ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஞான சாரம்-(11-20) –ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் — –

கீழ் இரண்டு பாட்டாலே –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு -அநந்ய ப்ரயோஜனருடைய ஹிருதயத்தில் இருப்பில் உள்ள விருப்பத்தையும் –
ப்ரயோஜனாந்தர பரருடைய ஹிருதயத்தில் இருப்பில் உள்ள துக்கத்தையும் அருளிச் செய்தார்
இப் பாட்டில்
தன் திருவடிகளில் அநந்ய பிரயோஜன பக்திகரானவர்கள் சாதரமாக சமர்ப்பித்த த்ரவ்யம் அத்யல்பமானாலும்-
அவன் அத்தை அதி மஹத்தாக நினைத்து அங்கீ கரிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

தன் பொன்னடி யன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்ட அணு வெனினும் -பொன் பிறழும்
மேருவாய்க் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரிமாக் கொண்டல் நிகர் மால் –11-

பதவுரை:

விரையார் –நறுமணம் நிறைந்த
துழாய் அலங்கல் –திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டவனாய்
மாரி மாக் கொண்டல் நிகர்–மழை பொழியும் மேகத்தை நிகர்த்த வடிவுடையவனான
மால்–திருமால்
தன் பொன்னடி யன்றி–தன்னுடைய அழகிய திருவடிகளையொழிய
மற்றொன்றில் -வேறு பயன்களில்
தாழ்வு செய்யா -ஈடுபாடு கொள்ளாத
அன்பர் -பக்தியை உடையவர்கள்
உகந்திட்டது-மகிழ்ச்சியுடன் கொடுப்பது
அணுவெனினும் -மிகச் சிறியதாகயிருந்தாலும் அப்பொருளை
பொன் பிறழும் -பொன் மிளிரும்
மேருவாய் -பொன் மலையாய்
கொள்ளும் -ஏற்றுக் கொள்வான்

தன் பொன்னடி யன்றி
நிருபாதிக சேஷியான தன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஒழிய

தன்னடி -என்கையாலே –
திருவடிகளினுடைய ப்ராப்ததையும்

பொன்னடி -என்கையாலே –
அதனுடைய ஸ்லாக்யதையும்
போக்யத்தையும் சொல்லுகிறது –

மற்று ஒன்றில் தாழ்வு செய்யா அன்பர் –
இப்படி பிராப்தமுமாய் –
போக்யமுமான திருவடிகளை ஒழிய வேறொரு பிரயோஜனத்தில்
ப்ராவண்யம் பண்ணாத ப்ரேமத்தை யுடையவர்கள் –

மற்று ஓன்று என்று
ஐஸ்வர்யாதிகளைச் சொல்லுகிறது –

தாழ்வாவது –
தாழ்ச்சி –
இத்தால் -ப்ராவண்யத்தைச் சொல்லுகிறது –
சதிரிள மடவார் தாழ்ச்சியை -என்கிற இடத்திலே போலே –

ஆக இப்படி
அநந்ய ப்ரயோஜன பக்திமான்களானவர்கள் –

உகந்து இட்டது
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அனுபபத்தி–என்கிறபடியே
சேஷி விஷயத்தில் கிஞ்சித்காரம் இல்லாத போது -சேஷத்வ சித்தி இல்லாமையால்
நமக்கு இது அவஸ்யம் செய்ய வேணும் என்று வைதமாகச் செய்கை அன்றிக்கே
உகந்து பணி செய்து -என்கிறபடியே –
ராக ப்ராப்தமாக அடிமை செய்யுமவர்கள் ஆகையாலே
ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு சமர்ப்பித்த த்ரவ்யம்

அணு வெனினும் –
அல்பமாய் இருந்ததே யாகிலும்

பொன் பிறழும் மேருவாய்க் கொள்ளும்
அதாவது
ஸ்வர்ண ரூபமாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள மஹா மேருவைப் போலே
அதி மஹத்தாக நினைத்து அங்கீ கரியா நிற்கும் என்கை –

இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டும் குறைவாளன் ஆகில் இறே
சமர்ப்பித்த த்ரவ்யத்தினுடைய லாகவம் பார்த்து ஆதரிப்பது

அங்கன் அன்றிக்கே
சமர்ப்பிக்கிறவனுடைய ப்ரேமத்தையே பார்க்குமவன் ஆகையாலே
இவன் ப்ரேமத்துடன் சமர்ப்பித்த த்ரவ்யத்தை இப்படி அங்கீ கரிக்கும் அவன் தான் ஆர் என் என்னில் –

விரையார் துழாய் அலங்கல் மாரிமாக் கொண்டல் நிகர் மால் —
அதாவது பரிமள பிரசுரமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
வார்ஷிகமான மஹா மேகம் போலே இருக்கிற வடிவு அழகை யுடையனான சர்வேஸ்வரன்

விரை -பரிமளம்
அலங்கல் -மாலை
மா -மஹத்து –
மாரி -வர்ஷம்

இத்தால்
அநந்ய பிரயோஜன பக்திமான்களாய் தன் பக்கல் மனசை வைத்தவர்களுக்கு
அனவரத அனுபாவ்யமாய் பக்தி வர்த்தகமான
ஒப்பனை அழகையும்
வடிவு அழகையும் யுடையவன் என்றதாயிற்று –

விரையார் துழாய் அலங்கல் மாரிமாக் கொண்டல் நிகர் மால்–
தன் பொன்னடி யன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா அன்பர்
உகந்து இட்ட அணு வெனினும் -பொன் பிறழும் மேருவாய்க் கொள்ளும் –
என்று அந்வயம் –

பக்தைரண் வப்யுபா நீதம் ப்ரேம்ணா பூர்யேவ மே பவேத் பூர்யப்ய பக்தோ பஹ்ருதம் நமே
தோஷாய கல்பதே-ஸ்ரீ பௌஷ்கர சம்ஹிதையில் தானே அருளிச் செய்தான் இறே

ஸ்ரீ பாகவத ஸ்லோஹமுமாம்–

————————————-

ப்ரயோஜனாந்தர பரரானவர்கள் சீரிய தனத்தை சமர்ப்பிக்கிலும் ஸ்ரீயபதியானவன்
அத்தை விரும்பி அங்கீகரியான் -என்கிறார் –

மாறாய் இணைந்த மருதம் இறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியைப் –பேறாக
உள்ளாதார் ஒள் நிதியை ஈந்திடினும் தான் உகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்–12–

பதவுரை:

மலர் மடந்தை கோன்-திருமகள் தலைவனான பகவான்
மாறாயிணைந்த -தன்னிடம் பகை கொண்டு சேர்ந்து நின்ற
மருதம் -இரட்டை மருத மரங்களான அசுரர்களை
இற -முறிந்து விழும்படி
தவழ்ந்த -தவழ்ந்து போன
சேறார் -சேற்றில் அலர்ந்த
அரவிந்தம்-செந்தாமரை போன்ற
வேறாக -சிறப்பாக (அதுவே பயனாக)
உள்ளாதார்-நெஞ்சால் நினையாதார்
ஒண்நிதியை-மிகப் பெருஞ்செல்வத்தை
ஈந்திடினும்-தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
தான்-பரிபூரணனான இறைவன்
உகந்து கொள்ளான்-மகிழ்வுடன் ஏற்கமாட்டான்

மாறாய் இணைந்த மருதம் இறத் தவழ்ந்த
தன் பக்கல் ஸாத்ரவ யுக்தமாய் நிர்விவரமாம் படிச் சேர்ந்து நின்ற யாமளார்ஜுனமாவது
முறிந்து விழும்படி தவழ்ந்து போன
சிஷேப சரணா வூர்த்வம் ஸ்தன்யார்த்தீ ப்ரருரோதஹ-என்கிறபடியே
முலை வரவு தாழ்ந்தவாறே சீறி அழுது –
திருவடிகளை நிமிர்க்க -அது பட்டுச் சகடம் முறிந்து விழுந்தால் போலே யாயிற்று

வெண்ணெய் களவில் அமுது செய்தான் என்று பெற்ற தாயானவள்
உரலோடே கட்ட அதையும் இழுத்துக் கொண்டு
முஃத்யத்தால் இதன் நடுவே நுழைந்து தவழ்ந்து போகா நிற்க
திருத் தொடைகளினுடைய ஸ்பர்சத்தாலே மருதம் முறிந்து விழுந்த படி
இவன் அன்யார்த்தமாகச் செய்தாலும் பிரதிகூலித்துக் கிட்டினால் முடியும்படியாய் இறே
வஸ்து ஸ்வ பாவம் இருப்பது –

சேறார் அரவிந்தச் சேவடியைப் —
தன்னிலத்திலே அலர்ந்த செவ்வித் தாமரை போலே சிவந்து இருக்கிற திருவடிகளை –

சிவப்பைச் சொன்ன இது –
திருவடிகளிலே விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் இவற்றுக்கு எல்லாம் உப லக்ஷணம் –

யமளார்ஜுன யோர் மத்யே ஜகாமக மலேஷண-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று
மருதுகளின் நடுவே தவழ்ந்து போன போது
அவை முறிந்து விழுகிற ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து அபூர்வ தர்சனத்தால்
சிவந்து மலர்ந்த திருக் கண்களின் அழகை வர்ணித்தார் ருஷி
தவழ்ந்து போகிற போது முறித்திட்டுப் போந்த திருவடிகளின் அழகை வர்ணிக்கிறார் இவர் –

பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும் தகாய் யுன் கழல் காணிய பேதுற்று -என்று
ஸ்ரீ ஆழ்வாரும் அனுபவிக்க ஆசைப்பட்டது திருவடிகளை இறே

பேறாக உள்ளாதார்
வியாவ்ருத்தமாக அநுஸந்தியாதவர்கள் —
அதாவது -ப்ரயோஜனாந்தர சங்கம் அற்று இத் திருவடிகளே நமக்கு
பரம ப்ராப்யம் என்று அநுஸந்தியாதவர்கள் -என்கை –

அவன் மருதுகளின் கையில் அகப்படாமல் -தன்னை நோக்கித் தந்தால் அவன் திருவடிகளே பரம ப்ராப்யம் என்று
அனுபவித்துக் கொண்டு கிடக்க இறே அடுப்பது –
அதில் மனஸ் இன்றியே பிரயோஜனாந்தர பரராய் இருக்குமவர்கள் –

ஒள் நிதியை ஈந்திடினும் தான் உகந்து கொள்ளான் மலர் மடந்தை கோன்–
ஒண்மை-அழகு –

சீரிய நிதியை சமர்ப்பிக்கிலும்
ஸ்ரீ யபதி யாகையாலே -அவாப்த ஸமஸ்த காமனானவன் அத்தை விரும்பி அங்கீ கரியான் என்கை
அபூர்ணன் ஆகில் இறே த்ரவ்ய கௌரவம் பார்த்து அங்கீ கரிப்பது
அங்கன் இன்றிக்கே அதிகாரியினுடைய பாவ ஸூசியைப் பார்த்து அங்கீ கரிக்குமவன் அவன் இறே
ஆகையால் தன் பக்கல் பக்தி இல்லாத ப்ரயோஜனாந்தர பரர் இட்டதை சர்வ ஸமாச்ரயணீயன் ஆகையாலே
நமக்கு இது கைக் கொள்ள வேணுமே என்று தேவையாகச் செய்யுமது ஒழிய உகந்து கொள்ளான் ஆயிற்று –
ப்ருதிவீம் ரத்ன சம்பூர்ணம் யா க்ருஷ்ணாய ப்ரயச்சதி
தஸ்யாப் யன்ய மனஸ் கஸ்ய ஸூலபோ ந ஜனார்த்தன -என்னக் கடவது இறே
கீழ்ப் பாட்டில் சொன்ன சம்வாத ஸ்லோகத்தில் உத்தரார்த்தாலே இவ்வர்த்தத்தை தானே அருளிச் செய்தான் இறே

——————————————

சேஷி விஷயத்தில் அநந்ய பிரயோஜனராய்க் கிஞ்சித்கரிக்கும் ஆகாரம் உண்டானாலும் தேகாத்ம அபிமானிகளான
லௌகிகரோட்டை சங்கம் கிடைக்கில் அந்த அதிகாரத்துக்கு அவத்யம் அன்றோ என்ன
ஆத்ம ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணினவர்களுக்கு அவர்களோடு உறவு உண்டோ என்கிறார் –

பண்டே உயிர் அனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாம் எனத் தெளிந்த தூ மனத்தார்க்கு -உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும்
உலகத்தவரோடு உறவு –13-

பதவுரை:

பண்டே -தொன்று தொட்டே
உயிரனைத்தும் -அனைத்து உயிர்களும்
பங்கயத்தாள் நாயகற்கே -லக்ஷ்மீ நாதனுக்கே
தொண்டாம் -அடிமையாகும்
எனத் தெளிந்த -என்ற உண்மையை அறிந்த
தூ மனத்தார்க்கு -தூய மனம் படைத்தார்க்கு
பலவும் கற்று -சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று
தம் உடம்பைப் பார்த்து -தமது உடலில் காணப்படும் சாதி முதலியவற்றைப் பார்த்து
அபிமானிக்கும் -செருக்கித் திரியும்
உலகத்தவரோடு -உலகியல் மக்களோடு
உறவு உண்டோ -தொடர்பு உண்டாகுமோ?

பண்டே உயிர் அனைத்தும்
இத்தால் சேஷத்வத்தினுடைய அநாதித்வத்தைச் சொல்லுகிறது
சேஷத்வம் தான் சிலர்க்கு உண்டாய் சிலர்க்கு இன்றிக்கே இருக்கை அன்றிக்கே
சகலாத்ம சாதாரணம் -என்கிறது –

பங்கயத்தாள் நாயகற்கே
இத்தால்
சேஷத்வ பிரதிசம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடமும்
அவதாரணத்தாலே
இதனுடைய அநந்யார்ஹத்வமும் சொல்லுகிறது

தொண்டாம் எனத் தெளிந்த தூ மனத்தார்க்கு –
தொண்டு என்று பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தியால் பிரதிபாதிக்கப்படுகிற சேஷத்வத்தைச் சொல்லுகிறது
அநாதி காலமே தொடங்கி அகில ஆத்மாக்களுக்கும் அப்ஜா ஸஹாயனான அகார வாச்யனுக்கே சேஷமாய் இருக்கும்
என்று சகல வேத ஸங்க்ரஹமான திருமந்த்ரத்தினுடைய ஸங்க்ரஹமான பிரணவத்தின் சொல்லுகிறபடியே
சம்சய விபர்யயம் அற தர்சித்துத் தெளிந்த பறி ஸூத்த அந்த கரணர்க்கு என்றபடி –

உண்டோ
இதுக்கு மேலே அந்வயம்

பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும்
அதாவது ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சாஸ்திரங்கள் பலவற்றையும் அதிகரித்து
ஜாதி வர்ணாஸ்ரமங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய் இருக்கும் தங்கள் தேகத்தைப் பார்த்து
நாம் இன்ன ஜாதி அன்றோ
இன்ன வர்ணம் அன்றோ
இன்ன ஆஸ்ரமிகள் அன்றோ என்று
இவற்றை இட்டுத் தங்களைப் போரப் பொலிய அபிமானித்து இருக்கும் என்கை –

உலகத்தவரோடு உறவு —
இப்படி அபிமானித்து இருக்கும் லௌகிகரோடு சம்பந்தம் உண்டோ என்று கிரியை –

இத்தால்
அகார வாச்யனுக்கே சேஷம் என்று சொல்லிக் கொண்டு வந்த சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்மாவை
மகார வாச்யனாகச் சொல்லுகையாலே
ப்ரக்ருதே பரனாய் ஞானானந்த லஷணனாய் ஞான குணகனாய்
நித்யனாய் இருக்கும் என்று தெளிந்து இருக்கும்
பரிசுத்த அந்த கரணர்க்கு ஆத்ம ஸ்வரூபத்தைப் பாராதே
தேகத்தையே பார்த்து
அதில் சம்பந்தம் அடியாக ஜாதியாதிகளை இட்டுத் தங்களைப் பெருக்க நினைத்து
அபிமானித்து இருக்கும் லௌகிகரோடு உறவு உண்டோ
அவர்களைக் கண்டால் உறவு அற வார்த்தை சொல்லிப் போம் அத்தனை அன்றோ உள்ளது -என்கை –

ஸ்ரீ திருவஹீந்திர புரத்திலே ஸ்ரீ வில்லிபுத்தூர் பகவர் என்று ப்ரசித்தராய் இருப்பார் ஒரு உத்தம ஆஸ்ரமிகள் –
ப்ராஹ்மணர் எல்லாரும் அனுஷ்டானம் பண்ணுகிற துறை ஒழிய தாம் வேறு ஒரு துறையிலே
அனுஷ்டானம் பண்ணிப் போருவராய்-
அவர்கள் ஒருநாள் எங்கள் துறையில் உமக்கு அனுஷ்டானம் பண்ண ஒண்ணாதோ என்று கேட்க –

விஷ்ணு தாஸாவயம் யூயம் ப்ரஹ்மணா வர்ண தர்மிணா அஸ்மாகம் தாஸ வ்ருத்தி நாம்
யுஷ்மாபிர் நாஸ்தி சங்கதி நாஸ்தி சங்கதி
ரஸ்மாகம் யுஷ்மா கஞ்ச பரஸ்பரம் வயந்து கிங்ரா விஷ்ணோர் யூய மிந்த்ரிய கிங்கரா -என்று
உறவு அற வார்த்தை சொல்லிப் போனார் இறே

ஆவித்ய ப்ராக்ருத ப்ரோக்தோ வைத்யோ வைஷ்ணவ உச்யதே
ஆவித்யேன நகே நாபி வைத்ய கிஞ்சித் சமாசரேத்-என்னக் கடவது இறே

—————————-

தேகம் இருக்கும் தனையும் ஜாதியாதி பேத பிரதிபத்தி அனுவர்த்தியாதோ என்ன –
அத்தால் என்ன பிரயோஜனம் –
சகல ஆத்மாக்களுக்கும் ஸ்ரீ யபதி திருவடிகளே காணுங்கோள் புகல் என்கிறார்

பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14-

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும்-நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால்-உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள்-சாதிகள்
நான்கினொடும்-அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம்-சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு-உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர்-என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும்-அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன்-லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே-எம்பெருமானுடைய திருவடிகளே
சரண்-புகலாகும் என்று
காணும் -அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
பஞ்ச பூதாத் மகே தேஹே-என்றும்
மஞ்சு சேர்வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற அஞ்சு சேர் ஆக்கை -என்றும் சொல்லுகிறபடியே
ப்ருதிவ்யாதி பூதங்கள் ஐந்தினுடையவும் சமுதாய ரூபமான தேகம் அடியான உண்டான

இத்தால்
ஆத்மாவோடு அந்வயம் இன்றிக்கே உபசயாத்மகமாய் –
அநித்யமாய்
ஹேயமாய் இருக்கிற
தேகம் அடியாக உண்டானது ஆகையாலே வந்தேறி என்னும் இடம் சொல்லுகிறது-

சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
சாதம் என்று ஜாதியைச் சொல்லுகிறது
ஜாதிர் ஜாதஞ்ச சாமான்யம் -என்னக் கடவது இறே

நான்கு –
ப்ராஹ்மண முதலான நான்கினையும் சொல்லுகிறது

பேதமாவது
இந்நாலினோடும் சேர்ந்து இருந்த உத்கர்ஷ அபகர்ஷ பிரதிபத்தி ஹேதுவான விசேஷம்
இந்த ப்ராஹ்மண ஜாதியைப் பற்றி இறே ஆஸ்ரமாதி பேதங்கள் வருவது
ஆகையால்
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் என்ற இதிலே
எல்லாம் சொல்லலாம்

என்ன பயன் பெறுவீர்
இந்த பேதம் கொண்டு என்ன பிரயோஜனம் பெறுவுதி கோள் –
இத்தால் உங்களுக்கு ஏதேனும் சித்திப்பது உண்டோ –
அஹங்கார ஹேது வாகையாலே அநர்த்தகரமாம் அத்தனை அன்றோ உள்ளது என்று கருத்து –

என்ன பயன் கெடுவீர் -என்ற பாடமான போது –
இந்த பேதம் கொண்டு என்ன பிரயோஜனம்
கெடுவீர்கோள் என்று உகப்பாலே அருளிச் செய்தாராகக் கடவது –

எவ்வுயிர்க்கும் இந்திரை கோன் தன்னடியே காணும் சரண் —
இன்னார் இனியார் என்னாதே-எல்லா ஆத்மாக்களுக்கும்
ஸ்ரீ யபதியானவன் திருவடிகளே காணுங்கோள் புகல்
ஆகையால் இந்தத் திருவடிகளை சம்பந்தத்தை இட்டு நிரூபிக்கும் போது
இந்த பேதங்கள் ஒன்றும் இல்லாமையால்
எல்லாம் ஒவ் பாதிகம் -அதுவே நிலை நின்ற வேஷம் என்று கருத்து –

தேஹாத்ம அஜ்ஞான கார்யேண வர்ண பேதேன கிம் பலம் கதிஸ் சர்வாத்மாநாம்
ஸ்ரீ மன் நாராயண பத த்வயம் –என்று
இவ் வர்த்தம் தான் -பரமைகாந்தி தருமத்தில் சொல்லப்பட்டது இறே

———————————————

எவ்வுயிர்க்கும் இந்திரை கோன் தன்னடியே காணும் சரண்-என்றத்தை ஸ்தாபிக்கைக்காக
ஸ்ரீ யபதி விஷய சேஷத்வ ஏக நிரூபகரானவர்களுக்கு முன்பு நிரூபகமாய்ப் போரும்
கிராம குலாதிகள் எல்லாம் அவன் திருவடிகளே யாம் என்னுமத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-

பதவுரை:

குடியும் -பிறந்த ஊரும்
குலமும் -பிறந்த கோத்திரமும்
எல்லாம் 0மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை-திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு-தொண்டர்களுக்கு
அவனடியே யாகும்-இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்
இதற்கு எடுத்துக்காட்டு
படியின்மேல்-பூமியில்
நீர் கெழுவும்-நீர் நிறைந்த
ஆறுகளின்-நதிகளுடைய
பேரும்-கங்கை முதலிய பெயரும்
நிறமும்-சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி-சமுத்திரத்தை
சேர்ந்து-கலந்து
மாய்ந்திடும் அற்று-அழிந்து போவது போன்று

குடியும் குலமும் எல்லாம்
குடி -கிராமம்
குலம் -கோத்ரம்
எல்லாம் என்றது -மற்றும் நிரூபகமாய்ப் போருமவை பலவும் உண்டாகையாலே –
அவை யாவன -சரண ஸூத் ராதிகள்

கோகனகை கேள்வன் அடியார்க்கு
ஸ்ரீ யபதியினுடைய அடியாரானவர்களுக்கு
கோகனமாவது -தாமரை
கோகனகை-என்றது தாமரையாள் என்றபடி –
கேள்வன் என்றது நாயகன் என்றபடி
ஏவம் பூதனானவன் திருவடிகளிலே சேஷத்வமே நிரூபகமாக உடையவர்களுக்கு –

அவன் அடியே யாகும்
அதாவது
முன்பு ஓவ்பாதிக நிரூபகமாய்ப் போந்த குடியும் குலமும் எல்லாம் போய்-
சேஷியானவன் திருவடிகளில் சம்பந்தமே நிரூபகமாய் –
அத்தை யிட்டு வியபதேசிக்கும் படியாய் விடும் என்கை –
இதுக்கு த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் மேல்

படியின் மேல் நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம் ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று —
பூமியின் மேலுண்டான ஜல ஸம்ருத்தியையுடைய
நதிகளின் நாமமும் வர்ணமும் எல்லாம் சமுத்ரத்தைப் பிரவேசிக்க
பின்பு காண ஒண்ணாதே படி போமா போலே என்கை
படி -பூமி
கொழுவுதல் -மிகுவுதல்
ஆர்கலி -சமுத்திரம்

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ கிராம குலாதிபி விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ்
தஸ்ய சர்வம் ச ஏவ ஹி- நத்யா நச்யதி நாமாதி
பிரவிஷ்டாயா யதார்ணவம் சர்வாத்மநா பிரபன்நஸ்ய விஷ்ணுமே காந்தி நஸ் ததா -என்னக் கடவது இறே

————————————————————–

ஸ்வரூப யாதாம்ய ஞானம் பிறந்தவர்கள் தந்தாமை அநுஸந்தித்து இருக்கும்படியை –
ஸ்வ நிஷ்டா கதன முகேன அருளிச் செய்கிறார் –

தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே யடிமை நான் –16-

பதவுரை:

நான்-உயிராகிற நான்
தேவர்-இந்திரன் முதலிய தேவர்கள்
மனிசர் -அந்தணர், அரசர் முதலியோர்
திரியக்கு-பசு, பறவை முதலிய விலங்குகள்
தாவரமாம்-மரம், செடி, கொடிகளாகிற தாவரங்கள்
யாவையுமல்லேன்-எவையுமாய் சொல்லப்பட மாட்டேன்
(இவையெல்லாம் நிலை நில்லாதனவாய் சிறிது பொழுது ஆத்மாவைப் பற்றி நின்று கழிவன.
ஆதலால் அவற்றைக் கொண்டு ஆத்மாவைக் குறிப்பிடுவது முறையில்லை என்பது)
நான்-நான் (அடியேன்)
பூவின் மிசை-தாமரை மலரில் வீற்றிருக்கும்
ஆரணங்கின்-தெய்வப் பெண்ணான திரு மகளின்
கேள்வன்-மணாளனும்
அமலன் -குற்றங்கள் இல்லாதவனும்
அறிவே வடிவாம் -அறிவு மயமாய் இன்பமயமாய் விளங்குபவனுமான
நாரணன்-நாராயணனுடைய
தாட்கே-திருவடிகளுக்கே
இலகும் -அறிவும் இன்பமுமாய் விளங்கும்
உயிர் -உயிர்கள்
அடிமை -அடிமையாகும்
“உயிர்கள் எல்லாம் நாராயணனுடைய அடிமைகள் ஆகும்.” -அடிமையே உயிர்களின் இயற்கையாம்.

தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம் யாவையும் அல்லன்
தேவர்கள் மநுஷ்யர்கள் திர்யக்கு ஸ்தாவரங்கள் -சகலமும் அல்லன் –

ஓர் ஆத்மா தான் அநேக கர்ம பேதத்தாலே -தேவாதி சதுர்வித யோனிகளிலும் ஜனிக்கும் இறே
அவ்வோ யோனிகளிலே ஜெனித்தால் –
தேவோஹம் -மனுஷ்யோஹம் என்று இருப்பது-
அவ்வோ தேகங்களில் அஹம் புத்தியைப் பண்ணிப் போரக்கடவதாய் இறே
அது ஆத்ம ஸ்வரூப ஞானம் பிறப்பதற்கு முன்பு இறே –
இது ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு வார்த்தை இறே

இலகும் உயிர் -நான் –
ஞானானந்த லக்ஷணமாய் -உஜ்ஜவலமான ஆத்மா –
நான் -ஏவம் பூதனான நான் –

பூவின் மிசை ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம் நாரணன் தாட்கே யடிமை —
அதாவது மலர் மேல் உறைவாள்-என்கிறபடியே
பூவின் மேல் வர்த்திப்பாளாய்-
திவ்ய ஆகாரையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய்
ஹேய ப்ரத்ய நீகனாய் –
ஞானானந்த ஏக ஸ்வரூபனான ஸ்ரீ நாராயணனுடைய திருவடிகளுக்கே சேஷமானவன் என்கை –

அணங்கு என்றது -தைவப்பெண் என்றபடி
அமலன் என்றது மலபிரதிபடன் என்றபடி
நாரணன் என்றது -ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு பிரகாரமாய்
தான் பிரகாரியாய் இருக்குமவன் என்றபடி –

நாஹம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா ஜ்ஞா நானந்த மயஸ் த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன —
நாஹம் விப்ரோ ந ச நரபதிர் நாபி வைஸ்யோ ந சூத்ரோ நோ வா வர்ணீ ந ச க்ருஹபதிர் நோ வனஸ்தோ யதிர் வா கிந்து
ஸ்ரீமத் புவன பவன ஸ்தித்ய பாயைக ஹேதோர் லஷ்மீ பர்த்துர் நரஹரி தநோர் தாஸ தாசஸ்ய தாஸ —-என்னக் கடவது இறே

——————————————–

ஸ்வரூப ஞானம் பிறந்தவன் தன்னை அனுசந்தித்து இருக்கும் படியை ஸ்வ நிஷ்டா கதன முகேன அருளிச் செய்தார் கீழ்ப்பாட்டில் –
ஐஸ்வர்யத்தினுடைய ஆகமாபாயங்களும் -ஆயுஸ்ஸினுடைய ஸ்தைர்ய அஸ்தைர்யங்களும் அடியாக
அஞ்ஞரானவர்களுக்கு உண்டான கர்வ கிலேசங்கள்
ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்தவனுக்கு உண்டாகாது என்னும் அத்தை அருளிச் செய்கிறார் இப்பாட்டில் –

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தன் தெளிந்த பின் –17-

பதவுரை:

விண்ணவர் கோன்-தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய
செல்வம் மிக்க -பெருஞ்செல்வம்
ஒன்றிடுக-ஒருவர் வேண்டாது இருக்கும்போது தானே வந்து சேர்ந்திடுக
ஒழிந்திடுக-அல்லது அதுவே தன்னைவிட்டு நீங்கிடுக
என்றும் இறவாது இருந்திடுக-எக்காலத்திலும் மரணம் இல்லாமல் வாழ்ந்திடுக (அல்லது)
இன்றே இறக்க-இப்பொழுதே மரணம் ஆயிடுக
தன் தெளிந்த பின்-ஆத்மாவான தன்னுடைய உண்மை நிலையை நன்றாக அறிந்த பின்பு
இவற்றால்-இந்த அறிவினால்
களிப்பும் கவர்வும்-இன்பமும் துன்பமும்
பிறக்குமோ-உண்டாகுமோ (ஆகாது)

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம்
தேவர்களுக்கு நிர்வாஹனான இந்திரனுடைய ஐஸ்வர்யமானது
அபேக்ஷியாது இருக்கச் செய்தே -தானே வந்து சேர்ந்திடுக

ஒழிந்திடுக
அப்படி இருந்துள்ள ஐஸ்வர்யமானது இனிக் கூடாது என்னும்படி
தன்னோடு அந்வயம் அற்றுப் போயிடுக

என்றும் இறவாது இருந்திடுக –
எக்காலத்திலும் மரண ரஹிதமாய் இருந்திடுக

இன்றே இறக்க களிப்பும் கவரவும் இவற்றால் பிறக்குமோ தான் தெளிந்த பின் —
அதாவது –
ஐஸ்வர்ய ஆகமமும்-
ஆயுஷ் ஸ்தைர்யமும் –
ஐஸ்வர்ய விநாசமும் –
ஆயுஷ் ஷயமுமாகப் பிரித்து
இரண்டு வகையாகச் சொன்ன இவற்றால்
நாட்டாருக்கு பிறக்கும் கர்வ கிலேசங்கள் –
தன் ஸ்வரூபத்தை தான் தெளியக் கண்ட பின்பு பிறக்குமோ என்கை –

தான் தெளிந்த பின்-
தன்னைத் தெளிந்த பின்பு –
அதாவது
ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு –

ஆகச்சது ஸூரேந்த்ரத்வம் நித்யத்வம் வா அத்ய வா ம்ருதி தோஷம் வா த்ரவிஷாதம் வா
நைவ கச்சந்தி பண்டிதா -என்னக் கடவது இறே-

—————————————

ஸ்ரீ சர்வேஸ்வரனானவன் -தன் பக்கல் பக்திமான்கள் ஆனாலும் –
ஸ்ரீ சவ்ரி சிந்தா விமுகரான சம்சாரிகளோட்டை சம்சர்க்கம் அற்றவர்களுக்கு ஸூலபனாய் –
அறாதவர்களுக்கு அத்யந்த துர்லபனாய் –இருக்கும்படியை அனைவரும் அறிய அருளிச் செய்கிறார் –

ஈனமிலா வன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும்-தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதார்க்கு அறவரியன்
மாட்டார் துழாய் அலங்கல் மால் –18-

பதவுரை:

மட்டு ஆர்-தேன் பெருகுகிற
துழாய் அலங்கல் -திருத்துழாய் மாலையுடைய
மால்-திருமால்
ஈனமில்லாத அன்பர்-தன் திருவடிகளில் பழுதற்ற
என்றாலும்-பக்தி யுடையவர்கள் ஆனாலும்
எய்திலா -பகவானுக்கு எதிரிகளான
மானிடரை-கீழ் மக்களை
எல்லா வண்ணத்தாலும்-பேச்சு முதலிய அனைத்து உறவுகளாலும்
தானறிய-வாலறிவனான இறைவனறிய
விட்டார்க்கு-துறந்தார்க்கு
எளியன் அவ்வாறு -அவர்களை விடாதவர்களுக்கு
அறவரியன்-மிகவும் அரியனாய் இருப்பான்

ஈனமிலா வன்பர் என்றாலும்
ஈனமாவது பொல்லாங்கு –
அது இல்லாமையால்
தான் திருவடிகளிலே பழுதற்ற ப்ரேமம் உடையவர்கள் ஆனாலும்
பக்த்யா லப்யஸ்த்வ -என்றார் இறே ஸ்ரீ கீதாச்சார்யர் –

எய்திலா மானிடரை
ஆன்விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லது மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –என்றும்
செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -என்றும்
ஞானிநாம் அக்ரேஸ ரானவர்கள் இகழும்படி
ஸ்ரீ பகவத் விஷயத்தோடு ஒட்டு அற்று திரியும் பாபிஷ்டரான ஷூத்ர மனுஷ்யரை

எய்திலா-என்றது –
எய்துதல் இல்லாத படியாய் ஸ்ரீ பகவத் விஷயத்தின் அருகு கிட்டாமையைச் சொல்லுகிறது

எய்திலாராம் என்ற பாடமான போது
ஸ்ரீ பகவத் விஷயத்தில் பிரதிகூலரான -என்று பொருளாகக் கடவது –

எல்லா வணத்தாலும்-
அர்ஹாவது -ஸஹவாஸ -சதிகார -சம்பாஷணாதியான
சர்வ பிரகாரத்தாலும் என்கை –

தான் அறிய விட்டார்க்கு
தாங்களும் பிறரும் அறிந்த அளவு அன்றிக்கே-அந்தர்யாமியாய்
உள்ளுவார் உள்ளத்து எல்லாம் அறியும் சர்வஞ்ஞனான தான் அறிய விட்டவர்களுக்கு –

தான் அறிந்த வைஷ்ணத்வமும் வைஷ்ணத்வம் அல்ல –
நாடு அறிந்த வைஷ்ணத்வமும் வைஷ்ணத்வம் அல்ல –
ஸ்ரீ நாராயணன் அறிந்த வைஷ்ணத்வமே வைஷ்ணத்வம் -என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே

எளியன் –
அவர்களுக்கு கிட்டலாம்படி ஸூலபனாய் இருக்கும்

விடாதார்க்கு அற வரியன்
அப்படி விடாதவர்களுக்கு கிட்ட ஒண்ணாத படி மிகவும் துர்லபனாய் இருக்கும்

மாட்டார் துழாய் அலங்கல் மால் —
தன் நிலத்திலும் காட்டில் திருமேனியின் ஸ்பர்சத்தால் செவ்வி பெற்று மது வெள்ளம் இடுகிற
திருத் துழாய் மாலை யுடைய
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருத் துழாய் மாலை சர்வேஸ்வரத்வ சிஹ்னம் இறே
வக்ஷஸ்தல்யாம் துளஸீ கமலா கௌஸ்துபைர் வைஜயந்தீ ஸர்வேஸத்வம் கதயதிதராம்-என்று
அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பட்டர்

மாட்டார் துழாய் அலங்கல் மால் –
ஈனமிலா வன்பர் என்றாலும்
எய்திலா மானிடரை
எல்லா வணத்தாலும்-
தான் அறிய விட்டார்க்கு எளியன்
விடாதார்க்கு அறவரியன்-
என்று அன்வயம்

பக்தோபிவா ஸூ தேவஸ்ய சாரங்கிண பரமாத்மன லோகேஷணாதி நிர்முக்தோ முக்தோ பவதி நான்யதா -என்னக் கடவது இறே

—————————————-

புத்ர தாரா பந்து ஜன க்ருஹ ஷேத்ராதிகள் எல்லாம் அக்னி கல்பமாய்க் கொண்டு தாபகரமாம் படியான
அவஸ்தை பிறந்தவர்களுக்கு ஸ்ரீ பரமபத பிராப்தி எளிதாம் என்கிறார் –

நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் -அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்றரும் வைகுந்தத்து இருப்பு -19-

பதவுரை:-

நல்ல புதல்வர்-நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள்
மனையாள்-நற்குண நற் செய்கையுடைய வாழ்க்கைத் துணைவி
நவையில் கிளை -குற்றமில்லாத உறவினர்கள்
இல்லம் -குடியிருப்புக்கு ஏற்ற வீடு
நிலம்-பொன் விளையும் பூமி
மாடு-வள்ளல் பெரும்பசுக்கள் (குடம் குடமாகப் பால் கறக்கும் பசுக்கள்)
இவை யனைத்தும்-இவை யெல்லாம்
அல்லலென-துன்பம் தருவன என்று
தோன்றி -மனதுக்குத் தோன்றி
எரிதீயில்-கொழுந்து விட்டு எரிகின்ற தீபோல
சுடுமேல் -எரியுமாகில் (எரிக்குமாகில்)
அவர்க்கு-அத்தகைய நிலை பிறந்தவர்களுக்கு
ஏற்றரும் -தன் முயற்சியால் பெறுதற்கரிய
வைகுந்தத்து-அழிவில்லாத வீட்டு உலகத்தில் போய்
இருப்பு-அடியார் குழாங்களுடன் கூடியிருக்கும் இருப்பு
எளிதாம் -மிக எளிதாகும்

நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
நல்ல புதல்வர்-
ஸத் புத்ரர்கள் -அதாவது
குண ஹீனராய் துக்க அவஹராய் இருக்கை அன்றிக்கே
தங்கள் வியோகம் அஸஹ்யமாம் படி குணவான்களான புத்திரர்கள் -என்கை –

நல்ல – மனையாள்-
நல்ல என்றத்தை இங்கும் கூட்டிக் கொண்டு குணஹீனையாய் இருக்கை அன்றிக்கே
குணவதியாய் சந்தா அனுவர்த்தியான பார்யை-என்கை –

நவையில் கிளை –
பந்துக்கள் என்று பேராய் -பிரதிகூலராய் இருக்கை அன்றிக்கே
தங்களோட்டை ஸஹவாஸம் அமையும் என்னும்படி நிர்த்தோஷரான பந்துக்கள் –
நவை குற்றம்
இல் என்றது இல்லாமை

இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் –
கீழ் -நல்ல -என்றத்தை இங்கும் சேர்த்துக் கொண்டு
நல்ல இல்லமாவது –
கண்டவிடம் எங்கும் சிதிலமாய் ஹேயமாய் இருக்கை இன்றிக்கே
மாட கூட ப்ரஸாதாதி யுக்தமாய் விலக்ஷணமான க்ருஹம்

நல்ல நிலமாவது –
ஊஷரமாய் ஒரு முதல் பற்றாதபடி இருக்கை இன்றிக்கே கட்டு கலம் போர விளையும்படியான ஸூ க்ஷேத்ரம்

நல்ல மாடாவது –
கொடுவையாய்க் கட்டப் பிடிக்க ஒட்டாமல் கொண்டியிலே மேய்ந்து திரிகை இன்றிக்கே
விதேயமாய் பஹு ஷீர பிரதங்களான பசுக்கள் முதலானவை –

இவை அனைத்தும் –
இப்படி ஓர் ஒன்றே விலக்ஷணமாய் நாட்டார்க்கு ஸூக வாஹமாய் இருக்கும் இவை எல்லாம் –

அல்லல் எனத் தோற்றி
துக்க அவஹம் என்றே மனஸூக்குத் தோற்றி-
அல்லல் என்ற சப்தம்
துக்க வாசியே யாகிலும்
கீழ்ச் சொன்னவற்றைச் சொல்லுகிறது ஆகையாலே துக்காவஹம் என்றே சொல்ல வேணும்-

எரி தீயில் சுடுமேல் –
ஜ்வலிக்கிற அக்னி போலே தாப கரமாகில் –

அவர்க்கு எளிதாம் ஏற்றரும் வைகுந்தத்து இருப்பு –
அவ்வவஸ்தை பிறந்த அதிகாரிகளுக்கு ஸ்வ யத்னத்தால் துஷ் ப்ராபமான ஸ்ரீ பரமபதத்தில் போய்
அடியார்கள் குழாங்களுடன் கூடி இருக்கும் இருப்பு ஸூலபமாம் –

அதாவது
இப்படியான அதிகார பாவம் பிறந்தவர்களுக்கு ஸ்ரீ ஈஸ்வரன் சீக்ரமாக
பரம பதத்தைக் கொடுக்கும் என்றபடி –

ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத –புத்ராஸ் ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாதபத்ம ப்ரவணாத் மவ்ருத்தேர்
பவந்தி சர்வே பிரதிகூல ரூபா –என்று
ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹஸ்திகிரி மகாத்மியத்தில் சொல்லப்பட்ட வசனம்
இப்பாட்டில் சொன்ன அர்த்தத்துக்கு சம்வாதமாக அனுசந்தேயம் –

—————————————-

தன் பக்கல் பக்தரானவர்கள் தங்களுக்கு அஹிதம் என்று அறியாதே
சா பல்யத்தாலே ஷூத்ரங்களானவற்றில்
சிலவற்றை விரும்பி இத்தைத் தர வேணும் என்று அபேக்ஷித்தாலும்
ஹித பரனான ஈஸ்வரன் அத்தைக் கொடாதே மறுத்து விடும் என்னுமத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டும் இதம் அல்லால்
திருப் பொலிந்த மார்பன் அருள் செய்யான் நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே ஒழியுமோ தாய் –20-

பதவுரை:

விருப்புறினும் -அற்பப் பொருள்களை விரும்பினாலும்
தொண்டர்க்கு –தன்பக்கல் பக்தி உடையவர்களுக்கு
வேண்டும் இதம் அல்லால் அவர்கள் க்ஷேமத்திற்குத் தேவையான தன்மையொழிய
திருப்பொலிந்த மார்பன் -திரு ஆன பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே பிரகாசமான அழகிய மார்பை உடையவன்
அருள் செய்யான் -அவர்கள் விரும்பிய அற்பப் பொருள்களைக் கொடுக்கமாட்டான் (உதாரணம் மேல்வருமாறு)
குழவி -பின் விளைவு அறியாத சிறு குழந்தை
நெருப்பை -தீச்சுடரை
விடாதே -அதன் ஒளியைக் கண்டுபிடித்தால் விடமாட்டாமல்
தாய்–குழந்தையின் அம்முயற்சி அதற்குத் தீமைதரும் என்றறிந்த பெற்ற தாயானவள்
தடாதே ஒழியுமோ-அந்நெருப்பில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளா? (தடுத்தே விடுவாள்)

விருப்புறினும் தொண்டர்க்கு –
விருப்புறினும்-
விருப்பத்தைப் பண்ணிலும் –
அதாவது –
இத்தைக் கொடாத போது இவர்கள் கிலேசப் படுவார்கள்
என்னும்படி சாதரமாக அபேக்ஷிக்கிலும் -என்கை –

தொண்டர்க்கு-
தன் பக்தரானவர்களுக்கு –
தொண்டன் என்கிற சப்தம் –
சேஷத்வத்துக்கும் வாசகமாய் –
சாபலத்துக்கும் வாசகமாய் போருவது ஆகையாலே
இவ்விடத்தில் சாபல வாசகமாய்க் கொண்டு பக்தியைச் சொல்லுகிறது –

வேண்டும் இதம் அல்லால் –
அவர்களுக்கு வேண்டுவதாக ஹிதத்தை ஒழிய –
வேண்டும் ஹிதம் என்றது –
அவர்களுடைய உஜ்ஜீவனத்துக்கு அபேக்ஷிதமான ஹிதம் -என்றபடி –

திருப் பொலிந்த மார்பன்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கையாலே உஜ்ஜவலமான திரு மார்பை யுடையவன்

திருப் பொலிந்த மார்பன் -என்றது
திருவால் வந்த பொலிவை யுடைத்தான மார்பன் என்றபடி –
திரு மார்பு அடங்கலும் இவள் திருமேனியின் தேஜஸ்ஸாலே வ்யாப்தமாய் இருக்குமாயிற்று –

ஆக விறே –
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போலே என்றும்
கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போலே என்றும் தொடங்கி
திவ்ய அவயவங்களைச் சொல்லும் இடத்தில் அல்லாத அவயவங்களோபாதி
சிவந்து இருக்குமதாகத் திரு மார்பை முந்துறச் சொல்லிற்று

ஆக
இப்படி இருக்கிற திரு மார்பை யுடையவன் –

அருள் செய்யான்
இவர்கள் ஆசைப்பட்டு அபேக்ஷித்தாலும் ஹித பரனாகையாலே மறுத்து விடும் அத்தனை ஒழிய
அபேக்ஷிதத்தைக் கொடான்-என்கை

அருளுதல் -கொடுத்தல்
அவர்கள் அபேஷியா நிற்கச் செய்தே
அது கொடாதே மறுத்து விடும் என்றதும் த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் மேல்

நெருப்பை விடாதே குழவி விழ வருந்தினாலும் தடாதே ஒழியுமோ தாய் —
அது விளைவது அறியாதே சிறு பிரஜை அக்னி தாஹகம் என்று அறியாமல்
அதனுடைய ஓவ்ஜ்ஜ்வல்ய மாத்ரத்தைக் கண்டு
அத்தை விடாதே அதில் விழுகைக்கு யத்னித்தாலும்
அது பிரஜைக்கு நாஸகம் என்று அறியும் மாதாவானவள்
அதில் விழாதபடித் தகையாது ஒழியுமோ என்கை –

இத்தால்
அப்படியே அவனும் அவர்கள் அபேக்ஷித்தாலும் அது கொடாதே மறுத்து விடும் என்றதாயிற்று –

யாசிதோபி சதா பக்திர் நாஹிதம் காரயேத் ஹரி பால மக்நௌ பதந்தந் து மாதா கிம் ந நிவாரயேத்-என்னக் கடவது இறே

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: