ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஞான சாரம்-(21-30) –ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் — –

ஸ்ரீ யபதியானவன் தான் பக்கல் பக்தரானவர்களுக்கு அதி மாத்ரங்களான துக்கங்களைச் செய்யினும்
அது அவர்கள் பக்கல் ஸ்நேஹ கார்யம் என்னுமத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய் நலமாம் –தேரில்
பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை யற்று –21-

ஆரப் பெருந்துயரே செய்திடினும்
துயர் -துக்கம் / பெரும் துயர் -மஹா துக்கம் /ஆரப் பெரும் துயர் என்கையாலே -மிகவும் பெரும் துக்கம் -என்றபடி –
துயரே என்கிற அவதாரணத்தாலே –
நடுவே ஒரு ஸூக வியவதானம் இல்லாமையைச் சொல்லுகிறது –
செய்திடினும் -என்றது –
இவர்கள் பிராரப்த கர்ம பலமாய் வந்தது ஆகிலும் பலப்ரதன் அவன் ஆகையாலே –
பூர்வக உத்தராக பிராரப்த கண்டங்கள் எல்லாம் கழிக்கிறவனுக்கு இத்தையும் கழிக்க அரிது அன்று இறே
ஹிதரூபமாக அவன் அவற்றை அனுபவிக்கை இறே இவனுக்கு இது அனுபவிக்க வேண்டுகிறது –
இது தான் இவனுக்கு உண்டான ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் வைராக்யத்தைப் பிறப்பிக்கைக்காகச் செய்கிறது இறே –

வேரிச் சரோருகை கோன்-
பரிமள பிரசுரமான தாமரையை வாசஸ்தானமாக வுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
இப்படி இவர்களுக்கு துக்கத்தை விளைக்கிறதுக்கு அவளும் கூட்டுப் போலே காணும் –
ஹிதரூபமாகையாலே அவளும் கூடும் இறே -நிக்ரஹத்தாலே செய்யில் இறே நிஷேதிப்பது –
அனுக்ரஹத்தாலே செய்கையாகையாலே அனுமதி பண்ணி இருக்குமாயிற்று –

மெய்நலமாம் —
பாரமார்த்திக ஸ்நேஹ கார்யமாம் / மெய்நலம் என்றது -மெய்யான ஸ்நேஹம் – என்றபடி –
தேரில் -ஆராயில்–
வேரிச் சரோருகை கோன்–அன்பர்கள் பால்-ஆரப் பெருந்துயரே செய்திடினும் -தேரில் – மெய்நலமாம்-என்று அந்வயம் –
இதுக்கு த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் மேல் –

பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை அறுத்தற்கு இசை தாதை யற்று —
அதாவது -அவனுக்கு இது பொறுக்கப் போகாது என்று தோற்றி இருந்தாலும் புத்ரனுடைய சரீரத்தில்
க்ரந்தியை ஹிதபுத்தியால் சேதிக்கைக்கு அனுமதி பண்ணும் பிதாவைப் போலே -என்கை –

ஹரிர் துக்கா நி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை சஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா-என்னக் கடவது இறே

————————————-

பிராரப்த கர்ம அனுபவம் பண்ண வேணுமாகில் இஜ் ஜன்மத்து அளவு அன்றிக்கே
ஜன்மாந்தரத்திலும் போய் அனுபவிக்க வேண்டி வருமோ என்ன
சம்பந்த ஞான பூர்வகமாக அவன் திருவடிகளிலே சரணம் புகுந்தார்க்குப் பின்பு
ஒரு ஜென்மம் பிறந்து அனுபவிக்கத்தக்க கர்மம் உண்டோ -என்கிறார் –

உடைமை நான் என்று உடையான் உயிரை
வடமதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின் –22-

உடைமை நான் என்றும்
நான் உடமை என்றும் தன்னுடைய ஸ்வத் வத்தையும்

உடையான் உயிரை வடமதுரை வந்து உதித்தான் என்றும் –
இவ்வாத்மாவை உடையவன் இத்தை சம்சாரத்தில் நின்றும் எடுக்கைக்காக
ஸ்ரீ மதுரையிலே வந்து ஆவிர்ப்பவித்து நின்றவனுடைய ஸ்வாமித்வத்தையும்

திடமாக அறிந்து –
த்ருடமாக அறிந்து -தத்வ ஸ்திதியை ஆராய்ந்தால் -இத்தலைக்கு ஸ்வத்வமும்-அத்தலைக்கு ஸ்வாமித்வமும்
வ்யவஸ்திதமாய் இறே இருப்பது
ஆகையாலே உடமையான இவன் இருந்த இடத்திலே வருவானும்
இவனைத் தன்னுடனே சேர்த்துக் கொள்ளுவானும்
சேர்ந்தால் தான் பேறாக உகப்பானும் -அவன் ஆயிற்று
ஆக விறே -ப்ராப்தாவும் ப்ராபகனும் -ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்தது –
திடமாக அறிகையாவது-இப்படி இருக்கிற சம்பந்தத்தை சம்சய விபர்யயமற அறிகை -இப்படி இஸ் சம்பந்தத்தை அறிந்து

அவன் தன் தாளில் அடைந்தவர்க்கும்
ஸ்வாமியானவன் திருவடிகளிலே பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே சரணம் புகுந்தவர்களுக்கும்

உண்டோ பிறந்து படு நீள் துயரம் பின் —
அதாவது -பின்பு ஒரு ஜென்மம் பிறந்து அனுபவிக்கத் தக்க தீர்க்கமான கர்மம் உண்டோ -என்கை –
சரணாகதரானால் -ஆர்த்தராகில் -அப்போதே முக்தராகையும்–
திருப்தராகில் ஆரப்த சரீர அவசானத்திலே முக்தராகையும் ஒழிய ஜன்மாந்தர அந்வயம் இல்லை இறே

ஆர்த்தா நாம் ஆசு பலதா சக்ருதேவ கருதாஹ்ய சௌ திருப்தாநாம் அபி ஜந்துநாம் தேஹாந்தர நிவாரணீ —
பிரபத்தி ஸ்வ பாவம் சொல்லும் சாஸ்திரமே இவ்வர்த்தத்தைச் சொல்லா நின்றது இறே

ஸ்வத்வமாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் உபயோரேஷ சம்பன்னோ ந பரோபிமதோ மம–ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
இப்பாட்டில் சொன்ன ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்துக்கு பிரமாணமாக அனுசந்தேயம் –

———————————————–

பூர்வாக பலத்தை அனுசந்தித்து -அது நம்மை வந்து நலியும் என்று தளருகிற திரு உள்ளத்தைத் தேற்றுகிற பாசுரத்தாலே
சரணாகதனான பின்பு பூர்வாக பலமான துக்க அனுபவம் இல்லை என்னுமத்தை சகலரும் அறியும்படி அருளிச் செய்கிறார் –

ஊழி வினைக் குறும்பர் ஓட்டருவர் என்று அஞ்சி
ஏழை மனமே யினித் தளரேல் -ஆழி வண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒரு கால்
சொன்னதர் பின் உண்டோ துயர் –23-

ஊழி வினைக் குறும்பர்
பழையதாக ஆர்ஜிக்கப்பட்ட கர்மம் ஆகிற குறும்பர் -ஊழ் என்று பழைமை -/
ஊழ் வினை என்கிறது -பழைய வினை என்றபடி /இத்தால் பூர்வாகத்தைச் சொல்கிறது
கர்மங்களைக் குறும்பர் என்றது -சேதன சமாதியாலே
குறும்பரானவர்கள் பலத்தால் நாட்டைத் தம் வசமாக்கி மூலையடி நடத்துமா போலே கர்மங்களும்
இவ் வாத்மாவைத் தம் வழியே இழுத்து மூலையடியே நடத்துமவை இறே

ஓட்டருவர் என்று அஞ்சி
ஓடி வருவார் என்று பயப்பட்டு -குறும்பர் ஆகையாலே ஓட்டருவர்-என்கிறது
கீழ்ச் சொன்ன கர்மங்கள் சீக்ர கதியாய் வந்து நலியும் என்று பயப்பட்டு –

ஏழை மனமே
அறிவிலியான நெஞ்சே –அதாவது சரண்ய வைபவமும் -சரணாகதி வைபவமும் –
சரணாகதன் பெரும் பேறும் -அறிக்கைக்கு தக்க அளவில்லாத நெஞ்சே -என்கை –

யினித் தளரேல் –
இதுக்கு முன்பு தளர்ந்தாய் ஆகிலும் இனித் தளராதே கொள்-இத்தால் திரு உள்ளத்தை மாஸூச என்கிறார் –
இனி என்றதின் கருத்தை வியக்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

ஆழி வண்ணன்
கம்பீர ஸ்வ பாவன்
அன்றிக்கே -கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் -என்னவுமாம் –

தன்னடிக் கீழ் வீழ்ந்து –
ஆழி வன்ன நின்னடி இணை அடைந்தேன் -என்கிறபடியே அவன் திருவடிகளின் கீழே விழுந்து

சரண் என்று இரந்து
த்வம் மே உபாய பூதோ மே பவ -என்கிறபடியே நீயே எனக்குச் சரணமாக வேணும் என்று — இரந்து -அர்த்தித்து-

ஒரு கால் சொன்னதர் பின்
பிரபத்தி ஸக்ருத் கரணீயை யாகையாலே இப்படி ஸக்ருத் உச்சாரணம் பண்ணின பின்பு

உண்டோ துயர் —
அதாவது இப்படி சரணாகதனான பின்பு பூர்வாக பலமாய் வருகிற துக்கம் உண்டோ
சரணாகதனான போதே பூர்வ உத்தராக பிராரப்த கண்டங்கள் எல்லாம் எல்லாம் கழி யுண்டு போம் என்கிற
பிராமண பலத்தை நினைத்து உண்டோ -என்கிறார் –

மாபீர் மந்த மநோ விசிந்தய பஹூதா யாமீஸ் சிரம் யாதநா நாமீ ந பிரபவந்தி பாபரிபவ ஸ்வாமீ ந நு ஸ்ரீ தர –
ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம் லோகஸ்ய
வ்யசநாப நோத ந கரோதா சஸ்ய கிம் ந ஷம–என்கிற ஸ்ரீ முகுந்த மாலை ஸ்லோஹத்தை –
ஏழை மனமே இனித் தளரேல் -என்ற இதுக்கு சம்வாதமாகச் சொல்லுவார்கள் –

—————————-

உத்தராக பாஹுள்யத்தை நினைத்துத் தளருகிற திரு உள்ளத்தைத் தேற்றுகிற பாசுரத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரன் உத்தராகத்தில் கண் வையான் என்னுமத்தை சகலரும் அறிய அருளிச் செய்கிறார் –

வண்டு படி துளப மார்பன் இடைச் செய்த பிழை
உண்டு பல வென்று உளம் தளரேல் -தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லாதான் காண் இறை –24-

வண்டு படி துளப மார்பன் இடைச் செய்த பிழை
மதுபான அர்த்தமாக வண்டுகள் சர்வ காலமும் படிந்து கிடக்கிற திருத் துழாயாலே அலங்க்ருதமான
திரு மார்பை யுடையவன் விஷயத்தில் செய்த குற்றங்களானவை –
இப்போது இந்த விசேஷணம் சொல்லிற்று சரணாகதர் ஆனவர்களை அனுபவிக்கைக்காக சர்வகாலமும் தன்னை
அலங்கரித்துக் கொண்டு இருக்குமவன் அவர்கள் பிராமாதிகமாகப் பண்ணும் குற்றங்களில் கண் வையான் என்று தோற்றுகைக்காக –

உண்டு பல வென்று –
பிரக்ருதியோடு இருக்கையாலே மநோ வாக் காயங்களால் செய்தவை பலவும் உண்டு என்று ஒன்றும் செய்யக் கடவோம்
என்று இருந்தாலும் பிராமாதிகமாக வந்து புகுகிறவை பலவும் உண்டு இறே -அத்தை நினைத்து –

உளம் தளரேல் –
நெஞ்சே தளராதே கொள் -உளம் என்று உள்ளம் என்ற படியாய் சம்புத்தியாய் இருக்கிறது -உள்ளமே என்றபடி –
தவராமல் இருக்கத் தக்கது அருளிச் செய்கிறார் மேல் –

தொண்டர் செய்யும்
தான் பக்கல் பக்தரானவர்கள் செய்யும்
தொண்டர் -என்றது சபலர் என்றபடியாய்-பக்தரானவர்கள் என்றபடி –
அன்றிக்கே தனக்கு சேஷ பூதரானவர்கள் என்னவுமாம் –

பல்லாயிரம் பிழைகள்
குண த்ரய ஆஸ்ரயமான தேகத்தோடே இருக்கையாலே ரஜஸ் தமஸ்ஸூக்களால் கலங்கி கரண த்ரயத்தாலும்
பிராமாதிகமாக நாள்தோறும் செய்யுமவை அநேகம் ஆகையாலே அநேகம் ஆயிரம் பிழைகள் என்கிறார் –
பிழை -குற்றம் –
இத்தால் -அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசார ரூப
நாநா வித அநந்த அபசாரன்–என்றவற்றைச் சொல்லுகிறது –

பார்த்து இருந்தும்
ஸ்ரீ சர்வஞ்ஞனாகையாலும் -அந்தர்யாமியாகையாலும் சர்வகாலமும் சர்வருடைய வியாபாரமும்
பார்த்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்

காணும் கண் இல்லாதான் காண் இறை —
அதாவது அவர்கள் செய்யும் பிழைகளை தரிசிக்கும் கண் இல்லாதவன் காண் சேஷியானவன் என்கை –
இப்போது கண் என்கிறது -ஞானத்தை இறே / அது இல்லாதவன் என்கையாலே ஆஸ்ரிதர் செய்யும் குற்றங்களில்
அவ்விஞ்ஞாதவாய் இருக்கும் என்றது ஆயிற்று
இறை -என்று ஸ்ரீ ஈஸ்வரன் என்னவுமாம் –
அவிஜ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ் ஸூ கமலேஷண சதா ஜகத் சமஸ்தஞ்ச பஸ்யன் நபி ந பஸ்யதி-ஹ்ருதஸ்தித -என்னக் கடவது இறே

————————————-

காணும் கண் இல்லாதவன் காண் -என்று உத்தராகத்தில் அஞ்ஞனாய் இருக்கும் என்றார் கீழ் –
பூர்வாகம் தன்னிலே ஏதேனும் ஒன்றைத் தர்சித்தாலும் வத்சலனாகையாலே அத்தை போக்யமாகக் கொள்ளுமத்தனை அல்லது
அத்தையிட்டு இவர்களை இகழான் என்னுமத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –25-

அற்றம் உரைக்கில்
அறுதியானது சொல்லில் -அதாவது -பரமார்த்தமானது சொல்லில் -என்கை

அடைந்தவர் பால்
ஆஸ்ரிதரானவர் பக்கல்

அம்புயை கோன் –
ஸ்ரீயப்பதியானவன் -அவள் புருஷகாரமாக இறே அடியில் அங்கீ கரித்தது –
அப்படி அங்கீ கரித்தால் பின்னை என்றும் ஓக்க அவர்கள் பக்கல் வத்சலனாய் இருக்கும் ஆயிற்று –
தான் காட்டிக் கொடுத்தவர்களை அவன் கைக்கொண்ட அதில் உரைப்பை அறிகைக்காக-
அவள் தானே அவர்கள் குற்றங்களைக் காட்டினாலும் -என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்னுமவன் இறே

குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ –
அதாவது -அவர்கள் குற்றங்களை தர்சித்து-அது அடியாக -அவர்களை இகழ்ந்து விடும் ஸ்வ பாவத்தை யுடையவனோ என்கை –
கொள்கை -ஸ்வ பாவம் /இத்தால் அவள் புருஷகார புரஸ் ஸரமாகத் தன்னாலே அங்கீ கரிக்கப்பட்டவர்களுடைய
குற்றம் தானே முதலிலே உணரக் கூடாது –
உணர்ந்தாலும் வாத்சல்யத்தாலே அத்தை போக்யமாகக் கொள்ளுமத்தனை ஒழிய அத்தையிட்டு
அவர்களை இகழக் கூடாது என்னும் இடம் சொல்லுகிறது –
இகழும் கொள்கையனோ -என்கிற இது இறே குற்றத்தை உணர்ந்தான் ஆகில்
அதை போக்யமாகக் கொள்ளும் அத்தனை என்கிற அர்த்தத்தைக் காட்டுகிறது –

எற்றே
என்னே -அவனுடைய வாத்சல்ய பிரகாரம் அறியாதார் இறே இகழும் என்று நினைக்கிறவர்கள் என்று -என்னே -என்கிறார் –
அவன் வாத்சல்யத்துக்கு ஒரு த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் மேல் –

தன் கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா —
அதாவது -சுவடு பட்ட தரையிலே புல் கவ்வாததாய் இருக்கச் செய்தே
தன் கடையில் நின்றும் விழுந்த கன்றினுடைய உடம்பில் வழும்பை அன்றோ ஸ்நேஹிந்து புஜிப்பது-
அன்று அத்தைப் பெற்ற வத்தாலே -அதன் பக்கல் உகப்பை யுடைத்தான பசுவானது என்கை –
இது தான் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய வாத்சல்யத்துக்கு த்ருஷ்டாந்தமாக சகலரும் அருளிச்செய்யுமது இறே

பிரபன்னான் மாதவஸ் சர்வான் தோஷேண பரிக்ருஹ்யதே அத்யஜாதம் யதா வத்சம் தோஷேண சஹ வத்சலா -என்னக் கடவது இறே
இந்த ஸ்லோகத்தில் -பரிக்ருஹ்யதே-என்கிற இது ஆர்ஷம் -பரிக்ருஹ்ணாதி-என்றபடி

———————————————————-

ஆச்சார்ய ப்ரஸாதத்தாலே அவன் அருளிச் செய்த சரணாகதியினுடைய அர்த்தத்தை அனுசந்தித்து விஸ்வஸித்து
இருக்குமவர்கள் ஸ்ரீ பரமபதத்தில் போய் பகவத் கைங்கர்ய பரராய் இருப்பர் என்கிறார் –

தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளது -வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணிகட்கு ஏய்ந்து–26-

தப்பில் குருவருளால்
தப்பில்லாத குருவினுடைய அருளாலே -அதாவது -ஞான அனுஷ்டானங்களில்
ஒரு தவிர்தலில்லாத ஆச்சார்யருடைய ப்ரஸாதத்தாலே -என்கை

தாமரையாள் நாயகன் தன்
ஸ்ரீயப்பதியானவன் தன்னுடைய -இத்தால் ஸ்ரீமத் -பத -நாராயண பதங்களின்-அர்த்தத்தைச் சொல்லுகிறது -எங்கனே என்னில் –
தாமரையாள் நாயகன் -என்கையாலே புருஷகார பூதையான பிராட்டியோடு உண்டான நித்ய யோகத்தையும்
நாயகன் தன் -என்கிற உறைப்பாலே-ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதகமாயும் -ஆஸ்ரித கார்ய ஆபாதகமாய் உள்ள
வாத்சல்யாதியும்-ஞானாதியுமான குணங்களுக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் ஆகாரத்தையும்-சொல்லுகையாலே

ஒப்பில் அடிகள்
ஒப்பில்லாத திருவடிகளை
இத்தால் சரணவ் -என்கிற பதத்தில் அர்த்தத்தைச் சொல்லுகிறது
திருவடிகளுக்கு ஒப்பு இல்லாமையாவது -சஹாயாந்தர நிரபேஷமாய் இருக்கை –

நமக்கு உள்ளது -வைப்பு என்று
அகிஞ்சனராய் அநந்ய கதிகளான நமக்கு ஹிருதயத்தில் இருக்கிற சேமநிதி என்று
இத்தால் சரண பதத்திலும் கிரியா பதத்திலும் உண்டான அர்த்தங்களை சொல்லுகிறது -எங்கனே என்னில் –
வைப்பு என்று தன்னைக் கொண்டு சகலமும் உண்டாக்கிக் கொள்ளலாம்
சேம நிதியாகச் சொல்லுகையாலே -உபாயத்வத்தையும்
உள்ளத்து வைப்பு என்று -ஹிருதய சம்பந்தத்தையும்
தத் விஷயமான மானஸ ஸ்வீகாரத்தையும் -சொல்லுகையாலே -இப்படி அனுசந்தித்து –

தேறி இருப்பார்கள் –
இவ்வநுஸந்தானம் உண்டானாலும் மஹா விஸ்வாஸம் வேணும் இறே –
ஆகையால் அப்படி விஸ்வஸித்து இருக்குமவர்கள் –

தேசு பொலி வைகுந்தத்து ஏறி
அதாவது பகவத் அனுபவ கைங்கர்யங்களுக்கு அனுரூபமான தேசம் என்னும் தேஜஸ்ஸூ
மிக்கு இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தில் போய்

இருப்பார் பணிகட்கு ஏய்ந்து–
பணிகளுக்கு எய்ந்து இருப்பார் -பணிகள் என்று -பகவத் கைங்கர்யங்களை சொல்லுகிறது
அதுக்கு ஏய்ந்து இருக்கை யாவது -அனுரூபமான அதிகாரிகளாய் இருக்கை –
இருப்பார் என்றது இருப்பர் என்றபடி
அன்றிக்கே
பணி என்று ஸ்ரீ திரு வனந்த ஆழ்வானாய்-பஹு வசனம் பூஜ்ய வாசியாய் -தத் துல்யராய் இருப்பார் என்னவுமாம்
அதாவது ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் -சென்றால் குடையாம் -என்கிறபடியே
அகில சேஷ விருத்திகளிலும் அதிக்ருத்தனாய் இருக்குமா போலே -அசேஷ சேஷ விருத்திகளிலும் அன்விதராய் இருப்பார் என்கை –

ஆச்சார் யஸ்ய பிரசாதேன மம சர்வ மபீப்சிதம் ப்ராப்நுயா மீதி விஸ்வாசோ யஸ்யாஸ்தி ச ஸூகீ பவேத்-என்னக் கடவது இறே

—————————————–

உஜ்ஜீவன உபாயம் அறியாதாரும் -அத்தை உபதேசிக்குமவர்கள் பக்கல் சேர்ந்து அறியாதாரும் –
ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தத்தை விஸ்வசியாதவர்களும் -ஸ்ரீ பரமபதத்தில் ஏறப் பெறாதே –
பவ துக்க மக்நராய் போருவார்கள்-என்கிறார் –

நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –27-

நெறி அறியா தாரும்
சம்சாரத்தைத் தப்புவிக்கும் உபாயம் அறியாதாரும் –
நெறி -வழியாய் -உபாயத்தைச் சொல்லுகிறது –

அறிந்தவர் பால் சென்று செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் –
உஜ்ஜீவன உபாயம் அறிந்தவர்கள் பக்கல் சென்று -அவர்கள் இத்தைத் தங்களுக்கு உபதேசிக்கைக்கு உறுப்பாக
பிரணிபாத அபிவாதன பரப்ரஸ்ன சேவா ரூபமான செறிதலைச் செய்யாதே சஜாதீய புத்தியால்
அவர்கள் பக்கல் தோஷ தர்சனம் பண்ணி இருக்கும் துஷ்ட ஹிருதயரானவர்கள் தாங்களும்

இறை யுரையைத் தேறாதவரும்
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று சகல ஆத்மாக்களுக்கும் உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக
அர்ஜுனன் வியாஜ்யத்தால் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் அர்த்தத்தை விஸ்வசியாதவர்களும்

திரு மடந்தை கோன் உலகத் தேறார்
திருமால் வைகுந்தம் -என்கிறபடியே ஸ்ரீயப்பதியினுடைய லோகமான ஸ்ரீ வைகுண்டத்தில் ஏறப் பெறார்கள்

இடர் அழுந்துவார் —
சம்சார துக்க மக்நராய்ப் போருவார்கள் என்கை –

அஜ்ஞஸ் சாஸ்ரத்ததா நஸ்ச சமசயாத் மாவி நஸ்யதி நாயம் லோகோஸ்தி நபரோ ந ஸூகம் சம்சயாத் மன -ஸ்ரீ கீதா-4-40-என்று
அவன் அருளிச் செய்த வசனம் இப் பாட்டில் சொன்ன அர்த்தத்துக்கு சம்வாதமாக அனுசந்தேயம் –

————————————————–

கீழ் இரண்டு பாட்டாலே பரமபதத்தில் போமவர்கள் படியையும் போகாதவர்கள் படியையும் அருளிச் செய்தார் –
இனி இப்பாட்டில் பரமபதத்தில் போமவர்களுக்கு இப்பேற்றுக்கு அடியான சரணாகதியானது தன்னை அவலம்பித்து
நிற்குமவன் உபாயாந்தரத்திலே கை வைக்கில் தான் ரக்ஷகமாகாதே தன்னைக் கொண்டு
நழுவும்படியை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –28-

சரணாகதி –
அநந்ய சாத்யே ஸ்வ அபீஷ்டே மஹா விஸ்வாஸ பூர்வகம் -ததேக உபாயதா யாஸ்ஞா பிரபத்திஸ் சரணாகதி -என்றும்
அஹம் அஸ்ய அபராதனாம் ஆலயோ அகிஞ்சன அகதி -தவமே உபாய பூதோ மே பவதி பரார்த்தநா மதி -என்றும் சொல்லுகிறபடியே
மஹா விஸ்வாஸ பூர்வகமாக -அகிஞ்சனனாய் அநந்ய கதியான அதிகாரியாலே அனுஷ்ட்டிக்கப்படுமதாய்
ஆர்த்தானாமா ஸூ பலதா-இத்யாதிப்படியே அமோகையாய் கார்யம் செய்யும் சரணாகதி யானது

மற்றோர் சாதனத்தைப் பற்றில்
தன்னோடு அன்விதனான சேதனன் தான் வைபவத்தை அறிந்து இதுவே நமக்கு ரக்ஷகம் என்று விஸ்வஸித்து நிற்கை அன்றிக்கே –
இதுக்குத் துணையாக நாமும் சில செய்வோம் என்று ஸ்வ யத்ன ரூப உபாயங்களில் ஒன்றை அவலம்பிக்கில்

அரணாகாது
தான் இவனுக்கு ரக்ஷகம் ஆகாதே இவனை விட்டுப் போம்
இது தன்னை த்ருஷ்டாந்தக பூர்வகமாக உபபாதிக்கிறார் மேல்

அஞ்சனை தன் சேயை -முரண் அழியக் கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
அஞ்சனையுடைய புத்ரன் திருவடியை பலம் அழியும்படி கட்டினது -முரண் -மிடுக்கு —
தன் பக்கல் துர்ப்பல புத்தி பண்ணி வேறு ஒரு சணல் கயிற்றைக் கொண்டு கட்டுவதற்கு முன்பே –
முன்னே என்றது -கட்டுகையிலே பிரவ்ருத்தமான போதே –

விட்ட படை போல் விடும் —
முன்பு அவனைக் கட்டினதாய் -வேறு ஒரு கயிற்றைக் கொண்டு கட்டுகிற அளவில் தான் விட்டுப் போன
ப்ரஹ்மாஸ்திரம் போலே தன்னைப் பற்றி நின்ற இவன் உபாயாந்தரத்திலே அந்வயித்த போது தான்
இவனை விட்டுப் போம் என்கை –

பிரபத்தே க்வசி தப்யேவம் பராபேஷா ந வித்யதே சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வ காம பலப்ரதா சக்ருதுச்சாரி தாயேன தஸ்ய
சம்சார நாசிநீ ராஷசாநாம் அவிஸ்ரம்பாதாஜ்ஞநே யஸ்ய பந்தனே யதா விகளிதா சத்யஸ் த்வமோகாபி அஸ்த்ர பந்தநா ததா
பும்ஸாம விஸ்ரம்பாத் பிரபத்தி ப்ரச்யுதா பவேத் தஸ்மாத் விச்ரம்ப யுக்தாநாம் முக்திம் தாஸ்யதி சாசிராத்–என்று
இவ்வர்த்தம் தான் -ஸ்ரீ சனத்குமார சம்ஹிதையிலே சொல்லப்பட்டது இறே

———————————————–

மந்த்ர -குரு -தேவதைகள் -மூன்றினுடையவும் ப்ரசாதத்துக்கு சர்வ காலமும் விஷயமாய்ப் போருமவர்கள்
சம்சார துக்கத்தை வென்று சடக்கென மோக்ஷத்தைப் பெறுவார் என்கிறார் –

மந்த்ரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும் -நந்தலிலா
தென்று மருள் புரிவர் யாவரவரிடரை
வென்று கடிதடைவர் வீடு –29-

மந்த்ரமும்
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர -என்கிறபடி -அனுசந்தாதாவுக்கு ரக்ஷகமான ஸ்ரீ திரு மந்த்ரமும்
ஈந்த குருவும்
மந்த்ர பிரதானனான ஸ்ரீ ஆச்சார்யனும்
அம் மந்திரத்தால் சிந்தனை செய்கின்ற திருமாலும் –
அந்த மந்த்ர ப்ரதிபாத்யனாய் பாத்தாலே அனுசந்திக்கப்படுகிற ஸ்ரீயபதியும்
நந்தலிலா
நந்துதல் இன்றிக்கே -அதாவது -நந்துதல் என்று கேடாய் -அது இல்லை என்கையாலே விச்சேதம் இன்றிக்கே என்கை
என்றும் அருள் புரிவர் யாவர்
சர்வகாலமும் ப்ரஸாதத்தைப் பண்ணுகைக்கு விஷயபூதராய் இருக்குமவர்கள் யாவர் சிலர் –
அவர் இடரை வென்று கடிதடைவர் வீடு —
அதாவது -அவர்கள் சாம்சாரிகமான துக்கங்களையும் ஜெயித்து சீக்ரமாகப் பரம புருஷார்த்த லக்ஷண
மோக்ஷத்தைப் ப்ராபிப்பார்கள் -என்கை –

தேவதாயா குரோஸ் சைவ மந்த்ராஸ்யைவ பிரசாதத
ஐஹிக ஆமுஷ்மிகா சித்திர் விஜஸ் யஸ்யாந்ந சம்சய -புராண சார சமுச்சையே மூல மந்திர மகாத்ம்யத்தில்
சொன்ன வசனம் இதுக்கு பிரமாணமாக அனுசந்தேயம்

மந்த்ரே தததேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ-த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா சாஹி பிரதம சாதனம் -என்னக் கடவது இறே

———————————————–

தனக்கு அபேக்ஷிதமான ஐஹிக ஆமுஷ்மிக சகல வஸ்துக்களும் திரு அஷ்டாக்ஷர பிரதனான ஸ்ரீ ஆச்சார்யனே என்று
இராதவர்களோடே உள்ள சம்பந்தத்தை விடுகை ஸாஸ்த்ர விஹிதம் என்கிறார் –

மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-

மாடும்
தனக்கு போக்யமான ஷீராதிகளை யுண்டாக்கும் அவை என்று ஆதரிக்கப்படும் பசுக்களும்
மனையும்
போக ஸ்தானமான க்ருஹமும்
கிளையும்
தங்களோட்டை கலவிதானே போகமாம்படி இருக்கும் பந்துக்களும்
இவை -மற்றும் ஐஹிகமான போக்கிய வஸ்துக்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்

மறை முனிவர் தேடும் உயர் வீடும்
வைதிகராய் பகவான் மனன சீலராய் இருக்குமவர்கள் ப்ராப்யம் என்று விரும்பித் தேடப்படுமதாய்-
கைவல்ய மோக்ஷம் போல் அன்றிக்கே உத்க்ருஷ்டமான மோக்ஷமும்
செம் நெறியும் —
அந்த மோக்ஷத்தை பிராபிக்கைக்கு உடலாக போரும் அர்ச்சிராதி மார்க்கமும்
அன்றிக்கே செந்நெறி என்று அந்த மோக்ஷத்தை பிராபிக்கைக்கு உறுப்பான உபாயத்தைச் சொல்லவுமாம் –

பீடுடைய எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
கீழ் யுக்தமானவை எல்லாம் -சம்சார வர்த்தகங்களுமாய் -ஷூத்ரங்களுமான மந்த்ராந்தரங்கள் போல் அன்றிக்கே
சம்சார நிவர்த்தகம் ஆகையாலே வந்த பெருமையுடைய திரு அஷ்டாக்ஷரத்தைத் தந்து அருளின ஸ்ரீ ஆச்சார்யனே -என்று
இராதவர்களோடே உண்டான சம்பந்தத்தை

விட்டிடுகை கண்டீர் விதி —
விடுகை யாவது -சாஸ்திரம் விஹிதம் காணுங்கோள் -என்கை -இத்தால் அவர்களோட்டை சம்பந்தம்
அவஸ்யம் விட வேண்டும் என்றதாயிற்று –

ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் குருர் அஷ்டாஷர ப்ரத இத்யேவம் யேந மன்யந்தே த்யக் தவ்யாஸ்தே மநீஷிபி -என்னக் கடவது இறே

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: