பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –10-10-

இப்படி அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்த ஆழ்வார் தாம் இந்த பிரக்ருதியில்
இருந்த இருப்பைக் காணாய் என்று ஏங்கிக் கூப்பிடுகிறார்

—————————————————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

நிகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலனாய் –
நிரவதிக ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்யா யவ்வனத்தி அபரிமித உதார குண சாகரனாய் இருந்த
உன்னுடைய ஸுந்தர்யாதி குணங்களைக் காட்டி என்னைத் தோற்பித்து அடிமை யாக்கி
எனக்கு ஒருவனுக்கும் உன்னுடைய உன்னுடைய குணங்களையே தாரகமாக்கி
என் நெஞ்சம் நிறையப்புகுந்து இருந்த உன்னை இனி நான் போகல் ஓட்டேன்
இனிப் பண்டு போலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகளை என் நெஞ்சிலே காட்டி வஞ்சித்து
என்னை ஒன்றும் மறப்பிக்க ஒண்ணாது –
இனி மெய்யே வந்து கலந்து அருள வேணும் -என்று கொண்டு
தம்முடைய அபேக்ஷிதம் செய்து அல்லது எம்பெருமானுக்குத் திரு நாட்டிலும் கூட இருக்க ஒண்ணாத தொருபடி
பெரிய ஆர்த்தியோடே பெரும் கூப்பீடாகக் கூப்பிடுகிறார் –

———————————————————-

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

பண்டு உன்னைக் காண வேணும் என்று ஆசைப்பட்டுக் காணப் பெறாமையாலே நான் வியசனப்படும் அளவில்
கண்ணாரக் கண்டால் போலே விசதமாம்படி என் நெஞ்சில் யுன்னைக் காட்டி காண வேணும் என்னும் அபேக்ஷையைப் பிறப்பித்து
என்னுடைய வியசனத்தை ஸமாயநம் பண்ணினால் போலே செய்து அருள ஒண்ணாது –
இனி யுன்னைக் காட்டாதே வஞ்சித்து ஒளிக்கில் உனக்கு நிரவதிக சம்பத்தாய் நிரவதிக போக்ய பூதையாய்
உன்னாலும் பஹுமந்தவ்யையாய் உன் திருமேனிக்கு வாசம் செய்யா நின்ற அழகிய திருக் குழலை யுடையளாய்
இருந்த பெரிய பிராட்டி திருவாணை நின் திருவாணை கண்டாய் –
ஸமஸ்த ஹேயாஸ் பதமாய் இருந்த என்னை யருவாதே என் பக்கலிலே அதி ஸ்நேஹத்தைப் பண்ணி
உன்னோடே ஓன்று என்று சொல்லலாம் படி என்னோடே கலந்து அருளினாய் –
ஆதலால் அது பெறா ஆணை அன்று –
6இனிச் செய்கிறோம் என்னப் பற்றாது ஈண்டென வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் என்கிறார் –

————————————————

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

ப்ரஹ்ம ஈஸா நாதிகளுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஐஸ்வர்யாதிகளும் த்வத் பிரசாத அதீனம் ஆதலால்
என்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமும் நீ யல்லது மற்று ஒன்றும் காண்கிறிலேன்-
நீயே உன் திருவடிகளில் என்னை வாங்கி அருளி பிரானே உன் திரு அழகைக் காட்டி அருளாய் என்கிறார் –

————————————————

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

பிரகிருதி புருஷ மஹான் அகங்கார பிருதிவ்யாதி பூத சதுர்முக ருத்ர தேவாதி ஸ்தாவராந்த சேதன அசேதனாத்மக
ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகளுக்கும் நீயே நிர்வாஹகானாய் இருந்து வைத்து
என்னுடைய பரமத்தனையும் நானே நிர்வஹிக்கக் கடவேனாகப் பார்த்து அருளினாயாகில்
என்னைக் கை விட்டாய் என்கிறார் –

———————————————————–

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

உம்முடைய பரத்தை நான் நிர்வஹிக்கத் தவிர்த்தால் அந்த பரத்தை நீரே நிர்வஹித்துக் கொள்ளலாகாதோ என்னில்-
நீ என்னைக் கை விட்டு உபேக்ஷித்தால் பின்னை யாரைக் கொண்டு எத்தைச் செய்வது –
நான் என்று ஓன்று உண்டோ -என்னுடையது என்று ஓன்று உண்டோ -அடைய முடிந்தது இ றே-ஆனபின்பு
அக்னி சந்தப்த்தமான இரும்பு தாபம் தீரும்படி நீரைப் பருகினால் போலே
உன்னைப் பிரிந்த என்னுடைய ஸந்தாபம் எல்லாம் தீரும்படி யுன்னைப் பருக எனக்கு ஆராவமுதானாய் –
இனிக் குறையும் நீயே செய்து அருளாய் என்கிறார் –

————————————————————

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

ஸுந்தர்யாதி சர்வ குணங்களினாலும் உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு போக்யமானால் போலே
எனக்கு போக்யமாய் இருந்து வைத்த அத்தனையே அன்றியே
என்னுடைய ப்ரக்ருதியையும் என்னுடைய ஆத்மாவையும் நிரவாதிகமான அபி நிவேசத்தோடே புஜித்து அருளினை நீ
பிரானே என்னைப் பொகடாதே கொள்ளாய் என்கிறார் –

—————————————————————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

பெரிய பிராட்டியார் பக்கலிலும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலும் பண்ணும் வ்யாமோஹத்தை
என் பக்கலிலே பண்ணிக் கொண்டு என்னை புஜித்து அருளின உன்னைப் பெற்று
இனி விடுவேனோ என்கிறார் –

———————————————————————————-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

புண்ய பாப ரூப கர்ம தத் பல போக்த்ரு சேதன கர்ம பல போக உபகரண ப்ரப்ருதி
சர்வ ஜன அந்தராத்மா பூதனாய் சர்வ ஜகத் காரணமாய் சர்வைரத்ருஸ்யனாய் இருந்த
உன்னைப் பெற்று இனி விடுவேனோ -என்கிறார் –

—————————————————————-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில்
எனக்கு அதுவே அமையாது –
நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே
திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் –

————————————————————-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

இப்படி எம்பெருமானுக்கும் மறுத்து அருள ஒண்ணாத தொருபடி பிராட்டி திருவாணை யையும் தன் திருவாணை யையும் இட்டு
நிர்ப்பந்தித்துக் கொண்டு ஆர்த்த ஸ்வரத்தாலே கூப்பிடும் அளவில்-
தாம் மநோ ரதித்த படியே எம்பெருமானும் எழுந்து அருள -அவனைக் கண்டு –
மஹான் அஹந்காராதிகள் எல்லா வற்றையும் வியாபித்து அவற்றில் காட்டிலும் பெரிதான மூல பிரக்ருதிக்கும் –
அத்தையும் வியாபித்து அதிலும் பெரிதான முக்தாத்மாவுக்கும் –
அதிலும் பெரிதான உன்னுடைய சங்கல்ப ஞானத்துக்கும் ஆத்மாவாய் இருந்த நீ
அந்த சங்கல்ப ஞானத்தில் காட்டிலும் பெரிதாய் இருந்த என்னுடைய விடாய் எல்லாம் தீரும்படி
அந்த ஜெகதாகாரனான படி அன்றியே நீயான படியே வந்து சூழ்ந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒரு படியே முடிந்தது என்கிறார்

——————————————————————

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

ப்ரஹ்ம ருத்ராதி சர்வ ஆத்மாக்களுக்கு அந்தராத்மா பூதனாய் ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகனாய் –
அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண நீதியாய்
அப்ராக்ருத ஸ்வ அதாசாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் இருந்த எம்பெருமானை அலற்றி
அவா அற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய் அவனைப் பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதி களால் இவை ஆயிரமும் அவற்றிலே தம்முடைய அபேக்ஷிதம் பெற்று விடாய் தீர்ந்த பத்து
இவற்றை அறிந்தார் பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களுக்கும் மேற்பட்டார் என்கிறார் –

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: