்கள்
(ஈண்டு ‘அமரர்கள்’ என்றது, கேவலம் மரணம் இல்லாதவர்கள் என்பதனைக் குறிக்க வந்தது அன்று;
பகவானுடைய அநுபவம் தடைபடுமேயானால், அப்பொழுது தங்களை உள்ளவர்களாகக் கருதாதவர்கள் என்பதனைத் தெரிவிக்க வந்தது.)
அதாவது, பிரிவில் தரியாதவர்கள் என்றபடி. -நச சீதா த்வயா ஹீநா நச அஹம் அபி ராகவா
(இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்; நானும் பிழைக்க மாட்டேன்,’என்பது இளைய பெருமாள் திருவார்த்தை.) ‘
அமரர்கள்’
த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது
( ‘கள்’ விகுதிமேல் விகுதி, சத்தியலோகம் முடிவாக உள்ள இவ்வுலகங்கள் எல்லாம் காற்பங்காகவும்,
மோக்ஷ உலகம் முக்காற்பங்காகவும் உள்ள பெருமையினைக் குறிக்க வந்தது.)
பரம சாம்யா பன்னராய் இருக்கையாலே ஓலக்கம் இருந்தால் ஆயிற்று அவர்களுக்கும் அவனுக்கும் வாசி அறியலாவது
பிராட்டி மாராலேயாதல், ஸ்ரீ கௌஸ்துபம் முதலியவைகளாலேயாதல் சேஷி என்று அறியுமத்தனை. ‘
ஆயின், இப்படி இருக்கிற இவர்கள் பலராகத் தான் ஒருவனாக இப்பதனால், இவர்களை அனுவர்த்தித்திக் கொண்டு
( பின் பற்றிக்கொண்டு) தன்னுடைய சேஷித்வமாம்படி இருக்குமோ என்னில், அதிபதி –
அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’-தொட்டுக்கொள்’ என்ன வேண்டும்படி யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்
ஸ்வாமி வாசகம் என்னுதல் –

அவன்
இதுக்கு அவ்வருகே விக்கிரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப்பாட்டுக் கீழ் நின்ற நிலையினைக் குலுக்கி
‘அவன்’என்று அவ்வருகே போகிறார்.

துயர் அறு சுடர் அடி –
துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்;
ஸமஸ்த துக்க அபநோதந ஸ்வ பாவமான திருவடிகள் –
அதாவது, எல்லா ஆத்துமாக்களினுடைய எல்லாத் துன்பங்களையும் போக்குதலையே தம் இயல்பாகவுடைய திருவடிகள் என்பதாம்.
இனி, எம்பெருமானார் அருளிச் செய்யும் படி –
வ்யாஸநேஷு மனுஷ்யானாம் ப்ருசம்பவதி துக்கித (ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும்
துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’) என்று துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இறே
இத்தால், இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர்.

சுடர் அடி –
நிரவதிக தேஜோ ரூபமான எல்லையற்ற ஒளி உருவமான திவ்விய மங்கள விக்கிரஹத்தைச் சொல்லுகிறது .
சுடர் –
பஞ்ச சத்தி மயமான புகரைச் சொல்லுகிறது
அடி –
சேஷ புதன் சேஷி பக்கலிலே கணிசிப்பது திருவடிகளை இறே
ஸ்தநந்தய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலெ
இவரும் ‘உன் தேனே மலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்-

தொழுது –
நித்திய சமுசாரியாகப் போந்த இழவு எல்லாந் தீரும்படி ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து
எழு –
அசன்னேவ ச பவதி – (கடவுளை உள்ளபடி அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்,’)என்னும் நிலை கழிந்து,
சந்த மேனம் ததோ விது ( கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்,) என்கிறவர்கள்
கோடியிலே எண்ணலாம்படியாக உஜ்ஜீவிக்கப் பார் – அடியிலே தொழாமையால் வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவி என்கிறார்.
என் மனனே–
இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனை இறே முன்பு.
இருவர் கூடப் பள்ளியில் ஓதியிருந்தால், அவர்களுள் ஒருவனுக்கு உதகர்ஷம் உண்டாயின், மற்றையவன் அவனோடே
ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமா போலே
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷாயா (மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும்,
உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ ) என்கிறபடியே,
நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே
அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

பாட்டை முடியச்சொல்லி, ஈற்றில் ‘அவன்’ என்ன அமையாது – அடிதோறும் ‘அவன், அவன்’ என்று ‘சொல்லுவதற்கு கருத்துயாது?’ எனின்,
இவ்வாழ்வார்தாம், இத்திருவாய்மொழியில் ஈஸ்வரத்வமாயிற்று ப்ரதிபாதிக்கிறது
அந்த ஈஸ்வரத்வத்துக்கு ஒரோ குணங்களே நிரபேஷமாய்ப் போந்து இருக்கையாலே சொல்லுகிறார்
(அல்விறைமைத்தன்மைக்கு ஒவ்வோரடியிலும் கூறுகின்ற அவ்வக்குணமே வேறு குணங்களை வேண்டாததாய் இருத்தலின்,
அங்ஙனம் அருளிச்செய்கின்றார்.-என்றவாறு )

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்;
மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி;
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று வாக்ய ஏக பாவத்தால் யோஜிக்கவுமாம்
இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு;
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’-என்று வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்
நம புரஸ்தாத் அத ப்ருஷ்டதஸ்தே , (‘கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’
என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியதுபோன்று,) இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க.

ஆயின், ‘உயர்வற உயர்நலம் உடையவன் அயர்வறு மமரர்கள் அதிபதி’ என்று இறைவனுடைய தன்மைகளை ஒரு சேரக் கூறி,
பின் அவன் செய்த உதவியை ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்ன வேண்டியிருக்க,
‘உயர்வற உயர்நலமுடையவன்’ என்ற அனந்தரம் , ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று
அவ்வளவும் போகமாட்டாமல்-உபகாரத்தின் ஸ்ம்ருதியாலே ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிறார்.

(இப்பாட்டால், ‘இறைவனுக்குக் )குணமில்லை; விக்கிரகம் இல்லை; விபூதி இல்லை’ என்று சொல்லுகின்றவர் எல்லாரும் நிரஸ்தர்
அவர்களை எதிரிகளாக்கிச் சொல்ல வேண்டா; ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கவே பர பக்ஷம் நிரஸ்தமாம் இறே
நெற்செய்யப் புல்தேயுமா போலே, தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இ றே அவர்கள்

‘உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று;
‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று;
‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது;
‘தொழுது எழு’ என்கையாலே பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று;
‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக்கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: