ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்-(1-10) –ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் — –

தனியன் –
சுருளார் கரும் குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் சொன்ன
பொருள் ஞான சாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கு புகழ்
அருளாள மா முனி யாம் பொற் கழல்கள் அடைந்த பின்னே –

——————————–

அவதாரிகை —
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே ஆஸ்ரயித்து-
சகல வேத ஸாஸ்த்ர தாத்பர்யங்கள் எல்லாம் அவர் அருளிச் செய்யக் கேட்டு
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்யாவித்தராய் –
தேவு மற்று அறியேன் – என்று அவர் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யம் பண்ணி சேவித்து இருந்த ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார்

தம்முடைய பரம கிருபையால் இவ்வர்த்த விசேஷங்கள் எல்லாம் அறிந்து உஜ்ஜீவிக்க வேணும் என்று
தத்வ ஹித புருஷார்த்த ஞானத்தினுடைய சாராம்சத்தைப்
பெண்ணுக்கும் பேதைக்கும் தெரியக் கடவதாக
திராவிட பாஷையாலே இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

ஆகையாலே
இதுக்கு ஸ்ரீ ஞான சாரம் என்று திரு நாமம் ஆயிற்று –

————————

முதல் பாசுரம் -அவதாரிகை –

சகல வேதாந்த தாத்பர்ய பூமியாய் –
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்யா ப்ரதிபாதகமாய் –
சம்சார சேதன உஜ்ஜீவன காமனான ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னாலே பிரகாசிக்கப்பட்டுள்ளதாய் –
உபதேச பரம்பரா ப்ராப்தமாய் –
தத்வ ஹித அக்ரேஸரான நம் பூர்வாச்சார்யர்களுக்கு பரம தனமாய் –
நித்ய அனுசந்தானமாய் இறே ரஹஸ்ய த்ரயம் இருப்பது –

அதில் பிரதம ரஹஸ்யமாய்
பத த்ரயாத்மகமான திரு மந்திரத்தில்
பிரதம பத ப்ரதிபாத்யமான அர்த்தத்துக்கு விவரணமாய் இருந்துள்ள
மத்யம சரம பதங்களுக்கு-

த்வயே ந மந்த்ர ரத்னே ந -என்கிறபடி –
மந்த்ர ரத்நாக்யமாய் –
மத்யம ரஹஸ்யமான த்வயத்திலே பூர்வ உத்தர வாக்யங்கள் விவரணமாய் –

அதில் பூர்வ வாக்ய ப்ரதிபாத்யமான சித்த உபாய வரணம்-
உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் ஸ்வீ காரத்தில்
உபாயத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி பூர்வகமாக வேண்டுகையாலும்

உத்தர வாக்ய ப்ரதிபாத்யமாய் பரம புருஷார்த்தமான கைங்கர்யம் பிராப்தி பிரதிபந்தக
சகல பாப நிவ்ருத்தி பூர்வகமாக சித்திக்க வேண்டுகையாலும்
பூர்வ உத்தரார்த்தங்களாலே தத் உபய ப்ரதிபாதகமாய் –
சரம ரஹஸ்யமான சரம ஸ்லோகம் –
வாக்ய த்வயத்துக்கும் விவரணமாய்க் கொண்டு தத் சேஷமாய் இருக்கையாலே –

ரஹஸ்ய த்ரயத்திலும் த்வயமே பிரதானமாக விறே
நம் ஆச்சார்யர்கள் அனுசந்தித்து போருமது –

அந்த த்வயம் தன்னில்
பூர்வ வாக்யத்தாலே ப்ரதிபாதிக்கப்படுகிற பிரபத்தி தான்
ஆர்த்த பிரபத்தி என்றும்
திருப்த பிரபத்தி என்றும் த்விவிதமாய் இறே இருப்பது –

அதில்
ஆர்த்த பிரபத்தி முக்யமாய் –
திருப்தி பிரபத்தி கௌணமாய் இருக்கும் –

அந்த ஆர்த்த பிரபத்தி வேஷத்தை
இந்த பிரபந்தத்தில் முதல் பாட்டிலே அருளிச் செய்கிறார் –

ஊன யுடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வன் அடித்
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய்த் தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்று அற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு –1-

பதவுரை :-

ஊன – மாமிச மயமான
உடல் – சரீரமாகிற
சிறை – சிறைச் சாலையை
நீத்து – துறந்து (விட்டு நீங்கி)
ஒண் கமலை கேள்வன் – அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாகவுடைய லக்ஷ்மீ தேவியின் மணாளனான பகவானுடைய
அடித் தேன– திருவடிகளின் இனிமையை
நுகரும் – துய்க்கும் (அனுபவிக்கும்)
ஆசை மிகு சிந்தையராய் – ஆசை மிகுந்த மனதை உடையவராய்
பழுத்தால் – பழுத்துக் கனிந்தால்
தானே விழும் – தானே விழுகின்ற
கனி போல் – பழம் போல்
பற்றற்று – ஒட்டுதல் அற்று
வீழும் – சரணாகதி செய்யும்
விழுக்காடு தானே– அச் சரணாகதியே
வீடு அருளும்– வீடு பேற்றைக் கொடுக்கும்

ஊன யுடல் சிறை நீத்து –
ஊன
ஊனமாவது மாம்சம் -ஊன என்றது ஊனை என்றபடி –
இத்தால் மாம்ச மயமான சரீரம் என்கை –

இத் தேகத்துக்கு தோஷம் சொல்லுவார் எல்லாரும் –
ஊனக் குரம்பை -என்றும்
ஊனோர் ஆக்கை -என்றும் –
ஊனுடைக் குரம்பை -என்றும் –
இப்படி இறே சொல்லுவதும்

மாம்சத்தைச் சொன்ன இது மற்றும் இதில் உண்டான
அஸ்ருக் பூய விண் மூத்திர ஸ்நாயு மஜ்ஜாஸ்திகளான அவாந்தர தோஷத்துக்கு எல்லாம் உப லக்ஷணம் –

எல்லாம் உண்டானாலும் மாம்ச பிரசுரமாய் இருக்கையாலே –
புண்ணார் ஆக்கை -என்று இறே இத்தைச் சொல்லுகிறது –

புண்ணை மறைய வறிந்து -என்கிறபடியே-
தோலை மறைக்கக் கைப்பாணியிட்டு மெழுக்கு வாசியிலே பிரமிக்கும்படி பண்ணி
வைக்கையாலே ஆந்திர தோஷம் தோற்றாது இறே
அகவாய் புறவாயானால் காக்கை நோக்கப் பணி போறும் அத்தனை இறே-

யுடல் சிறை-
இப்படி ஆந்திர தோஷம் யுக்தமாகையாலும் –
ஆத்மாவுக்கு சங்கோசகரமாகையாலும்-
ஆரப்த கர்ம பலமாகையாலும்
அந்த கர்ம அனுகுணமாக இந்த தேகத்தில் இட்டு வைத்தவனே விடுவிக்கில் யல்லது

தன்னால் விடுத்திக் கொள்ள ஒண்ணாமையாலும்
அறிவு பிறந்ததற்கு இத் தேகத்தில் இருப்பு காராக்ருஹம் போலே நிரந்தர துக்காவஹம் ஆகையாலே
இத் தேகத்தைச் சிறை என்கிறது –

இதில் பொருந்தி இருப்பார் தேக தோஷம் காண மாட்டாத அஞ்ஞர் இறே
மாம்ஸா ஸ்ருக் பூய விண் மூத்ரஸ் நாயு மஜஜாஸ்தி ஸம்ஹதவ்-தேகேஸ்மீன் ப்ரீதிமான்
மூடோபவிதா நரதேபிச -என்றார் இறே ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வான் –

தன்னைச் சிறையனாகவும் –
பெரும் கடன் பட்டானாகவும் –
அந்தகனாகவும் –
விஷதஷ்டனாகவும்-அனுசந்திப்பான் என்று
ப்ரதிஞ்ஜை பண்ணி –
அது நாலையையும் அடைவே விவரிக்கிற
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் முதல் வார்த்தையை விவரிக்க அளவிலே

தேகம் சிறைக்கூடமாகவும் –
தேக அனுபந்திகளான பார்யா புத்ராதிகள் கைக் கூடமாகவும் –
அகங்கார மமகாரங்கள் வளையல்களாகவும் –
நாசமான பாசம் நாரியாகவும்
அவிவேகம் பூட்டாணியாகவும் –
இந்திரியங்கள் பிரிவாளராகவும் –
விஷயங்கள் பிரியலாகவும் –
மனஸ்ஸூ மேல் தண்டலாகவும் –
தான் சிறையனாகவும் –
ஸ்ரீ எம்பெருமான் விமோசனாகவும் அனுசந்திப்பான் என்றார் இறே –

நீத்து
இப்படி இருந்துள்ள தேகம் ஆகிற சிறை விட்டு –
நீத்தல் -விடுதல் –

ராஜபுத்ரன் அழுக்குச் சிறையிலே கிடந்தால்-முடிசூடி ராஜ்ஜியம் பண்ணுமதிலும்-
சிறை விடுகையே பிரயோஜனமாய் இருக்குமா போலே
ப்ராப்ய லாபத்திலும் இதனுடைய விமோசனம் தானே ப்ரயோஜனமாகப் போரும்படி இறே
இதனுடைய ஹேயததை தான் இருப்பது –

ஒண் கமலை கேள்வன் –
பத்மேஸ்திதாம் -என்கிறபடியே
ஒள்ளிதான தாமரைப் பூவை வாஸஸ்தானமாக யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன் –

இத்தால்
அனுபவ கைங்கர்ய பிரதி சம்பந்தியாய்க் கொண்டு
ப்ராப்யமான விஷயம் ஒரு மிதுனம் என்னும் இடம் சொல்லுகிறது –
இது தன்னை உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தில் கண்டு கொள்வது

அடித் தேன்
அடித் தேன் என்று ஸ்ரீயபதியானவனுடைய திருவடிகளில் போக்யத்தைச் சொல்லுகிறது

விஷ்ணு பதே பரமே மத்வ உத்ஸ -என்றும்
தேனே மலரும் திருப்பாதம் -என்றும் சொல்லக் கடவது இறே

இது தான் திவ்ய மங்கள விக்ரஹ போக்யத்தைக்கும் உப லக்ஷணம்
திருவடிகளாகிறது திவ்ய மங்கள விக்ரஹ ஏகதேசம் இறே

நின் மாட்டாயா மலர் புரையும் திரு உருவம் -மாட்டை –மாட்டு என்று நீட்டிக் கிடக்கிறது
மத்வ உத்ஸ -என்கிறபடியே மதுஸ்யந்தி யாகையாலே
நிரதிசய போக்யமான திருமேனி என்னுதல் என்று
ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்தார் இறே

தேன் நுகரும்
நுகருகையாவது புஜிக்கையாய்-
தேன் நுகரும் என்று
அந்த போக்யதையை அனுபவிக்கையைச் சொல்லுகிறது –

ஆசை மிகு சிந்தையராய்
என்றது அந்த போக்யதையை அனுபவிக்க வேணும் என்று
ஆசை மிக்கு இருந்துள்ள மனசை யுடையவர் என்கை –

இத்தால்
ப்ராப்ய ருசியினுடைய பிராசர்யம் சொல்லுகிறது –
இந்த ருசி இறே ப்ராப்ய லாப நிபந்தமான ஆர்த்திக்குக் காரணம் –

தானே பழுத்தால் விழும் கனி போல்
பக்வமானால் தானே விழுந்து நிற்கும் பலம் போலே –
இது ஆர்த்த ப்ரபத்திக்கு த்ருஷ்டாந்தம் –

ஆர்த்த பிரபத்திக்கு வேஷம் இருக்கும் படி என் என்று ஸ்ரீ ஆழ்வானைக் கேட்க
கனிப் பழம் காம்பற்றால் போலே இருக்கும் என்று
அருளிச் செய்தார் என்று பிரசித்தம் இறே

பற்று அற்று வீழும் விழுக்காடே
கீழ்ச் சொன்ன ப்ராப்ய ருசியாலே –
ப்ராப்ய ஆபாசங்களிலும் ப்ராபக ஆபாசங்களிலும் பற்று அற்று
ஆர்த்தியால் வந்த பாரவஸ்யத்தாலே பிராபத்தான ரூபேண திருவடிகளில் விழும் விழுக்காடு என்று
ஆர்த்த ப்ரபத்தியைச் சொல்லுகிறது

யதா பரா நந்வயி பிர்த்துஸ் சக ஸ்ம்ருதி பிர்விநா -தேன தத் புரதஸ் பாதாஸ் ஸா பிரபத்திஸ் ததா பவேத் -என்று
இந்த பிரபத்தி வேஷம் தான் ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் ஸங்க்ரஹேன சொல்லப்பட்டது இறே

விழுக்காடே தான் –
விழுக்காடு தானே -என்றபடி

அருளும் வீடு-
என்றது வீட்டை அருளும் என்றபடி –
மோக்ஷத்தைத் தரும் என்றபடி –

வீடு -என்று
சம்சார நிவ்ருத்தி பூர்விகையான ஸ்ரீ பகவத் பிராப்தியைச் சொல்லுகிறது –

விழுக்காடு தானே மோக்ஷத்தைத் தருகையாவது –
ஆர்த்த பிரபத்தி ஆகையாலே அவிளம்பேந பல வியாப்தி யாகை-
ஆர்த்தா நாமா ஸூ பலதா சக்ருதேவ க்ருதாஹ்யஸவ் -என்னக் கடவது இறே

அந்த ஸ்வீ காரம் தானே பலத்தைத் தரும் என்னில்
ஸ்வீ காரத்தினுடைய நைர பேஷ்யத்துக்கும்-
ஸ்வீ காரத்தினுடைய பாரதந்தர்யத்துக்கும் விருத்தமாம் இறே

ஸ்வீ காரம் தனக்கு ஒரு காலும் அதிகாரி விசேஷணத்வம் ஒழிய
பல சாதனத்தில் அன்வயம் இல்லை என்னும் இடம் தோற்ற இறே
ந்யாஸ இதி ப்ரஹ்மா ஹி பர -என்று ஸ்ருதி சொல்லி வைத்தது

ஆகையாலே விழுக்காடு தானே
வீடு அருளும் என்றது

ஆர்த்த ப்ரபத்தியினுடைய அவிளம்ப பல வியாப்தியைச் சொல்லிற்றாம் அத்தனை –

————————————

இரண்டாம் பாட்டில் –
ஆசை மிகு சிந்தையராய் என்ற இடத்தில் சொன்ன
ப்ராப்ய ருசி தான்
பர பக்த்யாதி ரூபையாய் இறே இருப்பது –
அந்த பரபக்தி பிறந்தவர்கள் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இப் பாட்டில் –

நரகும் சுவர்க்கமும் நாண் மலராள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் -துரி சற்றுச்
சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
கோதில் அடியார் குணம் –2-

நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை)
பிரிவு – பிரிந்திருப்பது
நரகம் – துன்பமுமாய்
பிரியாமை – கூடி யிருப்பது
சுவர்க்கமுமாய் – இன்பமுமாய்
துரிசற்று – குற்றமற்று
சாதகம் போல் – சாதகப் பறவை போல (மழையையே எதிர்பார்த்திருக்கும்)
நாதன் தனது – பகவானுடைய
அருள் – கருணையையே
பார்த்திருத்தல் – எதிர்பார்த்திருத்தல்
கோதிலடியார் – குற்றமற்ற அடியார்களது
குணம் – இயல்பாகும்

நரகும் சுவர்க்கமும்
ஸ்வர்க்க நரக சப்தங்கள் தாம் –
புண்ய பாப பல அனுபவ பூமிகளுக்கு வாசகங்களுமாகப் ப்ரசித்தங்களாய் இருக்கச் செய்தே
ஸூக துக்கங்களும் வாசகங்களுமாய் இருக்கும் இறே

ஆகவே இறே –
துன்பமும் இன்பமும் -இத்யாதி திருவாய் மொழி பாட்டுக்களுக்கு வியாக்யானம் செய்கிற ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் –
இன்பமில் வெந்நரகாகி இனிய நல் வான் ஸ்வர்க்களுமாய் -என்கிற இடத்துக்கு
உலகங்களுமாய் என்கிற இடம் ஆர்ஜன பூமியைச் சொல்லிற்றாகில்
இவை போக -சோக – பூமிகள் ஆகின்றன –
அன்றிக்கே
அங்கே போக பூமியைச் சொல்லிற்றாகில்
இங்கே ஸூக துக்கங்களே ஆகிறது என்று அருளிச் செய்தது –

நாண் மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய் –
நாண் மலராள் கோனைப் பிரிவு-நரகமுமாய் –
பிரியாமை ஸ்வர்க்கமுமாய் -என்று அன்வயம் –

அதாவது
செவ்வித் தாமரைப் பூவை வாசஸ்தானமாக வுடைய ஸ்ரீ பெரிய பிராட்ட்டியாருக்கு வல்லபனானவனை
விஸ்லேஷித்து இருக்கை துக்கமாயும்
ஸம்ஸ்லேஷித்து இருக்கை ஸூகமாயும் என்கை –

பரபக்தி யாவது தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கம் இறே

ஸ்ரீ பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது ஸ்ரீ பிராட்டி நானும் கூடப் போவேன் என்ன
புரவாஸத்துக்கும் வனவாஸத்துக்கும் உண்டான விசேஷத்தைத் தர்சிப்பித்து –
ஆன பின்பு காட்டிலே போமது துக்கம்
படை வீட்டில் இருக்குமது ஸூகம் என்று ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்ய

ஸ்ரீ பிராட்டி அங்கன் அல்ல –
ஸூக துக்கங்கள் வியக்தி தொறும் வ்யவஸ்திதமாய்க் காணும் இருப்பது
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோயஸ் த்வயா விநா –என்று
யாது ஓன்று உம்மோடு பொருந்துமது ஸூகமாகிறது –
உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்பும் துக்கமாகிறது

இதி ஜானன் –
தம்தாமுக்கு இல்லாதவை -பிறர் பக்கலிலே கற்று அறிய வேணும் காண் –

பராம் ப்ரீதிம்-
உம்மைப் போலே நிறுத்து அல்ல காணும் என்னுடைய ப்ரீதி இருப்பது என்ன

நம்மிலும் உனக்கு ப்ரீதி வரையாகச் சொன்னாய் –
இதுக்கு நம்மைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன

கச்ச ராம மயா ஸஹ -அக்ரதஸ் தேகமிஷ்யாமி –
என்று நாம் புறப்பட்ட படியே –
என்னை முன்னே போக விட்டு பின்னே வரப் பாரும் என்றாள் இறே -ஏகாநையாகையாலே –

த்வயா ஸஹ என்றும்
த்வயா வி நா -என்றாள் இறே

அல்லாதார் எல்லாரும் மிதுநாயனார் ஆகையாலே –
நாண் மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்-என்று அருளிச் செய்கிறார் இவர் –

நச சீதா த்வயா ஹீநா நச அஹம் அபி ராகவ என்று
ஸ்ரீ பிராட்டியோடு சம பிரக்ருதியாக ஸ்ரீ இளைய பெருமாள் தம்மை அருளிச் செய்தது
விஸ்லேஷ அசஹதை இரண்டு தலைக்கும் என்று தோற்றுகைக்காக-
அல்லது அவளை போலே ஏகாயனராய்ச் சொன்னவர் அன்றே

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிசானுஷூரம்ஸ்யதே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ் சதே–என்று இருக்குமவர் இறே –

துரிசற்று–
அந்ய பரதை யாகிற தோஷம் அற்று –
அதாவது
இப்படி இருந்துள்ள ப்ரேமம் உண்டானால் அத்தை
பிராப்தி சாதனமாகக் கொள்ளும் உபாசகரைப் போல் அன்றிக்கே
போஜனத்துக்கு ஷுத்துப் போலே –
அத்தை பிராப்தி ருசியாக்கி
இதன் பக்கல் உபாயத்வ புத்தி பண்ணுகிற தோஷம் அற்று இருக்கை

சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
அதாவது
வர்ஷ தாரை அல்லது தரியாத சாதகம் –
த்ருஷார்த்தமாய் –
த்ருஷாணார்த்தமாய்-நாக்கொட்டும் அளவிலும் –
பூகதமான ஜலத்தைப் புரிந்து பாராதே வர்ஷத்தையே பார்த்து இருக்குமா போலே –

ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனேயாம்படி
இவ்வாத்மாவுக்கு வகுத்த ஸ்வாமியாய் இருக்குமவனுடைய பரம கிருபையே
பிராப்தி சாதனம் என்று நிஷ்கர்ஷித்து

துணியேன் இனி நின் அருள் அல்லது -என்றும்
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அவனுடைய அருளே பார்த்து இருக்கை -என்றபடி –
ப்ரபன்னஸ் சாதகோ யதவத் பிரபத்தவ்ய கபோதவத் -ரஷ்ய ரக்ஷகயோரே தல் லஷ்யம் லக்ஷண மேதயோ-என்னக் கடவது இறே –

கோதில் அடியார் குணம் —
அதாவது –
அடியார் என்று பேரிட்டு-
ப்ராப்யாந்தரங்களிலே யாதல் –
பிராபகாந்தரங்களிலே யாதல் –
சங்கம் பண்ணி இருக்கும் குற்றம் இன்றிக்கே
ஸ்வ சேஷத்வ அனுரூபமாக ஸாத்ய சாதனங்கள் இரண்டுமே அவனே என்று
இருக்குமவர்களுடைய ஸ்வ பாவம் -என்றபடி

ஆகையால் இப் பாட்டில்
பூர்வார்த்தத்தாலே சாத்யம் அவனே என்னும் இடமும் –
உத்தரார்த்தாலே சாதனமும் அவனே என்னும் இடமும் தோற்றச் சொல்லி –
இப்படி இருக்கை
கோதில் அடியார் குணம் என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————–

இதில் கீழ்ச் சொன்ன பர பக்தியினுடைய முற்றுதலான
பரம பக்தி பிறந்தவர்களுடைய
நிலையை அருளிச் செய்கிறார்

ஆனை இடர் கடிந்த ஆழி யங்கை யம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்து எழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும் படி பிறத்தல் அன்னவன் தாள்
நீக்கமிலா வன்பர் நிலை –3-

பதவுரை:

ஆனை கஜேந்திராழ்வானுடைய
இடர் முதலையினால் உண்டான துன்பத்தை
கடிந்த போக்கின
ஆழி அங்கை சுதர்சனம் என்னும் சக்கரத்தை அழகிய கையிலேந்திய
அம்புயத்தாள் கோனை லக்ஷ்மீ நாயகனை
விடில் பிரியில்
நீரில் தண்ணீரிலிருந்து
குதித்தெழுந்த துள்ளிக் குதித்துப் பிரிந்த
மீனெனவே மீன் போல
ஆக்கை முடியும்படி பிறத்தல் உடல் அழியும்படி நிலை உண்டாதல்
அன்னவன்தாள் அத் திருவின் மணாளனது திருவடிகளை
நீக்கமில்லா பிரிய மாட்டாதது
அன்பர் நிலை அன்புடையார் நிலையாகும்.
கீழ்ச்சொன்னதில் “பிரிவில் ஆற்றாமை, கூடில் ஆற்றுதல்” என்ற பர பக்தியின் நிலை பேசப்பட்டது.

ஆனை இடர் கடிந்த –
பரமா பதமா பன்னோ மனசா சிந்த யத்தரிம்–சது நாக வரஸ் ஸ்ரீ மான் நாராயண பாராயண –என்கிறபடியே
தேவ சம்வத்சரத்திலே ஆயிரம் சம்வத்சரம் முதலை நீருக்கு இழுக்க -தான் கரைக்கு இழுக்க அலைச்சல் பட்டு –
அதுக்கு தன்னிலம் ஆகையாலும்-அபிமத சித்தியாலும் -பலம் வர்த்திக்கையாலும் –
தனக்கு தன்னிலம் இல்லாமையாலும் – அபிமத அலாபத்தாலும் – பலம் க்ஷயிக்கையாலும்-
துதிக்கை முழுத்தும் படியான தசை விளைகையாலே-

இனி இதுக்கு மேல் எல்லை இல்லை என்னும்படியான
ஆபத்தை அடைந்து இத்தசையில் விரோதி நிரசன சீலனான ஸ்ரீ சர்வேஸ்வரனே நமக்கு ரக்ஷகன் என்று அனுசந்தித்து –
நாராயணாவோ -என்கிறபடி கூப்பிட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய துக்கத்தைப் போக்கின

இவனுக்குத் துக்க மாகிறது –
முதலையின் வாயிலே அகப்படுகையாலே சரீரம் அழிகிறது என்றது அல்ல
கையிலே பூ செவ்வி அழியாமே திருவடிகளிலே சாத்தப் பெறுகிறிலோம் என்னுமது

நாஹம் களேபரஸ் யாஸ்ய த்ராணார்த்தம் மது ஸூதந கரஸ்த கமல அன்யேவ பாதயோர் அர்ப்பிதும் ஹரே -என்றார் இறே
அப்படி இருந்துள்ள துக்கத்தை அவன் நோவு படுகிற தசையில் சென்று முகம் காட்டி நோக்கின படியைச் சொல்லுகிறது

ஆழி யங்கை
திருவாழியை-அழகிய திருக் கையிலேயுடைய –
கையும் திரு வாழியுமாய்க் கொண்டு ஆயிற்று அப்போது சென்றது –
மழுங்காத வைநுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே-என்றார் இறே ஸ்ரீ ஆழ்வார்

கையில் திருவாழியை இருந்தது அறிந்திலன்-
அறிந்தானாகில் இருந்த இடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யம் கொள்ளலாம் இறே
அறிந்தாலும் அப்படிச் செய்யப் போகாதாயிற்று –

தொழும் காதல் களிறு -என்கிறபடியே
கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டவன் ஆகையாலும்-
கையில் பூ திருவடிகளிலே சாத்த ஆசைப்பட்டு இருக்கிறவன் ஆகையாலும்
சென்று அவன் துக்கத்தை தீர்க்க வேண்டுகையாலே –

அவ்வளவும் அன்றிக்கே
சென்ற இடம் தன்னில் இவனுக்கு கால் கட்டான முதலையை நிரசித்ததும் திருவாழியைக் கொண்டு இறே
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறித்த சக்கரத்தான்-என்கிறபடியே –

அம்புயத்தாள் கோனை –
நளின வாசினியான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகனானவனை -இதுவும் சாபிப்ராயம்
தேவி ஹஸ்தாம் புஜேப்ய-இத்யாதிப்படியே
பாதாப்ஜ சம்வாஹினிகள் திருவடிகள் பிடிக்க –
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் திரு மார்பிலே அணைத்துக் கொண்டு
பள்ளி கொண்டு அருளா நிற்கச் செய்தே இறே-
இவனுடைய ஆர்த்த நாதம் திருச் செவிப் பட்டது-

அப்போது
அவர்கள் கையில் நின்றும் திருவடிகளை வாங்கி –
திருப் படுக்கையினின்றும் சடக்கென எழுந்து இருந்து
திருக் கண்களை மலர விழித்து -சுற்றும் பார்த்து –
பிராட்டியுடைய திரு முலைத் தடத்தில் குங்குமக் குழம்பில் பற்றிக் கிடக்கிற
திரு மார்பையும் அதில் நின்று வாங்கி பின்னை இறே –

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -இத்யாதிப்படியே
பெரிய த்வரையோடு எழுந்து அருளி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய துக்கத்தைப் போக்கிற்று

அத்தைப் பற்றவும்
பிரஜா ரக்ஷணம் பண்ணினால் அது கண்டு உகக்கும் மாதாவைப் போலே
இது கண்டு களிப்பள் என்று செய்து அருளுகையாலும்
அம்புயத்தாள் கோன் என்கிறது

இத்தால்
ஆஸ்ரிதருடைய ஆபத் தசைகளில் சென்று உதவி ரக்ஷிக்குமவனாய்
அவர்களை ரக்ஷித்தால் அல்லது தன் பேறாகக் கொண்டு உகக்கும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான் என்கை

விடில் –
இப்படி இருக்கிறவனை விஸ்லேஷித்தால்

நீரில் குதித்து எழுந்த மீன் எனவே
நீரிலே நின்றும் குதித்துக் கிளர்ந்து அத்தைப் பிரிந்த மத்ஸ்யம் போலே

ஆக்கை முடியும் படி பிறத்தல்
சரீரம் நசிக்கும்படியான அவஸ்தை பிறக்கை
சம்ஸ்லேஷத்தில் ஸூகமும் விஸ்லேஷத்தில் சத்தா ஹாநியும் பிறக்கை இறே –
அத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்தார் ஆயிற்று

அன்னவன் தாள் நீக்கமிலா வன்பர் நிலை –
கீழ் அம்புயத்தாள் கோன் என்றவனை அன்னவனை என்று பராமர்சிக்கிறார்
அன்னவன் -என்றது அப்படிப்பட்டவன் -என்றபடி

அதவா
மத்யஸ்த்துக்கு ஜலம் போலே
இவ்வாத்மாவுக்கு தாரகனாய் இருக்குமவன் என்னவுமாம்

தாள் நீக்கமிலா வன்பாவது –
அவன் திருவடிகளைப் பிரிய சஹியாதபடியான ப்ரேமம்

இப்படி இருந்துள்ள பிரமத்தை யுடையவர்களுடைய ஸ்வ பாவம் அவனை விஸ்லேஷிக்கில்
ஜலாத் துத்ருதமான மத்ஸ்யம் போலே சத்தா ஹானி பிறக்கும்படி என்று கீழோடே சம்பந்தம் –

நச சீதா த்வயா ஹீநா நச அஹம் அபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ் -என்றார்
இறே ஸ்ரீ இளைய பெருமாள்

———————————————

நாலாம்பாட்டு –
கீழில் மூன்று பாட்டாலே –
த்வயத்தில் பூர்வ வாக்யத்தால் பிரதிபாதிக்கப்படுகிற ப்ரபத்தியினுடைய முக்கிய விஷயத்தையும்
அதுக்கு ஹேது
ஆர்த்த அதிகாரியாலே பண்ணப் படுகையாலே –
அதிகாரியுடைய ஆர்த்திக்கு ஹேதுவான
பர பக்தி தசையின் நிலை இருக்கும்படியையும்
பரம பக்தியின் தசையில் நிலை நிற்கும் படியையும் அருளிச் செய்தார்

இனி
உத்தர வாக்யத்தால் பிரதிபாதிக்கப்படுகிற பரம புருஷார்த்தமான கைங்கர்யத்தின் சீர்மையை அறிந்து –
ப்ரயோஜனாந்தர சங்க நிவ்ருத்தி பூர்வகமாக
ஸ்வரூப அனுரூபமானவதிலே
நிஷ்டரானவர்களுடைய வைபவத்தை அருளிச் செய்கிறார் –

மற்று ஒன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட் செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து பெற்ற
பெறும் பேற்றின் மேல் உளவோ பேறு என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு –4-

பதவுரை:

மற்றொன்றை -செல்வம் முதலிய வேறு வேறு பயன்களை
எண்ணாதே -லட்சியமாகக் கருதாமல்
மாதவனுக்கு -திருமாலுக்கு
ஆட்செயலே -அடிமை செய்வதில்
இது உற்றது -இதுவே அடிமைக்கு ஏற்றது
என்று -என்று முடிவு செய்து
உளம் தெளிந்து -இதயம் தெளிவுற்று
பெற்ற பெரும் பேற்றின் மேல் -அடையப் பெற்ற இப் பெரும் பயனுக்கு மேல்
பேர் உளதோ -வேறு ஒரு பயன் உண்டோ
என்றிருப்பார் -என்று உறுதி கொண்டிருப்பார்
வானத்தவர்க்கு -வைகுந்தத்தில் இருக்கும் நித்ய முக்தர்களுக்கு
அரும் பேறு -பெறுதர்கரிய பயனாவார்

மற்று ஒன்றை எண்ணாதே –
அதாவது
கைங்கர்ய ரூப புருஷார்த்தத்துக்கு அந்யமானது ஒன்றைப் புருஷார்த்தமாக கணிசியாதே-என்கை –

அந்நிய புருஷார்த்தமாவது-
இஹலோக போகமும்
பரலோக போகமும் –
ஆத்ம அனுபவமும் இறே
அவற்றின் பேர் சொல்லுகையும் அஸஹ்யமாகையாலே –
மற்று ஒன்றை-என்கிறது –

விரும்பாதே -என்னாமல் –
எண்ணாதே -என்றது –
அவை தன்னை ஒரு புருஷார்த்தமாக நினைத்தால் இறே விரும்புவது -என்றது –
அவற்றை விரும்புவார் தாஸ்ய ரசம் அறியாதவர்கள் இறே –
தாஸ்ய ரசஞ்ஞரானவர்களுக்கு அவை ஊஷர ஜல சேவை போலே விரசமாய் ஹேயமாய் இறே இருப்பது –

போகா இமே விதி சிவாதி பதஞ்ச மிஞ்ச ஸ்வாத்ம அனுபூதி ரிதியாகில முக்தி ருக்தா -சர்வம் ததூஷா ஜல ஜோஷமஹம்
ஜூஷேய ஹஸ்த் யத்ரி நாத தவ தாஸ்ய மஹா ரசஞ்ஞ–என்றார் இறே ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் –

மாதவனுக்கு ஆட் செயலே
ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்கையே-

இத்தால்
கைங்கர்ய பிரதிசம்பந்தி ஒரு மிதுனம் என்னுமதுவும் –
கைங்கர்யமே புருஷார்த்தம் என்னுமதுவும் சொல்லுகிறது –

கைங்கர்ய பிரதிசம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடம்
உத்தர வாக்யத்திலே பிரதம பதத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லா நின்றது இறே

திரு மந்திரத்தில்
திருதீய பதத்திலும் கைங்கர்ய பிரதிசம்பந்தி ஒரு மிதுனமாய் இருக்கச் செய்தே –
ஆர்த்தமாகையாலே அவிசதமாய் இருக்கும் –

அத்தைப் பற்ற விறே இதிலே திருமந்திரத்தில் சொன்ன ப்ராப்யத்தை
விசதமாக அனுசந்திக்கிறது என்று ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்தது –

கைங்கர்யமே புருஷார்த்தம் என்னுமது திருமந்த்ரத்திலும்
இங்கும் ஓக்கச் சொல்லுகையாலே ஸூஸ்பஷ்டம் –
சர்வேஷு தேசகாலேஷு சர்வ அவஸ்தாஸூ சாச்யுத-கிங்கரோஸ்மி க்ருஷீகேச பூயோபூயோஸ்மி கிங்கர -என்னக் கடவது இறே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேணும் -என்றார் இறே ஸ்ரீ ஆழ்வார் –

உற்றது இது என்று
சீரியது இது வென்று
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு -என்றும்
நீள் குடக்கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது ஆவது என்றும்
இதுவும் அவர் தாமே அருளிச் செய்தார் இறே

இது உற்றது என்கையாலே
அல்லாத புருஷார்த்தங்கள் ஸ்வரூப விருத்தங்கள் ஆகையாலே
உறாதது என்னும் இடமும் சித்தம் இறே

ஆக இரண்டு பதத்தாலும்
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன்-என்கிறபடியே
மிதுன சேஷ பூதனானவனுக்கு அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்றும்
திருமாற்கு அரவு சென்றால் குடையாம் -என்றும் சொல்லுகிறபடியே
மிதுன கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் இடமும்
இவனுடைய ஸ்வரூப அனுரூபவத்வ நிபந்தமான கௌரவமும் சொல்லிற்று ஆயிற்று –

உளம் தெளிந்து –
இக் கைங்கர்யம் தன்னில் ஸ்வ பிரயோஜன புத்திக்கு அடியான அஹங்கார மமகாரங்கள் போகையாலே
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே-என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றும்
பரம பிரயோஜனம் என்று செய்யும்படி ஹிருதயம் தெளிந்து

இத்தால்
உத்தர வாக்கியத்தில் நமஸ் சப்தார்த்தம் சொல்லப்பட்டது –

பெற்ற பெறும் பேற்றின் மேல் உளவோ பேறு என்று இருப்பார்
அதாவது –
இக் கைங்கர்யம் ஆகிற புருஷார்த்தம் லப்தமானால் –
இப்படி லப்தமான இப் புருஷார்த்தத்துக்கு மேலும்
ஒரு புருஷார்த்தம் உண்டோ என்று இருக்கும் அவர்கள் என்கை –

பரமபதத்தை விரும்புகிறது –
நித்ய விபூதி ஆகையாலும்
சுத்த ஸத்வம் ஆகையாலே ஞானானந்த ஜனகம் ஆகையாலும்
இக் கைங்கர்யம் ஆகிற புருஷார்த்தத்துக்கு விச்சேதம் அற்ற தேசம் என்னுமத்தைப் பற்ற இறே
ஆகையாலே மேல் உளதோ பேறு என்னத் தட்டில்லை-
ஆக இப்படி இருக்குமவர்கள் –

அரும் பேறு வானத்தவர்க்கு –
அதாவது
அஹ்ருத சஹஜ தாஸ்யராய் –
கைங்கர்ய நிரதராய்-
பகவத் ஏக போகராய் இருக்கும் -பரமபத வாசிகளுக்கு
பெறுதற்கு அரிய புருஷார்த்த பூதராவார் என்கை

இத்தால்
சதா பஸ்யந்திப்படியே
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமாக அனுபவிக்கிற விஷயத்தில் காட்டிலும்
தங்களை துர்லப புருஷார்த்தமாக நினைத்து அனுபவிக்க ஆசைப்படும்படி யாவர்கள் என்றதாயிற்று –

யே ப்ரஹ்மன் பகவத் தாஸ்ய போக ஏக நிரதாஸ் சதர-தே பிரியாதிதய ப்ரோக்தாஸ் ஸ்ரீ வைகுண்ட நிவாஸினாம் என்று
இவ்வர்த்தம் ஸ்ரீ சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது இறே –

—————————————————

பூர்வ வாக்யத்தால் ப்ரதிபாதிக்கப்படுகிற சித்த உபாய வரணம் -இதர உபாய பரித்யாகத்தை
அங்கமாக உடைத்தாய் இருக்கும் என்னும் அத்தை சரம ஸ்லோக முகத்தாலே அறிந்து –
உபாய ரூப ப்ரவ்ருத்திகளில் அந்வயம் அற்று –
ஸ்வரூப அனுரூபமாக அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய்
ஸ்வீகார கார்த்யார்த்தை அநுஸந்திக்குமவர்கள் படியை
ஸ்வ அனுஷ்டான ரூபேண அருளிச் செய்கிறார் –

தீர்த்தம் முயன்று ஆடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் -சீர்த்துவரை
மன்னடியோம் என்னும் வாழ்வு நமக்கு ஈந்ததற்பின்
என்ன குறை வேண்டும் இனி –5-

பதவுரை:

முன் – மாபாரதப் போரில் (பார்த்தனை) மனம் கலங்கின அர்ஜுனனை
காத்தபிரான் – கீதோபதேசத்தால் மனம் தெளிவித்து காத்தருளி உதவி செய்த கண்ணபிரான்
பார்ப்பதன் முன் – திருக் கண்களால் நோக்குவதற்கு முன்பு
தீர்த்தம் – புண்ணிய நதிகளான கங்கை முதலிய தீர்த்தங்களில் (பாபம் கழிவதற்காக)
முயன்று – முயற்சிகள் செய்து
ஆடுவதும் – முழுகிக் குளிப்பதுவும்
செய்தவங்கள் – உடல் வருந்தச் செய்யும் நோன்புகளும்
செய்வனவும் – மற்றும் செய்யும் புண்ணியங்களும்
சீர்த்துவரை – சீர்மை மிகுந்த துவராபதிக்கு மன்னன் இறைவனான கண்ணன்
நமக்கு – அவனுடைய அடியவர்களான நமக்கு
அடியோம் என்னும் வாழ்வு – அடிமைத் தன்மையாகிற நற்செல்வத்தை
ஈந்ததற்பின் – அருளின பின்பு
இனி – இனி வரும் காலமெல்லாம்
வேண்டும் குறை என்ன – சாதனங்கள் பற்றியும் பலன்கள் பற்றியும் குறைபட வேணுமோ?
(எதைப் பற்றியும் குறைபட வேண்டாம் என்பதாம்)

தீர்த்தம் முயன்று ஆடுவதும்
கங்கா யமுனா ஸரஸ்வதீ ப்ரப்ருதிகளான தீர்த்தங்களில் -பாப ஷய அர்த்தமாக
பெரிய உத்யோகத்தோடே அவகாஹிக்குமதுவும்

தீர்த்தங்கள் ஆனவை -பாவன ஜலங்கள் –
முயற்சி யாவது -உத்யோகம்
ஆடுகையாவது -அவற்றுக்குள்ளே மறு நனையைப் புகுந்து முழுகுகை –

செய்தவங்கள் செய்வனவும்
ஊன் வாட உண்ணாது –
பொருப்பிடையே நின்றும்
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து -இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே
காய சோஷண அர்த்தமாகச் செய்யப்படும் தபஸ்ஸூக்களைச் செய்யுமவையும்
இது தான் தான யாகாதிகளுக்கும் உப லக்ஷணம்

பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் –
அதாவது –
உபாயாந்தரங்கள் எல்லாம் உபதேசிக்கக் கேட்டு அவற்றினுடைய துஷ்கரத்வத்தையும்-
ஸ்வரூப விருத்தத்தையும் அனுசந்தித்து சோகோவிசிஷ்டனான அர்ஜுனனை –
சர்வ தர்மான்–இத்யாதிகளாலே
பூர்வோக்தங்களாய் இருந்துள்ள சங்கமான சகல தர்மங்களையும் சவாசனமாக விட்டு –
ஸுலப்யாதி குண விசிஷ்டனான என்னையே நிரபேஷ உபாயமாகப் பற்று –

ஸர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனான நான் உன்னுடைய அஞ்ஞத் வாதிகளை அனுசந்தித்து –
என் பக்கலிலே ந்யஸ்த பரனான உன்னை –
மத் பிராப்தி பிரதிபந்தக சகல பாபங்களிலும் நின்றும் விடுவிக்கக் கடவேன்

ஆன பின்பு சோகியாதே கோள் என்று உபதேசித்து
முன்பு ரஷித்து அருளின மஹா உபகாரகன்
கடாக்ஷித்து அருளுவதற்கு முன்பு என்கை –
இத்தால் சரம ஸ்லோகார்த்தம் நெஞ்சில் படுவதற்கு முன்பு -என்றபடி –

சீர்த் துவரை மன்னன்
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் -என்கிறபடி
தனக்கு அநந்யார்ஹராய் –
அநந்ய உபாய உபேயங்களிலே அந்வயம் அற்று இருந்த திவ்ய மஹிஷிகளுக்கு
நாயகனாய்க் கொண்டு ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹன் ஆனவன்

அடியோம் என்னும் வாழ்வு நமக்கு ஈந்ததற்பின்
அவனுக்கு நாம் சேஷ பூதர் என்று அறிந்து
ஸ்வ ரக்ஷண அர்த்தமாக ஸ்வ ப்ரவ்ருத்தியில் அந்வயம் அற்று
இருக்கையாகிற சம்பத்தை நமக்குத் தந்து அருளின பின்பு —

அடியோம் என்கையாலே
ஞான ஆனந்தங்களில் காட்டிலும்
ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபணம் என்னும் இடமும்

வாழ்வு -என்கையாலே –
இத்தை அறியவே ஸ்வ யத்ன நிவ்ருத்தி -ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி -சித்திக்கையாலே இதுவே
ஆத்மாவுக்கு சம்பத்து என்னும் இடமும்

நமக்கு ஈந்த பின் என்கையாலே –
அநந்த காலம் இஸ் சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே இத்தை இழந்து கிடந்த நமக்கு
இப் பிரபத்தி பிறந்ததும் அவன் அருளாலே என்னும் இடமும் சொல்லுகிறது
இப்படி அவன் நமக்கு இவ் வாழ்வைத் தந்து அருளின பின்பு

என்ன குறை வேண்டும் இனி –
அதாவது
இனி மேல் உள்ள காலம் -உபாய உபேயங்களில் ஓன்று நிமித்தமாகக் குறைபட வேணுமோ என்கை –

இத்தால் –
அவன் மாஸூச என்று அருளிச் செய்த படியே –
நம் காரியத்தியல் நாம் கரைச்சல் அற்று
நிர்பரராய் இருக்கும் அத்தனை அன்றோ -என்றதாயிற்று –

தாவத் கச்சேத்து தீர்த்தாநி சரிதஸ் ச சராம்ஸிச-யாவன் நா பூச்ச பூ பால விஷ்ணு பக்தி பரம் மன –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

கிம் தபோபி கிம் த்வரை யோ நித்யம் தயாயிதை தேவம் நாராயண மனன்யதி -இதிஹாச சமுச்சயம் –

இவை இப்பாட்டில் பூர்வ வாக்கியத்தில் சொல்லப்பட்ட அர்த்தத்துக்கு சம்வாதமாக அனுசந்தேயம்
இதற்குப் பொருள் –
நின்றவா நில்லா நெஞ்சு -என்கிறபடியே
ஒன்றிலும் நிலை நில்லாமல் ஓடித்திரியும் மனஸ்ஸானது
யாதொரு அளவும் இவ்வாத்மாவுக்கு ப்ராப்யமுமாய் ப்ராபகமுமாய் இருக்கும் அவன் பக்கல் –
பக்தியில் ஊற்றம் உடைத்தாகாத அவ்வளவும் -சரித்துக்களும் சரஸ்ஸூக்களுமாய்க் கொண்டு
பாவனமான தீர்த்தங்களைக் குறித்து போவான் என்றும்

யாவன் ஒருவன் அந்ய விஷயத்திலே மனம் அற்று –
த்யோத மாநஸானாதி குண யுக்தனாய் -நார சப்த வாஸ்யமான
சேதன சமூகத்துக்கு உபாய உபேயங்கள் இரண்டும் தானே யாகையாலே
ஸ்ரீ நாராயண சப்த வாச்யனானவனை
சர்வ காலமும் அப்படியே அநுஸந்தியா நிற்கும் அவனுக்கு
தான தீர்த்த தபோ த்வாரங்களால்
என்னப் பிரயோஜனம் உண்டு என்றும் சொல்லிற்று இறே
ஆகையால் இவை சம்வாதமாகக் குறையில்லை –

———————————————-

இப்படி துஷ்கரத்வாதி தோஷ தர்சனத்தாலே உபாயாந்தர சங்கம் அறக் கூடிற்று ஆகிலும்
அநாதி காலம் சப்தாதிகளிலே வாசனை பண்ணிப் போந்த ஆத்மாவுக்கு
உபேயாந்தரமான ஐஸ்வர்யத்தைக் கண்டால் ஆசை செல்லாது ஒழியுமோ
அந்த ஐஸ்வர்ய தியாகம் தான் இவன் நெஞ்சைக் கலங்கப் பண்ணாதோ என்ன
பகவத் தாஸ்ய ரசஞ்ஞரானவர்கள் ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லையான
பரம பதத்தையும் ஒரு புருஷார்த்தமாக விரும்பார்கள்-
நெஞ்சைக் கலக்கவும் மாட்டாது -என்கிறார் –

புண்டரீகை கேள்வன் அடியார் அப் பூ மிசையோன்
அண்டம் ஒரு பொருளா ஆதரியார் -மண்டி
மலங்க வொரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல் –6-

பதவுரை:-

புண்டரிகை -தாமரையில் பிறந்த லக்ஷ்மீ தேவிக்கு
கேள்வன் -மணவாளனான ஸ்ரீ ய::பதியின்
அடியார்-தொண்டராயிருப்பவர்கள்
அப் பூமிசையோன் -தாமரை மலரில் பகவானுடைய அழகிய கொப்பூழ் பிறந்த பிரமனின்
அண்டம் பதினான்கு -உலகங்கள் கூடின அண்டத்தை
ஒரு பொருளா -ஒரு சரக்காக
ஆதரியார் -மதிக்க மாட்டார்கள்
ஒரு மீன் -ஒரு மீனானது
மண்டி -தன் ஆற்றல் எல்லாவற்றோடும் நெருங்கி
மலங்க –நிலை குலைந்து கலங்கும்படி
புரண்ட மாத்திரத்தால் -இடப்புறமாக வலப்புறமாக புரளுவதால்
முந்நீர்க்கடல் -மூன்று வகையான நீர் சேர்ந்த கடலானது
ஆர்த்து -நிலை குலைந்து பேர் ஒலி செய்து
கலங்கிடுமோ -கலக்கத்தை அடையுமோ? அடையாது

புண்டரீகை கேள்வன் அடியார் –
பத்மோத் பவையாய்-பத்ம வாசினியாய் இருக்கையாலே
பத்மினீ என்ற திருநாமத்தை யுடையவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவனுடைய
திருவடிகளிலே சேஷத்வமே நிரூபகமாய் யுடையவர்கள்

இத்தால் –
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு -என்கிறபடியே –
அவர்கள் இருவருடையவும் விசேஷ கடாக்ஷத்தாலே திருந்தி –
தத் சேஷத்வ ஏக நிரூபகராய் தத் தாஸ்ய ஏக ரசராய் இருக்குமவர்கள் என்கை –

அப்பூ மிசையோன் அண்டம் ஒரு பொருளா ஆதரியார் –
ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லையாய்
ப்ரஸித்தமாய்
திரு நாபீ கமல உத்பவனான ப்ரஹ்மாவினுடைய ஆனந்தத்துக்கு ஹேதுவாய் –
சதுர்தச புவனாத்மகமான அண்டத்தை ஒரு சரக்காக ஆதரியாதார்கள்-

தேஹாத்ம அபிமானிகளுக்கும் –
ஸ்வ தந்த்ரருக்கும் இறே
ஐஸ்வர்ய ரசாவஹமாய்க் கொண்டு புருஷார்த்தமாய் இறே இருப்பது –

பகவத் தாஸ்யம் அறிந்தவர்களுக்கு விரசமாய்
ஜூகுப்ஸா விஷயமாய் இருக்கும் இறே –
ஆகையால் அத்தை ஆதரிப்பார்களோ –

அப்படிச் சொல்லலாமோ –
அந்த ஐஸ்வர்யத்தினுடைய கிளப்பம் தன்னை ஆசைப் பண்ணும் படி
இவர்கள் நெஞ்சைக் கலங்கப் பண்ணாதோ
என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் –

மண்டி மலங்க வொரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக் கலங்கிடுமோ முந்நீர்க் கடல் —
ஒரு மத்ஸ்யமானது தன் சக்தி எல்லாவற்றும் கூடித் தள்ளிக் கொண்டு நிலை குலைந்து கலங்கும் படி
இடம் வலம் கொண்ட புரண்ட மாத்ரத்தால் –
ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர் என்கிற நீர் த்ரய யுக்தமான சமுத்ரமானது
நிலை குலைந்து உகளித்து ஷுபிதமாமோ அந்த மத்ஸயத்தினுடைய ஸ்புரணத்தால் –

அப்ரமேயோ மஹோ ததி என்கிற சமுத்திரம் கலங்கில் அன்றோ –
ஐஸ்வர்யத்தினுடைய கிளர்த்தி கண்டால் கம்பீரமான இவர்களுடைய ஹிருதயம் கலங்குவது என்று கருத்து –

ப்ரஹ்மாண்ட மண்டலீ மாத்ரம் கிமலோபாய மனஸ்வின -சபரீஸ் பூரிதே நாப்தே
ஷுப்ததா நைவ ஜாயதே-பாகவத -10-20-15 -என்னக் கடவது இறே-

————————————————–

தாஸ்யச் சுவடு அறிந்தவர்கள்
ஐஸ்வர்யத்துக்கு எல்லையான ப்ரஹ்ம பதத்தை விரும்பார்கள் என்றார் கீழ் –
அவன் அழகிலே தோற்று அடிமை புக்கவர்கள்
அந்ய விஷயங்களை ஆதரியார்கள் என்கிறார் இதில் –

தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரனுக்கு
ஆளானார் மற்று ஒன்றில் அன்பு செயார் மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு –7-

பதவுரை:

தோளார் -திருத்தோள்களோடே சேர்ந்துள்ள
சுடர்த்திகிரி-ஒளியுடைய சக்கரத்தையும்
சங்குடைய சுந்தரனுக்கு-சங்கையும் அழகையும் உடையவனுக்கு
ஆளானார்-அடிமையானவர்கள்
மற்றொன்றில் -அவனைத் தவிர வேறு ஒரு பொருளில்
அன்பு செய்யார் -பற்றுச் செய்ய மாட்டார்கள்
மீளா -திரும்பவும் வராததும்
பொருவரிய -உவமை இல்லாததுமான
விண்ணாட்டில் -மாக வைகுந்தம் என்று சொல்லப்படும் வைகுந்தத்தில்
போகம் –பேரின்பத்தை
நுகர்வார்க்கு –துய்ப்பவர்க்கு
இந்திரன் தன் நாடு -இந்திரனுக்குரிய சுவர்க்கமும்
நரகன்றோ =துன்பமயமாகும் அன்றோ

தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரனுக்கு
திருத்தோளோடே சேர்ந்து இருந்துள்ள தேஜோ ரூபமான திரு வாழியையும்-
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தையும்
யுடையவன் ஆகையாலே வந்த அழகை யுடையவனுக்கு
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் யெல்லாம் துறந்தார் தொழுது ஆரத் தோள் -என்கிறபடி
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி இருக்கிற தன் அழகாலே-
பிராகிருத சகல விஷய சங்கத்தையும்
அறுக்க வற்றான திருத் தோள்களோடே
அணியார் ஆழியும் சங்கமும் – என்கிறபடியே
சர்வ ஆபரணங்களும் தாமேயாய்ப் போரும்படியாய் இருக்கிற
திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்சஜன்யத்தையும் ஏந்தும் கையால் வந்த அழகும் கூடினால்
அழகு இரட்டித்து இருக்கும் இறே

சுந்தரனுக்கு ஆளானார்
இப்படி இருந்துள்ள அழகை யுடையவனுக்கு அவ் வழகுக்குத் தோற்று அடிமை யானவர்கள் –
புண்டரீகக் கேள்வன் அடியார் -என்கிற இடத்தில் சொன்ன தாஸ்யம் ஸ்வரூப ப்ரயுக்தம்
இது குண க்ருதம்
சுந்தரனுக்கு-என்று -ஆளானார்-என்றும் சொல்லுகையாலே
ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யத்திலே நிற்குமவர்களையும் –
அப்போதைக்கு அப்போது அழகுக்குத் தோற்று எழுதிக் கொடுக்கும்படி பண்ணும் இறே
விஷய வைலக்ஷண்யம் –
ஆகையால் இப்போது அழகுக்குத் தோற்று அடிமை புக்கவர்களை சொல்லுகிறது –

மற்று ஒன்றில் அன்பு செயார்
அதாவது அப்படி அடிமையானவர்கள் அவ் விஷயத்துக்கு அந்யமாய் இருக்கும் பிராகிருத விஷயங்கள்
ஒன்றிலும் ஸ்நேஹம் பண்ணார்கள் என்கை –
அப்ராக்ருதமாய் அதி மநோஹரமாய் இருக்கும் விஷயத்தில் வாசி அறிந்து அதிலே தோற்று இருக்குமவர்கள் –
அத்யாபாசமாய் அவிலக்ஷணமான பிராகிருத விஷயங்களை விரும்புவார்களோ–
ஐஹிக விஷயங்களில் இப்படி இருந்தாலும் இத்தைப் பற்ற அதி விலக்ஷணமான ஸ்வர்க்காதி ஆமுஷ்மிக
விஷயங்களைக் கண்டால் அதில் அன்பு செல்லாது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல்

மீளாப் பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
அதாவது -நச புனர் ஆவர்த்ததே நச புனர் ஆவர்த்ததே -என்கிறபடி
புனராவ்ருத்தி ரஹிதமாய் -அப்ராக்ருதமாய் —
ஸூத்த சத்வ மயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கையாலே உபமான ரஹிதமாய் –
தத் அக்ஷரே பரமே வ்யோமன் -என்கிறபடியே
பரம ஆகாச சப்த வாஸ்யமான திரு நாட்டுக்குள்ளே
போகத்தை புஜிக்க வேணும் என்னும் ஆசை யுடையவர்களுக்கு –

நரகன்றோ இந்திரன் தன் நாடு —
அதாவது -ஷீணே புண்யே மர்த்த்ய லோகம் விசந்தி -என்கிறபடியே
புண்ய ஷயம் பிறந்தவாறே முகம் கீழ்ப்பட தள்ளி விடும்படி இருப்பதாய்
ப்ராக்ருதமான ஸ்வ சத்ருச லோகங்கள் பலவற்றையும் யுடைத்தாய்
கர்ம வஸ்ய சேதனான இந்திரனுக்கு போக ஸ்தானமான நாடாய் இருந்துள்ள
ஸ்வர்க்க லோகம் நரகப் பிராயம் அன்றோ என்கை
இத்தால் இந்த விபூதியில் போகம் துக்காவஹமாய் இருக்கும் என்றதாயிற்று –
தத் பதம் ப்ராப்து காமா யே விஷ்ணோஸ் தேஷாம் மஹாத்மநாம் போகா புரந்தரா தீநாம் தே சர்வே நிரயோபமா-என்று
இவ் வர்த்தம் ப்ரஹ்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டது இறே-

———————————————-

அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு தன் பக்கல் ப்ரேம யுக்தரானவர்கள் அடிமை செய்யும் இடத்தில்
ஏதேனும் ஒரு படி செய்தாலும் அவன் அத்தை யுகந்து சிரஸா வஹிக்கும் என்கிறார் –

முற்றப் புவனம் எலாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா வன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து –8-

பதவுரை:

புவனமெல்லாம் -எல்லா உலகங்களையும்
முற்ற உண்ட -ஒன்று விடாமல் அனைத்தையும் விழுங்கித் தன் வயிற்றில் வைத்துக் கொண்ட
முகில் வண்ணன் -மேகம் போன்ற திருமேனியை உடைய இறைவனின்
கற்றைத் துழாய் சேர் -தழைக்கின்ற திருத்துழாய் சேர்ந்துள்ள
கழலன்றி -திருவடிகளைத் தவிர
மற்றொன்றை -வேறு ஒரு பயனையும்
இச்சியா அன்பர் -விரும்பாத பக்தர்கள்
தனக்கு –இறைவனான தனக்கு
எங்ஙனே செய்திடினும் -அடிமைகளை எப்படிச் செய்தாலும்
உகந்து -மிகவும் மகிழ்ந்து
உச்சியால் ஏற்கும் -தலையால் ஏற்றுக் கொள்வான்

முற்றப் புவனம் எலாம் உண்ட முகில் வண்ணன்
பிரளயத்தில் அழியாமல் சர்வ லோகங்களையும் ஒன்றும் ஒழியாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்குகிறது
தன் பேறு என்னும் இடம் வடிவிலே புகரிலே தோற்றும்படி இருந்த காளமேக நிபமான வடிவை யுடையவன் –

இப்போது இதைச் சொல்லுகிறது –
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -என்கிறபடியே
ஆபத் தசையில் அகில லோகங்களையும் அவை அறியாது இருக்காது தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
திரு வயிற்றிலே வைத்து ரஷித்தது தன் பேறு என்னும் இடம் தன் வடிவிலே தோற்றும்படி இருந்தவன்

இத்தால்
அநந்ய ப்ரயோஜனராய்த் தன் பக்கல் பிரேம யுக்தரானவர்கள் ஸ்வ விஷயத்தில் பண்ணும்
சேஷ விருத்திகளை ஆதரித்துக் கொள்ளும் என்னும் இடம் தோற்றுகைக்காக

கற்றைத் துழாய் சேர் கழல் அன்றி –
தன்னிலத்திலும் காட்டில் திருமேனியோட்டை ஸ்பர்சத்தாலே –
தழைக்கும் துழாய் -என்கிறபடியே
தழைத்து இருந்துள்ள திருத் துழாயோடே சேர்ந்து இருந்துள்ள திருவடிகளை ஒழிய -என்றபடி –

இது தான்
திருவடிகளில் ஒப்பனைக்கு எல்லாம் உப லக்ஷணம்-

மற்று ஒன்றை இச்சியா வன்பர்
இப்படி பரம போக்யமான இத் திருவடிகளை ஒழிய
வேறொரு ப்ரயோஜனத்தை இச்சியாத படியான ப்ரேமம் யுண்டானவர்கள் –

ப்ரயோஜனாந்தர பரராய் கிஞ்சித்கரிப்பார் –
தேஹிமே தாதாமி தே -என்கிறபடியே
கொடுத்துக் கொள்ளுகைக்கு இறே

கிஞ்சித்கரிப்பது அங்கன் இன்றிக்கே –
இன்று வந்து இத்தனையும் -இத்யாதிப்படியே
கொண்டத்துக்குக் கைக் கூலிக் கொடுக்கும் படியான அநந்ய ப்ரயோஜன பக்திகரானவர்கள்-

தனக்கு எங்கனே செய்திடினும் –
வகுத்த சேஷியான தனக்கு அடிமை செய்யும் இடத்தில்
பிரேம பரவசராய்க் கொண்டு
அக்ரமமாகவாதல் சக்ரமமாகவாதல் -எப்படிச் செய்யிலும்

உச்சியால் ஏற்கும் உகந்து —
ப்ரீதனாயக் கொண்டு சிரஸா வஹிக்கும் –

எங்கனே செய்யிலும் உச்சியால் ஏற்கையாவது –
இவன் காலாலே பொகட்டவற்றை அவன் தலையால் ஏற்கை –
யா க்ரியாஸ் சம்ப்ரயுக்தாஸ் சயு ஏகாந்த கத புத்திபி தாஸ் சர்வாஸ் சிரஸா தேவ பிரதி க்ருஹ்ணாதி
வை ஸ்வயம் -மோஷ தர்மம் மஹா பாரதம்

————————————-

அநந்ய ப்ரயோஜனராய் அடிமை செய்யுமவர்கள் விஷயத்தில்
அவனுக்கு உண்டான ஆதரத்தை அருளிச் செய்தார் கீழ் –
அவ்வளவு அன்றிக்கே அநந்ய பிரயோஜனவர்களுடைய ஹிருதயத்தில் இருப்பில்
அவனுக்கு உண்டான விருப்பம் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் இதில் –

ஆசு இல் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் -தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு –9-

பதவுரை:

ஆசில் -குற்றமில்லாத
அருளால் -கருணையினால்
அனைத்து உலகும் -எல்லா உலகத்தையும்
காத்து -இரட்சித்து
அளிக்கும் –விருப்பங்களைக் கொடுக்கும்
வாச மலராள் மணவாளன் -தாமரையில் பிறந்த பிராட்டிக்கு நாயகனான பகவான்
தேசு பொலி -ஒளி மயமான
விண்ணாட்டில் -ஸ்ரீவைகுண்டத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றை எண்ணாதார் -தன்னையொழிய வேறு எதையும் நினைக்காதவர்களுடைய
நெஞ்சத்து -இதயத்தில்
இருப்பு -குடியிருப்பை
சால -மிகவும்
விரும்பும் -ஆதரிக்கும்

ஆசு இல் அருளால்
நிர்ஹேதுக கிருபையால்
ஆசு -குற்றம் –
இல் -அது இல்லாமை
அருளுக்கு குற்றமாவது
ச ஹேதுகமான போது ஒழிய கார்யகர மாகாமல் இருக்கை –

அனைத்து உலகும்
ஸமஸ்த லோகத்தையும்
ச ஹேதுக கிருபையால் செய்யும் போது இறே
குணாகுண நிரூபணம் பண்ணி வரைந்து ரஷிப்பது

இவ்விடத்தில் லோக சப்தம்
ஜன வாசி –லோகஸ்து புவனே ஜனே-என்னக் கடவது இறே

காத்து அளிக்கும்
அநிஷ்டங்களைப் போக்கி ரஷித்து
அபிமதங்களைக் கொடுக்கும்

வாச மலராள் மணவாளன் –
வேரி மாறாத பூவில் இருப்பாள் -என்கிறபடியே
எப்போதும் ஓக்கச் செவ்வி மாறாமையாலே
பரிமளம் அலை எறிகிற புஷ்பத்தை இருப்பிடமாக உடைய
ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபனானவன் –

கீழ்ச் சொன்னபடியே ரஷிப்பது தான் அவளோடு கூடி இருந்தாயிற்று

லஷ்ம்யாம் ஸஹ ஹ்ருஷீகேசா திவ்யா காருண்ய ரூபயா -ரக்ஷகஸ் சர்வ சித்தாந்தே

வேதான் தேஷுசகீயதே –என்னக் கடவது இறே

ரக்ஷணத்துக்கு அடியான கிருபையை கிளப்புகையும்
ரக்ஷித்தால் அது கண்டு உகக்குகையும்
அவளுடைய கூறாய் இறே இருப்பது

இப்படி இருக்கிற ஸ்ரீ யபதியானவன்
தான் பண்ணின கிருஷி பலித்து
அநந்ய ப்ரயோஜனவர்களுடைய ஹிருதயத்தில் இருப்பில் பண்ணும்
ஆதர விசேஷத்தை அருளிச் செய்கிறார் மேல்

தேசு பொலி விண்ணாட்டில்
அத்யர்க்க அனல தீப்தம் தத்த்ஸ்தானம்–என்கிறபடியே
தேஜோ பிரசுரமாய்
வைகுண்டது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி- ஆஸ்தே விஷ்ணுர் சிந்த்யாத்மா
பக்தைர் பாகவதைஸ் ஸஹ -என்கிறபடியே –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும்
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடும் கூட ரஸோத்தரமாக
எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரமபதத்தில் காட்டில்

சால விரும்புமே
மிக ஆதரியா நிற்குமே –

வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு —
வாஸூ தேவஸ் சர்வம்
எல்லாம் கண்ணன் -என்றும் சொல்லுகிறபடியே
சகல பிரயோஜனமும் தானேயாக நினைத்து
வேறொரு பிரயோஜனத்தை கணிசியாதே இருக்குமவர்களுடைய ஹிருதயத்தில் இருப்பை

இத்தால்
அப்ராக்ருதமான தேச விசேஷத்தில் காட்டில் இவர்கள் ஹிருதயத்தில் இருப்பு
தனக்கு அத்யந்த ரசாவஹமாய் இருக்கையாலே
இதிலே அத்யாதரத்தைப் பண்ணும் என்றதாயிற்று

யோ அநந்ய மனஸஸ் ஸூத்தா யேதா சயைக மநோ ரதா தேஷாம் மே
ஹ்ருதயம் விஷ்ணோர் வைகுண்டாத் பரமம் பதம் –என்று தானே அருளிச் செய்தான் இறே –

—————————————————

ஸ்ரீ யபதியானவன்-ப்ரயோஜனாந்தர பரருடைய ஹ்ருதயத்தில் இருந்தாலும்
அவ்விருப்பு அவனுக்கு துக்காவஹமாகையாலே
அஸஹ்யமாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன் தன் -தாளில்
பொருந்தாதார் உள்ளத்தில் பூ மடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு –10-

பதவுரை:

நாளும் -நாள்தோறும்
உலகை -உலகத்தை எல்லாம்
நலிகின்ற -துன்புறுத்துகின்ற
வாளரக்கன் -வாளைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட இராவணனுடைய
தோளும் -இருபது தோள்களும்
முடியும் -பத்துத் தலைகளையும்
துணித்தவன் -அறுத்துத் தள்ளினவனான
பூ மடந்தை கேள்வன் தன் -திருமகள் நாயகனான இராமபிரானுடைய
தாளில் -திருவடிகளில்
பொருந்தாதார் -பற்றாதவர்களுடைய
உள்ளத்தில் -இதயத்தில்
இருந்தாலும் -கொள்கை அளவில் இருந்தாலும் அவ்விருப்பு
முள்மேலிருப்பு -முள் நுனியில் இருப்பது போன்றதாகும்

நாளும் உலகை நலிகின்ற
காதாசித்கமாக அன்றிக்கே
நாள் தோறும்
ஒருவரை இருவரை இன்றிக்கே
லோகத்தை அடைய
ஒரு கால் விடுகை அன்றிக்கே
நலியா நிற்கிற

வாளரக்கன்
முன்பே ருத்ரனை யுபாஸித்து அவன் பக்கலிலே பெற்றதொரு வாளைத் தனக்கு
பலமாகப் பிடித்துக் கொண்டு இருக்கும் ராக்ஷஸனுடைய

தோளும் முடியும் துணித்தவன்
தோள்களையும் தலைகளையும் அறுத்தவன்
தோள்கள் தலை துணி செய்தான் -ஸ்ரீ பெரியாழ்வார்
அதாவது
அவனைக் கொல்லுகிற அளவில் அகப்படாதவன் அகப்பட்டான்-
தப்பாமல் கொன்று விடுவோம் என்று பாராதே –
தோள்களைக் கழித்து –
தலைகளைச் சேதித்து
போது போக்காக நின்று கொன்ற படி –

பூ மடந்தை கேள்வன் –
புஷ்ப நிவாஸினியாய் –
யுவதிஸ்ஸ குமாரிணீ-என்கிறபடியே
நித்ய யவ்வன ஸ்வ பாவையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகனானவன் –

கீழ்ச் சொன்ன ராவண வதம் தனக்கு நாட்டை நலிந்த அளவு அன்றிக்கே
இவளை பிரித்தது இறே பிரதான ஹேது

சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் –என்றார் இறே ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்
இப்படி திவ்ய மஹிஷியான ஸ்ரீ பிராட்டியும் தானுமாய் ரஸோத்தரமாக எழுந்து அருளி இருக்குமவன்

தன் -தாளில் பொருந்தாதார் உள்ளத்தில்
திருவடிகளை ஆஸ்ரயிக்கச் செய்தே
ப்ரயோஜனாந்தரங்களில் விருப்பத்தைப் பண்ணி
தன் திருவடிகளில் பொருத்தம் அற்று இருக்குமவர்களுடைய ஹிருதயத்தில்

இருந்தாலும் முள் மேல் இருப்பு —
முதலிலே இருக்கத் தான் கூடாது –
உபாசகரானவர்களுடைய நிர்பந்தத்துக்காக இருந்தாலும்
கண்டகாக்ரத்தில் இருப்புப் போலே துக்க அவஹமாய் இருக்கும் என்றபடி –

பகவச் சரண த்வந்தவே பக்திர் யேஷாம் ந வித்யதே தேஷாம் ஹ்ருதி ஸ்திதோ
தேவ கண்டகாக்ர இவ ஸ்தித -ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் வசனத்தை
இவ்வர்த்தத்துக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: