அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –10-10-

பத்தாம் திருவாய் மொழியில் கீழ் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் தேச விசேஷத்திலே புக்குத்
திரு மா மணி மண்டபத்திலே ஏறி ஸூரி பரிஷத்திலே அந்தர்பவித்து நிரதிசய ஆனந்த யுக்தனாய்க் கொண்டு
முக்தன் இருக்கும் இருப்பை அபரோஷிக்க –
பர ஞானத்தால் இது தம்முடைய பேறாக சாஷாத் கரித்து அனுபவித்தவர் -அந்த சமாதி குலைந்தவாறே –
முன்பு இருந்த சம்சாரத்தை தரிசித்து -கொடு உலகம் காட்டேலே -என்று தாம் அஞ்சி இருந்த சம்சாரத்தைத் தரிசித்து
மிகவும் ஆர்த்தராய் அபரோக்ஷ ஸித்தமான இப்பேற்றை பெற்று அல்லது தரிக்க மாட்டாத படி
பரமபக்தி ரூபமான நிரவதிக அபி நிவேசம் பிறந்து
இவ்வளவும் நம்மைப் புகுர நிறுத்தினவன் தானே முழுக்க நிர்வஹிப்பானாக ஏறிட்டுக் கொண்டு
பெரிய திருவடி திருத் தோளிலே ஸந்நிஹிதனாய்த் தம் தலையிலே திருவடிகளை வைத்து
பல பிரதானத்திலே அதி த்வரிதானாம் படியை அனுசந்தித்து
அவ்வனுசந்தான பாவநத்வத்தாலே அபரோக்ஷ சித்தனான சர்வேஸ்வரனுடைய உபகாரமான
போக்ய விக்ரஹத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபத்வத்தையும்
சர்வ காரணத்வத்தையும்
ஸமஸ்த வாஸ்து பிரகார யோகத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
அத்யந்த பிரணயித்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
சர்வ அந்தராத்மவத்தையும்
ஸமஸ்த பிரதானத்வத்தையும்
பரிபூர்ண போக பிரதத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய சந்நிதியில் தம்முடைய
ஆர்த்தியும் அபி நிவேச அதிசயமும் தோற்றும்படி அவனுடைய உபகாரகத்வாதிகளைச் சொல்லி
மறுக்க ஒண்ணாத படி பிராட்டி திருவாணை இட்டு-
சர்வ பிரகார ரக்ஷகனான நீ எனக்குப் பூர்ண அனுபவத்தைத் தர வேணும் -என்று மிகவும் கூப்பிட
அவனும் இவருடைய வரவுக்கு ஈடாக குண விக்ரஹ விபூதி பரிபூர்ணனாய்க் கொண்டு பிராட்டியோடும் கூட
ஏக ரஸமாம்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை அனுசந்தித்து
இனி இந்தப் பேற்றுக்குத் தட்டில்லை என்று நிஷ்கர்ஷித்து தாம் அவாப்த ஸமஸ்த பலரான படியைப் பேசி முடித்து அருளுகிறார் –

—————————————————

முதல் பாட்டில் ஸ்ருஷ்டியாதி முகத்தால் அடியே பிடித்து உபகாரகனாய்ப் போந்து
வடிவு அழகைக் காட்டி ருசியைப் பிறப்பித்து உன்னை ஒழியச் செல்லாதபடி யாக்கி
என்னை அனுபவிப்பிப்பதாக த்வரித்து வந்து ஸந்நிஹிதனான நீ
இனி குண ஆவிஷ்காரத்தாலே வஞ்சித்து அகலப் போக இசையேன் என்கிறார் –

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

முனியே -நாம ரூப விபாக அநர்ஹமாய்-சித் அசித் விசேஷிதமாய்க் கொண்டு ஸம்ஹ்ருதமாய் –
ஏகீபவித்துக் கிடக்கிற தசையில் ஆஸ்ரயண அர்ஹமாகக் கொண்டு ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தை மனனம் பண்ணுமவனாய்
நான்முகனே–மஹதாதி ரூப சமஷ்டியை ஸ்வயமேவ ஸ்ருஷ்டித்து -அண்டாந்த வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியைப்
பண்ணுகைக்காக சதுர்முகனை சரீரமாக யுடையையாய்
முக்கண் அப்பா -ஸம்ஹ்ருதி சமயத்தில் ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய உபஸம்ஹார அர்த்தமாக சக்தி ஸூசகமான
த்ரி நேத்ரத்தை யுடையனாய் -அதி ப்ரவ்ருத்த கரணருடைய உப சம்ஹாரத்தாலே
உபகாரகனான ருத்ரனை சரீரமாக வுடையையாய்
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா–அவர்கள் இருவருக்கும் நடுவே
ரக்ஷகனான தசையில் எனக்கு உன் பக்கலில் ருசி பிறக்கைக்கு அடியான பக்குவ பலம் போலே போக்யமான
திரு அதரத்தையும்-தாமரைப் பூப் போலே தர்ச நியாமான திருக் கண்ணையும் யுடைத்தாய் இருபத்தொரு
துளையாத கரு மாணிக்கம் போலே இருக்கிற திவ்ய வடிவை யுடையையாய் –
அநாதியாக ஆத்ம அபஹாரம் பண்ணிப் போந்த சோரனான என்னையும்
அவ்வழகாலே அறியாதபடி வஞ்சித்து அபஹரித்துக் கொண்டவனாய்
தனியேன் ஆர் உயிரே -அப்ராப்த பலனாகையாலே-தனிமைப்பட்டு எனக்கு குண ஆவிஷ்காரத்தைப் பண்ணித்
தன்னை ஒழியச் செல்லாத படி எனக்குப் பரிபூர்ண பிராணனானவனே
என் தலை மிசையாய் வந்திட்டு–செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்னும்படி
என் தலைக்கு மேலாயக் கொண்டு வந்து சமைந்து
இனி நான் போகல் ஒட்டேன் –சம்சார தோஷத்தோடே புருஷார்த்தத்தையும் ஆவிஷ்கரித்து
ஆர்த்தியையும் அபி நிவேசத்தையும் ஜெநிப்பித்த பின்பு
உன்னாலே லப்த ஞான ப்ரேமனாய்க் கொண்டு அதி த்வரிதனாய் –
உன் த்வரையையும் அறிந்து இருக்கிற நான் -முன்பு போலே நீ அகன்று போக இசையேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னைப் பெறா விடில் முடியும்படியான என்னை
சம்சார தசையில் விஷயாந்தரங்களைக் காட்டி அந்நிய பரனாக்கினவோ பாதி யாதல் –
ருசி பிறந்த பின்பு குண ஆவிஷ்காராதிகளைப் பண்ணி ஆஸ்வசிப்பித்தவோ யாதல் –
சிறிதும் வஞ்சியாது ஒழிய வேணும் –

———————————————————————–

அநந்தரம் -தம்முடைய கார்யம் செயகைக்காக மறுக்க ஒண்ணாதபடி வல்லபையான பிராட்டியுடைய திருவாணை இடுகிறார் –

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் செய்யேல் என்னை -முன்பு ஆர்த்தனாய்க் கூப்பிட்ட தசைகள் தோறும் குண ஆவிஷ்கார மாத்திரத்தாலே ஆஸ்வசிப்பித்து
அகல நின்றால் போலே க்ஷண காலமும் உன்னைப் பிரியில் முடியும் தசையான
என்னை இனி வஞ்சியாது ஒழிய வேணும்
உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்–நான் நினைத்தபடி செய்கிறோம் என்று
ஸ்வா தந்தர்யம் கொண்டாடப் பார்த்தாய் ஆகில்
உனக்கு நிருபாதிக சம்பத் ஆகையால் சர்வாதிகமான ஸ்வரூபத்துக்கு நிரூபக பூதையாய்-தானும் -அகலகில்லேன் -என்று
விரும்பும்படியான திரு மார்புக்கு பரபாகமாம் படியாய் –
ஹிரண்மயமான மாலை போலே திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு நிருபாதிக பூதையாய்
உன்னோபாதி ஸமஸ்த கல்யாண குண பூர்ணை யாகையாலே
கண்ணாடியில் நிழல் எழுமா போலே இக் குணங்களும் நிறம் பெறும்படி பண்ணுமவளாய் –
சர்வ கந்த -என்னும்படி உனக்கும் அதி வாசகரமாய் விலக்ஷணமான திருக் குழலை யுடையளாய்க் கொண்டு –
போக்ய பூதை யாகையாலே விபூதி யபிமானியான ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டியினுடைய கௌரவ்யமான ஆணையானது –
ஸமஸ்த ஜகத்தையும் உன் ஆணையால் நிர்வஹிக்கிற உனக்கு ஆணையாக –
இப்படி ஆணை இட்டு நிர்ப்பந்திக்கிறது த்வரையாலே என்று நினைத்து
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே–நிர்ஹேதுகமாக ஸ்நேஹித்து -ஹேய ப்ரத்ய நீகனான உன்னோடே
ஹேய ஸம்ஸ்ருஷ்டனான என்னை
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -என்னும்படி ஆத்ம சேஷம் பிரவாதபடியாக –
அப்ருதக் ஸித்தியாலே ஏக பிரதிபத்தி பிறக்கும்படிக்கு ஈடாக
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –என் நிகர்ஷத்தைப் பார்த்துக் கூசாதே
அடியே பிடித்து அங்கீ கரித்து அருளினாய் –
இப்படி உன் ப்ரவ்ருத்தி அறிந்து இருக்கிற என்னை என் முன்னே வந்து
ஆழ்வீர் போதீரோ என்று திரு மிடற்று ஓசையைக் காட்டி அழைத்துக் கொண்டு அருள வேணும் –
ஐயோ நீ தானே த்வரிக்கிற இக்காரியத்துக்கு நான் ஆணை இட வேண்டி இருப்பதே

—————————————————

அநந்தரம்-ப்ரஹ்மாதி சகல சேதனர்க்கும் உத்பாதகமான திரு நாபீ கமலத்துக்கு மூல கந்தமான
நீ வந்து விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

என் பொல்லாக் கருமாணிக்கமே-எனக்கு நிரதிசய போக்யமாய் துளையாத மாணிக்கம் போலே விலக்ஷணமான வடிவை யுடையையாய்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–தம்தாமுடைய பத
சித்த்யர்த்தமாகக் கிட்டி ஆஸ்ரயிக்கக் கடவரான பிரம்மா ருத்ர இந்த்ரர்கள் முதலானார்க்கும் முதலான
திரு நாபி கமலத்துக்கு கந்த பூதனாய் –
இப்படி ஸ்ருஜ்யர் அன்றியே மேலாய் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கும்
அப்படியே சத்தா ஸ்த்தித் யாதிகளுக்கு நிர்வாஹகானானவனே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –என் ஆத்மாவுக்கு அபாஸ்ரயமாய்
இருப்பதொரு உபக்நம் உன்னை ஒழிய நான் அறிகின்றிலேன் –
ஆனபின்பு நீ தானே வந்து அழைத்துக் கொண்டு அருள வேணும் –
ஐயோ உன் கார்யம் நான் சொல்ல வேண்டுவதே –

—————————————————————

அநந்தரம் -சர்வ பிரகார விசிஷ்டனான நீ பிரகார பூதனான என்னுடைய கார்யம் நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
வைத்து என்னை இந்த விபூதியில் போர விட்டாய் இத்தனை அன்றோ என்று ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார் –

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ -அதனுள்- மிசை நீயேயோ–பூதமான மஹாதாதி களுக்கு எல்லாம் பிரதான காரணமாகையாலே
மேலாய் -உனக்கு லீலா உபகரணம் ஆகையாலே விலக்ஷணமாய் –
குண த்ரய ஸாம்ய அவஸ்தமாகையாலே-குளிர்ந்து இருப்பதாய் போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டானாய்க் கொண்டு
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்டகாரணமான ஆகாசம் விலக்ஷணமான தேஜஸ்ஸூ முதலான பூதங்களை
ஸ்ருஷ்டித்து தத் பிரகாரியாய் –
பூத ஆரப்தமான அண்டத்துக்கு உள்ளே ப்ரஹ்ம ருத்ராதிகளை உத்பாதித்து தத் தத் பிரகார விசிஷ்டனானவன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–பிராணி ஜாதங்களுக்கு மேலான தேவர்களையும் மனுஷ்யாதி சகல சேதனரையும்
தத் தத் கர்ம விபாக மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ இப்படியாய் இருக்க
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–பிரகார பூதனான என்னுடைய தேகத்தை நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
பிராப்தி பர்யந்தமாக அபரோஷிப்பித்து உன்னை ஒழியச் செல்லாத என்னை பின்னையும் இங்கே போர விட்டிட்டு வைத்தாய்
ஓ என்கிற அசை-நீ என்னும் இடம் தோறும் கூட்டி -ஓர் ஒன்றே ரஷிக்க ஹேது போந்து இருக்க
அநாதரித்தாய் என்று கூப்பிடுகிற ஆர்த்தியை ஸூசிப்பிக்கிறது –

————————————————————————

அநந்தரம் எனக்கு நிரதிசய போக்ய பூதனாய் இருந்து வைத்து நீ என்னை உபேக்ஷிக்கப் பார்த்தால்
எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ -என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –தன் காய்ச்சல் தீரும்படி இரும்பானது
உண்ட நீர் போலே என் ஆத்மாவின் விடாய் எல்லாம் தீரப் பரிபூர்ணமாக பருகைக்கு
எனக்கு திருஷ்ணை தொடாத அம்ருதமானாயே -இப்படி இருக்க –
இரும்புண்ட நீர் போலே என் ஆத்மாவை முற்றாய் பருகினான் என்கிறபடியே நீ பூர்ணமாகப் பானம் பண்ணுகைக்கு உறுப்பாக
உன் போக்யதையை எனக்குப் பிரகாசிப்பித்தாய் என்னவுமாம் –
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் -உன் வாசி அறிந்து புஜிக்கும் படி பண்ணி பிராப்தி பர்யந்தமாக பிரகாசிப்பித்த நீ
அத்தைக் குலைத்துப் போரவிட்டு அசேதனவத் அநாதரித்து
அநந்ய கதியான என்னை உனக்குப் புறம்பான விஷயாந்தரத்திலே போக்க நினைத்தால் –
பின்னை யான்ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்- – சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு
அசக்தனான நான் புருஷார்த்த சாதகராய் இருப்பார் மாற்று யாரைக் கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஐயோ சாதிப்பேன்
என்னது என்கைக்கு ஒரு கர்ணாதிகள் இல்லை
நான் என்கைக்கு ஒரு ஸ்வ தந்த்ரனான கர்த்தா இல்லை
இது வேறு உண்டோ என்று கருத்து –
ஆரைக் கொண்டு எத்தை என்கிற இரு உக்தியாலே விஷண்ணராகிறார்–

————————————————————

அநந்தரம் -பிராட்டி பக்கல் பிரணயியானால் போலே என் பக்கலிலும் நிரதிசய ப்ரணயத்தை யுடைய நீ
உன் போக்யதையை பிரகாசிப்பித்து புஜிப்பித்தாய் -இனி முழுக்க நிர்வஹித்து விட வேணும் என்கிறார்

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்–தன் நிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய்
புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் சிவந்த திருப் பவளத்தையும் யுடைய
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–உனக்கு அனுரூபமான திரு வடிவை யுடையளாய்
பூவில் பிறப்பால் நிரதிசய போக்ய பூதையாய் ஸ்த்ரீத்வ அனுரூபமான ஆத்மகுணத்தை யுடைய
ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிக்கு அன்பை யுடையையாய் –
என் அன்பு தானே ஒரு வடிவாய் இருக்கிறவனே
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை-எனக்கு நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய
ப்ரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-ஹ்ருதயத்துக்கு திருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-
இனித் தொடங்கி நீ குறையும் புஜிப்பித்தே விட வேணும்
ஈஸ்வரனுக்கு நிருபாதிக போக்த்ருத்வமும்-சேதனனுக்கு போக்யத்வமும் இ றே ஸ்வாபாவிகம் –
அதனுடைய அனுபவ ஜெனித ப்ரீதியாலே வருகிற பர்யவாசநம் இ றே சேதன போக்த்ருத்வம் -ஈஸ்வர போக்யத்வமும்
ஆகை இறே ஸ்வரூபத்தை நிர்த்தேசித்து இவனுடைய போக்யத்வத்தையும் ஈசுவரனுடைய போக்த்ருத்வத்தையும் சொல்லி
சைதன்ய ப்ரயுக்தமான பர்யவசாநத்தாலே சேதன போக்த்ருத்வத்தையும் சுருதி சொல்லி முடித்தது
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று –

——————————————————————-

அநந்தரம் -ஆஸ்ரித ரக்ஷகனாக உன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ என்கிறார் –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–வடிவு அழகையும் போக்யத்தையும் யுடையளான பிராட்டிக்கு
உகப்பான வத்தாலே என் பக்கலிலும் அதி ப்ராவண்யத்தை யுடையையாய்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்–நீல ரத்ன கிரியானது இரண்டு பிறையை கவ்வி எழுந்து இருந்தால் போலே
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்–விலக்ஷணமான வடிவு அழகை யுடைத்தாய் அத்விதீயமாய்
இருபத்தொரு ஸ்ரீ மஹா வராஹமாய் பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திரு எயிற்றிலே வைத்த அபதானத்தாலே
என்னை சம்சாரத்தில் நின்றும் எடுக்கும் ஆகாரத்தை பிரகாசிப்பிக்கும் ஸ்வாமியாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –உன் திரு வடிவின் நிழலீட்டாலே நீலமான கடலைக் கடைந்து
யரும் தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே –
இப்படி புருஷகார பூர்வகமாய் எனக்கு நல்லையாய் -என்னை ரக்ஷிக்குமவனான உன்னை லபித்து வைத்து
கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ –
நீலக்கடல் -என்று நீல ரத்னத்தை யுடைய கடல் என்றுமாம் –

—————————————————-

அநந்தரம் சர்வ தாரகனாம் படி அந்தராத்மாவாய் எனக்கு தாரகனான உன்னைப் பெற்று வைத்துக் கை விடுவேனோ என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்–இரண்டு வைக்கப்பட்ட புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நிர்வாஹகனாய் —
கர்ம வஸ்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் -அந்தக் கர்மங்களால் யுண்டான ஸூக துக்கங்களை பிரதாவாய்க் கொண்டு
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-இந்த ஜகத் த்ரயம் எல்லாம் ஆகிற பெரிய தூற்றை பிரகாரமாக யுடையையாய் —
கர்ம நிபந்தனமாக பிரவேசித்தார்க்குப் புறப்பட வழி இல்லாத ஸ்வ சங்கல்பத்தாலே ஸ்வ தந்திரனாய் பிரவேசித்து
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-ஒரு பிரகாரத்தாலும் அறிய ஒண்ணாத படி ஸூஷ்ம பூதனாய்க் கொண்டு
மறைந்து நிற்குமவனாய் எனக்கு உன்னைக் கிட்டுக்கைக்கு பிரதம ஸூக்ருதமான அத்விதீய காரணம் ஆனவனே –
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை- எனக்கு நிரூபமாய் அபரிச்சின்னமான பிராண பூதனாய் இருக்கிற
உன்னை கை புகுரப் பெற்று வைத்து உன்னை விடில் முடியும்படியான அவஸ்தை பிறந்த பின்பு விட விரகு உண்டோ –
ஓ என்கிற அசை விடில் செய்வது என் என்கிற விதாதத்தைக் காட்டுகிறது –

——————————————————————-

அநந்தரம் காரண கார்ய உபய அவஸ்தமான சகல சேதன அசேதனங்களுக்கும் பிரகாரித்வாதிகளாலே பிரதானனாய்
தத் வ்யாவ்ருத்தமான விலக்ஷண ஸ்வரூப குணாதிகளை யுடைய உன்னை என்று வந்து கிட்டக் கடவேன் என்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–அவி கல்ப பூர்ணமான ஜகத் த்ரயம் முதலான ஸமஸ்த வஸ்துக்களும்
பிரதானமான நிமித்த காரணமாய் -சஹகாரி நிரபேஷமாய் அத்விதீய உபாதான காரனுமாய்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்- -கார்ய பூதமான ஜகத்தில் அண்டாத் பஹிர் பூதமாயும்
அந்தரகதமுமாய் இருக்கிற பூர்ணமான ஸமஸ்த பதார்த்தங்களையும் வியாபித்து
அத்விதீய காரணமாய்
போக மோக்ஷங்கள் ஆகிற வாழ்ச்சிக்கு விளை நிலமான மூல பிரக்ருதிக்கு நியாமகனாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–ப்ரக்ருதி பிராகிருத நியந்த்ருதவத்தாலே பிரதானமாய் –
அசித் ஸ்வ பாவ வ்யாவ்ருத்தியாலே நிரூபமாய் –
தர்ம பூத ஞான முகத்தால் வ்யாப்தமாய்க் கொண்டு -பத்துத் திக்கிலும் உண்டாய் நிதயமான ஆத்மவர்க்கத்துக்கு நியாந்தாவானவனே
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–இப்படி சர்வ பிரதானனாயக் கொண்டு நிரூபமான உன்னை
அந்த ஜெகதாகாரத்தில் அன்றியே அத்யந்த வ்யாவ்ருத்தமான விலக்ஷண
ஸ்வரூப ரூப குண விசிஷ்டானாய்க் கொண்டு இருக்கிற உன்னை பிராபித்து அனுபவிக்கப் பெறாமையாலே
பெரு விடாய்ப் பட்டு இருக்கிற நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்

—————————————————–

அநந்தரம் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகாம்படியான என் அபி நிவேசமானது கெடும்படியாக
சர்வ பிரகார பரிபூர்ணனாய்க் கொண்டு ஸம்ஸ்லேஷித்தாய் -என்று தமக்கு சாயுஜ்ய ஸித்தமான
பரிபூர்ண போக பிரதானம் பண்ணின படியை அருளிச் செய்கிறார்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ–கார்ய வர்க்கத்தை அடங்கச் சூழ்ந்து -வியாபித்து விஸ்தீர்ணமாய்
கீழும் மேலும் உண்டாகையாலே பத்துத் திக்கிலும் ஸந்நிஹிதமாய்-
உத்பத்தி விநாச ரஹிதமாகையாலே நித்தியமாய் –
ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு ஆகையால் அபரிச்சின்னமாய் –
போக மோக்ஷங்களை விளைக்க நல் தரையான ப்ரக்ருதியை பிரகாரமாக யுடையையாய் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-அந்தப் பிரகிருதி தத்துவத்தை ஸ்வ ஞானத்தால் வ்யாபித்துக் கொண்டு
காட்டில் பெருத்து ஏக ரூபத்வாதிகளாலே மேலாய்
ஸ்வயம் ப்ரகாஸத்வாதி வை லக்ஷண்யத்தை யுடையையாய்
விகாச ஸ்வ பாவமான ஞான பிரபையையுடைய ஆத்மாவை பிரகாரமாக யுடையையாய்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-இந்த பிரகிருதி புருஷர்கள் இருவரையும் வியாபித்து அதுக்கு அவ்வருகாய்
கல்யாண குணங்களால் உஜ்ஜவலமான ஞானானந்த லக்ஷண ஸ்வரூபத்தை யுடைய நியந்தா வானவனே
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–அந்தத் தவ்ய த்ரயத்தையும் வளைத்துக் கொண்டு
அதுக்கு அவ்வருகாம் படியாய் இருக்கிற என் அபி நிவேசமானது
சமிக்கும் படியாக ஸ்வரூப ரூப குண விக்ரஹ பூஷண ஆயுத மஹிஷஹீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய்க் கொண்டு
பரிபூர்ணனான உனக்கு உள்ளே யாம்படி சாயுஜ்ய மோக்ஷத்தைத் தந்தாய் இ றே
ஓ ஓ ஓர் அதிசயமே என்று அடி தோறும் ஹ்ருஷ்டராகிறார்

—————————————————————-

அநந்தரம் பல அவாப்தி பிரகாரத்தை ப்ரதிபாதித்துக் கொண்டு இத்திருவாய் மொழிக்குப் பலமாக
இதில் ஞானம் யுடையவர்களுடைய ஜென்ம உதகர்ஷத்தை அருளிச் செய்கிறார்

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆஸ்ரிதருடைய அபி நிவேசம் தீரும்படி நிரவதிக சம்ச்லேஷம் பண்ணுகையாலே
விஸ்லேஷ துக்க நிர்ஹரண ஸ்வ பாவனாய் –
வஸ்ய ஸூ த்தி பண்ணும் படியான அவா அறும் படியாகத் தன் குணாதிகளாலே சூழ்ந்து ஹரித்துக் கொள்ளுமவன் என்றுமாம்
முக்த ப்ராப்யதயா பூர்வ பக்ஷதயா சங்கிதனான ஹிரண்ய கர்ப்பனுக்கும் அந்தராத்மாவாய்-
அப்படி பசுபதி மத ப்ராப்யனான ருத்ரனுக்கும் அந்தராத்மாவான
பரம ப்ராப்ய பூதனை பிராபிக்கையில் யுண்டான த்வரையாலே கூப்பிட்டு –
ப்ராப்ய ஸித்தியாலே-அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் அதி பர பக்தி ரூபமாக முடிந்த
அவா இல் அந்தாதி களான இப்பத்தையும் அனுசந்தித்து பிறந்தார் உயர்ந்தே–
`இது கலி விருத்தம் –

————————————————

இப்படி ஸ்ரீ யபதியான நாராயணனுக்குப் பிரகார பூதனான சேதனனுக்கு உபாயத்வேன ப்ரவ்ருத்தனாய்க் கொண்டு
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்கிற மஹா வாக்யார்த்தத்தினுடைய
அவாந்தரார்த்த ரூபமான ப்ராப்ய ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளாயுள்ள அர்த்த பஞ்சகத்தையும்
தத் பிரகார விசிஷ்டானாம்படி சமர்மமாக அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆய்த்து-

இதில் முதல் பத்திலும் இரண்டாம் பத்திலும் -ரக்ஷகத்வ போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
மூன்றாம் பத்திலும் நாலாம் பத்திலும் தத் ஏக அனுபவத்வ தத் ஏக பிரியத்வ ரூபமான சேஷத்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
இந்நாலும் அநுவ்ருத்தமாக இந்த சேஷித்வ சேஷத்வங்களினுடைய அசாதாரண்யத்தைச் சொல்லுகையாலும்
பிரதம அக்ஷரத்திலே சேஷித்வத்தைச் சொல்லி
த்ருதீய அக்ஷரத்தில் சேஷத்வ ஆஸ்ரயத்தைச் சொல்லி
அவதாரணார்த்தமான உகாரத்தில் உபயோஸ் சம்பந்த தாஸ்யத்தைச் சொல்லுகிற ப்ரணவார்த்தத்தை பிரதிபாதித்ததாய்

அநந்தரம்
அஞ்சாம் பத்திலே உபாய ஸ்வரூபத்தையும்
ஆறாம் பத்திலே உபாய வரணத்தையும்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபத்தையும்
எட்டாம் பத்தில் தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகையாலே
சாப்தமாகவும் அர்த்தமாகவும் ஸித்தமான நமந நாமந வானான ஈசுவரனுடைய உபாய பாவத்தையும் –
நமந ரூபமான சரணாகதி ஸ்வரூபத்தையும் -ஆத்மாத்மீய ஸித்தமான அஹங்கார மமகார ரூப
விரோதி ஸ்வரூபத்தையும் தத் நிஷேதத்தையும் சொல்லுகிற நமஸ் சப்தார்த்தத்தை ப்ரதிபாதித்தாய்

ஒன்பதாம் பத்திலும் பத்தாம் பத்திலும் சர்வ வித பந்துத்வ கைங்கர்ய பிரதி சம்பந்தித்வ அபிவிஷ்டமான
பல அவாப்தியைச் சொல்லுகிற சரம பதார்த்தத்தை பிரதிபாதித்தாய்
பிரபந்த சங்க்ரஹமான் முதல் பாட்டில் அருளிச் செய்த க்ரமத்திலே சர்வ ஸாஸ்த்ர சங்க்ரஹமான
மூல மந்த்ரார்த்தை இப்பிரபந்தத்தில் விஸ்தரேண ப்ரதிபாதித்தார் ஆய்த்து

இன்னமும் பிரதமத்திலே ஸ்ரீ யபதித்தவ நாராயணத்வங்களை பிரதிபாதித்து
நாராயணனுடைய சீல ஸுலப்யாதிகளாயும் ஞானாதிகளாயும் உள்ள குணங்களை ஸஹரசமாக ப்ரதிபாதித்து
உத்தமமான க்ரியா பாதத்தால் விரோதி பூத ரஹிதமான புருஷார்த்த ரூப பகவத் கைங்கர்ய அவாப்தியை ப்ரதிபாதிக்கையாலும்
வாக்ய த்வயாத்மகமான சரணாகதி ஸ்வரூபத்தையும் வீசதீகரித்து அருளினார் ஆய்த்து

இவ்வுபாய வரணம் தத் இதர சகல நிவ்ருத்தி யுக்தமாய் இருக்கும் என்றும்
உபாய பூத குண விசிஷ்டானாய் அத்விதீயனாய் இருக்கும் என்றும் ப்ரதிபாதித்து
உபாய கார்யமான ஸமஸ்த விரோதி நிவ்ருத்தியையும்
பல சித்தி நிபந்தன தாதர்யத்தையும் ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகார்த்தத்தையும் விசதீகரித்து அருளினார் ஆய்த்து

ஆக சர்வ பிரகார பகவச் சேஷ பூதனாய் -அநந்ய பிரயோஜனனாய் -அநந்ய சரண்யனான இவ்வதிகாரிக்கு
ஞாதவ்யமான ரஹஸ்ய த்ரயத்தையும் சப்பிரகாரமாக பிரகாசிப்பிக்கையாலே –
இப்பிரபந்தமானது விலக்ஷணரான சாத்விக அக்ரேசர்க்கு நித்ய அனுசந்தேயமாகக் கடவது –

———————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: