ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – பிரமேய சாரம் –ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் — –

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீணிலத்தீர்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்து அளிக்கும்
பூங்கா வளம் பொழில் சூழ் புடை வாழும் புதுப்புளி மன்
ஆங்காரம் அற்ற அருளாள மா முனி யம்புதமே –தனியன் –

பதவுரை

நீள் நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேய சாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

அவதாரிகை –

சகல ஸாஸ்த்ர நிபுணராய் -தத்வ ஹித புருஷார்த்த -யாதாத்ம்ய வித் அக்ரேஸராய்-
ஸமஸ்த சம்சார சேதன உஜ்ஜீவன காமராய் –
தம்மை அடியிலே அங்கீ கரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
சிரகாலம் சேவை பண்ணி –
தத்வ ஹித புருஷார்த்த விசேஷங்கள் எல்லாம் சரம பர்வ பர்யந்தமாக
அவர் அருளிச் செய்யக் கேட்டு -தந் நிஷ்டராய் இருக்கும் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார்

தம்முடைய பரம கிருபையால் சம்சாரி சேதன உஜ்ஜீவன அர்த்தமாக சகல சாஸ்திரங்களிலும் ஓர் ஒரு பிரதேசத்தில்
தாத்பர்ய ரூபேண ப்ரதிபாதிக்கப் படுக்கையாலே சகலருக்கும் அறிய அரிதாம் படி இருக்கிற அர்த்த விசேஷங்களை
ஸங்க்ரஹித்து ஞான சாரமாகிற பிரபந்த முகேன அருளிச் செய்து தலைக்கட்டின
அநந்தரம்

சகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் ஆகையாலே
பிராமண சாரமான ஸ்ரீ திருமந்த்ரத்தால் பிரதிபாதிக்கப்படுகிற
ப்ரமேயங்களில் சார அம்சத்தை ஸங்க்ரஹித்து இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

ஆகை இறே
இப் பிரபந்தத்துக்கு ப்ரமேய சாரம் என்று திருநாமம் ஆயிற்று –

—————————————–

இதில் ஸ்ரீ திரு மந்த்ரத்துக்கு ஸங்க்ரஹமான ப்ரணவத்தாலே ப்ரதிபாதிக்கப்படுகிற
ப்ரமேயத்தில் சாராம்சத்தை அருளிச் செய்கிறார்

அவ் வானவருக்கு மவ் வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சி யிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-

பதவுரை:

அவ் வானவர்க்கு –“அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு
மவ் வானவரெல்லாம் –‘ம” என்னும் எழுத்துக்குப் பொருளான உயிர்கள் எல்லாம்
அடிமை என்று–அடிமைப் பட்டவர் என்று
உவ் வானவர் –ஆசார்யர்கள்
உரைத்தார் –கூறினார்கள்
இவ்வாறு –அவர்கள் கூறிய இம் முறைகளை
கேட்டு –தெரிந்து கொண்டு
இருப்பார்க்கு –தெரிந்தபடி நிலை நிற்பார்க்கு
ஆள் என்று –அடிமை என்று
கண்டிருப்பர் –தங்களை அறிந்து கொண்டவர்
மீட்சி யில்லா –மீண்டும் பிறவாத
நாடு –திரு நாட்டில் போய்
இருப்பார் என்று –நித்யர், முக்தர் முதலிய அடியார்களுடன் சேர்ந்திருப்பாரென்று
நான் –எம்பெருமானாருடய அடியனான நான்
இருப்பன் –நம்பி இருப்பவன்

அவ் வானவருக்கு
அகார வாச்யனானவனுக்கு –

அ இதி ப்ரஹ்ம -என்று அகாரத்தை ப்ரஹ்ம சப்த வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனோடே
சாமாநாதிகரித்துச் சொல்லிற்று இறே ஸ்ருதி –

அந்த சாமாநாதிகரண்யம் தான் வாஸ்ய வாசக சம்பந்த நிபந்தம் இறே

ஸமஸ்த சப்த மூலத்வாத காரஸ்ய ஸ்வபாவத -ஸமஸ்த வாஸ்ய மூலத்வாத் ப்ரஹ்மணோ பிஸ்வ பாவத –
வாஸ்ய வாசக சம்பந்த ஸ்தயோரர்த்தாத் பிரதீயதே -என்னக் கடவது இறே

மவ் வானவர் எல்லாம்
மவ் வானவர் என்று மகார வாஸ்யரான ஜீவாத்மாக்களைச் சொல்லுகிறது
மகாரோ ஜீவ வாசக -என்னக் கடவது இறே

இது தான்
ஏக வசனமாய் இருந்ததே யாகிலும்
ஜாத்யேக வசனமாய்க் கொண்டு சமஷ்டி வாசகமாய் இருக்கையாலே
த்ரிவித ஆத்ம வர்க்கத்தையும் சொல்லக் கடவதாய் இருக்கும் –
ஆகையாலே மவ் வானவர் எல்லாம் என்கிறார் –

உவ் வானவர்
உகார வாஸ்யரானவர் –
இத்தால்
ஆச்சார்யரைச் சொல்லுகிறது எங்கனே என்னில்

உகாரம் ஸ்ரீ லஷ்மீ வாசகமாக ஸாஸ்த்ர சித்தமாகையாலும் –
அவள் தனக்கு கடகத்வம் ஸ்வரூபம் ஆகையாலும்
ஸ்ரீ ஆச்சார்யருக்கும் கடகத்வமே ஸ்வரூபம் ஆகையாலும்
தத் சாதரம்யம் உண்டாகையாலே –
இவனுடைய கடகத்வத்துக்கு மூலம் அவள் திருவடிகளின் சம்பந்த விசேஷம்
ஆகையாலே தத் ப்ரயுக்தமான ஐக்யம் உண்டு இறே

ஆகையால்
தத் சாதர்ம்யத்தாலும் –
தத் சம்பந்த ப்ரயுக்த தத் ஐக்யத்தாலும்
ஸ்ரீ ஆசார்யனை உகார வாச்யன் என்கிறது-

ஸ்ரீ எம்பெருமானார் ஒரு நாள் உகப்பிலே ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்ததாக அவருடைய குமாரரான
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த அர்த்த விசேஷங்கள் எல்லாம் ப்ரதிபாதிக்கிற
ஸ்ரீ பிரணவ ஸங்க்ரஹம் ஆகிற பிரபந்தத்தில்
ஸ்ரீ ஆச்சார்யனை உகார வாச்யனாகச் சொல்லா நின்றது இறே

இவரும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே அவர் அருளிச் செய்யக் கேட்டு இருக்கும் அது கொண்டு இறே
இப்பிரபந்தத்தில் இப்படி அருளிச் செய்தது –

அடிமை என்று உரைத்தார் –
சேஷம் என்று அருளிச் செய்தார் –
சம்பந்த ஞானம் பிறப்பிக்கை இறே கடகர் க்ருத்யம் இறே –

ஸ்ரீ ஈஸ்வரன் சேஷியாய் இத்தலை சேஷமாய் இருந்தாலும்
இஸ் சம்பந்தத்தை ஆச்சார்யன் உபதேசத்தால்
உணர்த்தின போது இறே இவனுக்கு பிரகாசிப்பது –

ஆகையால்
அவ் வானவர்க்கு
மவ் வானவர் எல்லாம் அடிமை என்று
உவ் வானவர் உரைத்தார் என்கிறார் –

இவ்வாறு கேட்டு இருப்பார்க்கு
இது தான் உபதேச கம்யமாகையாலே இப் பிரகாரத்தை உபதேச முகத்தாலே கேட்டு
தன்னிஷ்டராய் இருப்பார்க்கு-என்கிறார் –

ஆள் என்று கண்டிருப்பார்
அதாவது –
அப்படி இருப்பார்க்கு சேஷம் என்று தங்களை தர்சித்து இருக்குமவர்கள் என்கை –

கீழ்ச் சொன்ன ஸ்ரீ பகவத் சேஷத்வம்
தத் காஷ்டையான ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமாய் இருக்கையாலே இறே
இவர் இப்படி அருளிச் செய்தது –

ஸ்ரீ திரு மந்திரத்தில் பத த்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற
அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரண்யத்வ -அநந்ய போக்யத்வங்களாகிற ஆகார த்ரயமும்
ததீய அந்வய பர்யந்தமாய் இறே இருப்பது –

இது தான் மூன்று பதத்திலும் ஆர்த்தமாக வரும் அத்தனை இறே –
ஆகையால் இப்பதத்தில் அர்த்தமாக ப்ரதிபாதிக்கப்படுகிற இத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆக இப்படி
தம் தங்களை ததீய சேஷத்வ பர்யந்தமாக தர்சித்து இருக்குமவர்கள் –

மீட்சியிலா நாடு இருப்பார் என்று இருப்பன் நான் —
புநரா வ்ருத்தி இல்லாத ஸ்ரீ திரு நாட்டிலே போய்
அடியார்கள் குழாங்களுடனே கூடி இருக்குமவர்கள் என்று பிரதிபத்தி பண்ணி இருப்பன் நான் –

நான் என்கையாலே
ஸ்வ பிரதிபத்தி விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சேவித்து
சர்வஞ்ஞராய் –
பரம ஆப்தராய் இருக்கையாலே
தாம் அறுதி இட்டதே அர்த்தம் என்று லோகம் பரிக்ரஹிக்கும் படியான மதிப்பர் ஆகையாலே இறே-
என்று இருப்பன் நான்- என்று அருளிச் செய்தது –

——————————————————

மகார வாஸ்யரில்-பத்த சேதனரானவர்களுக்கு சம்சாரம் ஒழுக்கு அறாமல் செல்லுகைக்கு அடி
சதாச்சார்ய சமாஸ்ரயணம் இல்லாமை -என்கிறார் –

குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-

பதவுரை:-

குலம் – தொண்டர் குலம்
ஒன்று – ஒன்றே உளது
உயிர் – தொண்டுத் தன்மையைக் கொண்ட உயிர்கள்
பல – எண்ணில் அடங்காதன
தம் குற்றத்தால் – அவ் வுயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளால்
இட்ட – இறைவனால் இட்டு வைக்கப்பட்ட
கலம் – உடலாகிற பாண்டம்
ஒன்று – ஒரே மூலப் பொருளால் ஆன ஒன்றேயாகும்
காரியமும் – உயிர்களின் செயல்களும்
வேறாம் – வினை வேறுபாட்டால் வெவ்வேறு வகையாக இருக்கும்
பலம் ஒன்று – ஒரு பயனையும்
காணாமை – கருதாமல்
காணும் – உயிர்களைக் கடாக்ஷிக்கும்
கருத்தார் – ஆசார்யனுடய
திருத் தாள்கள் – திருவடிகளை
பேணாமை காணும் – பற்றாமை அன்றோ
பிழை – பிறப்புத் தொடர்வதற்கான குற்றம்

குலம் ஓன்று
நிருபாதிகமாய்-நித்யமாய் இருக்கும் குலம் ஓன்று —
அதாவது
கீழ்ச் சொன்ன சேஷத்வம் -தொண்டக் குலம் -இறே

உயிர் பல
ஆத்மாக்கள் அநேகர் –
அதாவது –
அந்த சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்மாக்கள் அசங்க்யாதர் என்கை –

தம் குற்றத்தால் இட்ட கலம் ஓன்று
அதாவது
தங்கள் பண்ணின புண்ய பாப ரூப கர்மம் அடியாகத் தங்களை ஈஸ்வரன்
இட்டு வைத்த சரீரமாகிய கலம் ஓன்று என்கை –

தம் குற்றத்தால் இட்ட கலம் ஓன்று-என்கையாலே –
ஈஸ்வரன் இவ் வாத்மாக்களை சரீரத்தில் இடுவது
அவ்வவருடைய கர்மங்களை ஆராய்ந்து அதுக்கு ஈடாக என்னும் இடம் சொல்லுகிறது –

கலம் ஓன்று என்றது –
தேவாதி ஜாதி பேதத்தாலும் –
தத் தத் அவாந்தர பேதத்தாலும் அநேகமாய் இருந்ததே ஆகிலும்
எல்லாம் பிரகிருதி பரிணாம ரூபம் என்னுமதில் பேதம் இல்லாமையால் –

காரியமும் வேறாம்
அத் தேக பரிக்ரஹத்தால் கொள்ளும் காரியமும் பின்னமாய் இருக்கும்
கார்யமாவது -தத் கர்ம பல அனுபவம் இறே

அது வேறாகையாவது-
புண்ய பல அனுபவமும் –
பாப பல அனுபவமும் –
உபய பல அனுபவமாய்க் கொண்டு வேறுபட்டு இருக்கை –

காரியமும் -என்றது –
குலம் ஒன்றாய் இருக்க
தத் கார்யமான பல அனுபவமும் பலவகைப்பட்ட இருக்கும் என்று நினைத்து –
சேஷத்வமே குலமான ஆத்மாக்களுக்கு –
புண்ய பாப ரூப கர்ம சம்பந்தமும் –
அடியான தேஹ பரிக்ரஹமும் –
அதின் கார்யமான ஸூக துக்க அனுபவமும் –
இப்படி ஒழுக்கு அறாமல் நடப்பான் என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் –

பலம் ஓன்று காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள் பேணாமை காணும் பிழை –
அதாவது –
ஓர் ஆத்மாவை அங்கீ கரிக்கும் அளவில்
க்யாதி லாப பூஜைகள் ஆகிற பலம் ஒன்றில் கண் வையாதே
இவ் வாத்மாவினுடைய உஜ்ஜீவனமே பிரயோஜனமாக
விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணும் நினைவை யுடையவனான
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை ஆஸ்ரயியாமை காணுங்கோள் –
சம்சாரம் அவிச்சின்னமாய்ச் செல்லுகைக்கு அடியான குற்றம் என்கை –

பலம் ஓன்று காணாமை காணும் கருத்தார் -என்கையாலே
ஸ்ரீ ஆச்சார்யர் வைபவம் சொல்லுகிறது –

திருத்தாள்கள் பேணாமை -என்ற இடத்தில் –
பேணுகையாவது -விரும்புகையாய் –
பேணாமையாவது -விரும்பாமை யாகையாலே
ஆஸ்ரயியாமையைச் சொல்லுகிறது –
பிழை -குற்றம் –

——————————

ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் நடக்குமாகில் சேஷத்வமாகிற குலம் கொண்டு என்ன பிரயோஜனம்
திருவுலகு அளந்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் தத் காலத்திலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த ஆத்மாக்களையும்
ஸ்வ சேஷமாக யுடையவன் அன்றோ என்கிறார் –

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-

பதவுரை:-

பலம் கொண்டு – இறைவனிடத்தில் செல்வம் முதலிய வேறு வேறு பயன்களைப் பெற்றுக் கொண்டு
மீளாத – ஆன்மீக அறிவால் திருந்தாத
பாவம் – தீவினை
உளதாகில் – இருக்குமானால்
குலம் கொண்டு – அடிமை என்னும் உறவு கொண்டு
காரியம் என் கூறீர் – என்ன பயன் சொல்லுவீராக!
தலம் கொண்ட – உலகமெல்லாம் அளந்து கொண்ட
தாளிணையான் – திருவடிகளை உடையவனான
அவன் – அவ் வுலகளந்தான்
அன்றே – அளந்து கொண்ட அக் காலத்திலேயே
யாவரையும் – எல்லா உயிர்களையும்
ஆளுடையவன் – தனக்கு அடிமையாகக் கொண்டான்
அன்றே – அல்லவா?

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
ஐஸ்வர்யாதிகளில் ஏதேனும் ஒரு பலத்தைக் கொண்டு -வேண்டாம் என்றாலும் அதில் நின்று மீளாமல்
பற்றி நிற்கும் படியான பாபம் உண்டாய் இருக்குமாகில்
அன்றிக்கே
பாவம் என்றது –
பலத்தைக் கொண்டு இதில் நின்றும் மீளாமல் பற்றி நிற்கும்படியான
நினைவு உண்டாய் இருக்குமாகில் என்னவுமாம்

குலம் கொண்டு காரியம் என் கூறீர் –
ப்ரயோஜனாந்தர ருசி கிடக்குமாகில்
ஸ்ரீ ஈஸ்வரன் இவ்வாத்மாவை சம்சாரத்தில் துவக்கு அறுத்துத் தன் திருவடிகளில் வாங்காமையாலே –
சேஷத்வமாகிற குலத்தால் என்ன பிரயோஜனம் உண்டு சொல்லுங்கோள்-என்கை –

அது என் –
சேஷத்வ ஞானம் உண்டாகில் இவன் நம்முடையவன் என்று அபிமானித்து
ஈஸ்வரன் கார்யம் செய்கைக்கு உடல் ஆகாதோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் மேல்-

தலம் கொண்ட தாளிணையான் அன்றே
பூமியையும் உபரிதன லோகமுமான சகல ஸ்தலத்தையும் அளந்து கொண்ட திருவடிகளை இரண்டையும் உடையவன் –
அப்படி அளந்து கொண்ட காலத்தில்

தனை ஒழிந்த யாவரையும் ஆளுடையான் அன்றே யவன் —
தன்னை ஒழிந்த சகல ஆத்மாக்களையும் தனக்கு அடிமையாக யுடையவன் அன்றோ அவன் என்கை –

இத்தால்
திரு வுலகு அளந்து அருளின போது எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து
அப்போதே எல்லாரையும் தனக்கு சேஷமாகக் கொண்டவனாக நினைத்து ஸந்துஷ்டானாக நின்றவன் –
இத்தை வரையாதே இவ்வாத்மாக்களை சம்சாரத்தில் நின்றும் எடாது இருக்கிறது
இவர்களுடைய அந்ய பரதை அறும் தனையும் பார்த்து இறே

ஆகையால் இவன் தனக்கு சேஷத்வம் உண்டானாலும்
ப்ரயோஜனாந்த பரதை அற்றால் ஒழிய
இவனை சம்சாரத்தில் நின்றும் அவன் எடாமையாலே
ப்ரயோஜனாந்தர ருசி கிடக்க யுண்டான
சேஷத்வ ஞானத்தால் என்ன பிரயோஜனம் உண்டு என்றதாயிற்று –

ஆக
மூன்று பாட்டாலே ஸ்ரீ பிரணவ அர்த்தத்தை அருளிச் செய்தார்

இனி மேல்
நாலு பாட்டாலே நமஸ் சப்தார்த்தை அருளிச் செய்கிறார்

நமஸ் சபதார்த்தம் அநந்ய சரண்யத்வம் இறே
அதுக்கு உபயோகியான அர்த்த விசேஷங்களை யுபபாதித்து அருளுகிறார் –

————————————-

சேஷியானவன் திருவடிகளை தானே தருகையால் ஒழிய
உபாயாந்தரங்களால் காண விரகு உண்டோ என்கிறார்-

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒரு மத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-

பதவுரை:

ஒரு மத்தால் – மந்திர மலையாகிற ஒரு மத்தால்
முந்நீர் – ஆழ் கடலை ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலந்து)
கடைந்தான் – தேவர்களுக்காகக் கடைந்தவனானான்
அடைத்தான் – சீதாப் பிராட்டிக்காகக் கடலை அணை செய்தவனானான்
முதல் படைத்தான் – படைப்புக் காலத்தில் முதன் முதலாக அந்த நீரைப் படைத்தவனானான்
அந்நீர் – அந்த நீரில்
அமர்ந்தான் – பள்ளி கொண்டருளினான்
அடி – இத்தகையவரது திருவடிகளாகிற
இறை தாள்கள் – இறைவனுடைய திருவடிகள் தாமே தரும் அத்தால் அன்றி
தருகையாகிற அதனால் ஒழிய
கருமத்தால் – தன் முயற்சியால் சாதிக்கப்படும் கரும யோகத்தாலும்
ஞானத்தால் – அப்படிப்பட்ட ஞான பக்தி யோகங்களினாலும்
காணும் வகையுண்டே –காணும் முறைகள் உண்டோ?
இல்லை.

கருமத்தால் ஞானத்தால் காணும் வகையுண்டே
அதாவது –
கர்ம யோகத்தாலும்-ஞான யோகத்தாலும் -பக்தி யோகத்தாலும் காணும் பிரகாரம் உண்டோ -என்கை –

ஞானத்தால் -என்கிற இத்தாலே
பக்தியும் சொல்லிற்று –
பக்திஸ் ச ஞான விசேஷம் -என்கிறபடி அது ஞான விசேஷம் ஆகையாலே –

கர்மணைவ ஹி சம்வித்திம் ஆஸ்திதா ஜநகாதய-என்றும்

நஹி ஜ்ஞாநே ந சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே -என்றும்

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு மாமேவைஷ்யஸீ யுக்த்வைவ மாத்மானம் மத் பராயணம் -என்றும்

கர்மாதிகளில் ஓர் ஒன்றை பகவத் பிராப்தி ஹேதுவாகச் சொல்லா நிற்கும் –
இவற்றால் காணும் வகை யுண்டோ என்று இவர் அருளிச் செய்தது —
இவற்றினுடைய ஸ்வரூபத்தையும் பகவத் வைபவத்தையும் தெளியக் கண்டவர் ஆகையாலே
இவை பல வியாப்தமாய்ப் போருகிறது-
பிரபத்தி இவற்றுக்கு அங்கமாய் நின்று கார்யம் செய்து கொடுக்கையாலே என்று கருத்து –

தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் –
அதாவது –
சேஷியானவன் திருவடிகளை தானே தருகை யாகிறவற்றால் ஒழிய என்றபடி –

இறை என்று
பிரதம பதத்தில் சொன்ன அகார வாச்யனான சேஷியைச் சொல்லுகிறது

தாள்கள் தரும் அத்தால் அன்றி -என்றது –
திருவடிகளே உபாயம் என்கிற பிராமண ஸித்தியாலே

பூர்வ வாக்யத்தால் உபாய வர்ணம் சொல்லுகிற அளவில் –
சரணவ் சரணம் ப்ரபத்யே -என்னா நின்றது இறே

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்றும்

கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -என்றும்

அடி மேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் -என்றும்

சரணே சரண் நமக்கு -என்றும்
திருவடிகளே உபாயம் என்னுமத்தை
ஒரு கால் போலே பல காலும் ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

ஒரு மத்தால் முந்நீர் கடைந்தான்
துர்வாச சாப உபஹதராய் வந்து சரணம் புகுந்த இந்த்ராதிகளுக்காக
மந்த்ர பர்வதமாகிற ஒரு மத்தால்
ஒருவராலும் கலக்க ஒண்ணாத ஜல ஸம்ருத்தியை யுடைய கடலைக் கடைந்தவன் –

அடைத்தான்
சீதா முக கமல சமுல்லாசா ஹேதோஸ் சஸேதோ -என்கிறபடியே
பிரிவால் தளர்ந்த பிராட்டி முக கமல விகாசத்துக்காக
நீரைக் கண்டவாறே வெருவியோடும் குரங்குகளைக் கொண்டு
நீரிலே அமிழக் கடவ மலைகளால் –
அப்ரமேயோ மஹோ ததி-என்கிறபடியே
ஒருவராலும் அளவிட ஒண்ணாத ஆழத்தையும் அகலத்தையும்
யுடைத்தான கடலை அடைத்தவன் –

முதல் படைத்தான்
கரண களேபர விதுரராய் –
போக மோக்ஷ -ஸூந்யராய்க்
கிடந்த சம்சாரி சேதனரை
கரண களேபர ப்ராப்தியாலே போக மோக்ஷ பாகிகளாக்குகைக்கா-
அப ஏவ சர்ஜாதவ் -என்கிறபடியே
ஆதியிலே ஜலதத்வத்தை ஸ்ருஷ்டித்தவன்

அந்நீர் அமர்ந்தான்
ஸ்ருஷ்டரான இவர்களுடைய ரக்ஷண அர்த்தமாக –
வெள்ளத் தடம் கடலுள் விட நாகணை மேல் மருவி -என்கிறபடியே
அந்த ஜலத்திலே கண் வளர்ந்து அருளினவன் –

அடி —
அவனுடைய திருவடிகளை –

இத்தால்
பிரயோஜனாந்தர பரராய் இன்று ஆஸ்ரயித்த தேவர்களோடு
நித்ய ஆஸ்ரிதையான ஸ்ரீ பிராட்டியோடு –
நித்ய சம்சாரிகளான சேதனரோடு வாசியற
எல்லாரையும் ரஷித்தவனுடைய திருவடிகளை -என்கை –

ஒரு மத்தால் என்று தொடங்கி
அந்நீர் அமர்ந்தான் அடி இறை தாள்கள் தரும் அத்தால் அன்றிக்
கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டோ –
என்று அந்வயம் –

———————————

சித்த உபாயத்தின் படியைக் கண்டால் உபாயாந்தரங்களை சவாசனமாக விட்டு
அது தன்னிலும்
தன்னுடைய ஸ்வீகாரத்தில் உபாய புத்தி அற்றுத்
தன் வெறுமையை அனுசந்தித்து இருக்குமது
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கிருபா பலம் என்கிறார் –

வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத்ததலையால் வந்த வருள் –5-

பதவுரை:

வழியாவது – சரணாகதி என்னும் வழியானது
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தோன்றினால்
மற்றவை – கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
முற்றும் – எல்லாவற்றையும்
ஒழியா – தடம் தெரியாமல் விட்டிட்டு
அது – கீழ்ச் சொன்ன சரணாகதி வழி
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தேறியதால்
ஓம் என்று – அதில் உடன் பட்டு
இழியாதே – கைக் கொள்ளாமல்
இத்தலையால் – நம்மால் செய்யலாகும் செயல்கள்
ஏதுமில்லை – ஒரு புண்ணியமுமில்லை .ஒரு நல்லதும் இல்லை
என்று – என்று தங்கள் வெறுமையை எண்ணி
இருந்தது தான் – அவ்வொழுக்கத்தில் நின்றது
அத் தலையால் வந்த அருள் – இறைவன் கொடுத்த அருளாகும்

வழியாவது ஓன்று என்றால்
உபாயமாவது ஓன்று என்றால்-
அதாவது
கர்ம ஞான பக்தி பிரபத்திகள் என்று நாலு உபாயமாக சாஸ்திரம் சொல்லிற்றே யாகிலும் –
கர்மாதியான மூன்றும் கார்ய சித்தியில் ஸ்ரீ ஈஸ்வரன்
கை பார்த்து இருக்குமவன் ஆகையாலே அவற்றுக்கு சாஷாத் உபாயம் இல்லை –
ஆன பின்பு சாஷாத் உபாயமாவது -சதுர்த்த உபாயம் ஓன்று என்று சொன்னால் என்கை –

மற்றவையும் முற்றும் ஒழியா
அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிறபடியே
மற்றும் உண்டான உபாயாந்தரங்கள் எல்லாவற்றையும் ஓன்று ஒழியாமல் விட்டு -என்கை –

மற்றவையும் என்று –
சித்த உபாய வ்யதிரிக்தமான சகல உபாயங்களைச் சொல்லுகிறது –

முற்றும் என்று –
அவற்றை விடும் போது நிஸ் சேஷமாக விட வேண்டும் என்கிறது –

ஒழியா -என்றது
ஒழிந்து என்றபடியாய் பரித்யஜித்து என்றபடி-

அது ஓன்று என்றால்
அந்த சித்த உபாயமானது
ஏக பதத்தில் சொல்லுகிறபடியே
சேதனருடைய ஸ்வீ காரத்தில்
உபாய புத்தியையும் சஹியாதபடி அத்விதீயம் ஒன்றால்

ஓம் என்று –
உடன்பட்டு

இழியாதே
நம்முடைய ஸ்வீ காரம் உண்டானால் அன்றோ அது கார்யகரமாவது என்று
இவ் வழியாலே தான் இவ்வுபாயத்துக்குள் இழியாதே

இத் தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
இப் பேற்றுக்கு உடலாகச் சொல்லலாவது இத் தலையால் ஒன்றும் இல்லை என்று
தான் வெறுமையை அனுசந்தித்து இருந்த அவ்விருப்புத் தான்

அத் தலையால் வந்த வருள் —
அளிவருமருள்–என்கிறபடியே
நிர்ஹேதுகமாக அவன் நினைவாலே வந்த கிருபையினுடைய பலம் என்கை

அருள் என்றது
அருளின் பலம் என்கை –

———————————-

ஸ்வரூப யாதாம்ய தர்சியாய் இவ் வுபாயத்தில் அதிகரித்தவன் அனுசந்தித்து இருக்கும்
பிரகாரத்தை ஸ்வ கதமாக அருளிச் செய்கிறார் –

உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-

பதவுரை:

உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி
உணரில் – தெரிந்து கொண்டால்
ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று
நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு
உண்டென்று – இருக்கிறது என்று
விள்ள – வாயினால் சொல்லகூட
விரகிலதாய் – வழி யில்லையாகி விட்டது அல்லவா
விட்டதே – (சக்தி இல்லையாகி விட்டது அல்லவா)
கொள்ள – நம்மிடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டுவன
குறை – குறைபாடுகள்
ஏதும் இல்லார்க்கு – சிறிதும் இல்லாத இறைவனுக்கு
இறையேதும் இல்லாத – சிறிதளவுவேனும் தனக்கென்று ஒன்றுமில்லாத
யாம் – அடிமைத் தன்மையையே வடிவாக உள்ள நாம்
கூறுவது என் – நம்மை காப்பதற்குச் சொல்லும் வார்த்தை என்ன இருக்கிறது
சொல்லீர் – சொல்லுவீர்களாக

உள்ளபடி யுணரில்
ஸ்வரூபத்தை உள்ளபடி தர்சிக்கில் –
அதாவது
ஞாத்ருத்வ கர்த்ருத்வாதிகளோடும் சேஷத்வத்தோடும் கூடி இருக்கிற
மேல் எழுந்த ஆகாரத்தை இட்டு தர்சிக்கை அன்றிக்கே –
ஸ்வ ரஷணே ஸ்வ யத்ன கந்த அஸஹமான பாரதந்தர்யமே வடிவான அவ்வளவும் செல்ல தர்சிக்கை -என்கை

ஓன்று நமக்கு உண்டு என்று விள்ள விரகு இலதாய் விட்டதே –
பேற்றுக்கு உடலானது ஓன்று நமக்கு உண்டு என்று வாய் விடுகைக்கு
வழி யற்று விட்டதே என்கை

அன்றிக்கே
விள்ளுகையாவது-நீங்குகையாய் –
அவன் அபிமானத்தில் ஒதுங்கிக் கிடக்குமது ஒழியப் பேற்றுக்கு உடலாக
நமக்கு ஓன்று உண்டு என்று பிரிய நிற்க விரகு அற்று விட்டதே என்னவுமாம்

அது என்–
நமக்கு ரக்ஷகன் ஆனாலும் —
ரக்ஷமாம் -என்கிறபடி ஓர் யுக்தி மாத்ரம் இவனும் சொல்ல வேண்டாவோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் மேல்

கொள்ளக் குறையேதும் இல்லாற்குக்
தான் ரஷிக்கும் இடத்தில் நம் பக்கல் உள்ளது ஒன்றையும் கூட்டிக் கொள்ள வேண்டாதபடி
நிரபேஷரானவர்க்கு

இறையேதும் இல்லாத யாம்
ஆத்மாவோடு
ஆத்மீயங்களோடு வாசியற
சகலமும் அங்குத்தைக்கு சேஷமாகையாலே ஏக தேசம் ஒன்றும் இல்லாத நாம்

கூறுவது என் சொல்லீர்
நம்மை ரஷிக்கைக்கு உடலாக அவரைக் குறித்துச் சொல்லுவது என் -சொல்லுங்கோள் என்று
சந்நிஹிதரைப் பார்த்து அருளிச் செய்கிறார்

இத்தால்
அவன் பரிபூர்ணனாய் –
நாம் தரித்ரரான பின்பு
உபய ஸ்வரூப அனு குணமாக அவன் தானே ரஷிக்கும் அத்தனை ஒழிய
நாம் சொல்ல வேண்டுவது ஓன்று உண்டோ என்கை –

—————————————-

குறையேதும் இல்லார்க்கு என்றும் –
இறையேதும் இல்லாத யாம் என்றும் -அருளிச் செய்த பிரசங்கத்திலே
இப்படி இரண்டு தலைக்கும் உள்ள இல்லாமையை அனுசந்தித்து
சேஷியானவனை ஜயித்து இருப்பார் இல்லை –
அது ஒருவருக்கு சித்திக்குமதோ என்கிறார் –

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-

பதவுரை:

இருவருக்கும் – இறைவனுக்கும், ஆன்மாக்களுக்கும்
இல்லை என்று – ஓர் குறைவின்மை உண்டென்று எண்ணுதலால்
இறையை – இறைவனை
வென்றிருப்பார் இல்லை – வெற்றி கொள்வாரில்லை
அஃது – அவ் வண்ணம்
ஒருவருக்கு – ஒரு மனிதனுக்கு
எட்டுமதோ – கிடைக்குமா?
குறைதான் – கொள்ளுவதாகிற குறை தான்
இல்லை – இறைவனுக்கில்லை
என்று – இவ்வாறு
கூறினாரில்லா – யாராலும் சொல்லப் படாத
மறையுடைய மார்க்கத்தே – வேத வழியில் நின்று
காண் – கண்டு கொள்வீராக

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை
இரண்டு தலைக்கும் ஓர் இல்லாமை உண்டு என்று அனுசந்தித்து
சேஷியானவனைத் தான் ஸ்வாதந்தர்யத்தால் வீசு கொம்பாய் நிற்க்கையை விட்டுப்
பரதந்த்ரனாய் வந்து நிற்கும்படி
இவ் வநுஸந்தானத்தாலே ஜெயித்து இருப்பார் ஒருவரும் இல்லை

அஃது ஒருவர்க்கு எட்டுமதோ –
அந்த அனுசந்தானம் ஒருவருக்கு எய்துமதோ –
அதி தூரம் அன்றோ என்கை

இருவருக்கும் இல்லை என்ற வைத்து தான்
எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் –

இல்லை குறை யுடைமை தான் என்று
அவனுக்கு இத் தலையில் ஒன்றும் கொள்ள வேண்டும் குறை இல்லை –
இவனுக்கு அத் தலைக்கு ஒன்றும் கொடுக்கத் தக்க உடமை தான் இல்லை என்று

கூறினார் இல்லா மறை யுடைய மார்க்கத்தே காண் —
அதாவது –
அபவ்ருஷேய மாகையாலே-
விப்ரலம்பாதி தோஷ சம்பாவன கந்த ரஹிதமாய் –
அத ஏவ -ஆப்த தமமாய் இருக்கிற
வேத மார்க்கத்தைத் தர்சித்திக் கொள் என்கை

மார்க்கத்தைக் காண் என்று
சந்நிஹிதனாய் இருப்பான் ஒருவனைப் பார்த்துச் சொல்லுமா போலே
சர்வருக்கும் உபதேசமாக அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————–

ஸ்ரீ நாராயண பதார்த்தமான –
அநந்ய போகத்வத்தை அருளிச் செய்கிறார் –
கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும் –
அது பண்ணும் க்ரமமுமே இறே அதில் சொல்லுவது –

அவை இரண்டையும் ஸங்க்ரஹேன அருளிச் செய்கிறார் இதில் –

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-

பதவுரை:

வித்தம் – செல்வத்தினுடைய
இழவு – அழிவும்
இன்பம் – சுகமும்
துன்பம் – துக்கமும்
நோய் – நோய்களும்
வீகாலம் – மரண காலமும்
தத்தம் அவையே – தம் தமது வாழ்வினைப் படியே
தலையளிக்கும் – பயன் தரும்
அத்தை – அதனால் அவற்றைப் பற்றிய சிந்தனையை
விடீர் – விட்டு விடுவீராக
இச்சியான் – இறை இன்பம் தவிர வேறு எதையும் விரும்பாதவன்
இச்சியாது – வேறு பயனைக் கருதாமல்
ஏத்த – அவனைத் துதி செய்ய
எழில் வானத்து – அழகிய வீட்டுலுகத்தில்
உச்சியான் – மேல் நிலத்தில் இருக்கும் இறைவனுக்கு
உச்சியான் ஆம் – தலையால் தாங்கத் தகுந்த பெருமை உடையவன் ஆவான்

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
கைங்கர்யம் பண்ணும் அதிகாரிக்கு சரீரத்தோடு இருக்கும் நாள் வரும் வீத -பீதராக
தத் வியோகாதிகள் அடியாக வந்த ஹர்ஷ சோகங்கள்
பரம புருஷார்த்தமான கைங்கர்யத்தில் செல்லுகிற மனசைப் பாரவடிக்கு மவைகையாலே
அவை வந்தாலும்
மனஸ்ஸூ கலங்காமல் இவன் இருக்கைக்கு உடலான இவற்றை முந்துற அருளிச் செய்கிறார்

வீத -பீதராக -தனம்-அதாவது ஸ்வர்ண ரஜாதிகள் இழவு –
தத் விநாசம் -அதாவது -அஸ்திரமாகையாலே அவற்றுக்கு வரும் இழவு –
இன்பம் -அனுகூல வஸ்து அனுபவமாகிற ஸூகம்
துக்கம் -பிரதிகூல வஸ்து அனுபவம் ஆகிற துக்கம்
நோய் -சரீரகதமான ரோகங்கள்
வீ காலம் – சரீரத்தினுடைய விநாச காலம்
வீவு-முடிவு
இவை எல்லாவற்றையும் –

தத்தம் அவையே –
தம் தாமுக்கு அடியான அந்தக் கர்மங்களே

தலை யளிக்கும் –
விபாக தசையில் கொடுக்கும் –
பிராரப்த கர்ம பலன்களானவை வாராது ஒழியாது இறே

அத்தை விடீர்
அதாவது –
அதில் மனஸ்ஸூ வைக்க வேண்டா -என்றபடி –
இனி மேல் கைங்கர்யத்தைச் சொல்லுகிறது –

இச்சியான்
ஐஸ்வர்யாதிகளான ப்ரயோஜனாந்தரங்களில் ஒன்றிலுமே இச்சியான்

இச்சியாது ஏத்த
ஏத்துகிற இதுக்குப் பரமபதாதிகளாகிற ஒன்றையும் பிரயோஜனமாக இச்சியாதே –
ஸ்வயம் பிரயோஜனமாக ஏத்த

ஏத்துகை யாவது தான் -வாசிக கைங்கர்யம் இறே
ஆழி யம் கையானை ஏத்தாது அயர்ந்து –வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றார் இறே ஸ்ரீ ஆழ்வார்
இது தான்
மானஸ
வாசிக
காயிக கைங்கர்யங்களுக்கும் எல்லாம் உப லக்ஷணம் –
இப்படி அடிமை செய்ய

எழில் வானத்து உச்சியான் உச்சியானாம் –
அதாவது
து கல்ய ப்ருஷ்டே -என்கிறபடியே
விலக்ஷணமான பரமாகாசத்தில் உயர்ந்த நிலத்தில் எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சிரஸாவாஹ்யனாம் என்கை

இத்தால்
இங்கே இருந்து அடிமை செய்யுமவன்
நித்ய முக்தரை அடிமை கொண்டு அங்கே எழுந்து அருளி இருக்குமவனுக்கு
அத்யாதரணீயனாம் என்றதாயிற்று

—————————————-

கீழ் எட்டுப் பாட்டாலே
பத த்ரயாத்மகமான ஸ்ரீ திருமந்திரத்தில் ப்ரதிபாதிக்கப்படுகிற
ப்ரமேயங்களின் சாராம்சங்களை அருளிச் செய்தார்

தத் உபதேஷ்டாவான ஸ்ரீ ஆச்சார்யனை –
ஸ்ரீ பகவத் அவதாரமாக பிரதிபத்தி பண்ணி தத் அனுரூபமாக அனுவர்த்தித்து இராதே
சஜாதீய புத்தியாகிற நிந்தையைப் பண்ணுமவர்களுக்கும் –
தத் வைபவம் அறிந்து தத் அனுகுணமாக சேவித்துப் போருமவர்களுக்கு உண்டாவதான
பல விசேஷங்களை அருளிச் செய்கையாலே
ஸ்ரீ ஆச்சார்ய வைபவத்தை அருளிச் செய்கிறார் இதில் –

தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கி யிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-

பதவுரை:

தாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின
அவரை – அவ் வாச்சர்யனை
தத்தம் இறையின் – “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய
வடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)
வணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத
பித்தராய் – உண்மை அறியாதவராய்
நிந்திப்பார்க்கு – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு
ஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்
உண்டு – கிடைக்கும்
நீதியால் – முறை தவறாமல்
வந்திப்பார்க்கு – பணிந்திருப்பார்க்கு
இழியாவான் – மறு பிறவி இல்லாத
வான் உண்டு – வைகுந்த நாடு கிடைக்கும்

தத்தம் இறையின் வடிவென்று
தம் தம் -என்கிற மெல் ஒற்றை வல் ஒற்றாக்கித் தத்தம் -என்று கிடக்கிறது
ஆகையாலே தம்தாம் இறையின் வடிவு -என்றபடி –

அதாவது –
ஸ்ரீ நாராயணன் ஆகையாலே
எல்லார்க்கும் -நம்முடைய இறை நம்முடைய இறை -என்று பிராப்தி சொல்லிப் பற்றலாம்படி
சாதாரண சேஷியான
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹம் -என்கை –

சாஷான் நாராயணோ தேவா க்ருத்வா மர்த்தய மயீம் தனும் -என்றும்
யஸ்ய சாஷாத் பகவதி ஞான தீப பிரதே குரவ் -என்றும்
ஸ்ரீ ஆச்சார்யனை பகவத் அவதாரமாக சாஸ்திரம் சொல்லா நின்றது இறே –

தாளிணையை வைத்த வவரை
மருளாம் இருளோடு மத்தகத்துத் தன் தான் அருளாலே வைத்தவர் -ஞான சாரம் -36–என்றபடி-
தங்களுடைய அஞ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படித் தம்முடைய திருவடிகளை இரண்டையும்
தங்கள் தலையிலே வைத்து அருளின ஸ்ரீ ஆச்சார்யரான அவரை

வணங்கி யிராப் –பித்தராய் –
முறையிலே அனுவர்த்தித்து இராத ப்ராந்தராய் –

தாளிணையை வைத்த வவரை வணங்கியிராப் –பித்தராய் -என்கையாலே
அர்த்த ஸ்திதியில் பழுதுண்டாய அன்று
அப்படி பிரதிபத்தி பண்ணி அனுவர்த்தித்து இராது ஒழிகிறது
இவர்களுடைய சித்தஸ் கலநம் என்று நினைத்து அருளிச் செய்கிறார் –

நிந்திப்பார்க்கு
மானுஷ பிரதிபத்தியாகிற நிந்தையைப் பண்ணுமவர்களுக்கு வேறு ஒன்றும் வேண்டா –
இப்படி பிரதிபத்தி பண்ணுகை தானே யாயிற்று நிந்தை

உண்டு ஏறா நீள் நிரயம்
அதாவது –
இப்படி நிந்திக்குமவர்களுக்கு ஒருகாலும் கரை ஏற்றம் இன்றிக்கே
நெடுகச் செல்லா நிற்கும் சம்சாரம் ஆகிற நரகம் உண்டு என்கை –

ஏறா நீள் நிரயம்-என்கையாலே
யமன் தண்டலான நரகத்தில் காட்டிலும் இதுக்கு உண்டான வியாவ்ருத்தியைச் சொல்லுகிறது –

அதுக்கு ஒரு கால் கரை ஏற்றம் உண்டு இறே –
இது நித்யமாகச் செல்லுமத்தனை இறே

இத்தால்
ஸ்ரீ ஆச்சார்ய விஷயத்தில் மானுஷ பிரதிபத்தி பண்ணும் மஹா பாபிகளானவர்கள் ஒரு காலத்திலும்
உஜ்ஜீவன யோக்யதை இன்றிக்கே நித்ய சம்சாரிகளாய்ப் போவார்கள் என்றதாயிற்று

நீதியால் வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் —
அதாவது –
கீழ்ச் சொன்னபடி அவதார விசேஷம் என்று பிரதிபத்தி பண்ணி –
முறை தப்பாமல் அனுவர்த்தித்துப்
போருமவர்களுக்கு புநரா வ்ருத்தி இல்லாத பரமபதம் உண்டு என்கை –

இத்தால்
ஸ்ரீ ஆச்சாரய வைபவத்தை நன்றாக அறிந்து அவன் திருவடிகளிலே
தேவு மற்று அறியேன் என்று
சேவித்துப் போரும் மஹாத்மாக்களானவர்கள் ஸ்ரீ திரு நாட்டிலே போய்
அங்குள்ளாரோடு ஸமான போக பாகிகளாய் இருப்பர் என்றதாயிற்று –

————————————————

இப்படி ஆச்சார்ய வைபவத்தை அருளிச் செய்த அநந்தரம் –
இவ் வாச்சார்யன் பண்ணும் உபகார வைபவத்தையும்
லோகம் எல்லாம் அறியும்படி ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்து
இப் பிரபந்தத்தை நிகமிக்கிறார் –

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-

பதவுரை:

இறையும் – “அ”காரப் பொருளான இறைவனையும்
உயிரும் – “ம”காரப் பொருளான ஆன்மாவையும்
இருவர்க்குமுள்ள முறையும் – இவ்விருவர்க்கும் உண்டான (நான்காம் வேற்றுமை உறுப்பால் சொல்லப்பட்ட)
இறைமை அடிமை என்னும் உறவு முறையையும்
முறையே மொழியும் – இவ் வுறவையே சிறப்பாக உணர்த்தும்
மறையும் – வேதாசாரமான திருமந்திரத்தையும்
உணர்த்துவார் இல்லா நாள் – உள்ளது உள்ளபடி அறிவிப்பார் இல்லாத காலத்தில்
ஒன்றல்ல – மேலே சொன்ன அனைத்தும் ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை (இருந்தும் இல்லாதது போல் இருப்பான்)
உணர்த்துவார் – மேற்கூறியபடி திருமந்திரத்தின் பொருளை
உண்டானபோது – ஆசார்யன் அறிவிக்கும் போது
ஆன – ஆகின்ற (இருப்பனவாக)

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள முறையும் முறையே மொழியும் மறையையும் —
அகார வாச்யனான ஈஸ்வரனும்
மகார வாச்யனான ஆத்மாவும்
அகாரத்தில் லுப்த சதுர்த்தியால் சொல்லப்பட்ட சேஷி சேஷ பாவமாகிற தத் உபய சம்பந்தமும்
அந்த சம்பந்தத்தையே க்ரமமாகிற ப்ரதிபாதிக்கிற வேத ரூபமான திரு மந்த்ரமும்

உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல
இவை எல்லாம் நித்தியமாய் இருந்ததே யாகிலும்
இவற்றை அறிவிப்பார் இல்லாத காலத்திலே
எல்லாம் அசத் கல்பமாய்க் கிடந்தன –

ஆன உணர்த்துவார் உண்டான போது —
இவை எல்லாம் அறிவிப்பார் உண்டான காலத்திலே உளவாயிற்று என்கை –

இவற்றை அறிவிக்குமவன் ஆகிறான் ஸ்ரீ ஆச்சார்யன் இறே
அதுதான் இப்பிரபந்தத்தில் முதல் பாட்டாலே அருளிச் செய்தார் இறே தாமே

இத்தால்
அஞ்ஞாத ஞாபகனான ஸ்ரீ ஆச்சார்யன் பண்ணும் உபகார வைபவத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

ப்ரமேயங்களில் சாரமான அர்த்தத்தை அருளிச் செய்து இப்பிரபந்தத்தை தலைக் கட்டி அருளுகிறார் –

திவ்ய சஷூஸ் ஸூக்கள் போன்ற –
ஞான சாரம் –
பிரமேய சாரம் -இரண்டு பிரபந்தங்கள் –
அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார் –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: