ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஞான சாரம்-(31-40) –ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் — –

சகல வேதாந்த அந்தர்கதமான பரமார்த்தமும் -தத் உப ப்ரும்ஹணங்களான சாஸ்திரங்கள் சொல்லுமதுவும்-
சரணாகதி பிரதனான ஸ்வ ஆச்சார்யன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமது -என்கிறார் –

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
அபவ்ருஷேயமாய்-நித்ய நிர்தோஷமாய்-ஆப்த தமமாய் இருக்கையாலே அத்விதீயமாய் –
ரிகாதி பேதத்தாலே -சதுர்விதமான வேதத்தினுள்ளே –
எட்டுப் புரியும் இட்டுக் கட்டி வைக்குமா போலே சேமித்து வைத்த பரமார்த்தமும் –
இத்தால் வேதம் என்கையாலே
இவ்வர்த்த ப்ரதிபாதகமான ப்ரமாணத்தினுடைய கௌரவமும்
நான்கின் என்கையாலே –
அது தன்னில் எங்கேனும் ஒரு பிரதேசத்தில் ப்ரதிபாதிக்கப்படுவது அன்றிக்கே
அநேக சாகா ரூபமான அதுக்கு எல்லாம் தாத்பர்யம் இது என்னும் இடமும்
உட் பொதிந்த என்கையாலே –
அது தான் மேல் எழச் சொல்லிப் போருமது அன்றிக்கே உள்ளே சேமித்து வைக்கப்பட்டது என்னும் இடமும்
மெய்ப்பொருள் என்கையாலே –
அது தான் அர்த்தவாத ரூபமானது அன்றிக்கே தத்வ ரூபமான அர்த்தம் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று –

கோதில் மனு முதல் நூல் கூறுவதும்
கோது இல்லாத மன்வாதி சாஸ்திரங்கள் சொல்லுவதும் / கோது இல்லாமை -குற்றம் இல்லாமை –
அதாவது அயதார்த்த ப்ரதிபாதமாகிற தோஷம் இல்லாமை –
இது மனுவுக்கு விசேஷணம் ஆதல் -எல்லாத்துக்கும் விசேஷணம் ஆதல் –
மனுவுக்கு விசேஷணமான போது -யத்வை கிஞ்ச மனு ரவதத் தத் பேஷஜம்-என்றும்
மன்வர்த்த விபரீதாது யா ஸ்ம்ருதிஸ் ஸான சஸ்யதே -என்றும் சொல்லும்படியான
அதனுடைய ப்ராமாண்ய கௌரவம் சொல்லுகிறது
எல்லாத்துக்கும் விசேஷணமான போது -அவற்றினுடைய ஆப்த தமத்வம் சொல்லுகிறது
மனு முதல் நூல்கள் ஆவன-
மற்றும் உண்டான சாத்விக ஸ்ம்ருதிகளும் -இதிஹாச புராணங்களும் – பாஞ்சராத்திரிகளுமாகிற சாஸ்திரங்கள்
கூறுகையாவது –
இவை எல்லாம் ஏக கண்டமாக வேத ஹ்ருதயமான வந்த அர்த்தத்தைச் சொல்லுகை –
வேதார்த்தத்தை வீசதீ கரிக்கை இ றே இவற்றுக்கு க்ருத்யம் –

தீதில் சரணாகதி தந்த
தீதில்லாத சரணாகதியை யுபகரித்த -அதாவது —
அதிக்ருதா அதிகாரமும் -அபாய பாஹுளத்வமும்-அப்ராப்தமும் ஆகிற தோஷம் இன்றிக்கே இருக்கிற சரணாகதியை –
தரித்ரனுக்கு சீரிய நிதியைக் கொடுக்குமா போலே உபகரித்த -என்கை
பீடுடை எட்டு எழுத்தும் தந்தவனே -என்றார் கீழே
இங்கே சரணா கதி தந்தவன் என்கிறார் –
கீழ் அது போல் அன்று இறே இது -நம் ஆச்சார்யர்கள் மற்ற ரஹஸ்யங்கள் இரண்டிலும் அர்த்தத்தை மறைத்து
சப்தத்தை வெளியிட்டுக் கொண்டு போருவார்கள்
இதில் அர்த்தம் போலே சப்தத்தையும் மறைப்பார்கள் என்னும்படி இருப்பது ஓன்று ஆகையாலே
திவ்ய மங்கள விக்ரஹமும் -விக்ரஹ குணங்களும் -திவ்யாத்ம ஸ்வரூபமும் -ஸ்வரூப குணங்களும் -நித்ய முக்தருக்கு ப்ராப்யமாம் போலே
முமுஷுவாய் ப்ரபன்னனான அதிகாரிக்கு த்வய சரீரமே ப்ராப்யமாய் இருக்கும் என்று இறே ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தது –
இப்படி இருக்கிற வற்றை இறே இவனுக்கு உபகரித்தது –

தன்னிறைவன்
தன்னுடைய ஆச்சார்யன் -இறைவன் என்றது சேஷி -என்றபடி –
தன்னிறைவன் என்கையாலே –
சர்வ சாதாரண சேஷியான ஸ்ரீ ஈஸ்வரனைப் போல் அன்றிக்கே தனக்கு அசாதாரண சேஷி யாவவன் -என்கை –

தாளே
அவனுடைய திருவடிகளே -பிரதம பர்வத்தோபாதி-சரம பர்வத்திலும் திருவடிகளே இறே உத்தேச்யம்
அவதாரணத்தாலே அதனுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் சொல்லுகிறது

அரணாகும் என்னும் அது –
ரக்ஷகமாம் என்கிற அர்த்தம் -என்கை -அரணாவது -ரக்ஷகம் –
தன்னிறைவன் என்றும் -தாளே அரணாக என்றும் -சேஷித்வ சரண்யத்வங்களைச் சொல்லுகையாலே
ப்ராப்யத்வம் அர்த்தாத் சித்தம் இறே

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தனம் குருரேவ
பர காமோ குருரேவ பராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா சௌ தஸ்மாத் குருதரோ
குரு அரச்ச நீயஸ் ச வந்த்யஸ் ச கீரத்த நீயஸ் ச சர்வதா த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்ச யேன்முதா
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம்
ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்தி மாந்தியா -என்று ஸ்ரீ சாத்விக தந்த்ரத்திலே
த்வய பிரசங்கத்தில் தத் உபதேஷ்டாவான ஸ்ரீ ஆச்சார்யனுடைய வைபவம் பகவானால் அருளிச் செய்யப்பட்டது இறே

————————————

ஸ்ரீ திரு அஷ்டாக்ஷர பிரதனான ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளே சகல ப்ராப்யம் என்று
அறியாதார் உறவை விடுகை ஸாஸ்த்ர விஹிதம் என்றும்
சகல சாஸ்திரமும் ப்ரதிபாதிப்பது சரணாகதி பிரதனான ஆச்சார்யன் திருவடிகளே ரக்ஷகமாம் என்னுமது -என்றும்
அருளிச் செய்கையாலே ஆச்சார்யர் வைபவத்தை பிரகாசிப்பித்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இப்பாட்டில் இப்படி இருந்துள்ள ஆச்சார்யனை அவதார விசேஷம் என்று பிரதிபத்தி பண்ணாதே
மானுஷ பிரதிபத்தி பண்ணுமவனுக்கு வரும் அநர்த்தத்தை-
அர்ச்சாவதாரத்தில் உபாதான நிரூபணம் பண்ணுமவனோடு சேர்த்து அருளிச் செய்கிறார்

மானிடவர் என்றும் குருவை மலர்மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழா நரகு –32-

மானிடவர் என்றும் குருவை
ஸ்ரீ ஆச்சார்யனை மனுஷ்யன் என்றும் –அதாவது
சாஷான் நாராயணோ தேவ –க்ருத்வா மர்த்த்ய மயீம் தனும்-இத்யாதிப்படியே தன்னை சம்சாரத்தில் நின்றும்
எடுக்கைக்காக ஸ்ரீ ஈஸ்வரன் மனுஷ்ய ரூபம் கொண்டு வந்து இருக்கிறான் என்று அறியாதே மேல் எழுந்த ஆகாரத்தைப் பார்த்து
ஸ்ரீ ஆச்சார்யனை மனுஷ்யன் என்று பிரதிபத்தி பண்ணுகை –
யஸ்ய சாஷாத் பகவதி ஞான தீப பிரதே குரவ் -மர்த்த்ய புத்திஸ் ஸ்ருதம் தஸ்ய சர்வம் குஞ்ஜரசவ் சவத் -என்று
ஸ்ரீ ஆச்சார்யனை மனுஷ்யன் என்று நினைக்கிறவன் புத்தி அசத் புத்தி என்றும் –
அவன் கற்ற கல்வி எல்லாம் நிஷ் பிரயோஜனம் என்றும் ஸ்ரீ பாகவதத்தில் சொல்லிற்று இறே

மலர்மகள் கோன் தான் உகந்த கோலம் உலோகம் என்றும் –
ஸ்ரீயபதியானவன் தான் உகந்து அருளின விக்ரஹத்தை லோகம் என்றும் -அதாவது –
தமர் உகந்த உருவம் நின்னிருவம் -என்கிறபடியே ஆஸ்ரிதரானவர்கள் உகந்தது அடியாக அவன் உகந்து
பரிக்ரஹித்து நிற்கிற அர்ச்சா ரூபத்தை அப்ராக்ருத விக்ரஹத்தோபாதியாக பிரதிபத்தி பண்ண வேண்டி இருக்க
மேல் எழுந்த ஆகாரத்தையே பார்த்து அதனுடைய உபாதான நிரூபணம் பண்ணுகை –
அர்ச்சாவதார உபாதானம் வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம்-மாத்ரு யோனி பரீஷாயாஸ் துல்யமாஹுர் மநீஷிண -என்று
ஸ்ரீ அர்ச்சாவதார உபாதான நிரூபணத்தை மாத்ரு யோனி பரிஷா சமமாக சாஸ்திரம் சொல்லிற்று இறே

ஈனமதா
ஹீனமாக -இப்படி தண்ணியதாக -என்றபடி –

வெண்ணுகின்ற நீசர்
சிந்தியா நிற்கிற நீசர் –இவர்களில் காட்டில் தண்ணியர் இல்லை என்கை -அதாவது
ஸ்ரீ ஆச்ச்சார்யர் விஷயத்தையும் -ஸ்ரீ அர்ச்சாவதார விக்ரஹத்தையும் கீழ்ச் சொன்னபடியே
தண்ணியதாக பிரதிபத்தி பண்ணுமவர்கள் -கர்ம சண்டாளர் -என்கை –

இருவருமே
இவ்விருவரோடே துல்ய பாபிகள் இல்லாமையால் மேல் சொல்லுகிற அநர்த்தம்-
இவர்கள் இருவருக்குமே உள்ளது -என்கை –

எக்காலும் –
எல்லாக் காலத்திலும் -கால தத்வம் உள்ளதனையும் -என்றபடி –

நண்ணிடுவர் கீழா நரகு —
இதுக்கு மேல் பொல்லாதது இல்லை என்னும்படி தண்ணியதான நரகத்தை ப்ராபிப்பார்கள்-என்கை
எக்காலும் நண்ணிடுவர் என்கையாலே நரகத்திலே ஸ்ருஷ்டியும் நரகத்திலே சம்ஹாரமுமாய்ச் செல்லுமாயிற்று
அன்றிக்கே எக்காலும் கீழா நரகு என்று -வீடியோ வெந்நகரான சம்சாரத்தைச் சொன்ன போது
நித்ய சம்சாரிகளாய்ப் போவார்கள் என்றபடி –

விஷ்ணோர் அர்ச்சாவதா ரே ஷூ லோஹபாவம் கரோதிய யோ குரௌ மானுஷம் பாவம் உபௌ நரகபாதி நௌ
என்கிற ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராண வசனம் இவ்வர்த்தத்துக்கு சம்வாதமாக அனுசந்தேயம் –

———————————-

ஆசன்னனாய் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யனை அவமதி பண்ணிக் கை விட்டு அதி தூரஸ்தனான ஸ்ரீ ஈஸ்வரனை
அபேக்ஷித்த தசையில் உதவும் என்று நினைத்து ஆசைப்படுமவன்
அறிவு கேடன் என்னுமத்தை த்ருஷ்டாந்த முகேன அருளிச் செய்கிறார் –

எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-

எட்டவிருந்த குருவை
ஆசன்னமாக இருந்த ஸ்ரீ ஆச்சார்யனை –அதாவது -சஷுர் கம்யனாய்த் தனக்கு வேண்டிய போது
ரக்ஷகனாகவும் போக்யனாகவும் உஜ்ஜீவிக்கலாம் படி சந்நிஹிதனாய் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யனை -என்கை –

இறை அன்று என்று விட்டு
சேஷி அன்று என்று விட்டு -அதாவது -சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே -என்கிறபடியே
தனக்கு இறைவனாய் இருக்கிற சஜாதீய புத்தியால் அவன் இறையன் அன்று வென்று விட்டு -என்கை –

ஓர் பரனை விருப்புறுதல்-
பரனாய் இருப்பான் ஒருவனை விரும்புகை -அதாவது -ஸாஸ்த்ர கம்யனாய் -அதி தூரஸ்தானாய் –
தனக்கு அணுக அரியனாய் இருக்கும் ஸ்ரீ ஈஸ்வரனை ரக்ஷகனாகவும் போக்யனாகவும் அனுசந்தித்து
அவனை லபிக்க வேணும் என்று ஆசைப்படுகை -என்கை –

பொட்டெனத் தன் கண் செம்பளித்திருந்து
சடக்கென -தூங்குவாரைப் போலே தன் கண்ணை மூடிக் கொண்டு இருந்து –
மேல் விளைவது விசாரியாமல் இருந்து -என்றபடி –

கைத்துருத்தி நீர் தூவி
விடாய் பிறந்த போது உப ஜீவிக்கலாம் படி துருத்தியில் சேர்த்துத் தான் கரஸ்தமாய் இருக்கிற
ஜலத்தை நிலத்திலே உகுத்து –

அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –
மேக கதமான ஜலம் விடாய்க்கு உதவும் என்று நினைத்து ஆகாச வர்த்தியாய் அதி தூரஸ்தமாய் இருக்கிற
அம்புதத்தைப் பார்த்து இருக்குமவனைப் போலே –
அவனைப் போலே என்றது -அவன் செயலைப் போலே என்றபடி -அல்லது விருப்புறுதல் என்றதோடு சேராது இறே

சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா சாஸ்திர கம்யம் துயஸ் ஸ்மரேத் கரஸ்தம் உதகம்
த்யக்த்வா கநஸ்தம் அபி வாஞ்சதி -என்று இவ்வர்த்தம் தான் பகவத் போதாயன க்ருதமான ஸ்ரீ புராண சமுச்சயத்தில்-
ஸ்ரீ ஆச்சார்ய மஹாத்ம்ய பிரகாரணத்தில் சொல்லப் பட்டது இறே

———————————–

அதி ஸூலபனாய்த் தனக்கு கைப்புகுந்து இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யனை -அபரத்வ புத்தியால் உபேக்ஷித்து –
அதி துர்லபனாய் அநேக யத்னம் பட்டுக் காண வேண்டும்படி இருக்கும் ஸ்ரீ ஈஸ்வரனை அபேக்ஷித்த சமயத்தில்
நமக்கு உதவும் என்று நினைத்து அனுவர்த்திகை அஞ்ஞான கார்யம் என்னுமத்தை
இன்னும் ஒரு த்ருஷ்டாந்தத்தாலே தர்சிப்பிக்கிறார்

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34-

பற்று குருவைப்
தன்னாலே பற்றப்பட்டு இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யனை -அதாவது அதி ஸூலபனாய்த் தனக்கு அபேக்ஷிதமான தசையில்
ரக்ஷகனாயும் போக்யனாகவும் ஆஸ்ரயிக்கப்பட்டு இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யனை என்கை –

பரன் அன்று என இகழ்ந்து –
யஸ்ய சாஷாத் பகவதி ஞான தீப ப்ரதே குரவ்-என்று ஸ்ரீ பகவத் அவதாரமாக சாஸ்திரம் சொல்லுகையாலே
ஸ்ரீ பரனாய் இருக்கிறவனை -சஜாதீய புத்தியால் இவன் ஸ்ரீ பரன் அன்று என்று அவமதி பண்ணிக் கை விட்டு

மற்றோர் பரனை வழிபடுதல் –
வேறே ஒரு பரனை வழிபடுகை-அதாவது அதி துர்லபனாய்த் தான் கண்ணுக்கு விஷயம் இன்றிக்கே
அநேகம் வருத்தம் பட்டுக் காண வேண்டும் படியாய் இருப்பனான ஸ்ரீ ஈஸ்வரனைத்
தனக்கு ரக்ஷகனும் போக்யனுமாக நினைத்துத் தத் லாப அர்த்தமாக அனுவர்த்திக்கை என்கை

எற்றே
இவன் விட்ட விஷயத்துக்கும் பற்றின விஷயத்துக்கும் உள்ள நெடுவாசியைத் திரு உள்ளம் பற்றி
விஷண்ணராய்-என்னே -என்கிறார் –

தன் கைப் பொருள் விட்டு
வேண்டின போது விநியோகம் கொள்ளலாம் படி மடிச் சீலையில் காட்டித் தான் கையில் இருக்கிற
தனத்தை அல்பம் என்ற நினைவால் விட்டு

ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
வெளி நிலத்தில் இன்றிக்கே பூமிக்குள்ளே மற்று யாரேனும் தங்கள் புதைத்து வைத்த

அப்பொருள் தேடித் திரிவான் அற்று —
அந்த தனத்தைத் தான் லபிக்கைக்குத் தேடித் திரியுமவன் போலே -இங்கும் அவன் செயல் போலே என்றபடி –
வழிப்படுதல் என்றதோடு சேர வேணும் இறே

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் யா உபாஸதே லப்தம் த்யக்த்வா தனம்
மூடோ குப்த மன்வேஷ திஷிதௌ–என்னக் கடவது இறே –
இந்த ஸ்லோகத்தில் -உபாஸதே -என்றது ஆர்ஷம் -உபாஸ்தே-என்றபடி –

————————————

ஆசன்னமாய் ஸூலபமான ஸ்ரீ ஆச்சார்ய விஷயத்தை விட்டு தூரஸ்தமாய் துர்லபமான ஸ்ரீ ஈஸ்வர விஷயத்தை ஆசைப்படுவார்
அறிவிலிகள் என்னுமத்தை த்ருஷ்டாந்த த்வயத்தாலே தர்சிப்பித்தார் கீழ் –
ஸ்ரீ ஆச்சார்ய விஷயத்தில் ப்ரேமம் அற்றவனுக்கு ஸ்ரீ ஈஸ்வரன் ஒரு காலமும் அனுக்ரஹம் பண்ணான் –
நிக்ரஹமே பண்ணும் என்னுமத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் இதில் –

என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்
அன்றும் தன்னாரியன் பால் அன்பு ஒழியில்-நின்ற
புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்
அனல் உமிழ்ந்து தானுலர்த்தி யற்று –35-

என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்
எல்லாக் காலத்திலும் –
எல்லா ஆத்மாக்களுக்கும் –
தண்ணளி பண்ணா நிற்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனும்
நாரணனும் -என்றது –
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிறபடியே சகல ஆத்மாக்களோடும்
அவர்ஜனீயமான சம்பந்தம் உடையவன் ஆகையாலே -சர்வ வத்சலன் என்று தோற்றுகைக்காக

அன்றும்
நிக்ரஹத்தைப் பண்ணா நிற்கும்
அன்றுதல் -சீறுதல்-

தன்னாரியன் பால் அன்பு ஒழியில்-
தன் ஆச்சார்யன் பக்கல் ப்ரேமம் அற்றால்-அதாவது -கீழ்ச் சொன்னபடியே –
இறை அன்று என்றும் -பரன் அன்று என்றும் -நினைத்துத் தான் அவனை விடும்படி
தத் விஷய ப்ரேமம் குலையில் என்கை –

நின்ற புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்
உத்பத்தியே தொடங்கித் தனக்குத் தாரகமாகப் பற்றி நின்ற ஜலத்தை விட்டு அகன்ற தாமரையை –
கிளர்ந்த தேஜஸ்ஸை யுடையனாய் உஷ்ண கிரணனான ஆதித்யன்
அதாவது -செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்-என்கிறபடியே நீரைப்பிரியாமல்
நிற்கும் காலத்தில் என்றும் ஓக்கத் தன்னுடைய கிரணங்களால் அதுக்கு விகாசத்தைச் செய்து கொண்டு போருமவன் என்கை

அனல் உமிழ்ந்து தானுலர்த்தி யற்று —
நெருப்பை உமிழ்ந்து தான் அத்தை உலர்த்தி விடுமா போலே என்கை -இத்தால் நீரைப் பிரியாமல் நிற்கும் காலத்தில்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்த காலத்தில் நெருப்பை உமிழ்ந்து அத்தை யுலர்த்தி விடுமா போலே
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் குலையாமல் நின்ற காலத்தில் என்றும் ஓக்க அனுக்ரஹ சீலனாய் இவன் ஸ்வரூபத்தை விகசிப்பிக்கும்
ஸ்ரீ ஈஸ்வரன் தானே ஆச்சார்ய சம்பந்தம் குலைந்தால் நிக்ரஹ சீலனாய் இவன் ஸ்வரூபத்தை சங்கோசிப்பித்து விடும் என்றதாயிற்று –

நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ பிரச் யுதஸ்ய துர்ப்புத்தே கமலம்
ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி-என்னக் கடவது இறே

———————————–

ஸச் சிஷ்யனாய் -சதாசார்ய ப்ரேமம் யுடையவனாய் இருக்குமவனுக்கு
சகல திவ்ய தேசங்களும் தான் ஆச்சார்யனே -என்கிறார் –

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-

வில்லார் மணி கொழிக்கும் -வேங்கடப் பொற் குன்று முதல்-
தேஜஸ்ஸூ மிக்கு இருந்துள்ள ரத்னங்களைத் திரு அருவிகளானவை கொழித்து எறடா நிற்கும்
வில்லாவது-தேஜஸ்ஸூ / ஆர்தல்-மிகுதி /பன் மணி நீரோடு பொருதுருளும் கானமுடைய ஸ்ரீ வேங்கடம் இறே
வேங்கடப் பொற் குன்று முதல்-
ஸ்ரீ திருவேங்கடம் என்கிற திரு நாமத்தை யுடைத்தாய்
ஸர்வைஸ் ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ திருமலை தொடக்கமாயுள்ள

செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
உயரத்தின் அதிசயத்தாலே மேகங்கள் வந்து படியும்படி இருக்கிற பொழில்களாலே சூழப்பட்டு இருக்கிற
செல் -மேகம் /ஆர்தல் -படிதல் /திருப்பதிகள் எல்லாம் -உகந்து அருளின நிலங்களான திவ்ய தேசங்கள் எல்லாம் –

மருளாம் இருளோட
அஞ்ஞான அந்தகாரமானது அதி சீக்ரமாகப் போம்படியாக –

மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்தவவர் —
சிஷ்யன் சிரஸ்ஸிலே தம்முடைய திருவடிகளை ஹேத் வந்தரங்களால் இன்றிக்கே
கிருபையால் வைத்து அருளின ஆச்சார்யரானவர் என்கை –
அர்ச்சா ஸ்தலங்களை சொன்ன இது -பர வ்யூஹாதி ஸ்தலங்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்
பர வ்யூஹாதி பஞ்ச ஸ்தலங்களும் ஸ்ரீ ஆச்சார்யனே என்று இருக்கக் கடவன் என்னுமத்தை –
பாட்டுக் கேட்கும் இடமும் இத்யாதியால் ஸ்ரீ வசன பூஷணத்தில் அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் –

யேநைவ குருணா யஸ்ய நியாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி
த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்கிற வசனம் இதுக்கு சம்வாதமாக அனுசந்தேயம் –

———————————–

அர்த்த பிராண சரீராதிகள் எல்லாம் ஆச்சார்ய சேஷமாக அனுசந்தித்து இருக்குமவர்கள்
நெஞ்சு ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ காலமும் வாஸஸ் ஸ்தானம் என்கிறார் –

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-

பொருளும் உயிரும் உடம்பும் புகலும் தெருளும் குணமும் செயலும் –
தனக்கு உண்டான அர்த்தமும்
தன்னுடைய பிராணனும்
தன்னுடைய சரீரமும்
தன்னுடைய கிருஹமும்
தன்னுடைய ஞானமும்
தன்னுடைய சமாதி குணங்களும்
தன்னுடைய பிரவ்ருத்திகளும்–இவை எல்லாவற்றையும்

அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச்
ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே கிருபையைப் பண்ணித் தன்னை அங்கீ கரித்த
தன்னுடைய ஸ்ரீ ஆச்சார்யன் பொருட்டாக -தச் சேஷமாக -என்றபடி

சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
சங்கல்பம் பண்ணுபவர்கள் நெஞ்சு -அப்படி சங்கல்பித்து இருக்குமவர்களுடைய ஹிருதயம் -என்றபடி

எந்நாளும் மாலுக்கு இடம் —
எல்லாக் காலமும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாஸஸ் ஸ்தானம் –
இவன் சகலமும் தான் ஆச்சார்யனுக்கு சேஷம் என்று சங்கல்பித்து -தேவு மற்று அறியேன் -என்று இருக்க
அவன் இவனுடைய ஹ்ருதயத்தை தான் ஆதரித்துக் கொண்டு இருக்குமாயிற்று –

சரீரம் வஸூ விஜ்ஞானம் வாஸ கர்ம குணா ந ஸூந் குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ச சிஷ்யோ நேதரஸ்
ஸ்ம்ருத குர்வர்த்தம் ஸ்வாத்மன பும்ஸ க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மான ஸூபிரசன்னஸ் சதா விஷ்ணுர்
ஹ்ருதி தஸ்ய விராஜதே -ஜய சம்ஹிதையில் ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்த வசனம்-
இதுக்கு சம்வாதமாக அனுசந்தேயம் – –

——————————————–

ஸ்ரீ ஆச்சார்ய வைபவத்தை பஹுவிதமாக அருளிச் செய்தார் கீழ் -அது எல்லாம் தகும் என்கைக்காக-
ஸ்ரீ ஆச்சார்யர் ஸ்ரீ பகவத் அவதாரம் என்னுமத்தை பிரகாசிப்பித்து இப்படி இருக்கையாலே
எல்லார்க்கும் அவன் திருவடிகளை அநுஸந்திக்குமதே மிகவும் அனுரூபம் என்று -இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் –

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தன்னோட்டை ஸ்பர்சத்தாலே -எப்போதும் ஓக்க செவ்வி பெற்று இருக்கையாலே மது ஸம்ருத்தி மாறாத
தாமரைப் பூவை வாசஸ் ஸ்தானமாக யுடையளாய் ஸ்ரீ என்று
திரு நாமமாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன்

தானே
ஸ்ரீயபதியாகையாலே -சர்வாதிகனான தானே

குருவாகித் தன்னருளால் –
திவ்ய ரூபத்தை மறைத்து மனுஷ்ய ரூபம் கொண்டு ஆச்சார்யனாய்
இதுக்கு அடி என் என்னில்
தன்னுடைய கிருபையால் -ஹேத்வந்தரம் இல்லை -என்கை –
இப்படி அவதரிக்கிறது தான் யாருக்காக என்னில் –

மானிடர்க்காய்
ஸாஸ்த்ர வஸ்யமான மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்து உபதேசாதிகளால் திருத்தினால்
திருந்தி உஜ்ஜீவிக்கைக்கு யோக்யரான ஆத்மாக்களுக்காக

இந்நிலத்தே தோன்றுதலால்
பிரஜை விழுந்த கிணற்றில் ஒக்கக் குதிக்கும் தாயைப் போலே இவர்கள் சம்சார ஆர்ணவ
மக்நராய்க் கிடக்கிற இந்தப் பூமியிலே அவதரிக்கையாலே –

யார்க்கும்
வர்ண பேதத்தாலும் –
ஆஸ்ரம பேதத்தாலும்
ஸ்த்ரீ புருஷ பேதத்தாலும்
பலவகைப்பட்ட ஆத்மாக்கள் எல்லார்க்கும் –

அவன் தாளிணையை உன்னுவதே –
சேஷியாய் -சரண்யனாய் -ப்ராப்யனாய் -இருக்கிறவனுடைய திருவடிகளை இரண்டையும்
உத்தேச்யமாகவும் -ப்ராப்யமாகவும் -ப்ராபகமாகவும் -அனுசந்தித்து இருக்குமதே
அவதாரணத்தாலே -இது ஒழிய மற்று ஒன்றும் வேண்டா என்கை –

சால வுறும் –
மிகவும் உறும்
உறுகை -சேருகை / இத்தால் ஸ்வரூபத்துக்கு மிகவும் அனுரூபம் என்கை –

சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தா நும் மக்நான் உத்தர தே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா சம்சார பய பீருணா -என்று –ஸ்ரீ ஐயாக்க்ய சம்ஹிதையில் ஸ்ரீ சாண்டில்யன் சொன்ன வசனம் –
இப்பாட்டில் சொன்ன வசனத்துக்கு சம்வாதமாக அனுசந்தேயம் –

————————————–

இவ்வாச்சார்ய வைபவம் அறிந்து -இவ்விஷயத்தில் அற்றுத் தீர்ந்து நிற்பார் விசேஷஞ்ஞர் அன்றோ –
அது அறியாத லௌகிகர்-பகவத் விஷயத்தில் காட்டில் இவ் விஷயமே உத்தேச்யம் என்று
பற்றித் திரியா நின்றார் – என்று பழி தூற்றுவார்கள் ஆகிலோ-என்ன –
இது ஸ்ரீ பகவத் விஷயத்தில் ஊன்றி நிற்பார் எல்லார்க்கும் ஒக்கும் இறே என்று பார்த்து
தத் விஷயத்திலும் காட்டில் ததீய விஷயத்தில் ஊன்றி நிற்பார் ஏற்றத்தைச் சொல்லி
இப்படி நிற்கும் அதிகாரிகளுக்கு லௌகிகர் பண்ணும் நிந்தையும் ஸ்துதி நிந்தையுமாய் விடும் என்கிறார் –

அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம் –39-

அலகை முலை சுவைத்தாற்கு
அலகை-என்று -பேய்க்குப் பெயர் –பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி-என்கிறபடியே –
தான் வடிவை மறைத்துத் தாய் வடிவைக் கொண்டு வந்த பேய்ச்சியுடைய முலையை –
பிராண ஸஹிதமாகப் பசையறச் சுவைத்தவனுக்கு –

அன்பர் அடிக்கு அன்பர் –
ஸ்தன்யம் தத் விஷ சம்மிஸ்ரம் ரஸ்ய மாஸீஜ் ஜகத் குரோ –என்றும்
விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -என்றும் சொல்லுகிறபடியே
அவள் கையில் அகப்படாமல் அந்த விஷப்பாலே அமுதாக்கி அமுது செய்து ஜகத்துக்கு வேர்ப்பற்றான தன்னை
நோக்கித் தந்தவன் என்று அந்த குணத்துக்குத் தோற்று அவன் பக்கல் பிரேம யுக்தராய் இருக்குமவர்கள்
திருவடிகளில் பிரேம யுக்தராய் இருக்குமவர்கள்

திலதம் எனத் திரிவார் தம்மை –
இப்படி பாகவத விஷய ப்ரேம யுக்தராய் லோகத்துக்கு இவர்கள் ஒரு திலகம் என்று விசேஷஞ்ஞர்
ஸ்லாகிக்கும் படி திரியும் மஹாத்மாக்களை
அன்றிக்கே
அன்பார் அடிக்கு அன்பர்க்கு -இவர்கள் திலக பூதர் என்று அறிவுடையார் கொண்டாடும்படித்
திரியும் பெரியோர்கள் என்னவுமாம் –

உலகர் பழி தூற்றில் துதியாகும்
இப்படி இருக்கும் அதிகாரிகளை வர்ணாஸ்ரமாதி விசேஷங்கள் ஒன்றும் பாராமல் பாகவதர் என்கிற மாத்திரமே
பற்றாசாகக் கொண்டு பகவத் விஷயம் தன்னிலும் காட்டில் இவர்களே உத்தேச்யர் என்று நினைத்து
அனுவர்த்தித்துத் திரியா நின்றார்கள் என்று லௌகிகரானவர்கள் பழி தூற்றில் –
அவர்கள் குண ப்ரகாசகமாகையாலே ஸ்தோத்ரமாய் விடும்

தூற்றாதவர் இவரைப் போற்றிலது புன்மையே யாம் —
இப்படி பழி தூற்றாதே லௌகிகரானவர்கள் கீழ்ச் சொன்ன அந்த அதிகாரிகளை லோக சங்க்ரஹாதிகளுக்காக
மேல் எழச் செய்து கொண்டு போரும் ஆசாரங்களைக் கண்டு அவையடியாக நல்லவர்கள் என்று புகழில் –
அது இவர்கள் அதிகாரத்துக்குச் சேராமையாலே புன்மையேயாய் விடும் என்கை
புன்மை -பொல்லாங்கு -நிந்தை -என்றபடி

நியாச வித்யைக நிஷ்டா நாம் வைஷ்ணவா நாம் மஹாத்மா நாம் ப்ராக்ருதாபி ஸ்துதிர் நிந்தா
நிந்தாஸ்துதிரிதி ஸ்ம்ருதா -என்னக் கடவது இறே

——————————————

இப்படியானாலும் இவர்களுடைய சொலவும் செயலும் நாட்டாருக்குப் பொருந்தாமையாலே
அது தன்னை இட்டுப் பழிக்கிலோ என்ன –
இது பிரதம பர்வ நிஷ்டருக்கும் ஒக்கும் இறே என்று பார்த்து சாமாந்யேன பாகவதர்களுடைய
யுக்தி வ்ருத்தி கடாக்ஷங்களினுடைய வைபவத்தைச் சொல்லி இப்பிரபந்தத்தை நிகமிக்கிறார் –

அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ –40-

அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
கோல மலர்ப் பாவைக்கு அன்பா -என்று இதுவே நிரூபகமாகச் சொல்லி சம்போதிக்கும் படி தாமரைப் பூவை
இருப்பிடமாக வுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் விஷயத்தில் ப்ரேம யுக்தனாய் இருக்கும் ஸ்ரீ ஈஸ்வரன் திருவடிகளிலே
ப்ரேமமே நிரூபகமாம் படி இருக்கும் பாகவதர்கள் –

சொல்லும் அவிடு சுருதியாம் –
விநோதமாய்ச் சொல்லும் வார்த்தை வேதார்த்தமாய் இருக்கையாலே -அபவ்ருஷேயமாய்-நித்ய நிர்தோஷமாய்
ஆப்த தமமாய் இருக்கும் வேதத்தோபாதி ப்ரமாணமாய்ப் பரிக்ரஹிக்கலாய் இருக்கும் –

நல்ல படியாம் மனு நூற்கு அவர் சரிதை
அவர்கள் சரித்ரமானது –தர்ம சாஸ்திரங்களில் தலையாய்-சதாசார ப்ரதிபாதகமாய் இருக்கும் மானவ சாஸ்திரத்துக்கு –
இத்தைக் கொண்டோ இது சொல்லிற்று என்னும்படி நன்றான மூலமாய் இருக்கும் –
படியாவது-தன்னைக் கொண்டு தனக்குப் போலியானது செய்யலாம்படி மூலமாய் இருக்குமது இறே

பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ —
அவர்களுடைய கடாக்ஷமானது தூறு மண்டிக் கிடக்கிற கர்ம சமூகத்துக்கு அக்னி போலே நாசகரமாய் இருக்கும் என்கை –
அதாவது இவர்களுடைய கடாக்ஷம் -ஸ்வ விஷயமானவர்கள் கர்மத்தை நிஸ் சேஷமாகப் போக்குகையாலே
ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்கும்-என்றதாயிற்று –

வேத சாஸ்த்ர ரதா ரூடா ஜ்ஞானகட்கதரா த்விஜா க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ச தர்ம பரமோ மத-என்றும்
வாஸூ தேவம் ப்ரபன்நா நாம் யான்யேவ சரிதா நிவை தான்யேவ தர்ம சாஸ்த்ராணீ த்யேவம் வேத விதோ விது-என்றும்
ந ஸூத்த்யாதி ததா ஜந்துஸ் தீர்த்த வாரி சதைரபி லிலயைவ யதா பூப வைஷ்ணவாநாம் ஹி வீஷணை-என்றும்
இதிஹாச புராணங்களில் சொல்லப்பட்ட வசனங்கள் இப்பாட்டில் அருளிச் செய்த அர்த்தத்துக்கு பிரமாணமாக அனுசந்தேயங்கள்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: